Loading

அத்தியாயம் 35

 

 

“ஐயோ…” மெல்லிய குரலில் அதிர்ந்து எழுந்து நின்றவள் அவசரமாக இதழ்களைத் துடைத்தாள். 

 

“ ஹேய் என்னாச்சு?” என்ற அபியின் குரலில் பின்னால் திரும்பி பார்த்தாள். முன்பு எப்படி அமர்ந்திருந்தானோ அப்படி தான் இப்பொழுதும் அமர்ந்திருந்தான்.

 

‘பிரம்மையா?’ என நினைத்தவள் மானசீகமாக தலையில் அடித்தபடி மீண்டும் அவனருகில் அமர, அவளை குறுகுறுவென பார்த்தான் அபிநயன்.   

 

அவனது குறுகுறு பார்வையில் “அது லைட் பூச்சி மேலே வந்து விழுந்துடுச்சு சார்… அதான் பயந்துட்டேன்” என்றாள் மெல்லிய குரலில்

 

“ஓ…வாய்க்குள்ளையே விழுந்துடுச்சா?” புருவத்தை உயர்த்தி கேட்டான். அவள் இதழ்களை அவசரமாக துடைத்ததை இவனும் பார்த்துக் கொண்டு தானே இருந்தான். 

 

‘போச்சு… கவனிச்சிட்டு தான் இருந்திருக்கான்… நம்ம நினைச்சது மட்டும் அவனுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்’ அவளது மனம் ஒரு பக்கம் பதறியது.

 

 மனதின் பதற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் 

“ம்ம்…” என்று பெரிதாக தலையாட்டி வைத்தாள். 

 

அவள் தலையாட்டிய விதமும், இதழ்களை துடைத்த விதமும், ஓடிக் கொண்டிருந்த பாடலின் வரிகளும் அவள் என்ன நினைத்து பயந்தாள் என்ற செய்தியை சொல்லாமல் சொல்ல, வெறும் வாயிலேயே புரையேறியது…அவசரமாக தலையை தட்டியப்படியே ஆனந்தியை பார்த்தான். 

 

அவளோ இன்னும் பதட்டத்தோடு அமர்ந்திருந்தாள். அவளையே இமைக்காமல் பார்த்தவனுக்கு கோபத்திற்கு பதிலாக சிரிப்பு தான் வந்தது… 

 

அக்கணம், 

 

தென்றல் வந்து 

என்னைத்தொடும்…

ஆஹா…

சத்தம் இன்றி முத்தமிடும்…

 

என்ற பாடல் ஒலித்தது… அந்த பாடலின் வரிகள் அபியின் இதழ்களில் வெட்க புன்னகையை பூக்க செய்திருந்தது. 

 

அதே நேரம், தன் மனம் போன போக்கை நினைத்து அதிர்வோடு அமர்ந்திருந்த ஆனந்தியின் செவியில் “ஹேய் கேடி என்ன நினைச்ச?” என்ற அபியின் குரல் கேட்க, உள்ளம் பதற, திடுக்கிட்டு பக்கவாட்டில் அமர்ந்திருந்த ஆடவனைப் பார்த்தாள். 

 

அவனோ கைகளை கல் திட்டில் ஊன்றி, கால்களை ஆட்டியப்படி மெல்லிய புன்னகையோடு அமர்ந்திருந்தான்… அந்த புன்னகையில் தான் எத்தனை வசீகரம்… பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது அவளுக்கு.. 

 

அக்கணம் ‘அட ச்சீ…மானத்தை வாங்காத…கேட்க வேண்டியதை கேளு’ மனம் கண்டிக்க… 

 

கண்களை இறுக மூடித் திறந்தவள் 

“சார்” என்றழைத்தாள் கோபமாக..

 

“ம்ம்…” என்றபடி திரும்பியவனின் முகத்திலிருந்த வெட்க புன்னகை இவளை மொத்தமாய் சாய்த்திருந்தது… 

 

‘நீ மயங்கி விழற அளவுக்கு அவன் ஒன்னும் வொர்த் இல்லை’ என்ற மனதின் தலையிலேயே ஓங்கி தட்டிவிட்டு அபியை பார்க்க, அவனோ ‘என்ன’ என்பதைப் போல் புருவத்தை உயர்த்தி கேட்டான்.

 

அவனது புருவத் தூக்களில் பொத்தென்று விழத் துடித்த மனதை அடக்கியப்படி “என்கிட்ட ஏதாவது கேட்டீங்களா?” எனக் கேட்டாள்… புருவங்கள் சுருங்க, இல்லை என்பதைப் போல் தலையாட்டினான் அவன்.

 

“ஹோ…” என்றவளுக்கு இன்னும் செவியோரம் குறுக்குறுத்துக் கொண்டு தான் இருந்தது..

 

நொடிகள் மௌனமாக கடக்க, அந்த அழகிய மௌனத்தை மெல்லமாய் நிறைத்து கொண்டது இசைஞானியின் இசை… 

 

மலர்ந்த கொடியோ மயங்கி கிடக்கும்…

இதழின் ரசங்கள் எனக்கு பிடிக்கும்…

 

அக்கணம் “ஆனந்தி” என்றழைத்தான்.

 

“ம்ம்…சார்” 

 

“எனக்கு, உன்னை இறுக்கமா கட்டிக்கத் தோணுது… கட்டிக்கவா?” எனக் கேட்டவனை விழிகள் விரித்து பார்த்தாள்.

 

அதே விழி விரிப்போடு 

 “என்ன சார்? என்ன கேட்டீங்க?” எனக் கேட்டாள். 

 

“ஒன்னுமில்லை…போலாமா?” என்றவன் அவளது பதிலை எதிர்பார்க்காமல் எழுந்து நடக்க, அவனை முறைத்துக் கொண்டே அவன் பின்னால் நடந்தாள்… 

 

***

 

ஃபயர் கேம்ப்பிற்கும், டென்ட்டிற்கும் இடைப்பட்ட இடைவெளியை அடர்ந்த இருள் ஆக்கிரமித்து இருந்தது… அந்த இருளைக் கண்டதும் ஆனந்தி அப்படியே நின்றுவிட, அபியோ அந்த இருளைப் பொருட்படுத்தாமல் நடந்தான்…  

 

அவனது மனம் அடித்துக் கொண்டது

தன்னையும் மீறி வெளிவந்த வார்த்தைகளில் அவளை விட இவனுக்கு தான் அதிர்ச்சியாக இருந்தது. கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டே முன்னால் வந்தவன் அப்பொழுது தான் ஆனந்தி அங்கேயே நிற்பது புரிந்தது

“என்ன வா” என்று அதட்டினான். அவளோ இன்னும் தயங்க… அதில் கடுப்பானவன் 

 

“என்னடி… இந்த இருட்டுல வைச்சு உன்னை கசமுசா பண்ற ஐடியா எனக்கில்லை, ஒழுங்கா பின்னாடியே வா” என்றான் பல்லைக் கடித்தபடி.. 

 

“ரொம்ப ஓவரா பேசறீங்க சார்? இதுக்கு மேல பேசினீங்க அவ்வளவு தான்” எகிறிக் கொண்டு சண்டைக்கு நின்றவளை சட்டென இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான் ஆடவன்.

 

“ஹேய்” என்ற ஆனந்தியின் குரல் அபியின் மார்பில் கரைந்து போனது… 

 

இருவரும் குளிருக்கு இதமான ஆடையை தான் அணிந்திருந்தனர்.. பெரிதாக அணைப்பில் வித்தியாசம் இல்லையென்றாலும் அவனது கைகள் கொடுத்த அழுத்தமும், சூடான மூச்சுக் காற்றும் அவளது கால்களை தளர செய்தன… 

 

அக்கணம், அவளை விட்டு வேகமாக விலகியவன் கேசத்தை அழுத்தி கோதிக் கொண்டே “எப்ப இருந்து உன்மேல, எனக்கு இப்படியொரு எண்ணம் வந்தது தெரியல… ஆனால் தோணுது?உன்னை கட்டிக்க தோணுது. முத்தம் கொடுக்க தோணுது. உன்னை என் கூடவே வைச்சுக்க தோணுது… இது காதலான்னு தெரியாது… ஆனால் கண்டிப்பா காமம் இல்லை…” என்றவனை அதிர்ந்து பார்த்தாள்… 

 

அவளது அதிர்ந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே பின்னால் நடந்தவன் “உனக்கு, என் மேல இப்படியான எண்ணம் இல்லைன்னு எனக்கு தெரியும். அது வர வரைக்கும் வெயிட் பண்றேன்…ம்ம்” அந்த ம்ம் அழுத்தம் கூட்டி “ரொம்ப வெயிட் பண்ண வைச்சுடாத” என்றுவிட்டு பிள்ளைகளோடு டெண்ட்டிற்குள் அடைக்கலமானன்… 

 

செல்லும் அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள் “போதுமா… இப்ப உனக்கு குளுகுளுன்னு இருக்குமே… அவனை வெறிக்க வெறிக்க பார்த்து இப்ப அவனே உன்மேல எனக்கு ஒரு இது இருக்குன்னு சொல்லிட்டான்… காதலும் இல்லையாம் காமமும் இல்லையாம்… அவன் என்ன சொல்ல வரான்னு உனக்கு புரியுதா?’ எனக் கேட்ட மனதிற்கு பதில் சொல்லாமல் கண்களை இறுக மூடிக் கொண்டாள்… 

 

“அவனைப் இப்படி பார்க்காத, படிக்கிற வேலையை மட்டும் பாருன்னு சொல்லும் போதெல்லாம் காதுல கூட வாங்கிக்கலை… உன்னோட பார்வை தான் அவனுக்கு இப்படியான எண்ணத்தை தூண்டி இருக்கு. அவனைத் தூண்டி விட்டதே நீ தான்… இதுக்கு அப்புறமாவது நான் சொல்றதை கேளு” என்ற மனதின் பேச்சிற்கு செவி சாய்க்கும் முன் “குளோரி” என்று கத்தி அழைத்தாள் குந்தவி… அவளை அடுத்து சோழாவின் குரலும் கேட்க 

 

“ஹான் வரேன்” என்றவள் அவர்களை நோக்கி வேகமாக நடந்தாள்.

 

டெண்ட்டிற்குள் அப்பன், மகள், மகன் என்று மூவரும் வரிசையாக படுத்திருக்க, இவளோ தயங்கி நின்றாள். “குளோரி என் பக்கம் வா” என்று குந்தவி அழைக்க, மெல்லிய தயக்கம் அவளை சூழ, ‘போகாதா… ரூமுக்குப் போறேன்னு சொல்லு’ என்ற மனதின் பேச்சையும் மீறி குந்தவி, சோழாவிற்கு இடையில் சென்றுப் படுத்தாள்.

 

“குளோரி… உனக்கு ஒரு மேஜிக் காட்டவா?” என ஆரம்பித்த அவர்களது பேச்சு நீண்டுக் கொண்டே செல்ல, அவர்களையே மெல்லிய புன்னகையோடு பார்த்திருந்த அபி மெல்ல உறங்கி போனான்…

 

அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் முற்றும் முழுதாக அபியை தவிர்த்தாள் ஆனந்தி… இந்த இரண்டு நாட்களிலும் விரல் விட்டு விட்டு எண்ணக் கூடிய அளவிற்கு தான் அவனிடம் பேசினாள். அது வீட்டிற்கு வந்த பிறகும் தொடர, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாளும் வந்தது.

 

 

******

சூரியன் உச்சியை நெருங்கிக் கொண்டிருந்த காலை பொழுது அது… 

 

அங்கே அந்த வீட்டின் முற்றத்தில் ஷோபாவில் அமர்ந்திருந்த சீதா, யாருடனோ தீவிரமாக பேசிக் கொண்டிருப்பது புரிந்தது… யாராக இருக்கும் என நினைத்துக் கொண்டே அறையிலிருந்து வெளியே வந்தாள் ஆனந்தி…

 

“வா ம்ம்மா…” என்றவர் பின் 

“அபியை கொஞ்சம் கீழே வர சொல்றயா?கால் பண்ணா எடுக்க மாட்டேன்கிறான் மா…” கெஞ்சல் குரலில் கேட்டதும் மறுக்க தோன்றாமல் அபியின் அறையை நோக்கி நடந்தாள்.

 

அதே சமயம், அங்கே அபியின் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் அபி… அவனது முகத்தில் கோபம் தாண்டவமாடியது… 

 

“ஒரு மணி நேரம் தான் நானும், ராமும் ஆபீஸ்ல இல்லை… அதுக்குள்ள இத்தனை குளறுபடி? வேலை செய்யுங்க, வேலை செய்யுங்கன்னு குச்சி வைச்சு தொரட்டத்திட்டே இருக்கணுமா உங்களையெல்லாம்…” கடுப்போடு கேட்டான். அதற்கு எதிர்ப் புறம் என் பதில் வந்ததோ 

 

“இந்த காரணமெல்லாம் சொல்லாதீங்க நீங்க. டென் மினிட்ஸ்ல எல்லா மேனேஜரையும் வர சொல்லுங்க… ஜூம் மீட்டிங்க்கு அரேஞ்ச் பண்ணிட்டு எனக்கு கால் பண்ணுங்க” எனக் கத்திவிட்டு அழைப்பை துண்டிக்கவும், அவனது அறைக்கதவை வேகமாக திறந்து கொண்டு ஆனந்தி உள்ளே வரவும் சரியாக இருந்தது…

 

“சார், உங்களை மேடம் கூப்பிட்டாங்க” என்ற ஆனந்தியின் குரல் “ஹேய் இடியட், கதவை தட்டிட்டு உள்ள வரணும்னு தெரியாதா?” என்ற அபியின் கத்தலில் தொலைந்து தான் போனது. 

 

இந்தளவிற்கு கத்துவான் என்று எதிர்ப்பாரதவள் திகைத்து நின்றாள். உண்மையில் அவளொன்றும் இங்கிதம் இல்லாமல் அறைக்குள் நுழையவில்லை. ஒன்றிற்கு இரண்டு முறை கதவை தட்டினாள். அவன் பதில் எதுவும் சொல்லவில்லை என்று தான் அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். ஆனால் அதற்கு இப்படி கத்துவான் என்று எதிர்பார்க்காதவள் நிமிடம் திகைத்து பின்

 

“இல்லை சார், அது வந்து” மறுத்து ஏதோ சொல்ல வர, கை நீட்டி தடுத்தவன் 

 

“ஒன்னும் சொல்ல வேண்டாம்.. முதல்ல இங்கிருந்து போ…” என்றான் கடுப்பாக.

 

பல்லைக் கடித்தபடி அவனைப் பார்த்தவள் “சும்மா போ போன்னு சொல்லாதீங்க சார். எனக்கும் உங்க ரூம்ல இருக்கணும்னு ஆசை இல்லை. உங்கம்மா கூப்பிட்டாங்கன்னு சொல்ல தான் வந்தேன்… ” பதிலுக்கு கத்திவிட்டு திரும்பியவளை பல்லைக் கடித்தபடி பார்த்தவன் “நில்லு டி” என்றான். அவனது டி என்ற அழைப்பில் ஏகத்திற்கும் கடுப்பானாள் ஆனந்தி… 

 

சட்டென திரும்பி “இங்க பாருங்க சார் இந்த டி போட்டு பேசற வேலையெல்லாம் வைச்சுக்காதீங்க சொல்லிட்டேன்…” ஒற்றை விரலை நீட்டி மிரட்டினாள். 

 

அவளது மிரட்டலில் புருவத்தை உயர்த்தி “அப்படியா? அப்படி கூப்பிட்டா என்ன செய்வீங்க மேடம்” எனக் கேட்டான்.

 

“எனக்கும் டா, டி எல்லாம் தெரியும் சார்” என்றவள் அங்கிருந்து நகர, செல்லும் அவளையே பல்லைக் கடித்தப்படி பார்த்தான்… 

 

அன்றைக்கு இரவு லம்ப்சிங்கில் பேசியதோடு சரி, அதற்கு பின் இன்றைக்கு தான் இருவருமே பேசிக் கொள்கின்றனர்… அந்த பேச்சும் சண்டையில் தான் முடிந்தது… மனதில் எழுந்த உணர்வுகளை அவளிடம் பகிர்ந்து விட்டதாலோ என்னவோ எப்பொழுதும் போல அவளிடம் சகஜமாகவே பேசுகிறான்… 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 41

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
34
+1
3
+1
3

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்