Loading

ராஜதுரை கோபமாக கட்சி ஆஃபீஸில் இருந்து வெளியே வர, அவர் முன் ஒரு காவல்துறை வண்டி வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் ராஜதுரையிடம் வந்து தயங்கியபடி‌ நிற்க, “என்னலே? எதுக்குலே இங்குட்டு வந்திருக்க… போன வாரம் தானே கை நெறய துட்ட வாங்கிட்டு போனீய…” எனக் கோபப்பட,

“ஐயா… அது வந்து…” என இன்ஸ்பெக்டர் இழுக்குவும், “எலேய்… வெறசா சொல்லித் தொலை… மனுஷன் இருக்குற கடுப்பு தெரியாம இவன் வேற…” என்றார் ராஜதுரை கடுப்புடன்.

இன்ஸ்பெக்டர், “பண மோசடிக்காக உங்கள அரெஸ்ட் பண்ணி கோர்ட்டுல ஆஜர் படுத்த சொல்லி கோர்ட்டுல இருந்து வாரண்ட் வந்து இருக்குது ஐயா…” எனத் தயங்கித் தயங்கி கூறவும் ஆத்திரமடைந்த ராஜதுரை, “யார அரெஸ்ட் பண்ணணும்னு சொல்றீய… எம்புட்டு தில்லு இருந்தா என்னையே அரெஸ்ட் பண்ண வந்து இருப்பியேலே நாதாரிப் பயலே…” என்க, “என்னை மன்னிச்சிருலே ஐயா…” என்ற இன்ஸ்பெக்டர் ராஜதுரை மறுக்க மறுக்க அவர் கரங்களில் விலங்கைப் பூட்டி வண்டியில் ஏற்றினார்.

_______________________________________________

“என்னை எங்குட்டு தம்பி கூட்டிட்டுப் போறீய… அந்த மனுஷன் பார்த்தா உனக்கு தான் பிரச்சினை ஆகிடும்லே…” என திடீரென வந்து தன்னை எங்கோ அழைத்து வந்த துருவ்விடம் விஜயா கேட்க,

“ஒரு நிமிஷம் இருங்கம்மா… நீங்களே பார்க்க தானே போறீங்க…” என்ற துருவ் தன் வீட்டு கதவைத் திறக்க, “இது யாரு வூடு தம்பி? என்னை எதுக்கு இங்குட்டு கூட்டிட்டு வந்து இருக்கியேலே…” என விஜயா புரியாமல் துருவ்விடம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே உள்ளிருந்து, “மாமா…” எனக் கத்திக் கொண்டு ஓடி வந்த அருணிமா விஜயாவைக் கண்டு வாசலிலே தயங்கி நிற்க, அருணிமாவைக் கண்ட விஜயாவிற்கு பேச்சே எழவில்லை.

விஜயாவின் கன்னங்களைத் தாண்டி விழிநீர்‌ வடிய, “அருணி…” என அருணிமாவின்‌ முகத்தை வருட, அவளோ விஜயாவைக் கண்டு பயந்து துருவ்வின் கரத்தைப் பிடித்துக் கொள்ளவும்‌ விஜயா அதிர்ச்சியில் துருவ்வைப் பார்க்க, “அம்மா… நீங்க உள்ள வாங்க… நான் சொல்றேன்‌ என்ன நடந்ததுன்னு…” என்றான் துருவ்.

அருணிமா விஜயாவின் முகத்தைத் திரும்பிப் பார்த்தபடி துருவ்வுடன் உள்ளே செல்ல, அவர்களுக்கு பின்னே வந்த விஜயாவோ என்ன நடக்கிறது என்றே புரியாமல் விளித்தார்.

அருணிமா, “மாமா… யாருலே இவிய… எதுக்கு நம்ம வூட்டுக்கு வந்திருக்காய்ங்க…” என்கவும் விஜயா அதிர, “நிரு… நீ‌ உள்ள போய் விளையாடிட்டு இரு… நான் வரேன்…” என்கவும் அருணிமா அங்கிருந்து செல்ல,

“தம்பி… அ…அருணிக்கு என்னாச்சுலே… அவ எப்படி உசுரோட இருக்கா? அன்னைக்கு அப்போ அந்த மனுஷன் என் பொண்ண கொன்னுட்டதா சொன்னாய்ங்களே தம்பி… இப்போ ஏன் அவ என்னை தெரியாதது போல பார்க்குறா…” என்றார் விஜயா வருத்தத்துடன்.

சற்று நேரம் அமைதியாக இருந்த துருவ் நடந்த அனைத்தையும் கூறவும் அதிர்ந்த விஜயா தலையில் அடித்துக் கொண்டு அழுதவர், “பாவி மனுஷன்… என் குழந்தைக்கு எம்புட்டு அநியாயம் பண்ணி இருக்கான்… ஐயோ… அப்படி என்னலே அந்த ஆளுக்கு அம்புட்டு சாதி வெறி… எம்புட்டு பாவத்த சேர்த்து வெச்சி இருக்கான் அந்த படுபாவி… அந்த ஆள போலவே அவன் மயேனையும் வளர்த்துட்டானே… அருணி மட்டும் தான்லே எனக்கு ஆறுதலுக்கு இருந்தது… அவளையும் இப்படி பண்ணி வெச்சி இருக்காய்ங்க… நீயி இல்லைன்னா என் புள்ளைக்கு என்ன ஆகி இருக்கும் தம்பி… நீயும் அருணியும் அந்த கடவுள் புண்ணியத்துல பொழச்சி இருக்கீய… ஆனா பாவம் அந்தத் தம்பி… அநியாயத்துக்கு அது உசுரு போயிடுச்சேலே…” எனக் கதற,

விஜயா ஜெய்யைப் பற்றிக் கூறியதும் தன் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்ட துருவ், “அம்மா… முடிஞ்சத பத்தி பேசி என்ன நடக்க போகுது… நீங்க வருத்தப்படாதீங்கமா… நான் நிரு கூட பேசிட்டு வரேன்… அவளுக்கு உங்கள சரியா ஞாபகம் இல்லாததுனால தான் இப்படி நடந்துக்குறா…” என்கவும் விஜயா சரி எனத் தலையசைக்கவும் அருணிமாவைத் தேடிச் சென்றான் துருவ்.

அருணிமா தன் விளையாட்டு பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருக்க, துருவ்வைக் கண்டதும் அவனிடம் ஓடிய அருணிமா, “மாமா… யாருலே அவிய? போய்ட்டாங்களா அவிய?” என்க,

துருவ், “நிரு… நீ நான் என்ன சொன்னாலும் நல்ல பொண்ணு போல கேட்ப தானே?” எனக் கேட்கவும் அவனைப் பார்த்து புன்னகைத்த அருணிமா, “என்னலே மாமா நீயி இப்படி கேட்டுப்புட்ட? நான் எப்போ நீயி சொல்லி மறுத்து இருக்கேன்…” என்றாள்.

“அவங்க உங்க அம்மா நிரு…” என துருவ் அமைதியாகக் கூறவும், “அம்மாவா? அம்மான்னா என்ன மாமா?” என எதுவும் புரியாமல் அருணிமா கேட்க, “நீ அவங்க கூட வந்து பேசு நிரு… உனக்கே புரியும் அவங்க யாரு… அம்மான்னா என்னன்னு…” என துருவ் கூறவும் சம்மதமாய் தலையசைத்தாள் அருணிமா.

துருவ் அருணிமாவுடன் வரவும் அவளை நெருங்கிய விஜயா, “அருணி கண்ணு… நீயி நல்லா இருக்கியாலே? நீயி என்னை வுட்டு போனதும் ஆத்தா எம்புட்டு வருத்தமா இருந்தேன் தெரியுமா?” என அருணிமாவின் முகத்தை வருடியவாறு கண்ணீருடன் கேட்க,

துருவ் கூறியதற்காக அவனுடன் வந்த அருணிமா விஜயா தன்னுடன் நெருக்கமாகப் பேசவும் தயங்கியவள் துருவ்வின் கரத்தை கெட்டியாகப் பிடித்தபடி அவனின் முகத்தை நோக்க, துருவ் அருணிமாவைப் பார்த்து கண்ணை மூடித் திறக்கவும் விஜயாவின் பக்கம் திரும்பிய அருணிமா, “எனக்கு ஒன்னும் இல்ல… நான் நல்லா இருக்கேன்…” என்றாள் அமைதியாக.

“என் தங்கம்… எப்படி இருந்த என் பொண்ணு… அது பாட்டுக்கு எல்லாரு கூடவும் சந்தோஷமா சிரிச்சி பேசி சுத்திட்டு இருந்தது… அந்தப் படுபாவி மனுஷன் பண்ண வேலையால பெத்த ஆத்தாவையே என் புள்ளக்கி அடையாளம் தெரியலையேலே…” என விஜயா அழவும், அருணிமா அவர் என்ன கூறுகிறார் எனப் புரியாமல் விளிக்க, “அம்மா…” என சற்று அழுத்தமாக அழைத்த துருவ் கண்களால் வேண்டாம் என விஜயாவிடம் காட்ட, அதனைப் புரிந்து கொண்ட விஜயா,

“நான் ஒருத்தி… கூறு கெட்டவ… எம்புட்டு நாள் கழிச்சு என் புள்ளய பார்க்குறேன்… அது கிட்ட போய் கண்டதையும் உளறிட்டு இருக்கேன்… நீயி வாடா கண்ணு… ஆத்தா உனக்கு பிடிச்சதெல்லாம் சமைச்சி தரேன்லே…” என்றார் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு.

துருவ், “நிரு… எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு… நீ உங்க அம்மா கூட இரு… அவங்க கூட பேசு… புரிஞ்சதா?” என்க, உதட்டைப் பிதுக்கியபடி அருணிமா சரி எனத் தலையசைக்கவும், “வாலே அருணி… ஆத்தாக்கு சமையல் கட்ட‌ காட்டு தாயி…” என்ற விஜயா அருணிமாவின் கரத்தைப் பிடித்து கூட்டிச் செல்ல, முகத்தைத் தொங்கப் போட்டபடி துருவ்வையே திரும்பிப் பார்த்தபடி சென்றாள் அருணிமா.

அவளின் முகத்தையே சில நொடிகள் வெறித்த துருவ் அவசரமாக எங்கோ கிளம்பிச் சென்றான்.

_______________________________________________

நீதிமன்றமே பரபரப்பாக இருக்க, அங்கிருந்த பார்வையாளர்கள் தமக்குள் ஏதோ கிசுகிசுத்துக் கொள்ள, சாட்சி கூட்டில் கோபமாக நின்றிருந்தார் ராஜதுரை.

நீதிபதி, “உங்க மேல பண மோசடி, கொலைக் குற்றம், ஆபத்தான கட்டட நிர்மாணம், போதைப்பொருள் கடத்தல்னு ஏகப்பட்ட புகார் இருக்கு… அதனால தான் உங்கள எம்.எல்.ஏ பதவில இருந்தும் நீக்கிட்டதா சொல்றாங்க… இதை நீங்க ஒத்துக்கொள்ளுறீங்களா?” என்க,

“எவனோ ஒரு எடுபட்ட பயலு வேற சோலி இல்லாம என் மேல கண்டபடி கேஸ் தந்து இருக்கான் ஐயா…” என ராஜதுரை ஆவேசப்பட, “அப்ஜெக்ஸன்‌ யுவர் ஆனர்…” என்றபடி அங்கு வந்தான் துருவ்.

நேராக சாட்சிக் கூண்டில் ஏறி ராஜதுரைக்கு எதிராக தன்னிடம் இருந்த அத்தனை ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த துருவ் ராஜதுரையை ஏளனமாகப் பார்க்க, அவனை தன்னால் இயன்ற மட்டும் முறைத்தார் ராஜதுரை.

அனைத்து ஆதாரங்களையும் பார்வையிட்ட நீதிபதி, “இதுவரை ராஜதுரை பண்ணின எல்லா குற்றத்துக்குமான ஆதாரங்கள் இருக்கு… இன்னும் நீங்க இதை மறுக்குறீங்களா?” என்க,

ராஜதுரையின் வழக்கறிஞர் திடீரென துருவ் ஏதோ ஆதாரங்களை சமர்ப்பிக்கவும் என்ன செய்யவெனப் புரியாமல் ராஜதுரையை நோக்க, அவர் கண் காட்டவும் எழுந்தவர், “அப்ஜெக்ஸன் யுவர் ஆனர்… கலெக்டர் ஐயாவுக்கு என் தரப்பு வாதி கூட இருந்த முன் பகை காரணமாக அவருக்கு எதிராக பொய்யான சாட்சிகளை முன் வைத்து இருக்குறதா நான் சந்தேகப்படுறேன்…” என்கவும், “இதுல உங்களுக்கு ஏதாவது அப்ஜெக்ஸன் இருக்கா?” என துருவ்விடம் கேட்டார் நீதிபதி.

“யேஸ் யுவர் ஆனர்… அதுக்கு முன்னாடி நான் சில பேர இங்க கூப்பிட விரும்புறேன்…” என துருவ் கூறவும் நீதிபதி சரி எனத் தலையசைக்க, வெளியே சென்ற துருவ் தன்னுடன் சிலரை அழைத்து வந்தான்.

அங்கு வந்தவர்களின் தோற்றத்தைக் கண்டு நீதிபதி அதிர, ராஜதுரையோ கோபத்தில் பல்லைக் கடித்தார்.

கிழிந்து தொங்கிய உடையுடன் வறுமையின் மொத்த உருவமாக நின்றிருந்தவர்களை நீதிபதி அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க, அவர்களை நீதிபதியின் முன் நிறுத்திய துருவ், “யுவர் ஆனர்… நான், நீங்க, இந்த எக்ஸ் எம்.எல்.ஏ எல்லாரும் இருக்குற இதே ஊர்ல தான் இவங்களும் இருக்காங்க… ஆனா இவங்களோட இந்த நிலமைக்கு காரணம் யார் தெரியுமா? இதோ வெள்ளையும் சொல்லையுமா நாழு நேரம் மூக்கு முட்ட சாப்பிட்டுட்டு இருக்காரே இவர் தான் முக்கிய காரணம்… என்ன பிரச்சினை தெரியுமா யுவர் ஆனர்? சாதி… இதோ நிற்கிறாங்களே… இவங்க எல்லாரும் கீழ் சாதியாம்… மட்டமான இரத்தமாம்… இவரோட சாதி தான் உத்தமமாம்… புனிதமாம்… அதே கீழ் சாதில பொறந்து வளர்ந்தவன் தான் நானும்… அவங்க கஷ்டம் என்னன்னு எனக்கே நல்லா தெரியும்… எங்க போனாலும் அசிங்கமும் அவமானமும் தான் எங்களைப் போலவங்களுக்கு மிச்சம்… இதெல்லாம் யாரால? இதோ இந்த ஆள போல சாதி வெறி பிடிச்ச மிருகங்களால தான்…” என்றான் கோபமாக.

நீதிமன்றமே அமைதியாக இருக்க, அங்கு நின்ற கீழ் சாதி மக்களில் ஒருவர், “வணக்கமுங்க ஐயா… நாம அம்புட்டு பேரும் இதே ஊர்ல தான்லே பொறந்து வளர்ந்தோம்… எங்க ஐயனும் ஆத்தாவும் கூட இதே ஊர் தான்… ஆனா யாரு பண்ண பாவமோ தெரியல கீழ் சாதியா பொறந்துட்டோம்… ஆனா எதனால நாம இவியல விட தாழ்ந்து போய்ட்டோம்னு தெரியல… எங்க புள்ளைங்கள மத்த பயலுங்கள போல படிக்க வைக்கணும்னு ஆசையா இருக்குலே ஐயா… இவிய பசங்க எல்லாம் பெரிய பெரிய பள்ளிக்கு படிக்க போகும் போது எங்க பசங்க கண்ணுல தெரியுற ஏக்கத்தை பெத்தவங்களா எங்களால பார்த்துட்டு இருக்க முடியல… எங்க சனத்துல எம்புட்டு பேர் இந்த வறுமை தாங்காம செத்திருக்காய்ங்கன்னு தெரியுமா? எம்.எல்.ஏய எதிர்த்து எங்க சனங்க கேள்வி கேட்டாய்ங்கன்னு எங்க கண்ணு முன்னாலயே எங்க சனங்களை எங்க சொந்தத்தை எல்லாம் இந்த ஆளு கொன்னு இருக்காருலே… ஆனா நாம தான் கீழ் சாதியா போய்ட்டோமே… எங்க சனத்துக்காக பேச ஒரு பயலு வரல… அப்போ தான்லே தெய்வம் போல வந்தாரு நம்ம மோகன் ஐயா… எங்க புள்ளைங்கள எல்லாம் படிக்க வைக்க முயற்சி பண்ணாரு… ஆனா அவரு மயேன் முன்னாலயே அந்த நல்ல மனுஷன உசுரோட எரிச்சு கொன்னுட்டாய்ங்க…” என்கவும் துருவ்வின் கண்கள் கலங்க, நீதிமன்ற வாயிலில் நின்றிருந்த முத்துராசு இறுக்கமான முகத்துடன் இருக்க, அவனுடன் தன் அடையாளம் தெரியாதவாறு முகத்தை மூடி நின்றிருந்த ஜெய்யிற்கு தன் சகோதரனை எண்ணி கவலையாக இருந்தது.

“எங்க உசுருக்கு பயந்து தான்லே இந்த ஆளு என்ன‌ பண்ணாலும் அவியலுக்கே வோட்ட போட்டோம்… அந்தத் தம்பி முத்துராசு எங்க சனத்துக்காக தேர்தல்ல நின்னப்ப கூட இவிய எங்க புள்ளைங்கள கொன்னு போடுறதா மிரட்டினாரு… அதனால தான் நாம இந்த ஆளுக்கே வோட்டு போட்டோம்… ஆனா அதுக்கப்புறமும் அவிய எங்க சனத்துக்கு எந்த நல்லதும் பண்ணல…” என‌ அவர்கள் தமது நிலையை நீதிபதியிடம் கூறவும் ஏதோ எழுதியவர், “இன்னும் ஏதாவது சொல்ல இருக்கா?” என துருவ்விடம் கேட்கவும்,

“இவங்க சொன்னது பாதி கூட கிடையாது யுவர் ஆனர்… இந்த ஆள் பண்ணின எல்லாமே பாவம் மட்டும் தான்… இவரும் இவர் பையனும் சேர்ந்து பண்ணாத அட்டூழியம் கிடையாது… இவர் ரத்தத்துல சாதி வெறி ஊறி கிடக்குது… ஆள் வெச்சி எங்க அண்ணனை கொல்ல முயற்சி பண்ணாரு… அவரோட நல்ல நேரம் அவர் தப்பிச்சிட்டாரு… வேற சாதி ஒருத்தர காதலிச்ச ஒரே காரணத்துக்காக இவர் கையாலயே எத்தனையோ பேர கொன்னு இருக்காரு… ஏன்… சொந்த பொண்ணையே நான் கீழ் சாதிக்காரன் என்னை காதலிச்சான்னு இந்த மனுஷன் எங்க ரெண்டு பேரையுமே கொல்ல முயற்சி பண்ணாரு… என் நிழலா என் கூடவே இருந்த என் ஜெய்ய அநியாயத்துக்கு துரோகம் பண்ணி கொன்னாரு…” என்றான் துருவ் கண்ணீருடன்.

துருவ் தன்னையும் அருணிமாவையும் ராஜதுரை கொல்ல முயற்சி செய்ததாகக் கூறவும் அதிர்ந்த ராஜதுரை, ‘அப்போ அந்த கழுதையும் உசுரோட தான் இருக்காளா? எலேய் மாரி… எங்குட்டுலே போய் தொலஞ்ச?’ என மனதில் கோபமாக நினைக்க, துருவ்வின் கண்ணீரைக் கண்ட ஜெய்யின் கண்களும் கலங்கின.

முத்துராசு அவன் தோளில் ஆறுதலாகக் கரம் பதிக்கவும் அவசரமாக தன் கண்களைத் துடைத்துக் கொண்டான் ஜெய்.

துருவ், “எங்க மேல உயிரையே வெச்சு இருக்குற எங்க அம்மா ஜெய்யோட பிரிவ தாங்காம ஹாஸ்பிடல்ல கிடக்குறாங்க… இதோ இவர் பொண்ணு… தலைல பலமா அடிபட்டதால மனநிலை பாதிக்கப்பட்டு சின்ன குழந்தை போல நடந்துக்குறா… யுவர் ஆனர்… உலகம் இவ்வளவு நவீனமயமா மாறி இருந்தாலும் கொஞ்சம் கூட மனதளவுல முன்னேறாம இருக்குற எங்க ஊரு மக்களுக்காக புதுசா நீங்க ஒரு சட்டத்தை உருவாக்கணும்… இனி வர நாட்கள்ல யாருமே சாதியை காரணம் காட்டி மனுஷங்க மத்தியில பிரிவ உருவாக்கக் கூடாது… சாதிங்குற பேர்ல அட்டூழியம் பண்ற ஒவ்வொருத்தருக்கும் கடுமையான தண்டனை வழங்கணும்… முதல்ல இந்த ராஜதுரை போன்ற  ஆட்கள் உருவாக்கி இருக்குற சாதி பெயர்ல இயங்கும் பள்ளிக்கூடம், காலேஜ் எல்லாமே அனைத்து மக்களுக்கும் பொதுவானதா மாற்றணும்… கீழ் சாதி மக்கள்னு இப்போ ஒதுக்கப்பட்டு இருக்குற எல்லாருக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கணும்.‌‌.. எக்ஸ் எம்.எல்.ஏயும் அவரோட ஆட்களாலயும் கொல்லப்பட்ட ஒவ்வொருத்தர் குடும்பத்துக்கும் இவர் கையால நஷ்ட ஈடு கொடுக்கணும்… யுவர் ஆனர்… இவரால யாருக்குமே நல்லது நடந்தது இல்ல… இவர் வெளிய இருந்தா மக்களுக்கு தான் ஆபத்து… தயவு செஞ்சி இவருக்கும் தலைமறைவா இருக்குற இவர் பையன் மாரிக்கும் தகுந்த தண்டனைய வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்றேன்…” என்க,

“இல்ல… இல்ல… இல்ல… இந்த கீழ் சாதிக்கார நாய் சொல்ற எதுவுமே நெசம் கிடையாதுலே…” என ராஜதுரை ஆத்திரத்தில் கத்தவும், “ஸைலன்ஸ்…” என சத்தமிட்டார் நீதிபதி.

“அப்ஜெக்ஸன் யுவர் ஆனர்…” என்றவாறு ராஜதுரையின் வழக்கறிஞர் எழுந்து கொள்ள,

நீதிபதி, “அப்ஜெக்ஸன் ஓவர் ரூல்…” என்றார் கோபமாக.

சற்று நேரம் நீதிமன்றமே அமைதியாக இருக்க, ராஜதுரையோ உள்ளுக்குள் கொதித்துக் கொண்டு இருந்தார்.

நீதிபதி, “ஆட்சியாளரின் வேண்டுகோளுக்கு இணங்க இனி வரும் நாட்களில் சாதி என்ற பெயரில் அநியாயம் செய்யும் ஒவ்வொருவரும் விசாரணையே இன்றி தண்டிக்கப்படுவர். அனைத்து மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும். நீதிமன்றத்தின் ஆணையை மீறும் ஒவ்வொருவரும் பாரிய குற்றம் செய்ததாக தண்டிக்கப்படுவர். மேலும் எக்ஸ் எம்.எல்.ஏ. ராஜதுரையின் பெயரில் இயங்கி வரும் அனைத்து தனியார் நிறுவனங்களும் அரச உடைமை ஆக்கப்பட்டு அனைத்து பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளிலும் எந்தவொரு பிரிவினையும் இன்றி அனைவருக்கும் கல்வியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கொலைக் குற்றம், பண மோசடி, போதைப்பொருள் கடத்தல் என எக்ஸ் எம்.எல்.ஏ ராஜதுரை மேல் வைத்த புகார்கள் தகுந்த சாட்சிகள் மூலம் உண்மை என நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. தலைமறைவாக இருக்கும் இவரின் மகன் மாரியை உடனடியாகக் கண்டு பிடித்து போலீஸ் காவலில் வைக்குமாறு காவல்துறையினருக்கு இந் நீதிமன்றம் உத்தரவிடுகின்றது. மேலும் இவரால் கீழ் சாதி மக்கள் என ஒதுக்கி வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யுமாறு இந் நீதிமன்றம் ஆணை இடுகிறது. கோர்ட் டிஸ்மிஸ்ட்.” என்று விட்டு எழுந்து செல்ல, காவல்துறையினர் ராஜதுரையின் கரங்களில் விலங்கு மாட்டி அவரை அழைத்துச் செல்ல, துருவ்வை முறைத்தபடி சென்றார் ராஜதுரை.

துருவ்வோ தன்னால் அனைவருக்கும் நீதி வாங்கிக் கொடுக்க முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியாக இருந்தான்.

ராஜதுரையை காவல்துறை வண்டியில் ஏற்றப் போகும் போது எங்கிருந்தோ தள்ளாட்டத்துடன் வந்து, “ஐயா…” என்றவாறு அவரின் காலின் கீழ் விழுந்தான் மாரி.

உடல் முழுவதும் காயங்களுடன் மேல் சட்டை கூட இன்றி வெற்று உடலுடன் கீழே விழுந்தவனைக் கண்டு அதிர்ந்த ராஜதுரை, “எலேய்… மாரி… என்னலே ஆச்சு?” எனப் பதறிக் கேட்டவர் மாரியை எழுப்பி விட, “அந்…த… கீழ்… சாதிக்….காரங்க… தான்லே… கா…ரண..ம்… என்…னால இந்…த… அவ…மானத்…தோட… உசு…ரோட… இருக்..க முடியா…து…” என மெல்லிய குரலில் திக்கித் திணறி ராஜதுரையிடம் முனங்கிய மாரி யாரும் எதிர்ப்பார்க்காத நேரம் தன் அருகில் நின்றிருந்த காவல் அதிகாரியின் துப்பாக்கியை எடுத்து தன்னையே சுட்டுக்கொள்ள, “மாரி……” என அவ் இடமே அதிர கதறினார் ராஜதுரை.

அவ் இடமே ஒரே பரபரப்பாக காணப்பட, இரத்த வெள்ளத்தின் நடுவே இறந்து கிடந்த மாரியின் அருகில் அமர்ந்து கதறினார் ராஜதுரை.

சற்று நேரத்திலே அவ் இடத்திற்கு அம்பியூலன்ஸ் வந்து மாரியின் உடலை ஏற்றிச் செல்ல, மாரியின் உடலைப் பிரேத பரிசோதனை முடித்து இறுதிக் கிரியைகளை முடிக்கும் வரை ராஜதுரையை வெளியே விட்டனர்.

துருவ்வும் அங்கு தான் நின்றிருந்தான். நடந்த சம்பவம் அவனுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

துருவ் என்ன நடந்தது என்றே புரியாமல் நின்றிருக்க, திடீரென தன் முகத்தை மறைத்திருந்த ஒருவன் வந்து துருவ்வை அணைத்துக்கொள்ளவும் அதிர்ந்தான் துருவ்.

தன்னை அணைத்து இருந்தவனின் முகத்தைக் கூட காணாது துருவ்வின் உதடுகள் தானாகவே, “ஜெய்…” என முணுமுணுத்தன.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
3
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்