Loading

ராஜதுரையும் முத்துராசுவும் எதிர்ப்பார்த்துக் காத்திருக்க தேர்தல் நடைபெறும் நாளும் பல்வேறு திருப்பங்களுடன் அமைதியாக ஆரம்பமானது.

அன்று மதியம் வரையுமே தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் முடிவுக்காக அனைவரும் காத்திருக்க, வழக்கம் போலவே ராஜதுரை தான் அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்று இருந்தார்.

முத்துராசுவுக்கு ஒரு சிலரே வாக்களித்து இருந்தனர்.

தேர்தல் முடிவைக் கண்டு முத்துராசு கலங்க, “எலேய்… இதுக்கெல்லாம் ஏன்லே கலங்கிக்கிட்டு… அவியலுக்கு என் புள்ளயோட நல்ல மனசு புரியல…” என அலமேலு கூற, “ஆமாண்ணா… நீ இதை கண்டுக்காதே… உன்னால முடிஞ்ச எல்லா முயற்சியையும் நீ பண்ணினாய் தானேண்ணா…” என்றான் துருவ்.

“அவியலுக்கு இதெல்லாம் புரியாதுண்ணே… அந்த சாதி வெறி பிடிச்ச மிருகம் மேல அம்புட்டு பயம் அவியலுக்கு..‌” என ஜெய் கூற,

“தேர்தல்ல தோத்தது எனக்கு கவலை இல்ல… இதை தான்லே நானும் எதிர்ப்பார்த்தேன்… ஆனா நம்ம சனங்களுக்கு என்னால எதுவும் பண்ண முடியலயே… எங்க ஐயன் வேற அம்புட்டு ஆசைப்பட்டாரு நம்ம சனங்க மத்தவியல போல நல்லா வாழனும்ணு…” என வருத்தத்துடன் கூறிய முத்துராசு,

“ஆத்தா… எனக்கு இன்னைக்கு மனசு என்னவோ போல இருக்கு… நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன்…” என்கவும், “அண்ணே நானும் உன் கூட வரேன்லே…” எனக் கூடவே புறப்பட்டான் கஜா.

அலமேலு, “எலேய்… எங்குட்டுலே போறீய? ஆத்தாக்கு ஏதோ மனசு அடிச்சிக்குது…” என முத்துராசுவின் நிலையை எண்ணி பயத்துடன் வினவ, “எனக்கு ஒன்னும் இல்ல ஆத்தா… நான் நல்லா தான் இருக்கேன்… வெறசா வந்துருவேன்…” என்று விட்டு கிளம்பினான் முத்துராசு.

அப்போது ஜெய்யின் கைப்பேசிக்கு, ‘அவசரம்… உன்ன உடனே சந்திக்கணும்லே…’ என சென்னியம்மாளிடமிருந்து குறுஞ்செய்தி வரவும் தன்னவளுக்கு என்னவோ ஏதோவென மனதில் பதறியவன், “ஆத்தா நான் கொஞ்சம் வயற் காட்டு பக்கம் போய்ட்டு வரேன்லே…” என்ற ஜெய் அலமேலு அழைக்க அழைக்க கேட்காமல் சென்றான்.

அலமேலு, “என்ன கண்ணா இவிய… ஆளாளுக்கு ஆத்தா பேச்ச கண்டுக்காம போறாய்ங்க… எனக்கு என்னவோ தப்பா நடக்க போறதாவே மனசு அடிச்சிக்குதுலே…” என்க,

துருவ், “அம்மா… சும்மா பயப்படாதீங்கம்மா… அவங்க ரெண்டு பேருக்கும் ஒன்னும் இல்ல… வந்துடுவாங்க… நீங்க போய் உங்க வேலைய பாருங்கம்மா…” என அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

ஆனால் அப்போதே அலமேலுவின் வார்த்தையை அவரின் புதல்வர்கள் கேட்டு இருந்தால் அதன் பின் வந்த பிரச்சினைகளைத் தவிர்த்து இருக்கலாம்.

இங்கு ராஜதுரையின் வீட்டிலோ ஒரே கொண்டாட்டமாக இருந்தது.

அருணிமாவும் விஜயாவும் அதில் எதுவும் கலந்துகொள்ளாமல் ஓரமாக நின்றனர்.

அருணிமாவுக்கு மட்டும் முத்துராசுவை எண்ணி கவலையாக இருந்தது.

ராஜதுரை, “அந்த ****** கீழ் சாதிக்காரப் பயலால என்னை எதிர்க்க முடியுமாலே? வந்துட்டான் இந்த ராஜதுரைக்கு எதிராவே நிற்க…” என ஏளனமாகக் கூறியவர் கையிலிருந்த மது பாட்டிலை வாயில் சரித்தார்.

ராஜதுரை கூறியதைக் கேட்டு அவரின் தொண்டர்கள், அடியாட்கள் அனைவரும் சிரிக்க,

“ஐயா… அந்தப் பயலு முத்துராசு உங்களையே எதிர்த்து நிற்கிற அளவுக்கு வந்துட்டான்… இதுக்கு மேல அவியல விட்டு வெச்சா நமக்கு தான் பிரச்சினை… இன்னைக்கே இதுக்கு ஒரு முடிவு கட்டணும்லே…” என மாரி போதையில் இருந்த ராஜதுரையை ஏற்றி விட்டான்.

“ஆமாலே… இந்த ராஜதுரையை எதிர்க்குற எந்தப் பயலும் உசுரோட இருக்கக் கூடாது… அந்த ***** முத்துராச ரொம்ப நாளா வுட்டு வெச்சிட்டோம்… இன்னைக்கே அவன குடும்பத்தோட அழிக்கிறேன்லே…” என ராஜதுரை ஆவேசமாகப் பேச,

“அதுக்கு என் கிட்ட ஒரு திட்டம் இருக்குலே…” என்ற மாரி தன் திட்டத்தைக் கூற, அதனைக் கேட்டு வெறியுடன் சத்தமாக சிரித்தார் ராஜதுரை.

ஆனால் அங்கு வந்த அருணிமாவும் அவர்களின் திட்டத்தைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தது தான் விதியின் செயலோ.

“எதுக்கு புள்ள அம்புட்டு அவசரமா வர சொன்னீய? ஏதாவது பிரச்சினையாலே?” என சென்னியம்மாளைக் காண வந்த ஜெய் பதட்டமாக வினவவும், உள்ளுக்குள் எழுந்த பதட்டத்தை ஜெய்யிற்குத் தெரியாமல் மறைத்த சென்னி, “அது… ஆஹ்… என்னவோ தெரியலலே… உன்ன உடனே பார்க்கணும் போல இருந்துச்சு… ஏன்லே… நான் உன்ன பார்க்கணும்னு கூப்பிட கூடாதா?” எனப் புன்னகையுடன் வினவ, “ச்சே ச்சே… என்னலே இப்படி கேட்டுட்ட? உனக்கு இல்லாத உரிமையா?” என ஜெய் கூறவும் அவனைப் பார்த்து புன்னகைத்தாள் சென்னியம்மாள்.

சென்னியம்மாள் அடிக்கடி சுற்றும் முற்றும் பார்ப்பதை அவதானித்த ஜெய், “எதுக்கு அடிக்கடி எட்டி எட்டி பார்க்குறியேலே?” என்க, “ஆ… ஒன்னும் இல்லலே… ஒன்னும் இல்ல…” என்றாள் சென்னி அவசரமாக.

சென்னியம்மாளின் கரத்தை எடுத்து தன் கரத்தினுள் வைத்துக் கொண்ட ஜெய், “சென்னி…” என இழுக்க, சென்னியம்மாள் தன் கரத்தை அவனிடமிருந்து மெதுவாக விலக்க முயற்சி செய்ய, “எப்போலே நமக்கு கல்யாணம் ஆகும்? நான் உங்க வூட்டுக்கு வந்து பேசவா?” எனக் கொஞ்சலாக ஜெய் கேட்க, “அவிய நம்மள பார்த்துட்டாய்ங்க… வாலே வெறசா ஓடலாம் இங்குட்டு இருந்து…” என்றாள் சென்னியம்மாள் பயத்துடன் எங்கோ பார்த்தபடி‌.

சென்னியம்மாள் கூறியதைக் கேட்டு அதிர்ந்த ஜெய் அவள் பார்த்த திசையைப் பார்க்க, “எலேய்… அவிய ரெண்டு பேரும் அங்குட்டு இருக்காய்ங்கடா…” என்ற மாரி அருவாளுடன் தன் ஆட்களை அழைத்துக் கொண்டு அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

“எலேய்… எனக்கு பயமா இருக்குலே… அவிய நம்மள கொன்னுருவாய்ங்க…” என சென்னி பயத்துடன் கூறவும், “சரி புள்ள நீயி பயப்படாதேலே… நாம எங்குட்டு சரி மறைவான இடத்துக்கு போய் ஒழிஞ்சிக்கலாம்…” என்ற ஜெய் சென்னியம்மாளையும் இழுத்துக் கொண்டு ஓடினான்.

மாரி அவனின் அடியாட்களுடன் அவர்களைத் துரத்திக் கொண்டே வர, மரங்களால் அடர்ந்த ஒரு இடத்திற்கு வந்து மறைவாக நின்று கொண்டனர் இருவரும்.

ஜெய், “பயப்படாதே புள்ள… உனக்கு ஒன்னும் ஆக விட மாட்டேன்…” எனக் கூறிய ஜெய் யாராவது வருகிறார்களா என எட்டிப் பார்க்க, அவனை குரோதத்துடன் வெறித்தபடி தன் இடுப்பில் சொறுகி இருந்த கத்தியை எடுத்தாள் சென்னியம்மாள்.

துருவ் தன் அறையில் அமர்ந்து சிவில் சேவை பரீட்சைக்கு தேவையான பாடங்களை முன் ஆயத்தமாக படித்துக் கொண்டிருக்க, அவனின் கைப்பேசி ஒலி எழுப்பியது.

எடுத்து யார் எனப் பார்க்க, திரையில் ‘நிரு’ என அருணிமாவின் பெயர் வரவும் அழைப்பைத் துண்டித்தான்.

மீண்டும் அழைப்பு வர அதையும் துண்டித்தான்.

தொடர்ந்து இதே நடக்க, மீண்டும் மீண்டும் அழைப்பு வரவும் கடுப்புடன் அழைப்பை ஏற்று, “எதுக்கு திரும்ப திரும்ப கால் பண்ணிட்டு இருக்க? உன் கூட பேச பிடிக்கலன்னு தானே கால கட் பண்றேன்…” என அருணிமாவைத் திட்ட, “மா…மாமா… நான் சொல்றதைக் கேளுலே…” என அருணிமா பதட்டமாக பேசவும், “நி… அருணிமா… என்னாச்சு… ஏன் இவ்வளவு பதட்டமா இருக்க?” எனக் கேட்டான் துருவ்.

“மாமா… அவிய… எங்க ஐயனும் அண்ணனும் அண்ணாத்தைய கொல்ல பார்க்குறாய்ங்க…” என்ற அருணிமா மாரியும் ராஜதுரையும் பேசிக் கொண்டிருந்தவற்றைக் கூறவும் அதிர்ந்த துருவ் அவசரமாக அழைப்பைத் துண்டித்து விட்டு அலமேலுவிடம் கூட கூறாது ஜெய்யைத் தேடி புறப்பட்டான்.

கஜாவுடன் சேர்ந்து மோகனின் இறுதிக் கிரியைகளை நடத்திய இடத்திற்கு வந்த முத்துராசு அங்கு மண்டியிட்டு அமர்ந்தவன், “அப்பா… நான் தோத்து போய்ட்டேன்… உங்க ஆசைப்படி நம்ம சனத்துக்கு என்னால எதுவும் பண்ண முடியாம போய்டுச்சு… என்னை மன்னிச்சிருலே ஐயா… ஆத்தா, தம்பிங்க எல்லாரையும் நல்லா தான் பார்த்துக்குறேன்யா… ஆனா நம்ம சனத்துக்கும் ஏதாவது பண்ணும்லே… அதுக்காக நான் வெச்ச முதல் அடியே இப்படி சறுக்கிடுச்சு…” என அழுதான்.

முத்துராசு தன் மனக் குமுறல்களை தன் தந்தையிடம் கொட்டிக் கொண்டிருக்க, கஜாவின் கைப்பேசி ஒலி எழுப்பியது.

அதனை எடுத்துப் பேசியவன் மறுபக்கம் ஏதோ கூறப்பட்டதும், “சரிங்கய்யா… சரி… இப்பவே முடிச்சிடுறேன்…” என்றவன் முத்துராசை நோக்கி நடந்தான்.

ஆனால் அதே சமயம் துருவ் முத்துராசுவிற்கு அழைத்து ராஜதுரையினதும் மாரியினதும் திட்டம் என அருணிமா கூறியவை அனைத்தையும் கூறியதை அறியாத கஜா முத்துராசுவை நெருங்கி தன் முதுகுக்குப் பின்னே மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து முத்துராசுவை வெட்ட முனைய, ஒரேயடியாக திரும்பி கஜாவின் காலை முத்துராசு தட்டி விடவும் அருவாளுடன் கீழே விழுந்தான் கஜா.

ஆவேசமாக எழுந்த முத்துராசு, “என் கூடவே இருந்து எனக்கு எதிராவே சதி பண்ணுறியாலே பச்ச துரோகியே…” என்றவன் கஜாவை அடிக்க, பதிலுக்கு முத்துராசுவுடன் மோதிய கஜா, “ஆமாலே… திட்டமிட்டு தான் நான் உன் கூட வந்து சேர்ந்தேன்லே… நீயி சீமைல இருந்துக்கிட்டு எங்க ராஜதுரை ஐயாவ பத்தி அம்புட்டு தகவலையும் சேகரிக்கிறது தெரிஞ்சி ஐயா தான் என்னை அனுப்பி வெச்சாரு… சீமைல வெச்சி உன் கவனத்தை எடுக்குறதுக்கு தான் ஐயாவோட ஆளுங்க கீழ் சாதிக்காரன்னு சொல்லி என்னை அடிச்சாய்ங்க… நானும் அவிய ஆளு தான்லே… **** சாதிக்காரப் பயலு நீயி அம்புட்டு முட்டாளா இருந்து இருக்கியேலே… நான் கீழ் சாதிக்காரன்னு சொன்னதும் என்னை பத்தி ஒன்னையும் விசாரிக்காம உன் கூட சேர்த்துக்கிட்டீய… அன்னைல இருந்து நீ பண்ணுற அம்புட்டையும் எங்க ஐயா கிட்ட தகவல் கொடுப்பேன்… சரியான நேரம் பார்த்து உன் சங்க அறுக்க தான் உன் கூடவே சுத்தினேன்லே…” என வெறியுடன் கூறவும் அதிர்ச்சி அடைந்தான் முத்துராசு.

“உன்ன எம்புட்டு நம்பினேன்லே… உன்ன என் சொந்த தம்பியா தானே பார்த்துக்கிட்டேன்… என் ஆத்தா தம்பிங்க அம்புட்டு பேருமே உன்ன நம்பினாய்ங்க… எங்க ஆத்தா உன்னைய புள்ளையா பார்த்தாரு… என் தம்பிங்க அண்ணன் அண்ணன்னு தானேலே உன் கூட சேர்ந்து இருந்தாய்ங்க… எப்படிலே உன்னால அவியலுக்கு துரோகம் செய்ய முடிஞ்சது…” என ஆத்திரத்துடன் கூறிய முத்துராசு கஜாவைப் புரட்டி எடுத்தான்.

இருவருக்கும் இடையில் பெரிய சண்டை நடக்க, கீழே விழுந்து கிடந்த அருவாளைக் கையில் எடுத்த கஜா, “உன்ன இன்னைக்கு கொல்லாம விட மாட்டேன்லே **** சாதிக்கார நாயே…” என்றவன் முத்துராசுவை வெட்டக் கை ஓங்க, அதனை லாவகமாகத் தடுத்த முத்துராசு கஜாவின் கையிலிருந்த அறுவாளைப் பறித்து அவனை ஒரே போடாகப் போட்டான்.

அருவாளில் வெட்டுப்பட்டு கஜா கீழே விழ, அவனின் அருகில் அருவாளை எறிந்த முத்துராசு, “சொந்த தம்பியா நினைச்ச உன்னையவே வெட்ட வெச்சிட்டியேலே பாவி…” எனாறான் ஆத்திரத்துடன்.

பின் முத்துராசு வேகமாக தன் வண்டியை எடுத்துக் கொண்டு துருவ் கூறிய இடத்துக்கு கிளம்ப, கஜாவோ சாதி வெறியில் தன் உயிர் நீத்தான்.

தன் இடுப்பில் சொறுகி வைத்திருந்த கத்தியை எடுத்த சென்னியம்மாள் அதனை ஜெய்யின் வயிற்றில் குத்த முனைய, அதற்குள் ஜெய் திரும்பவும் கத்தியை அவசரமாக மறைத்தாள்.

சென்னியம்மாளின் பக்கம் திரும்பிய ஜெய், “சென்னி… எதுக்கும் பயப்படாதே புள்ள… உனக்கு எதுவும் ஆகாதுலே… நான் இருக்கேன் உன் கூட…” என்கவும் தன் பதட்டத்தை முகத்தில் காட்டாது மறைத்த சென்னியம்மாள் ஜெய்யைப் பார்த்து போலியாகப் புன்னகைக்க, அவள் முகத்தையே நோக்கிய ஜெய் தன்னவளின் முகத்தைக் கரத்தில் ஏந்தி அவளின் இதழ் நோக்கிக் குனிய, இருவரின் இதழ்களுக்கும் இடையில் நூலிழை இடைவெளியே இருக்க, திடீரென அதிர்ச்சியில் கண்களை அகல விரித்தான் ஜெய்.

சென்னியம்மாளை விட்டு விலகியவன் அதிர்ச்சியுடனே தன் வயிற்றைக் குனிந்து பார்க்க, அவனின் இடையில் தன் கத்தியை சொறுகி இருந்தாள் சென்னியம்மாள்.

ஜெய் அதிர்ச்சியில் கண்கள் கலங்க, “செ…சென்னி…” என அழைத்து அவளை நோக்கி கரத்தை நீட்ட, மீண்டும் ஒரு முறை அவன் வயிற்றில் கத்தியைக் குத்தி விட்டு ஜெய்யின் நெஞ்சில் கை வைத்து அவனைக் கீழே தள்ளி விட்டாள் சென்னியம்மாள்.

சென்னியம்மாள் ஜெய்யின் வயிற்றில் கத்தியால் குத்திய இடத்திலிருந்து இரத்தம் பெருக்கெடுக்க, கீழே விழுந்திருந்த ஜெய் சிரிப்புச் சத்தம் கேட்டு கடினப்பட்டு தன் தலையை உயர்த்திப் பார்க்க, ஜெய் தன் உயிருக்கும் மேலாக காதலித்தவளை தன்னோடு அணைத்து நின்றிருந்தான் மாரி.

மாரி, “சொன்ன மாதிரியே செஞ்சிட்டியே புள்ள…” எனப் புன்னகையுடன் கூறவும், “என் அத்தானுக்காக இதைக் கூட செய்ய மாட்டேனாலே? சரியான சமயத்துல தான் நீயி வந்தீய… இல்லன்னா இந்த கீழ் சாதிக்காரப் பயலோட எச்சி என் வாய்ல இருந்து இருக்கும்… ச்சீச்சீ… நினைக்கவே அறுவறுப்பா இருக்குலே…” என சென்னியம்மாள் முகத்தை சுழித்துக் கொண்டு கூறவும் ஜெய்யின் மனம் சுக்குநூறாக உடைந்தது.

தன் உயிரைப் பிடித்து வைத்துக் கொண்டு கீழே விழுந்து கிடந்த ஜெய்யை ஏளனமாகப் பார்த்த மாரி, “என்னலே? இங்குட்டு என்ன நடக்குறதுன்னு புரியலயா? நீயி அம்புட்டு உசுரா காதலிச்ச இந்த புள்ள என் அத்தை மவள்… இந்தப் புள்ளைய தான் நான் கட்டிக்க போறேன்லே…” என சென்னியம்மாளை அணைத்துக் கொண்டு கூறியவன், “உன் அண்ணன் எங்க வழியில ரொம்ப குறுக்க வரான்லே… அவனுக்கு தம்பிங்கன்னா அம்புட்டு உசுராம்… அதான் இந்தப் புள்ளய வெச்சி உன்ன மயக்கி காதலிக்க வெச்சி உன்னைக் கொலை பண்ணோம்… இன்னும் கொஞ்சம் நேரத்துல நீயி ஒரேடியா போய் சேருவியேலே… அடுத்தது அந்த துருவ் தான்… உனக்கு ஒன்னுன்னா அவன் கண்டிப்பா உன்னைத் தேடி வருவான்… அவனையும் போட்டுட்டா அந்த முத்துராசு தனி மரமா நிற்பான்… அதுக்கப்புறம் அவனையும் போட்டுத் தள்ளி குடும்பத்தோட உங்களை சமாதி கட்டிருவோம்லே…” எனக் கூறிச் சிரிக்க, அவனுடன் இணைந்தாள் சென்னியம்மாள்.

ஜெய், “நீயி நினைக்கிற எதுவும் கண்டிப்பா நடக்காதுலே…” என்றவன் மயங்கிட, “ஹஹா… போய் சேர்ந்துட்டான்லே… இவன் பொணத்த இங்குட்டே ஏதாவது மிருகம் வந்து திங்கட்டும்லே…” எனக் கேலியாகக் கூறி விட்டு சென்னியம்மாளை அழைத்துக் கொண்டு கிளம்பினான் மாரி.

அருணிமா அழைத்துக் கூறியதும் உடனே முத்துராசுவுக்கும் தகவல் கொடுத்த துருவ் ஜெய்யைத் தேடி வயற் காட்டிற்கு ஓடி வர, எங்குமே அவன் தென்படவில்லை.

துருவ், “ஜெய்…….” எனக் கத்தி அழைத்தும் பதிலின்றிப் போக, அவ் இடத்தைச் சுற்றித் தேடியவனின் பார்வையில் இரத்த வெள்ளத்துக்கு நடுவில் விழுந்து கிடந்த ஜெய் விழவும் அதிர்ந்தவன் அவனை நோக்கி ஓடினான்.

“ஜெய்… டேய்… என்னாச்சிடா உனக்கு… கண்ண திறந்து பாருடா…” என துருவ் ஜெய்யின் தலையைத் தன் மடியில் ஏந்தி அவனின் கன்னத்தில் தட்டி அழ, மயக்கத்தில் இருந்த ஜெய் மெதுவாகக் கண் விழிக்கவும், “டேய்.. உனக்கு எதுவும் ஆகாது… வா நாம ஹாஸ்பிடல் போகலாம்…” என்ற துருவ் ஜெய்யைத் தூக்க முயல, அவனைத் தடுத்த ஜெய், “து..துருவா… நீயி.. எம்புட்டு முயற்சி…. பண்ணாலும்… நான் பிழைக்க… மாட்டேன்லே…” என திக்கித் திணறிக் கூற,

“வாய மூடுடா… உனக்கு ஒன்னும் ஆகாது… நான் உனக்கு ஒன்னும் ஆக விட மாட்டேன்டா…” என துருவ் அழுது கொண்டே கோபத்தில் கத்த, கடினப்பட்டு புன்னகைத்த ஜெய், “சாரிலே… மச்சான்… நான்.. உன் பேச்ச.. கேட்…கேட்டிருக்கணும்..‌. அந்தப் புள்ளய… நம்பி… ஏமாந்துட்டேன்…” எனக் கண்ணீருடன் கூறியவன் வலியில் முகத்தை சுருக்க, “எதுவும் பேசாதே மச்சான்… உனக்கு ஒன்னும் ஆகாது… நாம ஹாஸ்பிடல் போலாம்…” என்றான் துருவ்.

“டேய்… சொல்றத.. கேளுலே… அவிய அடுத்தது உன்னையும்… கொலை பண்ண… வருவாய்ங்க… நீயி இங்குட்டு… இருந்து… தப்பிச்சிப் போலே…” என ஜெய் கூறவும் அழுத துருவ், “முடியாதுடா… நீ இல்லாம என்னால இருக்க முடியாது… சின்ன வயசுல இருந்து உன் கூடவே தானேடா சேர்ந்துட்டு இருக்கேன்… இப்போ என்னை மட்டும் போக சொல்ற…” என்கவும் இரத்தம் படிந்த கையுடன் துருவ்வின் முகத்தை வருடிய ஜெய், “நான் எப்படியும் சாக தான் போறேன்… ஆத்தாவுக்கு நீயும் இல்லாம போய்ட்டா அவிய தாங்க மாட்டாருலே… ஆத்தாக்கு நீயின்னா உசுரு… நீயி ஆசைப்பட்டபடி கலெக்டர் ஆகணும்… இது என் மேல சத்தியம்…” என்கவும் தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதான் துருவ்.

“தங்கச்சிய… கை விட்டுடாதேலே… அந்தப் புள்ள… உன் மேல.. உசுரையே வெச்சி இருக்குது… அந்த… அந்த… மிருகங்க கிட்ட… இருந்து… அந்தப் புள்ளைய… காப்பாத்துலே…” என ஜெய் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு ராஜதுரையும் மாரியும் தன் ஆட்களுடன் வந்தனர்.

தூரத்தில் துருவ்வைக் கண்ட ராஜதுரை தன் ஆட்களிடம், “டேய்… அந்தக் கீழ் சாதிக்கார பயலு அங்குட்டு இருக்கான்லே…” எனக் கத்தவும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்த துருவ் அதிர, “நீயி.. என் மேல வெச்ச… பாசம் உண்மைன்னா… இங்குட்டு இருந்து தப்பிச்சு… போலே… இதுக்கு மேல… நான் பிழைக்க… மாட்டேன்…” என ஜெய் கெஞ்சவும் அவனை அணைத்துக் கொண்டு அழுத துருவ், “என்னால முடியாதுடா…” என்கவும் கண் மூடினான் ஜெய்.

ராஜதுரை தன் ஆட்களுடன் அவனை நெருங்கவும் ஜெய்யைக் கீழே கிடத்தி விட்டு அங்கிருந்து ஓடினான் துருவ்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்