Loading

தன் அலுவலகத்தில் இருந்த துருவ் ஏதோ நினைவு வந்தவனாக அவசரமாக தன் வீட்டிற்கு கிளம்ப, இருட்டி இருந்த வீட்டின் விளக்குகளை ஒளிர விட்டவன் கண்டது சோபாவில் கால்களை கட்டிக் கொண்டு அமர்ந்து தொலைக்காட்சித் திரையை வெறித்த வண்ணம் இருந்த அருணிமாவைத் தான்.

“நிரு…” என்றவாறு துருவ் பதட்டத்துடன் அருணிமாவிடம் செல்ல, துருவ்வைக் கண்ட அருணிமா, “மாமா… கொலை… அவிய… கொலை மாமா…” என பயம் கலந்த அதிர்ச்சியில் ஏதோ உளறவும் அவசரமாக தொலைக்காட்சியை அணைத்த துருவ் அருணிமாவை அணைத்துக் கொண்டு, “ஒன்னும் இல்ல நிரு… ஒன்னும் இல்ல…” என அவளை அமைதியாக்க முயல, “இல்ல… கொலை… அவிய…” என்ற அருணிமா தலையை இறுக்கப் பற்றியவள் வலியில் முகம் சுருக்கினாள்.

துருவ், “நிரு… ஒன்னும் இல்லடா…” என்கவும், “அவியல கிட்ட வர வேணாம்னு சொல்லுலே மாமா… எனக்கு பயமா இருக்கு…” என அருணிமா திடீரென அழத் தொடங்கவும், “நிரு…” என்று சற்று கடுமையாக அழைத்தான் துருவ்.

உடனே அருணிமா அழுகையை நிறுத்தி துருவ்வின் முகத்தை பயத்துடன் ஏறிட, அவளைத் தன்னோடு அணைத்த துருவ், “சாரிடா… அதான் சொல்றேன்ல… யாரும் இல்லடா இங்க… பாரு… அமைதியா இரு…” என மென்மையாகக் கூறவும் அமைதியாகினாள் அருணிமா.

பின் அவளுக்கு உணவை ஊட்டி உறங்க வைத்தவன் முதலில் செய்த வேலை அருணிமாவைப் பரிசோதித்த மருத்துவருக்கு அழைத்தது தான்.

அவர் அழைப்பை ஏற்கவும், “டாக்டர்… நிருவுக்கு இப்போ அடிக்கடி அந்த சம்பவம் ஞாபகம் வருதுன்னு நினைக்கிறேன்… ரொம்ப பயப்படுறா… ரொம்ப அப்சட்டா இருக்கா… என்னால அவளை இப்படி பார்க்க முடியல…” என துருவ் வருத்தத்துடன் கூறவும், “அவங்க கொஞ்சம் கொஞ்சமா கியுர் ஆகிட்டு வராங்கன்னு நினைக்கிறேன் துருவ்… பட் எக்சேக்ட்டா அப்படி சொல்லவும் முடியாது… இந்த சம்பவம் அவங்க மனச அதிகம் பாதிச்சிடுச்சுன்னா நிலமை இன்னும் மோசமாகும்… பெட்டர் நீங்க அவங்கள ஹாஸ்பிடல் கூட்டிட்டு வரது… எனக்கு அப்போ அவங்கள இன்னொரு தடவ செக் பண்ண முடியும்…” என்றார் மருத்துவர்.

துருவ், “அவள இப்போ வெளிய கூட்டிட்டு வரது டேன்ஜர் டாக்டர்… உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்…” என்க,

“புரியுது துருவ்… ஒரு வேளை பண்ணுங்க… இன்னைக்கு நைட் மட்டும் கொஞ்சம் அவங்கள கவனமா பார்த்துக்கோங்க… டுமோரோ மார்னிங் நான் உங்க வீட்டுக்கு வந்து அவங்கள பார்க்குறேன்…” என மருத்துவர் கூறவும், “ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்… நீங்க பண்றது ரொம்ப பெரிய ஹெல்ப்…” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான் துருவ்.

_______________________________________________

“எலேய்… மாரிய பத்தி ஏதாவது தகவல் கிடைச்சதாலே?” என்ற ராஜதுரையின் கேள்விக்கு அவரின் அடியாட்கள் யாரும் பதிலளிக்காது தலை குனியவும் ஆத்திரம் கொண்டவர், “என்ன எந்தப் பயலும் பதில் சொல்லாம கம்முன்னு இருக்கியேல? சொல்லுலே… என் மயேன பத்தி ஏதாவது தெரிஞ்சதா?” எனக் கத்த,

“ஐயா… சின்னய்யாவ நேத்துல இருந்து யாருமே பார்க்கலயாம்லே… அவிய உங்க கூட இருந்ததா தான் அவியலும் சொல்றாய்ங்க… திருவம்பட்டி பூராவும் தேடி பார்த்துட்டோம்லே… சின்னய்யா எங்கயும் கிடைக்கல…” என ஒருவன் தலை குனிந்து கொண்டே கூறவும் அவனை எட்டி உதைத்த ராஜதுரை,

“இப்படி சொல்ல வெக்கமா இல்லயாலே? தண்டத்துக்கு இருக்குற வெட்டிப் பயலுங்களா… ச்சே… மருவாதையா என் மயேன தேடி கண்டு பிடிக்கிற வழிய பாருலே… இல்ல அம்புட்டு பேரையும் ஒன்னு இல்லன்னு பண்ணிருவேன்…” என்றார் ஆவேசமாக.

அப்போது சரியாக அவரின் கைப்பேசி ஒலி எழுப்பவும் யார் எனப் பார்க்காமலே எடுத்து காதில் வைக்க, மறுபக்கம் சத்தமாக சிரித்தான் முத்துராசு.

ராஜதுரை, “எலேய்… யாருலே நீயி? எதுக்கு ஃபோன போட்டுட்டு‌ பேசாம சிரிச்சிட்டு இருக்கியேலே…” எனக் கோபமாகக் கேட்க, “இன்னுமாலே‌ நான் யாருன்னு தெரியல? ஆமா… உன் அருமை மயேன ரெண்டு நாளா காணோமாம்…” என முத்துராசு ஏளனமாகக் கேட்க,

“முத்துராசு…” என ராஜதுரையின் உதடுகள் தானாக முணுமுணுத்தன.

முத்துராசு, “முத்துராசே தான்லே… உனக்கும் உன்‌ மவனுக்கும் எமன்… நீயி‌ என் குடும்பத்தை சிதைச்சா நான் அமைதியா போயிடுவேன்னு நினைச்சியாலே? இல்லலே… திரும்ப பழி வாங்குவேன்லே…” எனக் கோபமாகக்‌ கூறவும், “நீயி… நீயி… என் மயேன் எங்கலே? மருவாதையா என் மயேன விட்டுருலே… இல்ல உன்ன சும்மா விட மாட்டேன்…” எனக் கத்தினார் ராஜதுரை.

“என்னலே நீயி… அப்பனும் புள்ளயும் ஒரே டயலாக்கா சொல்றியேலே… கேட்டு கேட்டு சலிச்சி போச்சு… ஏதாவது புதுசா இன்ட்ரஸ்ட்டா சொல்லுலே கொப்பா மவனே…” என முத்துராசு கேலியாகக் கூற,

“ஏய்…‌ உன் ஐயனையும் உன் தம்பியையும் கொன்னத விட மோசமா உன்ன கொல்லுவேன்லே நானு…” என ராஜதுரை ஆவேசமாகக் கூறவும் ஏதோ நகைச்சுவையைக் கேட்டது போல் சிரித்த முத்துராசு, “எலேய்… நீயி என்னைக் கொல்ல முன்னாடி நான் உன் புள்ளய போட்டு தள்ளிருவேன்… உன் மயேன் துடிக்கிறத கேக்குறியாலே? இரு..” என்றவன் தன் முன் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த மாரியின் வாயிலிருந்த துணியை எடுத்து விட்டவன் கத்தியால் மாரியின் முகத்தில் கீறு போட்டான்.

மாரி, “ஆஹ்….” என வலியில் கத்தவும் பதறிய ராஜதுரை, “எலேய்… அவன விடுலே…” எனக் கத்த, “சரிலே… உன் மயேன விட்டுறணும்னா நீயி நான் சொல்றத செய்யணும்லே… ரெண்டு வருஷம் முன்னாடி எங்க சனத்தோட வூட்டையெல்லாம் கொளுத்தி போட்டியே… நீயி எம்.எல்.ஏயா அவியலுக்கு எந்த நல்லதும் பண்ணி இல்ல… அதனால… போய் எங்க சனத்துக்கு தேவையான அம்புட்டு அடிப்படை வசதியையும் நீயி பண்ணி கொடுக்கணும்லே..” என முத்துராசு கட்டளையிடவும்,

“முடியாதுலே… *****சாதிக்கார நாய்ங்க… அவியலுக்கு எதுக்குலே அது எல்லாம்… அவிய உசுரோட இருந்தா என்ன செத்தா என்னலே…” என ராஜதுரை கோபமாகக் கூறவும் மறுபக்கம் மாரியின் அலறல் கேட்டது.

ராஜதுரை, “ஏய் மாரி… மாரி… என்னாச்சுலே… எலேய் முத்துராசு… என்னலே பண்ணீய என் மயேன…” எனப் பதட்டமாகக் கேட்க, “உனக்கு எம்புட்டு தில்லு இருந்தா என் கிட்டயே எங்க சனத்தை பத்தி இம்புட்டு கேவலமா பேசுவீய… அதான் உன் மயேன் கால்ல கத்திய இறக்கிட்டேன்லே…” என முத்துராசு கூறவும் அதிர்ந்த ராஜதுரை, “எலேய்… என் மயேன விட்டுருலே… அவன எதுவும் பண்ணிடாதே… நீயி சொன்னத நான் இப்பவே செய்றேன்லே…” என்கவும் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

முத்துராசு மீது இருந்த ஆத்திரத்தில் கைப்பேசியைத் தூக்கி வீசிய ராஜதுரை, “எலேய்… அந்தக் கீழ் சாதிக்கார நாய் எங்குட்டு இருக்கான்னு தேடுலே… அவன் தான்லே என் மயேன கடத்தி வெச்சி இருக்கான்… என் மயேன் மட்டும் கிடைக்கட்டும்… இவன், இவன் ஆத்தா தம்பின்னு அம்புட்டு பேரையும் கொன்னுட்டு தான்லே மறுவேலை பார்ப்பேன்…” என்றார் ஆவேசமாக.

_______________________________________________

மறுநாள் துருவ் மருத்துவர் வரும் வரை தன் வீட்டிலேயே இருந்தான்.

இரவு நடந்தது எதுவும் நினைவில் இன்றி அருணிமா காலை எழுந்ததிலிருந்தே துருவ் வாங்கித் தந்த பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

துருவ்வினால் அருணிமாவை அந் நிலைமையில் பார்க்க முடியவில்லை.

அவனின் கண்கள் கலங்கி இருப்பதைக் கண்ட அருணிமா துருவ்விடம் எழுந்து வந்து அவன் கண்ணீரைதா துடைத்து விட்டவள், “என்னலே மாமா நீயி… நீயி என்னைப் போல சின்ன குழந்தையா? ஏன் அழுறீய?” என்க, துருவ்வின் மனதில் பெரிய வலியொன்று எழுந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன் தன் துடுக்கான பேச்சால் தன்னையே பேச முடியாமல் செய்பவள் இன்றோ சிறு பிள்ளை போல் நடந்து கொள்வதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

எப்போதும் யாருக்கும் எதற்கும் பயப்படாமல் மிடுக்காகப் பேசுபவள், தன் முன் மட்டும் அவளின் காதலை அள்ளிக் கொட்டுபவள் இன்று அனைத்துக்கும் பயந்தவாறு இருந்தாள்.

துருவ் அருணிமாவைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க, அருணிமா மீண்டும் தன் இடத்திற்கே சென்று விளையாடினாள்.

சற்று நேரத்தில் வாசல் கதவு தட்டப்படவும் துருவ் சென்று கதவைத் திறக்க, வெளியே அருணிமாவின் மருத்துவர் நின்றிருந்தார்.

துருவ், “உள்ள வாங்க டாக்டர்…” என அழைக்கவும் அவனுக்கு ஒரு புன்னகையை வழங்கி விட்டு மருத்துவர் உள்ளே நுழைய, அவரைக் கண்டு அவசரமாக எழுந்து கொண்ட அருணிமா ஓடிச் சென்று துருவ்வை அணைத்துக் கொண்டாள்.

“என்னாச்சு நிரு…” என துருவ் கேட்கவும் அருணிமா, “இவிய எதுக்கு மாமா நம்ம வூட்டுக்கு வந்து இருக்காய்ங்க… இவியல போக சொல்லு… எனக்கு பயமா இருக்கு… இவிய ஊசி போடுவாய்ங்க…” என்கவும் புன்னகைத்த மருத்துவர்,

“இல்லம்மா… எனக்கு ஃப்ரெண்ட்ஸ் யாருமே கிடையாது… எனக்கு விளையாட கூட யாரும் இல்ல… துருவ் சொன்னான் நீயும் உங்க வீட்டுல தனியா விளையாடுறன்னு… அதான் நான் வந்தேன் உன் கூட விளையாட…” என்க,

அவரை நம்பாத பார்வை பார்த்த அருணிமா துருவ்விடம் திரும்பி, “டாக்டர் ஆன்ட்டி நெசமா தான் சொல்றாய்ங்களா மாமா…” எனக் கேட்கவும் புன்னகையுடன் ஆம் எனத் தலை அசைத்தான் துருவ்.

மருத்துவர் துருவ்விற்கு கண் காட்டவும் அதனைப் புரிந்து கொண்ட துருவ், “நிரு… நீ போய் டாக்டர் ஆன்ட்டி கூட விளையாடிட்டு இரு… எனக்கு சின்ன வேலை ஒன்னு இருக்கு… நான் அதை பண்றேன்…” என்கவும் அவனை விட்டு விலகிய அருணிமா சரி எனத் தலையசைத்து விட்டு தயங்கித் தயங்கி மருத்துவரிடம் சென்றாள்.

துருவ் தன் அறைக்குச் செல்ல, மருத்துவர் அருணிமாவைப் பார்த்து, “ஃப்ரெண்ட்ஸ்…” எனக் கரத்தை நீட்டிப் புன்னகைக்கவும் தயங்கியவாறு தன் கரத்தைக் கொடுத்த அருணிமா அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.

அருணிமா பார்பி பொம்மைக்கு சிகை அலங்காரம் செய்து கொண்டிருக்க, மருத்துவர், “ஆமா… உன் நேம் என்ன?” எனக் கேட்கவும், “அருணிமா” எனப் பட்டென பதில் அளித்தாள் அருணிமா.

“அப்போ துருவ் உன்ன நிருன்னு சொல்லி கூப்பிட்றான்… அது யாரு நிரு?” எனத் தெரிந்து கொண்டே மருத்துவர் வினவவும், “அதுவும் என் பேரு தான்லே… ஆனா மாமா மட்டும் தான் அப்படி கூப்பிடுவாய்ங்க…” எனக் கண்கள் மின்னப் பதிலளிக்கவும் அவளைப் பார்த்து புன்னகைத்த மருத்துவர், “எனக்கு இதை விட அழகா ஹேர் ஸ்டைல் பண்ணி விட முடியும்… நான் உன் பொம்மைக்கு ஹேர் ஸ்டைல் பண்ணி விடவா?” எனக் கேட்கவும் அவசரமாக தன் கரத்திலிருந்த பொம்மையை அவரிடம் நீட்டினாள் அருணிமா.

அருணிமாவுடன் சற்று நேரம் விளையாடிய மருத்துவர் அவள் கவனம் விளையாட்டில் இருக்கவும் மெதுவாக அவளுடன் பேச ஆரம்பித்தார்.

“நீ அடிக்கடி ஏதாவது கெட்ட கனவு காணுவியா அருணிமா?” என்கவும் ஒரு நொடி அமைதியாக இருந்தவள் அங்கு மாட்டியிருந்த ஜெய்யின் புகைப்படத்தை நோக்கி விரல் நீட்டினாள்.

அதனைப் புருவம் சுருக்கிப் பார்த்த மருத்துவர், “இவர் தான் உன்ன கனவுல பயமுறுத்துறாரா?” என்க, உடனே மறுப்பாகத் தலையசைத்த அருணிமா, “இது என் அண்ணாத்த… நேத்து கனவுல யாரோ ஒரு மீசை இவியல…. இவியல….” என அதற்கு மேல் வார்த்தை வராமல் அருணிமா நடுங்க, “ஓக்கே கூல்… கூல்… ஒன்னுமில்ல…” என அவளுக்கு தண்ணீரைக் கொடுக்கவும் குடித்த அருணிமா, “இவியல ஒரு மீசை, ஒரு அக்கா எல்லாரும் சேர்ந்து கொன்னுட்டாய்ங்க… அவிய என் மாமாவையும் கொல்ல பார்க்குறாய்ங்க…” எனத் திடீரென அழத் தொடங்கவும் சத்தம் கேட்டு அங்கு வேகமாக வந்த துருவ்,

“நிரு… என்னாச்சு… ஏன் அழுறாய்? என்னாச்சு டாக்டர்?” எனப் பதறிக் கேட்க, “மாமா… மாமா…” என அவனை அணைத்துக் கொண்டு அழுதாள் அருணிமா.

மருத்துவர், “ஒன்னுமில்ல… அவங்க கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டாங்க… நீங்க அவங்களை காம் பண்ணுங்க… அப்புறம் வந்து என்னை ஹாஸ்பிடல்ல சந்திங்க… நான் வரேன்…” என்றவர் அருணிமாவிடமும் கூறிக் கொண்டு புறப்பட்டார்.

அருணிமா, “மாமா… நீயி‌ என்னை விட்டு போ மாட்டியேலே… எனக்கு பயமா இருக்கு…” என அழுது கொண்டே கேட்கவும் அவள் கண்ணீரைத் துடைத்து விட்ட துருவ், “நான் எங்கேயும் போக மாட்டேன் நிரு… எப்பவும் உன் கூடவே தான் இருப்பேன்…” என்கவும் சமாதானம் அடைந்நாள் அருணிமா.

_______________________________________________

மாரி மயக்கம் தெளிந்து எழ, வலியில் உயிர் போவது போல் இருந்தது அவனுக்கு.

மாரி தன்னை விடுவித்துக்கொள்ளப் போராடும் ஒவ்வொரு முறையும் அவனைக் கட்டி வைத்திருந்த சங்கிலியால் அவனின் உடல் காயம் அடைந்தது.

உடல் முழுவதும் காயம் அடைந்து இருக்க, இரண்டு நாட்களாக சாப்பிடாத மயக்கமும் அவனை வாட்ட “த..தண்ணி… தண்ணி… டேய்… தாகமா இருக்குலே…” என திக்கித் திணறிக் கூறவும் மாரி இருந்த அறையைத் திறந்து கொண்டு உள்ளே வந்த முகமூடி அணிந்த இருவரில் ஒருவன் அவன் முன் ஒரு நீர் நிறைந்த வாளியை வைத்தான்.

மாரிக்கு இருந்த தாகத்தில் கை கால் கூட அவிழ்த்து விடாமல் இருக்கவும் முதுகை வளைத்து எக்கிக் குடித்தவன் மறு நொடியே அதனை வாந்தி எடுத்தான்.

“ஏய்… என்ன கருமம்லே இது… இப்படி நாறுது..” எனக் கோபமாகக் கேட்கவும் சரியாக அங்கு வந்த முத்துராசு, “நீ தானேலே தாகம்னு தண்ணி கேட்ட… அதான் தந்தேன்… இந்த கருமத்த தான்லே எங்க சனம் தினமும் குடிக்கிறாய்ங்க…” எனக் கோபமாகக் கூறியவன், “அடிப்படை வசதி கூட இல்லாம எங்க சனங்க கஷ்டப்படுறாய்ங்க… ஆனா அதை எல்லாம் செஞ்சி தர வேண்டிய உன் அப்பன் மட்டும் எல்லாத்தையும் அனுபவிச்சிட்டு இருக்கான்…” என்றான் ஆவேசமாக.

அதனைக் கேட்டு ஏளனமாக சிரித்த மாரி, “உன்னப் போல கீழ் சாதிக்காரப் பயலுங்களுக்கு இதுவே அதிகம் தான்லே…” என்கவும் அவன் கழுத்தை நெறித்த முத்துராசு, “நீயெல்லாம் உசுரோட இருந்து என்னத்தலே கிழிக்க போறீய…. சாவுலே சாதி வெறி பிடிச்ச நாயே…” என ஆத்திரமாகக் கூறவும் முகமூடி அணிந்த இருவரும் அவசரமாக அவனை வந்து தடுத்து நிறுத்தினர்.

“விடுலே… இவன கொன்னா தான் இவன் ஐயனுக்கு புத்தி வரும்…” என முத்துராசு கோபமாகக் கூறவும் பைத்தியம் பிடித்தது போல் சிரித்தான் மாரி.

_______________________________________________

“என்ன சொல்றீங்க… நிஜமாவா? சரி நான் பார்க்குறேன்…” என யாரிடமோ கைப்பேசியில் பேசிய துருவ் அவசரமாக அன்றைய செய்தியைப் போட்டுப் பார்த்தவன் திரையில் கண்ட காட்சியில் அதிர்ந்தான்.

ஏனென்றால் ராஜதுரை கீழ் சாதி மக்கள் வாழும் பிரதேசத்தில் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துக் கொண்டிருக்க, அதனை நேரலையாக செய்திகளில் போட்டுக் கொண்டு இருந்தனர்.

என்ன நடக்கிறது எனப் புரியாமல் சிந்தித்துக் கொண்டிருந்தவனின் கண் முன் முத்துராசுவின் முகம் வந்து செல்லவும் அவசரமாக தன் அண்ணனுக்கு அழைத்தவன் முத்துராசு அழைப்பை ஏற்றதும், “அண்ணா… நியூஸ் பார்த்தீங்களா?” என சந்தேகமாகக் கேட்கவும், “அதைத் தானேலே தினமும் பார்க்குறேன்… என்ன அவிய புதுசா போட போறாய்ங்க… எங்குட்டு சரி ஒரு நடிகனோடதோ நடிகையோடதோ தனிப்பட்ட விஷயத்தை எல்லாம் பெரிய செய்தியா போடுறாய்ங்கலா இருக்கும்…” என சலித்துக் கொண்டு முத்துராசு கூற, “இல்லண்ணா… அந்த ராஜதுரைய பத்தி தான் போட்டுட்டு இருக்காங்க லைவ்வா…” என்றவன் நடந்ததைக் கூறவும் மறுபக்கம் முத்துராசுவிடம் பதில் இல்லை.

“நீ ஏதாவது பண்ணிட்டியா அண்ணா?” என துருவ் சந்தேகமாகக் கேட்க, “என்னலே உளறிட்டு இருக்க? நான் என்ன பண்ண போறேன்… அவியலுக்கு புத்தி வந்துட்டுதோ என்னவோ…” என்று கூறிய முத்துராசு, “சரிலே எனக்கு முக்கியமா ஒரு வேலை இருக்கு… நான் ஃபோன வெச்சிடுறேன்லே…” என்று அவசரமாக அழைப்பைத் துண்டிக்கவும் யோசனையாக அமர்ந்தான் துருவ்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்