Loading

“எம்புட்டு தைரியம் இருந்தா என் வூட்டு உப்ப தின்னுட்டு என்னையே எதிர்த்து நிற்பீய…” என ராஜதுரை ஆவேசமாக வினவ,

“எம்புட்டு நாள் தான் உங்களுக்கு கீழயே இருக்குறது ஐயா… நாமளும் முன்னேறி வர வேணாமா… உங்க வூட்டு உப்ப தான்லே தின்னோம்… அதுக்காக நாம தனியா நிக்கவே கூடாதாலே…” என அவர் முன் நின்றிருந்தவன் எதிர்க் கேள்வி கேட்கவும் அவனை ஓங்கி அறைந்த ராஜதுரை, 

“ஆமாலே… நீயி என்னைக்கும் எனக்கு கீழ தான் இருக்கணும்…. சோத்துக்கே வழியில்லாம நின்ன நாய குளிப்பாட்டி நடு வீட்டுல வெச்சி சோத்த போட்டா நீயி இப்போ என்னையே எதிர்த்து நிக்கிறியாலே… அதை என் கிட்டே தில்லா சொல்ற பார்த்தியலா… இந்த ராஜதுரைக்கு கீழ தான் அம்புட்டு பேரும் கொங்காப்பயலே…” என்றார் கோபமாக. (கொங்காப்பய -அறிவற்றவன்) 

“அதுக்கு நீயி உசுரோட இருந்தா தானேலே…” என்றவன் தன் பின்னே மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து ராஜதுரையை வெட்ட கை ஓங்கியவன் மறு நிமிடமே ராஜதுரையின் காலின் கீழ் விழுந்தான் கழுத்து அறுபட்டு.

ராஜதுரை தன் முகத்தில் தெறித்த இரத்தத்தைத் தன் கரத்தால் துடைத்தவாறு கண்களைத் திறக்க, அவர் முன் இரத்தக்கறை படிந்த அருவாளைக் கையில் ஏந்தியவாறு குரூரப் புன்னகையுடன் நின்றிருந்தான் அவன்.

தன் முன் இறந்து விழுந்து கிடந்தவனின் தலை மீது தன் ஒரு காலை வைத்து மிதித்த ராஜதுரை, “பார்த்தியாலே… சாவும் போது கூட எனக்கு கீழ தான் நீயி… நாதாரிப்பயலே… வந்துட்டாய்னுங்க என்னையே எதிர்த்து நிற்க…” என்றவர் சுற்றியிருந்த தன் அடியாட்களைப் பார்த்து,

“அம்புட்டு பேரும் கேட்டுக்கோலே..‌. இந்த ராஜதுரைய எதிர்த்து நிக்கனும்னு நெனச்ச… இது தான்லே உங்க கதியும்…” என்றார் வக்கிரச் சிரிப்புடன்.

பின் கையில் அருவாளுடன் தன்னைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தவனை நோக்கிய ராஜதுரை, “வந்துட்டான்யா என் மயேன்… எலேய்… வாலே.. வந்து உன் ஐயன கட்டிப்பிடிச்சுக்கோலே…” எனப் புன்னகையுடன் கூறவும் கையிலிருந்த அருவாளை தரையில் எரிந்து விட்டு தன் தந்தையை அணைத்துக் கொண்டான் மாரி. 

மாரி, “நல்லா இருக்கியலாய்யா…” என்க, “எனக்கு என்னலே… சிங்கத்த பெத்து வெச்சிட்டு நான் எதுக்கு கவலைப்படணும்… உன் ஐயனுக்கு ஒன்னுன்னதும் சரியா வந்துட்டியலே… பார்த்தியா… நான் ஜம்முன்னு இருக்கேன்…” என்றார் ராஜதுரை தன் மீசையை முறுக்கியபடி.

மாரி, “யாருய்யா அவன்… நம்ம பயலுங்க சொன்னாய்ங்க சீமைல இருந்து ஒருத்தன் வந்த அன்னைல இருந்து உங்க கிட்ட வம்பு பண்ணுறதா… யாருன்னு காட்டுங்கய்யா… நானே அவன் கதைய முடிச்சி விடுறேன்…” என ஆத்திரமாகக் கேட்க,

“அது ஒரு பொடிப்பயலுலே… அம்புட்டு பெரிய ஆளுல்லாம் கிடையாது… அந்தப் பயல நானே பார்த்துக்குறேன்… நீ வாலே நம்ம வூட்டுக்கு போலாம்… உன் கூட நிறைய விஷயம் பேச இருக்குது…” என மாரியை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

இருவரும் வீட்டை அடைந்ததும், “எலேய் விஜயா… ஆரத்தி கரைச்சி எடுத்துட்டு வாலே… என் மயேன் எம்புட்டு நாள் கழிச்சு வூட்டுக்கு வந்திருக்கான்…” என ராஜதுரை வாசலில் நின்று சத்தமிடவும் சில நிமிடங்களில் ஆர்த்தி தட்டுடன் வந்த விஜயா, 

“ஆமா.. துரைக்கு ஆரத்தி ஒன்னு தான்லே குறைச்சல்… என்னவோ சீமைக்கு போய் படிச்சிட்டு வரான் போல துள்ளுறீய… கொலை பண்ணிட்டு கேச இழுத்து மூடும் வரை பல வருஷம் கழிச்சு தலைமறைவா இருந்துட்டு வராய்ன்… இவியலுக்கு நாம ஆரத்தி எடுக்கணுமாம்லே…” என கோபமாக முணுமுணுத்தவாறு மாரிக்கு ஆரத்தி சுற்ற,

கோபத்தில் அதனை வேகமாகத் தட்டி விட்ட ராஜதுரை விஜயாவின் கழுத்தைப் பற்றி, “என்னலே சொன்ன என் மயேன பத்தி… பட்டதெல்லாம் மறந்திடுச்சா…” என்றார்.

தன் தந்தையின் கரத்தை இழுத்து விடுவித்த மாரி, “விடுங்கய்யா… அவியலுக்கு எங்க இதெல்லாம் புரிய போகுது…” என்று விட்டு உள்ளே நுழையவும், “பொட்டச்சி போல அடங்கி இருலே… அதை விட்டுட்டு ஏதாவது ஏடாகூடமா பேசினியன்னா கட்டினவள்னு கூட பார்க்காம பொலி போடுவேன்…” என ராஜதுரை கோபமாகக் கூறி விட்டுச் செல்ல, 

தரையில் கிடந்த தட்டை எடுத்துக் கொண்டு சேலை நுனியில் கண்களைத் துடைத்தவாறு வீட்டிற்குள் சென்றார் விஜயா.

வீட்டினுள் நுழைந்த ராஜதுரை முதலில் கண்டது அங்கே கை கட்டி தலை குனிந்து நின்றிருந்த தன் அடியாட்களைத் தான்.

“எலேய்… இங்குட்டு என்னலே பண்ணுற… நான் உங்கள காலேஜுல நின்னு அந்தப் பயல பரீட்சை எழுத விடாம பண்ண சொன்னேனே…  அந்தப் பயல உள்ள விட வேணாம்னு சொன்னேன்லே…” என ராஜதுரை கேட்க,

ஒருவன் தயங்கியவாறு முன் வந்து, “ஐயா… அது வந்து… நம்ம சின்னம்மா…” என இழுக்க,

ராஜதுரை, “என்ன சின்னம்மா… ஒழுங்கா சொல்லுலே…” என்றார் கோபமாக.

“நம்ம சின்னம்மா அந்த பயலுங்கள உள்ள அனுப்பிட்டாய்ங்கய்யா… எங்களையும் மிரட்டி அங்குட்டு இருந்து அனுப்பிட்டாய்ங்கய்யா… சின்னம்மாவ எதிர்த்தும் எங்களால பேச முடியல…” எனக் கூறி முடிக்கும் முன்னே அவனை அறைந்து இருந்தார் ராஜதுரை.

ராஜதுரை, “என்னலே சொன்னீய… உங்க சின்னம்மா சொல்லிட்டாய்ங்களா… என் பேச்சைத் தட்டி விட்டுட்டு அந்த சிறுக்கி பேச்சைக் கேட்டியாலே… அவள இன்னைக்கு ஒன்னு இல்லன்னு ஆக்குறேன்… எலேய்.. எடுலே வண்டிய… எம்புட்டு தில்லு இருந்தா என்னை எதிர்த்து அந்தப் பயலுங்கள பரீட்சை எழுத விட்டிருப்பா…” எனக் கோபமாகக் கூறவும்,

மாரி, “என்னாச்சுய்யா… யார பரீட்சை எழுத விடாம பண்ண சொன்னீய…” என்க,

“அதான்லே… அந்த *****சாதிக்காரப் பயலு தான்ல… எல்லாம் இந்த சிறுக்கி மவளால தான்…” என்ற ராஜதுரை கோபமாக வண்டியில் ஏறி அமரவும் மாரி அவசரமாக வந்து வண்டியை இயக்கினான்.

_______________________________________________

“எலேய்… துருவா… எவன்லே இந்த பரீட்சைய கண்டு பிடிச்சது… அவன் மட்டும் என் கைல கெடச்சான்… கருமாதி தான்லே…” என பரீட்சை முடிந்து வெளியே வந்த ஜெய் கூற,

சிரித்த துருவ், “டேய்… உன் கையால செத்தா அவருக்கு அசிங்கம்னு தான் முன்னாடியே போய் சேர்ந்துட்டாரு போல…” என்றான் கேலியாக.

ஜெய் துருவ்வை முறைக்க, அவர்களின் பின்னே ஓடி வந்த அருணிமா, “அண்ணாத்த…” என்று கத்தினாள் மூச்சிறைக்க நின்றபடி.

துருவ், ‘வந்துட்டா… இவ தொல்லைக்கு மட்டும் ஒரு விடிவு காலமே கிடையாதா கடவுளே…’ என நினைத்தவன், “வந்துட்டா உன் தங்கச்சி… நல்ல மூட்ல இருக்கேன் இன்னைக்கு… இவ பேச்சைக் கேட்டு என்னால அதை கெடுத்துக்க முடியாது… நான் கிளம்புறேன்டா…” என ஜெய்யிடம் கூறியவன், “டேய் மச்சான்… நில்லுலே…” என ஜெய் கத்துவதைக் கூடக் கண்டு கொள்ளாமல் அங்கிருந்து சென்றான்.

துருவ்வின் முதுகைக் கோபமாக வெறித்த அருணிமா, “நீயி மட்டும் எதுக்குலே நிக்கிறீய… போலே நீயும்…” எனக் கோபமாக ஜெய்யிடம் கூற,

“எலேய்.. என்னலே.. லந்தா… நீ தானே அண்ணாத்தன்னு கத்திட்டு என் பின்னாலயே வந்தியேலே… நீயி வரத கண்டு தான் அந்தப் பயலு என்னைத் தனியா நிக்க வெச்சிட்டு போய்ட்டான்…” என்றான் ஜெய்.

“யாருக்குலே உன் கூட பேசணும்… நான் என் மாமன் கூட பேச தான் வந்தேன்… உன் கூடவெல்லாம் மனுஷன் பேசுவானா…” என அருணிமா நக்கலாகக் கூற,

“சொல்லுவேலே.. தேவை தான் எனக்கு இது..” என ஜெய் தலையிலடித்துக் கொள்ள,

அருணிமா, “எலேய் அண்ணாத்த…” என்றவள் நாக்கை மடித்து கழுத்தி கோடு போட்டுக் காட்டி ஜெய்க்கு பத்திரம் காட்டவும் அதிர்ந்தவன், “இதோ மச்சான்.. வந்துட்டேன்லே..” என துருவ்வை நோக்கி ஓடினான்.

துருவ்வும் ஜெய்யும் கல்லூரியிலிருந்து வெளியேறி சற்று தூரம் நடக்கவும் ராஜதுரை தன் அடியாட்களுடன் வண்டியில் வரவும் சரியாக இருந்தது.

துருவ்வையும் ஜெய்யையும் கவனிக்காது வண்டி அவர்களைக் கடந்து செல்லவும், “எலேய்… இவிய எதுக்குலே இம்புட்டு அவசரமா காலேஜு பக்கம் போறாய்ங்க..” என ஜெய் கேட்க,

“நமக்கு எதுக்குடா அது… அவர் காலேஜ்.. அவர் போறாரு… பேசாம வாடா..” என்றான் துருவ்.

ஜெய், “இல்லலே… அந்தப் புள்ள வேற இன்னைக்கு அவிய அப்பன எதிர்த்து நமக்கு உதவி செஞ்சாப்புல… இவிய போற வேகத்தைப் பார்த்தா பயமா இருக்கு… வாலே போய் பார்க்கலாம்…” என்றவன் துருவ்வை இழுத்துக் கொண்டு செல்ல, அங்கு சென்றவர்கள் கண்டது கன்னத்தில் கை வைத்தபடி தரையில் விழுந்து கிடந்த அருணிமாவைத் தான்.

அவள் முன் ஆவேசமாக நின்றிருந்த ராஜதுரை கீழே விழுந்திருந்த அருணிமாவின் தலை முடியைப் பற்றி, “சிறுக்கி மவளே… உன் ஐயனையே ஏமாத்த பார்க்கிறியாலே… எம்புட்டு தில்லிருந்தா அந்த சாக்கடைங்கள என் காலேஜுலயே பரீட்சை எழுத விட்டிருப்பிய…” எனக் கோபமாகக் கூறியவர் மீண்டும் தன் மொத்த பலத்தையும் திரட்டி அருணிமாவை அறைய, அருணிமாவின் உதடு கிழிந்து இரத்தம் வடிய கீழே விழுந்தாள்.

துருவ் அதிர்ந்து அருணிமாவை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க, அதற்குள் கீழே விழுந்திருந்த அருணிமா துருவ்வைக் கண்டு கலங்கிய கண்களுடன் மறுப்பாகத் தலையசைக்கவும் அவனின் நடை தடைப்பட்டது.

ஜெய், “எலேய் வாலே… அந்தப் புள்ளய அடிச்சே கொன்னுருவான் அந்த நாய்…” என்றவன் அருணிமாவை நோக்கி செல்லப் பார்க்க, அவன் கை பிடித்து தடுத்த துருவ், “வாடா வீட்டுக்கு போலாம்… இது அவங்க வீட்டுப் பிரச்சினை… நாம தலையிட வேணாம்…” என்கவும் அவனின் கரத்தை உதறி விட்ட ஜெய்,

“ச்சே.. நீயெல்லாம் மனுஷனாயா… அந்தப் புள்ள நமக்கு உதவி பண்ண போய் தான் இம்புட்டு அடி வாங்குது… பாவம்லே… உனக்கு அந்தப் புள்ளய பிடிக்காம இருக்கலாம்… அதுக்காக கண் முன்னாடி பொட்டப் புள்ளய இப்படி அடிக்கிறாய்ங்க… பார்த்துட்டு சும்மா இருக்க சொல்றியாலே…” என்றான் கோபமாக.

துருவ் பதில் கூறாது அமைதியாக இருக்கவும் ஜெய், “நீயி என்ன வேணா பண்ணிக்கோலே… என்னை அடிச்சி போட்டா கூட‌ பரவாயில்ல… நான் போறேன் அந்தப் புள்ளய காப்பாத்த…” என்க,

“அம்மா மேல சத்தியம் ஜெய்… நீ போக கூடாது..” என துருவ் அமைதியாகக் கூறவும் முதல் முறை அவனை அறைந்த ஜெய், “மிரட்டுறியாலே…” என்றான் கோபமாக.

ஆனால் துருவ்வின் பார்வையோ அருணிமாவிடமே இருக்க, கோபமாக அங்கிருந்து கிளம்பினான் ஜெய்.

தன் கண்களை அழுத்த மூடித் திறந்த துருவ் ஜெய்யைப் பின் தொடர்ந்தான்.

“இந்தக் கழுதைய வண்டில ஏத்துலே… இனிமே இவ எப்படி வெளிய வரான்னு பார்க்குறேன் நான்…” என ராஜதுரை கோபமாகக் கூறவும் கீழே விழுந்து கிடந்த தன் தங்கையை இழுத்துச் சென்று வண்டியினுள் தள்ளினான் மாரி.

அவர்கள் ஏறியதும் வண்டி கிளம்ப, அவர்களின் வண்டியையே வெறித்துக் கொண்டிருந்த துருவ் மாரியின் பார்வையில் படவும் அவனை முறைத்து விட்டுச் சென்றான்.

_______________________________________________

“எலேய்… எங்கலே துருவ்… நீயி மட்டும் தனியா வந்திருக்கியேலே… பரீட்சை என்னாச்சு…” என்ற முத்துராசுவின் கேள்விக்கு பதிலளிக்காது கோபமாக அமர்ந்திருந்தான் ஜெய்.

அலமேலு, “ஜெய் கண்ணா… என்னாச்சுலே… எதுக்காக இப்போ இம்புட்டு ஆத்திரப்படுறீய… துருவ் எங்கயா…” என்கவும்,

“இப்போ வருவான் பாரு ஆத்தா உன் செல்லப் புள்ள… அந்தப் பயலு கிட்டயே கேட்டுக்கோங்க…” என ஜெய் கோபமாக பதிலளிக்கவும் அலமேலு அமைதியாகினார்.

கஜா, “என்னாச்சுண்ணே இந்தப் பயலுக்கு… இவன் சரியான காமெடி பீஸாச்சே… இவன் எதுக்குலே இப்படி இருக்கான்…” எனக் கேலியாகக் கேட்கவும் ஜெய் அவனை முறைக்க, “எலேய் சும்மா இருலே… அவன் கிட்ட வம்பு பண்ணிக்கிட்டு… பாவம்லே என் தம்பி..” என்றான் முத்துராசு புன்னகையுடன்.

சற்று நேரத்தில் துருவ் வீட்டினுள் நுழைய, அவன் கன்னத்தில் இருந்த கைத் தடத்தைக் கண்டு பதறிய அலமேலு, “துருவ் கண்ணா… என்னாச்சுலே… யாரு உன்ன அடிச்சது…” என்க,

ஜெய், “நான் தான் ஆத்தா அவனை அடிச்சேன்…” என்றான் கோபமாக.

அலமேலு, “உனக்கு என்ன கிறுக்கு பிடிச்சிடுச்சாலே… எதுக்கு என் புள்ளய அடிச்சியலே..” எனக் கோபமாகக் கேட்க,

“ஆத்தா… எதுக்கு இப்போ சும்மா அவன வையுறீய… நம்மள விட அவனுக்கு தான் துருவ் மேல அம்புட்டு பாசம் கிடக்குது… அவன் ஏதோ காரணத்துக்காக தான் அடிச்சிருப்பான்… நீ சொல்லுலே… என்னாச்சு.. பரீட்சைக்கு தானேலே போனீய…” என முத்துராசு கேட்கவும்,

“எனக்கு வர ஆத்திரத்துக்கு இவன இத்தோட விட்டுட்டேன்னு சந்தோஷப்படுண்ணே…” என்ற ஜெய் பரீட்சை முடிந்து வரும் வழியில் நடந்தவற்றைக் கூறினான்.

ஜெய் கூறுவதைக் கேட்டு தலை குனிந்தே நின்றிருந்த துருவ்விடம் சென்ற முத்துராசு, “இந்தப் பயலு சொல்றது நெசமா துருவ்… ஏன்லே அப்படி பண்ணீய… அப்படியா நானும் ஆத்தாவும் உனக்கு சொல்லி கொடுத்து வளர்த்து இருக்கோம்லே…” என அழுத்தமாகக் கேட்கவும் அவனை நிமிர்ந்து பார்த்த துருவ் பதிலேதும் கூறாமல் தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.

ஜெய், “பார்த்தியாண்ணே.. இவனுக்கு எம்புட்டு தெணாவெட்டுன்னு… உங்களுக்கு கூட பதில் சொல்லாம போறான் பாருங்க… ஆத்தா… இது எல்லாமே நீயும் அண்ணனும் அவனுக்கு குடுக்குற செல்லத்தால தான்…” எனக் கோபமாகக் கூறி விட்டுச் செல்ல, முத்துராசுவோ தன் அறையினுள் நுழைய முன் துருவ் கலங்கிய விழிகளுடன் தன்னை நோக்கியதை எண்ணி சிந்தனை வயப்பட்டான்.

_______________________________________________

அருணிமாவை அறையினுள் அடைத்து கதவைப் பூட்டிய ராஜதுரை, “எலேய் விஜயா… எனக்கு தெரியாம இந்த கழுதைய வெளிய விட முயற்சி பண்ணன்னு வையி… ஆத்தாவையும் மவளையும் கொளுத்தி போட்டுடுவேன்லே… இவ பட்டினியிலே கிடந்து சாவட்டும்…” எனக் கத்தி விட்டு செல்ல,

“ஐயோ… ஏன்யா இப்படி மிருகத்தனமா நடந்துக்குறீய… என் புள்ள எப்படிலே பசி தாங்கும்…” என விஜயா ஒப்பாரி வைக்க, அந்தத் தாயின் கதறல் எதுவுமே அந்த மனித ரூபத்தில் இருக்கும் மிருகத்தின் செவிகளை எட்டவில்லை.

ராஜதுரை, “எலேய் மாரி… நீயி வந்தத கூட இந்த சிறுக்கி பண்ண வேலையால கொண்டாட முடியலைலே…” என்க,

“எதுக்குய்யா அதெல்லாம்… இனிமே நாம ரெண்டு பேரும் சேர்ந்தே அந்த ****சாதிக்காரப் பயலுங்கள வெச்சி செஞ்சி கொண்டாடுவோம்லே…” என வன்மமாகக் கூறவும் புன்னகையுடன் அவனை அணைத்துக் கொண்டார் ராஜதுரை.

ராஜதுரையின் கைப்பேசி ஒலி எழுப்பவும் திரையில் காட்டிய பெயரைப் புன்னகையுடன் பார்த்தவாறு அழைப்பை ஏற்ற ராஜதுரை, “எலேய்… இப்போ தான்லே உன் கூட பேசணும்னு நெனச்சேன்…” என்க, “உங்க வீட்டு நாயிங்கய்யா நான்… எங்க ஐயாவுக்கு தேவையான நேரத்துல உதவி பண்றது தான் என் சோலியே..” என மறுபக்கம் பதில் வர,

“ஹஹஹா… இதுக்கு தான்லே உன்னப் போல ஒருத்தன் வேணும்கிறது… சரிலே… எப்படி அந்த ****சாதிக்காரப்பயலுக்கு இன்னும் உன்ன பத்தி தெரியல… அம்புட்டு நம்பிக்கை வெச்சிருக்கான்லே உன் மேல… ரொம்பப் பாசம்லே உன் மேல…” என்றார் கேலியாக ராஜதுரை.

“பக்காவா ப்ளேன் போட்டு இந்த முத்துராச மடக்கி இருக்கேனுங்கய்யா… எப்படி அம்புட்டு சீக்கிரம் மாட்டுவேன்… அவன் கூடவே இருந்து சரியான நேரத்துல அவன் சங்க அறுக்குறேன்லே…” என்க,

“இப்போவே வேணாம்லே.. காரியமே கெட்டுடும்… நீயி எப்பவும் போலவே அந்த முத்துராசு முன்னாடி நல்லவன் வேஷம் போடு… சரியான நேரத்துல என்ன பண்ணனும்னு நான் சொல்றேன்லே..” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தார் ராஜதுரை.

_______________________________________________

எதிர்ப்பாரா திருப்பங்களுடன் அடுத்த அத்தியாயங்களை எதிர்ப்பாருங்கள்….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்