Loading

மறுநாள் காலை பரீட்சைக்குச் செல்லத் தயாரான துருவ் தன் அலமாரியை திறந்து அதனுள்ளிருந்து ஒரு புகைப்படத்தை வெளியே எடுத்தான்.

 

அதனைக் கண்கள் கலங்க நோக்கிய துருவ், “இந்த லைஃப் நீங்க கொடுத்தது… நிச்சயம் உங்க ஆசையையும் கனவையும் நான் நிறைவேத்துவேன்…” என்றவன் அப் புகைப்படத்தை இருந்த இடத்திலேயே பத்திரப்படுத்தினான்.

 

துருவ் அறையிலிருந்து வெளியே வர அவனுக்காக ஹாலில் காத்திருந்தான் ஜெய்.

 

ஜெய், “போலாமாலே…” என்க, “அம்மா கிட்ட சொல்லிட்டு போலாம்டா..” என துருவ் பதிலளிக்கும் போதே அங்கு வந்தார் அலமேலு.

 

அலமேலு, “எலேய்… ரெண்டு பேரும் சக்கரை சாப்பிட்டு போலே… அப்போ தான் பரீட்சைய நல்லா எழுத முடியும்…” என்கவும்,

 

“ஆத்தா.. நெசமா தான் சொல்லுறியலா… அப்போ அந்த சக்கரை டப்பா முழுசா நானே காலி பண்றேன்… குடு ஆத்தா…” எனக் கண்கள் மின்னக் கேட்டான் ஜெய்.

 

ஜெய்யின் பேச்சில் துருவ் சிரிக்க, ஜெய்யை முறைத்த அலமேலு, “வால சுருட்டிட்டு இருலே… வந்துட்டான் முழுசா சக்கரைய காலி பண்ண…” என்றவர் ஒரு கரண்டி சர்க்கரையை அவன் வாயில் திணித்தார்.

 

துருவ்விற்கும் சிறிதளவு சர்க்கரையை ஊட்டி விட்ட அலமேலு, “கண்ணுங்களா… ரெண்டு பேரும் பரீட்சைய நல்லா எழுதணும்லே… துருவ் கண்ணா… நீயி இந்த பரீட்சையில பாஸ் ஆகி உங்க ஐயன் ஆசை படியே பெரிய கலெக்டர் ஆகணும்லே…” என கண்கள் கலங்கக் கூற,

 

துருவ், “மா… ஏன்மா இது… நான் கண்டிப்பா ஒழுங்கா எக்சேம் எழுதுவேன்… பார்க்க தானே போறீங்க… உங்க பையன் எப்படி சைரன் வெச்ச வண்டியில வரப் போறான்னு..” என்றான் புன்னகையுடன்.

 

அப் புன்னகை அலமேலுவையும் தொற்றிக் கொள்ள, “என் மயேன் ஆசைப் படியே எல்லாம் நல்லபடியா நடக்கணும்லே… யாரு கண்ணும் என் புள்ளைங்க மேல பட்டுடக் கூடாது…” என இருவருக்கும் நெற்றி வழித்து திருஷ்டி கழித்தார்.

 

சரியாக அங்கு முத்துராசுவும் எங்கோ செல்லத் தயாராகி கஜாவுடன் வர, துருவ் ஜெய் இருவரும் அவனைக் கேள்வியாக நோக்கினர்.

 

“ராசா.. எங்குட்டுலே போக போறீய… ராத்திரி கூட நேரம் கழிச்சி தான் வந்தீய..” என அலமேலு வருத்தத்துடன் கூற,

 

முத்துராசு, “ஊருக்கு வெளிய ஒரு சோலி இருக்கு ஆத்தா… போய்ட்டு சீக்கிரமே வந்துடுறேன்.‌.. எலேய்.. நல்ல படியா பரீட்சையை எழுதுலே… டேய் ஜெய்… உனக்கு தான்லே சொல்றேன்… அங்குட்டு போயும் உன் ஆட்டத்தை காமிக்காதே…” என அலமேலுவிடம் ஆரம்பித்து தன் சகோதரர்களிடம் முடித்தான்.

 

ஜெய், “போண்ணே.. நீ வேற… ஏதோ இவன் தயவால இம்புட்டாவது படிச்சி இருக்கேன்… பரீட்சைக்கு கூட சும்மா தான்ணே போறேன்.. நம்ம துருவ்வுக்கு கம்பனி குடுக்கலாம்னு… நான் எல்லாம் பாஸ் ஆகி என்னத்தைய கிழிக்க போறேன்…” எனக் கேலியாகக் கூறவும் முத்துராசு அவனை முறைக்க, அவசரமாக தன் வாயை மூடிக் கொண்டான்.

 

பின் மூவருமே கிளம்பவும் வாசல் வரை வந்து அவர்களை வழி அனுப்பி வைத்தார் அலமேலு‌.

 

_______________________________________________

 

“எலேய்… அந்தக் கீழ் சாதிக்காரப் பய இன்னைக்கு பரீட்சையே எழுதக் கூடாதுலே… நான் சொன்னது புரிஞ்சதாலே… போய் அதை செய்…” என ராஜதுரை கட்டளையிடவும் சரி எனத் தலையசைத்து விட்டு அங்கிருந்து சென்றான் அவரின் அடியாள்.

 

ராஜதுரை, “எலேய் விஜயா… எங்கலே உன் புள்ள..” எனக் கத்த, “இதோ வந்துடுவாயா…” என விஜயா பதிலளித்தார்.

 

அன்று நடந்த பிரச்சினையின் பின் ராஜதுரை அருணிமாவிடம் முன்பு போல நடந்து கொள்வதில்லை. அவளுடன் ஒழுங்காக பேசுவது கூட இல்லை.

 

அருணிமாவிற்கு அது வருத்தத்தைத் தந்தாலும் தன் தந்தையின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அதனைப் பெரிதுபடுத்தவில்லை.

 

அருணிமா பரீட்சைக்கு தயாராகி கீழே இறங்கி வந்தவள், “ஆத்தா.. என்னை ஆசிர்வாதம் பண்ணு… நான் கிளம்புறேன்..” என விஜயாவிடம் மாத்திரம் சொல்லிக் கொண்டு கிளம்பப் பார்க்க,

 

ராஜதுரை தன் தொண்டையை செறுமவும் கேள்வியாக அவரை ஏறிட்டாள் அருணிமா.

 

“இங்க பாருலே… நீயும் உன் ஆத்தாவும் கெஞ்சி கேட்டதால நான் ஒன்னும் உன்ன சீமைக்கு அனுப்பி படிக்க வைக்கல… நீயி படிச்சி நம்ம ஊருல கலெக்டர் ஆகினா எனக்கு சுலபமா இருக்கும்லே… அதனால தான்… ஒழுங்கா பரீட்சையை எழுதிட்டு வர வழிய பாரு…” என ராஜதுரை கூறவும்,

 

‘ஓஹ்.. இது வேறயா… நீங்க இப்படி சொல்லலனா கூட நான் ஒழுங்கா பரீட்சையை எழுதி இருப்பேன்… ஆனா இனிமே…’ என விஷமமாக நினைத்த அருணிமா,

 

“சரிப்பா… உங்க ஆசைக்காக நான் ஒழுங்கா பரீட்சையை எழுதுறேன்…” என்றாள் புன்னகையுடன்.

 

ராஜதுரை, “எனக்கு தெரியும்லே.. என் புள்ள என் பேச்ச தட்ட மாட்டாள்னு… நீயி என் இரத்தம்… எப்படி தப்பா போய்டுவேல… உன் ஆத்தா தான் ஏதாவது சொல்லி அன்னைக்கு அம்புட்டு பேச வெச்சிருப்பா… சும்மா என் புள்ளைய கூட கண்டிச்சிட்டேன்… ஐயன மன்னிச்சிருலே… எலேய் விஜயா.. பாரு என் புள்ளய… என் சாதி இரத்தம் தான் அவ உடம்புலயும் ஓடுது… நானே இன்னைக்கு உன்ன பரீட்சைக்கு கூட்டிட்டு போறேன் தாயி..” என மகளின் எண்ணவோட்டத்தை அறியாது பெருமை பேசினார் ராஜதுரை.

 

பின் பரீட்சை நடக்கும் இடத்திற்கு அருணிமாவை அழைத்துச் சென்ற ராஜதுரை அருணிமாவுடன் உள்ளே செல்லப் பார்க்க, “நீங்க எதுக்குப்பா… நான் போய் பரீட்சையை எழுதிட்டு வரேன்…” என்க, “அது எப்படிலே… இது நம்ம காலேஜ்… உனக்கு பரீட்சை எழுத வசதி பண்ணி தர வேணாமா…” என்கவும் அவரை என்ன சொல்லித் தடுப்பது எனத் தெரியாமல் விளித்தாள் அருணிமா.

 

ஆனால் அருணிமாவின் நல்ல நேரம் ராஜதுரையின் கைப்பேசி ஒலி எழுப்ப, அதனை எடுத்து காதில் வைத்தவர் கேட்ட செய்தியில், “என்னலே சொல்ற… இப்போ எங்குட்டு இருக்கான் அந்தப் பயலு… சரிலே… நான் உடனே அங்குட்டு வரேன்லே…” என்ற ராஜதுரை அவசரமாக கிளம்பினார்.

 

அருணிமா மனதால் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்ள, ராஜதுரை அங்கிருந்து வெளியேறவும் துருவ்வும் ஜெய்யும் உள் நுழையவும் சரியாக இருந்தது.

 

ஜெய் ராஜதுரையைக் கண்டு முகத்தை வேறு புறம் திருப்பிக் கொள்ள, துருவ்வோ அவரைப் பார்த்து முறைத்தான்.

 

ஆனால் ராஜதுரை துருவ்வை ஏளனமாகப் பார்த்தபடி அங்கிருந்து செல்லவும் துருவ்விற்கு சந்தேகமாக இருந்தது.

 

துருவ் ஜெய்யுடன் பரீட்சை மண்டபத்தினுள் நுழையப் பார்க்க அவனை ராஜதுரையின் ஆட்கள் வழி மறித்தனர்.

 

“ஹால் டிக்கெட்ட குடுலே..” என ஒருவன் துருவ்வை மிரட்ட, துருவ் அவனைக் கடந்து செல்ல முயலவும் பட்டென அவனைக் கீழே தள்ளி விட்டான் ஒருவன்.

 

ஜெய், “எலேய்… என்னலே..‌. வேணும்னே வம்பு பண்ணுறீயலா… எதுக்கு ஹால் டிக்கெட்ட உங்க கிட்ட குடுக்கணும்…” என்கவும் அவனையும் கீழே தள்ளி விட்டனர்.

 

“இது எங்க ஐயா காலேஜ்லே… நாம என்ன வேணாலும் பண்ணுவோம்… மருவாதையா ஹால் டிக்கெட்ட குடுலே…” என்க,

 

துருவ் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்கவும் ஜெய்யிற்கே வியப்பாக இருந்தது.

 

ஜெய், “எலேய்… துருவ்… நீயாலே இது… முன்னாடி எல்லாம் யாராவது வம்புக்கு வந்தா அடி பிண்ணி எடுத்துடுவியே… இன்னைக்கு என்ன இம்புட்டு பொறுமையா இருக்கியலே..” என வியப்பு மாறாமல் கேட்க,

 

துருவ், “இன்னைக்கு எனக்கு ரொம்ப முக்கியமான நாள்டா… அவரோட கனவ நான் நிறைவேத்தணும்… இவனுங்கள பார்த்தா வேணும்னே நம்மள சண்டைக்கு இழுக்குறாங்க போல தெரியிது… நாம போலாம்டா.. எக்சேமுக்கு டைம் ஆச்சு…” என்றான்.

 

அவர்களை மதிக்காமல் துருவ்வும் ஜெய்யும் பரீட்சை மண்டபத்துக்குச் செல்ல அடி எடுத்து வைக்க,

 

“என்ன நான் சொல்லிட்டே இருக்கேன்… கண்டுக்காம போறியாலே… அம்புட்டு தில்லா உங்களுக்கு… இன்னைக்கு நீயி எப்படி பரீட்சைய எழுதுறேன்னு பார்க்குறேன்லே…” என துருவ்வை அடிக்கக் கை ஓங்க,

 

“எலேய்… நிறுத்துலே…” என்றவாறு அங்கு ஓடி வந்தாள் அருணிமா.

 

“சின்னம்மா… நீங்க…” என ஒருவன் இழுக்க,

 

அருணிமா, “என்னலே பண்ணிட்டு இருக்க..” என்றாள் கோபமாக.

 

“அது வந்து சின்னம்மா… ஐயா தான்…” என இழுக்க,

 

“கேட்குறேன்லே… சொல்லுலே…” என அருணிமா சத்தம் போடவும், “ஐயா தான் இந்த பயல பரீட்சை எழுத விடாம பண்ண சொன்னாருலே…” என்கவும் ஜெய்யின் பக்கம் திரும்பிய அருணிமா,

 

“அண்ணாத்த… நீ போலே.. இவியல நான் பார்த்துக்குறேன்…” என்றாள்.

 

“வேணாம் சின்னம்மா… ஐயாவுக்கு தெரிஞ்சா நம்மள வையுவாரு…” என்க, “அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்லே… வந்துட்டாய்னுங்க… இவியலுக்கு வேற வேலை வெட்டி இல்ல…” என அருணிமா கூறவும் வேறு வழியின்றி அவர்கள் கிளம்பினர்.

 

துருவ்வுடன் பரீட்சை மண்டபம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜெய், “எலேய்… பார்த்தியாலே அந்தப் புள்ளைக்கு என்னமா தில்லுன்னு… அவிய அப்பனையே எதிர்த்துட்டா… எம்புட்டு தைரியமா பேசிச்சுலே…” என்கவும் துருவ் அவனுக்கு பதில் அளிக்காது அமைதியாக நடந்தான்.

 

ஜெய், “இவன்லாம் திருந்த மாட்டான்லே… என்னைத் தான் செருப்பால அடிக்கணும்..” என மானசீகமாகத் தலையிலடித்துக் கொண்டான்.

 

“ஓய் மாம்ஸ்…” என அருணிமா அவர்களின் பின் நின்று கத்தவும் இருவரும் தம் நடையை நிறுத்தினர்.

 

“என்ன மாமோய்… கொஞ்சூண்டு கூட கண்டுக்காம போறியலே…” என அருணிமா கூறவும் துருவ் பெருமூச்சு விட்டபடி வேறெங்கோ பார்க்க,

 

ஜெய், “என்ன புள்ள இப்படி கேட்டுப்புட்ட… எம்புட்டு பெரிய காரியம் பண்ணியிருக்கியேலே நீயி… ஆனா உன் அப்பன் திரும்ப உன்ன வையப்போறாருலே…” என்கவும் புன்னகைத்த அருணிமா,

 

“நம்ம ஆளுக்காக தானே அண்ணாத்த… இது என்னலே… இதுக்கு மேலயும் செய்வேன்…” என்றாள்.

 

துருவ் அங்கிருந்து செல்லப் பார்க்க அருணிமா, “மாமோய் ஒரு நிமிஷம்…” என்கவும் தன் நடையை நிறுத்த, அவன் முன் வந்து நின்ற அருணிமா, “ஆல் தி பெஸ்ட் மாம்ஸ்…” என்றாள் புன்னகையுடன் தன் கரத்தை அவன் முன் நீட்டி.

 

அருணிமாவின் கரத்தையும் அவளையும் ஒரு நொடி பார்த்த துருவ் அவளுக்கு பதிலளிக்காது அங்கிருந்து செல்லவும் அருணிமாவின் முகம் வாடியது.

 

அருணிமாவின் முக வாட்டத்தைக் கவனித்த ஜெய், “என்ன புள்ள.. உன் ஆளுக்கு மட்டும் தான் வாழ்த்து சொல்லுவியாலே…” என வேண்டும் என்றே அவளை வம்பிழுக்க,

 

அருணிமா, “ஆமாலே.. நான் வாழ்த்திட்டா மட்டும் நீயி என்னத்த கிழிக்க போற… எப்படியும் போய் தூங்க தானேலே போறீய..” என்றாள் கேலியாக.

 

அதற்கு ஜெய் உதட்டை சுழிக்க, “இங்க பாரு அண்ணாத்த… ஒழுங்கா உன் சேக்காளிய என் கூட சேர்த்து வெக்கிற வழிய பாருலே… இல்ல உன் சேக்காளிய கடத்திட்டு போய் ரேப் பண்ணிடுவேன்… அதுக்கப்புறம் அவன என்னை விட்டா யாருலே கட்டிக்க போறா…” என அருணிமா மிரட்டவும் ஜெய் அதிர்ச்சியில் கண்களை அகல விரிக்க,

 

“இதோ பாருலே அண்ணாத்த… என்னை டீல்ல விட்டுட்டு நீயி மட்டும் உன் ரூட்ட க்ளியர் பண்ணிக்கலாம்னு பார்த்தேன்னு வையி… மர்கயா மர்கயா தான்… அம்புட்டு தான் சொல்லிப்புட்டேன்…” என்று விட்டு பரீட்சை மண்டபத்துக்குச் சென்றாள் அருணிமா.

 

ஜெய், “அடி ஆத்தி… என்ன பேச்சுலே பேசுறா… மொத்த குடும்பமே கொலைகாரக் கும்பலா இருப்பாய்ங்க போலயே… எம்புட்டு கூலா சொல்லிட்டு போறா… என்னலே ஜெய் உனக்கு வந்த சோதனை… அங்குட்டு அவன் என்னன்னா இந்த புள்ளய பத்தி பேசினாலே அந்த முறை முறைக்கிறான்… இங்குட்டு இவ என்னன்னா அவிய ஆளு கூட சேர்த்து வைக்கலன்னா கொலை பண்ணிடுவாளாம்லே… இவிய கிட்ட எல்லாம் மாட்டிட்டு முழிக்க வேண்டியதா போச்சு… ச்சே…” என்று தலையில் அடித்துக் கொண்டவன் பரீட்சை மண்டபத்தை நோக்கி நடந்தான்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்