இந்திரா இன்னும் அதே திசையை பார்த்துக் கொண்டிருக்க, அவள் அருகில் வந்து அமர்ந்த சிலம்பு அவள் தோளில் கைப்போட்டாள். அதில் திடுக்கென திரும்ப, “அங்க என்னத்த அப்படி பாக்கற டி?” என்றவள், அவள் அருகில் நாப்கின் இருப்பதைக் கண்டு, “பிரீயட்ஸ்ஸா டி?” என்றாள் சிலம்புசெல்வி.
அவள் ஆம் எனத் தலையாட்ட, “சரி, நீ வீட்டுக்கு கிளம்பு. இங்க நான் பார்த்துக்கிறேன்” என்றவள், அவர்களைக் கொண்டுவந்து விட்ட ஆட்டோக்காரர் அண்ணாவின் தொலைப்பேசி எண்ணிற்குத் தொடர்புகொள்ள முயல, அதனைத் தடுத்தாள் இந்திரா.
“இல்ல, வேண்டாம் டி சிலம்பு… இங்கேயே உக்காந்துருக்கேன், பரவால்ல இப்போ” என்றாலும் வலியால் அவள் முகம் சுருங்கியது. “பெயினோட எப்படி டி இங்க உக்காந்துருப்ப” என்றவளை சமாதானப்படுத்தி அங்கேயே இருந்தாள் இந்திராகாந்தி.
தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் வழியில் தன் அன்னையை பார்க்கச் சென்றுவிட்டு, தோட்டத்திற்குச் சென்றாள் மலர்விழி.
வானம் சற்று கறுத்திருக்க மழை வருவதுபோல் இருந்தது. மனம்போன போக்கில் அவள் கால்கள் வரப்பில் நடைபயில, ஓரிடத்திற்கு வந்தவுடன் கால்கள் நகர மறுத்தன.
ஐந்தாண்டுகளுக்குப் பிறகும் அந்த இடத்தைக் கடக்கும்போது அவள் மனதில் வலி இருக்கத் தான் செய்தது. கண்களை இறுக மூடி, விரல்களை மடக்கி கைகளையும் கட்டுப்படுத்தினாள்.
அவள் தோட்டத்திற்குச் சென்றிருப்பது அறிந்து அங்கு வந்திருந்த பாரிவேந்தன், அவள் நிற்கும் இடத்தைக் கண்டு அதிர்ந்தான். அவளின் நிலையும் அவனுக்குப் புரிந்தது.
அன்று ஒருநாள் மட்டும் தன் வாழ்வில் வராமல் இருந்திருந்தால் அல்லது அன்று தான் அமைதியாக இல்லாமல் பேசி இருந்தால்… இன்று யோசித்து என்ன பலன்! காலம் தனது வேலையை சிறப்பாக செய்துவிட்டு சென்று விட்டதே!
ஐந்தாண்டுகளுக்கு முன்பு…
பனிரெண்டாம் வகுப்பில் இருந்தாள் மலர்விழி. அருகில் உள்ள தனியார் பள்ளியில் தான் படித்துக் கொண்டிருந்தாள். அன்று சனிக்கிழமை என்பதால் சிறப்பு வகுப்பு முடிந்து வீட்டிற்கு வந்தவள் குளித்துவிட்டு, உடைமாற்ற அலமாரியை ஆராய, அவள் கண்ணில் பட்டது ஒரு பாவாடை தாவணி.
அவள் ஆசைப்பட்டது வாங்கிய முதல் பாவாடை தாவணி. ஆனால் இதுவரை அவள் அதனை அணியாமல் இருக்க, அன்று ஆசையுடன் எடுத்து உடுத்திக் கொண்டாள். அதுநாள்வரை சுடிதார் அல்லது பாவாடை சட்டையில் இருப்பவள் முதன்முதலாக பாவாடை தாவணி கட்டியதால் உண்டான வெட்கமும், அழகும் போட்டிப்போட்டுக் கொண்டிருந்தன.
தனது தாயிடம் காட்டுவதற்கு முன் தன் மாமனிடம் காட்ட வேண்டும் என்றெண்ணி அவன் தோட்டத்தில் தான் இந்நேரம் இருப்பான் என்று அங்கு சென்றாள் மலர்விழி.
அவள் எதிர்பார்த்ததைப் போல அவனும் அங்கு தான் தண்ணீர் கட்டிக்கொண்டு இருந்தான். கைலி வேஷ்டியும், ஒரு அழுக்கு பனியனுமாய் அந்த காட்டிற்குத் தகுந்த உடைகளுடன், தலையில் ஒரு துண்டை சும்மாடு கட்டிக்கொண்டு கையில் மண்வெட்டியுடன் அவன் நின்றுக் கொண்டிருக்க, அவன்முன் வெட்கமும் அழகும் போட்டிப் போட கொள்ளை அழகுடன் பாவாடை தாவணியில் நின்றாள் மலர்விழி.
இருவருக்குமிடையே ஒரு மெல்லிய காதல் பாலம் அமைந்திருந்தது. அவள் அதனை உணரவில்லை என்றாலும் அவன் அதனை உணர்ந்து தானிருந்தான். “என்ன புள்ள விஷேசம், தாவணி கட்டிருக்க?” என்றவாறே தண்ணீரில் கைகால்களை கழுவிக்கொண்டு தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து துடைத்துக்கொண்டே வரப்பில் ஏறினான் பாரிவேந்தன்.
“சும்மா தான் மாமு, ஆசையா இருந்துச்சு கட்டுனேன்… எப்படி இருக்கு மாமு!” என்றவள் தரையை பார்த்தவண்ணம், தாவணியின் நுனியை பிடித்துக்கொண்டு வினவ, அவன் என்ன பதிலளிப்பான்.
வாயடைத்துப் போய் நிற்க, அவனின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தவள் பதில் இல்லாமல் போக, அவனை நிமிர்ந்துப் பார்த்து, “நல்லா இல்லயா மாமு, நான் போய் மாத்திட்டு வந்தறட்டுமா?” என வினவினாள்.
இன்னும் அவளிடத்தில் குழந்தைத்தனம் மிஞ்சியிருக்க, அதனை ரசித்தவாறே, “மகாலட்சுமி கணக்கா இருக்க புள்ள” என தன் கையாலே திருஷ்டி சுற்றிப் போட்டான் பாரிவேந்தன்.
நாணம் குடியேற, “தேங்க்ஸ் மாமு” என முணுமுணுத்தாள் மலர்விழி. அவனோ, அவளை நெருங்கி, “என்ன சொன்ன, எதுவும் கேட்கலயே” என்க, அவனின் நெருக்கம் அவளுக்கு படபடப்பை உண்டாக்கியது.
அவள் விலக எத்தனிக்க அவனோ அவளை சிறைபிடித்திருந்தான். “மாமு!” என அவள் உணர்வின் பிடியில் சிணுங்க, “இந்த மாமுவ கட்டிக்கிறியா புள்ள” என்றவாறே அவள் முகத்தில் தன் விரல்களால் வருட, அதனால் ஏற்பட்ட குறுகுறுப்பில் அவள் விலக, அவள் விலகலை விரும்பாமல் அவளை பிடிக்க நினைத்தவனின் கையில் அவளின் தாவணி தான் சிக்கியது.
அவள் நகரவும் அவன் தாவணியை பிடிக்கவும் சரியாக இருக்க, ஒழுங்காக பின் குத்தப்படாததால் கையோடு தாவணி நழுவ ஆரம்பித்தது. இருவருமே அதனை எதிர்பார்த்திருக்கவில்லை.
அவள் கைகள் தன்னால் தன் மார்பின் குறுக்கே மறைய, பாரிவேந்தன் தான் படபடத்துப் போனான். அவள் கையில் தாவணியைக் கொடுத்துவிட்டு மறுபுறம் அவன் திரும்ப எத்தனிக்க, கைதட்டும் ஓசை கேட்க, ஓசை வந்த திசையை நோக்கினர் இருவரும். அதற்குள் மலரும் தாவணியை தன்மேல் போர்த்தி இருந்தாள்.
அங்கு யாழினி தான் நின்றிருக்க, மலருக்கோ அவமானமாய் தோன்றியது. ஆனால் யாழினியின் பேச்சு அவளை உயிரோடு கொன்றுப் புதைத்தது.
“உன் அம்மாகாரி உடம்ப காட்டி என் அப்பன மயக்குன மாதிரி என் மாமனையும் நீ வளைச்சுப் போட பாக்கிறியா?” என வார்த்தைகள் வந்து விழுக, ஒத்த வயதுடையவர்கள் இருவரும் என்றாலும் அந்த வயதில் பேசக்கூடாத வார்த்தையை அவள் பேச, அந்த வயதில் கேட்கக்கூடாத வார்த்தைகளை இவளும் கேட்க, இடையே பாரிவேந்தனின் நிலைதான் பாரிதாபமானது.
அவன் மறுத்துப் பேச வாயெடுக்கும் முன், அவன் கரத்தைப் பற்றி இருந்த யாழினி, “உன் அழகுக்குலாம் என் மாமன் மயங்க மாட்டாரு, ஊருல வேற எவனையாவது போய் மயக்கு” என்றவள், பாரிவேந்தனை அங்கிருந்து இழுத்துச் சென்றாள் யாழினி.
நொடிப்பொழுதில் இவையனைத்தும் நடந்தேற, அதன் அதிர்வில் இருந்து அவன் விடுபடுவதற்குள் யாழினி அவனை இழுத்துச் சென்றிருந்தாள். திரும்பிப் பார்த்தவனின் கண்ணில் பட்டது, முகத்தை மூடி குலுங்கி குலுங்கி அழுத மலர்விழி தான்.
அன்றோடு இருவருமிடையேயான உறவு அறுபட்டிருந்தது. அதன்பின் அவன் யாழினியை திட்டி இருந்தாலும் மலர்விழியிடம் பேச முயல அவளோ அவனை தவிர்க்க ஆரம்பித்தாள். அதன்பின் பள்ளி படிப்பு முடிந்ததும் மருத்துவ படிப்பிற்காக கோவை வந்தவள் தான். படிப்பு முடியும்வரை அந்த ஊரில் காலடி எடுத்து வைக்கவில்லை அவள்.
அவளைப் பார்க்க வேண்டும் என்றால் குணவதி தான் கோவை வந்தாக வேண்டும். அவ்வபோது அவளை வந்து பார்த்துவிட்டு செல்வார். எவ்வளவு கெஞ்சியும் அவள் ஊருக்கு வர சம்மதிக்கவில்லை. படிப்பு முடிந்து தற்போது தான் ஊருக்கு வந்திருக்க, அதன்பின் நடந்தவைகளை நாம் அறிவோம்.
***
பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவன், இதே இடத்தில் அன்று தான் பேசாமல் சென்றதற்கு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்றெண்ணி அவளருகில் சென்றான் பாரிவேந்தன்.
அவள் இன்னும் கண்களை மூடித் தான் இருந்தாள். “புள்ள!” என்ற அவனின் அழைப்பிலும் கண்களைத் திறக்க மனமில்லாமல் நிற்க, “இன்னும் பழச மறக்கலயா புள்ள?” என்றான் பாரிவேந்தன்.
“மறக்க கூடிய வார்த்தைகளா அது? என் உடம்ப காட்டி உங்கள மயக்கி… அதோட அர்த்தம் புரியாத வயசுலயே அவ்ளோ வலி. இப்போ அர்த்தம் புரிஞ்ச காலத்துல மட்டும் வலி குறைஞ்சுருமா?” என்றாள் இறுகிய குரலில்.
“அன்னிக்கு யாழு பேசுனது தப்பு தான் புள்ள, அந்த நேரத்துல நான் பேசாம இருந்தது ரொம்ப தப்பு… ஆனா, அந்த நிமிஷத்துல என் அதிர்ச்சி என்னை பேசவிடல, ஆனா கண்ணை மூடித் திறக்கிறதுக்குள்ள என்ன என்னமோ நடந்துருச்சு!” என ஐந்தாண்டுகளுக்கு முன்னிருந்த தன் நிலையை அவளுக்கு புரிய வைக்க முயன்றான் பாரிவேந்தன்.
“நீங்களும் அப்படி தான் நினைச்சீங்களா மாமு, என் உடம்ப காட்டி…” என அவள் மேலும் பேசுவதற்குள் அவள் வாயை தன் கரத்தால் மூடி இருந்தான் பாரிவேந்தன்.
“திரும்ப திரும்ப இந்த வார்த்தைய சொல்லாத புள்ள. அன்னிக்கு என்ன நடந்துச்சுனு உனக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும், அப்படி இருக்கும் போது ஏன் இப்படி உன்னை நீயே வருத்திக்கிற புள்ள” என்றான்.
அவள் தாடையை பற்றி தன் முகத்தினருகே வைத்தவன், “இந்த மாமுவ கட்டிக்கிறியா புள்ள” என்றான் பாரிவேந்தன். அன்று ‘கட்டிக்கிறியா‘ என்ற வார்த்தை திருமணத்தை குறித்திருக்க, இன்று ‘கட்டிக்கிறியா‘ என்ற வார்த்தை அணைப்பை குறித்திருந்தது.
அவள் கண்கள் இறுக மூட மீண்டும், “இந்த மாமுவ ஒருதடவை கட்டிக்கிறியா புள்ள, உனக்காக அஞ்சு வருஷம் காத்திருக்கேன் புள்ள” என்றவனின் குரலில், காதல் வழிந்தோட அவன் கண்களை நேருக்குநேர் சந்தித்தாள்.
காற்றுக்கூட புகாத வண்ணம் அவனை கட்டி இருந்தாள் அவள். அவளை இதழ்களில் புன்னகை உறைய அணைத்துக்கொண்டவன், அவள் காதருகே, “தோட்டத்துல வேலை செய்றவங்க எல்லாம் நம்மள பாக்கறாங்க புள்ள” என கிசுகிசுத்தான்.
“பாத்தா பாத்துட்டுப் போகட்டும் மாமு, நான் என் புருஷன கட்டிக்கிறேன். அவங்களுக்கு என்னவாம்” என அவன் பாணியிலேயே அவளும் கிசுகிசுத்தாள். “இவ்வளவு அன்பையும் ஏன் புள்ள மூட்டைகட்டி வச்ச!” என்க, அவள் மனம் மீண்டும் பழையதில் மூழ்க, “திரும்பவுமா!” என அவன் உதட்டைப் பிதுக்க, அதில் புன்னகைத்தவள்,
“ஆனாலும் உங்கமேல உள்ள கோபம் இன்னும் போகல” என்றவாறே அவனது பனியனை பிடித்துக்கொண்டே கூறினாள்.
“இன்னுமா!” என அவன் குனிந்து அவள் முகம் பார்க்க, “ம்…” என்றவாறே தலைகுனிந்தாள் மலர்விழி. “இங்க பாரு புள்ள” என அவள் முகத்தை நிமிர்த்த, “உங்கள நேருக்கு நேர் பாக்கிற சக்தி அன்னிக்கு எனக்கு இல்லாம போச்சு மாமு, எங்க நீங்களும் என்னை தப்பா நினைச்சுப்பீங்களோனு…” எனும்போதே அவள் கண்களில் இருந்து கண்ணீர் அரும்ப, அதனை சுண்டிவிட்டவன், “இவ்ளோ தான் என்னை புரிஞ்சு வச்சுக்கிட்டதா புள்ள?” என்றான் அவன்.
“அப்படி இல்ல மாமு, அந்த வார்த்தையோட அர்த்தம் தெரிஞ்சப்போ எவ்ளோ துடிச்சுப் போனேன் தெரியுமா! ஒத்த வார்த்தையவே என்னால தாங்க முடியல, ஆனா என் அம்மா இப்போவரை அந்த வார்த்தைய சுமந்துட்டு தான இருக்காங்க. உண்மை என்னவா இருந்தாலும் நம்மள அடுத்தவங்க பேசற வார்த்தை எந்தளவு காயப்படுத்தும்!” என்றவளுக்கு என்ன பதிலளிப்பது எனப் புரியாமல் தவித்தான்.
வரப்பிலேயே இருவரும் அமர, அவன் தோளில் சாய்ந்தமர்ந்தவள், அவன் கரங்களை தன் கரங்களுள் வைத்துக்கொண்டு, “யாழு இத தெரிஞ்சு சொன்னாளா இல்ல தெரியாம சொன்னாளானு தெரியாது… ஆனா, அதே வார்த்தைய வேற யாரும் திரும்ப சொல்லிறக்கூடாதுனு தான் நான் இங்க இருந்து கோவை போனேன். எங்க இங்க வந்தா உங்கள பார்க்க வேண்டி வருமோனு ஊருக்கே வர்றத தவிர்த்தேன். இப்பவும் நான் ஊருக்கு வரக்காரணம் என் பிரண்ட்ஸ் தான், அவங்க இல்லனா திரும்ப இங்க வந்திருக்க மாட்டேன் மாமு” என்றாள் மலர்விழி.
“என்னை விட்டு விலகிப் போனா மட்டும் நான் உன்னை மறந்துருவேன்னு நினைச்சியா புள்ள” என்றான் பாரிவேந்தன். “ம்… முதல்ல அப்படி தான் நினைச்சேன், ஆனா ஒரே வருஷத்துல அது இல்லனு புரிஞ்சுக்கிட்டேன்” என்க, “அதென்ன ஒரு வருஷ கணக்கு புள்ள!” என்றான் புரியாமல்.
“அதுவா!” என்றவள் நிமிர்ந்து அவன் தாடியை பிடித்துக் கொண்டு, “என் மாமு என்னைப் பார்க்க கோயம்புத்தூருக்கு ஓடோடி வந்துட்டாரா! அதப் பார்த்தவுடனே தான் இங்க நான் மட்டும் தான் இருக்கேன்னு புரிஞ்சுக்கிட்டேன்” என அவன் நெஞ்சைத் தொட்டுக்கூற, தற்போது அவன் முகம் தான் அதிர்ந்தது.
“நான் அங்க வந்தது தெரியுமா புள்ள!” என்றான் மெதுவான குரலில். “முதல்ல கண்டுபிடிக்க முடியல, ஆறு மாசம் கழிச்சு தான் அது நீங்களா இருக்கும்னு சந்தேகப்பட்டேன். அப்புறம்…” என அவள் இழுத்தவள், “ஆனாலும் உனக்கு ஓவர் காதல் தான்யா… எப்படி எப்படி, ஹெல்மெட் போட்டுட்டு வண்டில எங்கள ஃபாலோ பண்ணா கண்டுபிடிக்க மாட்டமா!” என அவன் தலைமுடியை பிடித்து ஆட்ட, “அப்போ இத்தனை வருஷம் தெரிஞ்சிருந்தும் என்னை அலைய விட்டியா டி!” என்றான் பாரிவேந்தன்.
“எஸ்” என அவள் கண்ணடிக்க, அடிப்பாவி என்றான் பாரிவேந்தன். “நான் அப்பாவி” என இதழை சுளிக்க, “யாரு நீயா!” என அவள் இதழில் அவன் விரல்கள் கோலமிட, “ஆமா, சரி நம்மாளு நமக்குத் தான்னு இருக்கும் போது நீங்க வேறொருத்திய கட்டிக்க சம்மதம் சொன்னத கேட்டு விட்டுக்கொடுக்க நினைச்சேன்ல, அப்போ நான் அப்பாவி தான!” என்றாள் மலர்விழி.
“அதுவந்து புள்ள!” என அவன் குற்றவுணர்வோடு தன்னை விளக்க முற்பட, “உங்கள பத்தி எனக்குத் தெரியும் மாமு, ஆனாலும் எனக்குனு உங்கள எதிர்த்துக் கேட்க ஆள் இல்லனு தான இப்படி பண்ணீங்கனு கோவம். அதான்…” என்றாள் மலர்விழி.
“உன் கோவம் எனக்கு தெரியும் புள்ள, என்கூட எவ்ளோ வேணும்னாலும் சண்ட போடு. ஆனா நீ உனக்குனு யாரும் இல்லனு மட்டும் இனி சொல்லக் கூடாது” என்றான் இறைஞ்சும் குரலில்.
“ம்… ஆனா, இன்னும் என் கோவம் தீரல, அப்பப்போ சண்டை போடுவேன், சரியா” என கேட்கும் மனைவியை அள்ளத் துடித்த கரங்களை கட்டுப்படுத்திக்கொண்டு, “இனி, இங்க இருக்க வேண்டாம் புள்ள. நம்ம வீட்டுக்குப் போகலாம்” என எழுந்துகொள்ள, அவளோ எழாமல் அவனை பார்த்து இருகரங்களையும் நீட்டினாள்.
“நான் வீட்டுக்கு வரணும்னா என்னை நீங்க வீடுவரைக்கும் தூக்கிட்டு தான் போகணும்” என கட்டளையிட, “புள்ள!” எனத் தயங்க, “நான் உங்க பொண்டாட்டி தான! அப்போ தூக்கிட்டு போங்க” என அவள் அதிகாரமாய் கூற, அவளை தனது இருகைகளாலும் அள்ளிக் கொண்டான் பாரிவேந்தன்.
தெரு வரைக்கும் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. ஓரிருவர் தான் சாலையில் போய் கொண்டிருந்ததால் அவளை தூக்கிக் கொண்டு நடந்தவன், ஊருக்குள் நுழையும் போது கால்கள் நகர மறுத்தன.
“ஒருமாதிரி இருக்கு புள்ள” என அவன் சிணுங்க, “கோயம்புத்தூர் வந்து பார்க்க தெரிஞ்ச உங்களுக்கு நம்ம ஊர்ல தூக்கிட்டு போகத் தெரியாதா?” என்க, ‘இவ ஒரு முடிவோட தான் இருக்கா!’ என நினைத்தவாறே அவளைத் தூக்கிக் கொண்டு நடந்தான்.
அவர்களைப் பார்ப்பவர்கள் எல்லாம் நமட்டு சிரிப்பு சிரிப்பது போல் தோன்றியது அவனுக்கு. ஆனால் அவளோ தன் இரு கரங்களையும் அவன் கழுத்தில் மாலையாய் சுற்றி வளைத்து, அவன் நெஞ்சில் புதைந்திருந்தாள்.
வீட்டின் வாசலை அடைய, அவளைத் தூக்கிக் கொண்டு வருவதைக் கண்ட ரேவதி, பதட்டத்துடன் ஓடிவந்து, “மலருக்கு என்னாச்சு கண்ணா?” என்றார்.
“அதுவந்து ம்மா…” என சமாளிக்க முடியாமல், “கால் சுளுக்கி கிச்சு ம்மா!” என்க, மலர்விழியோ இதழ் கடித்து புன்னகையை மறைத்தாள்.
அவளை திண்ணையில் அமர வைக்க, அவளோ லாவகமாக எழுந்து நின்றாள். அதற்குள் எண்ணெய் எடுத்துக்கொண்டு வந்த ரேவதி, “வலியோட நிக்காத மலரு, உக்காரு தேய்ச்சு விடறேன்” என்றார் பதற்றத்துடன்.
“அத்தை வலி இப்போ இல்ல” என சமாளிக்க, இருவரின் முகத்தைக் கண்டே புரிந்துக் கொண்ட ராமாயி பாட்டி, “அதான் அவ சரியாகிருச்சுனு சொல்றாள்ள ரேவதி, விடு. சின்னஞ்சிறுங்க, சின்ன வலிய பெருசா எடுத்துக்கிச்சுங்க போல” என்றார்.
இருந்தாலும் ரேவதியின் மனம் ஆறாமல், “லேசா தேய்ச்சு விடறேன் மலரு, ஒன்னும் இல்ல” என்க, என்ன சொல்வது எனத் தெரியாமல் தன் கணவன் முகம் பார்த்தாள் மலர்விழி.
அவனோ, “நீயாச்சு, உன் மாமியாராச்சு” என முணுமுணுக்க, ரேவதியின் முகம் பார்த்தவள், அவரை சமாளிக்க இடதுகாலில் ஓரிடத்தைக் காட்ட, அவர் எண்ணெய்யை தேய்த்து விட்டார்.
பாரிவேந்தனோ சிரிப்பை அடக்க முடியாமல் தன் அப்பாயியின் அருகில் அமர, அதற்குள் பக்கத்து வீட்டினர், “என்னாச்சு ரேவதி, பாரி மலர தூக்கிக்கிட்டு வந்ததா சொன்னா என் மருமக…” என்றவாறே அங்குவர, “சின்ன சுளுக்கு தான் அண்ணி, அதான் பய பயந்துபோய் அவள நடக்க விடாம தூக்கிக்கிட்டு வந்துட்டான்” என்றவாறே எண்ணெயை தேய்த்துவிட, விசயம் காற்றுவாக்கில் பரவி, அவளை நலம் விசாரிக்க வந்தனர் உறவினர்கள்.
மலரோ அவர்களிடத்தில் சமாளித்துக் கொண்டிருக்க பாரிவேந்தனுக்கு மூச்சு முட்டும் அளவிற்கு சிரிப்பு பொங்கிவந்தது. ராமாயி பாட்டியோ இவர்களின் அதகளத்தைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டார்.
“விளையாட்டா பண்ணது உங்களுக்கே வினையா போச்சு” என்றாலும் நெடுநாள் கழித்து தன் பேரனின் முகத்தில் தென்பட்ட புன்னகை அவருக்கு நிம்மதியளித்தது. அந்த புன்னகைக்காக தானே இத்தனை வருடம் காத்திருந்தார். இதில் குணவதிக்கும் தகவல் சென்றிருக்க, அவரோடு நட்பு பட்டாளங்களும் அவளைப் பார்க்க வந்திருந்தனர்.
அவர்களை சமாளிப்பதற்குள் மலர்விழிக்கு தான் போதும் போதும் என்றாகியது. அத்தோடு மட்டும் விடாமல் இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து, திருஷ்டி சுற்றிப் போட்டார் ரேவதி. பாரிவேந்தன் தன்னவளை குறும்பாக பார்க்க, அவளின் கன்னங்களோ செம்மையுற்றது.
மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.
😍😍😍😍😍❤❤❤❤❤❤
மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.
மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.