பாரிவேந்தன் அறையை விட்டு வெளியேறவும் மலர்விழியின் கண்கள் நனைந்திருந்தன. தான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தன்னவனை எந்தளவு காயப்படுத்தும் என்றும் அறிந்தவள் தான். ஆனால், தன் சம்மதம் இல்லாமல் அவன் தாலி கட்ட முயன்றதே அவளின் ஈகோவை சற்று அசைத்திருந்தது. அதன்பின் தன் சம்மதத்துடன் தான் அந்த திருமணம் நடந்தது என்பதை அவள் நினைக்க மறந்தாள். அந்நிலையில் தான் எப்படி சம்மதித்தோம் என்ற குற்றவுணர்வும் மேலோங்க, அதன் கோபம் முழுவதும் பாரிவேந்தனின் மேல் திரும்பியது. அவனை ஏற்கவும் முடியாமல், பழைய நினைவுகளில் இருந்து மீளவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
கட்டிலில் சாய்ந்தவளை உறக்கம் தழுவிக் கொள்ள, அப்படியே உறங்கியும் விட்டாள். இரண்டு மணி நேரம் கழித்து அறைக்குள் வந்தவன், விளக்கைக் கூட அணைக்காமல் கட்டிலின் ஓரம் படுத்திருந்த தன்னவளைக் கண்டவனுக்கு மனம் வலித்தது.
அவளை நேராக படுக்க வைத்தவன், போர்வை ஒன்றை எடுத்து போர்த்திவிட்டு, “உன் மனசறிஞ்சு எதையும் சொல்லிருக்க மாட்டனு தெரியும் புள்ள. என்மேல உள்ள கோபத்துல என்ன பேசுறோம்னு கூட தெரியாம பேசி என்னை காயப்படுத்துறதா நினைச்சு உன்னை நீயே காயப்படுத்திக்கிற. கூடிய சீக்கிரம் இத புரிஞ்சுக்குவ. அந்த நாளுக்காக நான் காத்திருக்கேன் புள்ள” என்றவன், நெற்றியில் படர்ந்திருந்த கூந்தலை ஒதுக்கி விட்டு, தன் இதழை பதிக்க சென்றவனுக்கு அவளின் வார்த்தைகள் காதில் எதிரொலிக்க தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தான்.
தன் உணர்வுகளை அடக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தான் பாரிவேந்தன். உணர்வின் பிடியில் இருந்த தனது கரத்தை கேசத்தை அடக்க முயற்சித்தவாறே தனது உணர்வையும் அடக்க முயற்சித்தான்.
விளக்கை அணைத்துவிட்டு தரையில் பாயை போட்டுப் படுத்தவனுக்கு உறக்கம் தழுவ மறுத்தது. கண்களை இறுக மூட முயற்சித்துக் கொண்டிருந்தான்.
யாழினியோ எங்கோ வெறித்த வண்ணம் கட்டிலில் அமர்ந்திருக்க, அருகில் இருந்த ஷோஃபாவில் அமர்ந்திருந்த ஹரிஹரன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“பார்க்கற பார்வைய பாரு, அந்த முழியாங்கண்ண நோண்டி எடுத்தா தான் சரிபட்டு வருவான் போல. ஆளும் அவன் மொகரக்கட்டையும்” என ஏகத்தும் தன் கணவனை வறுத்தெடுத்தவாறே முணுமுணுத்தாள்.
அவளின் முணுமுணுப்பு அவன் காதுகளிலும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. “இன்னும் எவ்ளோ நேரம் என்னை திட்றதா உத்தேசம்?” என ஒற்றை புருவம் உயர்த்தி அவன் வினவ, அதனைக் கவனியாதவள், “என்னது!” என புரியாமல் விழித்தாள்.
“இல்ல, என் கண்ண மட்டும் தான் நோண்டனுமா! இல்ல வேற ஏதாவது என் முகத்துல இருந்து எடுக்கணுமானு கேட்டேன்” என்க, ‘அய்யோ‘ என்றிருந்தது அவளுக்கு. அவள் என்னதான் அவனை கோபப்படுத்த முயன்றாலும் அவனோ அதனை எல்லாம் உதாசீனப்படுத்தி விட்டு எப்பொழுதும் போல் புன்னகை மன்னனாய் வலம் வர, அவளின் கோபம் பல மடங்காக பெருகியது.
அவனை ஏகத்துக்கும் முறைத்தவள், எதுவும் பேசாமல் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு அவள் படுக்க, “கல்நெஞ்சக்காரி, கொஞ்சமாவது புருஷன் மேல அக்கறை இருக்கா!” என வாய்விட்டு புலம்பியவாறே அமர்ந்திருந்த ஷோஃபாவிலேயே படுத்துக் கொண்டான்.
இரு தம்பதிகளின் நிலையும் இப்படி இருக்க, நிலவோ தன்னை ஆதவனின் ஆதிக்கத்தில் உட்புகுத்திக் கொண்டு மறையத் தொடங்கியது. நிலவை தன்னுள் மறைத்துக்கொண்டு ஆதவன் தன் ஒளிக்கதிர்களை நிலமகளின் மீது படரவிட்டான்.
சேவல் கூவிய சப்தத்தில் கண்களைக் கசக்கிக் கொண்டே எழுந்தவள், அறையில் பாரிவேந்தனை துழாவினாள். ‘இரவு அறைக்கு வந்தாரா?’ என்ற குழப்பம் மேலோங்க, எழுந்து மாற்றுடைகளை எடுத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் உள்ள கொல்லைப்புறத்திற்கு செல்ல, அங்கு தண்ணீர் காய வைத்துக் கொண்டு இருந்தார் ரேவதி.
அவரைக் கண்டவளுக்குள் உள்ளே பதற்றம் குடிகொண்டது. ‘அவரு இன்னும் எந்திரிக்கலயா, எங்க மா அவன்னு அத்தை கேட்டா என்ன பதில் சொல்றது?’ என முழித்தவாறே அங்கு செல்ல, “தண்ணி வெளாவி வச்சுருக்கேன் மலரு, போய் குளிச்சிட்டு வா” என்க, மேலும் எதுவும் பேச்சை வளர்க்காமல் தன்னை குளியல் அறைக்குள் உட்புகுத்திக் கொண்டாள் மலர்விழி.
தலைக்கு குளித்துவிட்டு முடியை துண்டால் கட்டிய வண்ணம் சமையற்கட்டிற்குள் நுழைய, ஆவி பறக்க காஃபி தயாராக இருந்தது. “இந்தா மலரு காஃபி” என ரேவதி டம்ளரை நீட்ட, “நான் வந்து வச்சுருப்பேன்ல அத்தை, உங்களுக்கு ஏன் சிரமம்!” என்றாள் சங்கடமாக.
“அதனால என்ன மா, பரவால்ல” என்றவர், “தம்பி காலைல வெள்ளனே எந்திரிச்சு மார்கெட்டுக்கு போய்ருச்சு மலரு. நீ நல்லா தூங்கிட்டு இருந்ததால உன்னை எழுப்ப மனசில்லாம என்கிட்ட சொல்லிட்டு போனான், இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துருவான்” என்றவாறே தனது அத்தைக்கும் காஃபியை கொண்டு போய் கொடுக்க, ராமாயி பாட்டியோ தன் அத்தை கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மலர்விழியின் முகத்தை ஆராய்ந்தார்.
“இன்னிக்கே மார்க்கெட் போகாட்டி என்னவாம் அவனுக்கு! கண்ணாலம் முடிஞ்ச அடுத்த நாளே வேலைய பாக்க ஓடணுமா?” என்றார் ராமாயி பாட்டி.
“ஏதோ அவசர சோலினு காலங்காத்தால ஓடறவன என்ன அத்தை சொல்றது!” என்றவாறே, “இங்க வா மலரு, தலைய துவட்டி விடறேன். இப்படியே ஈரத்தலையோட நின்னா சளி பிடிச்சிரும்” என்றவர் அவள் தலையை துவட்டிவிட, மறுக்க முடியாமல் நின்றாள் மலர்விழி.
முடியை நன்கு உலர்த்தி விட்டவர், “இப்போ போய் பின்னல் போட்டுக்க மா” என்று விட்டு, சமையலறைக்குள் நுழைய, தங்களது அறைக்கு வந்தாள் மலர்விழி. சிறிது நேரத்திலே வேலைக்குக் கிளம்பியவள், ரேவதியிடம் சென்று, “அத்தை இன்னிக்கு கேம்ப் இருக்கு” என தயங்கியவண்ணம் நிற்க, “இன்னிக்கு நம்ம சொந்தக்காரங்கலாம் வர்றதா சொன்னாங்க மலரு” என்றவர், “சரி, நீ போய்ட்டு வா மா. நான் சமாளிச்சுக்கறேன்” என்றார்.
“ஹரியும் இங்க இல்ல அத்தை, நானும் லீவு எடுத்தா நல்லா இருக்காது. அதான்… போய்ட்டு மதியம் வந்துருவேன் அத்தை” என தயங்க, “சரி மா. சாப்ட்டு கிளம்பு” என்றவர், அவளுக்கு காலை உணவை எடுத்து வைக்க, அமைதியாக இரண்டு இட்லியை உள்ளே தள்ளினாள்.
அப்பொழுது தான் பூ மார்க்கெட்டிலிருந்து வீட்டிற்கு வந்தான் பாரிவேந்தன். மலர்விழி புடவையில் தயாராகி சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டவன், எதுவும் பேசாமல் தங்கள் அறைக்குச் சென்று உடை மாற்றிவிட்டு நடுகூடத்திற்கு வர, “நீயும் ஒரு வாய் சாப்ட்டு நம்ம மலர கொண்டு போய் விட்டுட்டு வா கண்ணா” என்றவாறே அவனுக்கும் உணவு பரிமாற, அவனும் அவள் அருகில் கீழே அமர்ந்தான்.
இருவரும் சாப்பிட்டவுடன், தங்கள் அறையில் இருந்து தனது கைப்பையை எடுக்கச் சென்றவள், தனது கைப்பையின் அருகில் இருந்த மலரைக் கண்டு கண்கள் மலர்ந்தது.
அதனை தனது விரல்களால் பரிசித்தவள், அதன் வாசனையை முகர்ந்தாள். ‘இத வாங்க தான் அவ்ளோ சீக்கிரமா எழுந்து மார்க்கெட் போனீங்களா மாமு!’ என மனதினுள் கூறிக் கொண்டவள், தன்னவன் முதன்முறையாக தனக்கு வாங்கி வந்திருந்த தாழம் பூவை தலையில் சூடிக் கொண்டாள் மலர்விழி.
மல்லிகை, முல்லை, சாதி மல்லி என அத்தனை மலர்களும் கொட்டிக் கிடக்கும் அந்த ஊரில் இருந்தவளுக்கு என்னவோ அந்த மலர்களின் மீது அவ்வளவு நாட்டமில்லை. மிக அரிதாக கிடைக்கும் தாழம் பூவின் மேல் நாட்டம் கொண்டாள்.
கடலோர பகுதிகளில் வளரும் தாழம் பூ, சமநிலை தளமான அவளது ஊரில் கிடைக்காத ஒன்று. திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் கூட அவ்வளவு எளிதில் அது கிடைக்காது. சிறு வயதிலிருந்தே தாழம் பூவின் மேல் காதல் கொண்டவளை அவள்மேல் காதல் கொண்டவன் அறிந்து வைத்திருந்தான். அதனால் ஏற்கெனவே அவன் தாழம் பூ வேண்டுமென தனக்குத் தெரிந்தவர்களிடம் கேட்டு வைத்திருக்க, அதனை வாங்க தான் அதிகாலையிலேயே புறப்பட்டு இருந்தான் பாரிவேந்தன்.
அவள் கிளம்பி வெளியே வர, அவளின் மலர்ந்த முகத்தைக் கண்டவனின் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. இருவரும் வீட்டில் இருந்து புறப்பட, ராமாயி பாட்டியோ, ‘இதுங்க ரெண்டும் ஒன்னும் சரியில்லையே! ஏதோ தப்பா போகுது‘ என மனதினுள் மணி அடித்துக் கொண்டிருந்தார்.
அவர்களின் ஊரில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த கிராமத்தில் தான் அன்று மருத்துவ முகாம் நடைபெற, அங்கு கொண்டு போய் அவளை விட்டுவிட்டு கிளம்பினான் பாரிவேந்தன். அவளுக்கு முன்பே மற்ற மூவரும் அங்கு வந்திருக்க, “ஹேய், புதுப் பொண்ணே! என்ன அதுக்குள்ள இங்க வந்துட்ட? ரெண்டு நாள் லீவு எடுத்துக்கலாம்ல” என்றவாறே வந்த இந்திரா மலரின் தோள் பற்றி மேலிருந்து கீழ் வரை ஆராய, “பரவால்ல இந்து, ஆப் டே தான, பாத்துக்கலாம்” என்றவள், “என்ன டி இப்படி பார்க்கிற, புதுசா பாக்கிற மாதிரி” என வினவினாள் மலர்விழி.
“நீ தேற மாட்ட” என தலையை ஆட்டியவள், “சிலம்பு ஒன்னும் நடக்கல போல டி” என அவள் கத்த, அவள் வாயை பொத்தியவள், “எரும, எரும. இத தான் ஆராய்ச்சி பண்ணியா, இப்படியா காட்டுக்கத்து கத்துவ!” என முறைத்தாள் மலர்விழி.
“நான் என்ன டி தப்பா சொல்லிட்டேன். உள்ளத தான சொன்னேன்” என அவள் தோளை குலுக்க, “மொத போய் வந்த பேஷண்ட்ஸ்ஸ கவனிக்கலாம் வா” என அவளை இழுத்துக் கொண்டு சென்றாள் மலர்விழி.
“இப்படியே இரு, ஒருநாள் இல்ல ஒருநாள் அண்ணா வேற ஒரு நல்ல பொண்ணா பாத்து கட்டிக்கிட்டு வந்து நிக்கப் போறாரு” என்றவளின் வார்த்தையில் சடென் பிரேக் போட்டதுபோல் அவள் அதே இடத்தில் நிற்க, “உன் கோபம் நியாயமானது தான் மலர், நான் இல்லனு சொல்லல. ஆனா, அதுக்காக அவங்கள ரொம்பவும் வாட்டி வதைக்கக் கூடாது. அண்ணா ஏன் அப்படி பண்ணாருனு யோசி, அப்படி பண்ணாம இருந்திருந்தா இந்நேரம் என்ன நடந்திருக்கும்னு யோசி. அதுக்கு அப்புறம் உன் வாழ்க்கை, உன் காதல் என்னாகி இருக்கும்னு யோசி மலர். சும்மா கோபத்தை மட்டும் மூக்கணாங்கயிறு போட்டு கட்டிக்கிட்டு இருக்க கூடாது. அதுல உள்ள சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்தா தான் வாழ்க்கை நல்லா இருக்கும்” என்றவள், “சிலம்பு இரு நான் வரேன்” என்றவாறே சிலம்புவிடம் நகர்ந்தாள் இந்திராகாந்தி.
மலர்விழியின் மனமோ இந்திரா கூறியதை சுற்றியே வலம் வர, வலிய அந்த சிந்தனைகளை ஒதுக்கியவள், தன் பணிகளைப் பார்க்கத் தொடங்கினாள்.
மதியம் போல், “நானும் செந்திலும் சத்துணவு கூடம் வரைக்கும் போய் பார்த்துட்டு வந்தறோம் இந்து. நீயும் சிலம்புவும் இங்க வர்றவங்கள பார்த்துக்கோங்க” என்றவள், செந்திலை அழைத்துக் கொண்டு அந்த ஊரில் இருந்த சத்துணவு கூடத்தை பார்வையிடச் சென்றாள் மலர்விழி.
இந்திராவும் சிலம்புவும் முகாமில் அமர்ந்திருக்க, அப்பொழுது ஒரு குழந்தையுடன் ஓடி வந்தார் ஒரு பாட்டி. அவரின் கோலத்தைக் கண்டவர்கள், “என்னாச்சுங்க பாட்டி, பாப்பாவுக்கு என்ன?” என்றவாறே அவளை அங்கிருந்த நாற்காலியில் அமர வைக்க, “என்னனே தெரியல மா, காலைல இருந்து நல்லா தான் இருந்தா. இப்போ ரொம்ப சோர்ந்து போகவும் அவள தூக்கப் போனப்போ உடம்பு கொதியா கொதிக்குது, கொஞ்சம் என்னன்னு பாருங்க டாக்டர் அம்மா” என அவர் கையெடுத்துக் கும்பிட, “நீங்க கொஞ்சம் இப்படி உக்காருங்க பாட்டி. நாங்க பாத்துக்கறோம்” என்றவர்கள், அந்த குழந்தையை பரிசோதித்தனர்.
நான்கு வயது தான் இருக்கும். ஆனால், எலும்பும் தோலுமாய் சக்தியற்று இருந்தது அக்குழந்தை. பரிசோதனை முடிந்தவுடன், “சாதாரண காய்ச்சல் தான் பாட்டி மா. பாப்பாவுக்கு உடம்புல சத்தே இல்ல, நேரத்துக்கு அவளுக்கு சாப்பாடு கொடுக்குறீங்களா இல்லையா?” என்றாள் இந்திரா.
“ஏதோ என்னால முடிஞ்ச கஞ்சியோ கூழோ காய்ச்சி கொடுக்கறேன் டாக்டர், அதுக்குமேல செய்ய என்கிட்ட தெம்பு இல்ல மா” என்க, அவரைப் பார்க்கவும் பாவமாக தோன்றியது. வயது அறுபதைக் கடந்திருக்கும் தோற்றம்.
“இந்த குழந்தையோட அம்மாவும், அப்பாவும் என்ன பண்றாங்க பாட்டி மா?” என்றவாறே சத்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருந்த இந்திரா அவரது பதிலில் அதிர்ந்தாள்.
“அவ ஆத்தாகாரி இவ அப்பன் தொல்லை தாங்காம ஓடி போய்ட்டா தாயி, அவன் எந்நேரமும் குடியும் கூத்துமா எங்கயாவது உருண்டு கெடப்பான்” என்க, “நீங்க இந்த குழந்தைக்கு என்ன வேணும் பாட்டி மா?” என்றாள் சிலம்பு.
“அவன பெத்த வயிறு இதான் ம்மா. அதான் இப்போ அனுபவிக்கிறேன்” என தன் வயிற்றில் அவர் அடித்துக் கொள்ள, “இந்த குழந்தைக்கு அண்ணன், அக்கா யாரும் இருக்காங்களா பாட்டி?” என்றாள் இந்திரா.
அப்பொழுது ஏழு அல்லது எட்டு வயது நிரம்பிய ஒரு குழந்தை அங்கு ஓடிவந்தது. மேல் சட்டை இல்லாமல் வெறும் கால் சட்டையுடன், அதுவும் அழுக்குப் படிந்து, உடம்பில் ஆங்காங்கு சிறுசிறு காயங்களோட அக்குழந்தை ஓடிவர, அந்த பாட்டியோ, “ஏன் டா உன்னை எங்கெல்லாம் தேடறது? எங்க போய் தொலஞ்ச?” என கடிந்துக் கொண்டார்.
“பாப்பாவுக்கு என்னாச்சு அப்பாயி, அந்த ரம்யா புள்ள என்ன என்னமோ சொல்லுது” என்றவாறே தனது தங்கையை உள்ளே துழாவி அவள் அமர்ந்திருப்பதைக் கண்டு அவள் அருகில் வந்தான்.
இந்திரா அந்த பாட்டியை பார்க்க, “இவன் அவனோட மூத்த சம்சாரத்து மகன் டாக்டர். அவளும் இவன் அப்பன் தொல்லை தாங்காம நாண்டுக்கிட்டா. அதுக்கு அப்புறம், கட்டிட்டு வந்தவளையாவது ஒழுங்கா கரை சேர்த்துவான்னு நினைச்சோம். ஆனா, அந்த பாவி மவ ஆறு மாச குழந்தைய விட்டுட்டு ஓடிப் போய்ட்டா” எனும்போதே கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.
இவர்களின் சம்பாஷணைகளை எல்லாம் கவனிக்காமல், தனது தங்கையின் முகத்தை கையில் ஏந்தி, “என்னாச்சு தர்ஷூ” என வினவிக்கொண்டிருந்தான் அந்த பாலகன்.
அவரிடம் மேலும் சில தகவல்களை விசாரித்துக் கொண்டு, “இந்த மாத்திரைய சாப்பாட்டுக்கு அப்புறம் காலைலயும் ராத்திரியும் கொடுங்க பாட்டி. ரெண்டு நாள்ள காய்ச்சல் சரியாகிரும்” என்க, அவரும் அங்கிருந்து தனது பேரக்குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றார்.
அவர் சென்றப் பின்பும் இந்திரா சோர்ந்துப் போய் இருக்க, “என்னாச்சு இந்து?” என்றாள் சிலம்பு.
“அந்த குழந்தைங்க என்ன பாவம் பண்ணுச்சு சிலம்பு! அந்த குழந்தைய பாக்கவே முடியல. எப்படி தான் இப்படி பெத்துப் போட்டுட்டு அவன் சந்தோசம் தான் முக்கியம்னு திரியறானோ, இவங்களுக்குலாம் குழந்தை முக்கியம் இல்லைல. எத்தனையோ பேர் குழந்தை இல்லாம தவிக்கறாங்க, ஆனா இப்படிப்பட்ட நாதாரிகளுக்குத் தான் அந்த ஆண்டவன் அள்ளி அள்ளி கொடுக்கறான்” என அவள் புலம்ப, “ரிலாக்ஸ் இந்து, நம்ம சர்விஸ்ல இன்னும் இதே மாதிரி பல கேஸ்கள பார்க்க வேண்டி வரும். இதுக்கே சோர்வானா இன்னும் வர்றத எப்படி எதிர்கொள்ள முடியும் சொல்லு. நம்ம மனச கல்லாக்கிக்கிட்டு தான் இருக்கணும். வேற வழி இல்ல” என்க, “இல்ல இதுக்கு ஒரு வழி இருக்கு சிலம்பு, நாம ஏன் குழந்தைகள் நல காப்பகத்துக்கிட்ட இந்த குழந்தைங்கள ஒப்படைக்கக் கூடாது?” என்க,
“பெத்தவங்க இருக்கும்போது அவங்கள எப்படி அங்க விட முடியும் இந்து, இப்போ அவன் கவனிக்கலனாலும் நாளைக்கு அவங்க வந்து கேட்கும்போது அவன் ஒத்துக்கலனா என்ன பண்ணுவ?” என்றாள் சிலம்பு. “இந்த ஊர்காரங்க மூலமா முயற்சி பண்ணலாம் சிலம்பு” என்றவளின் பார்வை எதேட்சையாய் சாலையில் பதிய, அங்கு வந்துக் கொண்டிருப்பவனைக் கண்டவள், வேகமாக எழுந்து ஓட, “என்னாச்சு இந்து?” என பதறினாள் சிலம்பு.
அவள் சாலையின் நடுவே வருவதற்கும் எதிரே வந்தவன் சடென் பிரேக் போடுவதற்கும் சரியாக இருந்தது. “ஏய், அறிவில்லயா உனக்கு? இப்படி தான் நடு ரோட்டுல வந்து விழுவியா?” எனக் கத்தியவாறே எதிரே நின்றிருந்தவளைக் கண்டவன், வேகமாக தனது வண்டியை ஆராய, அவனின் செயல் புரியாமல் முழித்தாள் இந்திராகாந்தி.
அவளின் குழப்பத்தை உணர்ந்தவன், “இல்ல என் வண்டிமேல ஒரு காட்டெருமை மோதிருச்சே, அதான் சேதாரம் எதும் ஆகிருச்சானு பார்த்தேன்” என்ற சண்முகம் மீண்டும் தனது வண்டியை ஆராய, அவளோ பத்ரகாளியானாள்.
“ஹலோ மிஸ்டர், இதுக்குமேல பேசுனீங்க அப்புறம் விஷ ஊசி போட்ருவேன் பார்த்துக்கோங்க” என முறைத்தாள் இந்திராகாந்தி.
“இல்ல மா, ஒரு நூறு கிலோ காட்டெருமை என் வண்டிமேல மோதுனா அது தாங்குமா, நீயே சொல்லேன். பாவம்ல என் வண்டி” என்க, “ஐ ஆம் ஜஸ்ட் நையன்டி நையன் ஒன்லி” என அவள் உதட்டைப் பிதுக்க, அவளின் உதடு பிதுங்கி, நின்ற கோலத்தைக் கண்டவனுக்கு சிரிப்பு வந்தது.
“ஆமா ஆமா, இவங்க நையன்டி நையன் தாஜ்மஹால் தான்” என்க, “என்ன நக்கலா!” என்றாள் இந்திராகாந்தி.
“அம்மா, ஆதிபராசக்தி, என் வண்டில வந்து மோதற அளவுக்கு என்ன தலைபோற அவசரம்னு சொன்னீங்கன்னா நான் அப்படியே என் வழிய பார்த்துப் போய்ருவேன்” என்றவுடன் தான் தான் ஏன் ஓடி வந்தோம் என்ற காரணத்தையே உணர்ந்தாள்.
கண்களை இறுக மூடி சற்றுமுன் நடந்த அனைத்தையும் ஒப்புவிக்க, அதனை பொறுமையாகக் கேட்டவன், சுற்றிமுற்றி பார்த்துவிட்டு, “ஆமா, எங்க மலரு?” என்றான் சண்முகம்.
“அவள ஏன் கேட்குறீங்க?” என்க, “இல்ல, மலர் இருந்தா இந்த விசயம் பாரி மாப்பிள்ளைகிட்ட தான போகும், ஆனா என்கிட்ட வந்து சொல்றியே அதான் கேட்டேன்” என்றான்.
“அவ இங்க இல்ல, அவ ஏற்கெனவே பல குழப்பங்கள்ள இருக்கா. அதான் உங்கள பார்த்தோனே ஹெல்ப் கேட்கலாம்னு ஓடி வந்தேன். இந்த ஊர்ல உள்ளவங்கள உங்களுக்கு தெரியும்ல, இதுல எங்களுக்கு உதவி பண்ண முடியுமா?” என தன்முன் கெஞ்சி நிற்பவளைக் கண்டவன், “சரி, நான் முயற்சி பண்றேன் மா” என்றவன், “ஆமா, உன் பேரு என்ன?” என்றான்.
“இந்திராகாந்தி” என்க, “உன் அப்பா பேரு என்ன நேருவா?” என இதுவரை நல்ல பையனாய் இருந்தவன், இப்பொழுது அவளை வம்பிழுக்கும் நோக்கில் வினவ, அவளோ அதனைக் கவனியாது, வேகமாக ஆமாம் என தலையாட்ட வாய்விட்டு சிரித்தான் சண்முகம்.
“ஏன் சிரிக்கிறீங்க, நான் விளையாட்டுக்கு சொல்லல. சீரியஸ்ஸா சொல்றேன் என் அப்பா பேரு நேரு தான்” என்றாள் சிறுகுழந்தை போல்.
“சரி, சரி நான் சிரிக்கல. உனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இருக்காங்களா?” என்க, “ஆமா, தம்பி. ஏன் கேட்குறீங்க?” என்றாள் இந்திராகாந்தி.
“சும்மா தான், தம்பி பேரு என்ன?” என்க, “குமரன்” என்றவள், அவனின் நக்கலைப் புரிந்துக் கொண்டு, ஏகத்துக்கும் அவனை முறைத்து வைக்க, “எஸ்கேப் ஆகிரு டா சண்முகம், சாமி மலையேறிருச்சு” என்றவாறே வண்டியை கிளப்பி, அவளைக் கடந்தவன், பின்னால் திரும்பி, “நாளைக்கு இந்த ஊர்காரங்ககிட்ட பேசலாம் ஹண்ரட் கேஜி தாஜ்மஹால்” என கண்ணடித்தவாறே செல்ல, இந்திராவின் முகம் மலர்ந்தது.
இந்து சண்முகம் ஜோடி யா?