Loading

தேவிகாவின் மருத்துவ அறிக்கையிலும் பெரிதாக ஒன்றும் தகவல்கள் இல்லை. உடலில் எந்த காயங்களும் இல்லை, அடித்த தடயமும் இல்லை. இது தற்கொலையாக இருக்கலாம் என்ற தகவல் மட்டுமே அதில் இடம்பெற, கட்டபொம்மனுக்கு எதுவும் புரியவில்லை. பிறகு கட்டபொம்மனின் ஆணைப்படி, தேவிகாவின் உடல் இறுதி சடங்குகள் முடித்து மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அனைத்தையும் சரிபார்த்து விட்டு தூரன், மகி இருவரையும் அழைத்துக்கொண்டு அந்த ஆள் இல்லாத ஊர் எல்லை பகுதிக்கு சென்றார். 

 
 
 
அங்கேயும் மூவருக்கும்  எந்த தடயமும் கிடைக்க வில்லை. அதில் மேலும் குழம்பிய கட்டபொம்மன்…., அந்த கிணறு பகுதிக்கு சென்று பார்வை இட அங்கே திடீரென ஒரு சத்தம் கேட்டது. இரண்டு அடி பின் வாங்கிய கட்டபொம்மன் தூரன் மகி இருவரையும் பார்க்க…. அங்கே அவர்களை காணவில்லை. யோசித்தபடி, வந்த வழியே திரும்பி நடக்க, திரும்பவும் அதே சத்தம் அவர் காதில் ஒலித்தது. அதில் ஏதோ ஒன்று அவரை உறுத்த அங்கேயே சிறுது நேரம் நின்று…. தன் காதுகளையும், பார்வையையும் நிலைப்படுத்தி கவனிக்க ஆரம்பித்தார். நேரம் செல்ல செல்ல அந்த சத்தம் எதையோ சொல்ல முடியாமல் திணறுவது போல தோன்ற, வேகமாக சத்தம் வரும் கிணற்றுக்கு பின்னால் சென்று பார்த்தார் கட்டபொம்மன்.
 
 
 
அதேநேரம் மகியும் , தூரனும் தங்களுக்கு ஏதேனும் தடயம் கிடைக்குமா என்று தேடி கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண்ணின் வளையல் கிடைக்க அதை எடுக்க சென்றான் தூரன். உடனே மகி,
 
 
 
“என்ன பண்ற தூரா… இதை நம்ம எடுக்க கூடாது. இது இந்த கொலைக்கு ஒரு தடயமா கூட இருக்கலாம்.  அது மட்டும் இல்லாம இது இந்த பொண்ணோட வளையலா இருக்கும்னு சொல்லவும் முடியாது. அதுவும் இல்லாம இது வேற யாரோடதாவது இருந்து, தேவை இல்லாம அவங்களை இதுல மாட்டி விட வேண்டாம். நான் இங்கையே இருக்கேன். நீ சார் கிட்ட சொல்லி இங்க கூட்டிட்டு வாடா. அவங்களே வந்து இதை எடுக்கட்டும்….”
 
சிறுது நேரத்தில் கட்டபொம்மனும் அங்கே வந்து விட….. அந்த வளையலை ஒரு வெள்ளை துணியில் சுற்றி எடுத்து கொண்டார். “தூரன் இது இல்லாமல் இங்க வேற ஏதாச்சும் கிடைச்சுதா? என் கூடவே தான இருந்திங்க இவ்ளோ நேரம் எங்க போனீங்க? ஏற்கனவே பல குழப்பம் இருக்கு இந்த கேஸ் ல.. இதுல நீங்களும் சொல்லாம கொள்ளாம எங்கையாவது கண்டுபிடிக்கிறேன்னு போய்டாதீங்க. எதுவா இருந்தாலும் என் கிட்ட சொல்லுங்க நான் என்ன பண்றதுன்னு சொல்லுறேன். நீங்க படிக்கிற பசங்க தேவை இல்லாமல் பிரச்சனையில சிக்கிடாதீங்க. இது பேய்யோ இல்ல மனுசனோ… எதுவோ ஒன்னு அதை கண்டுபிடிக்கிறது இனி என்னோட வேலை. நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணாமட்டும் போதும்….” என கட்டபொம்மன் கூற அதற்கு சரியென தலையசைத்தனர் இருவரும்.  பின் மூவரும் அங்கிருந்து கிளம்ப , கட்டபொம்மன் முகத்தில் மட்டும் சொல்ல முடியாத ஒரு முகமாறுதல் வந்து போனது .
 
 
 
அவர்கள் கிளம்பியதும் அந்த காடே அதிரும் படி நிலத்தில் ஒரு இடி இடித்து…… சலித்து…. வந்த வழி திரும்பி செல்ல … பின் என்ன நினைத்ததோ அந்த உருவம் கட்டபொம்மன் சுற்றி பார்த்து கொண்டிருந்த அந்த கிணற்றை ஒரு முறை எட்டி பார்த்து கொடூர சிரிப்பை வெளிவிட்டவாறு   சட்டென அதில் குதித்தது. குதித்த வேகத்தில் அந்த கிணறும் ஒரு முறை துள்ளி எழுந்து பின் அடங்கியது . குதித்த சத்தம் வெகு தூரத்தில் சென்று கொண்டிருந்த மூவர் காதிலும் விழுந்ததோ என்னமோ…. ஒரே நேரத்தில் மூவரும் திரும்பி பார்த்தனர்.
 
பொழுது விடிய இன்னும் 4மணி  நேரமே இருக்க, பூவிலாங்குடி காவல் நிலையத்தை நின்று பார்க்கும் தூரத்தில் இருக்கும் இரண்டு படுக்கை அறை கொண்ட அந்த ஓட்டு வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கட்டபொம்மனுக்கு  இரண்டாவது முறையாக அழைப்பு பதிவு அடித்து நின்றது. மூன்றாவது முறையாக அழைத்த அழைப்பொலியில் உடல் நெளித்து ஒரு கண்ணை மட்டும்  திறந்து  பார்த்த கட்டபொம்மனுக்கு பதில் கிடைக்கும் விதமாக அலைபேசியில் மகேஷ் என்ற பெயரோடு மூன்றாவது அழைப்பும் நின்றது. மறு அழைப்பாக கட்டபொம்மனே மகிக்கு அழைக்க உடனே ஏற்கப்பட்டது.
 
 
 
 
 
 
 
“சார்ர்ர் !!!கொஞ்சம் ஊர் தலைவர் வீடு வரைக்கும் வர முடியுமா சார்? இங்க தலைவர் மனைவி தூக்கு போட்டு இறந்துட்டாங்க……ஒரு அரைமணி நேரத்துக்கு முன்னாடிதான் எங்களுக்கு தெரியவந்துச்சி…..
 
 
 
உடனே உங்களுக்கு தகவல் சொல்லத்தான் கால் பண்ணிட்டு இருக்கேன் சார். என்ன நடந்துச்சுன்னு ஒன்னும் தெரியலை. சீக்கிரமா வாங்க சார்….” என மகி பதட்டமாக கூற,
 
 
 
“என்ன சொல்றிங்க இது என்ன புது பிரச்சனை. சரி நீங்க வைங்க நான் இன்னும் பத்து நிமிசத்துல அங்க இருப்பேன். நான் வர வரைக்கும் யாரும் எதுவும் பண்ணாம இருக்க சொல்லுங்க.” என்று பதில் அளித்து விட்டு கிளம்ப சென்றார்.
 
 
 
சொன்னது போலவே பத்து நிமிடத்தில் பரசுராம் வீட்டை அடைந்த கட்டபொம்மன், பரசுராமிடம்  “இது எப்படி நடந்துச்சு? இவங்க கூட நீங்க இல்லையா? என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க சார்.”
 
 
 
பரசுராம் , “என்ன சொல்லங்க……. பொண்ண பறிகொடுத்து முழுசா ஒரு நாள் கூட ஆகல, அதுக்குள்ள என் மனைவியும் இப்படி பண்ணிக்கிட்டா… எனக்குன்னு இருந்த இரண்டு பேரும் இப்படி பண்ணிட்டாங்களே…… என்னை பத்தி யோசிக்காம……. இனி மனைவிக்காக வாழலாம்னு நெனச்சிட்டு தெம்பா இருந்தேன் சார். இனிமே நான் மட்டும் வாழ்ந்து என்ன பண்ண போறேன். என்னையும் கொன்னுடுங்க சார் கொன்னுடுங்க.”
 
 
 
கட்டபொம்மன், “இங்க பாருங்க சார் உங்க வருத்தம் எனக்கு புரியுது. ஆனா நீங்க என்ன நடந்துச்சுன்னு சொன்னா மட்டும் தான் என்னால ஏதாச்சும் பண்ண முடியும். உங்க மனைவி கூட யாருலாம் இருந்தாங்க. இந்த முடிவு எடுக்க காரணம் என்ன? உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க.”
 
 
 
 
 
 
 
பரசுராம், “சார் பொண்ணு இறந்ததுல இருந்தே ஒரு வார்த்தை கூட என்கிட்ட பேசல. நானும் சாப்பிட வைக்க எவ்வளவு பேச முடியுமோ அவ்ளோ பேசிட்டேன். எனக்கு வேணான்னு  முடிவா மறுத்துட்டா சார். நானும் அவளை தேத்துற நிலைமையில இல்ல அதனால மனைவி கூட அமைதியா படுத்துட்டேன். திடீர்ன்னு சத்தம் போட்டு கத்த ஆரம்பிச்சிட்டா. என்ன ஏதுன்னு கேட்டதுக்கு நம்ம பொண்ணுங்க….. நம்ம பொண்ணுக்கு…… பயமா இருக்காம். என்னை வரச்சொல்லி அழுதுட்டு இருக்கா பாருங்கன்னு சொன்ன சார். எனக்கு அப்படி ஒன்னும் தெரியலை. என்ன என்னமோ சமாதானம் சொல்லிட்டு இருந்தேன். ஆனா அவளோட சத்தமும் பிடிவாதமும் அதிகமாகிட்டே போயிடுச்சி. வீட்ல இருக்க அத்தனை பேரும் எங்க ரூம்க்கு வந்துட்டாங்க. அவங்க வந்ததும் ரூம்ல இருக்க அத்தனை பொருளும் உடைய ஆரம்பிச்சிடுச்சு….. என் மனைவியும் அவங்களை வெளிய போக சொல்லுங்க என் பொண்ணுக்கு பயமா இருக்காம்னு ஒரே கலாட்டா சார்…”
 
 
 
“ஆமா சார் மாமா சொல்றதும் உண்மை தான். அக்கா சத்தம் கேட்டு மேல வந்து பார்த்தா எல்லா பொருளும் உடைஞ்சி கிடைக்குது. அக்காவும் எங்களை உள்ளையே வரவிடலை. என் பொண்ணுக்கு பயமா இருக்காம் நீங்க வராதீங்க வெளிய போங்கன்னு  ரூம்ல இருக்க பொருளை எங்க மேல வீசிட்டு இருந்தாங்க. நாங்களும் எவ்வளவோ பேச முயற்சி பண்ணியும் விடவே இல்லை. அப்புறம் மாமாவை போட்டு அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. எல்லாரும் இப்போ வெளிய போங்க இல்லன்னா என் பொண்ணு உங்க எல்லாரையும் கொன்னுடுவான்னு சொன்னாங்க. அவளே இப்போ ரொம்ப கோவத்து ல இருக்கா உங்களை ஏதாச்சும் பண்றதுக்குள்ள போய்டுங்க. இந்த ஊர்ல இனிமே நடக்குற எல்லாத்துக்கும் அவ தான் காரணமா இருப்பாளாம். அவளை இந்த நிலைமைக்கு தள்ளுன உங்க யாரையும் சும்மா விடமாட்டாளாம். போங்க போய்டுங்க என் பொண்ணுக்கு பயமா இருக்காம். என் கூட தூங்கணுமான்னு சொல்லிட்டே மாமாவை வெளிய தள்ளி விட்டதும் இல்லாம கதவையும் சாத்திட்டாங்க. அப்புறமும் சும்மா இல்லை என்ன என்னமோ பேசிட்டு இருந்தாங்க சார். கொஞ்ச நேரத்துல சத்தமே வரல. நாங்களும் அக்கா தூங்கிட்டாங்கன்னு விட்டுட்டோம். மாமா தான் கேக்காம ஜன்னல் கிட்ட பார்த்தாங்க. பாத்துட்டு சத்தம் போடவும் தான் எங்களுக்கு விஷயம் தெரிஞ்சிது சார்….. ” என வீட்டில் இருக்கும் உறவினர் பெண் கூற,
 
 
 
இவை அனைத்தையும் கேட்ட கட்டபொம்மனுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. ‘கண்ணில் கண்டவர் சொல்வதை நம்பமுடியவில்லை. அதே நேரம் இது உண்மை இல்லை என்றும் சொல்ல முடியவில்லை. இவங்க பொண்ண பார்த்ததா சொல்றது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியலையே . அப்படியே இருந்தாலும் அவங்க அம்மாவை எதுக்கு கொல்லனும்? அவங்க சாவுக்கு காரணமான ஆளை தானே கொன்னு இருக்கணும்? ஆனா அந்த அம்மா சாகும் போது கூட யாரும் இல்லைன்னு சொல்றாங்க…… அப்போ அவங்களே தான் தற்கொலை பண்ணிகிட்டாங்களா??? பொண்ணு போன துக்கத்துல இப்படி பண்ணிட்டாங்களா??? இல்லை வேற ஏதாச்சும் காரணமா இருக்குமா???? ப்ச் இது என்ன தேவை இல்லாத குழப்பம். பொண்ணு சாவ கண்டுபிடிக்க வந்து இப்போ அம்மா சாவையும் கண்டு பிடிக்கணும் போலையே…. ‘ என தனக்குள்ளே பேசிக்கொண்ட கட்டபொம்மனை நிகழ்விற்கு கொண்டு வந்தது மகியின் “சார்” என்ற குரல்.
 
 
 
“சார்…….இவங்க பேய் பிசாசுன்னு என்னமோ பேசிட்டு போறாங்க சார். நம்ம இதை நம்ப வேண்டாம்… இது அவங்க மனச ரொம்ப பாதிச்சி இருக்கலாம். அதோட வெளிப்பாடா கூட இந்த முடிவு எடுத்து இருக்கலாம். இல்லையா இவங்களுக்கு எதுவோ ஒரு உண்மை தெரிஞ்சி இருக்கலாம் சார்…. அதை தெரிஞ்சிகிட்ட யாராவது இவங்களை இப்படி பண்ணி இருக்கலாம். இத இன்னும் தீவிரமா விசாரிச்சா கண்டிப்பா கண்டுபிடிக்கலாம் சார்…” மகி  
 
 
 
“என்ன தம்பி சொல்றிங்க இந்த வீட்ல இருக்குறது நாங்க மட்டும் தான். அதுவும் என் மனைவி கூட இருந்தது நான் மட்டும் தான்….. அப்போ என் மனைவியை நானே கொன்னுட்டனா???? சொல்லுங்க நானே கொன்னுட்டானா???  என்னோட அத்தை பொண்ணுங்க என் மனைவி…. அப்பவே கட்டுனா இவளை தான் கல்யாணம் பண்ணனும்னு போராடி கட்டிக்கிட்டவ சார்.  கல்யாண வாழ்க்கையில மூன்று வருஷம் கழிச்சி பிறந்த வரம் தான் என் பொண்ணு….. என் மனைவியையும் , பொண்ணையும் எந்த அளவுக்கு நேசிச்சன்னு இந்த ஊருக்கே தெரியும்.  நான் வாழ்ந்த வாழ்க்கையே அதுக்கு சாட்சி. என் மக போனதையே இன்னும் என்னால நம்ப முடியல. இப்போ என் மனைவியும் என்னை விட்டுட்டு போய்ட்டா. காரணம் என்ன ஏதுன்னே தெரியாம உள்ளுக்குள்ள நொந்துட்டு இருக்கேன் தம்பி. இந்த மாதிரி பேசி இருக்க காயத்தை  இன்னும் கிளறி விடாதீங்க. உங்களை கை எடுத்து கும்பிட்டு கேக்குறேன். என் பொண்ணு சாவுல என்ன மர்மம் இருக்கோ அது அந்த ஆண்டவனுக்கு மட்டுமே வெளிச்சம். ஆனா என் மனைவி சாவில் எந்த தப்பும் நான் பண்ணல தம்பி. உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னா என்னை எங்க வேணா கூட்டிட்டு போய் விசாரணை நடத்துங்க. இதுக்கு மேல நான் வாழ்ந்து என்ன பண்ண போறேன்…” என்றபடி சுவற்றில் சாய்ந்து கொண்டே சரிந்தார் பரசுராம்.
 
 
 
சரிந்த பரசுராமை வீட்டில் இருக்கும் உறவினர்கள் வேறு அறைக்கு அழைத்து சென்று முதலுதவி அளிக்க… மீதம் இருந்த உறவினர்கள் மகேஷிடம் சண்டையிட ஆரம்பித்தனர். “என்ன தம்பி நீங்க ஒரே ஊர்காரரா இருந்துட்டு இப்படி வாய்க்கு வந்ததை பேசிட்டு இருக்கீங்க . சின்ன பசங்களா ஓரமா நில்லுங்க. பரசுராம் பத்தி உங்க அப்பா கிட்ட கேட்டாலே என்ன எப்படின்னு சொல்லுவாரு. நொந்து போய் இருக்க மனுஷகிட்ட இப்படியா பேசுறது. அப்போ கண்ணால பார்த்த நாங்க சேர்ந்து பொய் சொல்றமா என்ன??? விட்டா நாங்களும் சேர்ந்து தான் கொலை பண்ணதா சொல்லுவ போல…” என சண்டை பெரிய வாக்குவாதமாக மாற கடைசியில் தூரன் வந்து மன்னிப்பு கேட்டு அவர்களை சமாதானம் படுத்தினான்.
 
 
 
இவை அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த உருவமோ சத்தமே வராமல் தனக்குள் சிரித்து கொண்டே மெதுவாக நடந்து பரசுராம் இருக்கும் அறைக்குள் சென்று மறைந்தது.
 
 
 
விறுவிறுவென தேவிகாவின் தாயார் உடலும் இறுதி சடங்கு முடித்து மகள் அருகிலே அழகாக குடியமர்த்தப்பட்டார். அவரது உடற்ககூராய்வும் இது முழுக்க முழுக்க தற்கொலையே என வர…. அடுத்து எங்கிருந்து ஆரம்பிப்பது என தெரியாமல் மூவரும் தவித்தனர். இப்படியே மூன்று நாட்கள் செல்ல அந்த ஊரில் முன்பை விட இப்போது அதிக பயம் பரவி இருந்தது. அடுத்தடுத்து இரண்டு மரணங்கள் அதுவும் இல்லாமல் தேவிகா அதிகமாக பழிவாங்கும் வெறியில் இருப்பதாக அந்த உறவுக்கார பெண்மணி கூறியதில் இருந்தே அந்த கிராமமே மாலை 5மணிக்கு மேல் எங்கும் செல்லாமல் தங்கள் தேவைகளை குறைக்க ஆரம்பித்திருந்தனர்.
 
 
 
சூரியன் நட்டநடு வானில் அழகாக தனியொரு மன்னனாய்  ஆட்சி புரியும் மதிய நேரம்…   தூரன், மகி, மகியின் அப்பா என மூவரும் பூவிலாங்குடி பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர் திசையில் அதே ஊரை சேர்ந்த முத்துவேலும் கூடவே ஒரு பருவப்பெண்ணும் வந்துகொண்டிருந்தனர்.
 
அதை கவனித்த மகியின் அப்பா குமரேசன்,
 
 
 
“என்ன முத்து எங்க போயிட்டு வர? ஆமா யாரு இந்த பொண்ணு? இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையே….”
 
 
 
முத்துவேல், “இது என் தூரத்து உறவுமுறை தம்பி பொண்ணு குமரேசா. தம்பியும் தம்பி பொண்டாட்டியும் இறந்து போய்ட்டாங்க. நான் தான் இரண்டு வருசமா வெளிய தங்கவச்சி பாத்துக்கிட்டு இருக்கேன். இந்த ஊர் நிலைமைதான் தெரியுமே. ஏற்கனவே ஒன்ன குடுத்துட்டு இவளையும் தர மனசில்லை. இப்போ இங்க கூட்டிட்டு வரவேண்டிய கட்டாயம். பல வருசமா நம்ம ஊரையே ஆட்டிப்படைகிற எதோ ஒண்ணு மாதிரியே இப்போ உலகத்தையே ஆட்டிவைச்சிட்டு இருக்காமே. காலேஜ்லா திறக்க ரொம்ப நாள் ஆகுமாம். அங்க இருந்து சாப்பாட்டுக்கு கஷ்டப்பட கூடாதுன்னு இங்க கூட்டிட்டு வந்துட்டேன். வந்துட்டனே தவிர உள்ளுக்குள்ள  உசுரு போற அளவுக்கு பயமா இருக்கு குமரேசா…..”
 
 
 
“புரியுது முத்து… என் பொண்ணையும் காலேஜ் ல இருந்து அனுப்பிட்டாங்க. அதான் கூட்டிட்டு வர போய்கிட்டு இருக்கோம். உன் பயம் தான் இப்போ எனக்கும். என்ன பண்றது நேரமும் நமக்கு எதிராவே இருக்கு. வேற வழியும் இல்லை. நம்ம தான் நம்ம பொண்ணுங்களை ஜாக்கிரதையா பார்த்துக்கணும். நீ ஒன்னும் கவலை படாத முத்து முன்ன மாதிரி ஒன்னும் நடக்காது. நீ சீக்கிரமா வீட்டுக்கு கூட்டிட்டு போ. நானும் என் பொண்ண கூட்டிட்டு வீட்டுக்கு போகணும். 4 மணி பஸ்ல வரேன்னு சொல்லி இருக்கா…” என  குமரேசன் கூற முத்துவும் தன் தம்பி மகளை அழைத்து சென்றார்.
 
 
 
தூரன் , “அப்பா என்ன ஆச்சு இவங்களுக்கு… எதுக்கு ஏற்கனவே ஒன்ன குடுத்துட்டேன்னு சொல்றாரு ..அப்போ அவரு பொண்ணுக்கும்……………”
 
 
 
“ஆமா தூரன் நீ நினைக்கிறது உண்மைதான். முத்துவேல் பொண்ணுக்கும் இப்போ தேவிகா பொண்ணுக்கு நடந்த மாதிரியே தான் நடந்துச்சி. அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு .. முத்துவேலுக்கு பையனுக்கு பையனா இருந்து எல்லாத்தையும் செஞ்சிட்டு இருந்தாள். நான்கு வருசத்துக்கு முன்னாடி அந்த கிணத்துல பிணமா  பார்த்தது. பெரிய பொண்ணுக்கு இப்படி நடந்ததும் சின்ன பொண்ண உடனே கல்யாணம் பண்ணி வேற ஊருக்கு அனுப்பிட்டாரு. அந்த பொண்ணும் எந்த நல்லது கெட்டதுக்கும் இந்த ஊரு பக்கமே வராது. பொண்ணு போனதும் முத்துவேலும் முன்ன மாதிரி வெளிய வரது இல்லை. நானே ரொம்ப நாள் கழிச்சி இப்போ தான் பார்க்குறேன். அந்த கொடுமையோட தாக்கம் தான் இப்படி பேசிட்டு போறாரு. இனிமேயாவது  முத்துவேலுக்கு எந்த  இழப்பு வராம இருக்கணும்….. ” என குமரேசன் முன்னே நடக்க…..
 
 
 
“அப்பா சொல்றது உண்மையா மகி….”
 
 
 
“ஆமா தூரன் உண்மைதான். அக்காக்கு இந்த ஊர்ல இருந்த ஒரே தோழி அந்த அக்கா தான். பள்ளிக்கூடம் கூட ஒன்னா தான் படிச்சாங்க. மேற்கொண்டு முத்துவேல் சித்தப்பா படிக்க வைக்க முடியாதுன்னு சொல்லிட்டாரு. அந்த அக்காவும் சரின்னு சொல்லி சித்தப்பாக்கு துணையா சந்தைக்கு போய் வியாபாரம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அக்காவும், அப்பாவும் படிக்க வைக்கிறேன்னு எவ்வளவோ சொன்னாங்க…. ஆனா அந்த அக்கா….. எங்க அப்பாக்கு துணையா இருந்து இனிமே இந்த வீட்டை நான் பார்த்துக்க போறேன்னு முடிவா மறுத்த்துட்டாங்க. அவங்க இறப்பு கூட ஒரு வகையில அக்கா இந்த ஊற விட்டு போக காரணம்.”
 
 
 
“ஹ்ம்ம்  மகி நீ பீல் பண்ணாத வா… இனிமே எதும் நடக்காம பார்த்துக்கலாம்…. சரி அவங்க பேரு என்ன??????”
 
 
 
 
 
“ஆதிலட்சுமி ……………………………………………………”
 
 
 
 
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்