Loading

அத்தியாயம்-3

இடம்: சென்னை        

முகிலினங்கள் வான் மேகத்திற்குள் தங்களை மறைத்து ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்க, சுற்றிலும் டூலிப் மலர்கள் தங்கள் வண்ண வண்ண இதழ்களால் நிலத்தை வண்ணமயமாக்க, அந்த டூலிப் மலர்களுக்கு நடுவே அவள் உடுத்தியிருந்த ஸ்லீவ் லஸ் மேக்ஸி உடையை காற்று அதன் போக்கில் இழுக்க,

சில்லென்ற காற்று உடலுக்குள் ஊடுருவி மேனியில் நடுக்கத்தை விளைவிக்க, கைகளை விரித்து, சிப்பி இமைகளை மூடி, கன்னக்குழியுடன், விரித்துவிட்ட கூந்தல் காற்றில் தவழ நின்றிருந்தவள், குளிர் காற்றின் தாக்கத்தால் கைகளை மடக்கி மார்பின் குறுக்கே கட்டியவளை, பின்னிருந்து அவன் அணிந்திருந்த ஜெர்க்கினுள் சேர்த்து அணைத்திருந்தான் ஒருவன்.

ஆறடி உயரமும், காற்றில் ஆடும் சிகையும், உடற்பயிற்சி செய்து முறுக்கேறிய உடம்பும் அவன் அவளை அணைத்ததில் அவனுடன் ஒன்றிய அவளது முதுகுப்புறமும், அவன் அளவாக திருத்தப்பட்ட மீசை அவள் கழுத்தில் குறுகுறுப்பூட்ட, குளிர் காற்றில் சில்லிட்டிருந்த அவள் மேனி அவனின் செயலால் சூடேறியது.

ம்ம்ம் என்று முனகியவள் முன்னே திரும்பி அவன் அகன்ற மார்பில் தன் மலர் கைகளால் குத்தினாள். பின் நிமிர்ந்து அவன் முகம் பார்க்க முயன்றாள்…

“ஏய் எருமை மாடு எந்திரி, இன்னும் எவ்வளவு நேரம் தான் உன்னைய எழுப்புறது கொரங்கு, எனக்குன்னு தங்கச்சியா வந்து பொறந்திருக்கு பாரு குட்டி பிசாசு”

“அம்மா அவ எந்திரிக்க மாட்டேங்கிறா… எனக்கு ஆபீசுக்கு நேரமாச்சு கேப் வந்துரும் நான் குளிக்க போறேன், நீங்களாச்சு உங்க பொண்ணாச்சு, என்னமோ பண்ணுங்க” என்ற நந்தன் என்ற நந்தகுமரன் குளிக்கச் சென்றான்.

நந்தகுமாரன் எழுப்பியவுடன் தான் கண்ட கனவிலிருந்து மீண்டவள் “ச்ச கனவா… கனவை கூட ஒழுங்கா முடிக்க விடமாட்டான் நெட்டை குரங்கு, போடா… எந்திரிக்க முடியாது” என்று மனதினுள் பேசியவள் மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.

நந்தகுமரன் குளிக்கச் சென்றவுடன், தன் மகளுக்கு விருப்பமான பூரியும் பட்டாணி உருளைக்கிழங்கு குருமாவையும் சமையல் அறையில் காலை உணவாக சமைத்துக் கொண்டிருந்த ரேணுகா,

 “ஆபீசுல டீம் மேனேஜரோட மீட்டிங்ன்னு சொன்னாளே எழுப்பலன்னாலும் திட்டுவா…” என்றவர்

பட்டாணி உருளைக்கிழங்கு குருமாவில் இறுதியாக கொத்தமல்லியைத் தூவியவர், பிள்ளைங்க குளிச்சுட்டு வந்ததும் பூரி போட்டுக்கலாம் என்றுவிட்டு தன் மகளின் அறைக்குள் நுழைந்தார்.

   நேத்ரா… நேத்ரா… அம்மாடி என் தங்கம்ல எந்திரி டா, நேரமாச்சு ஆபீசுல மீட்டிங்ன்னு சொன்னியே” என்றவுடன்,  

போர்வைக்குள் கண்களை மூடி கலைந்த கனவை மீண்டும் காண முயற்சி செய்து கொண்டிருந்தவள், படாரென்று போர்வையை விளக்கி வேகமாக எழுந்து அமர்ந்தாள்.

தன் இரு கைகளையும் தலையில் வைத்து “ஐயோ ஆமாம்மா, இதை மொதல்லயே சொல்றதுக்கு என்ன?

அந்த டீம் மேனேஜர் காண்டாமிருகம் வேற ஹோம் ஒர்க் செய்யாத ஸ்கூல் ஸ்டூடெண்ட் மாதிரி வெளிய நிக்க வைச்சு பனிஷ்மென்ட் குடுப்பாரு” என்றவள்

வேகமாக கைக்கு கிடைத்த ஒரு உடையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்கு ஓடினாள்.  (காண்டீபனுக்கு அவள் வைத்திருக்கும் பெயர் காண்டாமிருகம்)

அங்கே நந்தகுமரன் கழுத்தில் டவலுடனும் வாயில் பிரஷுடனும் குளியலறை முன்பு நின்று பல்துலக்கிக் கொண்டிருந்தான்.

“ஐயோ இவனும் குளிக்க நிக்கிறானே, இப்போ என்ன செய்யுறது… என்று யோசித்தவள் ஆஆ… இவனுக்கு இது தான் சரி” என்றவள், வேகமாக அவன் அருகில் சென்றாள்.

“ஹேய் நந்து” என்றவள் அவன் திரும்பி பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் மீண்டும் அவன் பல் துலக்கும் வேலையை தொடரவும்,

“திமிர பாரு, இரு நெட்டை குரங்கு உன்னை… என்று கருவியவள் ஆமா உங்க ஹெட் பேரு என்ன, என்று யோசிப்பது போல் பாவனை செய்தவள் பின் ஆ… சுலோச்சனா தானே?” என்றாள்.

அதற்க்கு புருவத்தை சுருக்கி “ஆமா இப்போ அதுக்கு என்ன?” என்று சலித்துக் கொண்டவனிடம்,

“இல்ல நான் பாக்கும் போது உன்னோட போன்ல சுலோச்சனா அப்படிங்கிற பேர்ல 5 மிஸ்ஸுடு கால்ஸ் இருந்தது அதான் கேட்டேன்” என்றாள்.      

“என்ன மிஸ்ஸுடு காலா” என்றவன் வேகமாக அவன் அறைக்குள் ஓடினான். பின்னே 1 மிஸ்ஸுடு காலுக்கே தலைகீழாக தண்ணி குடிக்க வைப்பவள் சுலோச்சனா, இப்போது 5 என்னும் போது நம் நந்தகுமாரைக் கேட்கவா வேண்டும்.

“ஹப்பாடா போய்ட்டான், ஜாலி…” என்றவள் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

நேத்ரா குளித்து விட்டு வந்து நந்தகுமாரிடம் திட்டு வாங்குவதற்குள் அவள் குடும்ப உறுப்பினர்கள் பற்றி சற்று அலசுவோம்…

நேத்ரா, வயது இருபத்தைந்து, பொறியியல் படித்துவிட்டு ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்பவள்.

அண்ணண் நந்தகுமரன் அதே பொறியியலில் மேற்படிப்பு படித்துவிட்டு கார்பொரேட் நிறுவனத்தில் நல்ல பொறுப்பில் இருப்பவன். 

தந்தை ஈஸ்வரமூர்த்தி அரசுப் பணியில் இருப்பவர். இன்னும் ஒரு வருடத்தில் பணி நிறைவு பெறப் போகும் நிலையில் உள்ளவர்.

தாய் ரேணுகா, ஈஸ்வரமூர்த்தியைத் திருமணம் செய்யும் முன்பிருந்தே ஐ.டி நிறுவனத்தில் நல்ல பொறுப்பில் இருந்தவர் நந்தனை வயிற்றில் தாங்கியதிலிருந்து வேலையை விட்டு விட்டு பிள்ளைகளை பொறுப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறார், இல்லத்தரசியாக.

நடுத்தரக் குடும்பம், ஈஸ்வரமூர்த்தியின் சம்பளத்தில் நந்தகுமாரும் நேத்ராவும் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள், நல்ல மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் சேர்த்தார்கள்.

போதாத பணத்திற்கு நந்தகுமாருக்கு லோன் வாங்க சம்மதித்த ஈஸ்வரமூர்த்தி நேத்ராவிற்கு லோன் வாங்க எளிதாக சம்மதிக்கவில்லை.

“பையன் அவன் வேலைக்கு போயி பணத்தை கட்டீருவான், பொம்பள புள்ள….” என்று யோசித்தவரை,

“ஏன்? எம்பொண்ணும் கண்டிப்பா வேலைக்கு போவா, அவ வேலைக்கு போயி தான் அவளோட கடனை அடைப்பா, என்னைய மாதிரி வீட்லேயே இருக்க வைக்கலாம்னு பாக்குறீங்களா?” என்று சண்டையிட்டு சம்மதம் வாங்கினார் ரேணுகா.

   அதில் அண்ணனும் தங்கையும் படித்து கேம்பஸ்சில் தேர்வாகி நல்ல வேலையில் சேர்ந்தவர்கள், அவர்கள் வங்கி கடனை அவர்களே அடைத்துவிட்டு குடும்ப வருமான நிலையையும் சற்றே உயர்த்தினர்.

நந்தகுமரன் பொறுப்புள்ள இளைஞன், நேத்ராவுக்குத் தேவையான எந்த ஒரு முடிவையும் எடுப்பவர் அவள் தாய் ரேணுகா.

உதாரணத்திற்கு ஜவுளிக்கடையில் எந்த உடை தேர்ந்தெடுப்பது என்பதிலிருந்து பதினொன்றாம் வகுப்பில் எந்த பிரிவை தேர்வு செய்வது என்பதும், இன்று அவள் தேர்ந்தெடுத்திருக்கும் பொறியியல் துறை வரை ரேணுகாவின் முடிவு தான். தாய் என்ன கூறினாலும் யோசிக்காமல் அதை அப்படியே செய்பவள் நேத்ரா. 

நேத்ரா கூறியதை உண்மையென நம்பி தன் அறைக்குச் சென்ற நந்தகுமரன் அவன் போனை எடுத்துப்பார்க்க, அதில் நோ நோட்டிபிகேஷன் என்று இருந்ததில் கடுப்பானான்.

மீண்டும் உறுதி செய்துகொள்ள ரீசன்ட் கால் ஹிஸ்ட்ரியில் பார்த்தவன் அதில் சுலோச்சனாவிடம் இருந்து எந்த மிஸ்ஸுடு காலும் வந்த அறிகுறி இல்லாமல் இருக்கவும்,

“ச்ச இந்த குட்டி பிசாசு பொய் சொல்லீருக்கு, வெளிய வரட்டும் இருக்கு இன்னைக்கு” என்றவன்

வேகமாக மற்றொரு குளியல் அறைக்கு செல்ல நினைத்தான், ஆனால் ஏற்கனவே அங்கு ஈஸ்வரமூர்த்தி குளித்து கொண்டிப்பது ஞாபகம் வந்தவனாய்,

“ஜாலியோ ஜிம்கானா என்று பாடிக்கொண்டிருந்தவளை   குட்டிப்பிசாசு நீ வெளிய வா… இன்னைக்கு மட்டும் எனக்கு லேட் ஆகட்டும் உனக்கு இருக்கு,

ஜாலியோ ஜிம்கானாவா இன்னைக்கு உன்னை ரெண்டுல ஒண்ணு பாக்காம விடப்போறதில்ல டெய்லி இதே வேலையா போச்சு ” என்று நேத்ரா குளித்துக் கொண்டிருந்த குளியல் அறை வாசலில் காத்திருந்தான். 

குளித்து முடித்து வெளியில் வந்த நேத்ராவின் இடக்கையை மடக்கி பின்னால் பிடித்து முறுக்கிய நந்தன் “இனிமே பொய் சொல்லுவியா பொய் சொல்லுவியா” என்று தலையில் கொட்டினான். 

வலி தாங்காமல் “அம்மா என்னை நந்தன் அடிக்கிறான் ம்மா” என்று அவன் கைகளில் இருந்து விடுபட போராடி துள்ளிக் குதித்தாள் நேத்ரா.

நேத்ராவின் சத்தத்தில் அங்கு வந்த ரேணுகா “டேய் டேய் விடு டா அவளை, கையை ஒடைச்சுப்புடாத” என்று இருவரையும் பிரித்து வைத்தார்.

“நேத்ரா நீ போயி கிளம்பு, டேய் நந்தா உனக்கு நேரமாகுது பாரு நீ போயி குளி” என்று அனுப்பி வைத்தார் இருவரையும்.

ஆஆ என்று தலையை தேய்த்துவிட்டவள் வேகமாக அவலறைக்குள் ஓடி மறைந்தாள். உள்ளே சென்றவள் கிளம்பி வெளியே வருவதற்குள் டைனிங் டேபிளில் அவளுக்கு பிடித்தமான பூரியும் குருமாவும் காத்திருந்தது.

கிளி பச்சை வண்ண சுடிதாரில் மெல்லிய தங்க ஜரிகை வேலைப்பாட்டுடன் இருந்த உடையை அணிந்திருந்தவள் பூரியைக் கண்டதும் “ஐய் அம்மா பூரி, என் செல்ல அம்மா…” என்று ரேணுகாவின் கன்னம் பிடித்து இடம் வலம் ஆட்டி கொஞ்சியவள் பூரியை ஒரு கை பார்த்தாள்.

இது ஆறாவது பூரி என்ற எண்ணிக்கையில் இருந்தவளை ஆபீசுக்கு கிளம்பி வெளியில் வந்த நந்தகுமரன் நேத்ராவை கண்டு முறைத்தான்.

அவன் முறைப்பை சட்டை செய்யாதவள் பூரியை விழுங்கிக் கொண்டிருந்தாள்.

நந்தன் பின்னே வந்த ஈஸ்வரமூர்த்தியுடன் உண்ண அமரவும் அங்கே அமைதி குடிகொண்டது.

உண்டு முடித்த நேத்ராவிடமிருந்து தட்டை வாங்கிய ரேணுகா “கையை தட்டிலேயே கழுவு நேத்ரா, நான் எடுத்துக்கிறேன்” என்றார்.

உடனே கோபம் கொண்ட ஈஸ்வரமூர்த்தி “ரேணுகா அவளுக்கு இப்படியே செல்லம் கொடுத்து கொடுத்து தான் அவளை இப்படி உருப்படாம ஆக்கி வச்சிருக்க, வயசுப்பையன் அவனே அவன் சாப்பிட்ட தட்டை கழுவும் போது இவளுக்கு என்ன வந்தது” என்று கத்தினார்.

“ஏன் என் மக கஷ்டப்பட்டு வேலைக்கு போறா அவளுக்கு நான் செய்யாம யாரு செய்யுவா” என்ற ரேணுகா அவர் செயலில் பிடிவாதமாக நிற்க,

“அவளோட வாழ்க்கை கெட்டுப்போனதுக்கு காரணம் நீ தான், நீ மட்டும் தான், அதை மட்டும் நல்லா புரிஞ்சுக்கோ” என்றவர் இரு பூரிகளோடு காலை உணவை முடித்துக்கொண்டு வெளியேறினார்.

“அவரு கெடக்காரு நீ கிளம்புடா தங்கம், பாத்துப் போ, வனிதா வருவாளா” என்றார்.

“இல்ல மா அவளுக்கு இன்னைக்கு அர்ஜெண்ட் வேலை இருக்காம் அவ சீக்கிரமே போயிருப்பா” என்றாள் நேத்ரா.

வனிதா அவள் கல்லூரித் தோழி, கல்லூரி முதல் வருடத்திலிருந்து அவள் நெருங்கிய தோழி இருவரும் வனிதாவின் ஸ்கூட்டியில் கல்லூரிக்கு ஒன்றாக சென்று திரும்புவார்கள்.

கல்லூரி முடித்த பின்பு இருவருக்கும் இரு வேறு கம்பெனிகளில் வேலை கிடைக்க, வனிதாவின் ஆபீஸ் நேத்ராவின் ஆபீஸை கடந்து செல்லும் வழியில் இருப்பதால் நேத்ராவை இறக்கி விட்டே அவள் அலுவளுக்கு செல்வாள் வனிதா.

“அப்படியா அப்போ நீ எப்படி போவ?” என்ற ரேணுகாவிடம்

அவள் அண்ணன் நந்தனை கண் காட்டினாள் நேத்ரா.

“இரு இரு நான் பேசுறேன்” என்ற கஞ்சாடை காட்டிய ரேணுகா,

“நந்தா போகும் போது நேத்ராவ இறக்கிவிட்டுட்டு போயிடு பா” என்றார்.

  “என்ன… அதெல்லாம் முடியாது, இன்னைக்கு எனக்கே லேட் ஆயிடுச்சு ஒரு குட்டி பிசாசால” என்றான் அவன் தோள் பையை மாட்டிக்கொண்டே,

“டேய் டேய் பாவம் டா அவ, அவளுக்கும் இன்னைக்கு மீட்டிங் இருக்காம்” என்ற ரேணுகாவிடம்,

“அவளுக்கு மீட்டிங் நா அவ தான் வேகமா எந்திருச்சு கிளம்பணும், அவளுக்கு பதிலா எல்லா வேலையையும் நீ செய்யுற மாதிரி, மீட்டிங்கும் அவளுக்கு பதிலா நீ அட்டெண்ட் பண்ண முடியாதில்லை” என்று பொரிந்தான்.

முகத்தை சுருக்கிய ரேணுகாவிடம் “சரி சரி மூஞ்சை தூக்காத அவளை வர சொல்லு, கேப்பும் போயிடுச்சு நான் எப்படியும் பைக் ல தான் போகணும் அப்படியே அவளையும் இறக்கி விட்டுடறேன், சீக்கிரம் வர சொல்லு” என்றவன் வெளியே நடந்தான்.

நேத்ராவை அவள் வளாகத்தில் இறக்கி விட்டவன் “பாத்து போ” என்று விட்டு கிளம்பிவிட்டான்.

உள்ளே சென்ற நேத்ரா நேராக அவள் இருக்கைக்கு சென்றாள். அங்கே அவள் டீமில் யாரும் இல்லாமல் இருக்கவும்,

“ஐயோ எல்லாரும் மீட்டிங் போயிட்டாங்க போலவே, இப்போ நாம போறதா வேண்டாமா, போனாலும் திட்டு விழும் போகலைன்னாலும் திட்டுவிழும், போனா ஒரு அட்டனன்ஸ் ஆவது கிடைக்கும்” என்று நினைத்தவள் தயங்கித் தயங்கி கான்பெரென்ஸ் அறையினுள் நுழைந்தாள். 

அவள் “எக்ஸ் கியூஸ் மீ” என்று உள்ளே நுழைவதற்கும்

“ஓகே வீ வில் எண்ட் ஆப் திஸ் செஸன்” என்று காண்டீபன் முடிப்பதற்கும் சரியாக இருந்தது.

நாற்பது வயது மதிக்கத்தக்க காண்டீபன் “வாங்க மேடம், என்று மணிக்கட்டைத் திருப்பி மணி பார்த்தவர், சரியா மீட்டிங் முடியிற நேரத்துக்கு வந்திருக்கீங்களே! என்ன எனி மோர் கொஸ்டின்ஸ்? அப்படின்னு கேக்க வந்தீங்களா” என்றார் கடித்த பற்களினூடே,

அவர் கேட்டதில் க்ளுக் என வாய்பொத்தி சிரித்தவளை “ஸ்டாப் திஸ் நான்சென்ஸ், கம் டு மை ரூம்” என்றவர் கான்பெரென்ஸ் அறையை விட்டு வெளியேறினார்.

காண்டீபன் வெளியே சென்றவுடன் அவள் டீம் மேட்ஸ் அனைவரும் நேத்ராவை பாவமாக பார்த்துக் கொண்டு வெளியே சென்றனர்.

“ம்ஹ்ம் இப்போ இந்த காண்டாமிருகத்த போயி பாக்கணுமா, ஹ்ம்ம் சரி போயி பாப்போம்” என்றவள் ஆழ மூச்செடுத்து ஆள்காட்டி விரலை மடக்கி அறைக்கதவைத் தட்டினாள்.

“எஸ் கம் இன்…” என்ற பதிலில் உள்ளே சென்றவளை மேலிருந்து கீழ் அளவெடுத்தார் காண்டீபன்.

“அது வந்து ஸாரி சார்….” என்றவளை கை உயர்த்தி தடுத்தவர்,

“உன்னோட சாரிய நீயே வச்சுக்கோ, எனக்கு அதுக்கு பதிலா ஒரு காபி போட்டு கொடு” என்ற காண்டீபனை வேற்றுகிரகவாசியை போல் பார்த்து வைத்தாள் நேத்ரா.

சரி எப்படியோ விட்டா போதும் என்றவள் காப்பி போடும் இடத்தைத் தேடினாள்.

அவள் தேடுவதை உணர்ந்த காண்டீபன் “அங்க உள்ள ஒரு ரூம் இருக்குல்ல அங்க இருக்கு” என்றார்.

சரி என்று தலையாட்டி உள்ளே சென்றவள் காபி போடுவதற்கு பாத்திரத்தை எடுத்தாள் “எப்படி காப்பி போடணுன்னே தெரியாதே, சரி நாமளா குடிக்க போறோம், எப்படியோ போடுவோம் குடுச்சுட்டு சாகட்டும்” என்றவள் அவள் கைவண்ணத்தை ஆரம்பித்தாள்.

சில நொடிகளில் தன்னருகில் அரவம் உணர்ந்தவள் திடுக்கிட்டுத் திரும்பவும் “ஹேய் ஹேய் நான் தான் பயப்படாத” என்ற காண்டீபன்

நேத்ராவை கூர்ந்து பார்த்துக்கொண்டு “இந்த சுடிதார் உனக்கு ரொம்ப அழகா இருக்கு” என்றார்.

முகத்தை சுருக்கியவள் “தேங்க்ஸ் சார்” என்றுவிட்டு வேகமாக காப்பியை கலங்கினாள்.

“இரு இரு என்ன அவசரம் பொறுமையா, கையில பட்டுட போகுது” என்றவர்,

“நேத்ரா நீயும் எத்தனை தடவை தான் லேட்டா வருவ நானும் உன்னை எத்தனை தடவை தான் எக்ஸ்கியூஸ் பண்றது, அதுனால கொஞ்சம் என்னைய அட்ஜெஸ் பண்ணேனா நானும் நீ பண்ற தப்பெல்லாம் கண்டுக்க மாட்டேன் என்ன சொல்ற” என்றவர் நேத்ராவின் கை பிடித்திருந்தார்.

“ம்ம்… என்ன சொல்றேனா, கொஞ்சம் கையை எடுங்க சார் சொல்றேன்” என்றவள் காண்டீபன் கையை விட்டதும் சப்பென்று அவர் கன்னத்தில் அறைந்திருந்தாள்.

அவள் அறைந்தவுடன் “நேத்ரா…” என்று கத்திய காண்டீபனை,

“சீ… நீயெல்லாம் ஒரு மனுஷன், பொண்ணுங்க தப்பு பண்ணா… உடனே அவங்கள உங்க ஆசைக்கு அடிபணிய வைப்பீங்க, இதுவே உன்னோட பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா, உங்கள மாதிரி ஆளுகளெல்லாம் திருத்தவே முடியாது” என்றவள் வேகமாக வெளியேறினாள்.

மூச்சுவாங்க அவளிடத்தில் அமர்ந்தவள் ரிஸிங்நேஷன் லெட்டருடன் திரும்பி வந்தாள்.

“இந்தாங்க நீங்களும் உங்க வேலையும்” என்று லெட்டரை காண்டீபன் முகத்தில் விசிறியடித்தாள்.

“நேத்ரா இதுக்கான கான்சீக்குவேன்ச நீங்க கண்டிப்பா பேஸ் பண்ணி தான் ஆகணும்” என்று கத்தினார்.    

“கண்டிப்பா சார் உங்களை மாதிரி ஆளுங்கள பேஸ் பண்றதுக்கு, அது எவ்வளவோ பரவாயில்லை” என்றவளிடம்

“பொழைக்க தெரியாத பொண்ணா இருக்கியே மா…” என்று தொடங்கியவரை கை உயர்த்தி வேகமாக தடுத்தவள்,  

அதே வேகத்தில் அந்த இடத்தை விட்டு வெளியேறியிருந்தாள்.

அவள் சென்றவுடன் தன் இருக்கையில் அமர்ந்த காண்டீபன் இதெல்லாம் சகஜம் என்பது போல் அவர் வேலையைத் தொடர்ந்தார்.

நேத்ரா, காண்டீபனின் அனுபவத்தில் எந்த எண்ணிக்கையில் இருப்பவளோ! அவர் மட்டுமே அறிவார்.   

இந்த நாவலை ஆடியோ வடிவில் நீங்கள் கேட்க விரும்பினால் உங்களுக்காக லிங்க் https://www.youtube.com/@SofiRanjithNovels    

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்