726 views

திருமணமான ஒரே மாதத்தில், சென்னை வாசிகளாக மாறி விடடனர் அந்த தம்பதியினர். சென்னை வாழ்க்கை மிகச்சிரமமாக இருந்தாலும், அக்கம் பக்கத்தினர் உதவியுடன், நன்றாகவே பழக ஆரம்பித்து இருந்தாள் வருணிகா. ஹரிஹரன் காலையில் கிளம்பிச் சென்றால், மாலை தாமதமாக தான் வருவான்.

அவனுக்காக சமைத்துக் கொடுத்து, வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டும், அந்த ஊரை கற்றுக் கொள்வதிலும், வருணிகாவின் பொழுது சென்றது.

முதன் முறையாக பெற்றோர்கள் கிளம்பிச் சென்றதும், ஆசையாக அவனுக்காக சமைத்து வைத்தாள். அதைப் பார்த்தவன் புருவம் சுருக்கினான்.

“நீ செஞ்சியா?”

“ஆமா. சாப்பிடுங்களேன். உங்களுக்கு ஒன்னும் ஆகலனா தான் நான் சாப்பிடனும்”

“உயிர காப்பாத்து மகமாயி” என்று பெரிய கும்பிடு போட்டு விட்டு வந்து அமர்ந்தான்.

அருகே அமர்ந்து அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். வாயில் வைத்தவன் முகம் மாறியது.

“எப்படி இருக்கு?”

அவள் ஆர்வமாக கேட்க, நிமிர்ந்து பார்த்தவன் முகத்தில் ஏதோ இருந்தது.

“நல்லா இல்லையா?” என்று சோர்வாக கேட்டாள்.

கண்கலங்கி விடும் போல் இருந்தது. ஆசையாக சமைத்தது அவனுக்கு பிடிக்கவில்லை என்பதே வருத்தமாக இருந்தது.

“நல்லா இருக்கு” என்றதும், பளிச்சென முகம் மலர்ந்தாள்.

“தேங்க்ஸ்”

“உனக்கு சமைக்கவே தெரியாதுனு சொன்ன?”

“அது சும்மா.. ஒரு சர்ப்பரைஸா உங்களுக்கு சமைச்சு கொடுக்கனும்னு”

“பொய் சொன்னியா?”

ஒரு மாதிரியான குரலில் அவன் கேட்டதை அவள் கவனிக்கவே இல்லை.

“ஆமா.. தெரியும்னு சொல்லிட்டா சர்ப்ரைஸ் கொடுக்க முடியாதுல?”

“அப்போ அன்னைக்கு லட்டு கூட நீ தான் பண்ணியா?”

“ஆமா”

“ஏன் அப்பவும் பொய் சொன்ன? நான் தான் பண்ணேன்னு சொல்ல வேண்டியது தான?”

“அது விளையாட்டுக்கு பண்ணேன்பா. நீங்க சாப்பிட்டு பார்த்து கண்டுபிடிக்க மாட்டீங்கனு, கடையில வாங்குனதா சொல்லிட்டேன். பட் இனி அடிக்கடி வீட்டுல லட்டு பண்ணித்தர்ரேன். ஓகே?”

அவளை பொருள் விளங்காத பார்வை பார்த்து விட்டு, சாப்பிட்டு விட்டுக் கிளம்பி விட்டான்.

அதன் பிறகு தினமும் அவள் விதவிதமாக சமைத்துக் கொடுத்தாள். எல்லாமே அவனுக்கு பிடித்த உணவுகள். சாப்பிடுவான். ஆனால், வாயைத்திறந்து பாராட்ட மாட்டான். அவள் எதையாவது கேட்டால், புரியாத பார்வையோடு, “நல்லா இருக்கு” என்று நிறுத்தி விடுவான்.

இரண்டு வாரங்கள் இப்படியே ஓடி இருந்தது. ஹரிஹரனுக்கு வீட்டில் இருக்க நேரமில்லை. வீட்டில் இருந்தாலும், அவன் கைபேசியை பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தால், அவள் வாய் ஓயாமல் எதையாவது பேசிக் கொண்டிருப்பாள்.

கேட்டுக் கொண்டிருப்பதற்கு சான்றாக, “ம்ம்” கொட்டுவான். எதையும் பேச மாட்டான்.

இரவின் நெருக்கத்தை தவிர, அவன் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருப்பதை, வருணிகா உணரவே இல்லை.

சென்னை வந்து ஒன்றரை மாதம் கடந்து விட, அன்று வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள் வருணிகா.

பாடல் ஒன்று வீட்டை நிறைக்க, தானும் பாடியபடி வேலை பார்த்துக் கொண்டிருக்க, கைபேசி ஒலித்தது.

எடுத்துப் பார்க்க மேனகாவின் பெயர்.

“ஹலோ அண்ணி”

“என்ன பண்ணுற வருணி?”

“க்ளீனிங் அண்ணி. நீங்க என்ன பண்ணுறீங்க?”

“நலம் விசாரிப்பு அப்புறம் இருக்கட்டும். இன்னைக்கு தேதி என்ன தெரியுமா?”

“தேதி..” என்று நாட்காட்டியை தேடிப்போய் பார்த்தாள்.

“ஆறாம் தேதி அண்ணி”

“அது தெரியும். நீ நாள கணக்கு வச்சுருக்கியா?”

“எதுக்கு அண்ணி?”

வருணிகா புரியாமல் கேட்க, மேனகா தலையிலடித்துக் கொண்டு விளக்கினாள்.

அப்போது தான் விசயம் தெரிய, அவளது மணி வயிற்றை மெதுவாக தடவிப்பார்த்தாள்.

“அண்ணி…”

“பக்கத்துல மெடிக்கல் இருந்தா கிட் வாங்கி செக் பண்ணிட்டு சொல்லு. என்ன?”

“சரிங்கண்ணி”

கைபேசியை வைத்தவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

வேலைகளை அவசரமாக முடித்து விட்டு, வேகமாக அருகில் இருந்த கடையில் கிட் வாங்கிக் கொண்டு வந்தாள்.

அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல், கூகுள் ஆண்டவரிடம் சரணடைந்தாள். அதில் இருந்தவைகளை தெளிவாகப் படித்து அறிந்து கொண்டாள்.

காலை வரை காத்திருக்க வேண்டும். மனம் நிலைகொள்ளாமல் பரபரத்தது. ஹரிஹரனிடம் சொல்வதா? வேண்டாமா? என்று ஒரு பட்டி மன்றத்தை நடத்தி முடித்து விட்டாள்.

பிறகு, “கண்ஃபார்ம் ஆனதும் சொல்லுவோம்” என்ற முடிவுக்கு வந்தாள்.

மாலை, வந்தவன் முகம் ஏதோ தீவிர சிந்தனையில் இருக்க, வருணிகாவை அவன் கவனிக்கவே இல்லை.

வாயைத்திறந்தால் உளறி விடுவோம் என்று வருணிகாவும் பெரிதாக பேசவில்லை. இரவு சாப்பிட்டு விட்டு வேகமாக படுத்துக் கண்ணை மூடிக் கொண்டாள்.

மறுநாள் வேகமாக எழுந்து சோதித்தவளுக்கு, இதயம் படபடவென துடித்தது. இரண்டு கோடுகளோடு அவளது தாய்மையை உறுதிபடுத்திய அந்த கிட்டை, கெட்டியாகப்பிடித்துக் கொண்டாள். சந்தோசத்தில் கண்கள் கலங்கி விட்டது.

வயிற்றை மெல்ல தடவிக் கொண்டவள், “வெல்கம் செல்லம்” என்று வரவேற்றாள்.

கணவனிடம் சொல்ல வேண்டும் என்று வேகமாக ஓடி வந்தாள். தூங்கிக் கொண்டிருந்தவனை மெதுவாக எழுப்பினாள்.

“எந்திரிங்க ஹரி”

“ப்ச் என்ன?”

“இத பாருங்க”

அவன் கையில் திணிக்க, முழித்தவனுக்கு முதலில் எதுவும் விளங்கவில்லை.

“என்ன இது?”

அதிகாலை, இருட்டு விலகிக் கொண்டிருந்தாலும், வீட்டில் அரைகுறை வெளிச்சம் தான் இருந்தது. உடனே விளக்கைப்போட, கண்ணை கசக்கி விட்டு பார்த்தான்.

அர்த்தம் விளங்கியதும் அதிர்ந்து போய் நிமிர்ந்தான்.

“இது..”

“எஸ்.. கன்க்ராட்ஸ்” என்றவளுக்கு கண்ணீர் வர, அவன் மீண்டும் கையிலிருப்பதை பார்த்தான்.

‘இது தான் அர்த்தமா?’ என்று நினைத்தவனுக்கு முகம் இறுகியது.

“அம்மா அத்த கிட்ட சொல்லிடுறீங்களா? எனக்கு வெட்கமா இருக்கு இத சொல்ல”

அவள் வெட்கத்தோடு கேட்க, அவன் அவளை ஒரு மாதிரியாக பார்த்தான்.

“என்ன?”

“ம்ஹூம். சொல்லுறேன்”

“ஓகே” என்றவள் வேகமாக அருகே வந்து, அவனது கன்னத்தில் இதழ் பதித்து விட்டு விலகி ஓடினாள்.

அந்த கோடுகளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு எதெதோ தோன்றியது.

பெரு மூச்சோடு எழுந்து குளித்துக் கிளம்பினான். பிறகு வீட்டில் எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்று நினைவு வர, அழைத்துப் பேசினான்.

காலை சாப்பாடை சாப்பிட்டு விட்டு அவன் கிளம்ப, “ஈவ்னிங் சீக்கிரம் வாங்க. ஹாஸ்பிடல் போய் செக் பண்ணிக்கலாம்” என்றாள் வருணிகா.

தலையாட்டி வைத்தவன், வேகமாக அலுவலகம் கிளம்பினான். எதையோ தேடி…

விசயம் கேள்விப்பட்டு அனுராதாவிற்கு பேரானந்தம். உடனே கிளம்பி வருவதாக கூறினார். தெய்வாவும் மேனகா வைரவனோடு வருவதாகக் கூறினார்.

வயிற்றில், இன்னும் உரு பெறாத குழந்தையோடு, அப்போதே பேச ஆரம்பித்து விட்டாள் வருணிகா.

சந்தோசமாக அந்த நாளை கழித்துக் கொண்டு இருக்க, ஹரிஹரன் மாலை வீடு திரும்பவில்லை. அவனுக்காக அவள் காத்துக் கொண்டே இருந்தாள். இரவு பத்து மணிக்கு அவளுக்கு குறுஞ்செய்தி வந்தது. இரவு வீடு வர முடியாது என்று.

‘ஏன்? என்னவானது?’ கேட்டாள். பதில் தான் வரவேயில்லை.

“எதாவது அவசர வேலை இருக்குமோ? அதுவும் இன்னைக்கா வரனும்?”

கண்கலங்கி அழுகை வந்தது. எல்லாவற்றுக்கும் அழுபவள் அல்ல அவள். ஆனால் இப்போது வந்தது.

தாங்க முடியாமல் அழுது கொண்டே, மீண்டும் அவளது துணையான குழந்தையோடு பேசிக் கொண்டிருந்தாள்.

அடுத்த நாள் காலை நான்கு மணிக்கு தான் வீட்டுக்கு வந்தான் ஹரிஹரன். அவன் வரும் போது வருணிகா நன்றாக தூங்கிக் கொண்டிருக்க, அவளை எழுப்பவில்லை.

அடுத்த இரண்டு மணி நேரத்தில், இரண்டு வீட்டின் பெற்றோர்களும் வந்து விட்டனர்.

“சந்தோசம் ஹரி” என்று மகனை அணைத்து விடுத்த ஏகாம்பரத்தை பார்த்து, வலுக்கட்டாயமாக புன்னகைத்து வைத்தான்.

எல்லோரும் வாழ்த்தைச் சொல்லி விட்டு பேசிக் கொண்டிருக்க, வருணிகா தாமதமாக தான் எழுந்தாள். இரவு அழுது கொண்டே தாமதமாக தூங்கியதன் விளைவு, கண்கள் எரிந்தது.

கண்ணைத்தேய்த்துக் கொண்டே வெளியே வந்தவள், முன்னால் வந்த தெய்வாவை ஆச்சரியமாக பார்த்தாள்.

“தூக்கம் போயிடுச்சா?”

“சித்தி”

வேகமாக வந்து அவரை அணைத்துக் கொண்டவளுக்கு கண் கலங்கியது. அதை அவசரமாக உள்ளே இழுத்துக் கொண்டு புன்னகைத்தாள்.

“இனி நீ சின்ன பிள்ளை இல்லடா. பொறுப்பா இருக்கனும் என்ன?” என்று தலையில் கை வைத்து ஆசிர்வதிக்க, தலையாட்டினாள்.

“வாழ்த்துக்கள் வருணி” என்று மேனகா வந்து அணைத்துக் கொள்ள, “தாங்க்யூ அண்ணி” என்றாள்.

“போய் குளிச்சுட்டு வா. சாப்பிட்டு ஹாஸ்பிடல் போகலாம்”

குளித்து விட்டு வரும் போது, அனுராதா, வைரவன், ஏகாம்பரம் மூவரும் கையில் பொருட்களோடு உள்ளே நுழைந்தனர். காலையிலேயே வெளியே சென்று, அவளுக்குத்தேவையானதை வாங்கி வந்து இருந்தனர்.

அனுராதாவும் மருமகளை அணைத்து ஆசிர்வதித்தார். வைரவனுக்கு கண்கள் பனித்தது. அவரது மகள் இப்போது தாயாகிறாள். இதை விட ஒரு அற்புதமான தருணம் வாழ்வில் கிடைத்து விடுமா என்ன?

“அப்பா” என்று அருகே வந்தவளின் உச்சி முகர்ந்தவர், “சந்தோசமா இருக்குடா” என்றார்.

எல்லோரும் இருந்தனர். இருக்க வேண்டியவனை தவிர. காலையிலேயே வேலை இருக்கிறது என்று கிளம்பி இருந்தான்.

யாரும் தடுக்கவும் இல்லை. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று, அவனும் இருக்க நினைக்கவில்லை.

வருணிகாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றனர். மருத்துவரும் உறுதி செய்ததும், எல்லோருக்கும் திருப்தியாக இருந்தது. ஐம்பது நாட்கள் மட்டுமே ஆன கருவை நினைத்து வருணிகா பூரித்தாள். ஆனால்…

அவளது மனம் மட்டும் கணவனை தான் தேடிக் கொண்டிருந்தது. காலையில் அவன் கிளம்பிச் சென்றதாக அனுராதா தான் சொன்னார்.

‘இரவு எப்போது வீட்டுக்கு வந்தான்? ஏன் என்னை எழுப்பவில்லை? காலையில் கிளம்பும் போது கூட சொல்லவில்லையே? அப்படி என்ன வேலை? இந்த சந்தோசமான நேரத்தில்?’

கேள்விகள் அவள் மனதில் அடுக்கடுக்காக எழுந்த போதும், எதையும் அவனிடம் கேட்க நேரம் அமையவில்லை. அவன் கைபேசி அணைந்து கிடந்தது.

அன்று இரவு தாமதமாகவே வந்தான். வருணிகா மாத்திரை போட்டு தூங்கி இருக்க , அனுராதா தான் பார்த்தார்.

“ஏன் லேட்டு?”

“வேலைமா”

“தினமும் இப்படித் தான் வர்ரியா?”

“இல்லமா.. இப்போ தான் வேலை. நீங்க எல்லாம் இருக்கீங்கனு வேலைய முடிச்சுட்டு வர்ரேன்”

“சரி சாப்பிட்டியா?”

“ம்ம்”

“போய் தூங்கு”

அவர் சென்றதும் அறைக்குள் வந்தவன், மனைவியை ஒரு பார்வை பார்த்து விட்டு, உடைமாற்றி அமைதியாகப் படுத்துத் தூங்கி விட்டான்.

அடுத்த நாள் காலை, அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தான் எழுந்தாள் வருணிகா.

அவள் வந்து அமர்ந்ததுமே, “மாப்பிள்ளை.. நாங்க வருணிய கொஞ்ச நாள் ஊருக்கு கூட்டிட்டுப்போறோமே.” என்று தெய்வா கேட்டார்.

வருணிகா தன் கணவனைப் பார்த்தாள்.

‘என்ன சொல்வான்? தன்னை அனுப்புவானா? இல்லை மறுப்பானா?’

அவளுக்கு கணவனோடு இருக்கவும் ஆசை தான். அதே நேரம் பிறந்த வீட்டுக்குப்போகவும் ஆசை ஒரு ஓரத்தில் இருந்தது.

“சாரதாவுக்கு இன்னும் ரெண்டு வாரத்துக்குள்ள வளைகாப்பு பண்ணிடலாம்னு இருக்கோம். ஏழாவது மாசம் ஆரம்பிச்சுடுச்சே. அது வரை வருணி தேனியில இருக்கட்டும். அதுக்கப்புறம் இவன் வந்து கூட்டிட்டு வரட்டும்” என்று அனுராதா கூற, “ம்ம்” என்று ஹரிஹரன் தலையை மட்டுமே அசைத்தான்.

இதைக்கேட்டு சந்தோசப்பட முடியாமல், வருணிகாவிற்கு சம்பந்தமில்லாமல் கண்கலங்கியது.

‘அப்போ நான் இங்க இருக்க வேணாமா? என் கூட இருக்கனும்னு இவருக்கு தோணலையா?’ என்று உருகிப்போய் கணவனை பார்த்தாள்.

“இன்னும் நாலு நாள்ல பெங்களூர் போக வேண்டி இருக்கு. ஒரு வாரம் ஆகும் வர்ரதுக்கு. இவ இங்க தனியா இருக்கதுக்கு உங்க கூட வரட்டும். வளைகாப்பு முடிஞ்சதும் இங்க கூட்டிட்டு வந்துடுறேன்”

கடைசியாக அவன் பேசி விட, மற்றவர்களுக்கு திருப்தியாக தான் இருந்தது. வருணிகாவிற்கு தான் அது பிடிக்கவில்லை. அவளுக்கு கணவன் தான் வேண்டும். அவன் அருகாமை தான் வேண்டும். ஆனால் பெரியவர்கள் ஆசையையும் குறை சொல்ல முடியாமல் அறைப் பக்கம் சென்றாள்‌.

சாப்பிட்டு விட்டு தன் பையை எடுக்க ஹரிஹரன் உள்ளே வர முன்னால் வந்து நின்றாள்.

“என்ன?” என்பது போல் பார்க்க, “நான் இல்லாம இருந்துடுவீங்களா? சமைச்சு சாப்பிடனுமே.. வெளிய சாப்பிட முடியுமா?” என்று கேள்விகளை அடுக்கினாள்.

முகத்தில் பரிதவிப்பு. தன்னை அனுப்ப விருப்பமில்லை என்று சொல்லிவிட மாட்டானா என்ற எதிர் பார்ப்பு. விட்டு விட்டுப் போகாதே என்று உள்ளுணர்வு அழுத்திக் கூறியது. அது கொடுத்த அழுத்தத்தில் குரல் கூட கரகரத்தது.

“இவ்வளவு நாளா தனியா தான இருந்தேன்?” என்று கேட்டவன், அவளது முகத்தைப் பார்க்காமல் கிளம்பி விட்டான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்