Loading

 

 

வருணிகா ஒன்றும் ஆச்சரியப்படவில்லை. இங்கு வரும் போதே, ஹரிஹரனுக்கு கம்பெனி கொடுத்த கார் நிற்பதை பார்த்து விட்டாள்.

மகனை பார்த்து அதிர்ந்தது என்னவோ அனுராதா தான். ஏதோ கோபமாக கேட்க வந்தவர், உடனே வாயை மூடி திரும்பிக் கொண்டார்.‌ மகனிடம் பேசப் பிடிக்கவில்லை.

“உன் கிட்ட தான் கேட்டேன். பதில் சொல்லு”

“நான் ஏன் சொல்லனும்? உங்களுக்கு தான் நான் சான்ஸ் கொடுத்தேனே. என் கிட்ட‌ என்ன நடந்துச்சுனு கேட்டா, நான் சொல்லுறேன்னு. தேவையில்லனு சொன்னீங்க? இப்போ எதுக்கு உங்களுக்கு பதில்? அப்படியே பதில் வேணும்னாலும், உங்க உண்மை விளம்பி சந்திரா கிட்டப் போய் கேளுங்க”

“அதான.. இவ கிட்ட ஏன் கேட்குற? போய் அவள அதட்டிக் கேளு. வந்துட்டான். நீ எந்திரி வருணி. நைட் ஊருக்கு போகனும். இப்ப போய் கொஞ்ச நேரம் தூங்குவோம்”

“ம்மா.. நான் அவ கிட்ட பேசனும்”

“எனக்கு உன் கூட‌ பேச விருப்பம் இல்ல”

கட்டுப்பாட்டை மீறி கத்தினாள்.

“வருணிகா”

“சட் அப். நானும் பொறுமையா இருக்கனும்னு எவ்வளவோ முயற்சி பண்ணுறேன். விட மாட்டியா நீ? நீ பண்ண துரோகம் எல்லாம் தெரிஞ்சப்புறமும், உன்னை உயிரோட விட்டு வச்சுருக்கேன்னு சந்தோசப் படு. எத்தனை நிமிஷம் ஆகிடும், தூங்கும் போது உன் தலையில கல்லத்தூக்கிப்போட? உன் மேல பாசத்த வச்சுத் தொலைச்சுட்டேன். உன்னை போய் லவ் பண்ணித் தொலைச்சுட்டேன். அது தான் உன்னை மொத்தமா எதுவும் செய்ய விடாம தடுக்குது. ச்சே”

வருணிகா கத்த, அனுராதாவும் ஹரிஹரனும் அதிர்ந்து நின்றனர்.

“என்னடா பார்க்குற? எப்பவும் பொறுமையாவே போவா இவனு நினைப்பா? சும்மா சீண்டிக்கிட்டே இருக்க. அதான் உன் உறவே வேணாம்னு டைவர்ஸ் தர்ரேன்னு சொல்லிட்டேனே. அப்புறமும் ஏன்டா என் உயிர வாங்குற? என்னை பார்த்தா உனக்கு எப்படித்தெரியுது? எனக்கு நீ செஞ்ச துரோகத்த… அத்தைக்கு மாமா செஞ்சு இருந்தா, சாரதாவுக்கு நகுல் அண்ணன் செஞ்சு இருந்தா, உனக்கு புரிஞ்சுருக்கும். பொண்டாட்டி தான.. அடுத்த வீட்டு பொண்ணு தான.. அவளுக்கு என்ன அநியாயம் வேணும்னாலும் பண்ணலாம். யார் கேட்பானு நினைப்பு..

ஊர் பக்கம் வந்துடாத. என் சொந்த பந்தம் எல்லாம் இதைக் கேட்டுச்சு.. அங்கயே உன்னை பொலி போட்டுரும். வந்துட்டான் கேள்வி கேட்டுக்கிட்டு.. போடா.. போ.. போய் அந்த சந்திராவ கட்டிக்கிட்டு அழு. ஆனா அதுவும் நடக்காது. ஏன்னா.. அவ காலேஜ்ல லவ் பண்ணது ஹரிஹரன்ன இல்ல.. சுதாகரன்ன.. அந்த கரன் நீ இல்ல. அவ உன்னை கட்டிக்கவும் மாட்டா. அவ கை விட்டுட்டானு, திரும்பி தெரியாம கூட என் பக்கம் வந்துடாத.. கொலையே பண்ணுவேன்”

மொத்த கோபத்தையும் அருவியாய் கொட்டி விட்டு, அவனை வெறுப்போடு பார்த்து விட்டு திரும்பி நடந்தாள். அனுராதா அவள் பேச்சிலும் கோபத்திலும் அதிர்ந்து போனார். சற்று முன், அமைதியாக தனக்கு விசயத்தை விளக்கியவள் இவள் தானா? என்று ஆச்சரியமாக இருந்தது. மகனிடம் நன்றாக பேசி விட்டு, மணலில் கால் புதைய நடந்து கொண்டிருந்தவளை பார்த்தார். பிறகு, மகனை வெறுப்போடு பார்த்து விட்டு, மருமகளை நோக்கி விரைந்தார்.

ஆட்டோ பிடித்து அவள் அமர, அனுராதாவும் ஏறிக் கொண்டார். அவர் கையைப்பிடித்துக் கொண்டவள், “சாரி அத்த. அவர திட்டனும்னு உங்களயும் சாரதாவையும் இழுத்துட்டேன் ரியலி சாரி” என்று மன்னிப்பு கேட்டாள்.

“விடு” என்று முடித்து விட்டார்.

வீட்டுக்கு வந்ததும், வருணிகா ஓய்வெடுக்கச் சென்று விட்டாள்.

மற்றவர்கள், அங்கிருந்த வருணிகாவின் உடைகளை எடுத்து மூட்டை கட்டி விட்டனர்.

மாலை அவள் எழும் போதே, எல்லாம் தயாராக இருந்தது. வருணிகாவையும் கிளப்பி விட்டார்கள்.

“நாம கிளம்பலாம். இப்பவே கிளம்பினா தான், பஸ் வர்ர நேரத்துக்கு போய் சேர முடியும். ட்ராஃபிக் ஆகிடும்”

வருணிகா உடனே கிளம்பி வந்து இதைச் சொல்ல, எல்லோருமே கிளம்பி விட்டனர்.

உண்மையில் போக்குவரத்து நெரிசலில் நீந்தி சென்று சேரும் போது, அவள் சொன்னது போல் சில மணிநேரங்களே கடந்து இருந்தது.

இரவு உணவை ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, பேருந்தில் ஏறிக் கிளம்பியும் விட்டனர். யாரும் ஹரிஹரனிடம் விசயத்தைச் சொல்லவில்லை.

இரவு வீட்டுக்கு வந்த ஹரிஹரன், வீடு பூட்டி இருப்பதை பார்த்து விட்டு, நொந்து போய் வாசலில் அமர்ந்து விட்டான். அவன் நிலை மிக மோசமாக இருந்தது.

வருணிகா திட்டி விட்டுச் சென்ற பின்பு, சந்திராவிடம் தான் சென்றான். உண்மையை அறிய…

வந்தவனை சந்திரா சாதாரணமாக பார்த்து வைத்தாள். எப்போதும் அவனை பார்த்ததும் மலரும் முகம், இன்று தொலைந்து இருந்தது.

“என்ன வேணும்?”

“உண்மை வேணும்.”

“என்ன உண்மை?”

“எதுக்காக இதெல்லாம் பண்ண?”

“நான் என்ன பண்ணேன் கரன்?”

அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.

“எந்த கரன்? சுதாகரன்னா?”

ஒரு நொடிக்கும் குறைவாக அதிர்ந்தவள், உடனே முகத்தை மாற்றிக் கொண்டாள்.

“யாரு அது சுதாகரன்?” என்று ஒன்றும் தெரியாதவள் போல் கேட்டாள்.

அந்த நடிப்பு, இப்போது கூட பார்ப்பதற்கு உண்மை போல் இருந்தது. இதை அறியாமல், அவளது நடிப்பில் ஏமாந்து நிற்பது அவன் மடத்தனம் அல்லவா? மனம் கசந்தது.

“உன்னோட காதலன்”

“அய்யோ.. அப்படி யாருமே இல்ல”

“வருணிகா சொன்னா..”

“ப்ச்ச்.. அவள… பார்த்தாலே கொல்லனும் போல இருக்கு ச்சை.” என்று முதன் முறையாக தன் சுயரூபத்தை அவனிடம் காட்டினாள்.

ஹரிஹரன் அசையாமல் அவளை வெறித்து பார்த்தான்.

“என்ன? இதுக்கு மேல உன் கிட்ட நடிச்சு வேஸ்ட்.. ஆமா.. என் லவ்வர் நீ இல்ல. அன்னைக்கு பார்த்தியே டைரி.. இதுல இருந்த கவிதை எல்லாம், உனக்காக எழுதுனதும் இல்ல. பின்னாடி இருக்க கரன் ஒரே மாதிரி இருக்கதால, அதை யூஸ் பண்ணிக்கிட்டேன். இனி என்ன ப்ரயோஜனம்? அதான் மொத்தமா ஊத்தி மூடிட்டாளே”

“ஏன் பண்ண?”

“ஏன்னா? அத ஏன் உன் கிட்ட சொல்லனும்? அவ்வளவு நீ வொர்த் இல்ல. கிளம்பு”

“சந்திரா..”

“ஏய்.. என்ன? அதட்டுற வேலையை எல்லாம் போய் உன் பொண்டாட்டிக்கிட்ட வச்சுக்க.. என் கிட்ட காட்டுன பல்லை உடைச்சுடுவேன்.”

ஒரு நீண்ட பெரு மூச்சு விட்டு கோபத்தை அடக்கியவன், “உனக்கு எப்படி வருணிகா ப்ரக்ணண்ட்டா இருக்க விசயம் முன்னாடியே தெரிஞ்சது? அத மட்டும் சொல்லு போயிடுறேன்” என்று கேட்டான்.

“அவ போன ஹேக் பண்ணேன். பல மாசமா ட்ரை பண்ணி, அன்னைக்கு தான் ஹேக் பண்ண முடிஞ்சது. அவளோட அண்ணி அந்த மேனா மினுக்கி கூட பேசிட்டு இருந்தத கேட்டதும், அவ ப்ரக்ணண்ட்டா இருக்கானு தெரிஞ்சுடுச்சு. அவ்வளவு தான். ஆனா,r அதுக்கு அப்புறம் அவ போன்ல எதுவும் பெருசா பேசல. அதான் அந்த பெங்களூர் விசயம் அவளுக்கு தெரிஞ்சது, எனக்குத் தெரியாம போச்சு. அடுத்து எனக்கு வேலை இருந்ததுனு அவள கவனிக்காம விட்டுட்டேன். இல்லனா அவளுக்கு குழந்தை பிறக்குற‌ வரை, இந்த நாடகத்தை கண்ட்னியூ பண்ணலாம்னு நினைச்சேன். ச்சே.. மிஸ் ஆகிடுச்சு.

எவ்வளவு அழகா ப்ளான் போட்டேன். கல்யாணத்தப்போ அழுது வச்சு, உன்னை திசை திருப்பி, என் கிட்ட பேச வைக்க ட்ரை பண்ணேன். ரெண்டு வார்த்தை கூட பேசாம ஓடிட்ட. நடுராத்தி கால் பண்ணி, பர்ஸ்ட் நைட்ட கெடுத்து விடலாம்னு பார்த்தா, அதுவும் நடக்கல..

உனக்கு பிடிச்சது, பிடிக்காததுனு, எல்லாத்தையும் வருணிகா வாயால போட்டு வாங்கி.. உன் கண்ணு முன்னாடியே வருணிகா பேசுன மாதிரி, மெஸஜ் எல்லாம் அனுப்ப வச்சு.. அவ்வளவு வேலை பார்த்தேன். அவள பிரிஞ்சு, நீ மொத்தமா என் பக்கம் சாஞ்சதும், நானே போய் அவ கிட்ட இதெல்லாம் சொல்லி, ஜெயிச்சுட்டேன்டினு காட்டனும்னு இருந்தேன்.

எனக்கு முன்னாடி அவ விசயத்தை தெரிஞ்சுக்கிட்டு வந்து, என் ப்ளான் மொத்தத்தையும் சொதப்பிட்டா. விட மாட்டேன். விடவே மாட்டேன். அவள வாழ்க்கை முழுக்க அழ வச்சே தீருவேன்.”

வெறி வந்தவள் போல், தான் செய்த பாவங்களில் பாதியை சொல்லி புலம்பியவள், கடைசியாக கத்தினாள். ஹரிஹரன் அவளை பார்த்துக்கொண்டே அசையாமல் நின்று விட்டான்.

“என்ன முறைப்பு? கோபம் வருதா?”

“எனக்கு ‌உன் மேல கோபம் வரல. உன்னை நம்பின என் மேல தான் கோபம் வருது. ச்சே..” என்று தலையில் அடித்துக் கொண்டான்.

“அடிச்சுக்க… ஆனா.. வருத்தப்படாத. நீயும் சில கேடுகெட்ட ஆம்பளைங்க மாதிரி தான். பொண்டாட்டி பிள்ளைனு இருக்கும் போதே, இன்னொரு பொம்பளைங்க பின்னாடி மனச அலைய விடுற ஜென்மங்கள். நீ பெரிய யோக்கியம் எல்லாம் இல்ல. என்னை குறை சொல்ல உனக்குத் தகுதியும் இல்ல. இப்ப கிளம்பு. திரும்பி வாராத”

வாசல் கதவருகே சென்று நின்று விட்டாள். ஹரிஹரன் வேகமாக வெளியேறி விட்டான்.

மனம், முதலில் இருந்து நடந்தவைகள், வருணிகா சொன்னது, இப்போது சந்திரா சொன்னது எல்லாவற்றையும் ஒன்றோடு ஒன்று பொருத்திப் பார்த்தது. எல்லாமே, அவனது முட்டாள் தனத்திற்கு ஆதாரமாக தான் இருந்தது.

‘எப்படி ஏமாந்து இருக்கிறான்? அவனும் சபல புத்தி கொண்ட, சாதாரணத்தை விட கீழான ஆண்களை போல் நடந்து கொண்டானே? வருணிகா சொன்னது போல், இவன் செய்த வேலையை, அவனது தந்தையும் நகுலும் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்? அவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கிடைக்காமலா இருந்திருக்கும்? இப்போது தான், தவறு செய்வதற்கான வாய்ப்புகள் மலிவு விலையில் கிடைக்கிறதே. அதை எல்லாம் தாண்டித்தானே, அவர்கள் தன் மனைவி மக்கள் மட்டுமே முக்கியம் என்று வாழ்கின்றனர். அப்படி ஏன் அவன் நினைக்கவில்லை? சந்திரா முன்னால் காதலித்ததாகவே இருந்தாலும், தனக்கு திருமணமாகி விட்டது என்று அவளுக்கு புரிய வைத்து, தள்ளி நிறுத்தி இருக்க வேண்டாமா? இப்படி தடுமாறி விழுந்தது அவனது மடத்தனம் தானே..? அவனது புத்தியை செருப்பால் அடித்துக் கொண்டால் என்ன?’

யோசனைகளில் தன்னைத்தானே நிந்தித்து, தாமதமாக தான் வீட்டுக்கு வந்தான். கிளம்பும் முன் வருணிகாவை ஒரு முறை பார்க்கலாம் என்று நினைத்தான். அதற்கு வாய்ப்பளிக்காமல் கிளம்பி விட்டாளே..

_____

ஒரு மாதம் கடந்து இருந்தது.‌

ஏழாம் மாத முடிவில், வருணிகாவிற்கு வளைகாப்பு ஏற்பாடாகி இருந்தது.

சென்னையில் இருந்து வந்ததிலிருந்து, தேனியில் தான் இருந்தாள். வளைகாப்பு செய்வதற்கு தெய்வா தான் ஆசைப்பட்டார்.

முதலில் வந்த சில நாட்கள், வருணிகா யாரிடமும் சரியாகப் பேசவில்லை. தான் செய்வது தவறா? சரியா? என்று போராடிக் கொண்டிருந்தாள்.

அதன் பின்பு ஒரு நிலையான முடிவுக்கு வந்து விட்டாள். அதன் விளைவாக, அவர்களுக்கு பழக்கமான குடும்ப வக்கீல் ஒருவரிடம் சென்று, விசயம் வெளியே கசியாமல் விவாகரத்து பத்திரத்தை ஏற்பாடு கேட்டுக் கொண்டாள்.

விசயம் தெரிந்து ஹரிஹரன் வந்து நின்றால், அவனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தாள்.

அவள் விவாகரத்து வாங்குவது பற்றி, மொத்த குடும்பத்திற்கும் நெருடலாகத்தான் இருந்தது. என்ன இருந்தாலும், பெரியவர்கள் பழைய கலாச்சாரம் நம்பிக்கையில் ஊறிப்போனவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு, ஹரிஹரன் திருந்தி வர வாய்ப்பு கொடுப்பது தான் சரி என்று தோன்றியது.

அதற்காக, ஹரிஹரனிடம் பெண்ணை விட்டு விடவும், அவர்கள் தயாராக இல்லை. அவர்களும் குழப்பத்தில் தான் இருந்தார்கள். வருணிகாவின் செயலுக்கு, ஆதரவு தெரிவிப்பதா? வேண்டாமா? என்று தடுமாறினர்.

வருணிகாவிற்கு முழு ஆதரவாக இருந்தது, மேனகா மட்டும் தான். இவ்வளவு பேர் இருந்தும், வருணிகாவை காப்பாற்ற முடியாத சோகத்தில், அதிகமாக அழுதது மேனகா தான். அதன் பின்பு தெளிந்து விட்டாள். இதற்கு மேல் என்ன நடந்தாலும், அதைப்பார்த்துக் கொள்ளலாம். வருணிகா எதை செய்தாலும், துணை நிற்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

பூபதி அதிகம் பேசாதவனாக இருந்தாலும், தங்கைக்கு நடந்த கொடுமையை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. ஹரிஹரனிடம் சண்டை போடக்கிளம்ப, அவனை அடக்கி வைத்தாள். அவனும், ஹரிஹரனை வருணிகா பிரிவதை ஆதரிக்கவே செய்தான்.

அடுத்ததாக, தன்னுடைய செய்கைக்கு வருணிகா மேனகாவிடம் மட்டுமே, காரணம் சொல்லி இருந்தாள். அதைப்பெரியவர்களிடம் கூட அவள் சொல்லவில்லை.

இப்படியாக விவாகரத்து பத்திரம் வந்து விட, அதோடு வளைகாப்பு ஏற்பாடும் ஆரம்பம் ஆனது.

மதுரையில் வைப்பதா? தேனியில் வைப்பதா? என்ற குழப்பம் வந்து ,அனுராதா தேனியிலேயே வைக்கச் சொல்லி விட்டார்.

இரண்டு நாட்களில் வளைகாப்பு நிகழ்வு.. அன்று மருத்துவமனைக்குச் சென்று சோதித்து விட்டு, “நீங்க அண்ணி கூட வாங்க சித்தி. நான் ஒரு இடத்துக்கு போயிட்டு அப்படியே வீட்டுக்கு போறேன்” என்றாள்.

“எங்கமா போற? தனியா போக வேணாம்”

“ஒன்னும் ஆகாது. நான் போயிட்டு உடனே வீட்டுக்கு வர்ரேன். நீங்க அண்ணிய கூட்டிட்டு கிளம்புங்க” என்று கூறி விட்டுக் கிளம்பினாள்.

சந்திரா கைபேசியை பார்த்துக் கொண்டிருக்க, வாசல் கதவு தட்டப்பட்டது. சந்திரா வந்து திறக்க, வருணிகா புன்னகையோடு நின்று இருந்தாள்.

“உன்னை யார் இங்க வரச்சொன்னது?”

“அதை உள்ள போய் பேசலாமா? இல்ல ஊர் முழுக்க தெரியுற மாதிரி, நீ என் புருஷன் கூட ஊர் சுத்துனத பேசனும்னு ஆசையா?”

அவளை முறைத்துக் கொண்டே சந்திரா வழி விட, வருணிகா உள்ளே நுழைந்தாள்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்