Loading

 

“நான் உணரனும் பாட்டி. அம்மா பாசத்த நான் உணராத வரை, அவங்க பேர்ல மட்டும் தான் அம்மா” என்று முதல் முறையாக மனதில் இருப்பதை சொன்னான் வீரா.

“வீரா..”

“விடுங்க பாட்டி. எனக்கு யாருமே தேவையில்ல. என் அப்பத்தா போதும். நான் சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்கேன். உறவு கொண்டாடிட்டு அவங்க நெருங்குனா தான், நெருப்ப மிதிச்ச மாதிரி இருக்கு. இல்லனா நிம்மதியா தான் இருப்பேன். இத உங்க ஃப்ரண்ட் கிட்ட சொல்லாதீங்க. ரொம்ப வருத்தப்படுவாங்க”

“சொல்லல விடு. உனக்கு வேணாம்னா விட்டுரு. ஜாக்ஷிலாம் வேணாம்னு மொத்தமா உதறி தள்ளிட்டா. சாகுற வரை அவ அப்பாவ மன்னிக்கவே இல்ல”

“என் கேஸ்ல அப்படி உதறவும் முடியாது. ஒட்டவும் முடியாது. எல்லாம் விதி” என்று கையை விரித்தான்.

*.*.*.*.*.*.

இரண்டு நாட்கள் கடந்து இருக்க, அன்று அறுவை சிகிச்சை செய்வதாக முடிவானது.

மருத்துவர் சொல்லி விட்டு சென்று விட்டதால், எல்லோரும் அதற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். அருள் கூட வந்து விட்டான். கவிதாவை மட்டும் தான் லட்சுமியோடு வீட்டில் இருக்க வைத்திருந்தனர்.

லட்சுமி வர நினைக்க, வீரா மறுத்து விட்டான்.

“கவிதா கூட நீங்க வீட்டுலயே இருங்க. அவளுக்கு முக்கியமான எக்ஸாம் போயிட்டு இருக்கு. இந்த நேரத்துல அவள இங்க கூட்டிட்டு வர்ரதும், அங்க தனியா விடுறதும் தப்பு. பேசாம இருங்க” என்று அதட்டி விட்டான்.

லட்சுமி ஒன்றும் குழந்தை அல்ல. பேரன் சொல்லாமல் விட்டது அவருக்கும் புரியத்தான் செய்தது.

என்ன தான் தாமரையை இரண்டாம் தாரமாக பசுபதியின் குடும்பம் ஏற்றுக் கொண்டாளும், அவர்களுக்கு லட்சுமியையும் வீராவையும் சுத்தமாகப் பிடிக்காது.

பசுபதிக்கு, தன் மகன் சேகரை பார்த்துக் கொள்ள தான் மனைவி. அவளுடைய முதல் திருமணத்தில் வந்த மகனை வளர்க்க சுத்தமாக விருப்பமில்லை. அவர்களது குடும்பத்துக்கே வீரபத்திரன் வேண்டாதவன் தான்.

அவனையே வளர்க்க முடியாது என்று சொல்லி விட்டு, அவன் பணத்தில் சிகிச்சையா? வேண்டாம் என்று தீர்மானமாக சொன்னது பசுபதி தான். அதனால் தான் நகை மூலம் பணத்தை ஏற்பாடு செய்தனர்.

வீராவிடம் பசுபதி பெரிதாக முகம் கொடுத்துப் பேசியதில்லை. தாமரை தான், அவரை அப்பா என்று வீராவுக்கு சொல்லி வைப்பார். ஆனால் வீரா அவரையே அம்மா என்று அழைப்பதை நிறுத்தி விட்டான். பசுபதியை எப்படி அப்பா என்று அழைப்பான்?

இப்போது கூட சேகர் எல்லாம் செய்ய, வீரா சத்தமில்லாமல் தள்ளி நின்றிருந்தான். அவனுக்கு இங்கிருக்கவும் பிடிக்கவில்லை தான். ஆனால் தாமரை விட மாட்டார். அதற்காக பொறுத்துப்போனான்.

கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிக் கொண்டு அவன் நிற்க, ஜாக்ஷியிடமிருந்து அழைப்பு வந்தது. உடனே கைபேசியோடு வெளியேறி சென்று விட்டான்.

அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தான்.

“ஹலோ.. வீரபத்திரன்?”

“சொல்லுங்க”

“ஆஃபிஸ்க்கு வர முடியுமா?”

“இப்பவே வரனுமா?”

“அப்படினா?”

“இன்னும் அரைமணி நேரத்துல ஆப்ரேஷன்..”

“ஓஓ இன்னைக்கு தானா?”

“ஆமா. இப்பவே வரனுமா?”

“இட்ஸ் ஓகே..” என்றவள் யோசித்து விட்டு, “ஈவ்னிங் ஃபைவ் தார்ட்டி க்கு நான் அனுப்புற அட்ரஸ்க்கு வாங்க” என்றாள்.

“ஓகே..”

“ஆப்ரேஷன் டென்சன் எதுவும் இருக்கா?”

“எனக்கு எதுவும் இல்ல.”

“தட்ஸ் குட். ஈவ்னிங் பார்க்கலாம்” என்று விட்டு வைத்து விட்டாள்.

கைபேசியை அணைத்து விட்டு பார்க்க, சேகர் அவனிடம் வந்தான்.

“என்ன?”

“அம்மா தான் தேடுனாங்க”

“வர்ரேன்னு சொல்லு”

“நீ உன் ஃப்ரண்ட் வீட்டுல தான இருக்க? வேலை தேடுனியே கிடைச்சதா?”

“என்னை பத்தி உனக்கென்ன புது அக்கறை?”

“அம்மா பேசுனதால கேட்டேன். கிடைக்கலயோ?”

“அத நீ தெரிஞ்சுக்க தேவை இல்ல. போய் வேலைய பாரு”

“சும்மா ஒரு அக்கறையில கேட்டா ரொம்ப தான் பண்ணுற.” என்ற சேகர், தோளை குலுக்கி விட்டுச் சென்று விட்டான்.

அறுவை சிகிச்சைக்கு பசுபதியை அழைத்துச் சென்று விட, மற்றவர்கள் சாப்பிடக் கிளம்பினர். தாமரைக்கு தண்ணீர் கூட உள்ளே போக மறுத்தது. பயத்தோடு அமர்ந்திருக்க, அவரது இரண்டு மகன்களையும் விட்டு விட்டு, வீரா தனியாக சென்று நின்று கொண்டான்.

அவனுக்கு சில நிமிடங்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் போல் இருந்தது. வேலையை விட்டு அடுத்த வேலையில் சேரும் வரை, அவன் ஓய்வெடுக்கத் தான் திட்டம் போட்டிருந்தான். அது இல்லாமல் இப்படி அலைவதே அவனுக்கு எரிச்சலை கிளப்பி இருந்தது.

சிகிச்சை நன்றாக முடிய, பசுபதியை தாமரை பார்த்ததும் அவரை சாப்பிட வைக்கச் சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.

“நீ எங்க போற?” என்று தாமரை நிறுத்த, “எனக்கு வேலை இருக்கு” என்றான் மொட்டையாக.

“அதான் விட்டுட்டியே?” – சேகர்.

“நான் கிளம்புறேன்”

“நில்லு வீரா.. எங்க போறனு சொல்லாமலே போனா எப்படி?” என்று தாமரை தடுக்க, “இப்ப என்ன பண்ணனும்ங்குறீங்க?” என்று நின்று விட்டான்.

“ஹாஸ்பிடல்ல எங்கள விட்டுட்டு நீ மட்டும் கிளம்புனா எப்படி? எங்க போற? எப்ப வருவ?”

“அதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லாத விசயம். உங்க ரெண்டு பசங்க இருக்காங்கள்ள? அவங்க உங்கள பார்த்துப்பாங்க. ஆப்ரேஷன் தான் முடிஞ்சதுல? இதுக்கு மேல என் வேலைய விட்டு இங்க உட்கார்ந்துருக்க முடியாது.”

“இப்ப எதுக்கு இப்படி பேசுற? போறதுனா போயிட்டே இரு” என்று சேகர் சொல்ல, “ஆமா.. உங்க வேலைய ஒன்னும் விட வேணாம். போங்க. எங்கம்மா அப்பாவ நாங்க பார்த்துக்கிறோம்” என்றான் அருள் கோபமாக.

“இத முன்னாடியே செஞ்சுருக்க வேண்டியது தான? நானா வந்து நின்ன மாதிரி பேசுறீங்க? உங்கம்மா தான் எனக்கு ஃபோன் பண்ணி வர வச்சு இத்தனையும் பார்க்க வச்சது”

“அவங்களுக்கு அம்மானா? வீரா.. அப்ப நான் உனக்கு அம்மா இல்லையா?” என்று கேட்ட தாமரைக்கு கண்ணீர் வந்து விட்டது.

“உங்க வாழ்க்கைக்காக என்னை தூக்கி எறிஞ்சப்போவே, நீங்க எனக்கு யாருமில்லனு ஆகிடுச்சு. ரத்த பந்தம் இருக்கேனு தான் பொறுத்து போறேன். என்னமோ என் மேல பெரிய அக்கறை இருக்க மாதிரி, எங்க போற? எப்ப வருவனு கேட்குறீங்க? இத்தனை வருசமும் நான் எங்க போறேன்? என்ன செய்யுறேன்னு எதாச்சும் தெரியுமா? உங்க காரியம் முடிஞ்சதுல? ஆள விடுங்க” என்றவன் விருட்டென கிளம்பி விட்டான்.

தாமரைக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது. அவர் முகத்தை மூடிக் கொள்ள, “ம்மா.. அவன் போனா போறான்மா.. நீங்க ஏன் அழுறீங்க?” என்று அருள் சமாதானம் செய்தான்.

“அவனுக்கு என்னை பிடிக்கவே இல்லடா.. உங்கள பார்த்த மாதிரி அவனையும் பார்த்துருக்கனும். விட்டுட்டேன். அவன உங்க பாட்டி தூக்கி எறியும் போது, வாய மூடிட்டு நின்னது என் தப்பு தான்டா.. அதுக்காக நான் பெத்தவன் என்னை வெறுத்துட்டு போறான்”

தாமரை அழ, மற்ற இருவருக்கும் ஒன்றும் சொல்ல முடியவில்லை. நடந்ததை எல்லாம் பார்த்தவர்கள் தானே அவர்கள். அதற்காக அவர்களுக்கு வீரா மீது பாசமெல்லாம் வந்ததே இல்லை.

எதையும் கவனிக்காமல் வீரா கிளம்பி, ஜாக்ஷி அனுப்பிய முகவரிக்குச் சென்றான். அதுவும் அலுவலகம் தான். ஆனால் அது ஜாக்ஷியின் தனிப்பட்ட அலுவலகம்.

அழகாய், கண்ணாடியால் செய்த கட்டிட்டம் போல் பளபளத்தது. சரியாக ஐந்தரைக்கு வந்தவனை பார்த்ததும், ரிசப்சன் பெண் உடனே உள்ளே செல்ல சொன்னாள்.

கதவை தட்டி விட்டு உள்ளே வந்தவனை, அமர வைத்தாள் ஜாக்ஷி.

“ஆப்ரேஷன் முடிஞ்சதா?”

“எஸ்”

“காபி?”

“ஓகே”

உடனே இரண்டு காபியை கொண்டு வர சொல்லி விட்டு, “அண்ட்.. இப்ப எதுக்கு கூப்பிட்டுருப்பேன்னு நினைக்கிறீங்க வீரபத்திரன்?” என்று அவனிடமே கேட்டாள்.

“அத நீங்க தான் சொல்லனும்”

“காபி வரட்டும். ரொம்ப டயர்ட்டா இருக்கு. குடிச்சுட்டே பேசலாம்”

வீரா தலையாட்ட, ஜாக்ஷி எழுந்து சென்று கண்ணாடியின் வெளியே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

இருவரும் அமைதியாய் இருக்க, காபி வந்தது. அதை எடுத்துக் கொண்டு மீண்டும் அவன் முன்னால் அமர்ந்தாள்.

“இப்ப பேசலாமா?”

“சொல்லுங்க”

“பாட்டி சொல்லுற மாதிரி உங்கள வி.பி யா போட முடியாது. அது கஷ்டம்”

“தெரியும்”

“ஆனா பாட்டிக்கு உங்க மேல நம்பிக்கையும் அதிகம். அதுனால அப்படியே விடவும் மனசில்ல.. சோ.. உங்கள நான் பிராஜெக்ட் மேனேஜரா அப்பாயிண்ட் பண்ணலாம்னு இருக்கேன்”

“ஓகே”

பெரிதாய் ஆச்சரியமோ அதிர்ச்சியோ எதுவும் அவன் முகத்தில் இல்லை. சாதாரணமாக தான் கேட்டுக் கொண்டிருந்தான்.

“இன்னும் ஒரு விசயம் இருக்கு. அத நீங்க பண்ணனும்”

வீரா புருவம் உயர்த்தி பார்த்தான்.

“இந்த ஆஃபிஸ் பத்தி எவ்வளவு தூரம் உங்களுக்குத் தெரியும்னு தெரியல. ஏற்கனவே இருந்த சேர்மேன் இறந்து போயிட்டாரு. நான் இப்ப தான் புதுசா வந்து உட்கார்ந்துருக்கேன். ஆஃபிஸ்ல எனக்கு பல விசயங்கள்ள டவுட் இருக்கு. நிறைய விசயம் எனக்குத் தெரியாம நடந்துட்டு இருக்கும். அதுல சிலது முக்கியமானதா இருக்கலாம். சிலது சாதாரண விசயமா இருக்கலாம். எனக்கு முக்கியமான விசயங்கள பத்தி, நீங்க தெரிஞ்சுட்டு சொல்லனும். முடியுமா?”

“முக்கியமான விசயம்னா?”

“அது எனக்கே தெரியாது. இந்த விசயம் எல்லாம் என் கிட்ட வரனும். ஆனா வர விடாம தடுத்துடுறாங்க.. ஆர் மறைச்சுடுறாங்கனு சில விசயங்கள் கண்டிப்பா இருக்கும். அப்படி இருக்க விசயங்கள்..”

“ஸ்பை?”

“கிட்டத்தட்ட. ஆனா தெரியாம போட்டுக் கொடுக்கனும்னு இல்ல. ஆதாரத்தோட நான் பிடிச்சுட்டேன்னு எல்லாரு முன்னாடியும், நீங்க பகிரங்கமா கூட சொல்லலாம். மத்த யாரும் உங்கள கேள்வி கேட்க முடியாதபடி நான் பார்த்துக்குறேன்”

“அப்ப முக்கியமில்லாத விசயம்னா?”

“உள்ளுக்குள்ள இருக்க பாலிடிக்ஸ்.. பார்ஸியாலிட்டி.. இதெல்லாம் தேவையில்லாத விசயங்கள்”

“இது தேவையில்லாததா?” என்று கேட்டவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“எஸ்.. இதுல நான் தலையிட முடியாது. லுக்.. ஒருத்தர் உங்கள தப்பா நடத்துறாங்கனா, நீங்க ஏன் தாங்கிட்டு இருக்கனும்? பதிலுக்கு செய்ங்க. அத விட்டுட்டு அழுதுட்டு வந்து புலம்புறவங்க எப்படி வாழ்க்கையில முன்னேறுவாங்க? ஒருத்தர் உங்க வேலைய அவங்க வேலைனு சொல்லுறாங்கனா.. நீங்க தான் அது உங்க வேலைனு நிரூபிச்சு, மூக்க உடைக்கனும். இதுக்காக அடுத்தவங்க வந்து நிக்க முடியாது. நானும் வந்து ஒன்னும் ஒன்னும் யாரோடதுனு பார்த்துட்டு இருக்க முடியாது. தனக்கானத தானே தேடிக்கிறது தான் புத்திசாலி தனம். ஒருத்தன் அடிக்கும் போது வாங்கிட்டு நிக்கிறது முட்டாள்தனம். அந்த முட்டாள்களுக்காக நான்னு இல்ல.. யாருமே பேச முடியாது. இதெல்லாம் எல்லா ஆஃபிஸ்லயும் நடக்குறது. இதுக்கு நாம நேரம் செலவு பண்ண முடியாது.”

வீரா இதைக்கேட்டு, ஆச்சரியத்தோடு பார்த்தான். எப்போதும் உயர்பதவியில் இருப்பவர்கள் தங்களை கவனிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கும். உள்ளே நடக்கும் அரசியலை, அவர்கள் வந்து பேசி தீர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் பதவியில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? என்று இப்போது புரிந்தது.

உனக்கான பிரச்சனைகளை நீயே சந்திக்காமல், அடுத்தவர்கள் வந்து காப்பாற்ற வேண்டும் என்று காத்திருப்பது தவறல்லவா? எல்லா இடத்திலும் அரசியல் இருக்கும். அராஜகம் இருக்கும். அதை தாங்கிக் கொண்டு வாழ்வதும், தடுத்து நிமிர்ந்து வாழ்வதும் அவரவர் சாமர்த்தியம்.

இப்போது அவளை புரிந்து கொண்டதற்காக தலையாட்டி வைத்தான்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
28
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. வாவ், ஜாசஷி எப்படி இத்தனை பெரிய நிர்வாகத்தை கட்டியாளுறான்னு இப்ப புரியுது.

      😀😀😀
      CRVS (or) CRVS 2797