Loading

 

அடுத்த நாள் காலையில் லட்சுமியும் சுபத்ராவும் வந்து விட்டனர். ஜகதீஸ்வரி நேற்று நடந்ததை சொல்ல, “அடிப்பாவி! அவள சும்மாவா விட்ட? கைய ஒடிச்சுருக்க வேண்டியது தான?” என்று கோபப்பட்டார் லட்சுமி.

சுபத்ரா கண்ணீரோடு பாட்டியின் கையை பிடித்துக் கொண்டாள்.

“உங்களுக்கு ஒன்னும் ஆகலயே?”

“ஒன்னுமில்லடா. உன் முன்னாடி நல்லா தான உட்கார்ந்துருக்கேன்?” என்று கேட்டு, அவளது கன்னத்தில் தட்டினார்.

சுபத்ரா அவரது தோளில் சாய்ந்து கொண்டாள். அவளுக்கென இருக்கும் உறவுகள் அவர்கள் மட்டும் தானே? சுபத்ரா வருத்தத்தோடு அமர்ந்திருக்க, ஜாக்ஷி வந்து விட்டாள்.

“என்ன பாசமழை பொழியுது? அது என் பாட்டி” என்று ஜாக்ஷி முறைக்க, “எனக்கும் பாட்டி தான்.” என்றாள்.

“அதெல்லாம் தர முடியாது. ஒழுங்கா எந்திரிடி”

“மாட்டேன்”

ஜாக்ஷி அவளை முறைக்க, “உங்களுக்கு தான் அண்ணன் இருக்காரே. போய் அவர ஹக் பண்ணுங்க” என்று தலையை சிலுப்பினாள்.

“உங்கண்ணன் யாருக்கு வேணும்?” என்று கேட்டவள், லட்சுமி பாட்டியின் அருகே அமர்ந்து அவர் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“எனக்கு இவங்க இருக்காங்க” என்று சிரிக்க, “நோ நோ அவங்களும் எனக்கு தான்” என்று சுபத்ரா சண்டைக்கு நின்றாள்.

“போடி”

அந்த நேரம் வீரா வர, “சரி போங்க.. எனக்கு அண்ணன் இருக்காரு” என்று சுபத்ரா எழுந்து வந்து, வீராவின் கையைப்பிடித்துக் கொண்டாள்.

“எப்ப வந்தீங்க?” என்று புன்னகையோடு வீரா விசாரிக்க, “காலையிலயே வந்துட்டோம்ணா” என்றாள்.

“ஹலோ..” என்று ஜாக்ஷி எழுந்து நின்று முறைத்தாள்.

“அவ கைய விடுடா” என்று ஜாக்ஷி அதட்ட, “விட மாட்டேன். ண்ணா.. உங்கண்ணன் யாருக்கு வேணும்? வேணாம்னு சொல்லிட்டாங்க” என்று புகார் வாசித்தாள்.

“சொன்னா? நீ கைய பிடிச்சுக்குவியா? டேய் கைய விடு”

“அண்ணா நானா? அண்ணியா?”

“நானா? அவளா?” என்று கேட்டு ஜாக்ஷியும் முறைத்தாள்.

வீரா இருவருக்கும் நடுவே விழித்தான்.

“அறிவாளி இந்த நேரத்துல என்ன செய்வான் தெரியுமா? தங்கச்சி பக்கமும் போக மாட்டான். லவ்வர் பக்கமும் போக மாட்டான். நேரா சாப்பாட்டு பக்கம் போயிடுவான். எனக்கு பசிக்குது” என்றவன் அங்கிருந்து ஓடினான்.

சுபத்ரா சிரித்து விட்டு அவன் பின்னால் போக, ஜாக்ஷியும் முறைத்துக் கொண்டு வந்தாள்.

வீரா சாப்பிட அமர, “அப்ப நீ என்னை ச்சூஸ் பண்ண மாட்ட? அப்படி தான?” என்று கேட்டு வீராவை பார்க்க, அவனோ அவள் பக்கம் திரும்பாமல் உணவை பார்த்தான்.

“சும்மா இருங்க. சாப்பிட விடுங்க. உங்களுக்கு சமைச்சு போட்டு அண்ணா இளைச்சு போயிட்டாரு” என்று சுபத்ரா வீராவுக்கு பரிமாற, ஜாக்ஷி இருவரையும் முறைத்தாள்.

“ஓஹோ.. எனக்கு சமைச்சு போட்டு அண்ணன் தங்கச்சி ரெண்டு பேரும் இளைச்சு போயிட்டீங்களா?” என்று கேட்டவள் வீராவை இடிக்க, அவனோ சாப்பிட ஆரம்பித்து விட்டான்.

“பதில் சொல்லுடா..”

“வாய்ல சாப்பாடு இருக்கு. நீயும் உட்காரு” என்று சமாளித்து வைத்தான்.

“சமாளிக்கிற? அங்க வா.. உனக்கு இருக்கு” என்று முறைத்து விட்டு, “நீங்களும் வாங்க. ஏன் உட்கார்ந்து இருக்கீங்க?” என்று பாட்டிகளை அழைத்தாள்.

இருவரும் புன்னகையுடன் வந்தனர். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.

“நல்லா ஊர் சுத்தி முடிச்சுட்டல? இனி ஒழுங்கா படிப்ப பாரு” என்று ஜாக்ஷி சொல்ல, தலையாட்டி வைத்தாள் சுபத்ரா.

இருவரும் வேலைக்கு கிளம்பி விட, ஜகதீஸ்வரியை பார்த்தார் லட்சுமி.

“என்ன? நினைச்சு கவலை பட்டுட்டே இருக்க போறியா?”

“அவள பெத்தத நினைச்சு ரொம்ப வருத்தமா இருக்குகா. அவள பெத்த அன்னைக்கு அவரும் நானும் அவ்வளவு சந்தோசப்பட்டோம். இப்ப என் உயிர எடுக்க பார்த்துட்டாளே. மனசு பாரமா இருக்கு”

“அதுக்கு தான் இப்ப ஜெயில்ல இருக்காளே. இனி இந்த வீட்டு பக்கம் வந்தா கால உடைச்சு விடுறேன்” என்று லட்சுமி கொதித்தார்.

ஜகதீஸ்வரிக்கு இப்போதும் கூட ஜீரணிக்க முடியவில்லை. பெற்ற மகள் அல்லவா? அவளை திட்டினாலும், பாசமும் ஒரு ஓரமாக இருக்கத்தான் செய்தது. அதை தான் காதம்பரி கொன்று விட, தாங்க முடியாமல் தவித்தார்.

“அவள பத்தி நினைக்காத. ஜாக்ஷிய பத்தி நினை. வேலைய பத்தி நினை. அவளுக்கு புருஷன் இருக்கான். அவன் பார்த்துப்பான்” என்று லட்சுமி தேற்றினார்.

காரில் வீரா காரை ஓட்ட, ஜாக்ஷி நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

“தூக்கம் வருதா?”

“டயர்டா இருக்கு”

“உழைச்சது நானு. உனக்கு டயர்டா?” என்று கேட்டவனை, கிள்ளி வைத்திருந்தாள்.

“ரோட்ட பார்த்து ஓட்டுடா”

“உண்மைய சொன்னா கோச்சுக்குற?”

“பெரிய உண்மை.. பேசாம போ”

வீரா சிரித்து வைக்க, “பேசாம உன்னை என் பிரான்ச்க்கு மாத்திடலாம்னு பார்க்குறேன்” என்றாள்.

“எதுக்கு?” என்று வீரா சந்தோசமாக கேட்க, “ஒன்னா போயிட்டு வரலாம்ல? நீ டிரைவ் பண்ணுவ” என்றாள்.

“அவ்வளவு தானா? நான் கூட என்னமோ நினைச்சேன்”

“என்ன நினைச்ச?”

“என்னை நாள் முழுக்க பார்க்காம இருக்கது கஷ்டமா இருக்குனு சொல்லுவனு நினைச்சேன்”

“உன்னை பார்த்துட்டு இருந்தா வேலைய யாரு பார்க்குறது?”

“என்னை பார்த்துட்டே வேலைய பார்க்க முடியாதா?”

“அதுக்கு நீ கம்ப்யூட்டர் மானிட்டரா இருக்கனும்” என்று முறைக்க, வீரா பதிலுக்கு முறைத்தான்.

“உன் கிட்ட போய் ரொமான்ஸ் பண்ண பார்த்தேன் பாரு” என்று சலித்துக் கொண்டான்.

“இல்லனா மட்டும்…” என்று இழுத்தவள், “நேரா பார்த்து ஓட்டுடா” என்று சிரித்து விட்டு அமைதியானாள்.

“காதம்பரி என்னாச்சு? கால் வந்துச்சா?”

“வந்துச்சு. மேடம் அவள கோர்ட்ல ஒப்படைச்சா நாம போய் சாட்சி சொல்லனும். அப்புறம் தான் தண்டனை கொடுப்பாங்களாம்”

“அசோக்?”

“அவரு வீட்டுக்கே போகல போல. நேத்து முழுக்க ஆஃபிஸ்ல உட்கார்ந்துருக்காரு. கொடுத்த சாக் அப்படி”

“ஒருத்தருக்கு கூட காதம்பரி உண்மையா இல்லல? பெத்த அம்மா, பெத்த புள்ளை, கட்டுன புருஷன். யாரையுமே மதிக்கல”

“அது ஒரு சுயநலப்பிசாசு. தனக்கு தோனுறது தான் சரினு செய்யும். தாத்தாவ சொல்லனும். மகளுக்கு ஓவர் செல்லம் கொடுத்து வளர்த்துட்டு போயிட்டாரு. நாம அனுபவிக்கிறோம்”

“வினய் மட்டும் இத சொல்லலனா சின்ன சந்தேகம் கூட நமக்கு வந்துருக்காதுல?”

“ஆமா. அவன் இல்லனா நினைக்கவே பயமா இருக்கு” என்றவளுக்கு உடல் சிலிர்த்தது.

அவளது கையைப்பிடித்தவன், “விடு அதையே நினைக்காத” என்று விட்டு அலுவலகம் சென்று சேர்ந்தான்.

*.*.*.*.

வினய்க்கு அசோக் விசயத்தை சொல்ல, “இதுக்கு தான்பா நான் தப்பிச்சு ஹாஸ்டல் வந்தேன். எதாவது கோபத்துல என்னை கொன்னுட்டா?” என்று கேட்டு வைத்தான்.

“ஆனா இப்ப ஜெயில்ல இருக்கா. என்ன செய்யுறதுனு தெரியல”

வினய் ஒரு நொடி அமைதியாக இருந்தான். பெற்ற தாயின் மீது பாசமில்லாமல் போகுமா?

“பெயில் ட்ரை பண்ணுங்க”

“அவள இப்ப பார்க்கவே பிடிக்கலடா. கொஞ்சநாள் உள்ளயே இருக்கட்டும். திருந்தி வர்ராளா பார்ப்போம்”

“ஓ.. சரி. ஆனா நீங்க வீட்டுல தனியா இருப்பீங்களே. நான் வேணா வரவா?”

“வேணாம் நீ உன் படிப்ப பாரு” என்று விட்டு வைத்து விட்டார்.

வினய்க்கு தாயை நினைத்து வருத்தமாக இருந்தது. ஆனால் இவ்வளவு தூரம் போவார் என்று நினைத்து பார்க்கவில்லை.

“பாட்டி பாவம். சாப்பிட்டிருந்தா கொலை கேஸாகிருக்கும். ஏன் தான் யோசிக்காம செய்யுறாங்களோ” என்று புலம்பிக் கொண்டான்.

*.*.*.*.*.*.

இரவு வீரா சமையல் அறையில் நிற்க, “என்ன செய்யுற?” என்று கேட்டுக் கொண்டு வந்தாள் ஜாக்ஷி.

“டின்னர்”

“ஒன்னும் தேவையில்ல”

“ஏன்?”

“அதான் எனக்கு சமைச்சு போட்டு இளைச்சு போயிட்டனு உன் தங்கச்சி ரொம்ப வருத்தப்பட்டாளே. நீ ஒன்னும் இளைக்க வேணாம். போய் வேலைய பாரு”

“நீ சமைக்க போறியா?”

“ச்சே ச்சே. ஆர்டர் போடப்போறேன்”

“அதான பார்த்தேன். ஒன்னும் வேணாம். நானே செய்யுறேன். தள்ளு”

“நான் தான் வேணாம்னு சொல்லுறேன்ல?”

“எனக்கு வேணும்”

ஜாக்ஷி அவன் கையிலிருந்த கரண்டியை பிடுங்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தாள். வீராவும் சிரித்தபடி அவளை துரத்தி வளைத்துப் பிடித்தான்.

“ஓடவா செய்யுற?” என்று கேட்டவன் அவளை அணைத்துக் கொண்டு, கரண்டியை பிடுங்க பார்த்தான்.

அந்நேரம் கைபேசி இசைத்தது.

“உஸ்ஸ்.. இரு” என்றவன், அவளது அணைப்பை விடாமல் கைபேசியை எடுத்தான்.

சுபத்ரா வின் பெயர் ஒளிர்ந்தது.

“உன் தங்கச்சியா? எடு”

வீரா எடுக்க, “ண்ணா.. நைட்டுக்கு சமையல் பண்ணாதீங்க. நான் கருவாட்டு குழம்பு வச்சேன். டிரைவர் எடுத்துட்டு வரார்” என்றாள்.

“சூப்பர்.. இன்னும் சமைக்கல. வரட்டும்” என்று விட்டு வைத்து விட்டான்.

ஜாக்ஷி அவனை முறைத்தாள்.

“நான் சொல்லும் போது கேட்கல.. அவ சொன்னா உடனே சமைக்க மாட்டியா?”

“நீ எப்ப இருந்து சின்ன புள்ள மாதிரி பிகேவ் பண்ண ஆரம்பிச்ச? சோ க்யூட்” என்று நெற்றியில் முட்டினான்.

“பேச்ச மாத்தாத.. எனக்கு உன் சமையலும் வேணாம். அவ கருவாட்டு குழம்பும் வேணாம்” என்றவள், அவனை தள்ளி விட்டு விட்டு வேகமாக சென்று விட்டாள்.

வீரா சிரிப்போடு காத்திருந்தான். சுபத்ரா கொடுத்தது வர, அதை பத்திர படுத்தி விட்டு அறைக்குள் சென்றான்.

ஜாக்ஷி அவனை பார்க்காமல் கைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஜக்கம்மா?”

“போய் நீயே கொட்டிக்க. எனக்கு வேணாம்”

“நான் அத ஃப்ரிட்ஜில வச்சுட்டேன்”

“ஏன்?”

“எனக்கு இப்ப பசிக்கல. நைட் உனக்கு தேவைப்படும்”

“ஹான்?” என்று புரியாமல் பார்க்க, வீரா கண்ணடித்தான்.

உண்மையில் நள்ளிரவு ஜாக்ஷிக்கு பசித்தது. அவனது அணைப்பில் இருந்தவள், அப்பாவியாக பார்த்து வைத்தாள்.

“பசிக்குதுடா”

வீரா வாய் விட்டு சிரித்தான்.

“வா போய் சாப்பிடுவோம்”

“நான் டயர்ட். இங்க எடுத்துட்டு வா”

“நானே டயர்டாகல?”

“போடா.. போய் எடுத்துட்டு வா.” என்று அவனை தள்ளி விட்டவள், “அப்படியே டிசர்ட்ட எடுத்துக் கொடு” என்று கேட்டாள்.

எடுத்துக் கொடுத்து விட்டு, உணவோடு வந்தான். இருவரும் ஒரே தட்டில் சாப்பிட்டு முடித்தனர்.

“ப்பா… கருவாட்டு குழம்பு பசிக்கு அமிர்தமா இருக்கு” என்று சொல்லி வைக்க, ஜாக்ஷி மீண்டும் முறைத்தாள்.

“அடேய்.. உண்மைய சொல்லு. நீ என்னை லவ் பண்ணுறியா? இல்ல இந்த குழம்ப லவ் பண்ணுறியா?” என்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.

“குழம்பு கூடயும் சண்டையா? உன்னை தாண்டி லவ் பண்ணுறேன்”

“நான் நம்ப மாட்டேன்”

“இவ்வளவு நேரம் நடந்தது உனக்கு புரியலயா? சரி மறுபடியும் புரியுற மாதிரி சொல்லுறேன்”

“அடேய் நாளைக்கு வேலை இருக்கு” என்று ஜாக்ஷி பதற, “பரவாயில்ல. லீவ் போட்டுக்கலாம்” என்றவன் அவனது காதலை நிரூபிக்க ஆரம்பித்தான்.

முதல் பாகம் முடிந்தது.

 

அடுத்த பாகம் “அவளெனும் பூங்கவிதை – சட்டென்று சலனம்” சீக்கிரமே வரும். அதுல ஜானகி & கந்தசாமி, சுபத்ரா & முருகன் தான் முதன்மை கதாபாத்திரமா இருப்பாங்க. நன்றி.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
38
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. ஸோ… அரங்க ரெண்டு பேரும்
      அவங்க வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சிட்டாங்க அப்படித்தானே..???
      😀😀😀
      CRVS (or) CRVS 2797

    2. செம. வினய் வருவானா