Loading

 

உயிலை படித்து முடித்ததும், வக்கீல் அங்கிருந்தவர்களை பார்த்தார். எல்லோரும் அவரவர் யோசனைகளில் மூழ்கி இருந்தனர்.

“சிற்றம்பலம் சார் சொத்த உங்க புள்ளைங்க பேர்ல மாத்தனும். ரெண்டு பேருக்குமே கல்யாணம் முடிஞ்சா தான், அந்த சொத்த விக்கவோ மாத்தவோ முடியும். அதுக்கான பத்திரம் எல்லாம் லாக்கர்ல இருக்காம். சாவி உங்க வீட்டுல தான் இருக்குனு சொன்னார். நீங்க எடுத்துட்டு வந்தா, உங்க பிள்ளைங்க பேர்ல மாத்துற வேலைய பார்க்கலாம்” என்று வக்கீல் கூற, மேனகா தலையாட்டி வைத்தார்.

“உயில்படி நகைங்கள திருப்பிக் கொடுத்துருங்க. அது உங்களுக்கு சொந்தமில்லாதது. ஜகதீஸ்வரி அம்மாவோட நகைய நீங்க வச்சுக்க உரிமை கிடையாது. இதையும் அவர் தான் சொல்ல சொன்னாரு” என்றவர், ஜகதீஸ்வரியிடம் திரும்பினார்.

“அம்மா.. உங்க மருமகனுக்கு ஏற்கனவே சில பிரச்சனை இருந்தது. உடம்பு முடியாம சீக்கிரமா செத்துடுவோமோனு அவருக்கு பயம். அதுனால தான் இந்த உயில எழுத சொன்னாரு. ஆனா ஆக்ஸிடென்ட் ஆகி போவாருனு யாருமே எதிர்பார்க்கல. இனி என்ன பண்ணலாம்னு சொல்லுங்க. பண்ணிடலாம்”

“அதான் போய் சேர்ந்துட்டாரே? சொத்தும் கொடுத்தாச்சுல? நகைய கொடுத்துட்டு, இடத்த காலி பண்ண சொல்லுங்க அவங்கள” என்று காதம்பரி எங்கோ பார்த்துக் கொண்டு தெனாவட்டாக பேச, மேனகா அவரை முறைத்தார்.

“நகை லாக்கர்ல தான் இருக்கு. எடுத்து வக்கீல் கிட்டயே கொடுத்து அனுப்புறோம். இப்ப கிளம்புறோம்” என்று மேனகா எழ, ஜானகியும் ஜெகனும் எழுந்தனர்.

“நகைய கொடுத்துட்டு, நாங்க கொடுத்த அந்த ஃபேக்டரி பத்திரத்தையும் ரிஜிஸ்டர் பண்ணிடுங்க” என்று ஜாக்ஷி சொல்ல, “வேணாம். அவர் எங்களுக்கு கொடுத்த சொத்தே போதும்” என்றார் மேனகா.

“சொல்லுறத முழுசா கேளுங்க. உங்க மகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி, உங்க ஹஸ்பண்ட் கேட்டுருக்காரு. அத பண்ணி வைக்க எங்களுக்கு விருப்பமில்ல. முக்கியமா, என் பாட்டி செய்ய நான் விட மாட்டேன். உங்க குடும்பத்துக்கும் எங்களுக்கும் எந்த உறவும் இருக்க கூடாதுனு நினைக்கிறேன். கல்யாணத்துக்கு ஈடா ஃபேக்டரிய வாங்கிட்டு போங்க”

“அப்படி ஒன்னும் நீங்க கொடுத்து நாங்க வாழனும்னு இல்ல” என்று ஜானகி குரலை உயர்த்த, “ஏய்.. உன்னை பேச சொன்னனா?” என்று ஜாக்ஷி அதட்டினாள்.

“எங்களுக்கு எங்கள பார்த்துக்க தெரியும். நீங்க ஒன்னும் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேணாம்.”

“நீயே கேட்டாலும் பண்ணி வைக்கிற முடிவுல நாங்களும் இல்ல. கொடுக்குறத வாங்கிட்டு கிளம்புற வழிய பாரு”

“அதான் வேணாம்னு சொல்லுறேன்ல? உங்க பிச்சை காசு யாருக்கு வேணும்? எங்கப்பாவே எங்களுக்கு நிறைய கொடுத்துட்டுத் தான் போயிருக்கார். பிச்சைக்காரியா விட்டுட்டு போகல”

“அந்த அப்பா உனக்கு எப்படி வந்தாரு தெரியுமா?” என்று நக்கலாக கேட்டு விட்டாள் ஜாக்ஷி.

ஜானகி அதிர்ந்து நின்று விட்டாள்.

“ஜாக்ஷி!” என்று பாட்டி அதட்ட, “பாட்டி.. சும்மா இருக்கீங்களா? என்னமோ நாம ஃபேக்டரிய கொடுத்தா பிச்சை போடுறனு பேசுறா.. அவ அப்பா கொடுத்தாராமே.. முதல்ல அந்த அப்பா எப்படி வந்தாருனு தெரியுமா? அந்த அப்பாவே நாங்க போட்ட பிச்சை தான். தெரியுமா உனக்கு?” என்று குரலை உயர்த்தி கேட்டாள்.

ஜானகிக்கு கண்ணீர் வந்து விட, தலை குனிந்து விட்டாள்.

“இப்ப எதுக்கு அவள பேசுறீங்க?” என்று மேனகா கேட்க, “நீங்க எதுக்கு அவள பேச விட்டு வேடிக்கை பார்க்குறீங்க?” என்று கேட்டாள் ஜாக்ஷி.

“இங்க மரியாதை கொடுத்தா தான் கிடைக்கும். மரியாதை இல்லாம ஒரு வார்த்தை பேசுனா, நான் நூறு மடங்கு அதிகமா செய்வேன். ஒழுங்கா இருக்க சொல்லுங்க”

கண்ணீர் சொட்ட தலை குனிந்து நின்றிருந்த ஜானகியை பார்த்தபடி சொல்ல, மேனகாவிற்கு எதுவும் பேச முடியவில்லை. இளமையில் அவர் செய்த தவறுக்கு, இப்போது அவரது பிள்ளைகள் அவமானப்படுகிறார்கள்.

“நானே சொல்லுறேன். எங்களுக்கு அந்த ஃபேக்டரி வேணாம். அவர் கொடுத்த வீடும் நிலமும் போதும். நாங்க எங்கள பார்த்துக்கிறோம். நகைய கொடுத்துடுறோம். அவ்வளவு தான? வர்ரோம்”

“வக்கீல் சார்.. நல்லா கேட்டுச்சா? எங்க கிட்ட இருந்து எதுவும் வேணாம்னு சொல்லிட்டுப் போறாங்க. நாளைக்கு இதுல பங்கு இருக்கு, அதுல பங்கு இருக்குனு வரக்கூடாது. வந்தா நீங்க தான் சாட்சி”

ஜாக்ஷி சொன்னதும், ஜெகனுக்கு கோபம் வந்து விட்டது.

“நாங்க வேணாம்னு சொல்லியும் நீங்க எங்கள இன்சல்ட் பண்ணிட்டே இருக்கீங்க. இதெல்லாம் நல்லா இல்ல பார்த்துக்கோங்க”

“நான் ஒன்னும் சும்மா சொல்லல. உன் அம்மா பண்ண வேலை அப்படி. அவங்க தான், சொத்து கேட்டு கேஸ் போட முடியுமானு விசாரிச்சுருக்காங்க. ஆமாவா இல்லயானு நீயே கேட்டு தெரிஞ்சுக்க”

கையை விரித்தபடி அவள் சொல்ல, பிள்ளைகள் இருவரும் தாயை அதிர்ந்து பார்த்தனர்.

“உன் அக்காவுக்கு இருபது வயசாகுது. படிச்சு முடிச்சுட்டா. நீயும் காலேஜ் சேர்ந்தாச்சுல? ரெண்டு பேரும் உழைச்சு சம்பாதிச்சு சந்தோசமா வாழுங்க. இதோட இந்த குடும்பத்தோட உங்களுக்கான கனெக்ஷன் முடிஞ்சு போச்சு. கிளம்புங்க.” என்றவன் வாசலுக்கு சென்று, “செக்யூரிட்டி.. கேட்ட திறங்க” என்று சத்தம் கொடுத்தாள்.

கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத ஒரே குறை தான்.

மூவரும் நிமிர்ந்து பார்க்காமல் கிளம்பி விட்டனர்.

ஜாக்ஷி காதம்பரியை பார்த்தாள்.

“உங்களுக்கு என்ன வேணும்? சொத்துல பங்கு வேணுமா?”

“இது என் அம்மா சொத்து. முழுசையும் கூட நான் கேட்பேன். அத நீ ஏன்டி கேட்குற?”

“ஆஹான்! கேளுங்களேன். உங்கம்மா அவங்க கிட்ட இருந்தா கொடுப்பாங்க”

“என்ன சொல்லுற நீ?”

காதம்பரி இருவரையும் மாறி மாறி பார்க்க, “உங்க ரெண்டு பேருக்கும் கொடுக்க நினைச்ச ஃபேக்டரி தவிர, எல்லாமே போன வருசமே என் பேருக்கு வந்தாச்சு. கேஸ் போட பார்க்குறீங்களாமே? போடுங்க. என்ன செய்யுறீங்கனு நானும் பார்க்குறேன்” என்றாள் தெனாவெட்டாக.

“ம்மா.. என்ன இது? இவளுக்கு எல்லாத்தையும் கொடுத்துட்டீங்களா?அப்புறம் எதுக்கு என்னை பெத்தீங்க?”

“வக்கீல் சார்.. வேற எதுவும் இருக்கா?”

ஜாக்ஷி வக்கீலிடம் கேட்க, “இல்ல மேடம்” என்றார்.

“அப்படினா கிளம்புங்க. இவங்க ரெண்டு பேரும் நகைய கொண்டு வந்து கொடுத்ததும், ரிஜிஸ்ட்ரேஷன் வச்சுக்கலாம். உயில் வேலையும் முடிச்சுட்டு சொல்லுங்க”

“நான் வர்ரேன்மா” என்று ஜகதீஸ்வரியிடம் சொல்லி விட்டு கிளம்பி விட்டார்.

“எனக்கு அந்த நகை வேணும். நான் தர மாட்டேன்” என்று காதம்பரி அடம்பிடிக்க, “வச்சுக்கோங்க. ரெண்டு ஃபேக்டரியும் உங்களுக்கே கொடுக்கலாம்னு நினைச்சேன். வேணாம்னா போங்க.” என்றாள்.

ஆசையை தூண்டி விட்டு விட்டு, “நான் கிளம்புறேன் பாட்டி. வேலை இருக்கு” என்று விட்டு கிளம்பி விட்டாள்.

காதம்பரியின் கண்ணில் ஆசை மின்னியது. ஆனால் நகை மீதும் நிறைய ஆசை இருந்தது. எதை விட்டுக் கொடுப்பது என்று புரியவில்லை.

ஜகதீஸ்வரி மகளை கண்டு கொள்ளாமல் அறைக்குள் சென்று விட, தனியாய் இருக்க முடியாமல் காதம்பரியும் கிளம்பி விட்டார்.

நேராக சென்று அசோக்கிடம் நடந்ததை சொன்னார்.

“அப்ப அந்த வீடு சொத்து எல்லாமே ஜாக்ஷிகா?”

“ஆமா.. அதுவும் ஒரு வருசத்துக்கு முன்னாடியே எழுதி வச்சுட்டாங்களாம்”

“சரி விடு. நமக்கு தான் நம்ம தொழில் இருக்குல?”

“அப்படி எல்லாம் விட முடியாது. நான் கேஸ் போடுவேன். என் அம்மாவோட சொத்து. அத எப்படி விடுவேன்?”

“ஜாக்ஷி அவ்வளவு சீக்கிரம் விட மாட்டா. இதுக்கு மேல உன் இஷ்டம்” என்றதோடு அசோக் நகர்ந்து விட்டார்.

‘விடாம என்ன செய்யுறானு பார்க்குறேன். அவளுக்கு அவ்வளவு இருந்தா, அவ அம்மா எனக்கும் இருக்காதா?’ என்று நினைத்துக் கொண்டார்.

*.*.*.*.*.*.*.*.

அத்தனை பேரும் சென்ற பிறகே, வீரா வந்து சேர்ந்தான். அவனை பார்த்ததுமே அடையாளம் தெரிந்து உடனே உள்ளே விட்டனர்.

அவன் வந்த விசயம் ஜகதீஸ்வரிக்கு செல்ல, உடனே அறைக்கு அழைத்தார்.

“வாபா.. உட்காரு.. ஹாஸ்பிடல்ல பேசனும்னு போனியாமே? என்னாச்சு?”

“செக் பண்ணிட்டு சொல்லுறோம்னு சொல்லிருக்காங்க”

“நல்லது தான். டீ போட்டு கொண்டு வர சொல்லுறேன். குடி. கொஞ்ச நேரம் கழிச்சு பேசலாம். நீயும் களைச்சு இருக்க. இங்கயும் இப்ப தான் ஒரு பிரச்சனை முடிஞ்சது.”

“பரவாயில்ல.. ரெஸ்ட் எடுங்க. நான் வெளிய இருக்கேன்”

அவரை விட்டு விட்டு வெளியே வந்தான். முகம் கழுவி தேநீர் குடித்து முடித்த போது தான், அவனுக்கும் நன்றாக இருந்தது.

வெளியே சென்று நின்று கொண்டான். வீடு பெரியது என்பதால், வாசலும் பெரிதாக தான் இருந்தது. இரண்டு கார்கள் நிழலில் நிற்க, சற்று தள்ளி செயற்கை ஊற்று சலசலத்துக் கொண்டிருந்தது.

தண்ணீரை பார்த்தபடி நின்றிருக்கும் போது மனம் லேசானது. எதை எதையோ யோசித்தபடி நேரத்தை போக்கிக் கொண்டிருக்க, ஜகதீஸ்வரி வந்து விட்டார்.

“வீரா..”

“சொல்லுங்க பாட்டி”

“கார எடு பா. கிளம்பலாம்” என்றதும் புருவம் உயர்த்தியவன், சுற்றியிருந்த ஆட்களை கவனித்து விட்டு எதுவும் சொல்லாமல் சாவியை வாங்கி காரை எடுத்தான்.

இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதும், “ஜாக்ஷி வீடு தெரியும்ல? அங்க போ” என்றார்.

எதற்கென்று தெரிந்ததால், எதுவும் பேசாமல் காரை ஓட்டினான்.

“உன் அம்மா எப்படி இருக்கா?”

“பயத்துல தான் இருக்காங்க. ஆப்ரேஷன் முடிஞ்சா தான் சரியாவாங்க”

“ஆப்ரேஷனுக்கு பணம் வேணாம்னு சொல்லிட்டாளாமே? இங்க இருக்கும் போது ஏன் வேணாங்குறா?”

“அவங்க குடும்பத்துக்குள்ள எதாவது பேசியிருப்பாங்க. ஆரம்பத்துல இருந்தே அவங்களுக்கு எங்கள பிடிக்காது. எங்க கிட்ட போய் காசு வாங்குறதானு ஈகோ வந்துருக்கும். வேணாம்னு சொல்லிட்டாங்க”

“நல்ல ரோஷம் தான். அதான் ஒரு பையன் வேலைக்கு போறானே. அவன் கட்டட்டும்.”

“அவன் அவ்வளவு தெளிவானவன் இல்ல பாட்டி. அவங்க நகைய வைக்க போறதா சொல்லிட்டாங்க. ஆப்ரேஷன் முடிஞ்சா சரி”

“பேசாம நம்ம ஹாஸ்பிடல்ல வந்து சேர சொல்லேன்”

“ஜகதீஸ்வரி ஹாஸ்பிடல்ல கட்டுற அளவுக்குலாம் அவங்க கிட்ட பணமில்ல. நான் கட்டுனா பரவாயில்ல. அவங்களே கட்டும் போது…”

“பணத்துக்கு யோசிக்காத.. நாம சொல்லிட்டா, செலவுல பாதிய குறைச்சுடுவாங்க. டிரீட்மெண்ட்டும் நல்லபடியா முடிஞ்சுடும். என்ன சொல்லுற?”

“இந்த மாதிரி பண்ணா அவங்க ஈகோ ரொம்ப அடிவாங்கும். என் கிட்ட வாங்குறதயே அசிங்கமா நினைக்கிறாங்க பாட்டி”

“இதுல அசிங்கபட என்ன இருக்கு? நமக்கு தேவை நல்ல மருத்துவம். அது எங்க கிடைச்சா என்ன? நீ வேற எதுவும் சொல்லாம நேரா நம்ம ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போயிடு. அங்க நான் பேசிக்கிறேன். என்ன?”

“ட்ரை பண்ணுறேன்”

இருவரும் பேசிக் கொண்டே ஜாக்ஷியின் வீட்டை அடைந்தனர்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
23
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. இப்ப பாட்டியம்மா ஜாசஷி வீட்டுக்குப் போய் வீ ரா வுக்கு என்ன போஸ்டிங் கொடுக்கலாம்ன்னு முடிவெடுக்கப்போறாங்களோ ?
      இல்லை, ஆல்ரெடி முடிவெடுத்துட்டாங்களா…?

      😀😀😀
      CRVS (or) CRVS 2797

    2. பாட்டி ஜாக்ஷி செம.