Loading

ஜாக்ஷி பேசப்போக, அவளை தடுத்து வீரா காருக்கு இழுத்து வந்து விட்டான். அவன் இழுப்புக்கு வந்தவள், கையை வெடுக்கென பிடுங்கிக் கொண்டு காரில் ஏறிக் கொண்டாள்.

அவளது கோபத்தின் அளவை உணர்ந்த வீரா, எதுவும் பேசாமல் காரை எடுத்தான்.

ஜாக்ஷிக்கும் எதுவும் பேசப்பிடிக்கவில்லை. கோபம் கோபமாக வந்தது. எல்லோரின் மீதும் கோபம் வந்தது. பிறக்கும் முன்பே தன்னை கொல்ல பார்த்த காதம்பரியின் மீதும் கோபம் வந்தது.

கட்டிய மனைவிக்கு உண்மையாக இல்லாமல், பிள்ளை மற்றும் பெற்றுக் கொண்டு, அவளையும் தூக்கிப்போட்டுச் சென்ற சிற்றம்பலத்தின் மீதும் கோபம் வந்தது.

இப்போது காதம்பரியிடம் பதிலுக்கு பேச விடாத வீராவின் மீதும் கோபம் வந்தது.

எதுவும் பிடிக்கவில்லை. மனம் உடைந்து கொண்டிருந்தது. ஒன்பது வயதில், பெற்ற இருவருமே அவளை வேண்டாம் என்று உதறியதை தாங்கிக் கொண்டு வளர்ந்து விட்டாள். ஆனால் பிறக்கும் முன்பே அவளை அழிக்கப்பார்த்திருக்கிறாளே பெற்றவள்?

இப்படி யாருக்குமே பிடிக்காமல் அவள் ஏன் பிறந்து வளர்ந்தாள் என்று தெரியவில்லை.

காதம்பரி, “மகளே!” என்று கொஞ்சியது இல்லை. ஆனால் சிற்றம்பலத்தின் செல்ல மகளாக தான் ஒன்பது வயது வரை வளர்ந்தாள்.

அவளது பிறந்தநாளின் போது, காதம்பரியும் தாத்தாவும் ஊரையே கூப்பிட்டு பெரிதாகக் கொண்டாடி மகிழத்தான் செய்தனர். அந்த மகிழ்ச்சி எல்லாம் எதற்கு? பிறக்கும் போதே உயிரை பறிக்க நினைத்தவளுக்கு எதற்காக அந்த விழா?

மொத்தமும் நாடகமாக தோன்றியது. சுற்றி இருந்த அனைவரும் சுயநலமாக நடித்துக் கொண்டிருந்திருக்கின்றனர். தாத்தாவுக்கு சொத்தை காக்க மருமகன். காதம்பரிக்கு பிறந்த வீட்டு நிரந்தர வாழ்வு. சிற்றம்பலத்திற்கு இரண்டு வாழ்வு.

இதில் ஜாக்ஷி என்ன தவறு செய்தாள்? என்று அவளுக்கே புரியவில்லை.

கண்கள் கலங்கி விடாமல் இருக்க கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

வீரா அவளை கவனித்தபடியே காரை ஓட்டிக் கொண்டிருந்தான். வெளியே சாப்பிடும் ஆசை காணாமல் போக, வீட்டை நோக்கிச் சென்றான்.

அவனாலும் காதில் கேட்டதை ஜீரணிக்கவே முடியவில்லை. எப்படி முடியும்? ஒரு தாய் பிள்ளை பிறக்கும் போது, நலமாய் பெற்றெடுக்க வேண்டாமல், வயிற்றுக்குள் கொல்ல சொல்ல முடியுமா?

நினைக்கும் போதே தாங்க முடியவில்லை அவனால். இப்படி ஒருத்தருக்கு கடவுள் இரண்டு பிள்ளைகளை கொடுத்திருக்கக் கூடாது.

நல்ல மருத்துவராக இருக்கப்போய், அன்று ஜாக்ஷி தப்பித்தாள். காதம்பரி சொல்லும் போது, வலி பொறுக்காமல் உளறுவதாக நினைத்திருந்தார் மருத்துவர். உண்மையான காதம்பரியின் குணம் தெரிந்திருந்தால், பிறக்க போகும் ஜாக்ஷிக்காக அவரும் வருத்தப்பட்டு இருப்பார்.

காதம்பரி, மருத்துவர், அங்கிருந்த நர்ஸ் தவிர யாருக்குமே தெரியாத விசயம், இன்று காதம்பரியின் வாயால் வந்து இருவரின் மனதையும் உடைத்திருந்தது.

காதம்பரியின் கையில், ஜாக்ஷி வளராமல் போனது கூட நல்லது தான். எந்த கோபத்தில் அவளை கொன்று கதையை முடித்திருப்பாரோ?

நினைக்கும் போதே பயந்து அவளை பார்த்தான். அவள் முகத்தில் இருந்த வேதனை அவனையும் வாட்டியது.

சுபத்ராவின் தாய், பெற்ற மகளை பதினாறு வயதில் விற்கப் பார்த்திருக்கிறாள். ஜாக்ஷியை பெற்றவள், கருவிலேயே அழிக்கப் பார்த்திருக்கிறாள்.

இவர்களை பார்க்கும் போது, தாமரை அவ்வளவு மோசமில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவனை ஒதுக்கி வைத்தாரே தவிர, அவன் அழிந்து போக வேண்டும் என்று நினைக்கவே இல்லை.

வீட்டுக்கு வந்ததும் வீரா ஜாக்ஷியை தொட, பட்டென கண்ணை திறந்தவள் வேகமாக இறங்கி உள்ளே சென்றாள்.

“இவளுக்கு எவ்வளவு கோபம் தான் வருமோ? ஆனாலும் எல்லாரும் இவள கஷ்டப்படுத்தி பார்த்துட்டே இருக்காங்க” என்று வருத்தபட்டுக் கொண்டு பின்னால் சென்றான்.

ஜாக்ஷி அறைக்குள் சென்று விட, வீராவும் உடை மாற்றிக் கொண்டான்.

அவளை தனியாக விடத்தோன்றாமல் அவளது அறைக்கு செல்ல, கதவு வழக்கத்துக்கு மாறாக பூட்டியிருந்தது.

எப்போதும் பூட்டி வைக்க மாட்டாள். கதவை தட்டி விட்டு அவன் உள்ளே சென்று விடுவான். புதிதாய் பூட்டி இருக்க, சந்தேகமாக இருந்தது.

“இவளுக்கு என் மேல என்ன கோபம்?” என்று குழப்பத்துடன் கதவை தட்டினான்.

“ஜாக்ஷி கதவ திற”

பதில் வரவில்லை.

“ஜாக்ஷி கதவ திறனு சொன்னேன்” என்று மீண்டும் தட்ட, இரண்டு நொடியில் கதவு திறந்து விட்டது.

உள்ளே வந்தவன், அவளை பார்த்தான். அவள் எங்கோ பார்த்தாள்.

“சாப்பிட என்ன வேணும்?”

“எதுவும் வேணாம்”

“பசியோட இருப்பியா? அவங்க பேசுனதுக்கு நீ சாப்பிடாம இருக்கனுமா? என்ன வேணும்னு சொல்லு.. செய்யுறேன். இல்லனா நீயும் கீழ வா”

“உனக்கு சொன்னா புரியலயா? வேணாம்னு சொல்லுறேன்.”

“இப்ப ஏன் என் கிட்ட கோபப்படுற?”

“கோபப்படாம? நீ ஏன் என்னை கன்ட்ரோல் பண்ண பார்க்குற?”

“கண்ட்ரோலா?”

“ஆமா.. என் இஷ்டத்துக்கு தான் இருக்க முடியும். எனக்கு சாப்பாடு வேணாம்னா வேணாம் தான்”

“சாப்பிட சொல்லுறது கண்ட்ரோலா? என்ன இஷ்டத்துக்கு உளறிட்டு இருக்க?”

“உளறுறனா? எனக்கு சாப்பாடு வேணாம்”

“பட்னி கிடப்பியா?”

“ஆமா”

“விட மாட்டேன். ஒழுங்கா கீழ வா”

“எப்ப பாரு ஏன் இப்படி பண்ணுற? வேணாம்னா விடேன். ஏன் உன் இஷ்டத்துக்கு என்னை மாத்துற? இப்ப சாப்பிடலனா என்ன கெட்டுப்போச்சு? எப்பவும் உன் முடிவுல தான் நிப்பியா? அங்கயும் என்னை பேச விடாம பண்ணி இழுத்துட்டு வந்துட்ட. அன்னைக்கும் அப்படி தான் இழுத்துட்டு போயிட்ட. இன்னைக்கும் இழுத்துட்டு வர்ர. ஏன்? என் கோபத்த கொட்ட கூட விட மாட்டியா? அங்க தான் அப்படினா, இங்க வந்தும் உன் இஷ்டத்துக்கு செய்ய சொல்லுற. என்ன நினைச்சுட்டு இருக்க நீ?”

“அங்க நீ பேசனும்னு அவசியம் இல்ல”

“அத நீ ஏன் சொல்லுற? உனக்கு கோபம் வந்து பேசும் போது, நான் தடுக்குறனா? நீ ஏன் தடுக்குற?”

“நான் தான் சொல்லுவேன். நான் சொல்லாம வேற யாரு சொல்லனும்னு நினைக்கிற?”

“உனக்கு அறிவு வேலை செய்யலயா? அந்த காதம்பரி உன்னையும் என்னையும் தான் அசிங்க படுத்துனா. பதிலுக்கு நாலு கேள்வி கேட்டுருப்பேன். அதுக்குள்ள இழுத்துட்டு வர்ர நீ. என்ன உன் பிரச்சனை? எல்லாரும் உன்னை மாதிரி பொறுமையாவே இருப்பாங்கனு நினைப்பா? என்னால முடியாது. பேசினா பதிலுக்கு பேசத்தான் செய்வேன். என்னை கண்ட்ரோல் பண்ணாத சொல்லிட்டேன்”

“நீ பதிலுக்கு பேசுவ. அப்புறம்? அப்புறம் என்ன? இத விட கேவலமாக அந்தம்மா பேசும். அதுக்கும் பதில் சொல்லுவ. அப்புறம் என்ன? ரெண்டு பேரும் பேசுறத கேட்க, ஆஃபிஸ்ல மிச்சமிருக்க அத்தனை பேரும் கூட்டம் கூடுவாங்க. அத்தனை பேர் முன்னாடி உன் மரியாதை குறையும். இல்ல என்ன நினைச்சுட்டு இருக்க நீ? சாக்கடைய கண்டா தாண்டி போனு சொன்னா, தாண்டிப்போய் தான் ஆகனும். அது கண்ட்ரோல்னா அப்படித்தான் செய்வேன். சாக்கடையில இறங்குற அளவுக்கு, நீ தகுதி இறங்குறத வேடிக்கை எல்லாம் பார்க்க முடியாது. இப்ப உனக்கு சாப்பாடு வேணாமா? உன்னை பட்னியா விடவும் முடியாது. ஆனா வீம்புக்கு பட்னி இருப்பனா இரு. உன்னை விட எனக்கு பிடிவாதம் பிடிக்க தெரியும்.”

அவளை பேச விடாமல் மடமடவென பேசி விட்டு, வேகமாக வெளியேறி விட்டான்.

தன் அறைக்கு செல்லாமல் நேராக சமையலறைக்கு வந்தவன், சமைக்கும் வேலையை ஆரம்பித்தான். சப்பாத்தியை அவளுக்கும் சேர்த்தே சுட்டு வைத்து விட்டு, சாப்பிடாமல் சென்று படுத்து விட்டான்.

ஜாக்ஷிக்கு அவன் பேசி விட்டு தன் பதிலை கேட்காமலே சென்றது கோபமாக வந்தது.

‘அவ்வளவு பேசுனவளுக்கு பதில் சொல்லாம வந்ததுக்கு நான் தான் கோபப்படனும். இவன் இஷ்டத்துக்கு கத்திட்டு போறான்’ என்று கோபத்தோடு அவளும் படுத்து விட்டாள்.

ஆனால் கோபமெல்லாம் வயிற்றுக்கு எங்கே தெரிகிறது? அது பசியை கண் முன்னால் காட்டி, ‌என்னை கவனி என்று கட்டளையிட்டது.

சுபத்ரா இருந்த போது கூட, ஜாக்ஷி சாப்பிடாமல் இருந்துவிடுவாள். ஆனால் வீரா அவளை விட்டது இல்லை. ஒன்றாக அமர்ந்து சாப்பிட பழக்கி இருந்தான். இப்போது பசித்தது.

‘இந்த வயிறு வேற மானத்த வாங்குது’ என்று புலம்பிக் கொண்டே கீழே சென்றாள்.

சமைத்ததற்கான அறிகுறி இருக்க, சாப்பிடவில்லை என்று தெளிவாக இருந்தது.

‘இவனும் கோச்சுட்டு சாப்பிடலயா?’ என்று நினைத்தவளுக்கு ஆயாசமாக இருந்தது.

சற்று யோசித்து விட்டு, விறுவிறுவென அவனது அறைக்குச் சென்றாள். கதவை திறந்து பார்க்க, விளக்கு கூட எரியவில்லை.

அவன் மெத்தையில் படுத்திருக்க, அருகே சென்று அமைதியாக படுத்துக் கொண்டாள். அவள் வந்தது தெரிந்தும், அவன் ஒன்றும் பேசவில்லை.

சில நிமிடங்கள் மௌனமாகவே இருவரும் படுத்திருந்தனர்.

“எனக்கு பசிக்குது” என்றாள்.

சில நொடிகளுக்கு பிறகு எழுந்தவன், அவளது கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு கீழே இறங்கினான். ஒன்றுமே பேசவில்லை. உணவு உள்ளே போனது.

இருவரும் பேசத்தயாராக இல்லை. அவன் கட்டுப்படுத்துவதாக அவளும், அவள் அதிகமாக கோபப்படுவதாக அவனும் ஆளுக்கொரு பக்கம் திரும்பிக் கொண்டு நின்றிருந்தனர்.

சாப்பிட்டு முடித்ததும் அவரவர் அறைக்குள் சென்று அடைந்து விட்டனர்.

ஜாக்ஷி தூங்க முடியாமல் போராடி விட்டு, வேலையை பார்க்க ஆரம்பிக்க, வீரா வெகுநேரம் கழித்து உறங்கி விட்டான்.

அடுத்த நாள் காலையில், ஜாக்ஷியின் கார் அலுவலகத்திலேயே இருப்பதால் ஒன்றாக தான் கிளம்பினர். அப்போதும் மௌனம் தான். இருவரும் பேசிக் கொள்ள தயாராக இல்லை.

ஜாக்ஷியை அலுவலகத்தில் இறக்கி விட்டு விட்டு, அவளது முகத்தை பார்த்தான். அவளும் இமைக்காமல் பார்த்து வைத்தாள்.

“ஈவ்னிங் சுபத்ராவ பார்க்க போகனும். அங்க வந்துடு” என்று விட்டு கிளம்ப, ஜாக்ஷி தலையசைத்து விட்டதோடு தள்ளி நின்று கொண்டாள்.

முதல் முதலாக பேசாமல் அல்லது இவ்வளவு கோபத்தோடு அவனை பார்ப்பது, அவளுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் அவளுக்கு எல்லாவற்றையும் அப்போதே பேசிப்பழக்கம். அதை அவன் ஏன் புரிந்து கொள்ளவில்லை? என்ற கோபத்துடனே வேலையை பார்த்தாள்.

வீராவும் அவளிடம் பேசாமல் இருக்க நினைக்கவில்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் கோபப்படுவதால், பேசுபவர்கள் தரத்திற்கு நாமும் இறங்கி பேசக்கூடாது என்ற விசயம் அவளுக்கு புரியாத வருத்தம் அவனை பிடிவாதம் பிடிக்க வைத்தது.

இருவரும் தங்களது கோபத்துடனே அந்த நாளை கடந்தனர்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
29
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. சில பேர் பேசினா, கண்டுக்காத மாதிரியே இருக்கிறது
      பெட்டர் வே..!

      😀😀😀
      CRVS (or) CRVS 2797