Loading

 

ஜானகி குழப்பத்துடன் நின்றிருந்தாள். பிறகு வீட்டுக்குச் சென்று, பொறுமையாக யோசித்தாள். அவளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. தந்தை தனியாளாக உருவாக்கிய ஒன்று. எனக்கு வேண்டாம் என்று ஜாக்ஷி தூக்கிப்போடப் பார்க்கிறாள்.

அதை ஜானகிக்கு கொடுப்பதால் அவளுக்கு என்ன நன்மை? விற்று விட்டு போவதால் என்ன லாபம்?

முதலில் இவள் பேசியது உண்மை தானா? கந்தசாமிக்கு தெரியும் என்றாளே? அவனை பற்றிய விவரங்கள் எதுவும் அவளுக்கு தெரியாது. தந்தையின் பொருளில் தேடிப்பார்க்கலாமா? என்று யோசித்தவள், உடனே எழுந்து அவரது அறைக்குச் சென்றாள்.

அங்கு மேனகா இல்லை. அவ்வப்போது வெளியே சென்று விடுவார். இன்னும் வரவில்லை. சண்டை போட்டதிலிருந்து வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல், இப்படி தான் இருக்கிறார்.

அதைப்பற்றிக் கண்டு கொள்ளாமல், தந்தை எப்போதும் வைத்திருக்கும் டைரியை எடுத்தாள். அதில் முன் பக்கத்தில் சில விவரங்கள் இருக்க, பின் பக்கம் எல்லோரின் கைபேசி எண்ணும் இருந்தது.

ஜாக்ஷி, காதம்பரி, அசோக்கின் எண் உட்பட.

“கந்தசாமி.. ரெண்டு இருக்கு?” என்று யோசித்தாலும், இரண்டையும் எடுத்துக் கொண்டாள்.

‘எந்த நம்பர்னு செக் பண்ணிக்கலாம்’ என்று நினைத்தவள், மீண்டும் அறைக்கு வந்தாள்.

இப்போது என்ன செய்வது? ஒரு வேளை அந்த ஃபேக்டரியை சிற்றம்பலம் உருவாக்கி இருந்தால், அதை அப்படியே அழிந்து போக விட அவளுக்கு மனம் இல்லை.

ஜாக்ஷி கெட்டவள் தான். ஆனால் ஒருவருக்கு குழி பறிக்கும் அளவு கெட்டவள் இல்லை. அவள் பேச்சில் நேர்மை அதிகமாக இருக்கும். எல்லாம் சிற்றம்பலம் படித்த புராணத்தில் அவள் தெரிந்து கொண்டது தான்.

தன்னை பார்த்ததும் ஜாக்ஷி இந்த விசயத்தை பேசியிருக்கிறாள் என்றால், அவள் பேசுவது உண்மையாகத்தான் இருக்கும். ஆனால் அதை உறுதி செய்யவும் தோன்றியது.

முதலில் கந்தசாமியை கண்டு பிடிக்க வேண்டும். தந்தை இறந்த பிறகு, விபத்தான காரை விற்று விட்டு பணத்தை கொண்டு வந்து கொடுத்த போது, அவனை கடைசியாக பார்த்திருந்தாள். அதன் பிறகு அவனை பார்க்கவே இல்லை. ஆனால் அவனை தவிர வேறு யாருக்கும் தெரியாது என்று சொல்லி விட்டாளே.

முதல் எண்ணை அழைக்க, அவளது நல்ல நேரம் அதே கந்தசாமி தான் எடுத்தான்.

“ஹலோ?”

“கந்தசாமி?”

“ஆமா நீங்க?”

“நான் ஜானகி.. சிற்றம்பலத்தோட பொண்ணு”

“ஓ.. சொல்லுங்க”

“நீங்க பிஏ கந்தசாமி தான?”

“ஆமா..”

“ஓ… ஓகே உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்.”

“எத பத்தி?”

“அப்பாவ பத்தி”

“என்ன?”

“நேர்ல பேச முடியுமா?”

“இப்பவா?”

“இல்ல.. எப்ப ஃப்ரீனு சொல்லுங்க”

“வீட்டுக்கு நான் வரவா?”

“ஐயோ! வேணாம்”

கந்தசாமி ஒரு நொடி குழப்பத்துடன் அமைதியாக, “நான் வர்ரேன். எங்கயாவது மீட் பண்ணலாமா?” என்று கேட்டாள்.

யோசித்து விட்டு, “நாளைக்கு கோவில்ல பார்க்கலாம்.” என்று கோவில் பெயரை சொல்ல, உடனே சம்மதித்தாள்.

“நாளைக்கு சண்டே லீவ். காலையில வந்துடுங்க”

“ஓகே” என்று உடனே ஒப்புக் கொள்ள, அவன் வைத்து விட்டான்.

‘இவன் கிட்ட விசயத்த கன்ஃபார்ம் பண்ணிட்டு, அப்புறம் ஜெகன் கிட்ட பேசனும். அப்புறமா அம்மாவுக்கு சொல்லுவோம். அவ தான் அம்மா கிட்ட உளறி வைக்காதனு சொல்லிட்டு போயிட்டாளே. சோ பார்த்து தான் பேசனும்’ என்று யோசித்தபடி தூங்கி விட்டாள்.

*.*.*.*.*.*.

ஞாயிற்றுக்கிழமை..

மொத்த குடும்பமும் சுபத்ராவை சுற்றி இருந்தது. அது விஐபி அறை என்பதால், சகல வசதிகளும் இருந்தது.

லட்சுமி பாட்டி அவளுக்கு அழகாய் சடை பிண்ணி அலங்காரம் செய்து கொண்டிருக்க, “நீயும் முடிய நிறைய வளர்த்துருந்தா இப்படி பிண்ணிருக்கலாம்” என்று ஜாக்ஷியை இடித்தார் ஜகதீஸ்வரி.

“இருக்க முடியவே மேனேஜ் பண்ண நேரமில்ல. இவள மாதிரி வளர்த்து, என்னைக்கு பிண்ணி.. நான் என்னைக்கு ஆஃபிஸ் போறது?”

“பொண்ணுங்களுக்கு நிறைய முடி இருக்கது தான் அழகு”

“அப்ப நான் அழகா இல்லையா? டேய் நான் அழகா இல்லையா?” என்று வீராவிடம் கேட்க, மருந்துகளை பார்த்துக் கொண்டிருந்தவன் திருதிருவென விழித்தான்.

“என்னை ஏன் இப்ப இழுக்குற?”

“கேட்டதுக்கு பதில் சொல்லு.. நான் அழகா இருக்கனா? இல்லையா?”

“அழகா தான்மா இருக்க”

“அத இந்த ரெண்டு பேருக்கும் சொல்லு”

“நான் மாட்டல ஆள விடு”

“இப்ப நீ சொல்லல…”

“அவங்களுக்கே கண்ணு தெரியும். அவங்களே தெரிஞ்சுப்பாங்க. பூக்கடைக்கு எதுக்குடா விளம்பரம்?” என்று தப்பித்தான் வீரா.

சுபத்ரா சிரித்துக் கொண்டே இருந்தாள்.

“ரொம்ப சிரிக்காதடி.. இருமல் வந்துட போகுது” என்று அதட்டி அவளை அடக்கினர்.

“நான் இங்க ஒருத்தர பார்த்தேன் அண்ணி”

“யார?”

“ஒருத்தர்.. யாருனு தெரியல. சின்ன பையன வச்சுட்டு இருந்தார். தினமும் என் கூட பேசுவார். நான் அவர் கிட்ட சைகையில தான் பேசுவேன்”

வீராவும் ஜாக்ஷியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். யாரென்று தெரியாமல் மாட்டிக் கொள்ள கூடாதே என்ற கவலை. ஆனால் அதைக்காட்டி பயமுறுத்தாமல் விசாரித்தனர்.

“அவர் பேரு முருகன். அவங்க அண்ணிக்கு டெலிவரியாம். இங்க தான் அட்மிட் பண்ணிருக்காங்க”

“ஓஹோ.. உன் கிட்ட வந்து பேசுனாரா?”

“இல்ல. நானா தான் பேசுனேன். அந்த சின்ன பையன் அழகா இருந்தான்.”

“எங்களுக்கும் ஒரு தடவ காட்டு” என்று லட்சுமி பாட்டி கேட்க, பலமாக தலையாட்டினாள்.

வீட்டினரை தவிர இன்னும் அவள் யாரிடமும் வாய் திறந்து பேசவில்லை. சிகிச்சை முடியும் வரை, அதிகமாக பேசி கஷ்டப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று கூறியிருந்தனர்.

லட்சுமியும் ஜகதீஸ்வரியும் வீட்டுக்கு சென்று விட, மாலை மீண்டும் முருகனை சந்தித்தாள்.

“அதோ” என்று ஜாக்ஷிக்கு காட்ட, வீராவும் அமைதியாக பார்த்துக் கொண்டான்.

அவன் கையில் சிறுவன் இருந்தான். அவனோடு விளையாடிக் கொண்டிருந்தான்.

“நீ போ” என்றதும் சுபத்ரா அவர்களை புரியாமல் பார்க்க, “நீ பேசு. நாங்க இங்க இருந்து பார்க்குறோம்” என்று கூறி அனுப்பி வைத்தனர்.

அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று புரிய, சுபத்ரா ஒன்றும் சொல்லாமல் சென்றாள். அவள் வாழ்வில் நடந்ததை வைத்து, அவளுடைய பாதுகாப்பை ஜாக்ஷியும் வீராவும் தான் பார்க்கின்றனர். அதனால் அவர்களை புரிந்து கொண்டாள்.

சுபத்ரா சென்றதும், முருகன் முகம் மலர பார்த்தான்.

“வாங்க இப்ப காயம் குறைஞ்சுடுச்சா? கட்டு சின்னதாகிடுச்சே?”

சுபத்ரா தலையாட்ட, சிறுவன் அவளை பார்த்து சிரித்து வைத்தான்.

“அக்கா.. நீங்க எங்க இருக்கீங்க? உங்கள பார்க்கலாம்னு சொன்னா, சித்தப்பா ரூம் தெரியலனு சொல்லிட்டாரு”

“நாலாவது மாடில இருக்கேன்” என்றதும், முருகன் கண்கள் அகல விரிந்தது.

அது விஐபி பகுதி அல்லவா?

“அங்கயா? ஓகே ஓகே” என்றவன், வேறு எதுவும் கேட்கவில்லை.

இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்றால், நிறைய பணம் வைத்திருப்பவர்கள் தான் வர முடியும்.  ஆனால் சுபத்ரா விஐபியாக இருப்பாள் என்று நினைக்கவில்லை.

ஆனால் அதற்காக அவளை விட்டு ஒதுங்கவும் தோன்றவில்லை. இயல்பாகவே வயதுக்கு உரிய ஈர்ப்பும் ஆர்வமும் அவள் மீது இருந்தது தான். அதை தாண்டி எதுவும் அவனுக்கு இல்லை. இனியும் வளர்த்துக் கொள்ளப்போவது இல்லை.

“பார்க்க நல்லவனா தெரியுறான்” என்று வீரா சொல்ல, “பார்த்ததுமே தெரிஞ்சுடுமா?” என்று முறைத்தாள் ஜாக்ஷி.

“பசங்க எவ்வளவு நல்லவனா நடிச்சாலும், அவங்க பார்வை காட்டி கொடுத்துடும் எப்படி பட்டவன்னு. இவன் நல்லவனா இருக்கான். பார்வை தடுமாறல”

“ஓஹோ”

“வெறும் ஃப்ரண்டா பழகுற வரை பிரச்சனை இல்ல. ஏன்னா அவளும் உலகத்த தானா தான் தெரிஞ்சுக்கனும். நீயும் நானும் கைக்குள்ளயே வச்சுருக்க முடியாது. இப்படி இயல்பா இருக்கனும்னு தான நாமலும் போராடுனோம்?”

“அவளுக்கு வாய்ஸ் வரவும் தைரியம் வந்துடுச்சுனு நினைக்கிறேன்”

“அடி பட்டு வாய்ஸ் போச்சு. அதோட பயந்த பொண்ணாகிட்டா. இப்ப குரல் வரவும் கொஞ்சம் தெளிவாகுறா. அடுத்த வருசம் காலேஜ்ல சேர்த்துடுவோம். படிச்சுட்டா தெளிஞ்சுடுவா” என்றதும், ஜாக்ஷி தலையாட்டி வைத்தாள்.

“சரி வா உள்ள போவோம். அவ வரட்டும்” என்று அழைத்துச் சென்று விட்டான்.

சுபத்ரா அவர்கள் செல்வதை பார்த்தாலும், ஒன்றும் செய்யவில்லை. அவர்களோடு சில நிமிடங்கள் வழக்கம் போல் பேசி விட்டு, எழுந்து கொண்டாள்.

“அக்கா.. நான் உங்க ரூம்க்கு வரவா?” என்று சிறுவன் கேட்க, “அதெல்லாம் வேணாம். நாம போய் பாப்பாவ பார்க்கலாம்” என்று திசை திருப்பினான் முருகன்.

“ஐ.. ஜாலி நான் பாப்பாவ பார்க்க போறேன்” என்று முதலில் கேட்டதை மறந்து அவன் குதிக்க, முருகன் அவனை தூக்கிக் கொண்டு சுபத்ராவிடம் புன்னகையுடன் விடை பெற்றான்.

சுபத்ரா அறைக்கு வந்து இருவரையும் பார்த்தாள்.

“என்ன?”

“ஏன் வந்துட்டீங்க?”

“அவன் நல்லவனா தெரிஞ்சான். அதான் நீ புது ஃப்ரண்ட் கூட நல்லா பேசனுமேனு வந்துட்டோம்”

“நல்லவர்னு தான் எனக்கும் தோணுது”

“நிறைய டீடைல்ஸ் சொல்லாத. பட் ஃப்ரண்டா இருக்கது தப்பில்ல” என்று ஜாக்ஷி சொன்னதும், தலையாட்டி வைத்தாள்.

*.*.*.*.*.*.

காலையிலேயே ஜானகி கிளம்ப, ஜெகனும் வேலைக்குக் கிளம்பினான். ஞாயிற்றுக்கிழமை முழுநேரமும் கம்ப்யூட்டர் சென்டரில் தான் இருப்பான்.

“நீ எங்ககா கிளம்பிட்ட?”

“ஒரு ஃப்ரண்ட்ட பார்க்க. கோவிலுக்கு போறேன். அப்புறமா கால் பண்ணுறேன். வீட்டுக்கு தேவையானத வாங்கனும்”

“சரிகா”

மேனகா இரண்டு பிள்ளைகளையும் முறைத்தார். அவருக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டதே.

ஜானகிக்கு அனைத்து உண்மையும் தெரியும் என்பது அவருக்கு அதிர்ச்சி தான். ஆனால் அதற்காகவெல்லாம் அவரால் அந்த ஃபேக்டரியை விட்டு விட முடியாது. பிள்ளைகளை எப்படி வழிக்கு கொண்டு வருவது? என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தார்.

இருவரும் அவரை மதிக்காமல் கிளம்பிச் சென்று விட்டனர்.

ஜானகி கோவிலுக்குச் செல்ல, வாசலிலேயே அவளுக்காக காத்திருந்தான் கந்தசாமி.

மிகவும் சாமி பக்தி உடையவன். திருநீறு இல்லாமல் அவனை பார்க்கவே முடியாது. இன்றும் பூசிக் கொண்டு தான் நின்றிருந்தான். அவனிடம் ஜானகி நிறைய பேசியது இல்லை. எப்போதாவது அப்பாவை தேடிச் சென்றால், அவனிடம் விசாரிப்பாள். அதை தவிர எதுவும் பேசியது இல்லை. அவனும் பேச மாட்டான்.

“ஹாய்” என்று ஜானகி சொல்ல, “ஹாய்.. கோவிலுக்கு உள்ள போயிட்டு வர்ரீங்களா?” என்று கேட்டான்.

அவளுக்கும், இருக்கும் குழப்பத்திற்கு கடவுளிடம் தான் பதில் கிடைக்கும் என்று தோன்ற, உடனே தலையாட்டி விட்டுச் சென்றாள்.

குழப்பத்தை கடவுளிடம் கொட்டி விட்டு வர, கந்தசாமி ஓரமாக நின்றிருந்தான். கூட்டம் அதிகம் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள் இருந்தனர். அதுவும் பெரிய பிரசித்தி பெற்ற கோவில் அல்ல. சிறிய கோவில் தான்.

“சொல்லுங்க என்ன பேசனும்?”

“உங்களுக்கு அப்பாவ பத்தி எல்லாமே தெரியுமா?”

“ஆறு வருசமா அவருக்கு பி.ஏவா இருந்துருக்கேன். முடிஞ்சவரை சொல்லுறேன்”

“அவரோட சொத்து ஒன்னு.. ஜாக்ஷி எனக்கு தர்ரேன்னு சொல்லுறா. ஆனா அதுல அவ சிலது சொன்னா. உங்களுக்கு தெரியுமானு கேட்க கூப்பிட்டேன்”

“எந்த சொத்து?”

ஜானகி ஃபேக்டரி விவரங்களை சொல்லி விட்டு, “அத அப்பா உருவாக்குனது. ஆனா பணம் போட்டது பாட்டிங்குறதால பாட்டியும் பார்ட்னரா இருக்கதா சொன்னாங்க” என்றாள்.

“ஆமா உங்கப்பாவோட அசை தான். அவர் தான் பண்ணாரு. இப்ப அதுக்கு என்ன?”

“அத எனக்கு தர்ரேன்னு ஜாக்ஷி சொல்லுறா. நான் வேணாம்னு சொன்னா வித்துடுவேன்னு சொல்லுறா”

“வாட்? ஏன் விக்கனும்? அது நல்லா தான போயிட்டு இருக்கு?”

“அவளுக்கு அத வச்சுக்க பிடிக்கலயாம்”

“மேடம் கிட்ட நான் வேணா பேசவா? ஆக்ட்சுவலி அது நல்ல லாபம் வர்ர ஃபேக்டரி தான். அத விக்கனும்னு நினைக்கிறது நல்லது இல்ல.”

“என்னை வாங்கிக்க சொல்லுறா”

“வாங்கிக்கலாம். நிஜம்மா நீங்க அத நல்லா நடத்துனா, நிறைய லாபம் வரும்”

“ஓ..”

“ஏன் உங்களுக்கு வாங்க விருப்பமில்லயா?”

“அப்படியில்ல”

“நான் எதாச்சும் ஹெல்ப் பண்ணனுமா?” என்று அவள் தயக்கத்தை பார்த்து கேட்டான்.

“முதல்ல அவ கொடுக்கும் போது, ஒன்னும் வேணாம்னு சொல்லிட்டு வந்துட்டோம்‌. இப்ப திரும்ப அவ டீடைல் சொல்லும் போது வாங்கலாமா? வேணாமா? னு டவுட்டா இருக்கு.”

“ஒன்னு சொன்னா கோச்சுக்க மாட்டீங்களே?”

“சொல்லுங்க”

“முதல்ல ஜாக்ஷி மேடம அவ இவனு என் முன்னாடி பேசாதீங்க. அவங்க அறிவுல பாதி கூட எனக்கில்லனு பல தடவ பார்த்து வியந்துருக்கேன். அவங்கள நீங்க இப்படி பேசுறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு”

ஒரு நொடி அதிர்ச்சிக்கு பிறகு, ஜானகி தலையாட்டினாள்.

“அப்புறம்.. அவங்க உங்களுக்கு கொடுக்கனும்னு நினைச்சா, அதுல தப்பில்ல. இது உங்க அப்பாவோட சொந்த முயற்சி. ஆனா அத அவரு தனி சொத்தா எடுத்துக்கல. எடுத்துருந்தா அது ஆட்டோமேட்டிக்கா உங்களுக்கு வந்துருக்கும். இப்ப அவங்க கிட்ட இருக்கது பிடிக்காம, உங்களுக்கு தர்ராங்கனா, கண்டிப்பா வாங்கலாம். ஜாக்ஷி மேடம் அவங்க அப்பாவ தவிர யாரையும் தண்டிக்க மாட்டாங்க. நீங்க பயப்படாம வாங்கலாம்”

‘இவனுக்கு அவ மேல இவ்வளவு மரியாதையா? அப்பாவும் அவள புகழ்ந்து தள்ளுவாரு. இவனும் இவ்வளவு பெருமையா பேசுறான். அவ்வளவு அறிவாளியா அவ?’ என்று ஜானகியால் பொறாமைப்படாமல் இருக்க முடியவில்லை.

“அப்ப அ.. ஜாக்ஷி சொன்னது உண்மை தானா?”

“ஆமா..”

“ஓகே இத கேட்க தான் கூப்பிட்டேன். வந்ததுக்கு தாங்கஸ்”

“இருக்கட்டும்”

தலையசைப்போடு ஜானகி கிளம்ப, கந்தசாமி அவளை பார்த்து விட்டு பிறகு, கடவுளை பார்த்து பெருமூச்சு விட்டு விட்டுக் கிளம்பி விட்டான்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
27
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. காதம்பரி ஏன் இன்னும் வரலை…? இந்நேரத்துக்கு வந்திருக்கணுமே…!

      😀😀😀
      CRVS (or) CRVS 2797