Loading

 

தினம் தினம் கலவரம் என்பது போல், காதம்பரி வாழ்வில் புயலடித்துக் கொண்டிருந்தது. அசோக்கிற்கும் எந்த பக்கம் சமாளிப்பது என்று தெரியலவில்லை.

“எல்லா பக்கமிருந்தும் பிரச்சனை வந்துட்டே இருக்கு. என்ன தான் செய்யுறது?” என்று காதம்பரி புலம்ப, அசோக்கிடம் பதில் இல்லை.

விடுமுறை நாளுக்காக கூட வினய் வீட்டுக்கு வரவில்லை. இவர்களுக்கும் அவனை பற்றி யோசிக்க நேரமில்லை.

அன்று அலுவலகம் செல்லாமல் காதம்பரி வீட்டில் இருக்க, ஜகதீஸ்வரி வீட்டு வேலைக்காரி வந்து சேர்ந்தாள்.

“நீ என்ன இங்க?”

“ம்மா.. ஒரு விசயம் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்”

“என்ன?”

“ஜாக்ஷிமாவுக்கு மாப்பிள்ளை பார்த்தாங்கள்ள?”

“ஆமா அவனுக்கென்ன?”

“அவனும் ஜாக்ஷிமாவும் ஒரே வீட்டுல இருக்காங்களாம்”

“என்ன சொன்ன?”

“ஆமா.. எதோ லிவ் கிவ்வுனு சொல்லிட்டு இருந்தாங்க”

காதம்பரியின் ரத்தம் கொதித்தது.

‘கல்யாணம் பண்ணாம ஒருத்தன் கூட வாழுறாளா? அப்படியே அப்பன் புத்தி’ என்று நினைத்து பல்லைக் கடித்தார்.

“அந்த பையனோட பாட்டி, இப்ப நம்ம வீட்டுல தான் இருக்காங்க. அவங்க பேசும் போது கேட்டேன். அதான் உங்க கிட்ட சொல்லிட்டு…”

“சொல்லிட்டல. நான் பார்த்துக்கிறேன்”

“ம்மா.. அது வந்து.. என் புள்ளைக்கு உடம்பு சரியில்ல.. கொஞ்சம் காசு கிடைச்சா நல்லா இருக்கும்”

காதம்பரி பணத்தை எடுத்துக் கொடுக்க, வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டாள்.

‘லிவ் இன்ல இருக்காளா? இருக்கட்டும். எத்தனை தடவ என்னை அசிங்க படுத்தியிருப்பா? அவள நான் அசிங்க படுத்துறேன்’ என்று கறுவிக் கொண்டார்.

*.*.*.*.*.*.

வீராவும் ஜாக்ஷியும் காரை எடுக்க வந்திருந்தனர். அவர்கள் கேட்ட கார் வந்து விட, அதை பரிசோதித்து வாங்கிக் கொண்டு கிளம்பினர்.

“கார் வாங்கியிருக்க டிரீட் வைக்க மாட்டியா?” என்று ஜாக்ஷி கேட்க, “வைக்கலாமே” என்றான் கண்ணடித்தபடி.

“டேய் நான் சாப்பிடுற ஐட்டம் கேட்டேன்”

“அவ்வளவு தானா?” என்று சலிப்பாக கேட்க, தலையில் ஒரு போடு போட்டாள்.

“எனக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடு”

“உத்தரவு ஜக்கம்மா” என்றவன், காரை திருப்பினான்.

இருவரும் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்ட படி திரும்ப, ஜானகி கண்ணில் விழுந்தாள்.

“அது ஜானகி தான?” என்று வீரா கேட்க, “அவ தான்” என்றாள்.

“கூட வர்ரவன் கூட சண்டை போடுறானு நினைக்கிறேன்”

“அவ என்னமோ செய்யட்டும் நமக்கென்ன?”

“நமக்கு இருக்கு. இரு வர்ரேன்”

“டேய்”

“இரு” என்றவன் தன் கையிலிருந்த ஐஸ்கிரீமை அவள் கையில் கொடுத்து விட்டு, ஜானகியை நோக்கி சென்றான்.

“சொன்னா புரியாதா?” என்று அவள் நிர்மலனிடம் கோபமாக பேசிக் கொண்டிருக்க, வீரா பக்கத்தில் சென்று நின்றான்.

“ஜானகி தான?” என்று கேட்டதும், ஜானகி ஒரு நொடி புரியாமல் பார்த்து விட்டு, பிறகு அடையாளம் கண்டு கொண்டாள்.

‘அன்னைக்கு வீட்டுல இருந்தானே. வினய்ய கூட அடிச்சவன் தான?’ என்று யோசித்தவள், வீராவின் கேள்விக்கு தலையாட்டினாள்.

“இது யாரு?”

“என் தலைவலி”

ஜானகி கடுப்பாக சொல்ல, நிர்மலனுக்கு வருத்தமாக இருந்தது. அதை விட புதியவனை பார்த்து கோபம் வந்தது.

“ஹலோ நீ யாரு? ரெண்டு பேரு பேசிட்டு இருக்கும் போது நடுவுல வந்து நிக்கிற? என்ன ஜட்ஜ் வேலையா? நாங்களே பார்த்துக்கிறோம். நாங்க ஒரே ஆஃபிஸ்ல வேலை பார்க்குறோம். போதுமா? கிளம்பு” என்று துரத்தப்பார்த்தான்.

‘ஒரு வேளை அண்ணனா இருக்குமோ?’ என்று யோசித்தான் தான். ஆனால் அண்ணன் வந்து, ஜானகி தானே? என்று கேட்க வாய்ப்பில்லை அல்லவா?

“பார்ரா..! ஒன்னா வேலை பார்க்குறீங்களா?” என்று வீரா ஜானகியிடம் கேட்டான்.

ஜானகிக்கும், அவனிடம் எல்லாம் சொல்ல விருப்பமில்லை தான். ஆனால் அன்று வினய்யை தட்டியது போல், இந்த நிர்மலனை தட்டி அனுப்பி வைத்தால் அவளுக்கு சற்று நிம்மதியாக இருக்கும் என்று நினைத்தவள், சொல்ல முடிவெடுத்தாள்.

“அதெல்லாம் இல்ல. ஒரே பில்டிங் அவ்வளவு தான். தெரியாம பார்த்துட்டேன். லவ் பண்ணுறேன்னு என் உயிர வாங்குறான். நானும் எனக்கு இருக்க பிரச்சனையே போதும்னு சொல்லி பார்த்துட்டேன். கேட்கல. நீங்களாவது சொல்லி அனுப்புங்க”

“ஜானகி.. இத நீங்க இவன் கிட்ட ஏன் சொல்லுறீங்க?” என்று நிர்மலன் கோபமாக கேட்க, “அட இருபா.. அதான் சொல்லுறாங்கள்ள.. உன்னை பிடிக்கலனு. விட்டுர வேண்டியது தான?” என்று கேட்டான் வீரா.

“அத நாங்க பார்த்துக்கிறோம் நீ கிளம்பு”

“அப்படியா? கிளம்புறேன். சரி.. முதல்ல உனக்கு நான் யாருனு தெரியுதா?”

“பார்த்ததும் தெரியுற அளவுக்கு பெரிய ஆளா நீ? என்ன பெரிய ரௌடியா?” என்று கடுப்பாக கேட்டு வைத்தான்.

“ச்சே ச்சே.. உனக்கு தெரிஞ்சவன் தான். உனக்கு ஞாபகம் வரலனு நினைக்கிறேன். உன் தங்கச்சி தான நிஷாந்தினி?” என்று கேட்க, நிர்மலன் அதிர்ந்தான்.

“அந்த பொண்ணுக்கு ரீசண்ட்டா கல்யாணம் ஆச்சே?”

“அதெப்புடி உனக்கு தெரியும்?”

“கல்யாணம் பண்ணவன் எனக்கு அண்ணன். என் பேரு வீரா.. இப்ப ஞாபகம் வந்துடுச்சா?” என்று கேட்டதும், நிர்மலன் முகம் ஒரு நொடி அதிர்ச்சியில் மூழ்கி, உடனே சுதாரித்தது.

கல்யாண மண்டபத்தில் பலர் வீரா என்ற பெயரை சொல்ல கேட்டானே. பார்த்தான் தான். அதோடு தாமரையின் இறுதிச் சடங்கும் செய்தானே? ஆனால் இப்போது தொப்பியோடு பார்க்க, உடனே அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை.

“ஓஓ… மாப்பிள்ளை வீட்டுக்காரவங்க.. சட்டுனு பார்த்ததும் யாருனு தெரியல சாரிங்க” என்று உடனே மரியாதையும் பணிவும் வந்து விட்டது.

தங்கையின் வாழ்வு கண்முன்னால் வந்து போனதோ? ஆனால் வீரா அதை பெரிது படுத்தாமல், அடுத்த விசயத்துக்கு தாவினான்.

“இது யாரு தெரியுமா? ஜானகி. இவளோட அக்காவ நான் கல்யாணம் பண்ணிக்க போறேன். அப்படினா இவ உனக்கு யாரு?” என்று கேட்டு நிறுத்தினான்.

நிர்மலனுக்கு புரிந்து விட, அவன் முகம் அஷ்டகோணலானது. ஜானகி தான் ஒன்றும் புரியாமல் பார்த்தாள்.

‘என்ன சொல்லுறாங்க? இவங்க ஜாக்ஷிய கல்யாணம் பண்ணிக்க போறாங்களா? அதுக்கு ஏன் இவன் இப்படி பார்க்குறான்?’ என்று புரியாமல் பார்த்தாள்.

அவளுக்கு புரியவில்லை என்று தெரிந்ததும், “தெளிவா சொல்லனும்னா இவ உனக்கு தங்கச்சி முறை. உன் தங்கச்சிய என் அண்ணன் கட்டுனா, நான் கட்டுற பொண்ணு, அவ கூட பிறந்தவ எல்லாரும் உனக்கு தங்கச்சி தான? இன்னையில இருந்து ஜானகி உனக்கு தங்கச்சி. புரியுதா?” என்று கிண்டலாக கேட்டான்.

ஜானகியின் விழிகள் ஒரு நொடி ஆச்சரியத்தில் விரிந்தது. அடுத்த நொடி சிரிப்பு வந்து விட்டது.

“தங்கச்சியா?” என்று அவள் ஆர்வமாக கேட்க, “அதே தான். இனி இவன் உனக்கு அண்ணன். அண்ணன் இந்த தங்கச்சிய காதல் டார்ச்சர் பண்ணா உலகம் தப்பா பேசாது? அதுனால உன்னை விட்டுருவாரு. கவலைப்படாத.” என்று வேறு சொல்லி வைத்தான்.

நிர்மலனுக்கு இடியே தலையில் விழுந்தது.

நிஷாந்தினியின் வாழ்வு தான் கண் முன்னால் வந்தது. ஏற்கனவே தாமரை இறந்து போனதும், ஊருக்குள் அரசல்புரசலாக நிஷாந்தினியை தான் குறை சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் மாப்பிள்ளையின் குடும்பம் அவளை நன்றாக பார்த்துக் கொள்வதால், நிம்மதியாக இருக்கின்றனர். எதையாவது பேசி அவளது வாழ்வு கெட்டு விட்டால்? பகீரென்றது.

“நான் கிளம்புறேன்” என்றவன், இருவரையும் பார்க்காமல் விறுவிறுவென சென்று விட்டான்.

அவன் சென்ற வேகத்தை பார்த்து, ஜானகிக்கு சிரிப்பு வந்தது.

“இனி தொந்தரவு பண்ண மாட்டான். பை” என்று விட்டு வீரா சென்று விட்டான்.

போகும் அவனை பார்த்தாள் ஜானகி. ஜாக்ஷி தூரமாக நின்று ஐஸ்கீரிம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

“என்னோடது?”

“நானே சாப்பிட்டேன்” என்று ஜாக்ஷி சிரிக்க, “உன்னை.. இரு உன்னை கவனிச்சுக்கிறேன்” என்றவன் மீண்டும் உள்ளே சென்று, ஐஸ்கிரீம் வாங்கி வந்தான்.

இம்முறையும் இரண்டை வாங்கி வந்து ஒன்றை ஜாக்ஷிக்கு கொடுத்து விட்டு மற்றொன்றை சாப்பிட, இருவரும் காரில் ஏறி அமர்ந்தனர்.

‘தாங்க்ஸ் சொல்லாம வேடிக்கை பார்த்துட்டு இருக்கோம்’ என்று தலையில் தட்டி விட்டு உடனே அவர்களிடம் சென்றாள் ஜானகி.

அவள் வருவதை பார்த்து ஜாக்ஷி புருவம் உயர்த்த, ஜானகி அருகே வந்து விட்டாள்.

“தாங்க்ஸ்ங்க.. அத சொல்லுறதுக்குள்ள வந்துட்டீங்க”

“எதுக்கு?” என்று ஜாக்ஷி புரியாமல் கேட்க, வீரா நடந்ததை சொன்னான்.

ஜாக்ஷி வாய்விட்டு சிரித்தாள்.

“பாவம் தங்கச்சிய போய்.. ஹா ஹா” என்று ஜாக்ஷி சிரிக்க, வீராவும் சிரித்து வைத்தான்.

“அவன பார்த்துட்டு தான் ஜானகிய பார்த்தேன். அதான் என்னனு கேட்க போனேன்”

“இனிமே அவனுக்கு எதாவது பொண்ண பிடிச்சுருந்தா கூட, அவ மொத்த குடும்ப டீடைலயும் வாங்கிட்டு, தங்கச்சி முறையில்லனு செக் பண்ணிட்டு தான் லவ்வே பண்ணுவான் போ. பாவம் இப்படி பண்ணிட்டியே” என்று சிரித்து வைத்தாள்.

அவள் சிரிப்பது ஜானகிக்கு ஆச்சரியமாக இருந்தது.

‘இவ என்ன இவ்வளவு சிரிக்கிறா? எப்ப பாரு கோபமாவே தான இருப்பா?’ என்று நினைத்தவளுக்கு, ஆச்சரியம் தாங்கவில்லை.

“சரி அதான் சரி பண்ணியாச்சுல.‌ இனி வர மாட்டான். ஃப்ரியா இரு” என்று வீரா சொல்ல, ஜானகி தலையாட்டி விட்டு திரும்பினாள்.

“ஏய் நில்லு.. உன் அம்மா ஃபேக்டரி கேட்ட விசயம் உனக்கு தெரியுமா?” என்று ஜாக்ஷி நிறுத்தினாள்.

“ம்ம்..”

“நான் நீயும் உன் தம்பியும் வரனும்னு சொல்லியும் கேட்காம, எனக்கு ஃபோன் பண்ணிட்டே இருக்கு உங்கம்மா. என்னனு பார்க்க மாட்டியா?”

“எங்களுக்கு அது வேணாம். அம்மா கேட்டா நீங்களே முடியாதுனு சொல்லுங்க”

“ஆட்சுவலி அந்த ஃபேக்டரிய ஏன் தர்ரேன்னு நீ யோசிச்சியா?” என்று கேட்டவள், ஐஸ்கிரீமை சுவைத்தாள்.

ஜானகி கேள்வியாக பார்த்தாள்.

“என் சொத்தா இருந்தா அத உங்களுக்கு கொடுப்பனா? அது உன் அப்பா ஆரம்பிச்சது. தனியா ஆரம்பிச்சது.‌ ஆனா பணம் மட்டும் எங்க கம்பெனியில இருந்து எடுத்ததால, அது எங்க சொத்தோட சேர்ந்துடுச்சு. அத பார்க்க எனக்கு சுத்தமா விருப்பமில்ல. அதான் தூக்கி கொடுக்கலாம்னு இருக்கேன். நீ வேணாங்குற”

ஜானகி சற்று குழப்பத்தோடு பார்த்தாள்.

“புரியல?”

“உன் அப்பாவோட எதுவும் எனக்கு வேணாம். நீ வாங்கலனா அத வித்துடுவேன்னு சொல்லுறேன்”

ஜானகி சற்று அதிர்ந்தாள்.

அவளுடைய தந்தை கஷ்டப்பட்டு உருவாக்கிய ஒன்றை விற்று விடுவது, இவளுக்கு அவ்வளவு சுலபமா?

“ஏன்?”

“உங்கப்பாவோட எதுவும் எனக்கு தேவையில்ல. அந்த ஃபேக்டரிய கூட வச்சுருக்கதுக்கு எனக்கு இஷ்டமும் இல்ல. வித்துட்டு போகலாம்னு பார்த்தேன். அப்புறம் உங்களுக்கு கொடுத்துடலாம்னு ஒரு ஐடியா. பட்.. உன் அம்மாவுக்கு தர மாட்டேன்”

ஜானகி அமைதியாக பார்த்து வைத்தாள்.

“உங்கம்மா மேல எனக்கு கொஞ்சம் கூட மரியாதை கிடையாது. அது உனக்கே தெரியும். சொத்து கொடுக்கறதா இருந்தா, உனக்கோ உன் தம்பிக்கோ தான் தருவேன். வேணும்னா நீங்களே வந்து வாங்குங்க. இல்லனா வித்துட்டு போறேன். இந்த விசயம், எனக்கு பாட்டிக்கு, உன் அப்பாக்கு.. அப்புறம் உன் அப்பாவோட பிஏக்கு தான் தெரியும். உன் அப்பா சொத்து உனக்கு வேணுமா வேணாமானு நீயே முடிவு பண்ணிக்க. உன் அம்மா கிட்ட போய் உளறி வைக்க மாட்டனு நம்புறேன். எனக்கு இன்னும் மூணு நாள்ல பதில் வரனும். இல்லனா நான் விக்கிற வேலைய பார்த்துட்டு போயிடுவேன். இப்ப கிளம்பலாம் கார எடு” என்றதும் வீரா எதுவும் பேசாமல் காரில் ஏறி அமர்ந்தான்.

அவளருகே ஜாக்ஷியும் அமர்ந்து கொள்ள, ஜானகி வழி விட்டு நின்றாள். இருவரும் சென்று விட, ஜானகியின் மனம் குழம்பிய குட்டையானது.

“உனக்கு அவளுக்கு கொடுக்க விருப்பமோ?” என்று வீரா கேட்க, ஜாக்ஷி தலையாட்டினாள்.

“எனக்கு பிடிக்கல. ஆனா தூக்கி போட்டாலும் நஷ்டம் தான். அதுக்கு அந்தாளு பெத்த பிள்ளைங்க வச்சுட்டு போகட்டுமே?” என்று தோளை குலுக்கினாள்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
24
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. நாரதர் கலகம் நன்மையில முடிஞ்ச மாதிரி, காதம்பரி கலவரமும் நன்மையிலயே முடியும்ன்னு தோணுது.

      😀😀😀
      CRVS (or) CRVS 2797