Loading

 

வினய் காலியாக இருந்த இடத்தை பார்த்து விட்டு திரும்பிக் கொள்ள, “இன்னைக்கும் இவ வரல போல? ஒரு வேளை நம்மல பார்த்து பயந்து, டிசி வாங்கிட்டு ஓடிட்டாளா?” என்று கேட்டான் அவன் நண்பன்.

கவிதா இரண்டு நாட்களாக கல்லூரி வராதது ஏனென்று யாருக்குமே தெரியவில்லை. ஹாஸ்டலில் இருந்தபடி வீரா அழைத்துச் சென்று விட, மற்றவர்களுக்கு எதுவும் தெரியாமல் போனது.

வினய் தன் நண்பனை மேலும் கீழும் பார்த்து வைத்தான்.

“என்னடா?”

“நமக்கு பயந்து? அதுவும் அவ? நம்மல வேணா ஓட விடுவா. அவ போக மாட்டா”

பேசிக் கொண்டிருக்கும் போதே கவிதா உள்ளே வந்தாள்.

“வந்துட்டா” என்றதும் எல்லோரின் பார்வையும் அவள் மீது விழுந்தது.

வந்தவள் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் அமர்ந்து கொண்டாள்.

“ச்சே நம்மல பார்த்து இவளுக்கு பயமே இல்ல போலடா” என்று மீண்டும் சொல்ல, “உன் மூஞ்சிய நீயே பார்த்தா சிரிப்ப. இத பார்த்து அவ பயப்பட வேற செய்யனுமா!” என்று மற்றவன் கேட்க, இருவரும் சண்டை போட்டு விளையாட ஆரம்பித்தனர்.

வினய் மட்டும் கவிதாவை பார்த்து விட்டு யோசனையானான்.

‘இவ என்ன இப்படி வந்துருக்கா? எதையோ பறி கொடுத்த மாதிரி. மறுபடியும் எதையாவது தொலைச்சுட்டாளா?’ என்று யோசித்துக் கொண்டிருக்க, சில நிமிடங்களுக்கு பிறகு செய்தி வந்தது.

“அவங்கம்மா இறந்துட்டாங்களாம்” என்று ஒரு பெண் சொல்ல, அதிர்வோடு பார்த்தனர்.

வகுப்பில் இருந்த அனைவரும் அவளுக்காக வருத்தப்பட, அழக்கூடாது என்ற முடிவோடு தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தாள் கவிதா.

*.*.*.*.

அலுவலகத்திலும் வீராவை காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்தனர். ஜாக்ஷியும் கண்ணில் படவில்லை என்றதும், பல புரளிகள் கிளம்பியிருந்தது.

இருவரும் யாரை பற்றியும் கவலைப்படாமல் ஒன்றாக அலைந்ததால், இருவரையும் இணைத்து அவலாக மென்று கொண்டிருந்தனர்.

இப்போது இருவரும் இல்லை என்றதும், “ஒரு வேளை ஹனி மூன் போயிட்டாங்களோ?” என்று கேட்டு சிரிக்க ஆரம்பித்தனர்.

“கல்யாணமே நடக்கல? ஹனிமூனா?”

“கல்யாணம் நடந்தா தான் போகனுமா என்ன?”

மீண்டும் ஒரு முறை சிரித்து வைத்தனர்.

ஜாக்ஷியின் பிஏ வுக்கு புரளிகளை பற்றித் தெரியும். ஆனால் எப்போதும் விளக்கம் கொடுக்க மாட்டாள். கொடுக்க கூடாது என்பது ஜாக்ஷியின் உத்தரவு.

இன்று மட்டும் இதைக்கேட்டு கோபம் வந்து விட, உடனே கையிலிருந்த ஃபைலை மேசையில் ஓங்கி அடித்தாள்.

எல்லோரும் அதிர்ந்து அவளை திரும்பிப் பார்க்க, “வீரபத்திரன் சாரோட அம்மா ரெண்டு நாளைக்கு முன்ன இறந்துட்டாங்க. போதுமா விவரம்? இல்ல வேற எதுவும் வேணுமா?” என்று கேட்டு வைத்தாள்.

அத்தனை பேரின் முகமும் ஒரு நொடி அதிர்ந்து, பிறகு வருத்தத்தில் குனிந்தது.

“என்ன நடக்குதுனு தெரியாம கண்டத பேசிட்டு… ச்சை” என்று விட்டு சென்று விட்டாள்.

“எல்லாம் உன்னால..”

“நானா?”

“நீ தான ரெண்டு பேரும் ஹனி மூன் போயிருப்பாங்க அது இதுனு சொன்ன?”

“அடப்பாவிங்களா? நீங்களும் தான சிரிச்சீங்க?”

“ரொம்ப பேசாத வேலைய பாரு” என்றதோடு எல்லோரும் வேலையை பார்க்க ஆரம்பித்தனர்.

*.*.*.*.

வீரா தூக்கம் கலைந்து திரும்பிப் பார்த்தான். அருகே ஜாக்ஷி இல்லை. மணியை பார்த்து விட்டு எழுந்து கொண்டான்.

கண்ணாடியில் முகத்தை பார்த்த போது, மொட்டைத்தலை அவனை வருத்தியது. பெருமூச்சோடு அதை உதறி விட்டு, குளித்து கிளம்பினான். சுபத்ராவை பார்க்க…!

கிளம்பும் போது கைபேசியை பார்த்தான். ஜாக்ஷி செய்தி அனுப்பியிருந்தாள். சுபத்ரா சாதாரண அறைக்கு வந்து விட்டதாக…!

மருத்துவமனை சென்று சேர்ந்தான். அவனை பார்த்ததும் சுபத்ரா எழுந்து அமர்ந்தாள்.

“எப்படி இருக்க சுபி? இப்ப ஓகேவா?”

“நான் ஓகே. நீங்க?”

“நானும் ஓகே தான். நேத்து கூட இருக்க முடியல.”

“அதெல்லாம் பரவாயில்ல.” என்றவள், அவனது தலையை பார்த்து விட்டு பெருமூச்சு விட்டாள்.

தாமரையிடம் பேசவில்லை என்றாலும், அவளுக்கு வீராவை பிடிக்கும். வீராவின் அன்னை என்றால், வருத்தமாகத்தான் இருந்தது.

மருத்துவ முறை சிகிச்சை எல்லாவற்றையும் பேசி விட்டு, ஜாக்ஷியும் வீராவும் கிளம்பினர்.

சுபத்ராவை பார்க்க நர்ஸ் உடன் இருந்தார். சுபத்ராவும் மருத்துவமனையில் சற்று தைரியமாக இருந்தாள்.

இருவரும் காரில் ஏற, “வீட்டுக்கு போகலாமா?” என்று கேட்டாள்.

“வேலை இல்லயா?”

“வேலை இருக்கு. ஆனா இப்ப பசிக்குது. எதாவது செஞ்சு கொடு. நீயும் எதுவும் சாப்பிடல தான?”

“வீட்டுல எல்லாம் இருக்கா?”

“தெரியல”

“அப்ப போகும் போது எதாவது வாங்கிட்டு போகலாம்”

“ஓகே.” என்றவள் காரை ஓட்டியபடி, அவனை திரும்பிப் பார்த்தாள்.

“அங்க எதாவது பிரச்சனை ஆச்சா பத்ரா?”

“இல்லையே. ஏன்?”

“ஜஸ்ட் கேட்டேன். உன் சொந்தகாரவங்க தான் இஷ்டத்துக்கு பேசுறாங்களே”

“அதெல்லாம் எதுவும் சொல்லல. நான் தானே செய்யனும் எல்லாம். செஞ்சுட்டு கிளம்பிட்டேன்”

“ஓகே ஓகே”

“காலையில எழுப்பிருக்கலாம்ல?”

“தூங்கிட்டு இருந்த. லேட்டா தான வந்த. அதான் எழுப்பல.”

இருவரும் போகும் வழியில் தேவையானதை வாங்கிக் கொண்டு சென்றனர்.

வீரா உடனே சமைக்க செல்ல, ஜாக்ஷி அறைக்குள் சென்று விட்டாள். சில நிமிடங்களில் திரும்பி வந்தவள், அவனை ஒட்டிக் கொண்டு நின்றாள்.

“என்ன பண்ணுற?”

“வெஜ் ரைஸ் தான். லன்ச் டைம் வந்துடுச்சே”

“ஓகே” என்றவள், நாற்காலியில் அமர்ந்தபடி வேடிக்கை பார்த்தாள்.

“கவிதா ஓகேவா? ஹாஸ்டல்ல விட்டுட்டுட்டு வந்தியா?”

“ஆமா. அழுதுட்டே தான் இருந்தா. வர்ர வழியிலயும் அப்போ அப்போ அழுதா”

“நம்ம பாட்டிங்க இன்னும் ரெண்டு நாள்ல வந்துடுவாங்க. அவங்க பேசுனா சரியாகிடுவா”

“ம்ம்..”

பிறகு பேச்சை மாற்றி அலுவலகத்தை பற்றிப்பேச ஆரம்பிக்க, அவனும் பதில் சொன்னான்.

சமைத்து சாப்பிட்டு முடித்தனர். இருவரும் சேர்ந்தே சுத்தம் செய்தனர்.

“எனக்கு வேலை இருக்கு. உனக்கு?”

“தெரியல ஆஃபிஸ் போனா தான் தெரியும். இப்ப கூட போயிட்டு வரலாம்னு பார்க்குறேன்”

“அதெல்லாம் வேணாம். எனக்கு வந்து ஹெல்ப் பண்ணு” என்று அவனது கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள்.

அறையில் மெத்தையில் அமர்ந்தபடி வேலை செய்து கொண்டிருந்தனர். ஜாக்ஷி திடீரென திரும்பிப் பார்க்க, வீரா தூங்கிக் கொண்டிருந்தான். பார்த்ததும் சிரிப்பு வந்தது.

‘இவ்வளவு டயர்ட்ல ஆஃபிஸ் போறானாம்’ என்று நினைத்தவள், வேலையை தொடர்ந்தாள்.

முடித்து வைத்ததும் மணியை பார்த்தாள். மாலையாகி இருந்தது. சுபத்ராவிடம் குறுஞ்செய்தியில் பேசி விட்டு, எல்லவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு, வீராவை எழுப்பினாள்.

“மிஸ்டர் வீரபாண்டிய கட்டபொம்மன்.. தூங்குனது போதும் எந்திரிங்க”

கண் விழித்து பார்க்க, “தூங்கிட்டே இருந்தா முகம் வீங்கிடும் மொட்டை பாஸ். எழுந்திரி” என்றாள்.

உருண்டு வந்து அவளது மடியில் படுத்துக் கொண்டு, மீண்டும் கண்ணை மூடிக் கொண்டான்.

“இவ்வளவு டயர்டா உனக்கு?”

“ரெண்டு நாளா தூங்கல”

அவனது கன்னத்தை புன்னகையுடன் வருடியவள், காதருகே குனிந்தாள்.

“ஐ லவ் யூ” என்று ரகசியமாக சொல்ல, பட்டென கண்திறந்தான்.

“என்ன சொன்ன?” என்று ஆச்சரியமாக கேட்க, “எந்திரினு சொன்னேன்” என்று சிரித்தாள்.

அவன் எழாமல் அவளை முறைக்க, சிரித்து வைத்தாள்.

“ஐ லவ் யூ” என்று கண் சிமிட்டினாள்.

அவனது முகத்தை அருகே இழுத்தவன், “எப்போ இருந்து?” என்று கேட்டான்.

“எப்போ இருந்துனா?”

“சொல்லு ஜக்கம்மா?”

“ம்ம்..?” என்று யோசித்தாள்.

“இப்ப நீ என் மடில படுத்தியே அப்பவா? இல்ல.. அதுக்கும் முன்னாடி… எந்த ஈகோவும் இல்லாம இங்க வந்து இருக்கியே அப்பவா? ம்ஹும் அதுக்கும் முன்னாடி.. எப்போ?”

“ஏய்.. எதாச்சும் ஒன்ன சொல்லுடி” என்று எழுந்து விட்டான்.

“அதுக்கும் முன்னாடினா.. முதல் தடவ என் பசிய தெரிஞ்சு, சாப்பிட கூட்டிட்டு போனியே அப்பவா? இல்ல அதுக்கும் முன்னாடி வினய்ய எனக்காக அடிச்சியே.. அப்ப தான்னு நினைக்கிறேன்” என்றவள் அவன் நெற்றியில் முட்டி சிரித்தாள்.

“அப்பவா?” என்று ஆச்சரியப்பட்டான்.

“ம்ம்.. வாழ்க்கையில முதல் தடவ.. எந்த ஆதாயமும் இல்லாம, எனக்காக பேச வந்தது பாட்டிக்கடுத்து நீ மட்டும் தான். அப்பவே இம்ப்ரஸ் ஆகிட்டேன்”

அவளை தனக்கு கீழ் கொண்டு வந்து நெற்றியோடு நெற்றி முட்டியவன், கண்ணை மூடி அமைதியாக இருந்தான். அவன் முகத்தில் அந்த பழைய ஒளி மீண்டதை பார்த்ததும், ஜாக்ஷிக்கு துள்ளி குதிக்க தோன்றியது.

“உனக்கு எப்போனு சொல்லலயே”

“உன் கிட்ட இம்ப்ரஸ் ஆனதா?”

“ம்ம். எப்போ?”

“மொத்த குடும்பத்தையும் ஒத்த ஆளா நின்னு சமாளிச்சியே அன்னைக்கே அப்பவே.. அப்பவே இந்த ஜக்கம்மா மாதிரி தான் ஒருத்தி வேணும்னு தோனுச்சு”

“அப்பவே பட்ட பேரு வச்சுருக்க நீ” என்றவள், அவனை கிள்ளி வைத்தாள்.

அவனும் சிரித்து வைத்தான்.

“ஆனா எதிர் பார்க்கவே இல்ல.. நீ இங்க வேலை செய்ய வருவனு”

“நான் ஏன் வந்தேன் தெரியுமா?” என்று கேட்டவன், ஜகதீஸ்வரி சொன்னதை எல்லாம் சொன்னான்.

“உனக்கு பாதுகாப்பாம்? கேட்டதும் இவ கிட்ட இருந்து மத்தவங்கள தான் பாதுகாக்கனும்னு நினைச்சேன்” என்று சிரிக்க, ஜாக்ஷி முறைத்தபடி அவனை தள்ளி விட்டாள்.

“நான் என்ன அவ்வளவு டெரராடா?”

“நீ அவ்வளவு தைரியமான பொண்ணு ஜக்கம்மா” என்று சிரித்தபடி அவனை அணைத்துக் கொண்டான்.

“ஆனா பாரு.. உண்மையான காரணம் அது இல்ல. நம்மல கோர்த்து விடுறதுக்காக இங்க வர வச்சுருக்காங்க. ஆறு மாசம் வெயிட் பண்ணிருக்காங்க. எப்படியும் நாமலா ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுட்டு வருவோம்னு. நாம ஒருத்தர் ஒருத்தர் பார்க்க கூட இல்லனு தெரிஞ்சதும்… இதுங்க சரிபட்டு வராதுங்கனு நேரா கல்யாண பேச்ச எடுத்துட்டாங்க”

“பாட்டி கிட்ட கேட்டேன். உங்க ப்ளான் தானனு. ஆமானு ஒத்துக்கிட்டாங்க. பட் இதுவும் நல்லா தான இருக்கு. கல்யாணம் நடக்கலனாலும் நாம ஹாப்பியா தான இருக்கோம்” என்று கேட்டு சிரித்தாள்.

“உனக்கு ஒன்னு தெரியுமா? நான் வேலைய ரிசைன் பண்ணுற முடிவுல இருந்தேன்”

“ஏன்டா?” என்று அதிர்ச்சியோடு கேட்டாள்.

“உன் கிட்ட நீ சொன்ன வேலைக்கு ஒத்துக்கிட்டு வந்தப்புறம் தான், இந்த கேன்சர் பிரச்சனை வந்துச்சு. முன்னாடியே வந்துருந்துச்சுனு வை.. உனக்கு ஓகே சொல்லிருக்க மாட்டேன். உன் வேலைய முடிச்சு கொடுத்துட்டு, ஆஃபிஸ் ப்ராஜெக்ட்டையும் முடிச்சுட்டு, மொத்தமா வேலைய விட்டுரனும்னு இருந்தேன்”

“அடப்பாவி! ஏன்? வேலை பார்த்தா என்ன?”

“நான் டெஸ்ட் எடுக்க ஆறு மாசம் வரை தள்ளி போட்டதே இதுக்கு தான். ஒரு வேளை டெஸ்ட் ரிசல்ட் மாத்தி வந்துட்டா, வேலைய விட்டுட்டு ஊருக்கு போய் பாட்டியோட செட்டில் ஆகிடனும்னு இருந்தேன். கடைசி வரை பாட்டியோட நிம்மதியா இருந்துட்டு போகலாம்னு ஐடியா”

“என்னைக்கோ வரப்போறதுக்கு இன்னைக்கே ஓட பார்த்தியா நீ?” என்று அவள் முறைக்க, அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.

“அப்ப அப்படிலாம் யோசிச்சேன். அதான் இப்ப சரியாகிடுச்சே”

“ஆகும் ஆகும்.. அதான் ரிசல்ட் வராம நான் கேட்டதுக்கு பதில் சொல்ல மாட்டேன்னு ஓடுனியே”

“புரிஞ்சுக்கடி ஜக்கம்மா.. அதெல்லாம் அப்ப.. இப்ப ஏன் கோச்சுக்குற?”

“போடா..”

“முடியாதே.. அந்த ஜக்கம்மாவ விட்டு இப்ப போக முடியாதே” என்றவன் மீண்டும் அணைத்து நெற்றியை ஒட்டிக் கொண்டான்.

அவனது அணைப்பில் சமாதானம் ஆனவள், அவன் முகத்தை பார்த்தான்.

“இப்ப தான் உன்னை பார்க்க நல்லா இருக்கு”

“அடிப்பாவி இந்த மொட்டை தலையோடயா?”

“அது இல்லடா. நீ எப்படி இருந்தாலும் பார்க்க நல்லா தான் இருப்ப. ஆனா முகம் சொல்லுறேன். முதல் தடவ உன்னை பார்க்கும் போது, ரொம்ப அமைதியா உள்ளயே சோகத்த வச்சுட்டு யோசினையோடயே இருப்ப. இந்த பையன் கொஞ்சம் இயல்பா இருக்க மாட்டானானு இருக்கும். இங்க வந்து நல்லா தான் இருந்த. நேத்துல இருந்து மறுபடியும் அந்த பழைய சோக முகம். ரொம்ப கஷ்டமா இருந்தது”

அதைக்கேட்டு அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

“எல்லாம் என் அம்மாவால தான். அவங்க ஒதுக்குன சோகம். என்னை விட்டு மறைஞ்சதே இல்ல. எவ்வளவு சந்தோசமா இருக்க நினைச்சாலும், பெத்தவளுக்கே நீ வேண்டாதவன்டா என் மனசு குத்திட்டே இருக்கும்”

“அதுக்கா அப்படி இருந்த?”

“ம்ம்.. இப்ப அவங்க மொத்தமா இல்ல” என்று பெருமூச்சு விட்டான்.

ஜாக்ஷி அவனது கன்னம் வருட, “அன்னைக்கு நைட் என் கிட்ட பேசுனாங்க ஜக்கம்மா” என்றான்.

“யாரு?”

“அம்மா”

அதிர்ச்சியோடு பார்த்தாள்.

“எப்பவும் கால் பண்ணா எடுக்கவே மாட்டேன். அன்னைக்கு எடுக்கனும்னு தோனுச்சு. அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா?” என்றவன் பேசியதை எல்லாம் ஒப்பித்தான்.

“அவங்கவங்களுக்கு ஒரு நியாயம் இருக்கும்ல?” என்று கேட்டாள் ஜாக்ஷி.

“ம்ம். அத கடைசி நேரத்துல சொல்லிட்டு போயிட்டாங்க. அதான் மனசு பாரமாவே இருந்துச்சு”

அவனது கன்னம் பற்றி இதழ்களில் முத்தமிட்டாள்.

“என் கிட்ட சொல்லிட்டல? இனி ரிலாக்ஸா இரு”

அவளாக முதன் முதலில் கொடுத்த முத்தம் அனைத்து சோகத்தையும் அழித்து, ஆச்சரியத்தை கொடுத்தது.

“இது பத்தாதே.. இன்னொன்னு” என்று கேட்க, ஜாக்ஷி அவனை தள்ளி விட்டாள்.

“கொடுக்காம விட மாட்டேன்.” என்று அவளை பிடித்துக் கொண்டான்.

அடித்து பிடித்து சண்டை போட்டு, யார் யாரை முத்தமிட்டது என்று தெரியாமல் முத்தம் நிறைவானது.

வீரா எல்லை தாண்ட, ஜாக்ஷி தன் முகத்தை மறைத்தாள்.

“பயமா?”

“இல்ல.. வெட்கம்”

“சீக்கிரம் போயிடும்” என்று கண்ணடித்தவன், அதை போக்கும் வேலையை செய்தான்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
29
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. ஆஹா…. ரெண்டு பேரும் செயல் வீரர்கள்ன்னு நிரூபிச்சிட்டாங்க.

      😀😀😀
      CRVS (or) CRVS 2797