Loading

 

நல்ல தூக்கத்தில் இருந்த வீரா, பட்டன விழித்தான்.

“பாட்டி! என்ன சொல்லுறீங்க?” என்று பதற, “இப்ப தான் வீரா ஃபோன் வந்துச்சு. அங்க போயிட்டு இருக்கோம். கவிதாவ கூட்டிட்டு வர்ரியா?” என்றார்.

வீரா இரண்டு நொடி அமைதியாக இருந்து விட்டு, “சரி” என்றான்.

“அவளுக்கு சொல்லாத சின்ன புள்ள அழுதுடுவா. சும்மா கூட்டிட்டுவா” என்று விட்டு வைத்து விட்டார்.

வீரா சில நிமிடங்கள் அசையாமல் அமர்ந்திருந்தான். கண்கள் கலங்கி கண்ணீர் வர, துடைத்துக் கொண்டான். நேற்று பேசியது எல்லாம் நினைவுக்கு வந்தது. இனி பேச வாய்ப்பு கிடைக்காதோ என்று தான் அனைத்தையும் கொட்டி விட்டாரோ?

மனம் தாயின் முகத்தை நினைவுக்கு கொண்டு வர, முகத்தை மூடிக் கொண்டு கட்டு படுத்திக் கொண்டான்.

தாமரை மீது கோபமிருந்தாலும் பெற்ற அன்னை அல்லவா? வலித்தது.

பிறகு கவிதாவின் நினைவு வர, அவசரமாக எழுந்து தன் வேலையை முடித்து விட்டு ஜாக்ஷியை அழைத்தான்.

அவளும் அப்போது நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். வீராவின் எண்ணை பார்த்ததும், உடனே எழுந்து அமர்ந்து காதில் வைத்தாள்.

“என்னடா?”

ஒரு நொடி தொண்டை அடைக்க, பேச முடியாமல் நின்றான்.

“டேய்? ஹலோ?”

“அம்மா.. இறந்துட்டாங்களாம்”

“வாட்? எப்போ? எப்.. எப்படி?”

“பாட்டி ஃபோன் பண்ணாங்க. நான் கவிதாவ கூட்டிட்டு கிளம்பனும்”

“நானும் வரட்டா?”

“நாளைக்கு காலையில சுபிக்கு ஆப்ரேஷன். வேணாம்”

ஜாக்ஷி அமைதியானாள். சில நொடிகள் கடந்தது.

“கார எடுத்துட்டு போ. கவிதாவ அழ விடாத”

“ம்ம்..”

“அழுறியா?”

“தெரியல”

“இப்ப டிரைவ் பண்ண முடியுமா? இல்ல டிரைவர கூப்பிடுறேன். அவர் கூட போ.”

“ம்ம். நான் கிளம்புறேன்” என்று விட்டு வைத்து விட்டான்.

ஜாக்ஷிக்கும் மனம் பாரமானது. தாமரையை பார்த்த போதெல்லாம் சண்டை தான் போட்டிருக்கிறாள். ஆனாலும் அவரின் இழப்பு வருத்தமாக இருந்தது.

டிரைவரை அழைத்து விசயத்தை சொல்லி, காரை எடுத்துச் செல்ல சொன்னாள்.

சுபத்ரா இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். இவளை விட்டு செல்ல முடியாது. நாளை அதிகாலையிலேயே அறுவை சிகிச்சை இருக்கிறது. உடன் யாருமில்லை என்றால் பயந்து விடுவாள்.

தூக்கம் போனதில் அப்படியே அமர்ந்து விட்டாள்.

வீரா கிளம்பி கவிதாவின் ஹாஸ்டலுக்கு சென்றான். அங்கு விசயத்தை சொன்னதும், உடனே கவிதாவை அழைத்து வந்தார்கள்.

“என்னணா?” என்று கவிதா புரியாமல் கேட்க, “ஊருக்கு போறோம். கிளம்பி வா” என்றான்.

“என்னணா? ஏன்?”

“ஊர்ல எதோ பிரச்சனையாம். போற வழியில பேசிக்கலாம்” என்றவன், வேறு எதுவும் சொல்லாமல் அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.

கார் வேகமாக செல்ல, கவிதா புரியாமல் பார்த்தாள்.

“என்ன பிரச்சனைணா?”

“அங்க போனதும் பார்த்துக்க. இப்ப கொஞ்ச நேரம் தூங்கு. எனக்கும் தூக்கம் வருது” என்று கண்ணை மூடிக் கொண்டான்.

ஊருக்கு செல்லும் வரை கண்ணை திறந்து எதுவும் பேசவே இல்லை‌. வீட்டில் சென்று இறங்க, பந்தலை பார்த்ததும் கவிதா பதறி அடித்து உள்ளே ஓடினாள். தாமரையின் உடலுக்கு மாலை போட்டு மரியாதை செய்து கொண்டிருந்தனர்.

கவிதா கதறி அழ, அதை செய்ய முடியாமல் வீரா ஓரமாக நின்றான்.

இறுதி காரிய வேலைகள் எல்லாம் அடுத்தடுத்து நடந்தது. வீராவே அனைத்தையும் உணர்ச்சியற்று செய்து கொண்டிருந்தான்.

மொட்டை அடித்து கொள்ளியும் வைக்க, சேகரும் அருளும் அமைதியாக நின்றிருந்தனர். அருள் அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் கண்ணை துடைத்துக் கொண்டிருந்தான்.

காரியம் முடிந்ததும் வீட்டை கழுவி விட்டனர். கவிதா லட்சுமியின் மடியில் கண்ணீர் வற்றிக் கிடந்தாள். நிசாந்தினி முடிந்தவரை பொறுப்பை பார்த்துக் கொண்டாள்.

பசுபதி ஓரமாக அமர்ந்திருந்தார். முதல் மனைவி இறந்த போது, இளமை இருந்தது. பெரிதாக பாதிக்கவில்லை. இப்போது தாமரையை இழந்தது, மொத்த வாழ்வையும் இழந்தது போல் இருந்தது.

இந்த சில மாதங்களாக தாமரை அழுவதை நிறுத்தி விட்டார். அது தான் பாதித்து விட்டதோ? என்னவென்று அறியாமல் அமர்ந்திருந்தார். ஐந்து மணிக்கு கோலம் போட எழுந்து விடும் மனைவியை தொட்டுப்பார்த்தவருக்கு, குளிர்ந்து போன உடல் தான் மிஞ்சியது.

கையில் இன்னும் அந்த குளிர்ச்சி மிச்சம் இருக்க, கண்ணீரை துடைத்துக் கொண்டார்.

கவிதாவை விட்டு லட்சுமி வராமல் போக, ஜகதீஸ்வரியும் வீராவும் மட்டுமே வீடு திரும்பினர்.

மீண்டும் ஒரு முறை குளித்து விட்டு படுத்தான் வீரா. எல்லோரின் முன்பும் காட்டாத உணர்வுகள், இப்போது மேலே எழ கண்ணீர் கண்ணோரம் வழிந்தது.

ஜாக்ஷி அப்போது அழைத்தாள்.

“ஹலோ?”

“ம்ம்”

“எங்க இருக்க பத்ரா?”

“வீட்டுல”

“எல்லாம் முடிஞ்சதா?”

“ம்ம்”

“நீ பண்ணியா?”

“ம்ம்”

“அழனும்னா அழுதுடுடா. யாருக்காகவும் கட்டுப்படுத்தாத”

“கஷ்டமா இருக்கு ஜக்கம்மா.. என் மேல அவங்களுக்கு பெருசா பாசமே இருந்தது இல்ல. ஆனா இப்படியாகும்னு நினைக்கல”

“என்னாச்சாம்?”

“தெரியல. காலையில எழுப்பும் போது உயிரில்லனு சொல்லுறாங்க”

“தூக்கத்தோட உயிர் போட்டா, அவங்க நல்லவங்கனு கேள்வி பட்டு இருக்கேன். உன் அம்மா நல்லவங்க போல.”

“இருக்கும்.‌”

“எப்ப இங்க வர்ர?”

“நாளைக்கு.”

“கவிதாவையும் கூட்டிட்டு வா”

“வர மாட்டானு நினைக்கிறேன்”

“ஃபோர்ஸ் பண்ணி கூட்டிட்டு வா. அங்க இருந்து நினைச்சு அழுறத விட, இங்க வந்து படிப்ப பார்த்தா சீக்கிரம் தேறிடுவா”

“சரி”

“டிரைவர் நாளைக்கு வரை அங்க தான் இருப்பாரு.”

“ம்ம்”

“சாப்பிட்டியா?”

“பசிக்கல”

“தூங்குனியா?”

“இல்ல”

“கொஞ்ச நேரம் தூங்கு. நான் காலையில பேசுறேன்”

“ம்ம்” என்றதோடு வைத்தவன், கையால் முகத்தை மறைத்தபடி படுத்து விட்டான்.

சுபத்ரா ஜாக்ஷியை கவலையாக பார்த்தாள்.

“அண்ணன் பாவம். நீங்களும் கூட போயிருக்கலாம்”

“நாளைக்கு ஆப்ரேஷன். எப்படி போறது? அவன் சமாளிச்சுப்பான்” என்று விட்டாள்.

*.*.*.*.

அடுத்த நாள் மாலை…

கவிதாவை லட்சுமி கிளப்பி விட்டார். அவள் அழுது அடம்பிடிக்கவில்லை. அமைதியாகவே கிளம்பினாள்.

நிசாந்தினி தான் அவளை பார்த்து கவலைப்பட்டாள்.

“கவிதா”

“ம்ம்?”

“பத்திரமா இருடா. எதுனாலும் எனக்கு ஃபோன் பண்ணு”

“சரிங்க அண்ணி” என்றதோடு கிளம்பினாள்.

“இன்னைக்கு நீங்க போங்க. ரெண்டு நாள்ல நாங்க வர்ரோம்” என்று லட்சுமியும் ஜகதீஸ்வரியும் அனுப்பி வைத்தனர்.

பயணம் மீண்டும் அமைதியாக தான் இருந்தது. இருவருக்கும் பேசத்தோன்றவில்லை. கவிதாவிற்கு தேவையானதை கவனித்ததோடு, வீரா அமைதியாகவே இருந்தான்.

மீண்டும் சென்னை வந்து கவிதாவை ஹாஸ்டலில் இறக்கி விட்டான்.

“அழாம இருப்பியா?” என்று கேட்க, கவிதாவிற்கு கண்கள் மீண்டும் கலங்கியது.

“சரி அழுறதுனா அழுதுடு. ஆனா தேறி படிப்பையும் பாரு. என்ன?”

தலையாட்டி வைத்தாள்.

“எதுனாலும் கால் பண்ணு” என்றதும் சம்மதமாக தலையாட்டி விட்டு, உள்ளே சென்று விட்டாள்.

வீரா வீடு சென்று சேர்ந்தான். மருத்துவமனைக்கு போக வேண்டும். காலையில் சுபத்ராவின் அறுவை சிகிச்சை முடிந்திருந்தது. அவள் ஐசியூ வில் இருப்பதால் ஜாக்ஷி வீட்டில் தான் இருக்கிறாள்.

இன்னும் விடிந்து சூரியன் வரவில்லை. தூங்கிக் கொண்டிருப்பாள் என்று, சத்தமில்லாமல் அறைக்குள் சென்று படுத்து விட்டான். அரை மணிநேரம் கடந்திருக்க, கதவை தட்டி விட்டு ஜாக்ஷி வந்து நின்றாள்.

“தூங்கலயா?”

“தூக்கம் வரல” என்றவள் அவனருகே வந்து அமர்ந்து கொண்டாள்.

முடியில்லாமல் அவனை பார்க்கும் போது, ஜாக்ஷிக்கு வருத்தமாக இருந்தது. நடந்ததை எல்லாமே ஜகதீஸ்வரி அவளுக்கு சொல்லிக் கொண்டே தான் இருந்தார். அவன் வரும் நேரம் என்று தான் தூங்காமல் காத்திருந்தாள்.

“நீ ஏன் தூங்கல?”

அவனிடம் பதில் இல்லை.

ஜாக்ஷி அவனது போர்வையை விலக்கி உள்ளே வந்து படுத்துக் கொண்டாள்.

இருவரும் விட்டத்தை பார்த்தபடி இருந்தனர்.

“ரொம்ப கஷ்டமா இருந்ததா?”

“ம்ம்”

“அழனுமா?”

“தெரியல”

“நானும் வந்துருப்பேன். சுபத்ராவ விட முடியல”

“இப்ப எப்படி இருக்கா?”

“ஒரு நாள் அப்சர்வேஷன்ல இருப்பா. நாளைக்கு பார்க்கலாம்”

“கூட இருப்பேன்னு சொன்னேன்”

“அவ தைரியமா தான் இருந்தா. உன்னை நினைச்சு தான் கவலைபட்டுட்டு இருந்தோம்”

“ம்ம்”

அவன் முகத்தை பார்த்தாள். பழைய வீரா இவன். முதன் முதலில் பார்த்தபோது, யோசனையும் அமைதியுமாக இருக்கும் வீரா இவன். இடைப்பட்ட காலத்தில் அவளோடு கொஞ்சி விளையாடி, எதையும் வெளிப்படையாக பேசுபவன் இவன் இல்லை.

அவன் பக்கம் திரும்பி கையை நீட்டினாள். ஒரு நொடி பார்த்தவன், அடுத்த நொடி அவளை அணைத்து மார்பில் முகத்தை மறைத்துக் கொண்டான்.

“சரியா போயிடும்” என்று அவனது முதுகை தடவி கொடுக்க, அவனது கண்ணீர் அவளது உடையை நனைத்தது.

அவனுக்கு தாமரை மீது இருப்பதெல்லாம் ஏக்கம் தான். ஒதுக்கி வைத்து விட்டாரே என்ற கோபம் இருந்தாலும், அம்மா என்று கூப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்தாலும், அவரை அவனால் வெறுக்கவே முடியாது. சண்டை போட்டு கோபமாக கூட பேசி விடக்கூடாது என்று தான், ஒதுங்கி இருந்தான். ஆனால் மொத்தமாய் இல்லை என்றதும் உடைந்து விட்டான்.

கண்ணீரை உணர்ந்தாலும், ஜாக்ஷி அவனை தடுக்காமல் தட்டிக் கொடுத்தாள். இருவருமே தன்னையறியாமல் சில நிமிடங்களில் உறங்கி விட்டனர்.

காலையில் ஜாக்ஷி தான் முதலில் விழித்தாள். வீரா இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான்.

முகத்தை பார்த்தாள். நேற்று அப்பியிருந்த சோகம் இப்போது குறைந்து போயிருந்தது.

அவன் மொட்டை தலையை தடவ கையை தூக்கி விட்டு, பிறகு தொந்தரவு செய்யாமல் இறங்கி சென்று விட்டாள்.

குளித்து முடித்து மருத்துவமனைக்கு கிளம்பினாள்.

சுபத்ரா காலையில் சாதாரண அறைக்கு வந்திருக்க, அவளையும் பார்க்க வேண்டும்.

பார்த்ததுமே சுபத்ரா வீராவை பற்றி தான் விசாரித்தாள்.

“அவன் ஊருக்கு வந்துட்டான். இப்ப நீ எப்படி இருக்க? பெயின் எதாவது இருக்கா?” என்று கேட்டு மருத்துவரை பார்த்து பேசி முடித்தாள்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
29
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. சில உறவுகள் இறந்து போனப்பிறகு நம்ம மனசுக்கு நெருக்கமானவங்களா
      மாறிடுவாங்க.

      😢😢😢
      CRVS (or) CRVS 2797