Loading

 

கவிதா வினய்யை முறைத்துக் கொண்டிருந்தாள்.

“சொன்ன மூணு நாளும் முடிஞ்சு போச்சு” என்று கேட்க, வினய் பாவமாக பார்த்து வைத்தான்.

அவனால் எப்படி தேடியும் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை.

“நான் பண்ணல. அதுக்கு என் கிட்ட ஆதாரமும் இல்ல. எனக்கு என்ன பண்ணுறதுனே தெரியல” என்று தலையை பிடிக்க, கவிதா அவனது நண்பர்களை பார்த்தாள்.

“நிஜம்மாவே இவன் எடுக்கல கவிதா. நம்பு”

“சரி.. நானும் நல்லா யோசிச்சு பார்த்தேன். நீ எடுத்தியா? இல்ல வேற யாரும் எடுத்து உன் பேக்ல போட்டாங்களானு தெரியல. ஆனா இதோட இத முடிச்சுக்கலாம். ஆனா இத இப்படியே விடனும்னா நீங்க எல்லாரும் ஒன்னு பண்ணனும்”

“என்ன? சொல்லு சொல்லு”

“நீங்க.. இவன் யாரும் கேம்பஸ் குள்ள சிகரெட் பிடிக்க கூடாது. உங்க மொத்த கும்பலும் என்ன செய்யுறீங்கனு எனக்கு தெரியும். சீனியர்ஸ் கூட சேர்ந்துட்டு நாசமா போறீங்க. போய்க்கோங்க. ஆனா இனிமே காம்பஸ்க்குள்ள அத பண்ண மாட்டேன்னு சொன்னா, இத இப்படியே மறந்துடலாம். சம்மதமா?”

இதைக்கேட்டு எல்லோரும் சற்று விழித்தனர். வினய் மட்டும் உடனே ஒப்புக் கொண்டான்.

“பிராமிஸ். இங்க படிக்குற மூணு வருசத்துல, எப்பவுமே நாங்க இங்க தம் அடிக்க மாட்டோம்.”

“ஓகே. நான் என் வேலைய பார்க்குறேன். நீங்க உங்க வேலைய பாருங்க” என்று சென்று விட்டாள்.

“என்னடா இப்படி சொல்லிட்ட? வெளியில பிடிச்சா வீட்டுல மாட்டிக்குவோம்னு தான், சீனியர் சொன்ன இடத்துக்கு போறோம். இப்ப அங்கயும் முடியாதுனா எப்படிடா?”

“எனக்கு தம் இல்லாம இருக்க முடியாது” என்று ஒருவன் அடம்பிடிக்க, வினய் அவன் தலையில் தட்டினான்.

“தம் அடிக்கலனா என்ன செத்துடுவியா? அடிச்சாலும் சாகத்தான் போற. அதுனால அடிக்காமலே செத்துப்போ” என்று விட்டான்.

“நீ என்னடா அவ பேச்ச இப்படி கேட்குற? ஒரு வேளை மோதலும் காதலும்னு அவள லவ் பண்ண ஆரம்பிச்சுட்டியா?”

“ச்சை.. வாயக்கழுவுடா ****” என்று திட்டி அடித்து வைத்தான்.

“அவ என்னை பிரின்ஸ்சிபல் கிட்ட போட்டுக் கொடுத்தா, நான் படிக்கவே முடியாது. அப்புறம் மாடு தான் மேய்க்கனும். இனியொரு கம்ப்ளைண்ட் வந்தா, என் அப்பா அடுத்த நிமிஷம் டிசி வாங்கிடுவேன்னு சொல்லி வச்சுருக்காரு. படிக்காத பரதேசியாகுறத விட, இந்த தம்ம விட்டு தொலைக்கிறது ஈசி. நான் க்ளாஸ்க்கு போறேன். வந்து தொலைங்க” என்று விட்டு முறைத்தபடி கிளம்பி விட்டான்.

*.*.*.*.

நாட்கள் பறந்தது. சுபத்ராவுக்கான சிகிச்சை பற்றிய விவரங்கள் எல்லாம் தயாரானது. ஆனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய மருத்துவர், வேறு இடத்தில் மாட்டிக் கொள்ள, அவர் வரும் வரை காத்திருக்க வேண்டிருந்தது. சுபத்ராவும் மனதளவில் தயாராகிக் கொண்டிருந்தாள்.

அன்று ஜாக்ஷியும் வீராவும் அமர்ந்து, சுபத்ரா வரைவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பெரிய அளவில் இல்லை என்றாலும், அழகாகவே வரைந்து கொண்டிருந்தாள்.

அந்நேரம் லட்சுமி அழைத்தார்.

“அப்பத்தா…”

“வீரா என்னபா செய்யுற?”

“வீட்டுல உட்கார்ந்து இருக்கேன். ஏன்?”

“தாமரை உன்னை கல்யாணத்துக்கு கூப்பிடனுங்குறா”

“வர்ரேன். என்னைக்கு?”

“இன்னும் ரெண்டு வாரத்துல. பத்திரிக்கைய அனுப்பி விடுறேன் பாரு”

“ஓகே”

“தாமரை ஃபோன் பண்ணா எடுக்கலயாம். சொன்னா”

“எனக்கு பேச இஷ்டமில்ல அப்பத்தா விடுங்க”

“சரி சரி.. கல்யாணத்துக்கு ஜாக்ஷியையும் கூட்டிட்டு வாயேன்”

“அவளா?” என்று ஒரு நொடி பார்த்தவன், “அவளுக்கு வேலை இருக்கும். நான் வர்ரேன்” என்றான்.

“வேலை இல்லனா கூட்டிட்டு வா”

“பார்க்கலாம் அப்பத்தா.. நீங்க என்ன பண்ணுறீங்க?” என்று கேட்டு பேசி முடித்து விட்டு வைத்தான்.

“நான் வர வேணாமா?” என்று ஜாக்ஷி கேட்க, “வேணாம்” என்று விட்டான்.

“ஏன்?”

“அங்க வந்தா நீ சும்மா இருக்க மாட்ட. யாராவது என் கிட்ட பேசுவாங்க. நீ கோபப்படுவ. எதுக்கு தேவையில்லாம? இங்கயே இரு. நான் முதல் நாள் போயிட்டு மறுநாளே கிளம்பி வந்துடுவேன்”

“அவங்க பேசுவாங்க நீ கேட்டுட்டு நிப்ப. அத பார்த்தா கோபம் வரத்தான் செய்யும்” என்று தோளை குலுக்கினாள்.

“அதுக்கு தான் நீ வேணாம். நீ இங்க இரு. நான் அங்க போறேன். அவ்வளவு தான்” என்று முடித்து விட்டான்.

சுபத்ரா இருவரின் சண்டையில் சிரித்தபடி வரைந்து கொண்டிருந்தாள்.

“நல்லா இருக்கு சுபி. வேற என்னலாம் வரைவ?” என்று கேட்க, அவளும் சொல்ல நேரம் பறந்தது.

நாட்களை வேகமாக விழுங்கிக் கொண்டிருந்தது காலம். நாளை சேகருக்கும் நிஷாந்தினிக்கும் திருமணம். மூன்று நாட்கள் முன்பாகவே கவிதாவை அருள் அழைத்து வந்து விட்டான்.

வீரா அன்று இரவு தான் ஊருக்கு வந்தான். வந்ததும் நேராக தங்களது வீட்டுக்குச் சென்று விட்டான்.

‘மண்டபத்துல சொந்தம் பந்தம்னு உயிர வாங்குவாங்க. காலையில போயிக்கலாம்’ என்று வந்து படுத்து விட்டான்.

லட்சுமி ஜகதீஸ்வரி எல்லோரும் மண்டபத்தில் தான் இருந்தனர். வந்து விட்ட விசயத்தை மட்டும் சொல்லி விட்டு இங்கேயே தங்கி விட, தாமரை தான் கேட்டுக் கொண்டிருந்தார்.

“வீரா வந்துட்டானா அத்த?”

“வந்துட்டான்மா. அங்க நம்ம வீட்டுல தான் இருக்கான். காலையில வருவான்”

“இப்பவே வரலாம்ல?”

“வந்தா இங்க எல்லாரும் அவன கேள்வி கேட்டுட்டு இருப்பாங்கனு சொல்லுறான். நான் என்ன சொல்லுறது?”

“ஓ.. சரி காலையில நேரத்துக்கு வர சொல்லிடுங்க” என்றதோடு அமைதியாகி விட்டார்.

வீரா இதைப்பற்றிக் கவலைப்படாமல், ஜாக்ஷிக்கு குறுஞ்செய்தி அனுப்பி கடலை போட்டபடி உறங்கி விட்டான்.

மறுநாள் திருமணம். மண்டபத்தில் சொந்தபந்தங்களின் கூச்சல் அதிகமாகவே இருந்தது. வீரா காலையில் குளித்து கிளம்பி வந்து சேர்ந்தான்.

வந்ததும் வாசலில் நின்றிருந்த அருள் தான் முதலில் பார்த்தான்.

“உள்ள போங்க. எல்லாரும் பொண்ணு ரூம்ல இருக்காங்க” என்க, தலையை ஆட்டி விட்டு உள்ளே வந்தான்.

சொந்த பந்தங்கள் அவனை அடையாளம் கண்டு பிடித்துக் கொண்டது. நல விசாரிப்புகள் பலமாக இருந்தது. புன்னகை குறையாமல் எல்லோரிடமும் பேசி விட்டு, லட்சுமியை தேடிச் சென்றான்.

அவருக்கு பதில் ஜகதீஸ்வரி தான் கிடைத்தார்.

“பாட்டி!”

“வாடா.. வந்து இப்படி உட்காரு”

“அப்பத்தா எங்க?”

“வேலை பார்த்துட்டு இருப்பா. சும்மா உட்கார சொன்னா முடியாதுங்குறா. சரி போனு நான் வந்து உட்கார்ந்துட்டேன்”

“முகூர்த்த நேரம் வரலயா?”

“இன்னும் பத்து நிமிஷம் இருக்காம். இப்ப தான் டிரஸ்ஸ கொடுத்து அனுப்பி வச்சாங்க. மாத்திட்டு வந்தா சரியா இருக்கும்”

“ஓஹோ.. அப்ப இங்கயே நான் செட்டில் ஆகிடுறேன்” என்று அமைதியாக அமர்ந்து விட்டான்.

“என்ன வீரா? இப்படி காலையில வந்து நிக்கிற? முன்னாடியே வர்ரது இல்லையா? என்னபா நீ இப்படியா குடும்பத்த விட்டு தள்ளி இருப்ப?” என்று ஒரு பெருசு வந்து சேர்ந்தது.

ஜகதீஸ்வரி சற்று சலிப்போடு பார்த்தாலும், கவனிக்காதது போல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.

“வாங்க பெரியப்பா நல்லா இருக்கீங்களா?” என்று வீரா தான் பேசினான்.

“நல்லா தான்பா இருக்கேன். ஆனா நீ என் கேள்விக்கு பதில் சொல்லலயே?”

“எனக்கு வேலை இருந்துச்சு பெரியப்பா. ஆனா சொன்னாங்க.. நீங்க தான் பந்தக்கால நட்டு, பத்திரிக்கைய வச்சு, பந்தி வரை பார்த்தீங்களாமே. நீங்க இருக்கும் போது சின்ன பையன் நான் எதுக்கு? உங்க தலைமையில தான் கல்யாணமே நடக்குதுனு பேசுறாங்க எல்லாரும். அது போதுமே?”

அந்த பெரியப்பா விழித்தார். காரணம் அவரும் சற்று முன்பு தான் வந்து சேர்ந்திருந்தார். வீராவுக்கு பதில் சொல்ல முடியாமல், “ஹா ஹா.. நல்லா பேசுற வீரா.. நான் போய் அங்க உட்காருறேன்” என்று விட்டு ஓடி விட்டார்.

“பாவத்த இப்படியாடா செய்வ?” என்று கேட்டு ஜகதீஸ்வரி சிரிக்க, “உங்க பேத்தி கிட்ட இருந்து ஒட்டிக்கிச்சு பாட்டி. என் தப்பில்ல” என்று சிரித்தான்.

மணமக்கள் மேடைக்கு வந்து விட, திருமண வைபவம் ஆரம்பமானது. லட்சுமி வேலை முடிந்தது என்று வீராவின் அருகே வந்து அமர்ந்து விட்டார்.

தாலி கட்டி பெரியவர்களிடம் ஆசி வாங்கி முடிக்க, வீரா சாப்பிடாமலே கிளம்பி விட்டான்.

“சாப்பிட்டு போடா. இப்படி செய்யாத” என்று லட்சுமி அதட்ட, “இப்ப போய் பந்தில உட்கார சொல்லுறீங்களா? யாராவது பார்த்தா.. நீ தான் பரிமாறனும் நீயே முதல்ல உட்கார்ந்து சாப்பிடுறனு கேட்டு, என்னை நிம்மதியா சாப்பிட கூட விட மாட்டாங்க அப்பத்தா” என்க, ஜகதீஸ்வரிக்கும் அது தான் தோன்றியது.

“அக்கா.. விடு. அவன் இருக்க இருக்க எதாவது பேசி நோகடிச்சுட்டு தான் இருப்பாங்க. நாங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போறோம். யாரும் கேட்டா, எனக்கு கிறுகிறுனு மயக்கம் வந்துடுச்சு. அதுனால வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டான்னு சொல்லிடு. அவ்வளவு தான். வா வீரா போகலாம்”

“சாப்பாட வேணா அனுப்பி விடவா?” என்று அவர் மனம் பொறுக்காமல் கேட்க, “வேணாம் அப்பத்தா.. நாங்க பார்த்துக்கிறோம். நீங்க இங்க ஹெல்ப் பண்ணுங்க” என்று விட்டு கிளம்பி விட்டான்.

தாமரை மகனை பார்த்தாலும், அருகே வந்து பேச தைரியம் இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தார். இப்போது கிளம்பிச் செல்வதை பார்த்து விட்டு, அவசரமாக ஓடி வந்தார்.

“அத்த.. என்ன கிளம்பி போயிட்டாங்க? சாப்பிடலயே”

“ஜகதீஸ்வரிக்கு தலை சுத்துதாம். கூட்டத்துல இருக்க முடியலனு கிளம்புறா. வீராவ கூட அனுப்பி விட்டேன்” என்று சமாளித்தார்.

“அண்ணா எங்க பாட்டி?” என்று கவிதாவும் வந்தாள்.

எல்லோருக்கும் ஒரே விசயத்தை சொல்லி சமாளித்து விட்டார்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
28
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. இதுக்கு எதுக்கு வீராவை கல்யாணத்துக்கு கூப்பிட்டாஙடகன்னே தெரியலையே…?

      😀😀😀
      CRVS (or) CRVS 2797

    2. வினய் பயமே அவனை நல்ல வழிக்கு கொண்டு வந்து விடும்