Loading

 

காரில் அமர்ந்திருக்கும் போது, காரையே சுற்றி சுற்றி பார்த்தான் வினய். அவனை கவனித்த ஜாக்ஷி, “கார்னா பிடிக்குமோ?” என்று கேட்டாள்.

“ம்ம்.. ரொம்ப”

“அதான் அப்பவே ஓட்டி ஆக்ஸிடென்ட் பண்ணியா?”

வினய் வேறு பக்கம் பார்த்தான்.

“லைசன்ஸ் வாங்காம கார எடுத்தனா அவ்வளவு தான் பார்த்துக்க”

“லைசன்ஸ் எடுக்கனும்னு அப்பா கிட்ட கேட்டேன். மறுபடியும் எங்கயாவது இடிச்சு தண்ட செலவு வைக்கவா? வேணாம்னு அம்மா சொல்லிட்டாங்க”

“அதுவும் சரி தான். நீ ஊர்ல இருக்க எல்லாரையும் இடிச்சுட்டு போறதுக்கு சும்மா இரு”

“அது தெரியாம….” என்று ஆரம்பித்தவன், அவளது முறைப்பில் வாயை மூடிக் கொண்டான்.

‘அம்மாடி! அம்மாவ விட முறைக்கிதே இந்தம்மா’ என்று பயந்து திரும்பிக் கொண்டான்.

அங்கிருந்து நேராக ஒரு இடத்தில் சென்று காரை நிறுத்தினாள்.

“இங்க எதுக்கு வந்தோம்?”

“கவிதா இங்க வருவா. வெயிட் பண்ணு”

‘எந்த கேப்ல கவிதா கிட்ட பேசுனா? பொய் சொல்லுறாளோ?’ என்று சந்தேகமாக பார்த்திருக்க, கவிதாவும் வீராவும் ஆட்டோவில் வந்து இறங்கினர்.

தெரு கிட்டத்தட்ட அமைதியாக இருக்க, இவர்களும் காரை விட்டு இறங்கினர்.

‘நிஜம்மாவே வந்துட்டா? எப்படி?’ என்று அதிசயப்பட்டான். அதோடு ஜாக்ஷியின் மீது புதிதாக மரியாதை கூட வந்தது.

‘நின்ன இடத்துல இருந்து சாதிக்கிறாளே!’ என்று.

கவிதா வினய்யை முறைத்து விட்டு, “ஹாய் அண்ணி” என்றாள் ஜாக்ஷியை பார்த்து.

“ஹாய்.. மறுபடியும் என்ன பிரச்சனை உங்களுக்குள்ள?”

கவிதா ஒப்பிக்க, வினய் மறுக்க, இருவருக்கும் வாக்குவாதம் ஆனது.

“நான் எடுக்கலனு சொல்லுறேன்ல?”

“அப்புறம் எப்படி உன் பேக்குக்கு வந்துச்சு?”

“எனக்கு தெரியாது”

“நீ தான் எடுத்துருப்ப”

“நான் ஒன்னும் திருடன் கிடையாது கவிதா. உன் கையில இருந்து தான் போன தடவ நான் வாங்குனேன். திருடல. இப்பவும் நான் திருடல”

“அப்ப யாரு எடுத்து போட்டானு சொல்லு. நான் அவன போய் கேட்குறேன்”

“எனக்கு தெரியலனு சொல்லுறேன்ல?”

“இப்படியே சொல்லிட்டு இருந்தா? நீ நல்லவன்னு நம்பனுமா?”

வீரா அவர்களது சண்டையை பார்த்து தலையில் கை வைக்க, ஜாக்ஷிக்கு சிரிப்பு வந்தது.

“ஏய்.. நிறுத்துங்கடா.. ரெண்டு பேரும் என்ன சின்ன பசங்களா? காலேஜ் வந்துட்டீங்க. இப்படி தான் சண்டை போட்டுட்டு இருப்பீங்களா?” – ஜாக்ஷி

“அண்ணி.. இவன் போன எடுக்கலனா இவன் பேக்ல எப்படி வரும்?”

“எவனாச்சும் எனக்கு ஆகாதவன் செஞ்சுருப்பான். எவன்னு தெரியட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு”

“ஓஹோ.. நீ யாரு கிட்ட போய் சொன்னா? உனக்கும் எனக்கும் சண்டைனு?”

“யாரு கிட்டயும் சொல்லல. நீ தான் எங்கயாச்சும் உளறி வச்சுருப்ப”

“உளறுனேன்னு சொன்ன அவ்வளவு தான் சொல்லிட்டேன். நான் யாருக்கும் சொல்லல. இவன பத்தி பேசுறத தவிர வேற வேலை இல்ல பாரு எனக்கு?”

“போதும்.. அமைதியா இருங்க” என்று வீரா அதட்ட, இருவருமே வாயை மூடிக் கொண்டனர்.

“இங்க பாரு வினய்.. கவிதா மேல தப்பில்ல. அவ ஃபோன் உன் பேக்ல இருந்தா, அவ உன்னை தான் சந்தேகப்படுவா. வேற யாரோ ஒருத்தர் பேக்ல இருந்து உன்னை சந்தேகப்பட்டா தான் தப்பு”

வினய் ஜாக்ஷியை பார்த்து விட்டு, “நான் எடுத்திருந்தா நானே ஆமானு சொல்லிடுவேன்” என்றான் கோபமாக.

“சரி நீ எடுக்கல. உன் பேக்ல யாரோ வச்சுட்டாங்க. வச்சது யாருனு கண்டு பிடி. அப்படி நீ மூணு நாள்ல கண்டு பிடிக்கலனா, கண்டிப்பா நானே வந்து பிரின்ஸிபல் கிட்ட கம்ப்ளைண்ட் கொடுப்பேன்”

“மூணு நாளா?”

“ஆமா. எப்படி கண்டு பிடிக்கிறங்கறது உன் சாமர்த்தியம். ஆனா மூணு நாள்ல பதில் வரனும். வரலனா கவிதாவ குறை சொல்லாத”

“இந்த மூணு நாள் நீயும் கண்டு பிடிக்க பாரு கவிதா. உண்மையிலயே இவன் எடுத்துருந்தா, இவன எதாவது பண்ணலாம். ஆனா வேற யாராவது செஞ்சுருந்தா, அவன சும்மா விடக் கூடாதுல?” என்று ஜாக்ஷி கேட்க தலையாட்டி வைத்தாள்.

“ரெண்டு பேரும் உண்மை முழுசா தெரியுற வரைக்கும் சண்டை போடாம இருங்க. இப்படியே போயிட்டு இருந்தா, உங்களால உண்மைய கண்டு பிடிக்க முடியாது”

“ஓகே.. நான் கண்டு பிடிக்கிறேன். எவன் அவன் என் பேக்ல வந்து போட்டு வச்சவன்னு எனக்கு தெரியனும்” – வினய்.

“நானும் பார்க்குறேன் அண்ணி. ஆனா ஆதாரம் எதுவும் கிடைக்கலனா, இவனுக்கு தண்டனையும் கிடைக்கனும்”

“கொடுத்துடலாம். என்ன தண்டனை?”

“முதல்ல அந்த நம்பர் யாரோடதுனு தெரியனும். அப்புறம் அந்த ஃபோட்டவ பிரிண்சிபல் கிட்ட காட்டி சஸ்பண்ட் பண்ண வைக்கனும்”

வீரா வினய்யை நன்றாக பார்த்தான். அவன் முகத்தில் திடீர் பீதி பரவியது.

“நீ சாக்லேட்ல வச்சு கொடுத்தியே அது யாரு நம்பர்?” என்று நேரடியாக கேட்டு விட்டான்.

“ஆமா யாரு நம்பர் அது? உன் நம்பர் இல்லையாமே.. என்ன ப்ளான் பண்ண நீ?” என்று ஜாக்ஷி அதட்டி கேட்க, அவனுக்கு தொண்டைக்குள் எதோ சிக்கியது.

“வினய்.. கேட்டா பதில் வரனும்” என்று அவள் அழுத்தமாக கேட்க, “அது ஒரு ஃப்ரண்டோட நம்பர்” என்றான் தலையை தொங்க போட்டுக் கொண்டு.

மிரட்டிக் கேட்டு உண்மையை வாங்கி விட்டனர்.

“ஒரு பொண்ணோட ஃபோன இன்னொருத்தன ஹேக் பண்ண சொல்லி, ப்ளான் பண்ணுவியா? இப்ப எனக்கு இன்னொரு டவுட் வருதே.. ஒரு வேளை உண்மையாவே நீ தான் ஃபோன எடுத்தியா? ஹேக் பண்ண ட்ரை பண்ணி முடியலனு, ஃபோனயே தூக்கிட்டு போய் உன் ஃப்ரண்ட் கிட்ட கொடுக்க பார்த்தியோ?” – ஜாக்ஷி

“இல்ல இல்ல.. நான் இவ கூட இனிமே பிரச்சனையே வேணாம்னு தான் நினைச்சேன். சத்தியமா நான் எடுக்கல”

“நம்ப முடியலயேடா” என்று அவள் சந்தேகமாக பார்க்க, “அந்த ஃபோட்டோவ ஏன் அழிக்க பார்த்த?” என்று வீரா கேட்டான்.

“இவ எதாவது ஒரு கோபத்துல யாருக்காச்சும் அனுப்பிட்டா, மறுபடியும் நான் பிரச்சனையில மாட்டுவேன். அப்புறம் எங்கம்மா என்னை சும்மா விட மாட்டாங்க. அதான்”

“கவிதா.. அந்த போன கொடு” என்று வாங்கியவன், படத்தை தனக்கு அனுப்பி விட்டு, அவளது கைபேசியிலிருந்து அழித்துக் கொடுத்து விட்டான்.

“இப்ப அழிச்சுட்டேன். இவ கோபத்துல யாருக்கும் அனுப்ப மாட்டா. ஆனா மறுபடியும் நீ அவள எதாச்சும் பண்ணா, இது என் கிட்ட இருந்து இது எங்க வேணா போகும். மறந்துடாத”

“எதுவும் பண்ண மாட்டேன்” என்று அமைதியாக சொல்லி விட்டு, நிம்மதி மூச்சு விட்டான்.

“மூணு நாள் கழிச்சு நாங்களே உங்களுக்கு கால் பண்ணி விசாரிக்கிறோம். அது வரை தேடுங்க. கண்டு பிடிச்சுட்டா, மறக்காம சொல்லுங்க. இப்ப சண்டை போடாம உங்கள வேலைய பாருங்க. நீ.. கவிதாவ கூட்டிட்டு கிளம்பு”

ஜாக்ஷி சொன்னதும் வீரா அவளோடு கிளம்பி விட்டான்.

“நீ எப்படி போவ?”

“இங்க இருந்து வீட்டுக்கு போயிக்கிறேன்”

“வீட்டுல உன் அம்மாவ பார்த்து பயந்து சாப்பிடுறதே இல்லையே.. என்ன செய்வ?”

“எதாச்சும் ஸ்னாக்ஸ் சாப்பிட்டு படுத்துருவேன்”

“நான் வேணா ஒரு ஐடியா சொல்லவா?”

“என்ன?”

“ஹாஸ்டல் போயிடு”

“ஹான்?”

“ஹாஸ்டல்ல சாப்பாட்டு பிரச்சனை இருக்காது. உன் அம்மாக்கு பயந்து பட்டினி கிடக்க வேணாம். நீயும் உலகம் எப்படி இருக்குனு வாழ கத்துக்குவ. இது வரை எப்படியோ.. இனிமே நீயா வாழப்பழகு. அதான் உனக்கு நல்லது”

“அது ஏன் இனிமே?”

ஜாக்ஷி முறைக்க, “ஓகே” என்று அவசரமாக சம்மதித்தான்.

“ஹாஸ்டல் வாழ்க்கையில சுதந்திரமும் இருக்கும், ஆபத்தும் இருக்கும். பழகி தெரிஞ்சுக்க. அப்ப தான் வாழ்க்கைனா என்னனு தெளிவு வரும். இப்ப எதையாவது சாப்பிட்டுட்டு வீடு போய் சேரு” என்றதும், உடனே தலையாட்டி விட்டு சென்று விட்டான்.

ஜாக்ஷி வீட்டுக்கு கிளம்ப, அவளது கைபேசியில் செய்தி வந்தது. அசோக்கின் தொழிலை ஆட்டம் காண வைக்க ஏற்பாடுகள் ஆரம்பித்திருந்தது.

*.*.*.*.*.*.*.*.

அடுத்த நாள்…

ஜாக்ஷி மருத்துவமனையில் அமர்ந்திருந்தாள். சுபத்ராவிற்கு சிகிச்சை செய்ய அழைத்து வந்திருந்தாள்.

பரிசோதனை முடிந்ததும், “மேடம்.. உள்ள வாங்க” என்று நர்ஸ் அழைத்தார்.

உள்ளே சென்று சுபத்ராவின் அருகே அமர்ந்து கொண்டாள்.

மருத்துவர் அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும் என்று கூற, சுபத்ரா பயந்து ஜாக்ஷியின் கையை பிடித்துக் கொண்டாள்.

“பண்ணிட்டா கண்டிப்பா வாய்ஸ் வந்துடுமா டாக்டர்?”

“கண்டிப்பா வந்துடும் மேடம்”

“இவ பயப்படுவா. நான் பார்த்துக்கிறேன். நீங்க எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு, எப்ப அட்மிட் ஆகனும்னு மட்டும் சொல்லுங்க”

“ஓகே மேடம்”

மருத்துவமனையின் முதலாளி அல்லவா? அவள் சொல்லுக்கு உடனே ஏற்பாடு நடந்தது.

சுபத்ரா தான் மறுத்து மறுத்து ஓய்ந்து போனாள்.

“இங்க பாரு.. என் கிட்ட பேசி யூஸ் இல்ல. இந்த ஐடியா உன் அண்ணனோடது. அவன் கிட்ட பேசு. அப்புறம் அண்ணிங்க எல்லாம் நாத்தனாரு கிட்ட கறாரா தான் இருப்பாங்களாம். இனிமே நானும் அப்படி தான் இருக்க போறேன். போய் உன் வேலைய பாரு. நான் போய் என் வேலைய பார்க்குறேன்” என்று வீட்டில் விட்டு விட்டு சென்று விட்டாள்.

மாலை ஜாக்ஷி வீடு திரும்ப, வீரா தாமதமாக வந்து சேர்ந்தான்.

“என்ன லேட்டு?”

“மீட்டிங் இப்ப தான் முடிஞ்சது. இரு ஃப்ரஸ்ஸாகிட்டு வர்ரேன். சுபி எதாவது இருந்தா எடுத்து வைமா. பசிக்குது” என்று விட்டு அறைக்குச் சென்று விட்டான்.

“நீ டின்னர வை.” என்ற ஜாக்ஷி, வீராவின் பின்னால் சென்றாள்.

வீரா வேறு உடை மாற்றி விட்டு வெளியே வர, ஜாக்ஷி அறைக்குள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள்.

“இங்க என்ன பண்ணுற?” என்று கேட்டவன் அவளை அணைத்துக் கொண்டான்.

“பேசலாம்னு வந்தேன்”

“பேசேன். ஆனா.. நான் ரொம்ப டயர்ட்”

“சரி வா சாப்பிட்டு பேசலாம்”

“அதெல்லாம் வேணாம்” என்றவன் அவளை முத்தமிட, சிரிப்போடு அனுமதித்தாள்.

முத்தங்கள் எல்லை மீறி, பிறகு நின்று விட்டது. ஜாக்ஷி உதட்டை கடித்தபடி வேறு பக்கம் பார்க்க, “இப்ப ஓகே டயர்ட் போச்சு” என்றான்.

அவளுக்கு சிரிப்பு வந்தாலும், அடக்கிக் கொண்டு வேறு பக்கம் பார்த்தாள்.

தலைக்கு கை கொடுத்து அவள் முகத்தை பார்த்தவன், “இப்ப சொல்லு. என்ன பேசனும்” என்று கேட்டான்.

“பேச வந்தவள..”

“வந்தவள?”

“மறக்க வச்சுட்ட”

“யோசிச்சு சொல்லு வெயிட் பண்ணுறேன்” என்றவன் அவளை அணைத்துக் கொண்டு படுத்துக் கொண்டான்.

“ஞாபகம் வந்துடுச்சு. சுபத்ராவுக்கு ஆப்ரேஷன் தான் பெஸ்ட்னு டாக்டர் சொல்லுறாரு.”

“அவள சமாளிச்சுடலாம். கவலைப்படாத”

“பேசியே அவள சரி கட்டிடுற நீ”

“பொறாமையா? அவ தங்கச்சிமா.. அவள பேசி சரி கட்டனும். உன்னை இப்படி கட்டிட்டு சரி பண்ணனும்” என்றவன் அவள் கழுத்தோரம் முத்தமிட ஆரம்பிக்க, கூச்சத்தில் கண்ணை மூடிக் கொண்டாள்.

முத்தமிட்டு முடித்தவன் கன்னம் கிள்ளினான்.

“சோ சாஃப்ட் ஜக்கம்மா.. இதுக்கே சிவந்து போயிட்ட”

“போடா..” என்று அவனை தள்ளி விட்டு எழுந்து நின்றாள்.

“என் மொத்த டிரஸ்ஸையும் கசக்கிட்ட பக்கி” என்று அவளது உடையை பார்த்து விட்டு முறைத்தாள்.

“ஆமால.. ஆனா டிரஸ் கசங்காம இருக்க என் கிட்ட ஐடியா இருக்கு” என்றவன் ஜடியாவை சொல்ல, தலையணையை தூக்கி அவன் முகத்தில் போட்டாள்.

“ஜக்கம்மா சத்தியமா வொர்க் அவுட் ஆகும். செக் பண்ணி பாரேன்”

“அப்படியே போட்டேன்னா.. போடா” என்றவள் உடனே அவளது அறைக்கு ஓடி விட்டாள்.

“ஜக்கம்மா நில்லுடி.. ட்ரை பண்ணாம போனா எப்படி?” என்று கத்தியவன், அவள் ஓடியதும் சிரிப்போடு மெத்தையை சரி செய்தான்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
29
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. அப்படி என்ன வேலையை பார்க்க சொல்லியிருக்கா ஜாசஷி, அசோக்கோட டப்பா டான்ஸ் ஆடற அளவுக்கு..?

      😀😀😀
      CRVS (or) CRVS2797