Loading

 

காலையில் சுபத்ரா சமைத்துக் கொண்டிருக்க, ஜாக்ஷி வந்தாள்.

“என்ன செய்யுற?”

“உப்புமா”

“உனக்கு ஒரு நல்ல செய்தி”

“என்ன?”

“இன்னைக்கு உன் அண்ணன் இங்க வந்துடுவான்”

வேலையை போட்டு விட்டு, விழி விரிய பார்த்தாள்.

“மேல இருக்க ரூம் அவனுக்கு. க்ளீன் பண்ணிடுவியா? இல்ல ஹெல்ப் வேணுமா?”

“உண்மையாவே வர்ராங்களா? பாட்டி வந்தா தான் வருவாங்கனு நினைச்சேன்”

“அவன் தான் சொன்னான். வந்துடுவான். இனி சந்தோசமா உன் அண்ணனுக்கும் சேர்த்து சமைச்சு அசத்து”

சுபத்ரா பலமாக தலையாட்டினாள்.

“நானே க்ளீன் பண்ணிடுவேன் வேற யாரும் வேணாம்”

“ஹெல்ப் வேணும்னா வாட்ச்மேன் தாத்தாவ கூப்பிட்டுக்க. அந்த ரூம்க்கு பர்னிச்சர் அப்புறமா வரும். வாங்கி போட்டுருங்க. இப்ப இத எனக்கு கொடு. சாப்பிட்டு கிளம்புறேன்”

சாப்பிட்டு விட்டு கிளம்பியதும், சுபத்ரா குதூகலமாக அறையை சுத்தம் செய்யும் வேலையை பார்த்தாள். அவ்வப்போது தூசி தட்டி வைப்பதால், பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால் அந்த அறையில் கட்டில் மெத்தை எதுவும் இல்லை. தேவையானதை தான் ஜாக்ஷி அனுப்பாவாளே.

சுத்தபடுத்தும் வேலையை மட்டும் பார்த்தால் போதும். வீராவும் உடன் இருப்பான் என்றால், அவளுக்கு வேறு எதை பற்றியும் கவலையே இல்லை. பத்திரமாக இருப்பாள்.

சுத்தபடுத்தும் வேலை முடிய, கட்டில் மெத்தை எல்லாமே வந்து சேர்ந்தது. அறைக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வந்தது.

இருவர் மட்டுமே இருப்பதால், தேவைக்கு அதிகமாக ஜாக்ஷி எதையும் வாங்கியது இல்லை. இடத்தை அடைத்துக் கொண்டு வீணாக கிடக்கும் என்று வாங்காமலே விட்டு விட்டாள்.

மாலை நேரம் ஜாக்ஷி வீராவை அழைத்தாள்.

“என்ன ரெடியா?”

“இப்ப தான் வீட்டுக்கு வந்தேன். எல்லாம் ஏற்கனவே இருக்கு. எடுத்துட்டு கிளம்ப வேண்டியது தான்.”

“நான் வந்து பிக் அப் பண்ணிக்கவா?”

“உனக்கு வேலை இல்லையா?”

“வேலை…”

“இருந்தா அத பாரு. நான் தொலைஞ்சு போயிட மாட்டேன்”

“வேலைய நான் லேட்டா பார்த்துக்கிறேன். இன்னும் பத்து நிமிஷம் தான். கிளம்பி இரு. வர்ரேன்” என்று விட்டு வைத்து விட்டாள்.

“சரியான பிடிவாதகாரி” என்று சிரித்து விட்டு, தேவையானதை எடுத்துக் கொண்டான்.

அரை மணி நேரத்தில், இருவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

சுபத்ரா வாசலுக்கே ஓடி வந்தாள்.

“என்ன சும்மா வந்து நிக்கிற? எங்க ஆரத்தி?” என்று வீரா கேட்க, ஜாக்ஷி அவனை மேலும் கீழும் பார்த்தாள்.

“புகுந்த வீட்டுக்கு வர்ரேன். ஒரு ஆரத்தி இல்லையா? ச்சே.. வெரி பேட்” என்றவன் உள்ளே சென்று விட்டான்.

“கொழுப்ப பார்த்தியா இவனுக்கு” என்று ஜாக்ஷி கேட்க, சுபத்ரா சிரித்தபடி அவன் பின்னால் ஓடினாள்.

“உங்களுக்கு எதாவது கொண்டு வரவா?” என்று சுபத்ரா கேட்க, “இப்ப வேணாம்மா.. நைட் சாப்பிடலாம்” என்றான்.

“நைட் உங்களுக்கு பிடிச்ச கருவாடு தான் சமைக்க போறேன்”

“நீ தான்மா உலகத்துலயே  நல்ல தங்கச்சி. அந்த கருவாட்டு குழம்ப மறக்கவே முடியாது. செய் செய்”

“சரியான பூனை இவன். நீ போய் இந்த பூனைக்கு கருவாட ரெடி பண்ணு. நான் ரூம காட்டுறேன்” என்று விட்டு அவனை அழைத்துக் கொண்டு மேலே சென்றாள்.

“தனி ரூமா?”

“ஏன் உனக்கு பிரைவசி வேணாமா?”

“உன்னை தாண்டி ஒரு பிரைவசியா?” என்று கேட்டு அவள் தேளில் கைபோட்டுக் கொள்ள, ஜாக்ஷிக்கு சிரிப்பு வந்தது.

“டீன் ஏஜ் பசங்க மாதிரி பேசாத..”

“லவ் பண்ணுற எல்லாருமே டீன் ஏஜ் மாதிரி தான்மா ஃபீல் பண்ணுவாங்க..”

“ஓ.. நீ என்னை லவ் பண்ணுறியா?”

“அதுல என்ன டவுட்டு? ஆனா நீ லவ் பண்ணலயோ? அதான் டவுட்டு வருதோ?”

“ஆஹான்.. இதான் உன் ரூம்.” என்று கதவை திறந்து உள்ளே சென்று விட்டாள்.

அவள் பின்னால் வந்தவன், அறையை நன்றாக பார்த்தான். பிறகு அவளை திரும்பிப் பார்த்தான். மீண்டும் அறையை பார்த்தான்.

வாயில் கைவைத்து ஆச்சரியமாக பார்க்க, ஜாக்ஷி அவனருகே வந்து, “பிடிச்சுருக்கா?” என்று கேட்டு வைத்தாள்.

“இதுக்கு தான் நேத்து வீட்டுக்கு வந்தியா?”

“பின்ன உன்னை மிஸ் பண்ணதால வந்தேன்னு நினைச்சியா?”

வீராவின் அறையை போலவே அலங்காரம் செய்ய சொல்லி இருந்தாள்.

வீட்டில் அவனுக்கு எது போன்ற பொருட்களை பிடிக்கும் என்று நன்றாக பார்த்து விட்டு, அதே போன்ற பொருட்களை தேர்வு செய்து அனுப்ப சொல்லியிருந்தாள். அறை அவனுக்கு பிடித்த வகையில் இருந்தது.

“ஒரே நாள்ல? எப்படி?”

“நான் எதுவும் பண்ணல. சுபத்ரா க்ளீன் பண்ணா. இத எல்லாம் கொண்டு வந்து இந்த மாதிரி அரேன்ஜ் பண்ணிடுங்கனு சொன்னேன். பண்ணிட்டு போயிருக்காங்க. பிடிச்சுருக்கா? ஆரத்தி கேட்டியே.. இது பரவாயில்லையா?”

அவளை அணைத்துக் கொண்டு புன்னகைத்தான்.

“தாங்க்ஸ்”

“என் ரூம்ல நீ இருக்கது பிரச்சனை இல்ல. ஆனா நான் எல்லாத்தையும் கலைச்சு போட்டுருவேன். உனக்கு க்ளீனா இருந்தா தான் பிடிக்கும். நமக்கும் அப்ப அப்ப ப்ரைவசி தேவைப்படும். அதுக்கும் இதான் சரி”

“இதுக்கு பேரு தான் லவ் தெரியுமா?”

“அப்படியா?”

“ஆமா.. எங்க லவ் யூ னு சொல்லு”

“நோ‌.. முடிஞ்சா வாங்கி காட்டு. நான் என் வேலைய பார்க்க போறேன்” என்று அவனை பிரிந்து நடக்க, அவளை இழுத்து அணைத்தான்.

“ஓகே லவ் யூ தான் இல்ல.. ஒரு கிஸ்?”

ஜாக்ஷி கன்னத்தை காட்ட, அவன் அவள் முகத்தைத் திருப்பி உதட்டை பார்த்தான்.

அதிர்ச்சியில் ஒரு நொடி நின்றவள், தன்னை தானே தேற்ற நேரம் கொடுத்தான்.

“அ…”

அவள் பேச வந்த வார்த்தைகள், அவனுக்குள் தான் இறங்க வேண்டியிருந்தது. அந்த அதிரடி கூட ரசிக்க வைக்க, கண்ணை மூடிக் கொண்டாள்.

முதல் முத்தம் தான். சரியா? தவறா? என்று கூட இருவருக்கும் தெரியவில்லை. ஆனால் அழிக்க முடியாத நிகழ்வாக இதயத்தில் பதிந்தது.

அவனாக விலகியதும், வெட்கம் தாங்காமல் அவன் மார்பில் நெற்றியை முட்டி நின்றாள்.

“தாங்க்யூ ஜக்கம்மா.. இவ்வளவு செய்வனு எதிர்பார்க்கல”

“எப்பவும் ஏன் பசங்களே செய்யனும்னு ஒரு சேன்ஞ்க்கு பண்ணேன்.”

“முகத்த பார்த்து பேசு”

“போடா.. முடியல”

“இதுக்கேவா? இன்னும் இருக்கேமா ஜக்கம்மா”

“எல்லாம் எனக்கும் தெரியும். பட் எல்லாம் ஜஸ்ட் தியரியா..”

“ஓஹோ.. என்னை போலவே நீயும் பச்சை மண்ணு தானா?”

சட்டென நிமிர்ந்து பார்த்தாள்.

“உனக்கும் ஒன்னும் தெரியாதா?”

“ம்ஹும்”

“சுத்தம்”

“ஏன்?”

“ஒன்னுமில்ல. நீ பேக்கிங்க பிரி. நான் பாதில விட்ட வேலைய பார்க்குறேன். கொஞ்சம் வேலை இருக்கு”

“ஓகே” என்று அவளை விட்டு விட்டான்.

அவள் சென்றதும் சிரித்துக் கொண்டே அறையை பார்த்தான்.

‘ஜக்கம்மா லவ் யூ சொல்ல வச்சுட்டு உன்னை கவனிக்கிறேன்’ என்று நினைத்தவன், அவள் சொன்னதையே செய்ய ஆரம்பித்தான்.

இரவு சுபத்ரா சமையலை வயிறார சாப்பிட்டான்.

“உன் கிட்ட இந்த சமையல நான் கத்துகிட்டே ஆகனும் சுபத்ரா. செம்மையா பண்ணுற”

“நான் உங்களுக்கு சொல்லி தர்ரேன்”

“உன்னை சுபத்ரானு முழு பேர சொல்லி கூப்பிட ஒரு மாதிரி இருக்கு. சுபா ஆக்கிடுவோமா?”

சட்டென சுபத்ராவின் முகம் வாட, “இவள பெத்ததுங்க அப்படி தான் கூப்பிடுங்கனு சொன்னா. அதான் நானும் முழு பேர சொல்லி பழகிட்டேன்” என்றாள் ஜாக்ஷி.

“ஓஓ.. அப்ப சுபா வேணாம். சுபி வச்சுக்கலாம்” என்க சுபத்ராவின் முகம் மலர்ந்தது.

சாப்பிட்டு முடித்ததும், சுபத்ரா அறைக்குச் சென்று விட்டாள்.

ஜாக்ஷி மிச்சமிருக்கும் வேலையை பார்க்க ஆரம்பிக்க, கதவை தட்டி விட்டு உள்ளே வந்தான் வீரா.

“தூங்கலயா?”

“இல்ல.. நீ என்ன செய்யுற?”

“பென்டிங் நிறைய இருக்கு. பார்த்துட்டு இருக்கேன்.”

“ரூம க்ளீன் பண்ணவா? எனக்கு இப்படி இருக்க பார்த்தா சிரிப்பா வருது”

“இத க்ளீன் பண்ணுற நேரத்துல நான் வேலைய பார்த்துட்டு போயிடுவேன் பத்ரா”

“நான் பண்ணுறேன்” என்றவன், அவளது பொருட்களை கலைக்காமல் சரி செய்தான்.

“சுபிய அடுத்து என்ன செய்யலாம்னு இருக்க?” – வீரா

“காலேஜ்ல சேர்க்கலாம்னு பார்க்குறேன். நீ சொன்னா தான் கேட்பா. நாளைக்கு பேசறியா?”

“படிக்கிறதும் முக்கியம் தான். ஆனா வாய்ஸ்?”

“ஆமா.. அத மறந்துட்டேன். ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனா தான் தெரியும்”

“முதல்ல வாய்ஸ் வரட்டும். அப்புறமா காலேஜ்ல சேர்த்துப்போம்”

“அப்படிங்குற?”

“ஆமா.. ட்ரீட்மெண்ட் எதாவது ஆரம்பிச்சா அதோட படிப்பையும் பார்க்குறது கஷ்டம்”

“சரி தான். அவள இதுக்கும் நீ தான் சம்மதிக்க வைக்கனும்”

“அவளுக்கு உன்னை தான் பிடிக்கும். நீ இல்லாம தூங்க கூட மாட்டானு சொன்ன.. இப்ப என்ன என்னை கோர்த்து விடுற?”

“முதல்ல அப்படி தான் இருந்தா. இப்ப அண்ணன பார்த்ததும் மாறிட்டா” என்று பொறாமையோடு சொன்னாள்.

சிரிப்போடு அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டான் வீரா.

“பொறாமையா ஜக்கம்மா?”

“ஆமா”

“என்ன சட்டுனு ஒத்துக்கிட்ட?”

“பின்ன பொய் சொல்லனுமா?”

“அதெல்லாம் வேணாம் ஐ லவ் யூ சொல்லு போதும்”

“கஷ்டம்”

அவள் முகத்தை திருப்பிப் பார்த்தான்.

“சொல்ல மாட்ட?”

ஜாக்ஷி கிண்டலாக பார்க்க, அவளது இதழ்களை சிறை செய்தான். முதல் முறை போலில்லாமல், இந்த முத்தத்தை இருவராலும் அவசரமில்லாமல் ரசிக்க முடிந்தது. ஆனால் அதை இருவரும் காட்டிக் கொள்ளவில்லை.

“எனக்கு பதில் சொல்லுற வரை உனக்கு கிஸ் ட்ரீட்மெண்ட் தான்”

“இதுக்கு நான் பயப்படுவேன்னு நினைக்கிறியா?” என்று கேட்டு முடித்ததும், மெத்தையில் தள்ளி மீண்டும் இதழை சிறை செய்தான்.

இந்த முறை சற்று பயந்து விட்டாள். ஆனால் முத்தமிட்டு முடித்ததும் அவன் அவளை பார்த்து சிரித்தான்.

“நீயா சொல்லுவ. சொல்ல வைக்கிறேன்” என்றவன், “குட் நைட்” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, எழுந்து சென்று விட்டான்.

ஜாக்ஷி படபடத்த இதயத்தை சமாதானம் செய்தாள். எல்லாம் புரிந்தாலும் தெரிந்தாலும், பயம் இருக்கத்தான் செய்தது.

‘ஒரு நிமிஷம் பயந்துட்டேன்’ என்று நினைத்தவள், அப்படியே படுத்துக் கிடந்தாள்.

*.*.*.*.*.*.

தாமரை வீட்டில் படுத்து இருந்தார்.

சேகரும் அருளும் அப்போது தான் வீட்டுக்கு வந்தனர்.

“ம்மா.. என்ன இந்த நேரத்துல படுத்துருக்கீங்க?” என்று அருகே சென்று பார்க்க, மயங்கிக் கிடந்தார்.

பதறியடித்து தண்ணீரை தெளித்து எழுப்பினர்.

“ம்மா.. என்னமா செய்யுது?” என்று அருள் பதற, “வாங்க ஹாஸ்பிடல் போகலாம்” என்றான் சேகர்.

மறுப்பாக தலையசைத்தார் தாமரை.

“சின்ன மயக்கம் தான்டா”

“எவ்வளவு நேரமா படுத்துருக்கீங்க இப்படி?”

“இப்ப தான்டா. தூங்கி எழுந்து டீ போடலாம்னு பார்த்தேன். தலை கிறுகிறுனு வருதேனு திரும்ப படுத்துட்டேன். வேற ஒன்னும் இல்ல”

“கல்யாண வேலையில அழையாதீங்கனு சொல்லுறேன். கேட்டா தான?”

“நாளும் கம்மியா தான இருக்கு. வேற யாரு பார்ப்பா?”

“இப்ப நாங்க வரலனா எவ்வளவு நேரம் இப்படியே இருந்துருப்பீங்க? பேசாம டாக்டர் கிட்ட…”

“இருடா.. அதெல்லாம் ஒன்னும் வேணாம். கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிச்சா சரியா போகும். போய் உங்க வேலையை பாருங்க” என்றவர், மீண்டும் படுத்து தூங்க ஆரம்பித்து விட்டார்.

இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல், பசுபதி வர காத்திருந்தனர்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
29
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்