Loading

 

ஜானகிக்கு வாழ்க்கை நரகமாகிக் கொண்டிருந்தது. வீட்டில் மேனகா ஒரு பக்கம் அவள் உயிரை எடுத்தால், அலுவலகத்தில் வேலையில் மீதி உயிர் போனது.

ஜாக்ஷியிடம் அந்த தொழிற்சாலையை வாங்கா விட்டால், வீட்டை விட்டு போவதாக மிரட்டிக் கொண்டிருந்தார். ஜெகனும் ஜானகியும் பேசிக் களைத்து விட்டனர்.

சமைக்க மாட்டேன், வேலை செய்ய மாட்டேன் என்று போராட்டம் செய்து கொண்டிருந்தார் மேனகா. இன்று பெட்டியை தூக்கி துணிகளையும் அடுக்க ஆரம்பித்து விட்டார்.

“நான் வீட்ட விட்டு போனா தான் என் அருமை தெரியும். என்னை மதிக்காத வீட்டுல எனக்கென்ன வேலை?” என்று கிளம்ப, ஜெகன் ஜானகியை பார்த்தான்.

அவள் தாயை முறைத்துக் கொண்டிருந்தாள்.

“ம்மா.. இப்ப நீங்க போனீங்கனா நானும் போறேன்” என்று ஜெகன் ஆரம்பிக்க, “போடா.. எல்லாரும் எப்படியோ போங்க. பெத்தவள கஷ்டப்படுத்தி பார்க்குறீங்கள்ள? எப்படியோ போய் தொலைங்க” என்று கத்தினார்.

“க்கா.. இவங்க என்ன போறது? நாம போவோம் வாகா. இவங்க இஷ்டத்துக்கு எல்லாம் பண்ண முடியாது” என்று ஜெகன் குதித்தான்.

“நீ எங்கடா போவ?”

“நான் என் ஃப்ரண்ட் வீட்டுக்கு போவேன்கா”

“நீ போனதும் அவன் கதவ திறந்து வானு கூப்பிடுவானாடா?”

“கண்டிப்பா கூப்பிடுவான்”

“இவங்க எங்க போவாங்கனு கேளேன்”

“எங்க போயிட போறாங்க? எதாவது சொந்தகாரவங்க வீட்டுக்கு போவாங்க”

“போனா இவங்கள உள்ள விடுவாங்களா? நம்ம அப்பாவ கல்யாணம் பண்ணதுமே, இவங்கள மொத்த சொந்தமும் ஒதுக்கி வச்சுடுச்சு. அப்பவே ஒதுக்குன சொந்தம், இப்ப காசு கூட இல்லாம வீட்ட விட்டு வந்தா, கதவ திறந்து வாமானு கூப்பிட்டு உட்கார வைக்குமா?

சரி சொந்தகாரவங்கள விடு. இவங்க ஃப்ரண்ட்டுங்க எல்லாம் அப்பா தவறுனப்போ வந்தது. அதுக்கப்புறம் ஒரு வாட்டியாச்சும் பேசுனாங்களா? எங்க காசு கேட்டுருவோமோனு ஓடி ஒளிஞ்சுட்டாங்க. அவங்க வீட்டுல இவங்க போய் நிக்க போறாங்களாம். போனா கதவ கூட திறக்க மாட்டாங்க”

ஜானகி நக்கலாக சொல்ல, அதற்கு பதில் மேனகாவிடம் இல்லை. நடக்க கூடியது தான். இப்போது இப்படி பணமில்லாமல் போய் நின்றால், யாருமே அவரை மதிக்க போவது இல்லை. பணத்தால் மட்டும் தான் அவருக்கும் சிற்றம்பலத்துக்கும் இடையே இருந்த கடந்தகால உறவை மறந்து பழகினர். இல்லையென்றால், மேனகா போன்ற ஆட்களை அவர்கள் அருகே கூட சேர்க்க மாட்டார்கள்.

“போங்களேன். நீ உன் ஃப்ரண்ட் வீட்டுக்கு போ. நீங்களும் போங்க. நான் இங்க தனியா இருந்துக்கிறேன். தனியா சம்பாதிக்கிற வச்சு, சந்தோசமா இருந்துக்கிறேன். ஆனா போயிட்டா திரும்ப வரக்கூடாது. அப்படி திரும்ப வர்ரதா இருந்தா, ஃபேக்டரிய பத்தி மறந்துட்டு தான் வரனும்.”

கறாராக சொல்லி விட்டு, தன் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

அவளை எதுவும் செய்ய முடியாத கோபத்தில், கதவை ஓங்கி அடித்து அடைத்து விட்டு கட்டிலில் அமர்ந்தார் மேனகா. எங்கும் அவருக்கு கதியில்லை. இனி இது தான் வாழ்க்கையா? இதற்காகவா ஜானகியை பெற்று, சிற்றம்பலத்தை திருமணம் செய்தார்?

இது போன்ற வாழ்வை வாழ வேண்டும் என்றால், சாதாரணமான ஒருவனை கரம் பிடித்து, ஒரு ஒரு பைசாவுக்கும் கணக்கு பார்த்து வாழ்ந்து விட்டு போயிருப்பாரே. பணக்கார சிற்றம்பலத்தின் மனதை கலைத்து, போராடி, அவரையே ஏமாற்றி ஜானகியை பெற்று, திருமணம் செய்திருக்க வேண்டாமே?

எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கும் போது, இப்படி சிற்றம்பலம் இறந்து போய் அனைத்தும் படுகுழியில் விழுந்து விட்டதே.

“எல்லாம் உங்களால.. செத்து போனதுமில்லாம, சொத்தையும் எதையும் எனக்கு கொடுக்கல. தூக்கி அந்த கிழவிக்கும் ஜாக்ஷிக்கும் கொடுத்துட்டு போயிட்டீங்க. இப்ப சந்தோசமா? இதுக்காகவா அவ்வளவு போராடுனேன் நான்? இதுக்காகவா உங்கள கல்யாணம் பண்ணேன்? எல்லாம் நாசமா போச்சு.. ச்சை”

கத்தி விட்டு மெத்தையில் படுத்துக் கொள்ள, சன்னல் அருகே இருந்த அனைத்தும் காற்றில் படபடவென கீழே விழுந்தது.

ஜெகன் சத்தம் கேட்டு ஜானகியை பார்க்க, “கோவத்துல தூக்கி போடுவாங்க. கண்டுக்காத” என்று விட்டாள்.

“ஆனா.. அந்த ஃபேக்டரிய ஏன்கா வேணாம்ங்குற? ஜாக்ஷி மேல உனக்கு ரொம்ப ரொம்ப கோபமாகா?”

“அவ மேல கோபப்பட நான் யாருடா?”

“உனக்கு அவள பிடிக்காது தான?”

“ஆமா. ஆனா கோபமும் இல்ல. அவ கிட்ட என்னைக்கும் இறங்கி போயிட கூடாது அவ்வளவு தான்”

“ஜாக்ஷிய அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும்லகா? நம்மல விட ஜாக்ஷிய தான் ரொம்ப பிடிக்கும். நமக்கு பேரு கூட, ஜாக்ஷிக்கு தங்கச்சி ஜானகி, தம்பி ஜெகன்னு தான் வச்சுருக்காரு. அவ்வளவு பிடிக்கும் அவள இல்ல?”

“அவள பத்தி பேசாதடா. என்ன ஆனாலும் சரி. அவ கிட்ட கையேந்தி நிக்கவே கூடாதுடா. அது ரொம்ப ரொம்ப தப்பு. அவ அப்பாவ நமக்கு பிச்சை போட்டவ. அதுக்கு மேல எதுவும் வேணாம்”

“க்கா.. நீயும் அப்படி பேசாத.. அப்பாவ அவங்க என்ன நமக்கு பிச்சை போடுறது?”

“உனக்கு உண்மை தெரியாது ஜெகன். எனக்கு தெரியும். அதுவும் அவளே சொன்னா.. எப்படி அசிங்க பட்டு நின்னேன் தெரியுமா? அந்த நாள நான் மறக்கவே மாட்டேன். அதுக்கப்புறமும் அவ கிட்ட எதுவும் கேட்டு நிக்கிற நிலைமை வரவே கூடாதுனு நினைச்சேன்”

“என்னகா… என்ன உண்மைய சொல்லுற?”

ஜானகிக்கு கண் கலங்கியது.

“விடுடா.. அது என்னோட போகட்டும்”

“ஏன்? ஒழுங்கா சொல்லு. அப்படி என்ன அந்த ஜாக்ஷி சொன்னானு நானும் தெரிஞ்சுக்கிறேன். சொல்லுகா”

“தாங்க மாட்டடா”

“பரவாயில்ல சொல்லு”

கண்ணை துடைத்துக் கொண்டவள், “சரி தெரிஞ்சுக்க. இதுக்கப்புறம் எதுவும் மாறிட போறது இல்ல” என்றாள்.

ஜெகன் கேள்வியாக பார்த்தான்.

“நான் ஸ்கூல் முடிச்சு காலேஜ் சேர்ந்தப்போ, ஆஃபிஸ் போனேன் ஞாபகம் இருக்கா? அப்ப அங்க ஜாக்ஷிய பார்த்தேன். எப்பவும் பார்ப்பேன். கண்டுக்காம போயிடுவா. அன்னைக்கு எதோ மீட்டீங் போல. அப்பாவ எதிர்த்து பேசிட்டு கோபமா போயிட்டா. எனக்கு கோபம் வந்துடுச்சு. இவளுக்கு பிடிக்கலனா, இப்படி தான் எல்லாரு முன்னாடியும் அப்பாவ இன்சல்ட் பண்ணுவாளா? இவள போய் அப்பாவுக்கு பிடிக்குதே. இத அவ கிட்ட சொல்லியே ஆகனும்னு போனேன்.

அவ ரூம்ல ஒரு தாத்தா வேற இருந்தாரு. ரொம்ப வருசமா அந்த கம்பெனில வேலை பார்க்குறவரு போல. நான் வேற ஜாக்ஷிக்கு அட்வைஸ் பண்ண போயிட்டேன்.

எதுக்கு இப்படி அப்பாவ அவமானப் படுத்துற? அவருக்கு உன்னை அவ்வளவு பிடிக்கும். அவருக்கு பிடிக்காத வாழ்க்கையில இருந்து பிரிஞ்சு, பிடிச்ச வாழ்க்கைய வாழ ஆரம்பிச்சது தப்பா? அதுக்காக அவர இப்படி இன்சல்ட் பண்ணுவியா? அவரு கிட்ட மன்னிப்பு கேளு.. அப்படி இப்படினு நிறைய சொன்னேன். எல்லாத்தையும் கேட்டுட்டு, வெளிய போடினு சொல்லிட்டா.

முதல் தடவ அசிங்க பட்டேன் அன்னைக்கு. சட்டுனு அப்படி சொன்னதும், என்ன செய்யுறதுனே தெரியல. ஒரு மாதிரி கேவலமா போய் அழுகையே வந்துடுச்சு. ஆனா அங்க இருந்த தாத்தா தான் தடுத்தாரு.

இந்த பொண்ணுக்கு எதுவும் தெரியாது ஜாக்ஷி. சின்ன புள்ள. நீ போமானு சொல்லுறாரு. எனக்கு கோபம் வந்துடுச்சு. எனக்கு எல்லாமே தெரியும். இவ அம்மாவ டைவர்ஸ் பண்ணதால, இவளுக்கு அவர பிடிக்கல. என் அம்மாவ பிடிச்சுருக்கதால கல்யாணம் பண்ணிருக்காங்க. பிடிச்ச மாதிரி வாழுறது தப்பா? னு கேட்டேன். அவளுக்கு கோபம் வந்து கத்த ஆரம்பிச்சுட்டா”

“என்னகா சொன்னா? நீ சொன்னதுல தப்பே இல்லையே?”

“அது தான்டா தப்பு”

“என்னகா உளறுற?”

“காதம்பரிய டைவர்ஸ் பண்ணிட்டு, நம்ம அம்மாவ கல்யாணம் பண்ணாங்கனு தான நமக்கு தெரியும்? ஆனா அது அப்படி இல்ல. ஆறு வருசமா அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அஃபயர் இருந்துருக்கு”

“க்கா!”

“இதுக்கே சாக் ஆகுற? அப்பாவ ஏமாத்தி தான், அம்மா ப்ரெக்னன்ட் ஆகியிருக்காங்க. அப்பா கலைக்க சொல்லி, கேட்காம பிள்ளையோட ஜகதீஸ்வரி பாட்டி கிட்ட போய் எல்லாத்தையும் போட்டுக் கொடுத்துருக்காங்க. அதுக்கப்புறம் தான், காதம்பரிக்கும் அப்பாவுக்கும் டைவர்ஸ் ஆகியிருக்கு. நான் வயித்துல ஒன்பது மாசமா இருக்கும் போது, அப்பா எதோ ஒரு கோவில்ல வச்சு தாலி கட்டியிருக்காரு. ஏன்னா, அப்ப வரை காதம்பரிக்கும் அப்பாவுக்கும் டைவர்ஸ் கிடைக்கல. இழுத்துட்டே போயிருந்துருக்கு. பிள்ளை பிறக்கும் போது அப்பா வேணுமேனு கல்யாணம் பண்ணிருக்காங்க.”

“க்கா இதெல்லாம் நிஜம்மா?”

“ம்ம். இத ஜாக்ஷி எவ்வளவு கேவலமா சொன்னா தெரியுமா? கேட்கும் போதே கூனி குறுகிட்டேன். அவ பேச்சு தான் உனக்கு தெரியுமே. மூஞ்சில அடிக்கிற மாதிரி பேசுவா. என்னடி பெரிய அப்பா? அந்தாள நான் வேணாம்னு தூக்கி எறிஞ்சு பல வருசம் ஆகுது. அத நீ பொறுக்கி வச்சுருக்க. அத என் கிட்ட வந்து சொல்லிட்டு நிக்காதனு அவ்வளவு அசிங்க படுத்திட்டா. அந்த தாத்தா கூட நிறைய சொன்னாரு. இதான் உண்மை. வேணும்னா உன்னை பெத்தவங்க கிட்டயே கேளுனு சொன்னாங்க. அழுதுட்டே போய் அப்பா கிட்டயும் கேட்டேன். ஆமானு ஒத்துக்கிட்டாரு”

ஜெகனுக்கு ஒரு நொடி மூச்சு திணறியது. அவர்களுக்கெல்லாம் விசயத்தை பூசி மொழுகி தான் சொல்லி வளர்த்திருந்தனர். காதம்பரியை பிடிக்கவில்லை. விவாகரத்து வாங்கி விட்டார். உடன் வேலை பார்த்த மேனகாவை பிடித்திருந்தது. திருமணம் செய்து இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டார். இது தான் அவர்களிடம் சொல்லபட்ட கதை.

உண்மை தெரிந்ததும் பெற்றோர்களின் மீதிருந்த மதிப்பு தரையிறங்கியது.

“அன்னைக்கு ஜாக்ஷி சொன்னா.. உங்கம்மா பணத்துக்கு ஆசைப்பட்டு வந்தவ. இந்தாளு கட்டுன பொண்டாட்டி பெத்த பிள்ளைய மறந்துட்டு, அடுத்தவ கூட போனவன். இதுங்களுக்கு பிறந்தவ நீ. நீயாவது பணத்துக்காக அலையாம, யாருக்கும் துரோகம் பண்ணாம வாழுனு சொல்லிட்டு போனா. அன்னைக்கு முடிவு பண்ணேன். எந்த ஒரு விசயத்துக்காகவும் யாரு கிட்டயும் கையேந்தி நிக்கவே கூடாதுனு. அதுவும் ஜாக்ஷி கிட்ட கண்டிப்பா கூடாது. அவ அப்பாவ உண்மையாவே நமக்கு பிச்சை தான்டா போட்டுருக்கா. அப்பா வேணும்னு அவ நினைச்சுருந்தா, நமக்கு அப்பாவே இருந்துருக்க மாட்டாரு. உனக்கே தெரியும்ல? ஒரு நாள் கூட அவர் ஜாக்ஷி பேச்ச எடுக்காம விட்டது இல்ல. தூரமா இருக்கும் போதே அவ மேல அவ்வளவு பாசம். அவ மட்டும் நானா இந்த குடும்பமானு கேட்டுருந்தா, அப்பா நம்மல உதறிட்டு மக தான் வேணும்னு போயிருப்பார்.”

ஜெகனுக்கு கூட கண்கலங்கியது. உண்மைகள் எல்லாம் அவனை அழுத்தியது.

“நாம.. நம்ம பிறப்பே கேவலமா இருக்கேகா”

“என்னை வச்சு தான் அம்மா அப்பாவ பிடிச்சாங்கனு ஜாக்ஷி சொன்னது, தினமும் என் காதுல கேட்டுட்டே இருக்கும்டா”

“க்கா..”

“எத்தனை நாள் சத்தமில்லாம அத நினைச்சு துடிச்சுருக்கேன் தெரியுமா? அப்படி இருந்தும், அம்மா அப்பானு மன்னிச்சுட்டு வாழ்ந்துட்டு இருந்தேன். இப்ப அவ கிட்ட போய் ஃபேக்டரிய கேளுனு சொன்னா? எப்படிடா? எந்த மூஞ்சிய வச்சுட்டு அவ முன்னாடி நிக்க முடியும்? இதுக்கு செத்து போயிடலாம்டா”

“வேணாம்கா.. அந்த ஃபேக்டரியும் வேணாம். அவங்க பணமும் நமக்கு வேணாம். வீட்டுல பண பிரச்சனை தான? நான் பார்ட் டைம் வேலை பார்க்குறேன்”

“அதெல்லாம் வேணாம். நீ படி”

“பரவாயில்ல. நான் படிச்சுட்டே வேலை செய்யுறேன். நீ மட்டும் தனியா எவ்வளவு தான் தாங்குவ?”

“படிச்சு முடிச்சு வேலைக்கு போடா”

“அதுக்கு இன்னும் மூணு வருசம் ஆகும்கா. அதுவும் உடனே வேலை கிடைக்குமோ என்னவோ. இப்ப இருந்தே பழகிக்கிறேன்”

இவர்கள் இங்கே இதை பேசிக் கொண்டிருக்க, மேனகா இவர்களை வழிக்கு கொண்டு வந்து ஃபேக்டரியை எப்படி வாங்குவது? என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிற்றம்பலத்தின் படத்திலிருந்த மாலை, காற்றில் ஆடிக் கொண்டிருந்தது.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
20
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. புள்ளைங்களுக்கு இருக்கிற சுமரியாதை, சுயகௌரவம் கூட மேனகாவுக்கு இல்லையோ..?
      அது சரி, இப்ப எதுக்கு போட்டோ ப்ரேமுக்குள்ள இருக்கிற சிற்றம்பலம் டான்ஸ் ஆடுறாரு..? ஒருவேளை, ஆசியா வரப்போறாரோ..? ஆனா, எதுக்கு…?

      😀😀😀
      CRVS (or) CRVS 2797

    2. புள்ளைங்களுக்கு இருக்கிற சுயமரியாதை, சுய கௌரவ ம் கூட இந்த மேனகாவுக்கு இல்லையோ…? இப்ப எதுக்கு போட்டோ ப்ரேமுக்குள்ள இருக்கிற சிற்றம்பலம் டான்ஸ் ஆடுறாரு…? ஒருவேளை, ஆவியா வரப்போறாரோ…???
      😀😀😀

    3. மேனகா சீ.. . ஜானகி ஜெகன் சூப்பர். ஜாக்ஷி கேட்டால் கொடுத்து விடுவாள்