இரவு உணவை கையோடு கொடுத்திருந்தனர். சாப்பிட்டு பேசி சிரித்தபடி, பயணம் தொடர்ந்தது.
சுபத்ரா நன்றாக உறங்கி விட, வீராவுக்கும் கொட்டாவி வந்தது.
“நான் ஓட்டவா? நீ இங்க வா”
“இன்னும் கொஞ்ச நேரம் போகட்டும். அப்புறம் மேப் பார்த்து ஓட்டு”
“சுபத்ரா நல்லா தூங்கிட்டா”
“அங்க போனதும் எழுப்பலாம்”
“பயந்தானா?”
“பேசி சமாளிக்கலாம். இல்லனா கடைசி வரை இப்படியே தான் இருப்பா”
“அந்தாள பார்க்க எனக்கு இஷ்டமில்ல. இவள பெத்த பிசாச மட்டும் தான் பார்க்க பர்மிஸன் வாங்குனேன்”
“அதுக்கே தெளிஞ்சுடுவானு தான் தோனுது. பார்க்கலாம்”
சில மணி நேரங்கள் கழித்து இருவரும் இடம் மாறிக் கொண்டனர். ஜாக்ஷி ஓட்ட, அருகே வீரா நன்றாக தூங்கி விட்டான்.
ஜாக்ஷி அவனை பார்த்து விட்டு புன்னகைத்தாள்.
அவள் வாழ்வில், இப்படி ஒருவன் வரக்கூடும் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஆண்களை வெறுக்கும் பழக்கமெல்லாம் அவளுக்கு இல்லை. ஆனால் அவள் மனதை யாரும் கவர்ந்தது இல்லை.
திருமணம் வேண்டும் வேண்டாம் என்று ஒரே வார்த்தையில் முடிக்காமல், இவனை விடவே கூடாது என்று இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறாளே. அதிசயமாக இருந்தது.
இனிமையான நினைவுகளுடன் பயணித்தாள். அவளுக்கு தூக்கம் வரும் போது, வீராவை எழுப்பி விட்டு அவளும் உறங்கி எழுந்தாள். சுபத்ரா தான் பயணம் முழுவதும் உறங்கிக் கொண்டிருந்தாள்.
இடத்தை அடையும் போது, விடிந்திருந்தது. காரை நிறுத்தி சுபத்ராவையும் ஜாக்ஷியையும் எழுப்பினான்.
“ஃப்ரஸ்ஸாகிட்டு சாப்பிட்டு போகலாம்” என்று கூற, மூவரும் ஒரு ஹோட்டலுக்கு சென்றனர்.
“நாம எங்க இருக்கோம்? இது சென்னை இல்லையே?” என்று சுபத்ரா கேட்க, “இங்க ஒரு வேலை இருக்கு. அத பார்க்க வந்தோம்” என்றாள் ஜாக்ஷி.
சுபத்ரா அதை நம்பி வேறு எதுவும் கேட்கவில்லை.
சாப்பாடு முடிந்ததும், கார் மிதவேகத்தில் சென்று சிறைச்சாலை முன்பு நின்றது.
சுபத்ரா இருவரையும் பார்க்க, “உன் அம்மாவ பார்க்க வந்துருக்கோம்” என்று சொல்லி விட்டாள்.
கேட்டதும் சுபத்ராவிற்கு திக்கென்றது.
அவசரமாக அவள் மறுக்க, ஜாக்ஷி அவள் கையை பிடித்துக் கொண்டாள்.
“இங்க பாரு.. காலம் முழுக்க நீ பயந்துட்டே வாழ முடியாது. வாழ்க்கை நிறைய இருக்கு சுபத்ரா. இப்படியே எவ்வளவு நாள் கடத்துவ?”
“வேணாம்” என்று அவள் கண்கலங்க, “அழாத.. ஒரு தடவ பாரு. மனசுல இருக்கத கொட்டிரு. அதுக்கப்புறம் நீ நிம்மதியா இருக்கலாம்” என்றவள், அவளை கீழே இறக்கினாள்.
“உள்ள போகலாம்” என்று வீரா வந்து நிற்க, சுபத்ரா அவனை கண்ணீரோட பார்த்தாள்.
“நாங்க இருக்கோம்ல? அழாதடா” என்றவன் அவளது தலையை வருடி விட்டு, அழைத்துச் சென்றான்.
உள்ளே நடந்த அனைத்தையும் கண்டு நடுங்கி, ஜாக்ஷியோடு ஒட்டிக் கொண்டே வந்தாள்.
கடைசியாக, சுபத்ராவை பெற்றெடுத்த அந்த பெண் உருவத்தை பார்க்க வந்து விட்டனர்.
“வந்ததும் இப்படி பயப்படாம பேசு” என்று ஜாக்ஷி சொல்ல, வீரா அவள் பேசுவதை தடுத்தான்.
ஜாக்ஷி அமைதியாகி விட, பார்க்க வேண்டிய ஆளும் வந்து விட்டது.
மகளை பார்த்ததும் அது கண்ணில் மின்னல்.
“ஏய் சுபா.. எங்கடி போய் தொலைஞ்ச? எங்கள ஜெயிலுக்கு அனுப்பிட்டு நீ மட்டும் சந்தோசமா ஓடிட்டியா? பெத்தவள ஜெயிலுக்கு அனுப்பிருக்கியே நல்லா இருப்பியாடி? யாருடி இதுங்க கூடவே வந்துருக்குங்க? இதுங்க இருக்க தைரியத்துல தான் ஓடிட்டியா?”
அது கத்திக் கொண்டே போக, சுபத்ராவின் கண்ணில் கண்ணீர் வழிந்து ஓடியது. பேச நினைத்து வாயை திறந்து வார்த்தை வராமல் போக, ஜாக்ஷியை பார்த்தாள்.
“நான் சொல்லுறேன்.” என்றதும், சுபத்ரா பேசினாள். ஜாக்ஷி மொழி பெயர்த்தாள்.
“நீயெல்லாம் ஒரு அம்மாவா? பெத்த புள்ளைய பணத்துக்காக விக்க பார்த்தியே.. நான் உனக்கு என்ன பாவம் பண்ணேன்? இதுக்கு என்னை கொன்னுருக்கலாம்ல”
கேட்டு விட்டு சுபத்ரா தேம்ப, ஜாக்ஷி முறைப்புடன் நின்றிருந்தாள்.
“இங்க பாருடி.. அப்போ எதோ தப்பு நடந்து போச்சு. இப்ப என்னை வெளிய விடச்சொல்லு. நான் இல்லாம நீ எப்படிடி இருப்ப?”
“ஆகா நல்ல நடிப்பு” என்றாள் ஜாக்ஷி.
“ஏய் நீ யாரு?”
“உனக்கு அது தேவையில்ல”
சுபத்ரா பேச ஆரம்பிக்க, அதை மொழிபெயர்க்க ஆரம்பித்தாள்.
“நீ இல்லாம நான் நல்லா தான் இருப்பேன். உனக்கு என் மேல அக்கறையும் இல்ல பாசமும் இல்ல. நான் உன்னை வெளிய எடுத்து என்ன செய்ய? மறுபடியும் என்னை விக்க தான் பார்ப்ப. இங்கயே இரு. இனி நீ எனக்கு அம்மா இல்ல. நான் உனக்கு மகளும் இல்ல. வெளிய வந்தாலும் என்னை தேடி வராத.”
“என்னடி திமிரா? உன்னை பெத்தவடி நான்”
“விக்க பார்த்ததும் நீ தான்” என்று ஜாக்ஷி கூற, சுபத்ரா கோபமா தலையாட்டினாள்.
“என் அம்மா எப்பவோ செத்து போயிட்டா. உனக்கும் உன் மக செத்து போயிட்டா. இப்ப உன்னை பார்த்து இத சொல்ல தான் வந்தேன். நான் போறேன்” என்று முடித்தவள் திரும்ப, “ஏய்..” என்று அலறியது அது.
“இங்க பாருடி.. பெத்தவள விட்டுட்டு எங்கடி போற? என்னை வெளிய கூட்டிட்டு போடி.. வெளிய வந்தேன்னா உன் சும்மா விட மாட்டேன்டி”
“ஏய் ச்சீ கத்தாத”
“நீ யாருடி?”
“உனக்கு எமன். வெளிய வந்தா சும்மா விட மாட்டியா? அவ பக்கம் உன் கண்ணு திரும்பிச்சு, உண்டு இல்லனு ஆக்கிடுவேன்”
இவர்கள் பேச்சை கேட்காமல், சுபத்ரா அங்கிருந்து சென்று விட்டாள்.
“நீ யாருடி அவள பார்க்க கூடாதுனு சொல்லுறதுக்கு? நான் பெத்தவ அவ. என்னை காப்பாத்தாம போறா இல்ல? வெளிய வந்து பார்த்துக்கிறேன் அவள”
“உன்னைய காப்பாத்தனுமா? அப்படி என்ன தியாகத்த பண்ணிட்ட நீ? நீ வெளிய வா. வந்து பாரு. உன்னை என்ன செய்யுறேன்னு தெரியும்”
“ஸ்ஸ்.. வா போகலாம்.” என்று வீரா அவள் கையைப்பிடிக்க, “என்னடி செய்வ? என்ன செய்வ?” என்று கத்தியது.
“மேடம் இங்க வாங்க” என்று அங்கிருந்த காவலதிகாரியை அழைத்தாள்.
“அந்த சிசிடிவில நீங்க இத அடிச்சா பதியுமா?”
“ஏன்மா?”
“பெத்த மகள பதினாறு வயசுல பணத்துக்காக விக்க பார்த்தவ இவ. வெளிய வந்தா அவள கொல்லுவேன்னு மிரட்டுறா. என் சார்பா ஒரு அப்பு விடுங்க”
அடுத்த நொடி பளாரென விழுந்தது.
“என்ன பெரிய ரௌடியா? கொல்லுவேன்னு மிரட்டுவியா?” என்று அவர் கத்த, அது முறைத்து வைத்தது.
“என்ன முறைப்பு?” என்று கேட்டு, இன்னொரு அடியும் விழுந்தது.
“வெளிய வந்து அவ பக்கம் வந்து பாரு.. அட்டம்ட் மர்டர் கேஸ்ல மறுபடியும் உன்னை உள்ள தூக்கி போடுறேன். நான் யாருனு உனக்கு தெரியாதுல? வெளிய வா காட்டுறேன். முடிஞ்சா இவளுக்கு சோறு போடாம கொன்னுடுங்க மேடம். இதெல்லாம் பூமிக்கு பாரம்” என்றவள், முறைத்து விட்டு வேகமாக வீராவோடு கிளம்பி விட்டாள்.
“அங்க என்ன முறைப்பு? போ போ..” என்று கையிலிருந்த லத்தியால் அடித்து, துரத்தி கதவை அடைத்தார் காவலதிகாரி.
சுபத்ரா காரில் அமர்ந்து அழுது கொண்டே இருந்தாள். எல்லாம் இன்று நடந்தது போல் மனம் வலித்தது. பெற்ற மகளை விற்க மனம் வருமா? ஏன் இப்படி ஒரு கொடுமையான பெற்றோர்கள் அவளுக்கு?
அன்று தப்பித்து ஓடவில்லை என்றால் என்னவாகி இருக்கும்? என்ற நினைப்பே அவளை பல நாட்கள் தூங்கவிட்டது இல்லை.
இன்று கேட்க நினைத்ததை கேட்டு விட்டு, மனபாரம் தீர அழுதாள்.
ஜாக்ஷி பேசப்போக, “கொஞ்ச நேரம் அழட்டும் விடு. அப்புறம் சரியாகிடுவா” என்றான் வீரா.
ஜாக்ஷி அவளருகே அமர்ந்து கொள்ள, அவள் தோளில் சாய்ந்து அழுது கொண்டே இருந்தாள். வீரா அமைதியாக காரை ஓட்டினான்.
சில நிமிடங்களில் ஒரு கடையில் நிறுத்தி, தண்ணீர் வாங்கிக் கொடுத்தான்.
“அழுது முடிச்சுட்டா முகத்த கழுவிக்க.”
சுபத்ராவும் சொன்னதை செய்தாள்.
“இப்ப பெட்டரா?”
தலையாட்டினாள்.
“உன் அப்பாவ பார்க்கனுமா?”
மறுப்பாக தலையசைத்தாள்.
“வீட்டுக்கு போகலாமா?”
அதற்கும் தலையசைப்பு தான்.
“உட்காரு . கிளம்பலாம்” என்றவன் காரை எடுத்தான்.
ஜாக்ஷியும் வீராவும் பேசியபடி வர, சுபத்ரா வெளியே பார்த்தபடி வந்தாள். இருவரும் அவளை தொந்தரவு செய்யவில்லை. அவளாக தெளிந்து வருவது தான் சரியென்று விட்டு விட்டனர்.
வீடு திரும்ப சில மணி நேரங்களானது. மதியமும் சாப்பிட்டு விட்டே வந்தனர். சுபத்ரா அமைதியாக அறைக்குள் சென்று விட, “தேறிடுவானு நினைக்கிற?” என்று கேட்டாள் ஜாக்ஷி.
“தேறிடுவா. சரி நீயும் ரெஸ்ட் எடு. நான் கிளம்புறேன்”
“இங்கயே ரெஸ்ட் எடுக்கலாமே?”
“ம்ஹும். ஒரு நாள் மொத்தமா இங்க வந்து தங்குறேன். இப்ப கிளம்புறேன்” என்றவன், அவள் எதிர் பார்க்காத நேரம் கன்னத்தில் முத்தமிட்டு கிளம்பி விட்டான்.
*.*.*.*.*.*.
தாமரை திருமண வேலைகளை பரபரப்பாக பார்த்துக் கொண்டிருந்தார். அடுத்த மாதம் முதல் முகூர்த்தத்தில் திருமணம் பேசி இருக்க, நிறைய வேலைகள் இருந்தது.
பசுபதி மனைவியோடு சந்தோசமாக வேலை பார்த்தார்.
“இப்பலாம் அம்மா அழுறது இல்லல?” என்று அருள் கேட்க, “ஆமா. ஒரு வேலை கல்யாண வேலையில அந்த வீராவ மறந்துட்டாங்களோ என்னவோ?” என்றான் சேகர்.
“அவங்களாவது மறக்குறதாவது? போடா காமெடி பண்ணாத”
“ஆனா அழாம இருக்காங்களே. அது போதும். எனக்கு அந்த வீராவ பிடிக்காததுக்கு காரணமே, அவன நினைக்கும் போதெல்லாம் அம்மா அழுறதால தான். இவங்கள அழ வச்சுட்டு அவன் சந்தோசமா இருக்கானே? இவங்களாவது போனவன விடுறாங்களா? நினைச்சு நினைச்சு அழுறாங்க. அவனால இவங்க சிரிச்சத விட அழுதது தான அதிகம்?”
“அம்மாக்கு சும்மாவே அழுற பழக்கம் இருக்குடா”
“அதெல்லாம் ஒன்னும் கிடையாது. எல்லாம் அவனால. அவனால தான் அழுறாங்க”
அருள் சலிப்பாக தலையாட்ட, சேகருக்கு நிஷாந்தினியிடமிருந்து செய்தி வந்தது. உடனே கைபேசியை தூக்கிக் கொண்டு சென்று விட்டான்.
மறுபக்கமிருந்து கேட்டுக் கொண்டிருந்த தாமரைக்கு, ஜாக்ஷி சொன்னது தான் நினைவு வந்தது. அவர் அழுவது, வீராவை மற்றவர்கள் முன்னால் எப்படி காட்டியிருக்கிறது என்று.
அன்று கிளம்பும் போது, அருள் சொன்னதும் நினைவு வந்தது.
“இந்த பாட்டி பேரு ஜகதீஸ்வரியாமா?”
“ஆமாடா”
“அப்ப இவங்க ஹாஸ்பிடல்ல தான் அப்பாவுக்கு ட்ரீட்மெண்ட் பார்த்தோமா? பார்த்தா ரொம்ப பணக்காரவங்களா தெரியுறாங்க. பேரும் ஒன்னா இருக்கே?”
அப்போது தான் அவரும் அதை யோசித்தார்.
“அவங்க ஹாஸ்பிடலாவும் இருக்கலாம். சென்னையில பெரிய பணக்காரங்கனு மட்டும் தான் தெரியும் வேற எதுவும் தெரியாது”
“அப்ப நிஜம்மாவே வீராவுக்காக தான் நமக்கு காச குறைச்சுருக்காங்க. அந்த பொண்ணு வீராவுக்கு பார்த்த பொண்ணுனு சொல்லுறாங்க. அன்னைக்கும் அந்த பொண்ணு வீராவுக்காக அவ்வளவு பேசுச்சு.”
“ம்ம்..”
“சொந்தமா ஹாஸ்பிடலே வச்சுருக்கவங்க, எவ்வளவு நார்மலா நடந்துக்கிறாங்க? இவங்கள பத்தி நெட்ல தேடி பார்க்கனும்” என்றவன், தேடி எடுத்து சொன்னான்.
உண்மையில் தொடக்கூட முடியாத உயரத்தில் இருப்பவள் ஜாக்ஷி. அதை பற்றிய அலட்டல் இல்லாமல், வீராவுக்காக அவ்வளவு சண்டை போடுகிறாளே. நினைத்ததும் சந்தோசமாக இருந்தது.
‘உனக்கு அம்மாவா நான் சரியா இல்ல. பொண்டாட்டியா அவ சரியா இருப்பா வீரா. அவ கூட நீ நூறு வருசம் வாழனும்’ என்று நினைத்துக் கொண்டார்.
தொடரும்.
அப்பாடா..! ஒருவழியா தாமரை தன் மகன் வீராவை புரிஞ்சுக்கிட்டா அதுவே போதும்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
தாமரை சூப்பர் இப்போது. காதம்பரி திருந்தது . சுபத்ரா அம்மா அடி செம. வீரா ரொமான்ஸ் கலக்குகிறான்