Loading

 

அவளது வீடு இருக்கும் பகுதிக்கு வந்ததும், கேட்டை திறந்து உள்ளே சென்று காரை நிறுத்தினான்.

“தாங்க்யூ மிஸ்டர்..” என்று விட்டு ஜாக்ஷி இறங்கிக் கொள்ள, தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.

“உள்ள வாங்களேன்” என்று அவள் மரியாதைக்காக அழைக்க, “இல்ல. லேட்டாகிடுச்சு. கிளம்புறேன்” என்றவன் இறங்காமலே திரும்பிச் சென்று விட்டான்.

தோளை குலுக்கிக் கொண்டவள், கதவை திறந்து உள்ளே செல்ல, தூங்கிக் கொண்டிருந்த சுபத்ரா உடனே பதறி எழ, “தூங்கு..” என்று விட்டு ஜாக்ஷி மாடி பக்கம் சென்றாள்.

சுபத்ரா ஓடி வந்து முன்னால் நின்று, “சாப்பாடு” என்றாள் சைகையில்.

“சாப்பிட்டு தான் வர்ரேன். போய் தூங்கு.” என்றவள் நிற்காமல் சென்று விட, சுபத்ராவும் சென்று படுத்து விட்டாள்.

ஜாக்ஷி மீண்டும் ஒரு முறை குளித்து, இலகுவான உடைக்கு மாறி மெத்தையில் வந்து விழுந்தாள்.

உடலும் மனமும் வெகுவாக கலைத்திருந்தது. நேற்று இரவு கேட்ட விபத்து செய்தியிலிருந்து, இன்று நடந்த அனைத்தும் கண் முன்னால் வந்து போனது.

சிற்றம்பலம் இறந்து போனதை பற்றி அவளுக்குத் துளியும் கவலை இல்லை. அவர்கள் ஜாக்ஷியை கண்டு கொள்ளாதது போல்.

சிற்றம்பலம், காதம்பரியை திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக வந்தவர். காதம்பரிக்கு உலகமே தன்னை சுற்றி மட்டும் தான் இயங்குவது போன்ற பிரம்மை உண்டு. தன்னிலேயே தான் மூழ்கி இருப்பார்.

அதிக பணம். கேள்வி கேட்காத மனைவி எல்லாம் சேர்ந்து, சிற்றம்பலத்தின் சபலத்திற்கு வழி வகுத்தது.

ஜகதீஸ்வரி குழுமத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர், அங்கு உடன் வேலை செய்த மேனகாவிடம் விழுந்திருந்தார். திருமணமாகி பிள்ளையோடு இருக்கிறார் என்று தெரிந்தும், அவரிடம் மயங்கிப்போனார் மேனகா.

விளைவு ஜானகி உருவாகி விட்டாள். கலைக்கச் சொல்லி சிற்றம்பலம் எவ்வளவோ சொல்லியும், மேனகா மறுத்து விட்டார். அவருக்கு சிற்றம்பலத்திடம் உறுதியான உறவு தேவைப்பட்டது. பிள்ளையை பெற்றே தீருவேன் என்று மேனகா அடம் பிடிக்க, இருவருக்கிடையே வாக்குவாதம் முற்றி விட்டது.

பேச்சை கேட்கவில்லை என்றால் கொன்று விடுவேன் என்று சிற்றம்பலம் மிரட்டி விட, மேனகா பயந்து விட்டார். உடனே தங்களது ரகசியத்தை ஜகதீஸ்வரி முன்னால் உடைத்து விட்டார்.

முதலில் கேட்ட போது யாருமே நம்பவில்லை. மேனகா பொய் சொல்கிறார் என்று தான் நினைத்தனர். ஆனால் மேனகா பல ஆதாரங்களை காட்டி நிரூபித்து விட்டார்.

காதம்பரிக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வர, பிரச்சனை வெடித்து விவாகரத்தில் வந்து நின்றது. ஜகதீஷ்வரி எதையும் தடுக்கவில்லை. மருமகனின் செயலுக்கு அவரால் என்ன பதில் சொல்லி விட முடியும்?

விவாகரத்தும் கிடைத்து விட, ஜானகிக்காக சிற்றம்பலம் மேனகாவை திருமணம் செய்து கொண்டார்.

காதம்பரி விவாகரத்துக்கு பிறகு மூர்க்கமாக மாறி விட்டார். எதற்கெடுத்தாலும் குற்றம் குறை என்று பேசி வீடு நரகமானது.

ஜாக்ஷியை எப்போதுமே அவர் கவனித்தது இல்லை. விவாகரத்திற்கு பிறகு, “அவன் பிள்ளைய நான் ஏன் வளர்க்கனும்? அவன் கிட்டயே அனுப்புங்க” என்று குதித்தார்.

ஜகதீஷ்வரி தான் அதற்கு சம்மதிக்கவில்லை. அதனால் தான் ஜாக்ஷி இங்கேயே வளர்ந்தாள்.

காதம்பரி சில வருடங்களில் அசோக்கோடு வீட்டை விட்டு கிளம்பி விட்டார். அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான். அவர்களும் தங்களது வாழ்வை பார்த்தனர்.

இடையில் பல துன்பங்களை அனுபவித்தது ஜாக்ஷி தான்.

வெளிநாடுகளை போல், இங்கே பிரிந்து போன தாய் தந்தையுடைய பிள்ளைகள் தானாக வளர்ந்து விட முடியாதே? குத்திக் காட்டி, ஏளனமாகப் பேசி, மனதை காயப்படுத்தி, அதில் சந்தோசம் காணும் கூட்டம் அவளையும் விடவில்லை.

அவர்கள் செய்த அத்தனை வேலையும், ஜாக்ஷியின் மென்மையான மனதை கொன்று கடினமான இரும்பை உருவாக்கி விட்டது.

வளர வளர தாய் தந்தையின் மீது வெறுப்பும் வளர்ந்தது. அவர்களை விட்டு முழுவதுமாக ஒதுங்கி விட்டாள். படிப்பு, வேலை என்று அவளது வாழ்வு நிறைந்து வழிந்தது.

ஜகதீஷ்வரி குழுமத்தில் இணைந்தவளை, பெரிய பதவியில் தூக்கி அமர வைத்தார் பாட்டி. அங்கு முதலிலேயே இருந்த தந்தையை பார்க்கும் போது, அவளுக்கு கோபம் கோபமாக வரும்.

சிற்றம்பலம் பேச முயற்சித்தாலும், அவள் கண்டுகொள்ளவே மாட்டாள். யாரோ போல் கடந்து போவாள்.

இப்போது அவர் இறந்து விட்டார். இனி மொத்த பொறுப்பும் அவளுக்கு தான் வரும். அதை பற்றிய யோசனை தான் அவளுக்குள் ஓடியது. செத்துப்போன தந்தையைப் பற்றி அவள் அக்கறை படவில்லை.

ஜானகிக்கு இருபது வயது. அவளுடைய தம்பி ஜெகனுக்கு பதினெட்டு. அசோக்கின் மகன் வினய் பள்ளி மாணவன்.

ஜாக்ஷிக்கு இருபத்தி ஒன்பது வயதாகிறது. ஆனால், பார்த்ததும் வயதை கணிக்க முடியாத தோற்றம். எக்கச்சக்கமான பணமும் அழகும் இருக்கும் அவளை, சுற்றாத கூட்டமில்லை. காதலை சொன்னவர்கள் குறைவு தான். அவளது குணத்தை தாண்டி யாரும் நெருங்கவே முடியாது.

ஆனால் பாட்டியிடம் பெண் கேட்டு வந்தவர்கள் பலர். அவளது இருபத்தைந்து வயதிலிருந்து, வாரம் ஒருவர் மாப்பிள்ளையை கொண்டு வந்துவிடுவார்கள். இவருடைய மகன், இவருடைய பேரன் என்று எத்தனையோ வரன்கள்.

பாட்டியும் ஜாக்ஷியிடம் சொல்லிப்பார்த்தார்.

“கல்யாணம் பண்ணிக்க எனக்கு ஆசை வந்தா பார்க்கலாம்” என்று நழுவி விடுவாள்.

இப்போது தனியாக ஒரு புது வீட்டை வாங்கி, வந்து விட்டாள். பாட்டியை கவனிக்க வீட்டில் நிறைய வேலை ஆட்கள் இருக்கின்றனர்.

ஜாக்ஷியும் அவரோடு ஒன்றாக வளரவில்லை. பெற்றோர்களின் சண்டை வந்ததுமே, அவளை ஹாஸ்டல் அனுப்பி விட்டனர். அதனால் ஒன்றாக இருப்பதில் அவளுக்கு பெரிதாக விருப்பம் இல்லை.

*.*.*.*.*.*.*.*.

அலாரம் அதன் வேலையை சிறப்பாக செய்ய, கண் விழித்து எழுந்தான் வீரா. புது இடம் என்பதால், தாமதமாக தூங்கி இருந்தாலும் சீக்கிரம் எழுந்து விட்டான்.

அறையை விட்டு வெளியே வர, வீட்டு வாசலை தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்தார் வேலைக்கார பெண்.

வீராவை பார்த்ததும், “காபி வேணுமா சார்?” என்று கேட்டாள்.

“டீ. கொஞ்ச நேரம் கழிச்சு நானே கேட்குறேன்” என்று விட்டு, இறங்கி அந்த வீட்டைச் சுற்றி நடந்தான்.

அதிகாலை வேளை நன்றாக இருந்தது. மெதுவாகத்தான் நடந்தான். இன்னும் அவனுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை மிச்சமிருக்கிறது.

வீரபத்திரன். அவனுடைய தாய் தந்தைக்கு ஒரே பிள்ளை. லட்சுமி அம்மாளின் மகன் சுருளிக்கும், தாமரைக்கும் பிறந்தவன்.

லட்சுமி அம்மாள் தத்தெடுத்த பிள்ளை சுருளி. வீராவிற்கு மூன்று வயதிருக்கும் போதே, சுருளி புற்றுநோயில் இறந்து விட்டார். தாமரையை வேறு ஒரு குடும்பம் இரண்டாம் தாரமாக திருமணம் செய்ய கேட்டு வர, லட்சுமியே திருமணத்தை நடத்தி விட்டார்.

ஆனால், வீராவை தாமரையின் புது உறவுகள் ஏற்க தயாராக இல்லை. அங்கு ஏற்கனவே ஒரு பையன் இருந்தான். அவனுக்கான உரிமையை, வீராவிற்குக் கொடுக்க யாருக்கும் மனமில்லை.

விசயம் தெரிந்ததும், லட்சுமி பேரனை வாங்கிக் கொண்டார். பெற்றவள் கெஞ்ச தான் செய்தாள். லட்சுமி அம்மாள் மறுத்து விட்டார்.

“உன் வாழ்க்கைய நீ பாரு தாமரை.. என் பேர புள்ளைய நான் பார்த்துக்கிறேன். அங்க என் பேரன் கஷ்டப்படுறத என்னால பார்த்துட்டு இருக்க முடியாது.” என்று கூறி விட்டார்.

தாமரையின் புது மாமியாரும், அதற்கு ஒரு காரணம். அவருக்கு தன் பேரனின் உரிமையை வீரா பறித்துக் கொள்வான் என்ற கவலை. தாயையும் பிள்ளையும் பிரித்து விட்டே ஓய்ந்தார்.

வீரா லட்சுமியிடம் வளர்ந்தான். சிறு வயதிலிருந்தே, அவனுக்கு அளவுக்கு மீறிய முதிர்ச்சி இருந்தது. சுற்றி நடப்பதை நன்றாக ஆராய்ந்து தெரிந்து கொள்வான். போகப்போக அவனாகவே எல்லோரிடமிருந்தும் ஒதுங்கி விட்டான்.

அவனும் பாட்டியும் மட்டும் தான் உலகம். படித்து முடித்து வேலை கிடைத்த போது, பாட்டியை கூடவே அழைத்தான். லட்சுமி தான் வரவே முடியாது என்று மறுத்து விட்டார்.

அவருக்கு வேறு எங்கும் சென்று வாழ விருப்பம் இல்லை. ஊருக்குள் இருக்கும் சொத்துக்களை கவனித்துக் கொண்டு, அங்கேயே தான் இருந்தார்.

பேசி பார்த்து விட்டு, முடியாமல் வீரா தனியாகவே வேலை பார்க்கச் சென்று விட்டான். விடுமுறை கிடைக்கும் போதெல்லாம், பாட்டியிடம் ஓடி வந்து விடுவான். அதோடு அவனது தாயை சென்று பார்க்கவும் தவறுவது இல்லை.

தாமரையையும் அவரது குடும்பத்தையும் பார்த்து விட்டு, உடனே கிளம்பி விடுவான். தாமரை என்ன தான் மகனை தன்னோடு வைத்துக் கொள்ள நினைத்தாலும், அது நடப்பதே இல்லை. இப்போது தாமரையின் மாமியாரும் இல்லை தடுப்பதற்கு. ஆனால் வீரா ஒட்ட மறுத்தான்.

வருவான். பேசுவான். பழகுவான். சாப்பிடுவான். அங்கிருக்கும் இரண்டு பிள்ளைகளுக்கும் எதாவது வாங்கி கொடுத்து விட்டு, உடனே கிளம்பி விடுவான். அதற்கு மேல் அவர்களோடு ஒட்டி உறவாட அவனுக்கு மனம் வரவில்லை.

தாமரை ஒரு முறை கேட்டு விட்டார்.

“என் மேல கோபமா? என்னை மன்னிக்க மாட்டியா?” என்று கேட்டு அழுதவரை, எப்படி சமாதானம் செய்வது என்று புரியாமல் நின்றான்.

“எனக்கு யாரு மேலையும் கோபமில்ல. நான் இந்த உறவு கடைசி வரை நிலைக்கனும்னு நினைக்கிறேன். அதுக்கு இப்படி இருக்கது தான் நல்லது. ரொம்ப நெருங்கி பழகுறது, நம்ம உறவு முறைக்கு சரி வராது. நீங்க இந்த பிள்ளைங்களுக்கு அம்மா. நான் என் பாட்டிக்கு பேரனா அங்க இருக்கேன். பார்ப்போம் பேசுவோம். அதுக்கு மேல எதுவும் வேணாம். அவ்வளவு தான்.” என்று முடித்து விட்டான்.

மகன் ஒட்டாமல் இருப்பது தாமரையை வருத்தப்பட வைத்தாலும், அவரால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. இப்படியே இருக்கட்டும் என்று நினைத்து விட்டார்.

வெளியே சில நிமிடங்கள் சுற்றி நடந்து விட்டு உள்ளே வர, ஜகதீஸ்வரி எழுந்து வந்திருந்தார்.

“நல்லா தூங்குனியாபா?” என்று அவனை பார்த்ததுமே கேட்க, தலையசைத்து வைத்தான்.

“காபி டீ எதாவது குடிக்கிறியா?”

“நான் போய் சொல்லுறேன். நீங்க உட்காருங்க” என்று விட்டு சமயலறை நோக்கிச் சென்றான்.

தேநீரை தயாரிக்க சொல்லி விட்டு மீண்டும் வர, லட்சுமி வந்து விட்டார்.

“எந்திரிச்சுட்டியா வீரா? உன் போன்ல ஒரு போன் போடு” என்று பேச ஆரம்பித்து விட்டார்.

ஊரில் பொறுப்பில் இருந்தவர்களை அழைத்துப் பேசி முடிக்கும் போது, தேநீர் கோப்பைகளும் காலியாகி விட்டது.

“நான் குளிச்சுட்டு வர்ரேன் பாட்டி. கிளம்பனும்ல?”

“அதுக்கு முன்னாடி ஒன்னு பேசனும். இரு” என்று அமர வைத்தார் லட்சுமி.

வீரா யோசனையாக பார்க்க, “ஒன்னு உன் கிட்ட கேட்கனும்” என்று ஆரம்பித்தார்.

“என்னனு சொல்லுங்க”

“நீ இப்ப பார்த்துட்டு இருக்க வேலைய விட்டுட்டு, ஜகதீஸ்வரியோட கம்பெனில வேலை பார்க்குறியா?” என்று கேட்டு விட்டு அவன் முகத்தை பார்த்தார்.

வீராவுக்கு ஒன்றும் புரியவில்லை. திடீரென இப்படிக் கேட்டால்? சற்று நேரம் யோசித்தவன், இரண்டு மூதாட்டிகளையும் ஒரு முறை பார்த்தான்.

“இது ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“நான் சொல்லுறேன்” என்று பேச வந்த லட்சுமியை தடுத்து விட்டு, தானே பேசினார் ஜகதீஸ்வரி.

“நான் ஊருக்கு வந்தப்போ, அங்க உன்னை பார்த்ததும் எனக்கு ஒன்னு தோணுச்சு. ஒளிச்சு மறைச்செல்லாம் பேசல. நேராவே சொல்லுறேன். இவ்வளவு திறமையான புள்ள, நம்ம கம்பெனில வேலை பார்த்தா நல்லா இருக்குமேனு நினைச்சேன். ஆனா அத வாய் விட்டு சொல்லல. இங்க சிற்றம்பலம் போனதும், கொஞ்சம் பயந்துட்டேன். இனி என் பேத்தி என்ன செய்வா? மருமகன் போனது வருத்தம் தான். ஆனா அவன விட என் பேத்தி தான் எனக்கு முக்கியம். அவளோட பாதுகாப்பு பத்தி யோசிச்சேன். யாராவது தெரிஞ்ச ஆளு அவ கூடவே இருக்க மாதிரி இருந்தா, கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்னு தோணுச்சு. எனக்கு உன்னை நல்லா தெரியும். நீ கம்பெனில அவ கூட வேலை பார்த்தா, பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சு கேட்குறேன். என்ன சொல்லுற?”

ஜகதீஸ்வரி கேள்வியோடு நிறுத்த, வீரா சில நொடிகளை யோசனையில் கழித்தான்.

“உங்க பேத்தி பாதுகாப்புகாக நான் அங்க வேலைக்கு போனா, அது உங்க பேத்திக்கு பிடிக்காதுனு நினைக்கிறேன்”

“கண்டிப்பா பிடிக்காது தான். ஆனா நான் அதுக்காக மட்டுமே சொல்லல. உன்னோட திறமையும் நான் பார்த்துருக்கேன். நீ இங்க நல்ல பொஷிஷன்ல வேலை பார்க்கலாம்.”

“இப்ப நான் பார்த்துட்டு இருக்க வேலையே நல்ல வேலை தான் பாட்டி” என்று கூறி சிரிக்க, “உண்மை தான். ஆனா அந்த கம்பெனிய கம்பேர் பண்ணும் போது, நம்ம கம்பெனி பெருசு. தற்பெருமையா தெரிஞ்சாலும் அதான் உண்மை” என்றார் ஜகதீஸ்வரி.

வீராவும் ஒப்புக் கொண்டது போல் தலையாட்டினான். உண்மையில் இவர்களது நிறுவனம் பெரியது தான். அதன் உரிமையாளர் இவ்வளவு இயல்பாக பழகுவது, அவனுக்கே பல நேரம் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

அங்கு வேலை கிடைக்கும் போது, அவனால் மறுக்க முடியாது. மூளை உள்ள எவனும் மறுக்க மாட்டான். ஆனால் அந்த வேலையோடு கொசுறாக, பேத்தியின் பாதுகாப்பை கொடுப்பது தான் இடித்தது.

“இப்பவே சொல்லனும்னு இல்ல. நல்லா யோசிச்சுட்டு சொல்லு. எந்த முடிவா இருந்தாலும், தைரியமா சொல்லு. ஆனா ரெண்டு நாள்ல சொல்லிடு. அதுக்கப்புறம் போர்ட் மீட்டிங் வச்சு, ஜாக்ஷிய சேர் மேன் ஆக்கனும். நீ வந்தனா உன் பதவியையும் பார்க்கனும்.”

வீரா சற்று குழம்பி விட்டு, “ஓகே. நான் ஊருக்குப் போயிட்டு கால் பண்ணுறேன்” என்றான்.

“சரிபா” என்பதோடு முடித்து விட்டார்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
26
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. ஆத்தாவும் அப்பனும் விளையாடின விளையாட்டுல பிள்ளை இங்க தனி மரமாயிடுச்சோ…?
      கஷ்டம் தான். அப்புறம் எப்படி பாசம் வரும். கோபம் தான் வரும்.
      😀😀😀
      CRVS (or) CRVS 2797

    2. இரண்டு பேரும் பாவம் பாட்டி இருந்ததால் தப்பிச்சுட்டாங்க