Loading

 

வீராவும் ஜாக்ஷியும் கடைவீதியை சுற்றி வந்தனர். வீரா வேண்டிய பொருட்களை வாங்க, ஜாக்ஷி வேடிக்கை பார்த்தாள்.

அங்காங்கே எதையாவது வாங்கி கொறித்தபடி நடந்தவள், ஒரு கடையில் நின்றாள்.

“இந்த பொம்மை அப்படியே சுபத்ரா மாதிரி இருக்குல?”

“அப்படியா?”

“ஆமா.. அவ டான்ஸ் ஆடும் போது இப்படி தான் சேலை கட்டி இருந்தா. வாங்கிட்டு போகலாம்”

“நீ வாங்கு. நான் இத கார்ல வச்சுட்டு வர்ரேன்” என்று விட்டு சென்றான்.

ஜாக்ஷி பேக் செய்து வாங்கிக் கொண்டு வர, வீரா காரின் அருகே நின்று யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான்.

“சொந்தக்காரவங்களா இருக்குமோ?” என்று பக்கத்தில் வந்தவள், வீராவின் முகத்தை பார்த்தாள்.

சற்று முன் இருந்த வெளிச்சம் இப்போது காணாமல் போயிருந்தது. அருகே வந்ததும் அவனிடம் பேசிக் கொண்டிருந்தவரின் பேச்சு காதில் விழுந்தது.

“இருந்தாலும் நீ பண்ணுறது தப்பு தான் வீரா. தாமரை உன்னை காணோம்னு வாடி போயிட்டா. அந்த வீட்டுல உங்கம்மா நல்லா வாழனும்னு நினைப்பே இல்ல உனக்கும் உன் அப்பத்தாவுக்கும். இப்படியா செய்வீங்க?” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

‘இது யாரு அறிவுரை ஆயம்மா?’ என்று பல்லைக்கடித்தாள் ஜாக்ஷி.

“சேகர் நிச்சயத்துக்கு நீ வரலனு தெரிஞ்சு, ஊரே ஒரு மாதிரி பேசுச்சு. இப்படியா உங்கம்மாவ ஊர் முன்னாடி அசிங்க படுத்துவ?”

“ஹலோ.. என்ன? யார குறை சொல்லுறீங்க?” என்று ஜாக்ஷி வந்து நிற்க, “ஜாக்ஷி..” என்று வீரா பதறினான்.

‘இவ பேசுனா விட மாட்டாளே’ என்று நினைத்தவன், அடக்க பார்த்தான்.

“நீ யாருமா?”

“நான் யாரா வேணா இருந்துட்டு போறேன். ஆனா நீங்க யாரு இவன குறை சொல்ல?”

“நான் இவனுக்கு அத்தை முறை”

“அதுக்காக அட்வைஸ் பண்ண வந்துடுவீங்களா?”

“ஜாக்ஷி அமைதியா இரு”

“எதுக்குடா அமைதியா இருக்கனும்? சும்மா உன்னை குறை சொல்லிட்டு இருக்காங்க. நீயும் கேட்டுட்டு இருக்க. என்னமோ உங்கம்மா பெரிய தியாகி மாதிரியும், நீ பெரிய துரோகி மாதிரியும் பேசுறாங்க. நடந்தது தெரியலனா இவங்க ஏன்டா அட்வைஸ் பண்ண வர்ராங்க?”

“நீ முதல்ல கார்ல ஏறு”

“முடியாது. நாம சாப்பிங் பண்ண வந்தோம். முடிச்சுட்டு போவோம். யாருக்கும் பயந்து ஓட தேவை இல்ல. முக்கியமா இப்படி அட்வைஸ் பண்ணுறவங்களுக்கு பயந்து”

“இந்தமா என்ன ரொம்ப பேசுற?”

“நான் இன்னும் பேசவே ஆரம்பிக்கலயே.. இவன் விசேஷத்துக்கு வரலனா, ஏன் வராம போனான்னு உங்க தாமரை கிட்ட போய் கேளுங்க. ஒருத்தன் நின்னு காது கொடுத்து கேட்டா போதுமே. உடனே அட்வைஸ தூக்கிட்டு வந்துட வேண்டியது. நீயும் என்னடா கேட்டுட்டு இருக்க? கிளம்புடா.. இன்னும் நிறைய வாங்கனும். கார பூட்டியாச்சுல? வா” என்று கையோடு இழுத்துக் கொண்டு சென்று விட்டாள்.

அந்த அத்தை நடந்தது புரியாமல் நிற்க, வீரா ஜாக்ஷி இழுத்த இழுப்புக்கு சென்று விட்டான்.

“சரி சரி கைய விடு.. எவ்வளவு தூரம் இழுத்துட்டு போவ?” என்று வீரா புன்னகைக்க, “கொன்னுடுவேன் பார்த்துக்க. பேசிட்டு இருக்காங்க கேட்டுட்டே இருக்க?” என்று அவனை முறைத்தாள்.

“இவங்களுக்குலாம் பதில் சொல்லி ஏன் என் எனர்ஜிய வேஸ்ட் பண்ணனும்னு தான் சொல்லல”

“அதுக்குனு அவங்க என்ன வேணா பேசுவாங்களா? அவ்வளவு அக்கறை இருந்தா, நேர்ல போய் உன் அம்மா கிட்ட கேட்க வேண்டியது தான? கேட்டுருந்தா தெரிஞ்சுருக்கும்”

“வாய்ப்பில்ல. கேட்டதும் உடனே அழ ஆரம்பிச்சுருப்பாங்க. எல்லாரும் அவங்கள பாவமா பார்த்துட்டு, மறுபடியும் என் கிட்ட தான் வருவாங்க” என்றான் எரிச்சலோடு.

“உன் அம்மாவுக்கு அழுகை ஒரு ஆயுதம் போல?”

“ஆமா. அதையும் ரொம்ப நல்லா யூஸ் பண்ணுவாங்க. விட்டுத்தள்ளு. நாம போகலாம்” என்றவன், அடுத்த வேலையை பற்றி பேசினான்.

பொருட்களோடு வீடு திரும்ப, லட்சுமி ஜகதீஸ்வரி இருவரும் எல்லாவற்றையும் சரி பார்த்தனர்.

“நாளைக்கு காலையிலயே பொங்கல் வைக்கனும்.”

“நானும் வைக்கவா?” என்று சுபத்ரா கேட்க, “எல்லாரும் சேர்ந்து தான் வைப்போம்” என்றனர்.

ஜாக்ஷி லட்சுமியிடம் வந்தாள்.

“என்ன பாட்டி முடிவு பண்ணிருக்கீங்க?”

“உட்காரு.. நானும் உன் கிட்ட நாலு கேள்வி கேட்கனும்னு இருக்கேன்”

“கேளுங்களேன்”

“இப்ப நீங்க ரெண்டு பேரும் ஒன்னா இருக்கீங்க. எதாவது பிரச்சனை வந்தா பிரிஞ்சு போக ஈசியா இருக்கும்னு சொல்லுற. ஏன் பிரிஞ்சு போறதையே யோசிக்கிறீங்க? சேர்ந்து இருப்போம்னு நம்பலாமே”

“நம்பலாம் பாட்டி. தப்பில்லை. ஆனா நாங்க பிரிய மாட்டோம்னு முதல்ல எங்க மனசுக்கு ஒரு நம்பிக்கை வேணும்ல? அத யாரு தருவா? அதுக்கு தான் கொஞ்ச நாள் பழகனும்னு கேட்குறோம்”

“சரி பழகிட்டீங்க. பிடிச்சுடுச்சு. கல்யாணம் பண்ணிட்டா பிரியவே மாட்டீங்கனு கேரண்டி தருவீங்களா?”

“பிரியவே மாட்டோம்னு நினைக்கும் போது தான் கல்யாணமே பண்ணுவோம். அதையும் மீறி மன்னிக்காத முடியாத குற்றம், நானும் உங்க பேரனும் செஞ்சா தான் பிரிவு. அப்படி ஒரு தப்ப நாங்க செய்யுற மாதிரி வளரலனு நம்புறேன்”

மறைமுகமாக அவள் சொன்னது மற்றவர்களுக்கும் புரிந்தது.

“உனக்கு ஒன்னு தெரியுமா? வீராவோட அப்பா செத்து போனது கேன்சரால”

“ஆமா சொன்னான். பிற்காலத்துல வந்துடுமோனு பயந்து டெஸ்ட் கூட எடுத்துருக்கான். இப்ப ஏன் இத சொல்லுறீங்கனு புரியுது. வாழ்க்கையும் சாவும் பிரிக்க முடியாத ஒன்னு. அதுல என்ன வேணா நடக்கலாம். எங்கள்ள யாரும் இல்லனா, அடுத்தவங்க கல்யாணம் பண்ணிக்கிறது தப்பே இல்ல. வாழ்க்கை என்ன அதோட முடிஞ்சுடுமா?”

“இது எல்லாமே சரி தான். ஒரே ஒரு விசயத்த மட்டும் தெளிவு படுத்து எனக்கு. ரெண்டு பேரும் ஒரே வீட்டுல இருக்கீங்க. உங்களுக்கு பிரச்சனை வர தான் போகுது. நீயே சொன்ன மாதிரி, நீ ரொம்ப நேரம் வேலை பார்க்குறது அவனுக்குப் பிடிக்கல. அவன் கேட்குறது உன்னால செய்ய முடியல. அப்ப என்ன செய்வீங்க?”

“அட்ஜஸ்ட் பண்ண பார்ப்போம்”

“அது தான் அதே தான். அத தான் நாங்களும் தாலி கட்டிட்டு செய்வோம். கல்யாணம் பண்ணிட்டு பொறுத்து போறதால, அது கொடுமை ஆகிடாது. பிடிச்சவங்களுக்காக விட்டு கொடுத்து போறது தப்பும் கிடையாது. நீ கேட்டியே.. வாழ்க்கை உங்களுக்கு மோசமா போனதில்லையானு.. போச்சு.

எங்களால குழந்தை பெத்துக்க முடியாதுனு சொன்னப்புறம், ஊரே கை கொட்டி சிரிச்சது. அப்ப நீ எனக்கு வேணாம்னு நானோ, உங்க தாத்தாவோட முடிவு பண்ணல. ஒரு புள்ளைய தத்தெடுத்து வளர்ப்போம்னு கேட்டதுக்கு, மனசார சரினு சொன்னாரு. அது தான் வாழ்க்கை. அது தான் விட்டுக் கொடுத்து வாழுறது. பிடிச்சவங்களுக்காக செய்யுறது”

ஜாக்ஷி வீராவை பார்த்து விட்டு புன்னகை செய்தாள்.

“ஆமா பாட்டி. பிடிச்சவங்களுக்காக விட்டுக் கொடுக்குறது தப்பில்ல”

“அத தான் நானும்…”

“உங்களுக்கு வீராவையும் என்னையும் பிடிக்கும்ல? எங்க சந்தோசத்துக்காக நீங்க விட்டு கொடுக்க மாட்டீங்களா? நாங்க நல்லபடியா வாழுறத பார்க்க பொறுத்து போக மாட்டீங்களா?”

அவ்வளவு நேரம் பேசியதை, ஒரே கேள்வியில் ஒன்றுமில்லாமல் ஆக்கியிருந்தாள்.

சுபத்ரா அதிர்ச்சியில் வாய் பிளந்தாள்.

‘அம்மாடி.. மொத்த பிளேட்டையும் திருப்பி போட்டாங்க. அவங்க என்ன சொல்லுறாங்க? இவங்க என்ன கேட்குறாங்க?’ என்று பார்த்து வைத்தாள்.

‘பிஸ்னஸ் டீலிங் மாதிரி ஒரே பாயிண்ட்ல கவுத்துட்டாளே’ என்று தோன்றியது வீராவுக்கு.

லட்சுமிக்கு தான் ஒரு நொடி நம்ப முடியவில்லை.

“கல்யாணம் பண்ணி உறவுகளுக்குள்ள விட்டுக் கொடுத்து வாழுறது தப்பில்லனு சொல்ல வந்தா, நீ இப்படி மாத்திட்ட”

“இதுவும் ஒரு உறவு தான? எங்கள உங்களுக்கு பிடிக்கும் தான?” என்று அதிலேயே நின்றிருந்தாள் ஜாக்ஷி.

“அப்பத்தா இவ கிட்ட பேசுறதுக்கு, நாம தனியா எழுதி வச்சு பேசனும். நீங்க சொன்னத எப்படி மாத்தி விட்டுட்டா பாருங்க” – வீரா

லட்சுமி ஒரு நொடிக்கு பிறகு புன்னகைத்தார்.

“புரியுது. சரி உங்க முடிவுக்கு சம்மதிக்கிறேன். ஆனா ஒரே வீட்டுல இருக்க கூடாது. உங்களுக்கு எப்ப பிடிக்குதோ அப்ப கல்யாணத்த வச்சுக்கலாம்”

“இல்ல பாட்டி ஒரே வீட்டுல இருந்து தான் ஆகனும்”

“நீங்க பார்த்துக்கிறதுக்கு நான் தடை சொல்லல. ஆனா ஒரே வீட்டுல இருக்கது.. வேணாம்”

அவரால் இதற்கு மேல் வெளிப்படையாக பேச முடியவில்லை. பழகுவது என்றாகி விட்டது. ஆனால் அதை ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டுவது போல், ஒரே வீட்டில் இருக்க வேண்டாமே என்று தான் அவருக்கு தோன்றியது.

ஜாக்ஷி சில நொடிகள் யோசித்து விட்டு, “வீட்டுல நாங்க தனியா இருக்கது உங்களுக்கு பிரச்சனை. அதான? அப்ப நீங்களும் அங்க வந்து இருங்க” என்று ஒரே போடாக போட்டாள்.

கடைசி அஸ்திரம் சரியாக வேலை செய்தது.

“வாவ்..! இது நல்ல ஐடியா. அப்பத்தா.. நீங்களும் அங்க வந்து கூட இருங்க. அவ்வளவு தான் முடிஞ்சு போச்சு” என்று வீரா துள்ளி குதித்தான்.

லட்சுமி இந்த திருப்பத்தை கண்டு விழிக்க, “ஏன்டா என் அக்காவ போட்டு பாடா படுத்துறீங்க? பாவம் அதுவே வயசான காலத்துல பேரன் பேத்தி கல்யாணத்த பார்க்க ஆசை பட்டுச்சு. அதை போட்டு இந்த பாடா படுத்துவீங்க?” என்று கேட்டு வைத்தார் ஜகதீஸ்வரி.

“எனக்கு வயசாச்சுனா.. உனக்கு மட்டும் என்னவாம்?”

“நீ அக்கா.. என்னை விட உனக்கு வயசு கூட. நான் சின்ன பொண்ணு”

“ஆமா பதினாறு வயசு தான் ஆகுது. ஆளைப்பாரு.. எல்லாம் ஒரு வருசம் தான் வித்தியாசம்”

“உங்க சண்டைய அப்புறமா வைங்க. இப்ப ஒரு முடிவு சொல்லுங்க. ஒன்னு நாங்க அங்க ஒரே வீட்டுல இருக்கனும். இல்லனா நீங்க எங்க கூட வந்து இருக்கனும்” – வீரா

“நான் அங்க வந்து என்னடா செய்ய?”

“அப்ப எங்கள இருக்க விடுங்க” – ஜாக்ஷி.

“ரொம்ப கார்னர் பண்ணாதீங்கடா. என் அக்கா வர மாட்டா. நானே இங்க வந்து செட்டில் ஆகலாம்னு ப்ளான் பண்ணிருக்கேன். அக்காவ பிரிச்சு கூட்டிட்டு போக பார்க்குறீங்க? வயசான காலத்துல அலைய விடாதீங்கடா” – ஜகதீஸ்வரி.

“அடியேய் எனக்கு ஒன்னும் வயசாகலடி. நான் அங்க வர்ரேன்” என்றதும், சுபத்ரா எகிறி குதித்தாள்.

படபடவென கைதட்ட, ஜாக்ஷியும் வீராவும் அவளோடு சேர்ந்து கொண்டனர்.

“நாம எல்லாரும் ஒரே வீட்டுல இருக்க போறோம்” என்று ஜாக்ஷி சொல்ல, சுபத்ரா குதித்துக் கொண்டே இருந்தாள்.

“ஆனா நாள் முழுக்க சும்மா இருக்கனும்” என்று வருத்தப்பட்டார் லட்சுமி.

“என் வீட்டுக்கு வந்துடு. ரெண்டு பேருமா ஒன்னா சேர்ந்து ஊர சுத்தலாம்” என்று ஜகதீஸ்வரி சந்தோசமாக சொல்ல, அதுவே முடிவானது‌.

அன்றைய இரவு கடந்து, அடுத்த நாள் காலையில் தூங்கிக் கொண்டிருந்த சுபத்ராவை எழுப்பினாள் ஜாக்ஷி.

தூக்கத்தோடு எழுந்தவள், ஜாக்ஷி இருந்த கோலத்தை பார்த்து அடித்து பிடித்து எழுந்தாள்.

“ஸ்ஸ்.. அமைதியா இரு..”

“இதென்ன கோலம்?”

“பார்த்தா தெரியல? ப்ளவுஸ் ஸ்கர்ட். சேலை கட்டி விடு”

“சேலையா?” என்று அவள் வாயை பிளந்து பார்க்க, “க்ளோஸ். ஒழுங்கா கட்டி விடு” என்றாள்.

“பொங்கலுக்கு சேலை கட்டனுமா?”

“நான் கட்ட போறேன். நீ கட்ட வேணாம். எனக்கு கட்டி விடு”

சுபத்ரா சிரித்து விட்டு, சேலையை எடுத்து கட்டி விட்டாள்.

“கழண்டு விழுந்துடாதே?”

“அதெல்லாம் விழாது. நல்லா விழாம இருக்க மாதிரி தான் கட்டி விட்டுருக்கேன்” என்றவள், அவளை நிற்க வைத்து கைபேசியில் படமெடுத்துக் கொண்டாள்.

“சூப்பர்” என்க, ஜாக்ஷிக்கு வெட்கம் தான் வந்தது.

“சரி நீ போய் கிளம்பு. நான் வெளிய போறேன்” என்று சுபத்ராவை அனுப்பி விட்டு, நேராக வீராவை தேடிச் சென்றாள்.

வீரா அப்போது தான் குளித்து விட்டு, வாசலில் நின்று தேநீரை உறிஞ்சிக் கொண்டிருந்தான். ஊரே திருவிழா கோலத்தில் ஜகஜோதியாக இருந்தது. வாசலில் கோலம் தெருவையே மறைத்திருந்தது. லட்சுமி கூட அப்போது தான் கோலம் போட்டு விட்டு உள்ளே சென்றிருந்தார்.

ஸ்பீக்கரில் சாமி பாடல்கள் காதையும் ஊரையும் நிறைத்துக் கொண்டிருந்தது. அந்த பாடலுக்கு தாளம் போட்டபடி நின்றிந்தவன், ஜாக்ஷி அழைத்ததும் திரும்பிப் பார்த்தான்.

பார்த்ததும் கையிலிருந்த டம்ளரை கீழே விட்டான். அந்த நேரத்தில் பாடலும் நிறுத்தப்பட்டது.

“அப்பத்தா… ” என்று அவன் அலற, லட்சுமி பதறி அடித்து வெளியே வந்தார்.

“அப்பத்தா தப்பு பண்ணிட்டேன். அவசரமா ஒரு தாலி ரெடி பண்ணுங்க. இப்பவே கட்டுறேன்” என்றவன், பார்வை ஜாக்ஷியை விட்டு அகலவில்லை.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
29
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. “சேலை கட்டும் பெண்ணுக்கொரு
      வாசம் உண்டு
      கண்டதுண்டா…
      கண்டவர்கள்
      சொன்னதுண்டா…?”

      😀😀😀
      CRVS (or) CRVS 2797

    2. வீரா ஜாக்ஷி பாட்டிஸ் சுபத்ரா கியூட்