எல்லோரும் பேசிக் கொண்டிருக்க, ஜாக்ஷி சுருளியின் படத்தை பார்த்தாள். வீரா அருகே வந்து நின்றான்.
“என் அப்பா. இது தாத்தா”
“ம்ம்.. ஆனா நீ உங்கம்மா மாதிரி இருக்க”
“ஆமா”
“பசங்க எல்லாரும் அம்மா மாதிரி இருப்பாங்க இல்ல?”
“இருக்கலாம். ஆனா நீ உன் பாட்டி மாதிரி”
“அதான் எங்களுக்கு ஒரே பேரு” என்று கண்சிமிட்டினாள்.
அப்போது பக்கத்து வீட்டு பெண் வந்து சேர்ந்தாள்.
“லட்சுமி அம்மா.. வாசல்ல கார் நிக்குது..” என்று கேட்டுக் கொண்டு வந்தாள்.
“இது யாரு?” என்று ஜாக்ஷி கேட்க, “பக்கத்து வீட்டு அக்கா. பாட்டிய அப்ப அப்ப வந்து பார்த்து பேசுவாங்க” என்றான்.
“வீரா.. நீயும் வந்துருக்கியா?”
“ஆமாகா நல்லா இருக்கீங்களா?” என்று நலம் விசாரித்தான்.
“இந்த பொண்ணு யாரு?”
“ஜகதீஸ்வரி பாட்டியோட பேத்தி. திருவிழாவுக்கு வந்துருக்காங்க”
“ஆமா உன் அப்பத்தா சொன்னாங்க. திருவிழாவுக்கு வருவாங்கனு. நீயும் கூட வந்தது தெரியல..”
அவர் கலகலப்பாக புன்னகை முகத்துடன் பேச, ஜாக்ஷிக்கு கூட பிடித்து இருந்தது.
லட்சுமியும் ஜகதீஸ்வரியும் வந்து விட, மூவரும் பேச ஆரம்பித்தனர்.
“இந்த புள்ள யாரு?”
“இது சுபத்ரா.. நம்ம புள்ள தான்”
“சின்ன புள்ளையா இருக்கே.. படிக்கிறியாமா?”
சுபத்ரா விழித்தபடி மறுப்பாக தலையசைத்தாள்.
“வாய் பேச முடியாது. நாம பேசுறது கேட்கும்” என்று லட்சுமி சொல்ல, “ஓ.. சரிமா சரிமா” என்றாள்.
“உன் வீட்டுக்கு வந்துருக்கேன். எதுவும் காட்ட மாட்டியா?” என்று ஜாக்ஷி கேட்க, “அதான் எல்லாம் உன் கண் முன்னாடி இருக்கே” என்றான் வீரா.
“உன் சின்ன வயசு ஃபோட்டோ எல்லாம் காட்டேன். இருக்கா?”
“இருக்கு.. வா.. நீயும் வா” என்று சுபத்ராவையும் அழைத்துக் கொண்டு, பாட்டியின் அறைக்குச் சென்றான்.
ஆல்பத்தை எடுத்து வைத்து, இரண்டு பெண்களும் ஆர்வமாக பார்க்க, வீரா ஒவ்வொன்றையும் விளக்கிக் கொண்டிருந்தான்.
ஜாக்ஷி அதில் இருந்த படங்களை எல்லாம் கவனித்தாள். வீரா ஒன்று தாமரையின் கையில் இருந்தான். இல்லையென்றால் கையை பிடித்துக் கொண்டு நின்றிருந்தான். சுருளி அவனை தூக்கியிருந்த போதும், தாமரையை ஒட்டிக் கொண்டு தான் இருந்தான்.
ஜாக்ஷிக்கு அதை பார்க்கும் போது வருத்தமாக இருந்தது. இப்படிப் பாசத்தை காட்டி விட்டு எப்படி வேண்டாம் என்று உதற முடியும்? அப்படி உதறிய போது, இவன் எப்படி தாங்கினான்?
கோபம் இன்னும் கூட தாமரை மேல் வளர்ந்தது.
“நீங்க குட்டியா இருக்கீங்க” என்று சுபத்ரா சொல்ல, வீரா ஜாக்ஷியை பார்த்தான்.
“நீ குட்டி பையனா இருக்கியாம்”
“மூணு வயசுல அந்த ஹைட் தான் இருப்பாங்க”
“இப்ப மட்டும் ஏன் இப்படி பனைமரம் மாதிரி வளர்ந்துருக்க? நிமிர்ந்து பேசி கழுத்து வலிக்குது. இதுக்காகவே கல்யாண விசயத்த இன்னும் டீப்பா யோசிக்கனும் போல” என்று ஜாக்ஷி வம்பிழுக்க, சுபத்ரா சிரித்து வைத்தாள்.
“உனக்கு என்னை பார்த்தா கிண்டலா இருக்கா?”
“ஜாக்ஷி பாவம். கழுத்து வலிக்கும்” என்றாள் சுபத்ரா.
“ஸ்டூல் வாங்கி கொடுக்குறேன். குட்டையா இருக்கவங்களுக்கு தான் அதை செஞ்சு விக்கிறாங்க. அதை வச்சா கழுத்து வலிக்காது”
“ஏய்.. யாரை குட்டைனு சொல்லுற?” என்று ஜாக்ஷி வெகுண்டாள்.
“உனக்கு தான கழுத்து வலிக்குது?”
“நீ பனைமரம் மாதிரி வளர்ந்துட்டு, என்னை குட்டைனு சொல்லுவியா?”
“நீ வளரவே இல்லையேனு வேணா சொல்லட்டுமா?”
ஆல்பத்தை அடிப்பது போல் ஓங்கினாள்.
“அப்படியே தலையில போட்டுருவேன்” என்று மிரட்ட, “தலையில போட எட்டுமா?” என்று கேட்டு வைத்தான் அவன்.
சுபத்ராவிற்கு இவர்களது சண்டை சிரிப்பாக இருந்தது.
“அடிங்க” என்றவள் எழுந்து விட, வீராவும் எழுந்து நின்றான்.
“முடிஞ்சா தலையில போடு பார்ப்போம்” என்ற சவாலோடு.
“இவன..” என்று அவள் ஆல்பத்தை தூக்க, சுபத்ரா பறித்துக் கொண்டாள்.
“இது பழைசு. உங்க சண்டையில கிழிச்சுடாதீங்க. நான் பாட்டி கிட்ட போய் மிச்சத்த பார்த்துக்கிறேன்” என்று ஓடி விட்டாள்.
“அடியே துரோகி.. ஹெல்ப் பண்ணாம ஓடுற” என்று ஜாக்ஷி பல்லைக் கடிக்க, வீரா சிரித்தான்.
“நீ ஏன்டா சிரிக்கிற? இரு உன் தலையில எதாவது போட்டா தான் மனசு ஆறும். நான் குட்டையா?” என்று அவள் எதோ தேட, வீரா காலால் கதவை அடைத்து விட்டு சட்டென அவளை தன் உயரத்திற்கு தூக்கி விட்டான்.
பயந்து போனாள் ஜாக்ஷி.
“இப்ப வந்துட்ட.. என்ன வேணா செய்”
“ஹேய் இறக்கி விடு”
“ஏன்? நீ தான ஆசை பட்ட”
“அய்யோ இறக்கு. பாட்டி வந்துட்டா அவ்வளவு தான்.”
“அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க”
“அவங்க சொல்லுறது இல்ல. எனக்கு ரொம்ப சங்கடமா போயிடும் இறக்கி விடு”
“மாட்டேன்”
“ஜாக்ஷி.. இங்க வாடா” என்று ஜகதீஸ்வரி கூப்பிட, பதறி விட்டாள்.
“இறக்கி விடுடா” என்று மிரட்ட, அவள் கன்னத்தில் முத்தமிட்டு இறக்கி விட்டான்.
அதிர்ந்து போனவள், அவனை முறைத்து விட்டு வேகமாக வெளியேறி விட்டாள்.
அங்கு வேறு யாரோ வந்திருக்க, அவளை அறிமுகப்படுத்த தான் அழைத்திருந்தார். சுபத்ரா அவர்களது அறைக்கு சென்று விட்டாள்.
வீரா பின்னால் வந்தான்.
“வீரா நீயும் வந்துருக்கியா?” என்று பேச ஆரம்பிக்க, ஜாக்ஷி நழுவி விட்டாள்.
வந்தவர் பேசி விட்டுச் செல்ல, லட்சுமி சமைக்கும் வேலையை ஆரம்பித்தார்.
வீரா ஜாக்ஷியிடம் வந்தான்.
“பார்த்து முடிச்சாச்சா?” என்று கேட்க, சுபத்ரா பலமாக தலையாட்டினாள்.
“யாராவது வந்துட்டே இருக்காங்க” என்று ஜாக்ஷி கேட்க, “திருவிழாவுக்காக ஊருக்கு வந்த எல்லாருமே, அப்பத்தாவ பார்த்து பேச வந்துடுவாங்க. இங்க சுத்தி சுத்தி நிறைய சொந்தங்கள் தான் இருக்காங்க. உனக்கும் இங்க நிறைய பேரு சொந்தம் தான்” என்றான்.
“இப்ப வந்தது யாரு?”
“எனக்கு அத்தை. உனக்கு சித்தி”
“அப்ப எல்லாருமே சொந்தக்காரங்களா? எனக்கு பிடிச்சுருக்கு” என்றாள் சுபத்ரா.
“உனக்கு பிடிச்சுருக்கா? அப்ப இந்த ஊர்ல இருந்துடேன். உன்னை அப்பத்தா நல்லா பார்த்துப்பாங்க”
சுபத்ரா ஜாக்ஷியை பார்க்க, ஜாக்ஷி வீராவை முறைத்தாள்.
“நீ அவள க்ளியர் பண்ண தான பார்க்குற?” என்று கேட்க, வீரா புரியாமல் முழித்தான்.
சிலநொடிகளில் புரிய, “அடப்பாவி..! நான் அப்படி யோசிக்கவே இல்லை. நீ தான் யோசிக்கிற” என்றான் பதிலுக்கு.
“என்ன பேசுறீங்க?” என்று சுபத்ரா கேட்க, “ஜாக்ஷிக்கு பசில பைத்தியம் பிடிச்சுடுச்சாம். நீ போய் சாப்பாடு ரெடியானு பார்த்துட்டு வா” என்றான் சுபத்ராவிடம்.
அவளும் எழுந்து சென்று விட, வீரா ஜாக்ஷியை முறைக்க ஜாக்ஷி வீராவை முறைத்தாள்.
“லிவ் இன் கேட்டது நீ. அதுக்கு இன்னும் அப்பத்தா கிட்ட பர்மிஷன் கூட வாங்கல. நான் சுபத்ராவ இடைஞ்சல்னு காலி பண்ணுறனா? உனக்கு எவ்வளவு கொழுப்பிருந்தா இப்படி சொல்லுவ?”
“என்னை கேட்காம கிஸ் பண்ணல? அதான் உனக்கும் உன் தங்கச்சிக்கும் சண்டை இழுத்து விடலாம்னு பார்த்தேன்” என்று அசால்டாக தோளை குலுக்கினாள்.
“அடிப்பாவி! இவ்வளவு டேஞ்சர் ஃபெல்லோவா நீ?”
“ஆமா.. என்ன செய்வ?”
“உன்னை நம்பி நான் எப்படி தனியா இருக்கது?”
“நக்கலா?”
“ஆமா. லிவ் இன்ன நானும் மறுபடியும் கன்சிடர் பண்ண வேண்டி இருக்கும் போல.. பார்த்துக்கிறேன்” என்றவன் முறைத்து விட்டுச் சென்றான்.
ஜாக்ஷிக்கு சிரிப்பு வந்தது.
சமைத்து சாப்பிட்டு பயணக்களைப்பு தீர ஓய்வெடுத்து விட்டு, பொங்கல் வைப்பதை பற்றிய பேச்சு வந்தது.
“அதுக்கு முன்னாடி வேற ஒன்னு பேசனும். ஜாக்ஷி உங்க கிட்ட எதோ சொல்லனுமாம்” என்று விட்டான் வீரா.
ஜாக்ஷி சில நொடிகள் விழித்து விட்டு, புரிந்ததும் வீராவை முறைத்தாள்.
‘முன்னாடியே சொல்லி பிரிப்பேர் ஆக விடாம, போட்டுக் கொடுத்துட்டான் பாரேன்’ என்று முறைத்தவள், லட்சுமியை பார்த்தாள்.
“என்னது?”
“பாட்டி.. எங்களுக்கு கல்யாணம் பேசிருந்தீங்களே.. அத பத்தி” என்று ஆரம்பித்தாள்.
“ஆமாமா.. யோசிச்சு சொல்லுறதா சொன்னீங்க. ஆனா ஒரு பதிலும் வரல. நீங்களே சொல்லுவீங்கனு பார்த்தேன்”
“ஆமா.. அத பத்தி தான் பேசனும்”
“சொல்லுமா”
“எனக்கு உங்க பேரன பிடிச்சுருக்கு. அவனுக்கும் அப்படி தான். ஆனா அதுக்காக உடனே கல்யாணம் பண்ணிக்கிறது கஷ்டம்.. கொஞ்ச நாள் பழகி பார்க்கலாம்னு நினைச்சேன்”
“இதுல என்ன இருக்கு? கொஞ்ச நாள் ஒருத்தர ஒருத்தர தெரிஞ்சுட்டே கல்யாணம் பண்ணுங்க” என்று லட்சுமி சொல்ல, ஜாக்ஷிக்கு தன் காதுகளை நம்ப முடியவில்லை.
‘இவ்வளவு சீக்கிரமா ஒத்துக்கிட்டாங்களே!’ என்று ஆச்சரியப்பட்டாள்.
ஆனால் ஜகதீஸ்வரி நடுவே வந்தார்.
“அவ சொல்லுற பழகி பார்க்குறது என்னனு உனக்கு புரியல லட்சுமி. நல்லா கேளு”
“என்ன சொல்லுற? கொஞ்ச நாள் காதலிச்சுட்டு கல்யாணம் பண்ணுறது இந்த காலத்துல சாதாரணமா நடக்குறது தான?”
“அது தான் இல்ல. இவ காதல மட்டும் சொல்லல. லிவ் இன் சொல்லுறா”
“அப்படினா?”
“அப்படினா.. கல்யாணம் பண்ணிக்காம ஒரே வீட்டுல இவங்க ரெண்டு பேரும் இருப்பாங்க. எப்ப தோணுதோ அப்ப தான் கல்யாணம் பண்ணிப்பாங்க. அப்படி”
“என்ன கண்ட்ராவி இது?” என்று லட்சுமி முகம் சுளிக்க, “பாட்டி இதுல எதுவும் தப்பில்ல” என்றாள் ஜாக்ஷி.
“இது எப்படி தப்பில்ல? கல்யாணமே பண்ணிக்காம ஒரு பையனும் பொண்ணும் ஒரே வீட்டுல இருக்கது தப்பு தான்.”
“கல்யாணம் பண்ணிட்டு இருந்தா மட்டும் சரியா?”
“ஆமா அப்ப புருஷன் பொண்டாட்டி ஆகிடுவீங்களே”
“அப்படி ஆகிட்டு ஒரே மாசத்துல எனக்கு உங்க பேரன பிடிக்காம போயிட்டா? இல்ல உங்க பேரனுக்கு என்னை பிடிக்காம போயிட்டா? என்ன செய்யலாம்?”
“ஏன் பிடிக்காம போகுது? இப்ப பிடிச்சுருக்கு தான?”
“நீங்களும் கல்யாணம் பண்ணி வாழ்ந்தீங்க தான? கல்யாணம் ஆன அன்னைக்கு இருந்த மாதிரி தான், உங்க வாழ்க்கை கடைசி வரை இருந்துச்சா? கசந்து போய், தாலிய கழட்டி எறிய முடியாதுங்குற ஒரே காரணத்துக்காக வாழுறேன்னு சொல்லுற மாதிரி, உங்க வாழ்க்கையில எந்த நாளும் வரவே இல்லனு சத்தியம் பண்ணுங்க பார்க்கலாம்”
‘ஆஹா.. இவள மாட்டி விட பார்த்தா.. இவ கிட்ட அப்பத்தா மாட்டிக்கிட்டாங்களோ?’ என்று தான் வீராவுக்கு தோன்றியது.
லட்சுமிக்கு மனமறிந்து பொய் சொல்ல முடியவில்லை.
“என்ன பாட்டி பதில காணோம்? தூரத்துல இருந்து பார்க்கும் போது அழகா இருந்த அத்தனை உறவும், பக்கத்துல இருக்கும் ச்சீனு கசந்து போகலயா உங்களுக்கு? இல்ல எல்லாம் அப்பவும் அழகா தான் இருந்துச்சுனு சத்தியம் பண்ணுங்க. நாங்க தாலிய கட்டிட்டே ஒருத்தர ஒருத்தர தெரிஞ்சுக்கிறோம்”
“என் வாழ்க்கை வேறமா”
“எல்லாருக்குமே வாழ்க்கை தான் பாட்டி. இப்போ என்னை வீராவுக்கு பிடிச்சுருக்கு. கல்யாணம் பண்ணிட்டோம். ஒரு மாசம் கழிச்சு, நான் நடுராத்திரி வரை வேலை பார்க்குறது அவனுக்கு பிடிக்காம போகும். சண்டை வரும். அவன் காலையில வேலைக்கு போகும் போது என்னை எதிர்பார்ப்பான். நான் அப்ப தூங்கிட்டு இருப்பேன். அப்ப என்னாகும் வாழ்க்கை? சலிச்சுடும்.”
ஒரே நொடியில் வாழ்க்கையின் முன்னோட்டத்தை காட்டியிருந்தாள் ஜாக்ஷி.
‘பாவம் என் அக்கா’ என்று தான் தோன்றியது ஜகதீஸ்வரிக்கு.
“அதே போல எனக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கும். அதுல சிலது வீரா கிட்ட இருக்காது. தாலி கட்டி தொலைச்சுட்டோம். இனி டைவர்ஸ் கேஸ்னு அலையவா முடியும்னு பொறுத்து போறது.. சந்தோசமே இல்லாம வாழுறது.. கடனேனு நாள கடத்துறது.. இது எதுவும் இல்லாம நிறைவான வாழ்க்கைய வாழ ஆசை படுறேன்”
“அதுக்காக முன்னாடியே வாழ்ந்து பார்க்குறதா?”
“அதுல என்ன தப்பு? தூரமாவே இருந்துட்டு, பக்கத்துல வந்ததும் ச்சீனு போறத விட.. பக்கத்துல இருந்தும்.. விலகி போக ஆப்ஷன் இருந்தும், போகாம இருக்கனும். என் கிட்ட இருக்க அத்தனை குறையும், அவன் கிட்ட இருக்க அத்தனை குறையும், நாங்க ரெண்டு பேருமே தெரிஞ்சுக்கனும். அந்த குறைக்கு அப்புறமும் கூட, நாங்க ஒருத்தர விட்டு ஒருத்தர் பிரிய நினைக்க கூடாது. அந்த இடத்துக்கு வந்தப்புறம், நாங்க கல்யாணம் பண்ணி வைங்கனு உங்க கிட்ட வந்து நிப்போம்”
“இல்லமா.. நீ என்ன சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாது”
“அப்ப உங்க பேரனுக்கு வேற பொண்ண தான் பார்க்கனும்” என்று முடித்து விட்டாள்.
லட்சுமி அதிர, “என்னால பழகாம ஒருத்தரோட வாழ்க்கைய இணைச்சுக்க முடியாது. பின்னாடி டைவர்ஸ் கேஸ்னு கோர்ட்டுக்கு அலைஞ்சு ரெண்டு பேரு வாழ்க்கையும் கெடுக்கவும் முடியாது” என்றாள் திட்டவட்டமாக.
“தாலி கட்டாம வாழுறது என்ன பழக்கம்? என்ன நீயும் கேட்டுட்டு இருக்க?” என்று ஜாக்ஷியிடம் பேச முடியாமல் ஜகதீஸ்வரியை கேட்க, “இது தான் இப்ப எல்லாரும் பண்ணிட்டு இருக்குங்க. வெளிநாட்டுல பண்ணுறது” என்றார்.
“வெளிநாட்டு காரன் செஞ்சா நாமலும் செய்னுமா? நம்ம நாட்டுக்குனு ஒரு முறை இருக்குல?”
“நம்ம நாட்டுல கூட இது பல காலமா இருக்கே. ராஜாக்கள் கந்தர்வ மனம் பண்ணிக்கிறதுக்கு பேரு கூட லிவ் இன் தான?” என்று கேட்டு வைத்தாள் ஜாக்ஷி.
‘சபாஷ்! இவ கிட்ட பேசி அப்பத்தா ஜெயிக்கிறது கஷ்டம் தான்’ என்று நினைத்துக் கொண்டான் வீரா.
ஆனால் லட்சுமியும் அவ்வளவு சீக்கிரத்தில் இறங்கி வரவில்லை. கடைசியாக ஒரு அஸ்திரத்தை வீசி இருந்தாள் ஜாக்ஷி. அதை யாருமே எதிர் பார்க்கவில்லை.
தொடரும்.
ஆஹா… இப்ப இவ என்ன அஸ்திரத்தை எடுத்து வீசினான்னு தெரியலையே..? அது வர்க்கவுட் ஆகுமா… அதுவும் தெரியலையே..????
😀😀😀
CRVS (or) CRVS 2797