Loading

 

ஜானகி தாயை தீயாய் முறைக்க, மேனகாவும் பதிலுக்கு முறைத்தார்.

“என்னமா பண்ணி வச்சுருக்கீங்க?” என்று ஜெகன் சலிப்பாக கேட்க, “உங்களுக்கு அறிவு இல்லையா? அந்த ஃபேக்டரி வேணாம்னு சொல்லிட்டு, மறுபடியும் போய் நின்னுருக்கீங்க” என்று ஜானகி கத்தினாள்.

அவளுக்கு மேனகா செய்ததை விட, ஜாக்ஷி என்ன நினைத்திருப்பாள் என்ற எண்ணம் தான் கூனிக்குறுக வைத்தது.

“என்னடா ரொம்ப தான் கோபப்படுறீங்க.. நான் உங்கள பெத்தவ”

“பெத்தவங்க மாதிரியா பண்ணிட்டு வந்துருக்கீங்க? அவ கிட்ட போய் பிச்சை எடுத்துருக்கீங்க”

“அப்படியே அடிச்சுடுவேன்டி.. எதுடி பிச்சை? நான் என்ன அவ சொத்தையா கேட்டேன்?”

“பின்ன என்ன பண்ணிருக்கீங்க? உங்க சொத்தையா கேட்டீங்க?”

“எல்லாம் உங்கப்பாவோட உழைப்புடி. அவரு ராப்பகலா உழைச்ச சொத்து.”

“அப்பா தான் நமக்கு கொடுத்துருக்காரே”

“இந்த வீடும், அந்த நிலமுமா? உங்க ரெண்டு பேர் பேர்ல போட்டிருக்க டெபாசிட் தவிர எதுவுமே இல்ல”

“அதெல்லாம் அவங்க சொத்துமா? அப்பா வெறும் வேலைக்காரன்னு அந்த ஜாக்ஷி அசிங்கபடுத்துனாளே.. அது போதாதா?”

“அவ சொன்னா? நான் ஏன் விடனும்? இங்க பாரு.. உன் அப்பா இருக்க வரை நான் ராணி மாதிரி வாழ்ந்தேன். இப்ப நான் கஷ்டப்படுறத அவரால தாங்க முடியாது. ஒழுங்கா வந்து ஜாக்ஷி கிட்ட அந்த ஃபேக்டரிய வாங்குறீங்க. இல்லனா உங்களுக்கு அம்மா இல்ல. எங்கயாவது போயிடுவேன் சொல்லிட்டேன்”

மேனகா மிரட்டி விட்டு செல்ல, ஜெகன் பயத்தோடு அக்காவை பார்த்தான். ஜானகிக்கு தலை வலி தான் வந்தது.

அந்த ஜாக்ஷியிடம் போய் பிச்சை எடுப்பதை விட, செத்தே போகலாம் என்பது தான் அவள் நிலை. ஆனால் அம்மா விட மறுக்கிறாரே?

தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட, ஜெகன் அருகே வந்து அமர்ந்தான்.

“க்கா”

“முடியலடா. நீயே சொல்லு அந்த ஜாக்ஷி கிட்ட போய் அத வாங்குறது எவ்வளவு பெரிய கேவலம்”

“புரியுதுகா. ஆனா அம்மா விட மாட்டாங்க போல. எங்கயாவது போயிடுவேன்னு வேற சொல்லுறாங்க”

“முதல்ல நான் தான் எங்கயாவது ஓடனும்” என்றவள், தலைவலி தாங்காமல் முகத்தை சுருக்கினாள்.

“தலை வலிக்குதா? மாத்திரை எடுத்துட்டு வரவா?”

ஜானகி தலையாட்டியதும், எடுத்து வந்து கொடுத்தான்.

“நீ போய் படி. எதாவது யோசிப்போம்” என்றவள், மாத்திரையை போட்டுக் கொண்டு சாய்ந்து அமர்ந்தாள்.

அனைத்தையும் மாலைக்கு பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் சிற்றம்பலம்.

‘ஏன்பா? ஏன் எப்பவும் அந்த ஜாக்ஷியே ஃபர்ஸ்ட் வர்ரா? உங்க மனசுல அவ தான் முதல்ல.. இப்ப அம்மாவுக்கும் அவ கொடுக்குற சொத்து தான் பெருசாம். அப்ப நான் யாரு? உங்களயே எனக்கு பிச்சையா போட்டேன்னு சொல்லுறா. அவ யாரு எனக்கு பிச்சை போட? என்னால முடியல. அவ கிட்ட இறங்கி போகவே முடியல’ என்றவள் கண்கள் கலங்கி போனது.

*.*.*.*.*.*.

“வேலையெல்லாம் ஒதுக்கிட்டேன். மூணு நாள் அங்க இருக்கலாம் பிரச்சனை இல்ல. ஆனா சுபத்ராவ தனியா விட தான் கொஞ்சம் யோசனையா இருக்கு”

“அவளையும் கூட்டிட்டு போவோம்”

“அவ தான் வர மாட்டாளே. பத்ரா கூப்பிட்டு ஒரு தடவ தான் வெளிய வந்தா”

“அப்ப அவன் பேசட்டும். என் கிட்டயும் சொன்னான். வரையுறதுக்கு பொருள் வாங்குனோம்னு. அவன கூப்பிட்டு பேசச்சொல்லு”

“நல்ல ஐடியா தான். பேசிட்டு சொல்லுறேன்” என்று வைத்தவள், வீராவை அழைத்தாள்.

“கட்டபொம்மன் பிசியா?”

“ஆமா ஏன்?”

“ஊருக்கு போகும் போது சுபத்ராவையும் கூட்டிட்டு போகலாம்னு நினைக்கிறேன்”

“போகலாமே”

“அவள நீ தான் பேசி வர வைக்கனும்”

“பேசலாம். ஆனா அவளுக்கு என்ன தான் பிரச்சனை?”

“பெரிய கதையாச்சே”

“ஈவ்னிங் ஒன்னா கிளம்பலாமா?”

“ஓகே. அப்பவே சொல்லுறேன்” என்று வைத்து விட்டாள்.

மாலை வேலை முடிந்ததும், வீரா ஜாக்ஷியை தேடிச் சென்றான்.

அவளுக்கு வேலை முடியும் வரை காத்திருந்தான்.

“முடிஞ்சது” என்று சோம்பல் முறித்தாள் ஜாக்ஷி.

“அப்ப கிளம்பலாமா? நான் டிரைவ் பண்ணுறேன்”

“ஓகே”

சாவியை அவனிடம் கொடுத்து விட்டு, அவனோடு கிளம்பினாள். மொத்த அலுவலகமும் அவர்களை வேடிக்கை பார்த்தது. சிலர் தங்களுக்குள் கிசுகிசுத்தனர். யாருடைய பார்வையையும் இருவரும் பொருட்படுத்தவில்லை. காரில் ஏறிக் கிளம்பி விட்டனர்.

“எதாவது சாப்பிடுறியா?”

“சுபத்ரா செஞ்சு வச்சுருப்பா”

“அவள பத்தி சொல்லு. அங்க போய் சாப்பிட்டுட்டே அவள சரி பண்ணலாம்”

“சுபத்ராவ முதல்ல அவளோட பதினாறு வயசுல தான் பார்த்தேன். க்ளாசிக் டான்சர் அவ”

“பார்ரா..!”

“நான் பிரோகிராம் போயிருந்தேன்னு சொன்னேன்ல? அங்க அவ டான்ஸ் பார்த்தேன். ரொம்ப பிடிச்சுருந்துச்சு. கூப்பிட்டு பாராட்டுனேன். சின்ன பொண்ணா இருந்தா அப்போ. அதுக்கப்புறம் நான் என் வேலைய பார்க்க போயிட்டேன். அன்னைக்கு தான் அவ வாழ்க்கையே மாறி இருக்கு.”

“என்னாச்சு?”

“சுபத்ராவோட அம்மா போலியோ பேஷன்ட். நடக்க முடியாது. இவள நல்லா தான் வளர்த்துருக்காங்க. ஆனா திடீர்னு பணப் பேய் பிடிச்சுடுச்சு. அன்னைக்கு டான்ஸ்ல எதோ ஒரு பணக்கார பொறம்போக்கு, இவள பார்த்துட்டு ஆசை பட்டுருக்கான். லட்சம் லட்சமா பணம் தர்ரேன். இவள மூணு நாள் அனுப்புனு கேட்டுருக்கான். பதினாறு வயசு புள்ளைய கேட்குறானேனு பெத்தவங்களுக்கு நியாயமா கோபம் தான வரனும்? இதுங்க அவள பணத்துக்காக விக்கவும் ரெடியாகிடுச்சுங்க.

அவ கிட்ட, அந்தாளோட போய் அவங்க வீட்டுல சாப்பிட்டு வானு ஏமாத்தி அனுப்பி விட்டுருச்சுங்க. கார்ல வச்சே அந்தாளு கண்டபடி நடக்க பார்த்துருக்கான். அதுல உசாராகிட்டா. கார் நடுவுல நிக்கும் போது இறங்கி ஓடுனவ, எதுலயோ மோதி விழுந்து கழுத்துல அடி பட்டுருச்சு. அந்தாளு செத்து போயிட்டா போலனு அப்படியே விட்டுட்டு ஓடிருக்கான்”

வாயில் வந்த அனைத்தையும் வைத்து அவனை ஜாக்ஷி திட்ட, வீரா அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கும் இப்போது அவன் கையில் கிடைத்தால் கழுத்தை திருகும் ஆசை தான்.

“பக்கத்துல பார்த்தவங்க ஹாஸ்பிடல்ல சேர்த்து, எப்படியோ விசயம் பெத்தவங்களுக்கு போயிருக்கு. அந்த ஆக்ஸிடென்ட்ல அவ வாய்ஸ் போச்சு. இது எதுவும் எனக்குத் தெரியாது. நான் செக் கொடுத்துட்டு வந்துட்டேன். திரும்ப நன்றி சொல்ல அந்த என்.ஜி.ஓ ஃபவுண்டர் கால் பண்ணாங்க. பேசும் போது, சுபத்ராவ பத்தி பேச்சு வந்துச்சு.

அவங்க வருத்தமா அந்த பொண்ணுக்கு நைட்டே ஆக்ஸிடென்ட் ஆகி, ஹாஸ்பிடல்ல இருக்கானு சொன்னாங்க.‌ சின்ன பொண்ணு. பாவமேனு தோனுச்சு. ஹாஸ்பிடல் பேர கேட்டு பார்க்கலாம்னு போனேன்.. அங்க…” என்றவள் பல்லைக் கடித்தாள்.

ஜாக்ஷி அங்கு வந்த போது, சுபத்ராவின் பெற்றோர்கள் பேசிக் கொள்வது அவளது காதில் விழுந்து விட்டது.

சுபத்ராவுக்கு பேச்சு போனது என்றவர்கள், “அதுவும் சரி தான். கத்தாம இருப்பா. நாம ஃபோன போட்டு அந்தாள வர சொல்லி, இவள கூட்டிட்டு போகச் சொல்லுவோம். வேலை ஈசியா முடிஞ்சுடும்” என்றது பெற்ற தகப்பன்.

“சின்ன புள்ளையா.. புள்ளை கிள்ளை வந்துட்டா என்ன செய்யுறது?”

“அதுக்கு தான் இப்ப நிறைய மருந்து இருக்கே.. அழிச்சு விட்டுரலாம். அதெல்லாம் அந்தாளு கொடுக்குற பல லட்சத்துல கொஞ்சத்த செலவு பண்ணா போதும்”

இதைக்கேட்டு ஜாக்ஷிக்கு “ச்சீ” என்றானது. அப்போதே நேராக சென்று இருவரையும் அடிக்கத்தோன்றியது. ஆனால் சுபத்ராவை காப்பற்ற வேண்டும்.

உடனே ஃபவுண்டரை அழைத்து, நடப்பதை சொன்னாள். அவருக்கு தெரிந்த மருத்துவர் இருக்க, அவர் மூலம் சுபத்ராவை காப்பாற்ற முடிவு செய்தனர்.

திடீரென சுபத்ராவிற்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி, பெற்றோரை விட்டு பிரித்துச் சென்றனர். அவளிடம் விசாரிக்க, எல்லாமே சொன்னாள். ஆனால் பேச்சு போனதில் அவளால் சரியாக பேசவும் முடியவில்லை.

ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுக்க, அப்போதே காவல்துறையை அழைத்து அவர்களை கைது செய்ய வைத்து, சுபத்ராவை ஃபவுண்டர் என்.ஜி.ஓ க்கு அழைத்துச் சென்று விட்டார்.

“அங்க இருந்தவ இப்ப உன் கூட ஏன் இருக்கா?”

“அங்க ஒரு ரெண்டு வருசம் இருந்தா. எல்லாத்துக்கும் பயந்து நடுங்குவா. என்னையும் அந்த மேடமையும் தவிர யார பார்த்தாலும் பயந்தா. கொஞ்சம் கொஞ்சமா நாங்க அறிமுக படுத்துற ஆளுங்கள மட்டும் நம்ப ஆரம்பிச்சா. வீட்டுக்கு நீ பாட்டி கூட வந்ததால தான், உன்னையே நம்புறா. இல்லனா நீ வந்து போற வரை, நான் கூப்பிடாம வெளிய தலை காட்ட மாட்டா. அங்க இருந்தப்ப தான் சமைக்க கத்துக்கிட்டா. சைகைல பேசுறது, வீட்ட பார்த்துக்கிறது எல்லாம் அங்க இருந்தப்போ கத்துக்கிட்டது தான். அந்த ஆர்கனைஷேஷன் ஸ்கூல்லயே படிச்சு முடிச்சுட்டா. வெளிய போக மட்டும் பயம். எப்ப வந்து அந்த சனியனுங்க இழுத்துட்டு போய், அவள அந்த பொறம்போக்கு கிட்ட விப்பாங்களோனு இன்னும் பயம் இருக்கு. அங்கயும் யார் கிட்டயும் பேச மாட்டா. தனியா எங்கயும் போக மாட்டா. வீட்டுக்குள்ளயே தான் அடைஞ்சு கிடப்பாளாம். ஸ்கூல்ல கூட யார் கூடயும் பேச மாட்டாளாம்.”

“ஓஹோ”

“பட் அந்த மேடம் இப்ப ஃபாரின்ல இருக்காங்க. இவ தனியா இருக்க முடியாதுனு அழுதுருக்கா. அதான் போகும் போது, என் கிட்ட கொண்டு வந்து விட்டாங்க. நானும் தனி வீட்டுல இருக்கனா, கூட இருக்கட்டும்னு சொல்லிட்டேன். காலேஜ் போறியானு கேட்டா, முடியவே முடியாதுனு சொல்லிட்டா. எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன். கேட்கவே இல்ல. சரி போடினு விட்டேன். டாக்டர் அவளா மாறுனா தான் உண்டு. மத்தபடி நல்லா இருக்கானு சொல்லிட்டாங்க”

“நாம மாத்தலாம்”

“அவளுக்கு வாய்ஸ் கூட திரும்ப எடுக்கலாம் தெரியுமா? ஜஸ்ட் டாக்டர பார்த்து பேசலாம்னு சொல்லுறேன். மாட்டேங்கறா. அந்த ரெண்டு பரதேசியும் இப்பவும் ஜெயில்ல தான் இருக்குங்க. பெத்த பிள்ளைய விக்க பார்த்தானுங்க தூக்கி உள்ள வச்சு கும்மிட்டாங்க. ஆனா இவ மட்டும் பயத்த விட மாட்டேங்குறா”

“ரெண்டு பேரும் எந்த ஜெயில்ல இருக்காங்கனு தெரியுமா?”

“ஏன்?”

“இவள கூட்டிட்டு போய் அவங்க முன்னாடி நிப்பாட்டுவோம்.”

“பயந்துடுவா”

“பரவாயில்ல. ஒரு தடவ நேரடியா சந்திச்சுட்டா தான் பயம் போகும்.”

“தெரிஞ்சா வர மாட்டாளே”

“சொல்லாம கூட்டிட்டு போவோம். இப்ப அவள ஊருக்கு கூட்டிட்டு போவோம். நீ விசாரி. எங்க இருக்குதுங்கனு தெரிஞ்சா, பார்க்க பர்மிஷன் வாங்கு. ஊர்ல இருந்து கிளம்பும் போது, கூட்டிட்டுப் போய் பார்த்துட்டு வந்துடலாம்”

“வொர்க் அவுட் ஆகுங்குற?”

“பேய பார்க்காத வரை தான் பயம். பார்த்து அது நம்மல கொன்னுட்டா, நாமலும் ஒரு பேய் தான். பயம் போயிடும்”

“நல்லா எக்ஸாம்பிள் போ” என்று சிரித்தாள்.

“நம்ம மூணு பேருக்குமே ஏன் பெத்தவங்களே எதிரியா வந்துருக்காங்க ஜக்கம்மா?”

“கடவுளுக்கு நம்ம மேல நிறைய பாசம். பெத்தவங்க கூட உரிமை கொண்டாடுறது பிடிக்காம, அவங்கள வில்லியாக்கி நம்மல விட்டு துரத்திட்டாரு பத்ரா”

அவளது விளக்கத்தில் அவனிடம் புன்னகை தான் வந்தது. இதையே, கடவுளுக்கு நம் மீது கோபம் என்று கூட சொல்லலாம். ஆனால் ஜாக்ஷி சொன்ன விளக்கம் அவனுக்கு பிடித்திருக்க, அவளது கையை பிடித்துக் கொண்டு காரை ஓட்டினான்.

இருவரும் வீட்டுக்கு வந்து சேர, சுபத்ரா இருவரையும் புன்னகையுடன் வரவேற்றாள்.

*.*.*.*.*.*.*.*.

சேகர், அருள் இருவரும் அருகருகே அமர்ந்திருக்க, பசுபதியும் தாமரையும் பெண்வீட்டாரிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

அருள் கைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான். கவிதா குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தாள்.

“பொண்ணு வந்த உடனே எனக்கு ஃபோட்டோ அனுப்புற. இல்லனா அவ்வளவு தான் சொல்லிட்டேன்” என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.

அருள் அவளோடு கலாட்டா செய்து கொண்டிருந்தாள்.

மணப்பெண்ணுக்கு உரிய அலங்காரத்துடன் அமைதியாக வந்து நின்றாள் நிசாந்தினி.

“எல்லாருக்கும் இத கொடுமா” என்று அவள் கையில் இனிப்பு நிறைந்த தட்டு திணிக்கப்பட்டது.

வாங்கி கொடுத்தவள், சேகரையோ அருளோ நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அங்கேயே அமர சொல்லி, அவளோடு பேச ஆரம்பித்தனர்.

நிசாந்தினியை புகைப்படத்தில் பார்த்த போதே, சேகருக்கு பிடித்திருந்தது தான்.‌ நேரில் பார்த்ததும் மொத்தமாய் விழுந்து விட்டான்.

“ண்ணா பொண்ணு சூப்பர்.. அவங்களுக்கு உன்னை பிடிச்சுருக்கானு கேட்டியா?” என்று கவிதா கேட்க, “எங்க பேச விட்டாங்க?” என்றான் சலிப்பாக.

“அப்ப நான் வேணா பேசி கேட்குறேன். அருள் எப்படியாவது நம்பர் வாங்குடா” என்று கூற, அருளும் அடித்து பிடித்து கிளம்புவதற்குள் கைபேசி எண்ணை வாங்கி, சேகர் கையிலும் கவிதாவிடமும் கொடுத்து விட்டான்.

அப்போதே அவர்களது திருமணம் நிச்சயமானது.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
21
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. அது சரி, பேய் நம்மளைப் பார்த்து பயந்து ஓடாம இருந்தாலே கெத்து தான் போங்க.

      😀😀😀
      CRVS (or) CRVS 2797