சுபத்ராவோடு, வரைவதற்கு தேவையான பொருட்கள் விற்கும் இடத்திற்கு சென்று சேர்ந்தனர் வீராவும் ஜாக்ஷியும்.
“உனக்கு என்னலாம் வேணும்னு லிஸ்ட் எழுதி கொடு. கேட்போம்” என்று வீரா சொல்ல, சுபத்ரா எழுதிக் கொடுத்தாள்.
அங்கு கண்ணில் பட்ட அத்தனையும் வீரா எடுக்க, “வேணாம்” என்று தடுத்தாள்.
“பரவாயில்ல எல்லாத்தையும் வச்சு வரை. போரடிக்காம இருக்கும்” என்று ஜாக்ஷி தடுத்து விட்டு, மொத்தமாய் வாங்கி குவித்து விட்டனர்.
எல்லாவற்றையும் காரில் ஏற்றியதும், “வீட்டுக்கு போகலாம்” என்றாள் சுபத்ரா.
“வெளிய வந்து சாப்பிடாம போனா சாமி கண்ண குத்திடும் சுபத்ரா” என்று வீரா சொல்ல, “ஆமா.. எதாவது சாப்பிட்டு போகலாம் வா” என்று ஜாக்ஷி சுபத்ரா கையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.
ஜாக்ஷி கையை பிடித்திருக்கும் தைரியத்தில், சுபத்ரா அவர்களோடு சென்றாள். இரவு உணவை வெளியிலேயே முடித்து விட்டு, அதற்கு மேல் சோதிக்காமல் சுபத்ராவை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
“இவ்வளவு வாங்கியாச்சு. இத வச்சு நீ வரையப்போறத, நான் எக்ஸிபிஷன் வைக்க போறேன்” என்று வீரா சொல்ல, “அவ்வளவு நல்லா எல்லாம் வரைய தெரியாது” என்றாள் சுபத்ரா.
“நீ வரைஞ்சாலே நல்லா தான் இருக்கும்.”
“ஆமா ஒழுங்கா வரையுற. மறுபடியும் அந்த சீரியல பார்க்க உட்காராத”
சுபத்ரா தலையாட்டி வைத்தாள்.
“ஓகே பத்ரா வா நாம வேலைய பார்க்கலாம்” என்று ஜாக்ஷி அழைக்க, சுபத்ரா புரியாமல் பார்த்தாள்.
“உன்னை கூப்பிடலமா. இவன கூப்பிட்டேன்”
“பாரேன் நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி பேரு. அதான் அண்ணன் தங்கச்சி பாசம் போல”
“ரொம்ப தான் பொங்குது பாசம்” என்று ஜாக்ஷி பொறாமையுடன் சொல்ல, “ஏன் உனக்கும் அண்ணன் வேணுமா?” என்று கேட்டான் வீரா.
ஜாக்ஷி முறைக்க, “நான் வேணும்னா ஒரு அண்ணன ஏற்பாடு பண்ணட்டுமா?” என்று கேட்டு வைத்தான்.
“இன்ஸ்டன்ட்டா அண்ணனுக்கு எங்க போவ?”
“சிம்பிள்.. உலகத்துல என்னை தவிர, எல்லா பேச்சுலர் பசங்களும் உனக்கு அண்ணன் தான்” என்று தோளை குலுக்க, சுபத்ரா சத்தமாக சிரித்து விட்டாள்.
ஜாக்ஷிக்கும் சிரிப்பு வந்தது.
“அப்படியே போட்டேன்னா” என்று ஜாக்ஷி கையில் கிடைத்ததை எடுத்து ஓங்க, வீரா கண் சிமிட்டி வைத்தான்.
“நான் இத எடுத்துட்டு போறேன்” என்று விட்டு, சுபத்ரா எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு அறைக்குள் சென்று விட்டாள்.
“உன்னை தவிர எல்லாருமே அண்ணனா? டூ மச்சா இல்ல?”
“இல்லையே” என்றவன், அவளை திடீரென கட்டி அணைக்க, அதிர்ந்தாள்.
“அவளுக்கு அண்ணன்னு சொன்னா, உனக்கு ஏன் பொறாமை வருது?”
“எனக்கு அண்ணன் இல்லையே. இருந்தா கொஞ்சம் நல்லா இருந்துருக்கும். என்னையவே எங்கம்மா வேண்டாம தான் பெத்துச்சு. இதுல அண்ணன் வேறயானு மனச தேத்திக்குவேன்”
“அண்ணனா தான் இருக்கனுமா? அன்பனா இருக்க கூடாதா?” என்று கேட்ட வீரா, அவளது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட, பதறி விட்டாள்.
“ஹேய்..”
“என்ன?”
“சுபத்ரா வந்துட போறா”
“அதுக்கு?.”
“கைய எடு”
“நீயும் ஒன்னு கொடு விடுறேன்”
“அதெல்லாம் தர முடியாது”
“ஏன்?”
“கிஸ் பண்ணுற அளவு நீ என்ன பண்ண?”
“எதாச்சும் பண்ணா தான் கொடுப்பியா?”
“ஆமா.. சும்மா கொடுப்பாங்களா?”
“நீ பேசி வழிக்கு வராத சுபத்ராவ, நான் வெளிய கூட்டிட்டு போயிருக்கேன்ல? அதுக்கு தரலாமே?”
அவனை ஆச்சரியமாக பார்த்தவள், உடனே கன்னத்தில் பட்டும் படாமல் முத்தமிட்டாள். அதற்கே வெட்கம் வந்து விட்டது.
“இது போதும். உட்காரு நான் தண்ணி எடுத்துட்டு வர்ரேன்” என்றவன், அவளுக்கு தனிமை கொடுத்துச் சென்றான்.
சற்று நேரத்தில் ஜாக்ஷி சரியாகி விட, தண்ணீரோடு வந்தான். குடித்து விட்டு அலுவலக வேலையை பார்த்தனர். முடிக்கும் போது நேரம் வெகுவாக கடந்திருந்தது.
“ஓகே கிளம்புறேன்” என்று வீரா எழ, “இந்த நேரத்துல பஸ் இருக்குமா?” என்று அக்கறையாக கேட்டாள்.
“இல்லனா இங்கயே தங்கட்டுமா? எனக்கும் ஆசை தான். பாட்டி பர்மிஷன் வேணுமேனு பார்க்குறேன்”
கையில் கிடைத்ததை வைத்து, அவனை ஒரு அடி வைத்தாள்.
“பஸ் இல்லனா கார கொடுக்கலாம்னு நினைச்சேன். உனக்கு அதுவும் இல்ல போடா”
“ச்சே வீணா போச்சு” என்றவனை அவள் மேலும் அடிக்க, சிரித்துக் கொண்டே கிளம்பினான்.
“கார் வேணாம். ஆட்டோ பிடிச்சு போயிக்கிறேன. குட் நைட்” என்றவன், அவளது கன்னம் தட்டி விட்டு கிளம்பி விட்டான்.
கதவை அடைத்து விட்டு அறைக்குள் வந்தவளுக்கு, வீராவை நினைத்து புன்னகை வந்தது.
“என்னமா பேசுறான்! பேசியே காரியத்த சாதிக்கிறான்” என்று சிரித்தவள், அவன் முத்தமிட்ட கன்னத்தையும், தட்டி விட்டு சென்ற மறு கன்னத்தையும் இரண்டு கையாலும் பிடித்துக் கொண்டு சில நிமிடங்கள் நின்றாள். பிறகு தலையில் அடித்து சிரித்துக் கொண்டு, வேலையை பார்த்தாள்.
*.*.*.*.*.*.
சென்னை சென்று வந்ததிலிருந்து அமைதியாகவே இருக்கும் மனைவியை, பசுபதி யோசனையுடன் பார்த்தார்.
“ஏன்டா உங்கம்மாவுக்கு என்னடா ஆச்சு? ரெண்டு நாளா ரொம்ப அமைதியா இருக்கா” என்று சேகரிடம் கேட்க, “தெரியல. ஊருக்கு போயிட்டு வந்ததுல இருந்து இப்படி தான் இருக்காங்க” என்றான் அவன்.
“அங்க எதாவது நடந்துச்சா? கவிதா நல்லா இருக்கானு தான சொன்னா?”
“அருள கேட்டா தான் தெரியும்” என்று அருளை அழைத்து விசாரித்தனர்.
“இல்லையே கவிதா பத்திரமா தான் இருக்கா. அந்த பையனும் அவ பக்கம் திரும்பிக் கூட பார்க்குறது இல்லையாம். நிறைய பேரு அவள தொல்லை பண்ணாம ஒதுங்கி போறாங்கனு சொன்னா”
“அப்புறம் ஏன் இவ இப்படி இருக்கா?” என்று பசுபதி குழம்பி விட்டார்.
அருள் மறந்து கூட, வீராவையும் ஜாக்ஷியையும் சந்தித்ததை பற்றி மூச்சு விடவில்லை. சொல்ல வேண்டாம் என்று தாமரை தான் சொல்லி இருந்தார். அதனால் கவிதாவும் அருளும் வாயை மூடிக் கொண்டனர்.
பசுபதி குழப்பத்துடன் தாமரையை விசாரித்தார்.
“ஏன் ஒரு மாதிரியாவே இருக்க?”
“ஒன்னுமில்லங்க”
“என்னனு சொல்லு. சும்மா நீ இப்படி இருக்க மாட்டியே?”
“வீரா நினைப்பா இருக்கு. என் கிட்ட பேசவே இல்ல”
பசுபதி மனைவியை கோபமாக பார்த்தார்.
“உனக்கு அவன தவிர வேற நினைப்பே இருக்காதா? இங்க உன் மூணு புள்ளைங்க இருக்கு. அத பார்க்குறத விட்டுட்டு, வேணாம்னு போனவன போய் நினைச்சு உருகிட்டு இருக்கியா?”
“அவனுக்கு கோபம். நாமலும் அப்படி பேசி இருக்க கூடாதுல?”
“நாம ஒரு அக்கறையில சொன்னோம்”
“அக்கறை தான். இதையே அருளுக்கு சொல்லுவீங்களானு கவிதா கூட திட்டுறா”
“அருளா? அடியே கூறு கெட்டவளே? அப்படியா கேட்டா கவிதா? வரட்டும் அவள பேசிக்கிறேன். என் புள்ளை ஏன்டி அப்படி ஆகனும்? அவனுக்கு அப்பன் நான் உயிரோட இருக்கேன். அந்த அனாதை பயலுக்கு ஏத்துட்டு கவிதாவும் பேசுனாளா? நீயும் அத கேட்டுட்டு வந்தியா? அங்கயே அவள நாலு அப்பிருக்க வேணாம்?”
பசுபதி குதிக்க, தாமரை அமைதியாக பார்த்தார்.
வெறும் வார்த்தையாக அருளை சொன்னதற்கே, இப்படி குதித்து பெத்த மகளை அடிக்க பாய்கிறார். ஆனால் வீராவை பல முறை அனாதை என்றும், அப்பன் இல்லாதவன் என்றும் பேசி இருக்கிறார். இதில் சுருளியை போலவே அவன் செத்துப்போவான் என்றெல்லாம் சொல்லும் போது, பெற்ற நான் பேசவே இல்லையே? ஏன் இப்படி குதிக்கவில்லை? அருள் மகன் என்றால் வீரா?
அருள் பசுபதிக்கு மகன் என்றால், வீரா தாமரைக்கு மகனல்லவா? அபசகுனமாக பேசாதே என்று கூட அதட்டியிருக்கலாமே. கோபப்பட்டிருக்கலாமே? ஏன் செய்யாமல் போனோம்?
நினைக்கும் போதே மனதில் மீண்டும் எதோ உடைந்தது.
“விடுங்க. அவளுக்கும் வீராவ பேசுனதுல கோபம். எனக்கு தூக்கம் வருது” என்றவர், அமைதியாக படுத்து கண்ணை மூடிக் கொண்டார்.
இரண்டு நாட்கள் கழித்து, சேகருக்கு பெண் பார்க்கும் விசயத்தை பற்றிப்பேசினார் தாமரை.
“இப்ப என்னமா அவசரம்? கவிதாவுக்கு முதல்ல செய்வோமே?” – சேகர்
“அவ சின்ன புள்ளடா. அவ இருபத தாண்டி வரும் போது, நீ கல்யாண வயச தாண்டிருப்ப. நான் ஜாதகம் பார்த்துட்டு வர்ரேன். பொருத்தம் இருந்தா பேசிடலாம்” என்றவர், அடுத்த நாளே சென்றார்.
ஜாதகம் நன்றாக பொருந்தி விட, அப்போதே திருமண பேச்சு ஆரம்பித்தது.
*.*.*.*.
ஜாக்ஷியையும் வீராவையும் அழைத்திருந்தார் ஜகதீஸ்வரி.
“என்ன முடிவு பண்ணிருக்கீங்க?”
“என் பாட்டி கிட்ட இவ பேசுறேன்னு சொல்லிட்டா. ஆனா வேலையில மாட்டிக்கிட்டோம்”
“எனக்கு நேரமில்ல பாட்டி” என்று ஜாக்ஷி கூற, “நான் ஒரு வேண்டுதலுக்காக ஊருக்கு போறேன். என் கூட நீங்க ரெண்டு பேரும் வாங்க. நேராவே பேசிடுவோம்” என்றார்.
“என்ன வேண்டுதல்?” என்று வீரா கேட்க, “ஊருக்கா? எனக்கு வேலை இருக்கே” என்றாள் ஜாக்ஷி.
“பொங்கல் தான் வைக்கனும். வேலைய பத்தி எனக்கு அக்கறை இல்ல. மூணு நாள் அங்க தங்குற மாதிரி ரெடியாகுங்க. பேசிட்டு பொங்கல வச்சுட்டு கிளம்புவோம். அவ்வளவு தான்”
“பொங்கல் அப்பத்தா நமக்கு வைக்காம இருந்தா சரி” என்று வீரா கூற, “கண்டிப்பா அதுவும் நடக்கும். எதுக்கும் ரெடியா வாங்க” என்று விட்டார்.
அதன் பிறகு நாட்கள் வேலையில் பறந்து விட, மூன்று நாட்களை ஒதுக்கினாள் ஜாக்ஷி.
“கட்ட பொம்மன் சார்..”
“சொல்லுங்க ஜக்கம்மா”
“இது அவசியம் தானா?”
“கண்டிப்பா. அங்க வந்து நீ இந்த மார்டன்ல சுத்த முடியாது. சுடிதார் நாலு வாங்கிக்கோ.”
“இதெல்லாம் போட்டு பல வருசம் ஆகுது”
“இந்த நாலு நாள் போடு” என்றவன், அவளை இழுத்துச் சென்று சுடிதார் வகைகளை வாங்கி குவித்தான்.
“நாலு நாளுக்கு இத்தனையா?”
“மாத்துறதுக்கு வேணும். இருக்கட்டும்” என்றவன் சேலை இடத்துக்கு அழைத்துச் சென்றான்.
“ஹேய்.. நோ நோ.. எனக்கு சேரி கட்ட தெரியாது”
“பொங்கல் வைக்கும் போது கட்டுனா நல்லா இருக்கும் ஜானுமா”
“எனக்கு சுடிதார் போதும். ஆள விடு”
“சரி ஜஸ்ட் வாங்கிப்போம். வேணாம்னா கட்டாத. இப்ப ரெண்டு பாட்டிக்கு வாங்குவோம்” என்றவன், இருவருக்கும் வாங்கி விட்டு ஜாக்ஷிக்கு எல்லாமே ரெடிமேடாக வாங்கி வைத்தான்.
“வேணும்னா கட்டு இல்லனா விட்டுரு”
“கட்டலனா கோச்சுக்க கூடாது”
“நோ ப்ராப்ளம். சுபத்ராவுக்கு ஒன்னு வாங்கலாமா?”
“வொய் நாட்?”
அவளுக்கும் இரண்டு சேலைகளை எடுத்துக் கொண்டு வெளியே வர, எதிரில் வந்தார் மேனகா.
“ஜாக்ஷி..” என்று ஆர்வமாக வர, வீரா புருவம் சுருக்கி பார்த்தான்.
“பில் கட்டு போ” என்று அவனை அனுப்பியவள், மேனகாவை கேள்வியாக பார்த்தாள்.
“நான் சொன்னத யோசிச்சியா?”
“நான் கேட்டத நீங்க பண்ணீங்களா?”
“அதுங்க சின்ன புள்ளைங்க ஜாக்ஷி.. “
“அப்புறம் யாரு ஃபேக்டரிய பார்ப்பா? நீங்களா? உங்களுக்கு எல்லாம் தெரியுமா?”
“நான் ஆள் வச்சு..”
“நோ வே. ஜானகி ஜெகன் வந்து பேசனும். பேசுனா தர்ரேன். கிளம்புங்க” என்றவள், வீராவிடம் சென்று நின்று கொண்டாள்.
இருவரும் பில்லை கட்டி விட்டு காரில் ஏறிக் கிளம்பும் வரை, மேனகா பார்த்துக் கொண்டே நின்றார்.
‘இந்த பையன் யாருனே தெரியல. அன்னைக்கும் இருந்தானே. யாரா இருக்கும்?’ என்று யோசித்துக் கொண்டே, வந்த வேலையை பார்த்தார்.
காரில் அமர்ந்ததும், “அது மேனகா தான?” என்று கேட்டான் வீரா.
“ஆமா”
“என்னவாம்?”
“அந்த ஃபேக்டரி வேணுமாம்”
“வேணாம்னு சொல்லிட்டதா பாட்டி சொன்னாங்களே?”
“இப்ப வேணுமாம். நான் உங்க புள்ளைங்களோட வந்து கேட்டா தர்ரேன்னு சொல்லிட்டேன்”
“ஏன்?”
“கொடுத்தப்போ, அவங்க மக நீ ஒன்னும் பிச்சை போட வேணாம்னு சொல்லிட்டு போனா”
“திமிர பாரேன்?”
“அவளுக்கு இருக்கத விட, எனக்கு நிறையவே திமிரு இருக்கு. அப்பவே அவ மூக்க உடைச்சு தான் அனுப்புனேன். ஆனா இப்ப ஃபேக்டரிய இவங்கள நம்பி கொடுக்க முடியாது. மூணு பேரு கிட்டயும் பொறுப்ப கொடுத்தா தான், அது பத்திரமா இருக்கும்”
“கொடுக்கப்போறியா?”
“ஆமா”
“ஏன்?”
“அது உண்மையா பாட்டி சொத்து கிடையாது. சிற்றம்பலம் ஆரம்பிச்சது. ஆனா பணம் இங்க இருந்து எடுத்ததால, இந்த சொத்தோட வந்துடுச்சு. அத அவங்க கிட்ட கொடுத்துட்டா எனக்கு வேலை குறையும்”
“இது அவங்களுக்கு தெரியாதா?”
“யாருக்கும் தெரியாது. பெரிய பதவில இருக்க சிலர தவிர. அண்ட் அவரோட உயில்ல கூட அத அவர் போடல. நானே கொடுத்துடலாம்னு தான் யோசிச்சேன்”
“அப்ப வேணாம்னு சொல்லிட்டு, இப்ப ஏன் கேட்குறாங்க?”
“பண பிரச்சனையா இருக்கும். அதுக்காக தான சிற்றம்பலத்த வளைச்சு போட்டு, ஜானகிய பெத்து, அவர டைவர்ஸ் வாங்க வச்சு கல்யாணம் பண்ணதே? இப்ப அவரில்லாம பணமில்ல. ஜானகி எதோ வேலைக்கு போறா போல. ஆனா அந்த சம்பளம் எல்லாம் அவங்களுக்கு பத்தாது”
“அந்த பொண்ணு அப்பவே பிச்சைனு சொல்லிடுச்சு. இப்ப ஏத்துக்குமா?”
“அது அவங்க கவலை. அவளோட வந்தா தான் தருவேன்னு சொல்லிட்டேன். வரட்டும் பார்ப்போம்” என்றதோடு அந்த பேச்சை விட்டு வேறு பேச ஆரம்பித்தாள்.
தொடரும்.
இவங்க ரெண்டு பேரும் இதே நிதானத்தோட போனாலே, கல்யாண வாழ்க்கையில போய் முடிஞ்சிடும் பாருங்களேன்
😀😀😀
CRVS (or) CRVS 2797
செம ஜாக்ஷி. வீரா