தாமரை கண்ணீர் விடவும் மறந்து, மலைத்துப்போய் அமர்ந்திருந்தார். ஜாக்ஷியின் பேச்சை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.
“யாரு அந்த பொண்ணு? எவ்வளவு கோபமா பேசிட்டு போகுது?” என்று அருள் கவிதாவிடம் கேட்க, “இது அந்த வினய்யோட அக்கா” என்றாள்.
“அக்காவா? அவ கூட வீராக்கு என்ன வேலை?”
“எனக்கு என்ன தெரியும்? ஆனா போலீஸ் ஸ்டேஷனுக்கு ரெண்டு பேரும் ஒன்னா தான் வந்தாங்க. அந்த அக்கா, கார் சாவிய அண்ணன் கிட்ட கொடுத்து, என்னை ஹாஸ்டல்ல விட சொன்னாங்க”
அருள் ஆச்சரியத்தில் புருவம் உயர்த்த, “ரெண்டு பேரும் விரும்புறாங்களா என்ன? சேகர் கூட சொன்னானே ஒரு பொண்ணோட பார்த்தேன்னு.. அது இதுவோ?” என்று கேட்டார் தாமரை.
“தெரியலமா. ஆனா அவங்கள இதோட ரெண்டு தடவ ஒன்னாவே பார்த்துட்டேன். அந்த அக்கா எவ்வளவு தைரியமா பேசுறாங்க தெரியுமா? அவங்கள தான் போலீஸ் முதல்ல கூப்பிட்டதே. நல்லா தெரிஞ்சவங்க போல. அவங்களுக்காக தான் கேஸ் போட்டு அலைய விடலனு நினைக்கிறேன்”
“அவ்வளவு பெரிய ஆளா அந்த பொண்ணு? பார்த்தாலும் பணக்காரியா தான் தெரியுறா”
“காரும் செம்ம காருமா. பணக்கார பொண்ணா இருக்கும் போல” என்று அருள் கூற, கவிதா தலையாட்டினாள்.
“அவங்க ரொம்ப க்ளோஸா இருப்பாங்கனு தான் எனக்குத் தோனுது. இல்லனா அண்ணன் போய் இந்த கேன்சர் விசயத்த சொல்லிருக்குமா? அண்ணன் தான் யாரு கிட்டயும் தேவைக்கு மேல பேசாதே”
“அதுக்காக அந்த பொண்ணு அம்மாவ அப்படி பேசலாமா?” என்று அருள் திடீரென பொங்கினான்.
“நிறுத்துறியா? அம்மா சொன்னது தப்பு”
“அவங்க ஒரு அக்கறையில சொன்னத அவங்க தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க”
“ஓஹோ.. அப்ப அம்மா உன்னை பார்த்து, நீ அல்பாயுசுல போயிடுவனு சொல்லிருந்தா இனிச்சுருக்குமா உனக்கு?” என்று கவிதா எகிற, அருள் கப்பென வாயை மூடிக் கொண்டான்.
தாமரையாலும் இதற்கு பதில் பேச முடியவில்லை.
“தப்ப அம்மா பண்ணாங்க. அந்த அக்காவும் அப்பத்தாவும் வீரா அண்ணன் மேல அக்கறை இருக்கதால, வந்து திட்டிட்டு போயிட்டாங்க. வீரா அண்ணன் மனசு உடைஞ்சு, நம்ம சங்காத்தமே வேணாம்னு போயிட்டாரு. ஆனா ஃபோன் பண்ணி கூப்பிட்டதும் உடனே போலீஸ் ஸ்டேஷன் வந்தாரு. எனக்கு அவரு இருக்காங்குற தைரியத்துல இருக்கேன். நீங்க பேசி பேசி, அண்ணன என்னையும் சேர்த்து ஒதுக்க வைச்சுடாதீங்க. நீங்க தப்பு பண்ணீங்க.. நான் என்னடா பண்ணேன்? எனக்கு மூணு பேருமே அண்ணன் தான். உங்கம்மா மாதிரி ஒரு புள்ளய உதறிட்டு, இன்னொன்ன கொஞ்ச எனக்கு வராது. எனக்கு நேரமாச்சு. லேட்டா போனா ஹாஸ்டல்ல திட்டு வாங்கனும். வர்ரேன்” என்றவள், விருட்டென ஹாஸ்டலுக்குள் சென்று விட்டாள்.
அவர்கள் வாசலில் தான் நின்றிருந்தனர்.
“ம்மா.. நீங்க ஏன் இப்படி நிக்கிறீங்க?”
“கவிதாவுக்கு இருக்க தெளிவு கூட எனக்கு அப்ப இல்லடா.. எல்லாம் என் விதி. வா கிளம்புவோம்” என்றவர், மகனோடு பேருந்து நிலையம் சென்று விட்டார்.
ஊர் சென்று சேரும் வரை, அவருக்கு ஜாக்ஷியின் வார்த்தையை கடக்க முடியவில்லை. லட்சுமி திட்டும் போது கூட, சமாளித்து விட்டார். ஆனால் இவள் பேசியது?
மனதில் ஊசியாய் குத்தியது. சில நாள் பழகிய அவளுக்கே இது தாங்கவில்லை. பெற்றெடுத்த பிள்ளையை பற்றி அவர் நினைக்காமல் போனாரே? மனதில் இருந்த எதோ ஒன்று உடைந்து போக, அமைதியாக பயணத்தை கடந்தார்.
*.*.*.*.*.*.
காதம்பரி கூண்டுப்புலியாக இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தார். அவரது மூளைக்குள், பல விசயங்கள் ஓடிக் கொண்டிருந்தது.
அசோக் வீடு வந்து சேர்ந்தார். வந்தவரை கவனிக்காமல் காதம்பரி யோசித்துக் கொண்டிருக்க, “என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டார்.
“ஹான்..! யோசிச்சுட்டு இருக்கேன்”
“அதான் எத பத்தி?”
“இந்த ஜாக்ஷிய பத்தி தான்”
“அது சரி.. அவள தவிர உனக்கு வேற கவலையே இல்லையா?”
“இப்போதைக்கு அவ தான் என் பெரிய தலை வலி. பிறக்கும் போதே என் உயிர வாங்கிட்டு தான் வந்தா. இப்பவும் தினமும் உயிர வாங்குறா”
“இப்ப என்ன பண்ணா அவ?”
“அவளுக்கு எங்கம்மா மாப்பிள்ளை பார்த்துருக்காங்க”
“அவ திமிருக்கு எவன் கூட இருப்பான்?”
“அதாங்க ஆச்சரியமே.. அந்த பையன் கைய பிடிச்சு கூட்டிட்டு போறான். இவளும் அமைதியா பின்னாடியே போறா. என்னை பார்த்து அவ கத்தாம போனதா சரித்திரமே இல்ல. இன்னைக்கு அவன் பேச்சுக்கு அடங்கி போயிட்டா”
“யாரு அவன்?”
“என் வாழ்க்கைய கெடுத்த மாதிரி, அவ வாழ்க்கையும் கெடுக்குறதுக்கு ஒரு வேலைக்காரன தேடி பிடிச்சுருக்கு எங்கம்மா”
“யாரு?”
“ஆஃபிஸ்ல வேலை பார்க்குற ஒருத்தன். தூரத்து சொந்தமாம். தூக்கிட்டு வந்து அவளுக்கு கட்டி வைக்க பார்க்குறாங்க. ஒரு வேலைக்காரன கட்டிட்டு நான் பட்டது போதாதா? அவளும் படனுமானு நல்லா கேட்டுட்டு வந்துட்டேன்”
“அவ வாழ்க்கை அவ இஷ்டம். யார வேணா கட்டுறா”
“அதுக்காக ஒரு வேலைக்காரனயா கட்டனும்?”
“உனக்கு என்ன திடீர்னு ஜாக்ஷி வாழ்க்கை மேல இவ்வளவு அக்கறை? அத பத்தி நீ கவலைப்படுற ஆள் இல்லையே?”
“அவ வாழ்க்கை மேல அக்கறை இருக்க கூடாதா?”
“என் கிட்ட இந்த பொய்யெல்லாம் வேலை செய்யாது. சிற்றம்பலத்துக்கு பதிலா ஜாக்ஷி செத்து போயிருக்கலாம்னு என் கிட்டயே சொல்லிருக்க. அதுனால விசயத்த சொல்லு”
“எல்லாம் சொத்துக்காக தான். வேலைக்காரனுங்க எல்லாம் ரொம்ப டேஞ்சர் அசோக். அவனுங்க ஒரு தடவ சொத்த பார்த்துட்டா, அப்புறம் அது அவ்வளவு தான். யானை வாயில போன கரும்பு மாதிரி. திரும்பி வராது. இங்க ஜாக்ஷி பேர்ல எங்கம்மா சொத்த பூராம் எழுதி வச்சுருக்காங்க. அவன கல்யாணம் பண்ணிட்டா, மொத்த சொத்தும் அவனுக்கு போயிடும். அப்புறம் நான் என்ன பண்ணுறது?”
“இப்படி உண்மைய பேசு. ஆனா அவன கட்டலனாலும் ஜாக்ஷி சொத்த தர மாட்டா.”
“அதெப்புடி தராம போவா? நான் சண்டை போட்டு வாங்கியே தீருவேன். வேற லாயர் பார்க்கனும்னு இருக்கேன். இப்ப இருக்க ஆளு சரி வர மாட்டாரு”
“வீணா வாயர் ஃபீஸ் தான் அழுற. தண்டமா எதையாச்சும் பண்ணாம வேலைய பாரு” என்று கூறியதோடு அசோக் தன் வேலையை பார்த்தார்.
‘நோ.. எனக்கு அந்த சொத்து வேணும். எல்லாம் என் அப்பா சம்பாதிச்சது. அந்த ஜாக்ஷியோட அப்பன் துரோகி சம்பாதிச்சது இல்ல. விடவே மாட்டேன்’ என்று நினைத்தவர், என்ன செய்வது என்று திட்டம் போட ஆரம்பித்தார்.
*.*.*.*.*.*.
ஜானகி வேலையை முடித்து விட்டு, கையை முறுக்கியபடி நிமிர்ந்து அமர்ந்தாள். அந்த நிறுவனத்தில் வேலையில் சேர்ந்ததிலிருந்து உடல் சோர்ந்து போனது. அதிக வேலை செய்து பழக்கமில்லை. இப்போது தான் பழகிக் கொண்டிருக்கிறாள்.
அவளது சம்பளம் தானே குடும்பத்துக்கு எல்லாம்? அதனால் பல்லைக்கடித்து ஓடிக் கொண்டிருக்கிறாள்.
அது ஒரு சாதாரண அலுவலகம். மிகவும் குறைவான சம்பளம் தான். அவளுக்கு முன் அனுபவம் எதுவும் இல்லாததால், இது தான் கிடைத்தது. பெரிய வேலைக்கு போனால் தான் செலவை முழுதாக பார்க்க முடியும் என்று யோசித்துக் கொண்டே வெளியே வர, முன்னால் வந்த பைக்கை பார்க்காமல் இடித்து விழுந்திருந்தாள்.
“அய்யோ! சாரி சாரி மேடம்” என்று பைக்கில் இருந்தவன், வேகமாக இறங்கினான்.
விழுந்ததும் எழுந்தவள் கையை உதறிக் கொண்டு பார்க்க, “சாரி மேடம். கவனிக்கல” என்று கையை நீட்ட, மறுத்து விட்டு தானாகவே எழுந்து நின்றாள்.
“ஹெட் லைட் ரிப்பேர். அதான் நீங்க வந்தத கவனிக்கல. ரியலி சாரி”
“பரவாயில்ல. நானும் கவனிக்காம வந்துட்டேன்”
“ரொம்ப அடிபட்டுருச்சா? எதாவது மருந்து வாங்கிட்டு வரவா?”
“அதெல்லாம் வேணாம்” என்றவள், உடையில் இருந்த தூசியை தட்டி விட்டு அவனை பார்த்தாள்.
இதற்கு முன்பு பார்த்தது இல்லை. புது ஆளாக இருந்தான்.
“சாரி..”
“ஓகே..” என்றவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
சில தூரம் நடந்ததும், “ஜானகி” என்று கூப்பிட, நடந்து கொண்டிருந்தவள் அதிர்ந்து திரும்பிப் பார்த்தாள்.
அவன் தான் வேகமாக வந்தான்.
“உங்க ஐடி கார்ட போட்டுட்டீங்க” என்று நீட்ட, ‘ஓ இத பார்த்து தான் பேர் தெரிஞ்சுச்சா?’ என்று நினைத்தவள், நன்றி சொல்லி வாங்கிக் கொண்டாள்.
“உங்கள நான் பார்த்ததே இல்லையே.. புதுசா?” என்று கேட்க, “இல்ல.. இங்க தான் வேலை பார்க்குறேன். மூணாவது மாடில” என்றாள்.
“நான் அஞ்சாவது மாடி. என் பேரு நிர்மலன்”
“ஓகே.. எனக்கு பஸ் வந்துடும்” என்றவள் உடனே நடக்க ஆரம்பித்து விட்டாள்.
அவனோடு நின்று பேச தோன்றவில்லை. அவன் தான் அவள் போகும் வரை பார்த்திருந்தான்.
பேருந்தில் ஏறி அமர்ந்தவள், காயமாகி இருந்த கையை பார்த்தாள். கீழே விழுந்து கை காயமாவது எல்லாம் புதிது இல்லை தான். ஆனால் உடலும் மனமும் களைத்துப்போன நேரத்தில், சிறு காயம் கூட கண்ணீரை வரவைத்தது.
கண்ணை துடைத்துக் கொண்டு வீடு சென்று சேர்ந்தாள்.
வீட்டில் மேனகா தொலைகாட்சியை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.
“வந்துட்டியா? காபி போட்டு வச்சுருக்கேன். போய் மாத்திட்டு வா” என்றதும், ஒன்றும் பேசாமல் சென்று உடைமாற்றி வந்தாள்.
காபியை குடித்த பிறகு சற்று இதமாக இருக்க, “இன்னைக்கு ஒருத்தவங்க வீட்டுக்கு வந்தாங்க ஜானகி” என்றார் மேனகா.
“யாரு?”
“உங்கப்பாவோட ஃப்ரண்டு.. அந்த சோ ரூம் கூட வச்சுருக்காங்களே”
“ஓ.. அவங்களா? அவங்களுக்கென்ன?”
“உனக்கு விசயம் தெரியாது. அவரோட பையனுக்கு உன்னை கட்டி வைக்கலாம்னு, அப்பாவும் நானும் ஒரு காலத்துல பேசி இருந்தோம்”
வெடுக்கென திரும்பி முறைத்தாள்.
“அதுனால?”
“முறைக்காதடி. இப்ப ஒன்னும் உன்னை கட்டி வைக்க போறது இல்ல. அவங்க பையனுக்கு வேற பொண்ண பார்த்து கல்யாணம் நிச்சயமாகிடுச்சாம். பத்திரிக்கை வச்சுட்டு போனாங்க”
“அது சரி” என்றவள், கோபத்தை விட்டு காபியை குடித்தாள்.
“உங்கப்பா இருந்திருந்தா, இந்த சம்பந்தம் போயிருக்காது. எல்லாம் அவரோட கை விட்டு போயிடுச்சு”
“அதுக்கு என்ன பண்ணுறது?”
“உன்னை ஒன்னும் பண்ண சொல்லல.. எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா கைய விட்டு போகுதேனு வருத்தமா இருக்கு. பேங்க்ல இருந்த பணமும் குறைஞ்சுட்டே போகுது. நீ வேற எதாவது பெரிய வேலை தேடக்கூடாதா?”
“நீங்க முதல்ல செலவ குறைங்க. வீட்டு கரெண்ட் பில்ல என் சம்பளம் மொத்தமும் முழுங்காம இருந்தாலே போதும். ஏசி இல்லனா வீட்டுலயே இருக்க மாட்டேன்னு ஏசிய போட்டு கரெண்ட் பில்ல கூட்டி வச்சுட்டு, செலவு பத்தி பேசுறீங்க”
“சம்பாதிக்கிறோம்னு திமிராடி?”
“ஆமா.. இப்ப கூட எல்லா லைட்டும் எரியுது. ஏசி ஓடுது. ஏன் ஃபேன் காத்து வாங்குனா போதாதா? கஷ்டப்பட்டு உழைக்கிற மொத்த காசும், இப்படி கரெண்ட் பில்லுக்கு போயிட்டா நான் என்ன செய்யுறது?”
“ஏன்டி கத்துற? நீ சம்பாதிச்சு அதுல நான் வாழுறேன்னு இஷ்டத்துக்கு கத்துவியா?”
“அப்படித்தான் கத்துவேன். வீட்டுல சும்மா தான இருக்கீங்க? உங்களுக்கு எதுக்கு ஏசி? நாளைக்கே இந்த ஏசிய முதல்ல விக்கிறேன்”
“இங்கபாருடி.. அது உன் அப்பா எனக்காக வாங்கிக் கொடுத்தது. அதுல கை வச்ச.. அவ்வளவு தான் சொல்லிட்டேன்”
“அப்ப கரெண்ட் பில்ல நீங்க கட்டுங்க. நான் சம்பாதிக்கிறத தர மாட்டேன்” என்றவள் வெடுக்கென உள்ளே சென்று விட, மோனகாவிற்கு கோபம் கோபமாக வந்தது.
இப்படி பணத்துக்காக போராட விட்டு விட்டாரே சிற்றம்பலம். படத்தில் இருந்தவரை முறைத்துப் பார்த்தார்.
“இப்ப திருப்தியா? எல்லா நகையையும் தூக்கி கொடுக்க சொல்லிட்டீங்க. உங்க சேர்ஸும் கொடுத்தாச்சு. இந்த வீடும் நாலு நிலமும் தான் மிச்சம். காரும் போச்சு. இப்ப வீட்டுல இருக்க பாத்திரத்தையும் தினமும் வித்து தான் வாழனும்னு ஆக்கிட்டு சந்தோசமா போயிட்டீங்கள்ள?”
படத்தில் இருந்தவரை திட்டி விட்டு, கோபமாக அமர்ந்திருந்தார். எப்படியாவது ஜாக்ஷி கொடுத்த ஃபேக்டரியை வாங்கி இருந்தால் கூட, சமாளித்து இருக்கலாம் என்று தோன்றியது.
‘திரும்ப பேசிப்பார்ப்போமா? கேட்டா இதுங்க ரெண்டும் குதிக்குங்க. ஆனா அத விடவும் மனசில்லயே.. என்ன செய்யலாம்?’ என்று யோசிக்க ஆரம்பித்தார்.
தொடரும்.
மேனகா டூ மச். காதம்பரி சீ. தாமரை 👍
அடேயப்பா… ஒருத்தருக்கொருத்தர் யாருமே சளைச்சவங்க இல்லை போலயிருக்கே.
😀😀😀
CRVS (or) CRVS2797