வீரா வினய்யின் தலையில் தட்ட, காதம்பரிக்கும் அசோக்குக்கும் கோபம் வந்து விட்டது.
“ஏய்.. என் புள்ளைய விடு.. அவன அடிக்க நீ யாரு?” என்று கேட்டுத் தடுத்தனர்.
வீரா ஜாக்ஷியை பார்த்தான். ஜாக்ஷியும் அவனை தான் பார்த்தாள்.
“வீரா விடுப்பா” என்று ஜகதீஸ்வரி சொல்ல, உடனே விட்டு விட்டான்.
வினய் கையை தேய்க்க, “ஒழுங்கா அமைதியா உட்காரு.. இல்லனா அவ்வளவு தான்” என்று விரல் நீட்டி எச்சரித்து விட்டு தள்ளி நின்றான்.
ஜாக்ஷியின் பார்வை அவனையே தொடர்ந்தது.
“ஜாக்ஷி..” என்று பாட்டி அழைத்ததும், சட்டென திரும்பிப் பார்த்தாள்.
“மிச்சத்தையும் சொல்லி முடி” என்று விட்டு பாட்டி அமைதியானார்.
ஜாக்ஷி எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, “நான் பேசி முடிக்கிற வரைக்கும் அமைதியா இருந்தா விசயம் தெரியும். இல்லனா இப்படியே இடத்தை காலி பண்ணுங்க. என் டைம வேஸ்ட் பண்ணாதீங்க” என்றாள்.
எல்லோரும் அமைதியாக அமர்ந்து விட்டனர்.
“நான் பிறக்க காரணமா இருந்த ரெண்டு பேர்ல ஒருத்தர் இப்போ இல்ல. இன்னொருத்தர்.. நீங்க.. உங்களுக்கு பாட்டியோட சொத்து வேணும். அதான? சொத்த தர்ரோம். ஆனா அதுல ஒரு கண்டீசன். நீங்க போகும் போது எடுத்துட்டுப்போன எல்லா நகையும், எந்த மாற்றமும் இல்லாம திருப்பிக் கொடுக்கனும். அது வந்துட்டா உங்களுக்கு சொத்த தர்ரோம்”
காதம்பரியின் குடும்பம் அதிர்ந்தது.
“நீங்க.. உங்களுக்கு அவரு நிறைய நகைய எடுத்து கொடுத்துருக்காரு. அதுவும் வரனும். அத நீங்க கொடுத்துட்டா, மத்த விசயத்துல நாங்க தலையிட மாட்டோம். இல்லனா.. எங்களுக்கு சேர வேண்டியத எடுக்குற வரை விட மாட்டோம்”
மேனகா குடும்பமும் இப்போது அதிர்ந்தது.
“நகை சரியா வந்து சேர்ந்ததும், உங்களுக்கான சொத்து பத்திரம் உங்களுக்கு கொடுப்போம். அது வரை சொத்த கேட்டு வரக்கூடாது. இவ்வளவு தான். இனி என்ன பேசனுமோ பேசுங்க”
“அந்த நகைய எல்லாம் நான் வித்து அதுல தான் பிஸ்னஸே பண்ணிட்டு இருக்கோம்.” என்று காதம்பரி அவசரமாக கூற, பாட்டி பேத்தி இருவரும் ஒன்றும் பேசவில்லை.
“நகைய எல்லாம் அவர் ஜானகி கல்யாணத்துக்குனு சொல்லி வச்சுட்டாரு. அத எப்படி தர முடியும்?” என்று மேனகா வாயைத்திறந்தார்.
“யாரு வீட்டு சொத்த எடுத்து யாருக்கு கல்யாணம் பண்ணுறது?” – காதம்பரி
“நீங்களும் தான நகைய வித்து புதுசா பிஸ்னஸ் பார்க்குறீங்க?”
“இது என் அம்மா வீட்டு சொத்து”
“இது என் புருஷன் கொடுத்தது”
மாறி மாறி பேச, ஜாக்ஷி பாட்டியை பார்த்தாள்.
“என்ன பாட்டி?” என்று கேட்டவள் குரலில் சலிப்பு வர, “இவங்க இப்படித்தான்னு தெரியாதா?” என்றார் அவர்.
“எதுவும் கொடுக்காம அடிச்சு துரத்த வேண்டியது தான?”
ஜகதீஸ்வரி நக்கலாய் ஒரு சிரிப்பு சிரித்து விட்டு, அவர்களை பார்த்தார்.
மேனகாவும் காதம்பரியும் மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டே போக, “ஸ்டாப் இட்” என்று கத்தினாள் ஜாக்ஷி.
“உங்க சக்காளத்தி சண்டைக்கு எங்க வீடு தான் கிடைச்சதா?” என்று கத்த, இருவரும் முறைத்தபடி வாயை மூடினர்.
“உங்களுக்கு சொத்து வேணும்னா நகையோட வந்து தான் ஆகனும். அது இல்லாம ஒரு ம** கிடைக்காது. அண்ட்.. நான் கொடுக்க நினைச்ச சொத்து எதுனு தெரியாதுல?”
உடனே இரண்டு ஃபைல்களை எடுத்து, இருவரின் முன்னாலும் போட்டாள். மேனகாவும் காதம்பரியும் வேகமாக எடுத்தனர்.
அதில் இருந்தது ஃபேக்டரி. இரண்டு பேருக்கும் ஒரே மதிப்பை கொண்ட ஃபேக்டரி தான். அதுவும் நல்ல நிலையில் ஓடிக் கொண்டிருந்தது. நகையை விட இதன் மதிப்பு அதிகம்.
“நகைய கொடுத்துட்டு இத வாங்குங்க. இல்லனா நடைய கட்டுங்க. இப்ப கிளம்புங்க. நகையோட வந்தா மட்டும் தான் வீட்டுக் கதவையே திறப்பேன்.”
பேசி முடித்து வாசல் பக்கம் கை காட்டினாள்.
ஃபேக்டரியை பார்த்து ஆசை கண்ணில் மின்னிய போதும், நகையை விட இருவருக்குமே மனமில்லை.
“ம்மா.. அந்த நகை..”
“சட் அப்.. அண்ட் கெட் அவுட். இல்லனா செக்யூரிட்டிய கூப்பிடுவேன்” என்று ஜாக்ஷி அழுத்தமாக சொல்ல, காதம்பரி மகளை முறைத்துக் கொண்டே எழுந்து நின்றார்.
“நான் உன்னை பெத்த அம்மாடி.. இப்படி மரியாதையே இல்லாம துரத்துற?”
“இந்தளவு மரியாதையே அதிகம் தான்.” என்று நக்கலாக சொன்னவள் வாசல் பக்கம் கை காட்டினாள்.
“நான் எங்கம்மா கிட்ட பேசுவேன்”
“கிளம்பு காதம்பரி. அவ பொறுமைய சோதிக்காத” என்று ஜகதீஸ்வரி சொல்லி விட்டு எழுந்து அறை பக்கம் சென்றார்.
“சொல்லியாச்சுல? ம்ம்” என்றவள் தள்ளாத குறையாக வெளியே துரத்தினாள்.
“அம்மா அருமை இப்ப தெரியாதுடி.. தெரியும் போது ரொம்ப வருத்தப்படுவ” என்று சபித்து விட்டுச் சென்றார் காதம்பரி.
அவர் பின்னால் அவரது குடும்பமும் கிளம்பி விட்டது.
“உங்களுக்கும் அதே தான். இங்க இருந்து போன நகை வந்தா தான் மத்தது. இல்லனா அந்த நகைய வச்சு சந்தோசமா இருங்க. கிளம்புங்க”
“அது நிஜம்மாவே என் பொண்ணுக்குனு…”
“கிளம்புங்கனு சொன்னேன்.”
“ம்மா.. போகலாம் வா” என்று ஜானகியும் ஜெகனும் அவரை இழுத்துக் கொண்டு சென்று விட்டனர்.
“செக்யூரிட்டி.. கதவ ஒழுங்கா பூட்டிட்டு டியூட்டிய பாருங்க” என்று தூரமாய் நின்று குரல் கொடுத்து விட்டு உள்ளே வந்தாள் ஜாக்ஷி.
வீட்டுக்குள் மூவர் தான் இருந்தனர். ஜகதீஷ்வரி, லட்சுமி அம்மாள், வீரா. மற்ற அத்தனை பேரும் கிளம்பி விட்டனர்.
‘இவங்க இங்க என்ன பண்ணுறாங்க?’ என்ற கேள்வியோடு ஜாக்ஷி பாட்டியின் அருகே அமர்ந்தாள்.
சமையல் செய்யும் பெண்ணை அழைத்து, காபி கொண்டு வரச்சொன்னாள்.
“இன்னேரத்துல காபி குடிச்சா எப்படி தூங்குவ?”
“எனக்கு தலை வலிக்குது பாட்டி” என்றவள், மற்றவர்களை கேள்வியாக பார்த்தாள்.
“அவங்க கிளம்புறேன்னு சொன்னாங்க. நான் தான் இருக்க சொன்னேன்” என்று பேத்தியின் பார்வைக்கு அவர் பதில் சொன்னார்.
“இவங்க யாருனே எனக்குத் தெரியலயே பாட்டி”
“இது லட்சுமி.. எனக்கு அக்கா முறை. ஆனா நல்ல ஃப்ரண்ட்ஸ் நாங்க”
“ஓஹோ”
“இது வீரா.. வீரபத்திரன். லட்சுமி பேரன்”
“ஹாய்” என்க, வீரா அவளை பார்த்து தலையை மட்டும் தான் அசைத்தான்.
“இவங்க இங்க தான் தங்குவாங்களா?”
“ஆமா”
“அப்ப நல்லதா போச்சு. நான் என் வீட்டுக்குக் கிளம்புறேன்”
“இங்கயே இருக்கலாம்ல? ராத்திரி போகனுமா?”
“எனக்கு அதான் கம்ஃபர்ட் பாட்டி. நீங்க தனியா இருப்பீங்கனு நினைச்சேன். இப்ப உங்க ஃப்ரண்ட் கூட இருக்காங்க. இனி நானும் ஏன்?”
“அந்த வீட்டுல தனியா இருந்து என்ன தான் செய்ய போறியோ?”
“தனியாவா கிளம்புற? அப்படினா.. வீரா நீ போய் விட்டுட்டு வாபா” என்றார் லட்சுமி.
“நோ நோ.. நானே போயிப்பேன்”
“நைட் நேரம் தனியா போறேன்னு சொல்லிட்டு இருக்காதமா.. ஒன்னு வீரா விடட்டும். இல்லனா நைட் இங்கயே இரு. காலம் கெட்டுப்போயிருக்கு”
அவரது அக்கறையில் கோபம் வராமல், புன்னகை தான் வந்தது அவளுக்கு. முதல் முறையாக!
“இட்ஸ் ஓகே. இது ஒன்னும் கிராமம் இல்ல. சிட்டி. மணி இன்னும் பத்து கூட ஆகல. ஐ கேன் மேனேஜ்”
“கிராமமோ சிட்டியோ.. தனியா போறது தப்பு தான். கூட ஒரு ஆள் இருந்தா ஒன்னும் ஆகிடாது.”
லட்சுமியும் விடுவதாக இல்லை. ஜாக்ஷி இப்போது பாட்டியை பார்த்தாள்.
“கூட போ ஜாக்ஷி. உன் காரும் இங்க இல்ல”
அந்நேரம் காபி வர, “வேணாம்” என்றவள் எழுந்து கொண்டாள்.
இனி மறுத்தாலும் கேட்க போவது இல்லை. மீறி அடம்பிடித்தால், இங்கே இரு என்று விடுவார்கள்.
“சரி வாங்க” என்றவள் முன்னால் செல்ல, வீரா சாவியை வாங்கிக் கொண்டு அவள் பின்னால் சென்றான்.
இருவரும் கிளம்பியதும், “வீரா கிட்ட பேசுனியா லட்சுமி?” என்று கேட்டார் ஜகதீஷ்வரி.
“இல்ல.. நேரம் அமையல. நாளைக்கு பேசலாம். அதெல்லாம், அவன் மறுத்து ஒன்னும் சொல்ல மாட்டான். ஆனா கேட்டுட்டே முடிவு பண்ணுவோம்” என்று உறுதி கொடுத்தார் லட்சுமி.
வீரா காரை ஓட்ட, அவனருகே தான் அமர்ந்திருந்தாள் ஜாக்ஷி. வீட்டு முகவரியை ஜி.பி.எஸ்ஸில் போட்டு விட்டதோடு அமைதியாக அமர்ந்து கொண்டாள்.
காபியும் குடிக்கவில்லை. காலையிலிருந்து வயிறு காலி தான். தண்ணீரை தவிர எதுவும் உள்ளே போக வில்லை. அதுவே அவளை மிகவும் வருத்திக் கொண்டிருந்தது.
வீட்டுக்குச் சென்று எதையாவது வயிற்றுக்குள் போட வேண்டும் என்று நினைத்தபடி அமர்ந்திருந்தாள்.
கார் திடீரென பாதை மாற, புருவம் சுருங்க திரும்பிப் பார்த்தாள்.
“இந்த ரூட் இல்ல”
“தெரியும்”
“எங்க போறீங்க?”
“ஹோட்டல். பசிக்குது சாப்பிட்டு போகலாம்”
“உங்களுக்கு பசிக்குதுனா, வீட்டுலயே சாப்பிட வேண்டியது தான?”
“உங்களுக்கும் சேர்த்து தான் சொன்னேன்”
“வாட்?” என்றாள் மெல்லிய அதிர்ச்சியோடு.
“அந்த ஹோட்டல் எப்படி? பார்க்கிங் இருக்கா?” என்று ஒரு ஹோட்டலை காட்டி கேட்க, “ம்ம்” என்றாள்.
உடனே காரை கொண்டு சென்று நிறுத்தியவன் இறங்கி விட, அவளுக்கும் வேறு வழி தெரியவில்லை.
இருவரும் ஒரு மேசையில் அமர்ந்து, சீக்கிரமாக வரக்கூடிய உணவுகளை ஆர்டர் கொடுத்தனர்.
“எனக்கு பசிக்குதுனு உங்களுக்கு எப்படி தெரியும்?”
“இது என்ன கேள்வி? முகத்த பார்த்தாலே தெரியாதா? பசி கலைப்பு எப்படி இருக்கும்னு தெரியும்”
‘முகத்த பார்த்து தெரிஞ்சுட்டானா? அவ்வளவு டயர்டா தெரியுறனா?’ என்று நினைத்தவளுக்கு, உடனே கண்ணாடியைப் பார்க்கத் தோன்றியது. அடக்கிக் கொண்டாள்.
கண்கள் அருகே இருந்த கண்ணாடி சன்னல்களில் பதிந்தது. மின்னிய விளக்குகளை மீறி, அவளது முகத்தையும் அவளுக்கு காட்டியது. அதில் தன்னை ஆராய்ந்தாள்.
‘அப்படி ஒன்னும் டயர்டா தெரியலயே?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
உணவுகள் அடுத்தடுத்து வர, வீராவும் சாப்பிட தயாரானான்.
“ஸ்ஸ்.. பாட்டியும் சாப்பிடவே இல்ல”
“என் பாட்டி சாப்பிட வச்சுடுவாங்க. டோன்ட் வர்ரி” என்றவன் அவளை நிமிர்ந்தே பார்க்காமல் சாப்பிட்டான்.
ஜாக்ஷியும் வேறு எதுவும் பேசாமல், உணவை வேகமாக உள்ளே தள்ளினாள்.
சாப்பிட்டு முடித்து ஜாக்ஷி பில்லை கட்ட, வீரா பணத்தை எடுத்து அவளிடம் நீட்டினான்.
“இட்ஸ் ஓகே”
“நாட் ஓகே. என் பில் நான் தான் கட்டனும்”
“இது ஒன்னும் அவ்வளவு இல்ல. அண்ட் நீங்க எனக்கு துணையா வர்ரீங்க. நான் பில் கட்டுறேன். சரியா போச்சு”
“இதுவும் தப்பு. நான் பாட்டி சொன்னதால கூட வர்ரேன். அதுல எனக்கு எதுவும் செலவு இல்ல. இது சாப்பாடு.. புடிங்க”
அதற்கு மேல் வாதாடாமல் வாங்கி வைத்துக் கொண்டாள். அது வரை அவன் மீது அவளுக்கு ஆர்வம் எதுவும் வரவில்லை. அப்போது வந்தது.
காருக்கு திரும்பியதும், அவனை நன்றாக பார்த்தாள்.
உயரமாக இருந்தான். அழகாகவும் கூட. கட்டுக்கோப்பான உடல். சாதாரண உடை அணிந்திருந்தாலும் அவனுக்குப் பொருத்தமாகத் தான் இருந்தது. காரை இலகுவாக ஓட்டுவதையும் கவனித்தாள்.
“உங்கள நான் இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையே?” என்று தானாக ஆரம்பித்தாள்.
அவளை ஒரு நொடி பார்த்தவன், “இதான் முதல் தடவ உங்க வீட்டுக்கு நான் வர்ரது” என்றான்.
“எந்த ஊர் நீங்க?”
ஊரை சொன்னதும், “ஓஓ.. பாட்டியோட ஊர் தானா?” என்று கேட்டாள்.
“ம்ம்.. நான் உங்க பாட்டிய மட்டும் தான் பார்த்துருக்கேன். அங்க அடிக்கடி வருவாங்க”
“அவங்களுக்கு அந்த ஊர பிடிக்கும்”
“இருக்கலாம். எங்க ஊர் ரொம்ப அழகான ஊர்”
“எல்லாருக்கும் அவங்க அவங்க ஊர் அழகான ஊர் தான்”
அவள் கிண்டலாக சொல்ல, “நிச்சயமா” என்றான் அவன்.
அவளது கிண்டலுக்கு கோபமெல்லாம் வரவில்லை. உண்மையை தானே சொல்கிறாள். உடனே ஒப்புக்கொண்டான். அவன் அப்படி சொன்னது, அவளை தான் இப்போது ஆச்சரியப்படுத்தியது. அதே ஆச்சரியத்தோடு பயணத்தை தொடர்ந்தாள்.
தொடரும்.
அநேகமா ரெண்டு பாட்டிங்களும் சேர்ந்து
வீராவுக்கும் ஜாசஷிக்கும் சிண்டை முடிச்சு வைச்சு
லூட்டி பண்ண நொனைக்கிறாங்களோ..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
வீரா ஜாக்ஷி ஜோடியா