ஜாக்ஷி எழிலரசியோடு பேசிக் கொண்டிருக்க, காதம்பரி கணவனோடு வந்து விட்டார்.
நண்பர் வீட்டு விசேசத்துக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தவர்கள், செய்தி கேட்டு அரக்கபரக்க ஓடி வந்தனர்.
வந்ததும் வினய்யின் வீங்கிய கன்னத்தில் ஒரு அறை வைத்தார் காதம்பரி.
“மறுபடியும் போலீஸ் ஸ்டேஷன் வாசல் ஏற வைக்காதனு சொன்னேன்ல?” என்று கோபமாக திட்ட, அசோக் அவனை முறைத்து விட்டு எழிலரசியிடம் சென்றார்.
அப்போது தான் ஜாக்ஷியை கவனித்தனர். அவள் இருவரையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் திரும்பிக் கொண்டாள்.
‘இவ இங்க என்ன செய்யுறா?’ என்று காதம்பரி யோசிக்க, எழிலரசி பேசினார்.
விசயத்தை சொல்லி, திட்டி முடித்து கவிதா எடுத்த படத்தையும் காட்டினார். காதம்பரிக்கு ஜாக்ஷியின் முன்னால் மானம் போவது போல் இருந்தது. மகனை மனதில் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார். ஜாக்ஷி வேறு நக்கலாக பார்த்து வைத்தாள்.
“மேடம் நீங்க எங்கள கூப்பிட்டது சரி.. இவள ஏன் மேடம் கூப்பிட்டீங்க? இவளுக்கும் என் புள்ளைக்கும் எந்த சம்பந்தமும் இல்ல மேடம்” என்று காதம்பரி பொறுக்காமல் கேட்டு விட, “அப்படியா மேடம்?” என்று கேட்டார் எழிலரசி.
“அதான் இல்லனு சொல்லுறாங்களே.. அப்ப எனக்காக பார்க்காதீங்க. கேஸ போட்டு உள்ள தள்ளுங்க”
ஜாக்ஷி சாதாரணமாக சொல்ல, “ஏய்.. என்னடி பேசுற?” என்று காதம்பரி கொந்தளித்தார்.
“ஸ்ஸ்.. என்ன சவுண்டு விடுற? இதென்ன உன் வீடுனு நினைச்சியா? போலீஸ் ஸ்டேஷன். கோவத்துல உன்னையும் உன் புள்ளையையும் சேர்த்து உள்ள போட்டுற போறாங்க. சத்தத்த குறை. இப்படி ஒரு பிள்ளய வளர்த்துட்டு சவுண்டு வேற?”
“ஜாக்ஷி இது உனக்கு தேவையில்லாத விசயம்” என்று அசோக் பேச, அவரை பொருட்டாக கூட மதிக்கவில்லை அவள்.
“தப்பு பண்ணிட்டோம் மேடம். முதல் தடவ வந்தப்போவே, இவன உள்ள தூக்கி போட சொல்லிருக்கனும். போனா போகுதுனு விட சொல்லி கேட்டு, நீங்களும் பாவம் பார்த்து விட்டது எங்க வந்து நிக்குது பார்த்தீங்களா?”
“செஞ்சுருக்கனும். மைனர் பையன் வேற. தூக்கி போட்டுருந்தா அப்பவே ஜெயில்ல கிடந்து புத்தி வந்துருக்கும்.” என்ற எழிலரசி வினய்யை முறைத்து தள்ளினார்.
“என்ன மேடம் சொல்லுறீங்க?” என்று அசோக் புரியாமல் கேட்க, “அந்த கார் கேஸ் வந்தப்போவே ஜாக்ஷி சொன்ன ஒரே காரணத்துக்காக தான், உங்கள காச மட்டும் கொடுத்துட்டு போக சொல்லி விட்டேன். இல்லனா நடந்துருக்கதே வேற. இப்ப பொம்பள பிள்ளை கிட்ட பிரச்சனை பண்ணிட்டு வந்து நிக்கிறான். ஜாக்ஷி காக தான் இந்த நிமிஷம் வரை எஃப்.ஐ.ஆர் போடாம பேசிட்டு இருக்கேன். என்ன போடட்டுமா?” என்றார்.
மூவருக்கும் சற்று திகிலாக தான் இருந்தது. ஜாக்ஷியின் கை எங்கு வரை நீண்டிருக்கிறது என்று தெளிவாக புரிந்தது.
“அதெல்லாம் வேணாம் மேடம். படிக்கிற பையன். இந்த ஒரு தடவ விடுங்க. அந்த பொண்ணு பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டான்” என்று கெஞ்ச ஆரம்பித்தனர்.
கடைசியாக வினய்யை மிரட்டி. விட்டு வெளியே அனுப்பினர். ஜாக்ஷியும் விடை பெற்று வெளியே வந்தாள்.
“ஏய் நில்லுடி.. உள்ள ரொம்ப தான் பேசுற.. எல்லாம் எங்கம்மாவோட சொத்து கொடுத்த திமிரு தான? ரொம்ப நாள் இது நிலைக்காதுடி.. பார்த்துட்டே இரு”
“ஆஹான். மிரட்டலா? எனக்கும் பண்ண தெரியும். போற வழில எதாவது லாரி வந்து மோதிடாம போ. ஏன்னா எனக்கு ரொம்ப நாளா கொலை பண்ணி பார்க்கனும்னு ஆசை. உன்னை வச்சு டெஸ்ட் பண்ணிட போறேன்”
“ஏய்..”
“சும்மா கத்திட்டே இரு.. புள்ளைய ஒழுங்கா வளர்க்க துப்பில்லனா ஏன் பெக்குற? என்னையும் பெத்ததோட சரி. அவனையும் பெத்ததோட விட்டாச்சு. எனக்காச்சும் பாட்டி இருக்காங்க. அத பாரு தருதலையா வளர்ந்துருக்கு. இன்னொரு தடவ இவன் எதாச்சும் பண்ணானு தெரிஞ்சுதுனு வை.. கிரிமினல் லிஸ்ட்ல உன் புள்ள பேரும் வந்துடும். ஒழுங்கா இருக்க சொல்லு” என்று மிரட்டி விட்டு சென்றாள்.
கார் தூரமாக நின்றிருந்தது. நேராக சென்று ஏறிக் கொள்ள, வீரா காரை எடுத்து விட்டான்.
காதம்பரி அவள் மீது வந்த கோபத்தில், வினய்யை மீண்டும் ஒரு முறை அடித்து விட்டு காரில் ஏறிக் கொண்டார்.
ஜாக்ஷி வந்ததும் வீரா எதுவும் பேசாமல் காரை ஓட்ட, “இங்கயே உட்கார்ந்து இருந்தியா? உள்ள வந்துருக்க வேண்டியது தான?” என்று கேட்டாள்.
“நான் வரும் போது அவங்க வந்துட்டாங்க. அதான் இங்கயே இருந்துட்டேன்”
“எல்லாம் அறிவு கெட்டதுங்க. பிள்ளைய பெத்து வச்சுருக்குங்க பாரு.”
“யாருக்குமே உங்கம்மா நல்ல அம்மா இல்லையா?”
“அது என்ன ஆசைப்பட்டா பிள்ளைய பெத்துச்சு?”
“எதே?”
“விசயம் தெரியாதோ? என் குடும்பத்துல பாட்டிய தவிர, எல்லாமே கழிசடைங்க தான்”
“அடப்பாவமே.. ரெண்டு ஜகதீஸ்வரி மட்டும் நல்வங்களா பொறந்து இவங்க கிட்ட மாட்டிக்கிட்டீங்களா?”
“அதே தான். உனக்கு எல்லாம் தெரிஞ்சா நீயே காரி துப்புவ..”
“அவ்வளவு மோசமா என்ன? எனக்கு தெரிஞ்சு சிற்றம்பலத்து மேல தான் நிறைய தப்புனு தோணுது.”
“அந்தாளும் பெரிய இதுலாம் இல்ல. எங்க தாத்தா.. பணக்காரர் தான். ஆனா எங்க பாட்டிய கல்யாணம் பண்ணி கொஞ்ச நாள்ல, சொத்த பூராம் பறி கொடுத்துட்டாரு. என் பாட்டியோட அப்பா, நம்ம மருமகன் தானேனு பாதி சொத்த தாத்தாவுக்கு கொடுத்துருக்காரு. என் பாட்டிக்கு ஒரு தம்பியும் இருந்தாங்க. இப்ப அந்த ஃபேமிலி இங்க இல்ல.
கொள்ளு தாத்தா .. இவங்க ரெண்டு பேரு கிட்டையும் சொத்த கொடுத்துட்டாரு. அவரு பண்ண பெரிய நல்லது, என் பாட்டிக்கு முழு உரிமையும் கொடுத்தது தான்.
ரெண்டு பேரும் உழைச்ச நேரத்துல தான், இந்த காதம்பரி பிறந்துச்சாம். அப்ப இருந்து பிஸ்னஸ் படுக்கவே இல்லையாம். உடனே தாத்தாவுக்கு மகள் மேல பாசம் பொங்கிருச்சு. மக பெரிய அதிர்ஷ்டக்காரினு தலையில தூக்கி வச்சுட்டு ஆடுனாரு.
நானே பார்த்துருக்கேன். தாத்தா இருக்க வரை, இந்த மகாராணி போட்ட ஆட்டத்தை எல்லாம். ஆனா தாத்தாவுக்கு மகள பிரிய இஷ்டமில்லனு, சிற்றம்பலத்த வீட்டோட மாப்பிள்ளையா கொண்டு வந்தாரு. அங்க ஆரம்பிச்சது பஞ்சாயத்து”
“வீட்டோட மாப்பிள்ளையா இருக்கது அவருக்கு பிடிக்கலயாமா?”
“அதெல்லாம் கிடையாது. காதம்பரி மகராணிக்கு சிற்றம்பலம் வேலைக்காரன பிடிக்கல”
“வாட்?”
“முதல்ல அப்பா சொன்னாரேனு கல்யாணம் பண்ணிடுச்சு. அதுக்கப்புறம் இமேஜ் டேமேஜ் ஆகிடுச்சாம். தினமும் வேலைக்காரன்னு சொல்லும். வார்த்தைக்கு வார்த்தை குத்தி கிழிக்கும். நான் பிறக்கும் போது எதோ காம்ப்ளிகேட் ஆகிடுச்சு போல. அடுத்த பிள்ளைய பெத்துக்க மாட்டேன்னு அடம்பிடிச்சு சிற்றம்பலத்த அசிங்க படுத்தும்.”
“ஓஹோ”
“இந்த வயசுல யோசிக்கும் போது புரியுது. அவங்க நான் பிறந்தப்புறம் வாழவே இல்ல. எல்லாமே சண்டை தான். ஆனா அந்தாளும் பெரிய இது எல்லாம் இல்ல. அந்த மேனகா கூட பல வருசமா கனெக்ஷன் இருந்துருக்கு. ஜானகி தெரியாம உருவாகிருக்கா. இல்லனா ஆறு வருசமா கனெக்ஷன மறைச்ச மாதிரி, கடைசி வரை மறைச்சுருப்பாங்க”
“ஆறா?”
“ம்ம்.. என்னோட மூணு வயசுல இருந்து. யூ நோ.. அப்ப ரெண்டாவது பிள்ளை பேச்சு கூட வரல. அதுக்கு முன்னாடியே இந்தாளு சீட் பண்ண ஆரம்பிச்சுட்டாரு”
“ரொம்ப கேவலமா இருக்கே”
“எனக்கே அப்படித்தான் இருக்கு. மேனகா பிள்ளையோட வந்து நிக்கிற வரை, யாருக்குமே சந்தேகமில்லாம சீட் பண்ணிருக்கான்னா பாரேன்.”
“இதுல யாரையும் குறை சொல்ல முடியாது போல?”
“ஆனா நான் காதம்பரிய கொஞ்சம் மன்னிச்சுடுவேன். அது டைவர்ஸ் வாங்கிட்டு தான் வினய்யை பெத்துச்சு.. இன்னொரு காமெடி என்னனா.. ஜானகி எப்படி வந்தாளோ, அப்படி தான் வினய்யும் வந்துருக்கான்”
“வாட்? எனக்கு அதிர்ச்சில தலை சுத்துது போ”
“ஆமா மேன். வினய் காக தான் அசோக்க கல்யாணம் பண்ணிருக்கு. நானே காம்பிளிகேட்டா தான பிறந்தேன்? வினய்ய அபார்ட் பண்ண முடியல. அசோக்கும் ஏற்கனவே பொண்டாட்டி பிள்ளைய பறி கொடுத்தவரு. அதுனால காதம்பரிய சரி கட்டி கல்யாணம் பண்ணிட்டாரு”
“அவர் மட்டும் தான் உன் வாய்ல மரியாதைய வாங்குறாரு போல?”
“அவரு மேல எனக்கு எந்த கோபமும் இல்ல. சோ மரியாதையா பேசுறேன்” என்று தோளை குலுக்கினாள்.
பேசிக் கொண்டே வீட்டுக்கு வந்து விட்டனர்.
“சரி கோபப்பட்டு டயர்டா இருப்போம். வா சாப்பிடுவோம். சுபத்ரா நமக்காக கருவாட்டு குழம்பு பண்ணிருப்பா”
“நீ என்ன பூனை குட்டியா? கருவாட்டுக்கு அலையுற”
“சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. நானே சமைச்சு சாப்பிட்டு கடுப்பா இருக்கு”
“அப்ப இங்க வந்துடேன்.”
“முதல்ல என் அப்பத்தா கிட்ட பர்மிஷன் வாங்கு. அப்புறம் வர்ரேன்”
“நாம பாட்டிக்கு இன்னும் சொல்லவே இல்ல?”
“நாளைக்கு நேர்ல போய் சொல்லுவோம்.”
சுபத்ரா ஓடி வந்து நிற்க, “சாப்பாட வை. ஃப்ரஸ்ஸாகிட்டு வர்ரோம்” என்ற ஜாக்ஷி, வீராவை அவளுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள்.
அறையை பார்த்த நொடி, வீரா சிரித்து விட்டான்.
“இத பார்த்தா ஒரு பொண்ணு தங்குற ரூம்னு நம்பவே முடியாது. என்ன இது?”
“எனக்கு இதான் வசதி. எதையும் தொடாத. எங்க வச்சேன்னு அப்புறம் மறந்துடுவேன்” என்றவள் முகம் கழுவ சென்று விட்டாள்.
வீரா அறையை பார்த்தான். மொத்தமாய் கலைந்து கிடந்தது. அலங்கார பொருட்கள் சுத்தமாக இருந்தது. சுபத்ரா அதை மட்டும் துடைத்து வைப்பாள் போலும். மற்ற இடமெல்லாம் ஃபைல்கள் குவிந்து கிடந்தது. போதாத குறைக்கு புத்தகங்கள் ஒரு பக்கம் மலை போல இருந்தது.
அங்காங்கே துணிகள் வேறு. துவைத்த துணிகள் மட்டும் அலமாரியில் தூங்கியது.
‘இப்படி கலைஞ்சு கிடைக்குறதுல எதை தேடுவா?’ என்று குழம்பிப்போய் நின்றான்.
முகத்தை கழுவி விட்டு வந்தவள், அவனையும் போகச் சொன்னாள். அவன் வரும் வரை கைபேசியை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
வெளியே வந்தவன் கண்ணில் விழுந்தது அந்த துண்டு. ஜாக்ஷி துடைத்து விட்டு, நாற்காலியின் மீது போட்டு வைத்திருந்தாள்.
“இத எடுத்து அங்க போடலாம்ல?”
“அத சுபத்ரா பார்த்துப்பா.. வா சாப்பிடலாம்”
“நோ இத போடு.. அப்புறம் போகலாம்”
“போடலனா?” என்று ஜாக்ஷி இடுப்பில் கைவைத்து கேட்க, அவள் கையை பிடித்து இழுத்தவன், துண்டை எடுத்து அவள் கையிலேயே திணித்தான்.
அவள் முறைக்க, இழுத்துக் கொண்டு சென்று பால்கனி கதவை திறந்து விட்டான்.
“போடு”
“மாட்டேன்”
அவளைத் திருப்பி பின்புறமிருந்து கையை பிடித்தவன், அவள் கையாலேயே காயப்போட்டான்.
“ஈரத்தோட இருந்தா துணில ஸ்மெல் வரும் ஜக்கம்மா” என்று காதோரம் சொல்ல, “என்னை எதுக்கு இப்ப கட்டி பிடிச்சுருக்க?” என்று கேட்டு வைத்தாள்.
மென்மையாய் அணைத்திருந்தவன், அவளது கேள்வியில் இறுக்கமாக வயிற்றோடு அணைத்துக் கொண்டான். ஜாக்ஷிக்கு பதட்டம் கூடியது. எவ்வளவு நேரம் தான் பாதிப்பை காட்டாமல் நடிக்க முடியும்?
“கட்டி பிடிச்சா கோச்சுப்பியா என்ன?”
பதில் சொல்ல அவள் போராடிக் கொண்டிருக்க, “இதுக்கே கோச்சுட்டா எப்படி? லிவ் இன்க்கு அர்த்தம் தெரியாத குழந்தையா நீ?” என்று ரகசியமாக கேட்டு வைத்தான்.
அவசரமாக அவன் கையை விளக்கியவள், தள்ளி நின்று முறைத்தாள்.
“இதுக்கே சிவந்துட்ட? ஜக்கம்மா? வீரமெல்லாம் பேச்சுல மட்டும் தானா?”
“ஹலோ.. முதல் தடவ ஒரு பையன் கட்டி பிடிச்சா லைட்டா ஜெர்க் ஆக தான் செய்யும்”
“நானும் தான் முதல் தடவ ஒரு பொண்ண கட்டி பிடிக்கிறேன். எனக்கு ஒன்னும் தோணல.. பாரு நல்லா தான் இருக்கேன்.”
புருவம் உயர்த்தி கேட்டு அவளை வம்பிழுக்க, சட்டென அவனை கட்டிப்பிடித்து நாடியை அவன் நெஞ்சில் பதித்து, அவனை பார்த்து புருவம் உயர்த்தி புன்னகைத்து வைத்தாள்.
வீரா அதிர்ந்து நிற்க, “என்ன கட்டபொம்மனுக்கு மூச்சையும் காணோம் பேச்சையும் காணோம்?” என்று கேட்க, எச்சிலை விழுங்கிக் கொண்டான்.
“ஓகே.. இந்த விளையாட்டு டேஞ்சர் தான். வா கீழ ஓடிருவோம்” என்று அவளை பிரித்து இழுத்துக் கொண்டு, வெளியே வந்து விட்டான்.
சிரித்தபடி அவன் இழுப்புக்கு வந்தாள்.
கீழே சுபத்ரா மூவரும் சாப்பிட தட்டை வைத்து விட்டு காத்திருக்க, இருவரும் புன்னகை முகமாக வந்து சேர்ந்தனர்.
சுபத்ரா இருவரையும் குறுகுறுவென பார்த்து வைத்தாள்.
“ரொம்ப பார்க்காத.. இனி இவரு இங்க இருக்க போறாரு”
“இந்த நிமிஷத்துல இருந்து, நான் உங்க ஜக்கம்மாவோட… என்ன சொல்லட்டும்?”
“ம்ம்.. கருவாட்டுக்கு குழம்புக்கு ஆசைப்பட்டு, வாழ்க்கைய என் கிட்ட வித்த பூனைனு சொல்லு”
“அப்படி தான் சொல்லனும் போல. ஏன்னா நீ தான் லவ் பண்ணுறனு சொல்லவே இல்லையே”
“நீயும் தான் சொல்லல”
“நான் சொன்னா நீ சொல்லுவியா?”
“அதெல்லாம் வாங்குறது அவ்வளவு ஈசி இல்ல மேன்”
“வாங்குறத விட வேற என்ன வேலை மை லேடி?”
இருவரும் பேசிக் கொண்டிருக்க, சுபத்ரா அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்து ஜாக்ஷியை பார்த்தாள்
ஜாக்ஷி அவளை பார்த்து பெருமூச்சு விட்டு சம்மதமாக தலையாட்ட, உடனே கட்டி பிடித்துக் கொண்டாள்.
“பார்ரா.. ஜக்கம்மாவ கட்டி பிடிக்க பர்மிஷன் வாங்குவியா?” என்று வீரா கேட்க, ஜாக்ஷி அவனை ரகசியமாக முறைத்து வைத்தாள்.
“இவளுக்கு வாழ்த்தனும்னா கட்டி பிடிக்கனும். எனக்கு அது பிடிக்காது. பிறந்தநாள்க்கு மட்டும் கட்டி பிடிச்சுப்பா. இப்ப நம்மல வாழ்த்துறாளாம்”
சுபத்ரா வீராவுக்கு கை கொடுக்க, “அட என்னமா? நீ எனக்கு தங்கச்சி மாதிரி தான்” என்றவன் அவளை தோளோடு அணைத்து விடுத்தான்.
“உனக்கு இனிமே நான் தான் அண்ணன் ஓகே?”
சுபத்ரா தலையாட்டி விட்டு எதோ பேச, “எல்லா கதையும் சொல்லுறேன். இப்ப பசிக்குது” என்றாள் ஜாக்ஷி முறைப்புடன்.
உடனே சுபத்ரா பரிமாற ஓடினாள்.
“ஓ.. பிடிக்காதா?” என்று வீரா ரகசியமாக கேட்க, “ஆமா பிடிக்காது” என்றாள்.
“ஆனா நீ என்னை கட்டி…”
“சோறு வேணுமா? வேணாமா?”
“வேணும்” என்றவன் அதற்கு மேல் நிற்காமல் ஓடிச் சென்று அமர்ந்து விட, ஜாக்ஷி அவனருகே அமர்ந்து கொண்டாள்.
மூவரும் சுபத்ராவின் கைமணத்தை முகர்ந்து சந்தோசமாக சாப்பிட ஆரம்பித்தனர்.
தொடரும்.
ஆஹா… இது என்ன தன் குடும்பத்தை பத்தி கதைகதையா அளந்துட்டு, ஜாசஷியோட அம்மா அப்பத தாலி கட்டி ஆளுக்கொரு ஸ்டெப்னி வைச்சுக்கிட்டு
திருட்டுத்தனமா பிள்ளையையும் பெத்துக்கிட்டு
திருமண வாழ்க்கையையே நாறடிச்சிட்டாங்கன்னா…
அதே ரூட்டைத்தானே இவங்க தாலி கட்டாம செய்யப் போறாங்க. அதுக்கும் இதுக்கும் ஒண்ணும் வித்தியாசமில்லையே…?
ஒருவேளை சரித்திரம் திரும்பப் போகுதோ…???
😀😀😀
CRVS (or) CRVS 2797
குடும்பமா இது. வீரா ஜாக்ஷி சுண்டல் செம