ஜாக்ஷி ஜகதீஸ்வரியின் முகத்தைப் பார்த்தாள்.
“இப்ப என்ன பாட்டி பண்ணலாம்?”
“எதுவும் பண்ண வேணாம்”
“வாட்?”
“நான் பெத்ததுக்கு அறிவே இல்ல. இப்படி கேஸ் போட்டா? உடனே கோர்ட்ல ஜட்ஜ்மெண்ட் வந்துடுமா? எப்ப தான் இவளுக்கு அறிவு வர போகுதோ?” என்று சலித்துக் கொண்டார்.
தன் தாயின் சொத்துக்கள் தனக்குத்தான் வேண்டும் என்று கேட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வக்கீலிடம் பேசி இருக்கிறார் காதம்பரி. அது ஜாக்ஷியின் காதுக்கு வர, பாட்டியை தேடி வந்து விட்டாள்.
“ஊருக்குள்ள ஜட்ஜ்க்கு வேற வேலை இல்லையா? ஊர்ல எவ்வளவோ கேஸுங்க பெண்டிங் கிடக்கு. இவ ஈகோக்கு உடனே தீர்ப்பு வந்துடுமா? இழுத்தடிக்கலாம். வக்கீலுக்கு பணத்த கட்டி அழட்டும்”
“நம்ம பக்கமும் செலவு தான?”
“நம்ம வக்கீல் தான? பண்ணிக்கலாம். அவளுக்கு நகைய கொடுக்க விருப்பமில்ல. அதான் இத்தனையும் செய்யுறா”
“அது உங்க அம்மா நகைங்க தான பாட்டி? அத ஏன் அவங்க கிட்ட விட்டிங்க?”
“பெத்த மகளாச்சேனு கொடுத்தேன். இப்ப அத உனக்கு கொடுக்கலாம்னா தூக்கி வச்சுக்கிட்டா”
“ஆனா மேனகா கொடுத்துட்டாங்க”
“புருஷன் சொன்னத செஞ்சுருக்கா. அவளுக்கும் நகைய விட மனசில்ல தான். எல்லாம் வைரமும் கல்லும் பதிச்சது ஆச்சே”
“எப்படியோ.. உங்க மகள நீங்க சமாளிங்க. அப்படி முடியலனா என் கிட்ட விடுங்க”
“என்ன செய்வ?”
“அவங்க இன்னாள் கணவனோட பிஸ்னஸ தரை மட்டமாக்கி விட்டுருவேன்”
“அடிப்பாவி! ஏன்?”
“நான் எப்ப வேலையில சேர்ந்தேனோ, அப்ப இருந்தே உங்க மகளையும் மருமகனையும் எதாவது செஞ்சு விடனும்னு தான் ஆசை. உங்களுக்காக அமைதியா போனேன். ஒருத்தரு எஸ்கேப். உங்க மக மாட்டுனா அவ்வளவு தான்”
“நீ எதுவும் பண்ண வேணாம். நானே பார்த்துக்குறேன்”
“ஓகே. காலையில நியூஸ் வந்ததுல இருந்து யோசிச்சு தலை வலியே வந்துடுச்சு” என்று தலையை பிடிக்க கதவு தட்டும் சத்தம் கேட்டது.
“அம்மா” என்று சமையல்கார பெண் குரல் கேட்க, “உள்ள வா” என்று குரல் கொடுத்தார்.
“காபி” என்று ஜாக்ஷியிடம் நீட்ட, புருவம் உயர்த்தினாள்.
“யார் சொன்னா?”
“வீரா சார்”
“போ” என்று எடுத்துக் கொண்டு அனுப்பி விட்டாள்.
“அவங்க ரெண்டு பேரும் எங்க?”
“வெளிய தான் நான் வரும் போது பேசிட்டு இருந்தாங்க”
“அந்த ஃப்ளாட் ரிஜிஸ்டரேஷன் முடிஞ்சுடுச்சு.”
“ஓஹோ”
பேசிக் கொண்டே இருவரும் வெளியே வந்தனர்.
லட்சுமியும் வீராவும் திரும்பிப் பார்த்தனர்.
“ஃப்ளாட் வேலை முடிஞ்சதாமா?” என்று கேட்ட ஜாக்ஷி, காபியை குடித்தபடி சோபாவில் அமர்ந்தாள்.
“ம்ம்.. இனி ஷிஃப்ட்டிங் தான்” என்றவன் அவள் முகத்தை பார்த்தான். வரும் போது இருந்த கோபம் இப்போது இல்லை.
“வீட்டுக்கு பெயிண்ட் அடிச்சுட்டு போகலாம்னு சொல்லுறேன். இவன் எதுக்கு வீண் செலவுனு சொல்லுறான்?” என்று லட்சுமி சொல்ல, “நான் மட்டும் தான தங்க போறேன். எதுக்கு தேவையில்லாம பெயிண்ட்?” என்றான் அவன்.
“நீ சொல்லுறதும் சரி தான். லட்சுமி சொல்லுறதும் சரி தான். ஆனா நீ சொல்லுறது வாடகைக்கு தங்குனா பண்ணலாம். சொந்தமா வாங்கி இருக்க. நல்லபடியா பெயிண்ட் அடிச்சு பால்காய்ச்சி போறது தான் நல்லது.” என்றார் ஜகதீஷ்வரி.
“அத தான் நானும் சொல்லுறேன். நீ உன் வேலைய பாரு. பெயிண்ட் அடிக்குற வேலைய நான் பார்த்துக்கிறேன்” என்றார் லட்சுமி.
“பால்காய்ச்சுனா நீங்க வருவீங்களா மேடம்?” என்று ஜாக்ஷியை கேட்க, “டேட் சொல்லுங்க” என்றாள் புன்னகையுடன்.
“முடிச்சதும் சொல்லுறேன்” என்று விட்டான்.
பேசி விட்டு ஜாக்ஷி கிளம்ப, “இங்கயே இருக்கலாம்ல?” என்றார் லட்சுமி.
“இல்ல பாட்டி.. வேலை இருக்கு”
“சாப்பிட்டாவது போ”
“அங்க எனக்கு சுபத்ரா செஞ்சு வச்சுருப்பா..”
“தனியாவே இருந்து என்ன தான் செய்ய போற நீ?”
“தனியா இருந்தா தைரியமா இருப்பேன்” என்று புன்னகையுடன் சொல்லி விட்டுச் சென்று விட்டாள்.
“அவள விடு லட்சுமி. அவளுக்கு தனியா இருக்கது தான் பிடிக்கும். என் மேல தான் தப்பு. அவள தனியா விட்டே பழக்கிட்டேன்” என்று ஜகதீஷ்வரி சொல்ல, “அவங்கள நீங்க கூடவே வச்சுருக்கலாமே.. தனியா போக விட்டுட்டு நீங்களும் தனியா இருக்கீங்க” என்றான் வீரா.
“அவள இப்படி மாத்துனதே நான் தான். என் மகளும் மருமகனும், தினமும் சண்டை போட்டாங்க. அப்ப அவளுக்கு ஒன்பது வயசு தான். சண்டைய பார்த்துட்டு யாருக்கும் சொல்லாம ஓரமா உட்கார்ந்து அழுவா. பெரியவங்க சண்டையில இவ கஷ்டப்படுறது பிடிக்காம, காண்வன்ட்ல சேர்த்து விட்டுட்டேன். டைவர்ஸ் கேஸ் கோர்ட்ல வந்துச்சு. கஷ்டடி பத்தி கேட்டப்போ.. ரெண்டு பேருமே ஜாக்ஷிய வேணாம்னு சொல்லிட்டாங்க.”
“வாட்? ஏன்?”
“அந்தாளு பிள்ளைய நான் வளர்க்க மாட்டேன்னு இவளும்.. எனக்கு வேற குடும்பம் வந்துடுச்சு, அதுனால ஜாக்ஷி வேணாம்னு அவனும் சொல்லிருக்காங்க”
“அடப்பாவிங்களா! மனுசங்களா இதுங்க” என்று லட்சுமி கோபப்பட, “மேனகா ஜாக்ஷிய வாங்க கூடாதுனு சொல்லிருக்கா. காதம்பரியும் புள்ளை வேணாம்னு சொல்லுறா.. இதெல்லாம் இங்க இருந்து ஜாக்ஷி கேட்டுருந்தா? நல்ல வேளை அவள கான்வன்ட்ல சேர்த்தேன்னு நிம்மதியா இருந்தேன்” என்று பெருமூச்சு விட்டார் ஜகதீஸ்வரி.
“அப்போ ஜாக்ஷியோட கஷ்டடி உங்களுக்கு கொடுத்துட்டாங்களா?”
“இல்ல. அவ சின்ன புள்ளைங்கிறதால அம்மா தான் பதினெட்டு வயசு வரை பார்க்கனும்னு தீர்ப்பு சொல்லிட்டாங்க. ஆனா காதம்பரிக்கு ஜாக்ஷிய சுத்தமா பிடிக்கல. இவங்க டைவர்ஸ் பத்தி தெரிஞ்சப்போ, ஜாக்ஷி ஒன்னுமே பேசல. அமைதியா இருந்தா. அதுக்கப்புறம் அம்மானு அவ காதம்பரிய கூப்பிடவே இல்ல. அவளும் இவள கண்டுக்கல”
“என்ன பிள்ளைய வளர்த்தியோ.. உன்னை தான் திட்டனும்” என்று லட்சுமி ஜகதீஸ்வரியை திட்டினார்.
“ஆமா.. ஒழுங்கா வளர்க்காம விட்டேன். அதுக்கு தான் தண்டனையும் கிடைச்சுடுச்சு. கடைசி வரை தனியாவே வாழனும்னு” என்று பெருமூச்சு விட்டவர் அவரே தொடர்ந்தார்.
“ஸ்கூல் முடிக்கிற வரைக்கும், ஜாக்ஷி வீட்டுக்கு வரல. அங்கயே தான் இருந்தா. நான் பெத்தது.. கொஞ்ச நாள்லயே ஊர் சுத்த ஆரம்பிச்சுடுச்சு. திடீர்னு வந்து ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லுச்சு. சரி நல்லவனா இருந்தா பண்ணிக்கனு சொன்னேன்.
ஆனா அது.. நான் அவன கல்யாணம் பண்ணதும், ஜாக்ஷியோட அப்பாவ ஆஃபிஸ விட்டு துரத்திட்டு, அவள தூக்கி உட்கார வைக்கனும்னு சொன்னா. முடியாதுனு சொல்லிட்டேன். எவ்வளவு பெரிய துரோகத்த சிற்றம்பலம் பண்ணிருந்தாலும் வேலையில கெட்டி.
துரத்த முடியாதுனு சொன்னதும், வீட்ட விட்டு போயிட்டா. கொஞ்ச நாள் கழிச்சு மாசமா இருக்கேன்னு வந்தா. கல்யாணம் பண்ணிட்டேன்னு சொன்னா. பிள்ளை பிறந்ததும் காட்டுறதுக்கு மறுபடியும் வந்தா. இவன் தான் இந்த வீட்டு வாரிசு.. சொத்து இவனுக்கு தான்னு நிறைய பேசுனா. அப்புறம் மறுபடியும் போயிட்டா.
அப்ப அப்ப வருவா. ஜாக்ஷி ஸ்கூல் முடிச்சு காலேஜ் சேரும் போது, பக்கத்துலயே வச்சுக்கனும்னு தான் எனக்கு ஆசை. ஆனா அவளுக்கு பிடிக்கல. வெளிநாட்டுல படிக்க ஆசைப்பட்டானு அனுப்பி வச்சுட்டேன். படிச்சு முடிச்சு திரும்பி வந்தவள, ஆஃபிஸ பார்க்க சொன்னேன். மறு பேச்சில்லாம பார்த்துட்டு இருக்கா.
அந்த வயசுல தனியா இருந்தது, இப்ப வரை தனியா இருக்க தான் ஆசைப்படுறா. அவள மீறி அவ கிட்ட போகவும் முடியாது. என்ன நினைக்கிறா? அவளுக்கு என்ன வேணும்? எதுவுமே என் கிட்ட சொன்னது இல்ல. அவளோட ஃப்ரண்டுங்க கூட யாரும் கிடையாது. ஃபாரின்ல ரெண்டு ஃப்ரண்டுங்க இருந்தாங்க. ஆனா அவங்கள பத்தியும் எனக்குத் தெரியாது. தனியா இருந்தா தைரியமா இருக்கு பாட்டினு சொல்லி தான், அந்த வீட்ட வாங்கிட்டு அங்கயே போயிட்டா”
அவர் ஜாக்ஷியை பற்றி சொல்லிக் கொண்டே போக, வீராவின் மனதில் அனைத்தும் பதிந்தது.
‘என்னை மாதிரியே வாழ்ந்துருக்கா’ என்று நினைத்துக் கொண்டான்.
அந்த நினைப்பு, அவள் மீது புது சொந்தத்தை உருவாக்க ஆரம்பித்தது.
*.*.*.*.*.*.
காதம்பரி கோபமாக கைபேசியை தூக்கி போட்டு விட்டு, வீட்டில் குறுக்கும் நெடுக்கும் நடந்தார்.
“என்னமா டென்சனா இருக்கீங்க?” என்று கேட்டபடி உள்ளே வந்தான் வினய்.
“எல்லாம் நான் பெத்து வச்சுருக்கது தான். அப்படியே அப்பன போல துரோகியா வந்து பிறந்துருக்கா” என்று பல்லைக் கடித்தவர், “நீ எங்கடா போயிட்டு வர்ர?” என்று கேட்டார்.
“ஃப்ரண்ட்ட பார்த்துட்டு வர்ரேன்மா”
“எப்பவும் ஃப்ரண்டு தானா? ஒழுங்கா படிக்கிற வேலைய பாருடா” என்று அதட்டி அனுப்பி வைத்தார்.
அசோக்கின் முதல் மனைவியும் குழந்தையும் ஒன்றாகவே இறந்து விட்டனர். அதனால் அவர் தனிமையில் இருக்க, காதம்பரியும் விவாகரத்து வாங்கி இருக்க, இருவருக்குள்ளும் அன்பு மலர்ந்தது.
திருமணமும் செய்து கொண்டனர். வினய் பிறந்து விட்டான். அசோக் காதம்பரியை நன்றாக தான் பார்த்துக் கொண்டார். காதம்பரியை போல் பணக்காரர் இல்லை என்றாலும், ஏழையும் இல்லை.
அதனால் வாழ்க்கை நன்றாகத்தான் சென்றது. காதம்பரிக்கு மட்டும் தாயின் சொத்தை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்று ஆசை. அதற்கு குறுக்கே வந்து நிற்கிறாள் பெற்ற மகள்.
இப்போது வழக்கு தொடுக்க பார்த்தால், வக்கீல் பேசலாம் என்று மழுப்ப தான் பார்க்கிறார். பணம் மட்டும் கேட்கிறார். வேலை நடந்தபாடில்லை.
சிற்றம்பலம் இறந்து ஒரு மாதமாக போகிறது. உயிலையும் படித்தாயிற்று. காதம்பரிக்காக அவர் கொடுத்த கடிதம் கூட, படித்து எரித்து விட்டார். சொத்து பிரச்சனை மட்டும் தீர்ந்தபாடில்லை.
அன்று அசோக்கோ வினய்யோ உயிலை படிக்கும் போது உடன் வரவில்லை. அவர்கள் வெளியாட்கள். அனுமதி இல்லை.
தன்னை பற்றி எதுவும் உயிலில் இருக்கப்போவது இல்லை என்று காதம்பரி நினைத்திருக்க, அவருக்காக ஒரு கடிதம் இருந்தது.
‘என்ன மன்னிப்பு கடிதமா?’ என்று அலட்சியமாகத்தான் வாங்கினார்.
வீட்டை விட்டு கிளம்பியதும், சாலையில் காரை நிறுத்திப் படித்தார். படித்ததும் கோபம் கோபமாக வந்தது.
காதம்பரிக்கும் சிற்றம்பலத்துக்கும் மட்டும் தெரிந்த விசயங்களை குறிப்பிட்டிருந்தார். இதை அவர் அசோக்கிடம் கூட சொன்னது இல்லை.
அதே இடத்தில் வைத்து கொழுத்தி, அந்த காகிதம் முழுவதும் கருகிய பிறகே நிம்மதியாக இருந்தது.
கடிதத்தில் இருந்த வார்த்தைகள் எல்லாம், இன்னும் தலைக்குள் சுற்றியது.
ஜாக்ஷி பிரசவம் மறுபிறவி தான் காதம்பரிக்கு. அதனால் அவள் பிறந்ததிலிருந்தது காதம்பரி கணவனை ஒதுக்கி தள்ளினார். அன்பாய் பேசவும் அரவணைக்கவும் அவர் தயாராக இருந்த போதும், காதம்பரிக்கு அது பிடிக்கவே இல்லை.
இரண்டு வருடங்கள் கழித்து பெற்றோர்கள் அடுத்த குழந்தையை பற்றிப்பேச, அவருக்குக் கோபம் தான் வந்தது. வேலைக்காரனுக்கு வாரிசு பெற்று போட முடியாது என்று அவமானபடுத்தி இருந்தார். அதெல்லாம் ஒரு நாள் ஒரு மாதங்கள் நடக்கவில்லை.
வருடக்கணக்கில் நடந்தது. ஜகதீஸ்வரிக்கே தெரியாமல், அவர்களுக்குள் சண்டை நடந்து கொண்டிருந்து.
சிற்றம்பலத்திற்கும் ஈகோ காயப் பட, மனைவியை விட்டு மேனகா பக்கம் திரும்பி விட்டார். ஜாக்ஷியை பார்த்து கூட குற்ற உணர்வு வரவில்லை அவருக்கு. மனைவியின் மீதி கொண்ட கோபம். தவறு என்று தெரிந்தே செய்தார். அதற்கான தண்டனையும் கிடைத்து தான் இறந்தார்.
கணவன் தன்னை ஏமாற்றி விட்டான் என்று காதம்பரி குதித்தாலும், உண்மை அவர்களுக்கு தான் தெரியும். இருவருமே சமபங்கு தவறாக தான் இருந்தனர்.
திருமணம் முறிந்து ஆளுக்கொரு வாழ்வு வாழ்ந்த பின்பும், எதையும் இருவரும் மறக்கவே இல்லை. தவறு இருபக்கமும் இருந்ததால், சிற்றம்பலம் மன்னிப்பு கேட்கவில்லை. ஆனால், நான் ஜாக்ஷியை கை கழுவியதற்கான தண்டனையை நான் அனுபவிக்கிறேன். நீயும் அனுபவிப்பதற்குள், மகளை ஏற்றுக்கொள் என்று கேட்டு வைத்திருந்தார்.
அதைக்கண்டு தான் காதம்பரிக்கு கோபம் வந்தது.
‘உன் மகள நான் ஏன்டா ஏத்துக்கனும்? அவ எனக்கு எப்பவுமே வேண்டாதவ. வேலைக்காரன் பெத்த புள்ளைக்கு மொத்த சொத்தும் போகுமா? எப்படி போகுதுனு பார்க்குறேன்’ என்று வன்மத்தை வளர்த்துக் கொண்டார்.
விதி வைத்திருக்கும் விளையாட்டை அறியாமல்!
தொடரும்.
இந்த நிர்வாகத்திறமை, திட்டமிடுதல், வழிநடத்துதல் எல்லாமே ஜகதீஷ்வரி பாட்டி கிட்ட இருந்து ஜாசஷிக்கு வந்திருக்குன்னு தோணுது.
😀😀😀
CRVS (or) CRVS 2797