Loading

                நெஞ்சத்தில் தஞ்சமானவளே -03

 

ஆரண்யாவிடம் பேசி விட்ட மகிழ்ச்சியில் முகில் ராகவ் கொடுத்த மாத்திரையை போட்டு விட்டு படுக்க ராகவ் கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்தான்.

“என்னடா மாத்திரை சாப்பிட்டியா … தலைவலி விட்டுச்சா ஹாஸ்பிடல் போகலாமா…??” அக்கறையாக வினவினான் ராகவ். 

“ம்ம்ம் இப்போ பரவாயில்லை டா !!”என்றவன் மீண்டும் படுக்க ராகவோ.,”  அப்புறம் ஏன் டா படுக்கிற  நீ எழுந்திரு ஹாஸ்பிடல் போகலாம் “என்க 

“டேய் ஏன் டா  என்னை விட்டுடு நான் பாவம் …..ஆமா  நீ ஊருக்கு எப்ப போற…. ??”

“அடுத்த வாரம் போகலாம் னு நினைக்கிறேன்….  ஆனால்  அந்த காசையும் சேர்த்து அனுப்பிட்டு பேசாமல் இங்கேயே இருந்திடலாம் னு தோணுது… !!” சலித்தபடி அமர்ந்தான் ராகவ். 

“ஏன் டா…. ??”

“இல்லடா அம்மா ஊருக்கு போனாலே கல்யாணம் கல்யாணம் னு சொல்லி கடுப்பேத்துறாங்க….  அதனாலேயே  போற மைன்ட் செட் இல்ல “

“அடப்பாவி…  இதுக்கு போய் போகாம இருப்பியா… ஆமா கல்யாணம் பண்ணிக்கிறதில்  உனக்கு என்ன பிரச்னை…. ??”

“என் குடும்பம் பத்தி தெரிஞ்சும் கேட்குறியே….  முதல் பிரச்சினை கடன்…  நான் சம்பாதிக்கிற சம்பாத்தியத்துக்கு….  இன்னும்  அஞ்சு வருஷம் ஆகும் கடனை பாதி அடைக்க…..  அடுத்து அப்பன்…..  பையன் நல்லவனா இருந்தா மட்டும் போதாது….  அப்பாவும் நல்லவரா குடிக்காம இருக்கனும் அப்ப தான் நம்பி பொண்ணு தருவாங்க….  அதுலயும் என் அப்பா….  கேட்க வேண்டாம்…. உள்ள தண்ணி போச்சுனா அவர் வாயிலிருந்து வர்றது பூராம் அருமையான சொல்லா தான் இருக்கும்….  தெருவே ரெண்டு படும்….  அப்புறம் அக்கா….   அக்காவுக்கு கல்யாணம் பண்ணி…  அவ வீட்டுக்கு வரும் போது எல்லாம் எதையாவது கேட்டு தான் வருவா…. பாவம் அவளை சொல்லியும் தப்பு இல்ல….  அவளுக்கு அப்படி பிரச்னை….  அடுத்து தங்கச்சி….  நல்லா படிக்கிற பிள்ளையை நல்ல கோர்ஸ் ல கூட சேர்க்க வழி இல்லை…..  போன வருஷம் பதினோராம் வகுப்பில் அவ தான்  ஸ்கூல் பர்ஸ்ட்… இந்த வருஷம் டுவெல்ப்த் போறா….  நல்ல மார்க் எடுக்க வேண்டாம் னு வேண்டிகிட்டு இருக்கேன்….  இந்த படிக்கிற பிள்ளைங்க பூராம் எதுக்கு தான் இல்லாத வீட்டில் பொறக்குதுகளோ …. பாவம் அதுக ஆசையை கூட நிறைவேத்திக்க முடியலை….  இவ்வளவு பிரச்சினை வச்சுகிட்டு எனக்கு இப்ப கல்யாணம் அவசியமா சொல்லு…..  அதை பத்தின நினைப்பு கூட வர மாட்டேங்கிது டா…..  “என்றான் கவலையாக

“இவ்வளவு கவலை வச்சுட்டு எப்படி டா சாதாரணமாக இருக்க…..  நான் எல்லாம் எங்கேயாவது ஓடிடுவேன்….. ” என்றான் முகில். 

“இதெல்லாம் பழகி போன ஒண்ணு டா….  சரி விடு என் கதை ரொம்ப போர் அடிக்கும் நீ சொல்லு மச்சி உன் ஃபேமிலி பத்தி ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிற…. ஏன் டா என் மேல நம்பிக்கை இல்லையா.??”

“அடச்சீ அதெல்லாம் இல்ல டா….  சீக்கிரம் சொல்லிடுறேன் டா…. சொல்றது என்ன அவங்களை சீக்கிரம் எல்லாருக்கும் அறிமுகப் படுத்தி வைக்கிறேன்…  நீ முதல்ல ஊருக்கு கிளம்பு “எனும் போதே  ராகவிற்கு ஃபோன் வந்தது.

“இதோ அம்மா தான்… பேசிட்டு வரேன்….”என்றவன் சிறிது நேரம் கழித்து முகிலிடம்  ஃபோனை கொடுத்து.,” அம்மா பேசனுமாம் பேசு” என்றான் ..

சிறிது நலம் விசாரிப்புகளுக்கு பிறகு முகிலை கண்டிப்பாக  திருவிழாவிற்கு வீட்டிற்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.   

“ம்ம்ம்ஹ்ம் சரி மா வரேன்” என வைத்தவன்…..  ராகவ்  நான் எப்படி டா வர்றது….?? அது வந்து  ….!!”

“டேய்…. அம்மா உன்னை பார்த்தே ஆகனும் னு சொல்றாங்க நீ வர அவ்வளவு தான்…. “

“டேய் ஆபிஸ் இருக்கு மறந்துட்டியா…  நான்  லீவ் போட முடியாது டா…. . “

“ப்ப்ச்….  மேனேஜர் கிட்ட நான் பேசுறேன்….  நீ முதல்ல ஓகே சொல்லு….  இல்லாட்டி நான் உன் கிட்ட பேச மாட்டேன்… “

“சரி… எனக்கு காலையில வரைக்கும் டைம் குடு…  நான் யோசித்து சொல்றேன் சரியா…. ப்ளீஸ் டா…. “என சமாளித்தான்.

“சரி பொழைச்சு போ” என்றிட முகில் மென்மையாக புன்னகைத்து கொண்டான்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

ஆருவையும் தீருவையும் பாத்திரம் விளக்க அவர்களது அம்மா சொல்லிட

தீர்த்தன்யாவோ  “நான் விளக்குறேன் நீ கழுவி போடு…. ” என வேக வேகமாக ஒன்றிரண்டாக விளக்கி விட்டு சென்று விட ஆரண்யா  மீண்டும் ஒரு முறை சுத்தமாக விளக்கி கழுவினாள்.

“ஏன் டி மறுபடியும் ஏமாத்திட்டு போயிட்டாளா அந்த திருட்டு கழுதை….  அவங்க தாத்தா கிட்ட சொன்னா தான் அடங்குவா…. ” கனகம் கோபம் கொண்டார். 

“ம்மா…. விடும்மா நான் தான் கழுவுறேனே அப்புறம் என்ன….??”  

“நீ இப்படியே பேசிட்டு இரு…..  ஒரு நாளைக்கு உனக்கு பார்த்தவனை அவ கட்டிக்கிட்டு… உன் தலையில் மொளகா அரைக்க போறா… “

“அப்படி செஞ்சான்னா…. நான்  விட்டு கொடுத்துட்டு உன் கூடவே இருந்துப்பேன்…. “என செல்லம் கொஞ்ச…. “ம்ம்க்கும் அப்படியே உன் தாத்தா விட்டுடுவாரு அதெல்லாம் உனக்கு மாப்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்…. “

“ம்மா… போம் மா இப்ப எல்லாம் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது….  பரிதி அண்ணனுக்கு கல்யாணம் ஆன பிறகு தான் பண்ணிப்பேன்… நீங்க வேணுன்னா அவளுக்கு பாருங்க….  “

“சரி சரி அந்த பேச்சை எல்லாம் விடு….  அடுத்த வாரம் அம்மாச்சி ஊரு ல திருவிழா வருது…..  அதுக்கு இப்பவே உன் தாத்தா கிட்ட கேளுங்க அப்போதைக்கு கேட்டா விட மாட்டார்கள் ……. “

“ஆமா நான் கேட்டதும் போயிட்டு வா பேத்தி னு அனுப்பிட போறார் போம்மா….  அண்ணனை விட்டு கேளுங்க….  அதுவும் இல்லாமல் எனக்கு லீவ் தர்றாங்களோ என்னவோ….  ??”

“சரி அவன் வரட்டும் என்னைக்கு என் அம்மா வீட்டிற்கு போராட்டம் பண்ணாம போயிருக்கேன் இப்ப போக….  நீ போய்  வேலையைப் பாரு….  அப்படியே இந்த செல்லை சார்ஜ் போடு …. “என்றதும் வாங்கி கொண்டு சென்றாள்.

தீர்த்தன்யா அறைக்குள் டான்ஸ் ஆடி கொண்டிருந்தாள் சத்தமின்றி…

உள்ளே….  சன் மியூசிக்கில்…. 

“மல மல மல …..” என்று மும்தாஜும்  ஜெயாரே வும் ஆட தீர்த்தன்யா அவளுக்கு ஏற்றவாறு ஆடி கொண்டிருக்க….  ஆரண்யா பயந்தபடி கதவை சாத்தி விட்டு வந்தாள்.

“தீரு இறங்கு கீழ…  எருமை இறங்குடி தாத்தா வந்திட போறாரு….” 

“ப்ப்ச்…. ஆரு…. இந்தா துண்டு…  எங்க இப்டி ஸ்டெப் போடு” என துண்டை வைத்து ஆட்டம் காட்டி கொண்டிருக்க….  “அச்சோ யாராவது வந்திட போறாங்க டி….  ??”

“அதான் எல்லாரும்  வயலுக்கு போயாச்சு இல்ல நீ பயப்படாம ஆடு “எனும் போதே  கனகா கதவை தட்டினார்.

“போச்சு போச்சு அம்மா வந்துட்டாங்க…..  இறங்குடி அனகோன்டா…”  என்றவள் ஓடி சென்று கதவை திறக்க…. ” ஏன் டி லீவ் னா சாப்பிட கூட கசக்குமா மகாராணிகளுக்கு….  மணி என்ன ஆச்சு….  வந்து சாப்பிட்டு போய் ஆடுங்க” என சாப்பாட்டு தட்டை நீட்ட….  “மம்மி டார்லிங் ஒரே ஒரு ஆம்லெட்….  பெப்பர் கம்மியா ஆனியன் ஜாஸ்தியா …..”

“வந்தேன்….  வெளியே கெடக்கிற செருப்பு பிஞ்சு போவும் உன் அண்ணனே ஊறுகாயை தொட்டு சாப்பிட்டு போறான்….  இவளுக்கு முட்டை ஊத்தி தரனுமாம் இல்ல….  ஒழுங்கா தின்னுட்டு தட்டை கழுவி வை டி உன் கூட பொறந்தது சத்தமில்லாமல் சாப்பிடலை” என ஆரண்யாவை புகழ்ந்து விட்டு தீர்த்தன்யாவை வசை பாடி விட்டு சென்றார்.

“ச்சே ச்சே….  இந்த வீட்டில் சுதந்திரமா ஒரு ஆம்லெட் சாப்பிட முடியுதா…. ஏன் டி ஊமை கொட்டான் அவங்க கிட்ட எதையாவது கேட்டா தான் என்ன….  இந்த அம்மா உன்னை காரணம் காட்டியே எனக்கு எதுவும் செய்ய மாட்டேங்கிது….  “

“போடி பாவம் அம்மா எவ்வளவு வேலை செய்றாங்க….  இதுல உனக்கு இது வேற செய்யனுமா… நீ இரு நான் வேணும் னா  ஆம்லெட் போட்டு எடுத்துட்டு வரேன்… ” என கிச்சனுக்கு செல்ல  இங்கே முகிலிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது.

“ஹாய் என்ன பண்றீங்க….  சாப்டிங்களா ஆரண்யா…  நான் உங்களுக்கு மெசேஜ் பண்ணலாம் இல்ல…. அது வந்து உங்க வீட்டில் எதுவும் சொல்ல மாட்டாங்களே ??” என வரிசை கட்டி நின்றது அவனது கேள்விகள்…  அதை பார்த்து மென்மையாக சிரித்துக் கொண்ட தீர்த்தன்யா பதில் அனுப்பினாள்.

“ஹாய்…  சாப்பிட போறோம்….  மெசேஜ் அனுப்பிட்டு இந்த கேள்வியை கேட்க கூடாது மிஸ்டர்… ஐம் சாரி உங்க நேம் தெரியாது….  அன்ட் பை த வே ஐம் தீர்த்தன்யா…..  ஆரண்யா கிச்சன் போயிருக்கா….. அப்புறம் இந்த செல்லுக்கு நீங்க மெசேஜ் அனுப்பினா எங்க வீட்ல அவளுக்கு தான் திட்டு விழும்…. ஸோ நீங்க  இதுக்கு அப்புறம் இந்த நம்பருக்கு அனுப்பாதீங்க…. பாய் மிஸ்டர்  …. “

ரிப்ளை வருமா என்று ஃபோனை பார்த்து கொண்டிருந்த முகிலுக்கு பீப் ஓசை பரவசத்தை அளிக்க….  எடுத்து பார்த்தவன் ஆர்வம் வடிந்து கண்களை மூடிக் கொண்டான்.

மீண்டும் ஒரு பீப் சத்தம் கேட்க அதனை எடுத்து பார்த்தவனுக்கு முகம் வெயிலில் பட்ட கண்ணாடி போல ஜொலித்தது.

ஆம் தீர்த்தன்யா தனது கைபேசி எண்ணை அவனுக்கு அனுப்பி இருந்தாள்.

சட்டென்று  ஆர்வம் தலை தூக்க அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள இது அடித்து நின்றது.

“என்ன எடுக்க மாட்டேன்றா ….சரி அப்புறம் கூப்பிடுவோம் “என விட்டு விட்டான்.

ஆரு போட்டு தந்த ஆம்லெட்டுடன்  உள்ளே இறங்கியது தீருவிற்கு காலை உணவு…. 

“டீ….  ஆரு உன் ஆளு  மெசேஜ் அனுப்பிட்டு  ஃபோனும் பண்ணிட்டார்….  இங்க வா வந்து பேசு…. ” 

“ப்ப்ச்….  ஆளும் இல்ல ஒண்ணும் இல்ல….  அவர்  நான் மீட்டிங் போன இடத்தில் அவர் இருந்தார்… நம்ம சென்டரோட ஒரு பிராஞ்சில் வேலை பார்க்கிறார் அவ்வளவு தான்…. நீயா கற்பனை பண்ணிக்காத “என பேச மறுத்து விட்டாள்.

“எனக்கென்னவோ அவர் உன்னை ரூட் விடுறாரு னு நினைக்கிறேன்….  ஆமா அவர் பேர் என்ன டி ??”

“முகில் கிருஷ்ணா….”   

“பேரே செமயா இருக்கே….  ம்ம்ம் யாருக்கு குடுத்து வச்சிருக்கோ…. ” என அதோடு பேச்சை விட்டு விட்டாள் தீரு.

“எல்லாரும் எங்க இருக்கீங்க…??” என்றபடி வந்தார் அந்த வீட்டின் பெரிய மனிதர் அரங்கநாதன்.

“இதோ வந்துட்டோம் தாத்தா….. !!”என வெளியே வந்தனர் இருவரும்..

“அடுத்த வாரம் உங்க அம்மா ஊர் திருவிழாவில் கலந்து கொள்ள போகனும் இல்லையா ??”

“அ… அ… ஆமா தாத்தா அம்மா  சொன்னாங்க… “

“ரெண்டு பேரும் வேலை செய்ற இடத்துல லீவ் சொல்லிடுங்க….  அப்புறம் துணி எடுத்து வைக்கும் போது பாவாடை தாவணி சேலை ரெண்டும் எடுத்து வைக்கனும்..”. என கூறி விட்டு  “அம்மாடி கனகா….  சாப்பாடு எடுத்து வை கை கால் கழுவிட்டு வரேன்….”  

“ம்ம்க்கும்….  இவர் துணிமணி எது வைக்கனும் னு சொல்லலைனா மட்டும்… வேற துணியா எடுத்து வைக்க போறோம்….  இங்க இருக்கிறது ஹிட்லர் னா அங்க இருக்கிறது  முசோலினி….  இங்க இருந்து எடுத்துட்டு போகலைனா….  அங்க புதுசா வாங்கி தந்துடப் போறாங்க இதுக்கு இவ்வளவு பெரிய பில்டப்…”  தீர்த்தன்யா சிலுத்து கொண்டு போனாள்.

“இவ ஒருத்தி….  ஆரு போடி போய் துணியை எடுத்து வை…. ” என கனகா சாப்பாடு எடுத்து வைக்க சென்றார்.

மறுநாள் காலையில் வழக்கம் போல  அலுவலகம் கிளம்பினர்.  “ஆரு…. லீவ் சொல்லிடுடி….  நான் சொல்லிட்டு வரேன்….  அப்புறம் இந்தா ஃபோன் … முகில் பேசுனா பேசு…” 

“அம்மாடி எனக்கு வேண்டாம் பா….  ஏதாவது பேசி எதுனா ஆச்சு நம்ம தாத்தாவுக்கு பதில் சொல்ல முடியாது….  இன்னொரு பிரசன்யாவா ஆக நான் விரும்பவில்லை….” 

“அடி இவ ஒருத்தி டா  பேசும் போதே காதல் வந்திடுமா…. ஏன் டி நீ வேற…..  ஜஸ்ட் ஃப்ரெண்ட்லியா பேசு….”  என கையில் திணித்து விட்டு செல்ல  மொபைலை தூக்கி தனது கைப்பையில் போட்டாள் ஆரண்யா.

இரண்டு நாட்கள் வரை முகில் ஆரண்யாவிற்கு அழைக்கவில்லை…..  மூன்றாம் நாள்  முகிலிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது. தான்  வேலை விஷயமாக திருச்சி வருவதாக…..

…… தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.