Loading

வேஷம்!

மேடையில் நடிப்பவன் மட்டும் போடுவது அல்ல அது… வாழ்க்கையில் வாழும் மனிதன் ஒவ்வொருவனும் போடுவது அது.

என்ன ஒரு வித்தியாசம் என்றால் மேடையில் நடிப்பவனை நீ நடிகன் தானே என்று சுலபமாக இனம் கண்டு விட முடியும். ஆனால் வாழ்க்கையில் நடிப்பவனை அத்தனை எளிதில் கண்டுபிடிக்க முடியாது அவன் முகத்திரை கீழே விழும் நேரம் வரும் வரை காத்து இருக்க வேண்டும்.

சர்க்கஸில் கேமாளி தான் போட்ட வேஷத்தை கலைத்தாலும் அந்த சாயலை காலம் முழுக்க சுமந்து அலைய வேண்டிய சாபத்தை கொண்டவன்.

அப்படி தான், தியா தான் போட்டு இருந்த வேஷத்தை கலைத்துப் போட்டாலும் அதன் பாத்திரம் அவளை தொடர்ந்து கொண்டே வந்தது.

தன் உடையை மாற்றிக் கொண்டு வந்தவள், அந்த அறையின் கதவை திறந்து வெளியே வர சுற்றி இருந்தவர்களின் பார்வை அவளை சபலமாக பார்த்தது.

அவள் தேகத்தை முழுதாக தான் உடை தழுவி இருந்தது. ஆனால் எதிரில் இருந்தவர்களின் பார்வை அவள் உடையை தாண்டி உடலை துகிலுரித்துப் பார்ப்பது போல இருக்க அவள் முகம் ஒருவித பிடித்தமின்மையை காட்டியது.

எதிரில் இருந்தவர்களை கை சொடுக்கி அழைக்க வேலையை செய்தபடியே பார்த்துக் கொண்டு இருந்த அனைவரும் இப்போது நிமிர்ந்து அவளைப் பார்த்தனர்.

“இப்போ என்னை எதுக்கு குறுகுறுனு பார்க்கிறீங்கனு தெரிஞ்சுக்கலாமா?” அவளின் நேர்‌ கேள்வி திருட்டுப் பார்வை பார்த்த எல்லோரையும் திகைக்க வைத்தது.

“இதுக்கு அப்புறம் யாராவது என்னை நேருக்கு நேரா நின்னு குறுகுறுனு பார்த்து வெச்சீங்க… நடக்குறதே வேறவா இருக்கும்” என்று கை நீட்டி எச்சரிக்க, எல்லோருடைய கால்களும் பயந்து பின் வாங்கியது‌.

“அப்படி என்னை நியூடா பார்த்தே தான் ஆகணும்னு துடிச்சா இந்த படம் ரிலீஸ் ஆகுற வரைக்கும் வெயிட் பண்ணுங்க எல்லோரும்…” என்று சொன்னவளின் வார்த்தைகள் பின்னோக்கி நடந்தவர்களின் கால்களை அப்படியே ஸ்தபிக்க வைத்தது‌.

இவள் பார்க்கக்கூடாது என்கிறாளா… இல்லை பார்க்கலாம் என்கிறாளா!!!
என்ன தான் சொல்ல வருகிறாள்…

ஒன்றுக்கு ஒன்று முரணாக அவள் பேசும் வார்த்தைகளை கேட்டு எல்லோரும் குழப்பமாக அவளைப் பார்த்தனர்.

அவர்கள் முகத்தில் வழிந்தோடிய எண்ணவோட்டங்களை தெளிவாக படித்த தியா, “எல்லோருக்கும் என்னை திரையிலே பார்க்கிறதுக்கு மட்டும் தான் உரிமை இருக்குனு சொல்ல வரேன்… நேர்லே எவனாவது தப்பா பார்த்தீங்க கண்ணை நோண்டி போட்டுடுவேன்” என்று எச்சரித்துவிட்டு போன அவள், மொத்தத்தில் முரண் கவிதையாகவே சுற்றி இருப்பவர்களுக்கு தெரிந்தாள்.

படிகளில் தடதடவென இறங்கியவளின் மனமும் இரயில் போகும் தண்டவாளம் போல தடதடத்து கொண்டு இருந்தது.

‘ஹவ் ரெடிகுலஸ்… அது எப்படி என்னை முழுங்குறது போல கூச்ச நாச்சமே இல்லாமல் பார்க்கலாம்!!!’ என்ற கேள்வி மட்டும் அவள் இதயத்தில் திரும்ப திரும்ப கயிறு திரித்து கொண்டு இருந்தது.

இந்த தொழிலுக்கு வந்த பின்னர், எல்லோருடைய கண்களும் தன்னை அசிங்கமாக பார்க்கும் என்பது அவள் மூளைக்கு தெரிந்தே இருந்தாலும் மனது மட்டும் அதை ஏற்க மறுத்து கொண்டே இருந்தது.

உள்ளுக்குள் உதித்த கோப உணர்வோடு கீழே இறங்கி வந்தவள் தோட்டத்து பென்ஞ்சில் கண் கலங்க அமர்ந்து இருந்த ரகுராமை நெற்றி சுருக்கிப் பார்த்தாள்.

அவள் கண்கள் ஒரு முறை வாசலை தொட்டு மீண்டது. அவள் செல்வற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கார் இன்னும் வரவில்லை.

கடிகாரத்தைப் பார்த்தபடியே அருகே இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தவள் திரும்பி மீண்டும் அந்த முதியவரைப் பார்த்தாள்.

நெஞ்சைப் பிடித்து ஏதோ முணுமுணுத்துக் கொண்டு இருந்ததை பார்த்து அவளின் அலட்சியமாக பார்வை மறைந்து ஆராய்ச்சி பார்வை வந்தது.

‘உடம்புக்கு ஏதாவது முடியலையோ?’ என யோசனையாக நினைத்தபடியே பார்வையால் அவரை ஆராய, இவளை கண்ட அடுத்த நொடி ரகுராம் தாத்தா பட்டென்று எழுந்து நின்றுவிட்டார்.

அவர் எழுந்த வேகத்திற்கு உடல் வளைந்து கொடுக்காமல் போக லேசான தடுமாற்றம் அவரை தள்ளாட வைத்தது.

அவர் தவறி கீழே விழப் போனதைப் பார்த்த தியா, வேகமாக சென்று அவரது தோளை ஆதரவாக தாங்கிப் பிடித்தாள்.

ஆனால் அவளது கரம் தீண்டிய அடுத்த கணமே, தீப்பட்டாற் போல உதறி கொண்டு நிமிர்ந்தார் ரகுராம்.

“சீ ஆச்சாரம் இல்லாத உன் கையாலே என்னை தொடாதே… நான் கீழே விழுந்து செத்தாலும் சாவேனே தவிர உன்னை மாதிரி அசிங்கம் பிடிச்சவள் கைப்பட்டு நான் வாழ வேண்டாம்” என்றவரின் வார்த்தைகளில் இருந்தது ஒவ்வொன்றும் விஷம் தடவிய அம்புகள்.

அந்த அம்பு கூராய் அவள் இதயத்தைப் பதம் பார்க்க, துடித்து நிமிர்ந்தவள் தனக்கு ஏற்பட்ட அதே வேதனையை அவருக்கும் இரண்டு மடங்கு கொடுக்க நினைத்தாள்.

“இந்த அசிங்கம் பிடிச்சவள் உங்க வீட்டுலே நடிச்சதாலே தான் உங்களுக்கு கத்தை கத்தையா நோட்டு தந்து இருக்காங்க… இவ்வளவு கவுரவம் பார்க்கிறவர், ஏன் ஏதாவது ஆச்சாரமான படத்துக்கு வீடு தராம இந்த மாதிரி படத்துக்கு வாடகை விட்டீங்க?”

அவரது பொட்டில் சுட்டது அவள் கேட்ட கேள்விகள்.

அந்த வார்த்தைகள் ஏற்கெனவே நொடிந்து போன மனதை மேலும் உடைந்துப் போக செய்தது.

“ஐயோ என்னை இந்த நிலைமையிலே நிற்க வைச்சுட்டியே டா படுபாவி… நீ வாங்கின ஒன்றரை கோடி கடனை அடைக்க என் மான ஈனத்தை இழந்துப் போய் நிற்கிறேனே” என இறந்து போன மகனை திட்டியடியே தன்  நெஞ்சில் அடித்துக் கொண்டு புலம்பியவரின் முணங்கல் சொன்னது அவரது வேதனையின் அடர்த்தியை.

“சே கடைசியிலே ஒரு கூத்தியாள் கிட்டே பேச்சு வாங்க வைச்சுட்டியே டா பாவி”

என்று அவர் பேசிய இறுதி வார்த்தை கேட்டு அவரின் உடல்நிலையை நினைத்து கொஞ்சமாக இளக தொடங்கிய மனதை மீண்டும் எஃகாய் இறுக வைத்தது.

💐💐💐💐💐💐💐💐

சென்னை!

ஈ.சி.ஆர்.

வகிடு எடுத்தது போல நேரான அழகிய தார் சாலை.

கூட்ட நெரிசல் இல்லாமல் வாகனத்தை செலுத்துவதற்கு ரம்மியமான இடம் அது.

ஆனால் அதற்கு நேர் மாறான எண்ணவோட்டத்துடன் சிறுத்தையின் சீற்றத்துடன் வந்து கொண்டு இருந்தது ஒரு கார்.

காருக்கு உள்ளே அமர்ந்து இருந்த திகழ் முகிலன் முகத்திலோ அதை விட சீற்றம். அவன் முகம் முழுக்க கோபத்தின் திவலைகள் ஒட்டி இருந்தது.

ஒரு நடிகைக்கு காரை ஓட்டப் போகிறோம் என்பதையே ஏற்றுக் கொள்ளாத மனது, அவள் எந்த மாதிரியான நடிகை என்பதை  அறிந்தால் பனிப் போல குளுமையாகவா இருப்பான்… அனலாக எரிய துவங்கினான்.

இன்று அதிகாலை சென்னைக்கு வந்தவன் தனக்கு கொடுக்கப்பட்ட விலசாத்திற்கு வந்து புன்னகை முகமாக நின்றான்.

ஆனால் அவர்கள் சொன்ன செய்தியில் அவன் உதட்டில் இருந்த புன்னகை உதிர்ந்து வெறுப்பு வந்து குடி கொண்டது.

மனமே இல்லாமல் கார் சாவியை வாங்கியவன் அப்போது எடுத்த அசுர வேகத்தை இப்போது வரை குறைக்கவில்லை.

‘பொழைக்க வேற தொழிலா கிடைக்கலை… பணம் கிடைக்குதுனா என்ன வேணா பண்ணிடலாமா’ முகம் அறியா அவளை திட்டியபடியே ஈ.சி.ஆர் ருக்குள் இருந்த பங்களாவிற்குள் காரை நிறுத்தினான்.

வெறுப்புடன் அந்த இடத்தில் தன் காலை பதித்தவன், தூரத்தில் ஒரு முதியவருக்கும் இளம் பெண்ணுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தை கண்டு நெற்றியை சுருக்கியபடியே அவர்களை நோக்கி நடந்தான்.

ரகுராம் இறுதியாக சொன்ன ‘கூத்தியாள்’ என்ற வார்த்தையில் அவன் கால்கள் தன் நடையை  நிறுத்த,  எதிரில் இருந்த பெண்ணை அப்போது தான் அழுத்தமாக நிமிர்ந்துப் பார்த்தான்.

வெயிலும் மழையிலும் சேர்த்து குழைத்து வைத்தது போல இருந்தாள்.

அவள் அழகி தான்… இல்லை இல்லை பேரழகியே தான். மனம் பார்த்த உடனே ஒத்து கொண்டது‌.

ஆனால் அந்த அழகை கடவுள் இந்த தொழில் செய்து பணம் சம்பாதிக்கவா கொடுத்தான்?

அவன் விழிகள் வஞ்சனை இல்லாது அவள் மீது வெறுப்பை உமிழ்ந்தன.

தன்னையே அருவெறுத்துப் பார்த்த திகழ் முகிலனின் கண்களை எதேச்சையாக திரும்பிய  தியாவின் விழிகளும் கண்டு கொள்ள, இரண்டு ஜோடி கண்களும் ஒன்றையொன்று வெட்டி கொண்டன.

“நீங்க?” என அவள் எதிரில் இருந்தவனை கேள்வியாக நோக்க, “திகழ் முகிலன்” என்று தன் பெயரை சொன்னவனின் பார்வை அவள் மீது அழுத்தமாய் விழுந்தது போல வார்த்தைகளும் அழுத்தமாகவே வெளி வந்தது.

“ஒரு வேஷிக்கு கார் ஓட்ட போறேனு தெரியாம, வானவங்குடியிலே இருந்து வந்த முட்டாள் தான் நான்” என்றான்.

“வேஷி” “கூத்தியாள்” வரிசையாக அடைமொழிப் பட்டங்களை அவளுக்கு எல்லோரும் அளிக்க இதழை வளைத்து ஒரு சிரிப்பு சிரித்தாள்‌‌.

அந்த புன்னகையில் இருந்தது விரக்தியா? இளக்காரமா!

அவள் வலி என்றால் என்னவென்றே தெரியாது வளர்ந்தவள்.

ஆனால் இன்று ஏனோ தெரியவில்லை…  எல்லாருடைய சொற்களும் எல்லாருடைய பார்வையும் அவளை குத்தி கொண்டே இருந்தது.

அந்த வார்த்தைகள் அவள் இதயத்தை ஊடுருவி சென்று வலி கொடுக்கின்றதா? இல்லை காதிலேயே வாங்காமல் அலட்சியமாக கடந்து சென்றுவிடுகிறாளா? என்பதை அவளது முகத்தில் இருந்து கண்டு பிடிக்கவே முடியவில்லை.

கூலிங் க்ளாஸ் அணிந்து இருந்த அவள் கண்களுக்குள் என்ன இருக்கின்றது என்பதை கண்டறிய முடியாமல் ஆடவர் இருவரும் தோற்றுப் போய் நின்றனர்.

இருவரையும் சொடுக்கிட்டு அழைத்தவள், “நான் கூத்தியாளோ வேஷியோ இல்லை… ஐ யம்  போர்ன் ஆக்ட்ரஸ் (porn actress). இது தான் என் ப்ரொஃபஷன் புரியுதா… அடுத்த தடவை ஏதாவது பேர் சொல்லி கூப்பிட்டீங்க வாயை கிழிச்சு அனுப்பிடுவேன்” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவளின் குரலில் இருந்த வீரியம் சொன்னது அவள் சொன்னதை செய்துவிடும் அழுத்தக்காரி என்று.

“பண்றது கேவலமான வேலை… அதுக்கு ஒரு பேர் வேற சொல்லி கூப்பிடணுமா?” என்று எதிர் கேள்வி கேட்டு நின்ற திகழ்முகிலனை தியாவின் தீப்பார்வை எரித்தது.

அவர்கள் முதல் சந்திப்பே அவர்கள் இருவரையும் எதிரும் புதிருமாய் நிற்க வைத்தது.

இரு எதிர் கோடுகள் இனி நேருக்கு நேர் ஒன்றையொன்று வெட்டி கொள்ள போகின்றன. இணையாத தண்டாவளங்களின் மீது ஏறி காதல் ரெயில் பயணம் செய்ய ஆரம்பிக்குமா?

விடை காலத்தின் கையில்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்