
சூடான எண்ணெயில் பொன்னிறமாக உப்பென்று ஊதியபடி பூரியைப் போட்டு எடுத்தான் இளன். பக்கத்தில் உருளைக்கிழங்கு கூட்டு கொதித்துக் கொண்டிருந்தது.
நேற்றிரவு எதுவும் தனக்கு நடக்காதது போலவே, இன்று தனது சமையல் வேலையை வழக்கம் போலவே செய்ய ஆரம்பித்தான். அவனுக்கும் கிட்டத்தட்ட இல்லத்தரசிகளின் நிலைதான். தனக்கு என்ன நேர்ந்தாலும் வேளா வேளைக்கு உணவு தயாரிப்பதையும் வீட்டு வேலைகளைச் செய்வதையும் விட்டுக்கொடுக்காத பெண்களைப் போலத்தான் அவனும்…
‘சமைக்க மாட்டேன்’ என்று பிடிவாதம் பிடிப்பதோ இல்லை உள்ளிருப்புப் போராட்டமோ அவன் செய்யவில்லை. சம்பளத்திற்கு வேலை செய்வதைத் தாண்டியும், பழிவாங்க உணவை ஆயுதமாக எடுத்துக்கொண்டு அடுத்தவர் வயிற்றில் அடிப்பதா? என்கிற எண்ணம் அவனுக்கு. முதியவருக்கும், படிக்கும் பிள்ளைக்கும் உணவளிக்கக் கூடாது என்ற பிடிவாதம் தனக்கு எதற்கு என்ற எண்ணத்தில்தான் காலையிலேயே தன் சமையல் வேலையைத் தொடங்கியிருந்தான்.
இன்று விடுமுறை நாள் என்பதால் பூரி கிழங்கு செய்திருந்தான். சக்கரத்தைக் காலில் கட்டிக்கொண்டது போலச் சுழன்றவனுக்கு, கவனம் முழுதும் சமையலில் சென்றுவிட, நேற்றைய நிகழ்வின் நினைவு ஓரமாய் ஒதுங்கிவிட்டது. சமைத்து முடித்ததும், அவர்கள் சாப்பிட ஏதுவாக உணவு மேசையில் எடுத்து வைத்தவனுக்கு, அழையா விருந்தாளியாக நேற்றைய நினைவுகள் வந்துவிட, உள்ளுக்குள் சோர்ந்து போனான். கண்களில் முணுக்கெனக் கண்ணீர் வந்தது. தனது மேலாடையில் துடைத்துவிட்டு உள்ளே சென்றான்.
மித்ராவும் வசந்தியும் தாமதமாக அறையிலிருந்து வந்தவர்கள், யாரையும் எதிர்பார்க்காமல் உணவை எடுத்து வைத்துச் சாப்பிட்டனர். மித்ரா, வசந்தியிடம் சொல்லிவிட்டு வெளியே செல்ல, இவரும் அறைக்குள் சென்று முடங்கிவிட்டார். ‘எனக்கு வேண்டாம்’ என்று மறுத்தவனிடம் கெஞ்சி கூத்தாடி, இரண்டு பூரியைத் தின்ன வைத்தார் பஞ்சு.
அவனது எண்ணமெல்லாம் வெங்கட்ராமனிடம் ‘எப்படி விஷயத்தைச் சொல்வது? அவர் எப்படி எடுத்துக்கொள்வார்? தன்னை என்ன நினைப்பார்?’ என்று தயக்கம் நிறையவே இருந்தது. ‘அவரை அழைப்பதா? வேண்டாமா?’ என்று அலைபேசியைத் தட்டுவதும் பின் கீழே வைப்பதுமாக குழப்பத்தில் இருந்தவனை கேமரா வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் வெங்கட்ராமன்.
மகள் மற்றும் தாயின் அறைகளைத் தவிர, மற்ற எல்லா இடங்களிலும் கேமரா இருந்தது. அதை அவர் அடிக்கடி கவனிப்பது வழக்கம். நேற்று நடந்ததைக் கூட அவர் கவனித்திருந்தார். அவனது கண்ணீரையும், அதை அவன் புறங்கையால் துடைப்பதையும், பஞ்சு பாட்டி கெஞ்சி ஊட்டி விடுவதையும் கவனித்தவர்; நேற்று அவன் அழுததும், அழுதுகொண்டே யாரிடமோ அலைபேசியில் பேசியது என அனைத்தையும் பார்த்தார்.
அவன் தன்னிடம் பேசத்தான் அழைக்கிறான் என்பதை, அவன் தவறுதலாக விட்ட ஒரு ‘மிஸ்டு கால்’ மூலம் தெரிந்துகொண்டவர், அவனுக்கு அழைத்தார். அவரது அழைப்பைக் கண்டதும் கடவுளை நேரில் பார்ப்பது போலப் பரவசம், பயம் என எல்லாம் அவன் முகத்தில் தாண்டவமாடியது. அதையும் அவர் கவனித்தார்.
“இளா! எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன் சார். நீங்க?” எனக் கனிவாகப் பேசினான்.
“ம்… இருக்கேன். பாப்பாவை, அம்மாவை, உன்னையும் உன் சமையலையும் ரொம்ப மிஸ் பண்றேன்டா” என்றார் ஏக்கமாக. அவர் அப்படிச் சொன்னதும் இவன் முகத்தில் வந்த புன்னகை கீற்றையும் கவனித்தார்.
“பேசாம இங்க வந்துடுங்க சார். குடும்பத்தை விட்டுட்டு ஊர், தேசத்துல வேலை பார்க்கிறது எல்லாம் உயிரை விட்டு உடல் மட்டும் தனிச்சு வாழ்ற மாதிரி சார். யாருக்காக நீங்க உழைக்கிறீங்களோ அவங்களுக்குத் தேவையான பணத்தை மட்டும் சம்பாதிச்சா போதுமா? தேவையான பாசம், அன்பு, அரவணைப்பு கொடுக்க வேண்டாமா சார்? நீங்க கூட இருக்கிறது போல வருமா சார் உங்க பொண்ணுக்கு? எனக்குக் குடும்பம் இருந்தா கிடைக்கிறதை வச்சு அவங்க கூடவே இருந்திடுவேன் சார்” என்று ஜனனியை மனதில் நினைத்தபடி சொன்னான்.
அதன் பின் உணர்ந்தவனாக, “ஐயோ!! சாரி சார், என்னையும் மீறிப் பேசிட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க சார். மன்னிச்சிடுங்க” என்று கெஞ்ச, அவர் பெரிதாய் எதுவும் நினைக்காமல் சாதாரணமாகத்தான் பேசினார்.
“நீ சொன்னதெல்லாம் உண்மைதான் இளா! குடும்பத்துக்காகன்னு சம்பாதிக்க ஓடி அதுல மூழ்கிப் போறோமே தவிர, அந்த குடும்பத்துக்காகக் கொஞ்ச நேரத்தைக் கூட ஒதுக்கணும்னு நினைப்பே இல்லாம ஓடுறோம்” என உள்ளார்ந்து சொன்னவர், “சரி! நீ எப்போ உனக்கு ஒரு குடும்பத்தை உருவாக்கப் போற இளா?” என்று கேட்டதுமே அவனுக்கு வெட்கம் வந்தது.
“சார்! உங்ககிட்ட சொல்லணும்னுதான் இருந்தேன். கொஞ்சம் பயம்” என்று இழுத்தான். “என்ன பயம்? உன் அப்பாகிட்ட பேசுறது போலப் பேசு” என்றதும் சட்டென இவனுக்குக் கண்ணீர் வந்துவிட்டது. புறங்கையால் கண்ணீர் துடைப்பதைப் பார்த்தார்.
“இளா?”
“சார்”
“சொல்லுப்பா!”
“சார், நா… நான் ஒரு பொண்ணை விரும்புறேன். அ… அவ இந்தியால இருக்கா சார். இப்போ வரைக்கும் ஆன்லைன்ல தான் பேசிட்டு இருக்கோம்… அவளைத் தேடி இந்தியா போகணும் சார்” என்றான் தயக்கமாக.
“இதைச் சொல்லவா உனக்குத் தயக்கம்? எப்போ அந்தப் பொண்ணைப் பார்க்கப் போற?”
“சார்…” என்று இழுக்க, “விஷயம் என்னன்னு சொல்லு” என்றார் கணித்தபடி.
“காண்ட்ராக்ட் முடிச்சுக்கலாம் சார். நான் இந்தியாவுக்குப் போறேன். அங்கே செட்டில் ஆகலாம்னு இருக்கேன் சார்” என மனதில் உள்ளதைச் சொல்லிவிட்டு லேசாக உணர்ந்தான்.
“இந்தியா போகமாட்டேன்னு சொல்லுவ! இப்போ இந்தியா போறேங்கிற… ம்ம்…” என்றதும் இவன் வெட்கப்பட்டான்.
“பொண்ணு பேரு என்ன?”
“ஜனனி சார்” என்றான் வாயெல்லாம் பல்லாக.
“சரி! அடுத்த ஒரு மாசம் மட்டும் இரு! நான் வந்ததும் நீ இந்தியா கிளம்பிடு” என்றார் மனசார.
“சார், உண்மையாவா சொல்றீங்க?” எனச் சிறுபிள்ளை போலக் கேட்டதை திரையில் பார்த்த இவருக்குச் சிரிப்புதான் வந்தது.
“நிஜமாதான்டா சொல்றேன். நீ என் பையன் போல. உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குல்ல? சமையல்கட்டிலேயே உன் வாழ்க்கையை முடிச்சுக்காம போய் வாழப் பாரு!” என்றார்.
இவனுக்குள் அப்படி ஒரு சந்தோஷம்… குதித்துக் கத்தணும் போல இருந்தது. “ரொம்ப நன்றி சார்” என்றான் உற்சாகத்துடன்.
“அந்தப் பொண்ணைத் துபாய்க்கு கூட்டிட்டு வா” என்றார். “சரி சார்” என்றவனுக்கு, ‘இன்னும் இவன் அவகிட்ட காதலையே சொல்லலையே’ என்று மனம் கேலி செய்ய, அதை அடக்கினான்.
“அப்புறம் இளா! உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்” என்று பீடிகை போட, “என்ன விஷயம் சார்?!” என்று கேட்டான் புருவங்கள் சுருங்க.
“உனக்கும் மித்ராவிற்கும் என்ன பிரச்சனை? நேத்து டைனிங் டேபிள்ல ஃப்ரெண்ட்ஸைக் கூப்பிட்டு உன்னை இன்சல்ட் பண்ணிருக்கா! என்ன நடக்குது அங்க?” என குரலை உயர்த்திக் கேட்க, இவனோ சொல்லத் தடுமாறினான்.
“நேத்து நான் சமைச்ச சாப்பாடு நல்லா இல்லை சார். அதான் திட்டினாங்க” என்று சமாளித்தான்.
“பொய் சொல்லாத! உனக்கும் அவளுக்கும் பிரச்சனை போயிட்டு இருக்கு! என்ன விஷயம் சொல்லு?” என்று கேட்டு, பதில் வேண்டி அதே பிடியில் நின்றார்.
“சார்! நீங்க என்னை நம்பினாலும் நம்பலைனாலும் இதுதான் உண்மை” என்று அனைத்தையும் சொல்லி முடித்தான். அவன் சொல்லும்போது அவன் முகத்தைத்தான் பார்த்தார். கசங்கிய முகத்தோடு சொல்லி முடித்திருந்தான். அவர் பக்கம் பதில் இல்லை, அமைதியாக இருந்தார்.
“சார்! உண்மையாவே உங்க பொண்ணு மேலே எனக்கு எந்த ஃபீலிங்ஸும் இல்லை சார். அவ எனக்குத் தங்கை சார். அவளை அந்த மாதிரி பார்க்கல, என்னை நம்புங்க சார்” என்று அவரது அமைதி அடிவயிற்றில் கிலி பிடிக்க, பயந்து போனான்.
“நான் உன்னை நம்புறேன் இளா! உன்னை நம்பித்தான் என் பொண்ணையும் அம்மாவையும் விட்டுட்டுப் போனேன். எனக்கு உன்னைப் பத்தித் தெரியும். கூடிய சீக்கிரம் வேலை முடிஞ்சு நான் வந்துடுறேன்… நாளைக்கு மித்ராவைப் பார்த்துக்க ஒரு அம்மா வருவாங்க… அவங்க எல்லாத்தையும் பார்த்துப்பாங்க. நீ போனதும் அவங்க இங்கிருந்து பார்த்துப்பாங்க… நீ அவங்களுக்கு உதவி செய்” என்றார்.
இவனும் ‘சரி’ என்றான். நெஞ்சில் பாராங்கல்லாய் ஏறியிருந்த சுமையை அவரிடம் பகிர்ந்து இறக்கி வைத்த மகிழ்ச்சி! காண்ட்ராக்ட் முடிய இன்னும் இரண்டு மாதங்கள் இருந்த நிலையில், அது ஒரு மாதமாக மாறியதிலும் அவனுக்குப் பேரானந்தம். உடனே அதைத் தனது அன்னம்மாவிடம் பகிர எண்ணி அவளுக்கு அழைத்தான்.
‘எடுத்ததும் ஆர்டர் இல்லை’ என்று சொல்லி இருந்தால்கூடப் பெரிதாகப் பாதிப்பு இருந்திருக்காது. ‘கைக்குக் கிடைக்க இருந்ததைத் தட்டிப்பறித்து விட்டானே’ என்ற ஆதங்கம்தான் அவளுக்கு. வள்ளியும் நீலகண்டமும் அவளைத் தேற்ற முயன்றனர். அவர்களது தோய்ந்த முகத்தைக் கண்டவள், அவர்கள் முன் சரியானது போலக் காட்டிக் கொண்டாள்.
ஆனாலும் குளியலறை சென்று கண்ணீரைச் சிந்திவிட்டு, முகம் அலம்பிவிட்டு மெத்தையில் வந்து படுத்தாள். அவளது அலைபேசி சிணுங்க, எடுத்துத் திரையைப் பார்க்காமல் காதில் வைத்தாள்.
“ஹலோ” என்று சந்தோஷத் துள்ளலில் விளிக்க, ஆண் குரலைக் கேட்டதும் விபு என்று எண்ணி, “சொல்லு விபு” எனச் சோர்வுடன் கேட்டவள், அவனது மகிழ்ச்சியைச் சட்டென வடிக்கட்டி விட்டாள்.
பல்லைக் கடித்தபடி “அன்னம்மா” என அவனது உக்கிரமான அழைப்பில், சட்டெனத் திரையைப் பார்த்துவிட்டு மீண்டும் காதில் வைத்தாள்.
“இளா நீயா? சாரி சாரிடா, நான் விபுன்னு நினைச்சிட்டேன்… என்ன விஷயம்டா சொல்லு?” என்று அவனது உற்சாகக் குரலை நினைவுபடுத்திக் கேட்டாள்.
இவனுக்கோ எடுத்ததும் ‘விபு’ என்றதும் கடுப்பில் முறுக்கிக்கொண்டு, “இந்த நேரத்துல விபு எப்படிப் பேசுவான்? அவன் ஸ்கூல்ல இருப்பான்… என்ன யோசனையில நீ போனை எடுத்த?” எனத் தணியாத கோபத்துடன் கேட்டான்.
“அதான் சாரின்னு சொல்லிட்டேனேடா! அப்செட்ல இருந்தேன்டா! யாருன்னு பார்க்காம போனை காதுல வச்சிட்டேன்… விடேன்! சரி, ரொம்ப ஹாப்பியா ஏதோ சொல்ல வந்தியே, என்ன அது?” என்றாள்.
“அதான் அந்த ஹாப்பியைப் பறிச்சிட்டியே! அவன் பெயரைச் சொல்லி” என அவளுக்குக் கேட்காதபடி முணுமுணுக்க, “என்னடா வாய்க்குள்ள முணுமுணுக்கிற? என்ன விஷயம் சொல்லேன்டா” என்றாள் சலிப்பாக.
“ம்… சொல்றேன். அதுக்கு முன்னாடி என்ன அப்செட்? போன காரியம் என்னாச்சு? ஆர்டர் கிடைச்சுடுச்சுதானே? அதுக்குத்தான் டென்ஷனா இருக்கியா? அதெல்லாம் உன்னால பண்ண முடியும் அன்னம்மா! அன்னம்மா கேன் டூ இட்!” என்று ஊக்கமாகப் பேச, காற்றில்லாமல் சுருங்கிப் போன பலூன் போல இருந்தவள், அவன் கொடுத்த ஊக்கத்தால் உற்சாகத்தில் உப்பிப் போனாள்.
புன்னகையுடன் “எனக்கு அந்த ஆர்டர் கிடைக்கல இளா! கைக்குக் கிடைக்க வேண்டியதை ஒருத்தன் பறிச்சுட்டான். அந்த அப்செட்ல இருந்தேன் இளா! ஆனா உன் வார்த்தைகளைக் கேட்கும்போது ஊக்க மருந்து சாப்பிட்டது போல இருக்கு. சோர்ந்து போன உடம்பும் மனமும் கொஞ்சம் புத்துணர்வா இருக்கு! தேங்க்ஸ்டா” எனப் புன்னகையுடன் சொல்ல,
“மண்ணாங்கட்டி! தேங்க்ஸை குப்பையில போடு! நான் சொல்றதைக் கேளு அன்னம்மா!.. எண்ணி ரெண்டே மாசம், அதுக்கப்புறம் பாரு! அன்னம்மா ரொம்ப பிஸி ஆயிடுவா! இத்தனை ஆர்டரான்னு வாயைப் பிளந்து சலிச்சுப்பா!” என்று சத்தியமான உண்மையைச் சொல்வது போலவே இவன் கூற, இவளுக்குக் கேட்க நன்றாகத்தான் இருந்தது.
சிரிப்புடன், “அதென்ன ரெண்டு மாசம்? என் ஜாதகத்துல சுக்கிரன் உச்சிக்கு வரப் போறாரா என்ன?” என நக்கலாகக் கேட்க,
இவனும் சிரித்துவிட்டு, “சுக்கிரன் உச்சிக்கு வருவாரா, பிச்சிக்கு வருவாரான்னு தெரியாது. ஆனா இந்த இளா இந்தியா வரப்போறாரு! அப்புறம் பார் ‘ஜனனி கேட்டரிங் சர்வீஸ்’ எந்த லெவலுக்குப் போகுதுன்னு!” எனத் தன் காலரைத் தூக்கிவிட்டபடி சொல்ல,
“மூணு மாசம் ஆகும்னு சொன்ன? இப்போ ஒரு மாசம் கழிச்சு வருவேங்கிற… என்னாச்சு?” என அவளும் ஆர்வத்துடன் கேட்டாள்.
அவனும் நடந்ததைச் சொன்னான்.
“நான் தான் சொன்னேனே! உன்னை நம்பித்தான் அவர் பொண்ணை உன்கிட்ட ஒப்படைச்சுட்டுப் போயிருக்கார்னு! நல்ல மனுஷனா இருக்கப்போய் உன்னைப் புரிஞ்சுக்கிட்டார். இன்னும் ஒரு மாசம்தான், மித்ராகூட வம்பு தும்புக்குப் போகாம பொறுமையா இந்த முப்பது நாளை ஓட்டிட்டு ஓடி வந்துடு” என்றாள்.
“ம்… ஆனா?” என இவன் இழுக்க,
“என்ன ஆனா?”
“இந்தியாவுக்கு ஒரு ஆர்வத்துல வந்தாலும், அங்க எனக்குன்னு யார் இருக்கா அன்னம்மா? வெறுமைதானே என்னை வரவேற்கும். எனக்குன்னு உறவோ சொந்தமோ எதுவுமே அங்க இல்லையே! யார் என்னை அங்க எதிர்பார்ப்பா? அங்க வந்து நான் என்ன பண்ணப்போறேன்னு பயமா இருக்கு அன்னம்மா?!” என இவன் மனதினுள் எழுந்த கலக்கத்தைக் கேட்டவள், அவனுக்குப் பதிலடி கொடுத்தாள்.
“ஓ… அப்ப ஏன் சார் நீங்க இந்தியா வரணும்? அங்கே இருக்க வேண்டியதுதானே! உங்களுக்குத்தான் இங்க எந்த உறவும் இல்லையே! பின்னே எதுக்கு இந்தியா வந்துட்டு எனக்கு யாருமே இல்லைன்னு ஃபீல் பண்ணனும்? அங்கே இருங்க! உங்களுக்கு உறவுன்னு சொல்லிக்க துபாயிலதான் கோடி சனம் இருக்குல்ல! இந்தியாவுக்கு எதுக்கு வந்துட்டு? நீங்க அங்கே இருங்க என்ன?! இனிமே எனக்கு போன் பண்ணாதீங்க! தெரியாதவங்ககிட்ட நான் போன் பேசுறதா இல்லை, வைங்க போனை!” என அலைபேசியை அணைக்கப் போக,
அவனோ, “ஹே அன்னம்மா எதுக்கு இப்போ கோவப்படுற? நான் உண்மையைத்தானே சொன்னேன்” என மீண்டும் அதையே சொல்ல, இவள் கோபத்தில் காளியாக மாறினாள்.
“அப்போ என்ன மயித்துக்கு என்கிட்ட இப்போ பேசிட்டு இருக்க நீ? போனை வை!” எனப் படபடவெனப் பேசியவள், “இவருக்கு இங்க யாருமில்லையாம்? பேசுற நாங்க யாராம்? அந்நிய மனிதர்களா நாங்க?” என்று சத்தமாக முணுமுணுக்க, இவனுக்குத் தெளிவாகக் கேட்டது.
உதட்டைக் கடித்துப் புன்னகையை அடக்கிக்கொண்டவன், “அப்போ நீ எனக்கு யாரு அன்னம்மா? என்ன உறவுடி நீ எனக்கு?” என அவன் அதிரடியாகக் கேட்க, ஒரு கணம் தடுமாறிப் பதில் சொல்லாமல் அமைதியாகிப் போனாள் ஜனனி.
.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
1
+1

