Loading

ப்ரேமின் அறையில் ஆரவ் தீவிரமாக யோசனையில் இருக்க அவனை உலுக்கிய ஹரிஷ்,

“என்ன மச்சி எல்லாம் நல்லா தானே போய்ட்டு இருக்கு.. அப்புறம் நீ ஏன் இப்படி கப்பல் கவுந்த மாதிரி உக்காந்துட்டு இருக்காய்..” என்க, 

“நாதாரிப் பயலே.. உன்னோட வாய போய் கழுவுடா.. நானே இந்த சர்வேஷ இராத்திரில இருந்து காணோம்னு டென்ஷனா இருக்கேன்.. நீ வேற கடுப்ப கிளப்பிட்டு..” என ஆரவ் ஹரிஷைத் திட்ட ப்ரேம்,

“டேய் ஆரவ் நீ சும்மா டென்ஷனாகாம இருடா..காணாம போறத்துக்கு அவன் என்ன சின்ன குழந்தையா.. ஏதாச்சும் வேலையா போயிருப்பான்…” என்றான்.

ஆரவ்வோ ஹரிஷ் தம்முடன் இருப்பது நினைவற்று, “இல்லடா… நித்து வந்த நேரத்துல இருந்து அவன் மூஞ்சே சரியில்ல.. அவளும் இவன அவொய்ட் பண்ணுறான்… இதுல புதுசா சித்தார்த்னு ஒரு கேரக்டர் வேற…. ” என்க,

“ஆமாடா.. நான் கூட அவங்கள பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன்… சர்வேஷ் தப்பு பண்ணி இருக்கான் தான் இல்லன்னு சொல்லல… ஆனா சுச்சி அவன விட்டு போனத்துக்கு அப்புறம் தான் அவனுக்கு பொண்ணுங்க மேல இருந்த நம்பிக்கையே போச்சி… அதனால தான் அவன் அதுக்கப்புறம் எந்த பொண்ணு கூடவும் ட்ரூ ரிலேஷன்சிப்ல இருக்கல.. நாமலும் அவன எதுவும் சொல்லல… நித்து கூடவும் சர்வேஷ் அது போல பழக ஆரம்பிச்சாலும் கொஞ்ச நாள் கழிச்சி அவள உண்மையா விரும்ப ஆரம்பிச்சான்… அவளால தான் அவன் பழையபடி மாறினான்… அப்படி இருந்தும்….” என ப்ரேம் நிறுத்த,

“நித்துவயும் தப்பு சொல்ல முடியாதுடா.. சர்வேஷ பத்தி எல்லாம் தெரிஞ்சும் அவள் அவன விரும்பினான்… பட் விதி… சர்வேஷ் தப்பு பண்ணும் போது கிடைக்காத தண்டனை அவன் திருந்தினத்துக்கு அப்புறம் அவன பழி வாங்கிடுச்சி.. அஞ்சி வருஷத்துக்கு முன்ன நடந்த விஷயத்தால நித்து எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்காளோ அதே அளவு அவனும் பாதிக்கப்பட்டிருக்கான்…” என்றான் ஆரவ்.

இவர்களின் சம்பாஷனையில் அதிர்ச்சியுற்ற ஹரிஷ், “டேய் யாரடா சொல்லுறாய்…” என்க ஆரவ், “வேற யாரு நம்ம…..” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே கதவை யாரோ திறந்து கொண்டு உள் நுழைய வந்தவரைக் கண்டு மூவரும் அதிர்ச்சியுற்றனர். 

முதலில் சமநிலைக்கு வந்த ஹரிஷ்,”டேய் சர்வா.. என்னடா இது கோலம்… உன் கன்னம் ஏன் இப்படி வீங்கி போயிருக்கு..” என கேட்க சஜீவ்,

“அது ஒன்னுமில்ல மச்சி வர வழில கதவுல  இடிச்சிக்கிட்டேன்..” என சமாளிக்க ஏதோ நடந்து இருப்பதை உணர்ந்த மற்ற இருவரும் நிலைமையை சமாளிக்கும் பொருட்டு,

“ஹரி..நீ கொஞ்சம் வெளிய போய் அரசுப்பாட்ட (அன்பரசன்-ப்ரேமின் தந்தை) எல்லா ஓக்கேயான்னு கேட்டு வாடா..” என ஆரவ் கூற ஹரிஷும் ஏதும் புரியாமல் குழம்பியபடி வெளியேறினான்.

ஹரிஷ் சென்றதும் ஆரவ், “டேய் உண்மைய சொல்லுடா.. யாரு உன்ன இப்படி அடிச்சாங்க..” எனக் கேட்க இரவு நடந்த அனைத்தையும் சர்வேஷ் சொல்ல இருவரும் அதிர்ச்சிக்கும் அவன் மீது கோபத்துக்கும் உள்ளாகினர்.

அது பற்றி வேறு எதுவும் கேட்காது, “ரொம்ப லேட் ஆகிட்டு.. நீ போய் குளிச்சிட்டு ரெடி ஆகிட்டு வா.. இத பத்தி என் கல்யாணம் முடிஞ்சத்துக்கு அப்புறம் பேசலாம்…” என ப்ரேம் அவனை அனுப்பி வைத்தான்.

பல வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பிரம்மாண்டமாக காட்சியளித்தது மேடை. 

ப்ரேம் கறுப்பு சட்டை, நீல ப்ளேசர் அணிந்தும் ஜனனி பீச் கலரில் கற்கள் மற்றும் ஜரிகை வைத்து அலங்கரிக்கப்பட்ட சாரி அணிந்தும் அம் மேடையில் மன்மதனும் ரதியும் போல் அமர்ந்திருந்தனர்.

கணபதி பூஜையுடன் நிச்சயதார்த்த சடங்குகள் ஆரம்பமாகின.

ப்ரேமின் பெற்றோர் ஜானகி மற்றும் அன்பரசு ஜனனிக்கு பட்டுப்புடவை, நகைகள் மற்றும் பரிசுகள் வழங்க ஜனனியின் பெற்றோர் சாருமதி மற்றும் சங்கரன் ப்ரேமுக்கு வேஷ்டி சட்டை மற்றும் பரிசுகள் வழங்கினர்.பின் ப்ரேமிற்கு சகோதரி இல்லாதவால் சகோதரி செய்ய வேண்டிய சடங்குகளை நித்யாவுக்கு செய்யச் சொல்லப்பட அவள் கைகளில் காயம் உள்ளதால் முதலில் தயங்க ஜானகி வற்புறுத்தவே நித்யா ஜனனியின் நெற்றியில் குங்குமம் மற்றும் சந்தனத் திலகமிட,

தொடர்ந்து ஜனனியின் அண்ணா விக்ரம் ப்ரேமிற்கும் அவ்வாறே செய்தனர்.விக்ரம் ப்ரேமிற்கும் நித்யா ஜனனிக்கும் மலர் மாலைகளை அணிவித்தனர். 

இறுதியாக ஜனனியும் ப்ரேமும் நண்பர்கள் மற்றும் சுற்றம் முன்னிலையில் மோதிரங்களை மாற்றிக்கொள்ள நிச்சயதார்த்தம் அழகிய முறையில் நிறைவுற்றது.

போட்டோக்கிராப்பர் மணமக்களை வித விதமாக போட்டோ எடுத்துக் கொண்டிருக்க,

“ஹாய் ஜனனி… சாரி கொஞ்சம் லேட் ஆகிடிச்சி… இது என் ஹஸ்பன்ட் வீர்…” என மேடை ஏறியவர் கூற, “வாட் அ ப்ளசன்ட் சர்ப்ரைஸ் ஜீவிகா… எங்க நீ வர மாட்டியோன்னு நெனச்சேன்.. உங்க பேமிலில எல்லோரும் வந்திருந்தாங்க.. நீ மட்டும் இருக்கல…” என ஜனனி கூற வீர், “மேடம்க்கு மேக்கப் போட லேட் ஆகிடுச்சி சிஸ்டர்… அதான்” எனக் கூறிச் சிரிக்க, ஜீவிகா அவனை முறைத்தாள்.

கோபத்துடன் திரும்பியவள் பார்வையில் பட்டது மேடையின் கீழ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நித்யா.

“ஜனனி அது நித்யா தானே.. எவ்வளவு நாளாச்சி பார்த்து.. வீர் அங்க பாரு நித்யா.. ஜனனி நாங்க போய் பேசிட்டு வரோம்..” என்று விட்டு நித்யாவை நோக்கி சென்றனர்.

வீர், “தங்கச்சிம்மா..” என அழைக்க திரும்பியவளின் முகம் சுருங்கியது.

“எப்படி இருக்கீங்க அண்ணி…” என ஜீவிகா கேட்கும் போதே அவ்விடம் வந்த ஈஷ்வரி,

“ஏய் ஜீவி.. என்ன நீ வந்ததும் வராததுமாய் கண்டவங்களோட வெட்டியா பேசிட்டு இருக்காய்.. வா அந்த பக்கம் போலாம்…” என அவர்களை இழுத்துக்கொண்டு சென்றார்.

தூரத்திலிருந்து இவற்றை கவனித்த சஜீவ் அப்போது தான் நித்யாவின் கையிலிருந்த காயத்தைப் பார்த்தான்.

இதைப் பற்றி ப்ரேமிடம் கேட்க வேண்டும் என அவனை நோக்கி செல்லும் போது தான் அவன் தாய் ஈஷ்வரி ஜீவிக்காவிடம் கோபமாக பேசிக்கொண்டு இருப்பது தெரிந்தது. 

அவ்விடம் வந்த சஜீவ், “ஜீவி எதுக்கு இப்போ நீ வந்ததும் அம்மா கூட சண்டை போட்டுட்டு இருக்காய்..” என அவன் தங்கை ஜீவிகாவைப் பார்த்து கேட்க அவள்,

“அம்மா தான்ணா சும்மா என்ன திட்டிட்டு இருக்காங்க..” என புகார் வாசிக்க அவர்களை சமாதானப்படுத்தவே அவனுக்கு போதும் போதும் என்றாகி விட்டது.இதற்குள் ப்ரேம் நித்யாவின் கையிலிருந்த காயத்தைப் பற்றி ஜனனியிடம் விசாரிக்க அவள் செயல் அவனை மிகவும் வேதனைப்படுத்தியது. 

மண்டபத்திலிருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய பெரியவர்கள் இளம் பட்டாளம் அனைவரையும் தூங்க அனுப்பி வைத்தனர்.

கதிரவன் தன் பொற் கதிர்களை பூமாதேவி மேல் வீச திருமண நாளும் அழகே விடிந்தது.

விடிந்ததும் ஜனனி மற்றும் ப்ரேமை தனித்தனியாக சுற்றி மறைத்து அமர வைத்து அவர்களுக்கு நலங்கு வைத்தனர். 

பின் இருவரையும் மங்கல ஸ்நானம் பண்ண வைத்து விட்டு அவர்களை தயாராக அனுப்பினர். 

தோழர்களின் கேலிக்கும் கிண்டல்களுக்கும் இடையே அழகிய முறையில் அவர்களை தயார்ப்படுத்தினர். 

பின் ஜனனியை மாத்திரம் கௌரி பூஜை செய்ய வைத்தனர். 

பின் ப்ரேமை மணமேடைக்கு அழைத்து வந்தனர். 

பட்டு வேஷ்டி சட்டையில் ஆணழகனாய் இருந்தான் அவன்.

அதன் பின் பாத பூஜை நடைபெற்றது. 

ஜனனியைக் காணும் வரை அனைத்தையும் ஒரு தவிப்போடே செய்தான். 

ஐயர் பொண்ண அழைச்சிட்டு வாங்கோ என்றதும் அவன் முகத்தில் தௌசன்ட் வாட்ஸ் பல்ப் எரிந்தது. 

ஆரவ், “டேய் ரொம்பத் தான் வடியிது தொடச்சிக்கோ..” என்க சுற்றியிருந்த அனைவரும் சிரிக்க ப்ரேம் அசடு வழிய சிரித்தான். 

அரக்கு நிறத்தில் தங்க நிற கற்கள் மற்றும் ஜரிகை வைத்து அலங்கரிக்கப்பட்ட பட்டுப் புடவை அணிந்து தோழிகள் சூழ மேடையேறியவளைக் கண்டு ப்ரேம் ஒரு நிமிடம் சொக்கித்தான் போனான்.

சஜீவ்வின் பார்வையோ செம்மஞ்சள் நிறப் பட்டில் முடியைப் பிண்ணலிட்டு ஒரு புறம் அதன் மீது மல்லிகை வைத்து வந்த நித்யா மீது பதிந்து அவளை இமைக்க மறந்து இரசித்தான். 

ஜனனி மற்றும் ப்ரேம் மூன்று முறை மாலை மாற்றிக் கொள்ள தொடர்ந்து கன்னிகாதானம் செய்யப்பட்டது. 

அனைத்து சடங்குகளும் நன் முறையில் முடிவடைந்த பின் ப்ரேம் ஜனனியின் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து பின் ஐயர் கட்டிமேளம்…கட்டிமேளம்… என்க மேள தாள வாத்தியங்களுக்கு நடுவில் அவள் சங்குக் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு ஜனனியை தன்னில் சரி பாதி ஆக்கிக்கொண்டான். 

அவர்களை அனைவரும் அட்சதை தூவி ஆசிர்வதித்தனர். 

பின் அக்னியை ஏழு முறை வலம் வந்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அவள் பூப் பாதத்தில் மெட்டி அணிவிக்க திருமணம் நன்முறையில் நிறைவுற்றது. 

பெரியவர்கள் அனைவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றதும் எல்லோரது முகத்திலும் புன்னகை பூத்தது. 

❤️❤️❤️❤️❤️

கதை எப்படி போகுது மக்களே… ஏதாச்சும் தவறு இருந்தா சொல்லுங்க… உங்க ஆதரவையும் வழங்குங்க… நன்றி…

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
7
+1
1
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    6 Comments

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.