Loading

ஜீவிகா நித்ய யுவனியை சஜீவ்வின் அறையில் விட்டு சென்று விட பெருமூச்சு விட்ட நித்ய யுவனி தலையை கைகளால் தாங்கியபடி கட்டிலில் அமர்ந்தாள்.

நித்ய யுவனி, “ஏன் என்ன இவ்வளவு சோதிக்கிற கடவுளே… சத்தியமா என்னால முடியல… இங்க திரும்பி வராம இருந்திருந்தா நல்லதுன்னு தோணுது…” என நினைத்துக் கொண்டிருக்க,

அறையைத் திறந்து கொண்டு வந்த சஜீவ் நித்ய யுவனியின் அருகில் சென்று, 

“என்னாச்சு யுவி… தலைவலியா…” எனக் கேட்டான்.

தலையை நிமிர்த்தி சஜீவ்வை வெற்றுப் பார்வை பார்த்த நித்யா,

“என்ன… அக்கறை இருக்குறது போல நடிக்கிறியா… நான் ஒன்னும் உனக்காக இந்த வீட்டுக்கு வரல… நான் வாழாவெட்டியா எங்க வீட்டுல இருந்தா என் அப்பா அம்மாவால அதை தாங்கிக்க முடியாது… அவங்களுக்காக மட்டும் தான் நான் உன் வீட்டுக்கு வந்தேன்… அதுக்காக உன் இஷ்டத்துக்கு என் மேல உரிமை எடுக்கனும்னு என்னைக்கும் நினைக்காதே…” என்றாள் கோவமாக.

நித்ய யுவனி தன்னை இந்தளவு வெறுப்பதில் சஜீவ் மனது அதிகம் வேதனைப்பட்டது.

அவன் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்க கீழிருந்து, “சர்வா…. சர்வா… வெளிய வா சர்வா… ஏய் நித்யா… கீழ வாடி…” என சுசித்ரா கத்தும் சத்தம் கேட்டது.

“வந்துட்டா அடுத்த சனியன்…” என்று முணுமுணுத்த நித்ய யுவனி கீழே சென்றாள்.

அடுத்து என்ன நடக்கப் போகுதோ என நினைத்த சஜீவ் அவசரமாக நித்ய யுவனியைப் பின் தொடர்ந்து கீழே சென்றாள்.

ஈஷ்வரி அழைத்து விஷயத்தைக் கூறியதுமே சுசித்ரா ரகுவரனுடன் அங்கு வந்திருந்தாள்.

பிரபு, ஜீவிகா, வீராஜ் மூவருமே இவர்கள் என்ன பிரச்சினை பண்ண போகிறார்களோ என பதட்டமாக இருந்தனர்.

நித்ய யுவனி கீழே வரவும் அவளிடம் வேகமாக சென்ற சுசித்ரா,

“ஏய்…‌ உனக்கு என்ன தைரியம் இருந்தா என் சர்வா லைஃப் உள்ளுக்கு திரும்ப வந்திருப்ப… ச்சீ உனக்கெல்லாம் வெக்கமா இல்ல…” என நித்யாவை அறையப் பார்க்க,

நித்யாவைத் தொடர்ந்து வந்த சஜீவ், “சுச்சி….” என ஆத்திரத்தில் கத்தினான்.

அதற்கு முன்னே தன்னை அறைய நீட்டிய சுசித்ராவின் கரத்தை பற்றி அவள் முதுகுக்கு பின்னே வளைத்த நித்ய யுவனி,

“இந்த கை நீட்டுற வேலையெல்லாம் என் கிட்ட வெச்சிக்காதே… நான் இன்னும் அஞ்சி வருஷத்துக்கு முன்னாடி நீ பாத்த அதே நித்ய யுவனின்னு நெனச்சிட்டு இருக்கியா… நீட்டின கைய உடச்சிட்டு தான் மறு வேலை பார்ப்பேன்…” என்றவள் சுசித்ராவின் கையை முறுக்க,

வலியில் முகத்தை சுருக்கிய சுசித்ரா தன் கையை விடுவிக்கப் போராட நித்ய யுவனியின் பிடியோ அழுத்தமாக இருந்தது.

ஜீவிகா, பிரபு, வீர், சஜீவ் நால்வருக்கும் அதனைக் காண சிரிப்பாக இருந்தது.

ரகுவரனும் ஈஷ்வரியும் பதறி சுசித்ராவை விடுவிக்க போராடினர்.

ஆனால் அவர்களின் பலத்தை விட நித்ய யுவனியின் மனதில் இருந்த காயம் தந்த பலம் பெரிதாக இருந்தது.

நித்ய யுவனி, “முதல்ல அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்படுறியே… உனக்கு வெக்கமா இல்ல… பேசாம இங்கிருந்து போயிடு… இல்ல அசிங்கமாயிடும்…” என்றவள் சுசித்ராவின் கையை விடாமல் இன்னும் முறுக்க,

ஈஷ்வரி, “ஏய் விடுடி என் மருமகள… விடுடின்னு சொல்றேன்ல….” என்க,

இன்னும் நன்றாக சுசித்ராவின் கையை முறுக்கி விட்ட பின்னே விடுவித்தாள் நித்ய யுவனி.

சுசித்ரா வலியில் இருக்க,

“இது தான் உனக்கு முதலும் கடைசியுமா சொல்றது… திரும்ப உன் ஆட்டத்த என் கிட்ட காட்டப் பார்த்த… இத விட பெரிய தண்டனையா கொடுப்பேன்…” என விரல் நீட்டி எச்சரித்த நித்ய யுவனி அங்கிருந்து சென்றாள்.

நித்ய யுவனி கையை முறுக்கியதால் ஏற்பட்ட வலியை விட அவள் தன்னை அனைவரின் முன்னும் அவமானப்படுத்தியதே பெரிதாகத் தோன்ற,

“நிச்சயமா இதுக்கு உன்ன பழி வாங்காம விட மாட்டேன்டி…” என வஞ்சகமாக நினைத்த சுசித்ரா சஜீவ்வின் வீட்டிலிருந்து வெளியேறினாள்.

ஈஷ்வரியை முறைத்த ரகுவரன் சுசித்ராவின் பின்னே வெளியேற எதுவும் செய்ய முடியாத தன் நிலையை நொந்த ஈஷ்வரி தன் அறைக்குள் நுழைந்து மூடிக் கொண்டார்.

அனைவரும் சென்று விட மற்ற நாள்வருமே வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தனர்.

ஜீவிகா, “ஐயோ… ஹஹஹா… என்னால முடியலப்பா… சுச்சிக்கே இந்த நிலமைன்னா அம்மாவ நெனச்சா தான் எனக்கு இன்னும் சிரிப்பா இருக்கு…” என மீண்டும் சிரித்தாள்.

வீர் சஜீவ்விடம், “ஆமா மச்சான்… தங்கச்சி ஒரு முடிவோட தான் வந்திருக்கா… எதுக்கும் நீங்களும் கொஞ்சம் பத்திரமா இருந்துக்கோங்க…” என நக்கலாகக் கூற சஜீவ் அதிர்ந்தான்.

_______________________________________________

“என்னங்க… எனக்கு ரொம்ப கவலையா இருக்குங்க… யுவனி அங்க போய் ரொம்ப நேரமாச்சு… ஆனா ஒரு கால் கூட பண்ணல… ” என வசந்தி ஏதோ யோசனையில் இருந்த ராஜாராமிடம் கூற,

“நீ தானே என் பொண்ண அந்த பையன் கூட அனுப்பி வைக்க சொல்லி கெஞ்சின… இப்ப எதுக்கு நீயே ஃபீல் பண்ணிட்டு இருக்க..” எனக் கோவமாகக் கேட்டார் ராஜாராம்.

வசந்தி, “நான் ஒன்னும் யுவனிக்கு கெட்டது செய்யனும்னு அங்க அனுப்பி வைக்கலயே… அவ உங்களுக்கு மட்டும் பொண்ணில்ல… எனக்கும் தான்… அதை ஞாபகம் வெச்சிக்கோங்க… கண்டவன் கூட அவள அனுப்பி வைக்கல… அவ புருஷன் கூட தான் போயிருக்கா… ஒரு அம்மாக்கு தன் பொண்ணோட மனசுல என்ன இருக்குன்னு நல்லாவே புரிஞ்சிக்க முடியும்… அதுவுமில்லாம யுவனியோட கண்ல அந்தப் பையன் மேல கோவத்தை தான் நான் பாத்தேன்… வெறுப்ப இல்ல… மாப்பிள்ளைக்கும் யுவனிக்கும் இடைல என்ன நடந்ததுன்னு பிரேம் சொல்லி ஏற்கனவே ஜானகி என் கிட்ட சொல்லி இருக்கா… நிச்சயம் யுவனிக்கு உண்மை தெரிஞ்சா மாப்பிள்ளை கூட சேர்ந்து சந்தோஷமா வாழுவா… கூடிய சீக்கிரம் இது நடக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்குங்க…” என்க,

சற்று நேரம் அமைதியாக இருந்த ராஜாராம்,

“நீ சொல்றது உண்மையா இருக்கலாம் வசு… ஆனா என் பொண்ணு மட்டும் திரும்ப அங்க இருக்குற யார் மூலமாவது கஷ்டப்பட்டா இந்தத் தடவ நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன்…” என அழுத்தம் திருத்தமாக சொல்லி விட்டு சென்றார்.

ராஜாராம் சென்றதும் வசந்தி, “அவங்க ரெண்டு பேரோடதும் சுயநலமில்லாத காதல்… நிச்சயமா ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்து சந்தோஷமா வாழ தான் போறாங்க…” என எண்ணிக் கொண்டார்.

_______________________________________________

பிரேம், “என்னடா சொல்ற… உனக்கென்ன பைத்தியமா… இப்படி பண்ணி வெச்சி இருக்க… ஆல்ரெடி உங்க ரெண்டு பேருக்கும் இடைல ஆயிரத்தெட்டு பிரச்சினை… இப்போ இது வேறயா….” என்க,

“எனக்கு வேற வழி தெரியல மச்சான்… யுவி இல்லாம இதுக்கு மேல என்னால இருக்க முடியும்னு தோணல… அதான் அப்படி பண்ணிட்டேன்…” என்றான் சஜீவ்.

சஜீவ் பிரேமுக்கு அழைத்து நடந்த களேபரங்களைக் கூற அதனைக் கேட்டுத்தான் பிரேம் அதிர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

“சரிடா… ஏதோ.. நடந்து முடிஞ்சத பத்தி பேசி ஒன்னும் ஆக போகுதில்ல.. நான் நாளைக்கு ஜனனிய கூட்டிட்டு நித்திய பார்க்க வரேன்… இத கேட்டு அவள் வேற எப்படி ரியாக்ட் பண்ண போறாளோ தெரியல… ஆஹ் சர்வா.. இன்னொரு விஷயம்… நானே ஆரவ் கிட்ட பாத்து அமைதியா சொல்லிக்குறேன்… நீ எதுவும் சொல்ல போகாதே… ஆல்ரெடி உன் மேல செம்ம காண்டுல இருக்கான்…” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான் பிரேம்.

நன்றாக இருட்டி இருந்தது.

ஜீவிகாவும் வீரும் சஜீவ் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அன்று அங்கேயே தங்கிக் கொண்டனர்.

சஜீவ் தன் அறைக்கு செல்ல அப்போது தான் நித்ய யுவனி இரவுடைக்கு மாறி குளியலறையிலிருந்து வந்தாள்.

நித்ய யுவனி நேராக வந்து கட்டிலிலிருந்த தலையணையொன்றையும் போர்வையையும் எடுத்து கீழே போட,

சஜீவ், “நீ மேலயே படுத்துக்கோ யுவி… எனக்கொன்னும் பிரச்சினை இல்ல…” என்றான் அவசரமாக.

அவனைப் பார்த்து பொய்யாக சிரித்த நித்யா, 

“ஓஹ்… சாருக்கு அப்படி வேற ஆசை இருக்கோ… இது ஒன்னும் எனக்கு படுக்க கீழ போடல… உனக்கு தான் போட்டேன்…” என்று அறை விளக்கை அணைத்து விட்டு பேசாது கட்டிலில் ஏறி படுத்துக் கொண்டாள்.

சஜீவ்வின் மனசாட்சியோ, “உனக்கு இந்த அவமானம் தேவையா…” எனக் கேட்டு அவனை காரி உமிழ,

“எல்லாம் என் தலையெழுத்து…” எனக் கூறி தலையில் அடித்துக் கொண்டவன் கீழே படுத்தான்.

அனைவருமே உறங்கி இருக்க ஈஷ்வரி மட்டும் இன்னும் உறங்காமல் மொபைலில் சுசித்ராவுடன் பேசி ஏதோ திட்டமிட்டுக் கொண்டிருந்தார்.

_______________________________________________

மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் நித்ய யுவனி விழித்துக் கொள்ள அறை இன்னும் இருட்டாகவே இருந்தது.

சோம்பல் முறித்தபடி கட்டிலை விட்டு இறங்கியவள் குளியலறைக்குச் செல்ல எத்தனிக்க,

கீழே படுத்திருந்த சஜீவ்வைக் கவனிக்காமல் தடுக்கி அவன் மீதே விழுந்தாள்.

சஜீவ் பதறி, “ஐயோ அம்மா….” எனக் கத்த,

அவசரமாக தன் கரம் கொண்டு அவன் வாயை அடைத்த நித்ய யுவனி,

“ஷூ… கத்தாதே… நான் தான்… எல்லாரும் இன்னும் தூங்கிட்டு இருக்காங்க…” என்க,

தூக்கத்தில் இருந்தவன் மீது ஏதோ விழவும் பதறி கத்தியவன் நித்ய யுவனியின் குரலைக் கேட்டு அவளையே கண்ணெடுக்காமல் பார்த்தான்.

விடிந்தும் விடியாத அந்த அதிகாலை நேரத்தில் அறைக்குள் இருந்த மங்கிய வெளிச்சத்தில் சஜீவ்வின் கண்களுக்கு தன்னவள் தேவதையாகவே தெரிந்தாள்.

சஜீவ் நித்ய யுவனியை ரசித்தபடி இருக்க அப்போது தான் சஜீவ்வின் மீது அவள் மொத்தமாக படர்ந்திருப்பது புரிந்து அவசரமாக எழுந்து கொண்டாள் நித்ய யுவனி.

சஜீவ்வின் பார்வை நித்ய யுவனியை ஏதோ செய்ய அதனை மறைப்பதற்காக அவசரமாக குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அவளையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த சஜீவ் அதற்கு மேல் தூங்க மனமில்லாமல் எழுந்து சமையலறை சென்று தனக்கும் நித்ய யுவனிக்கும் காஃபி கலந்து எடுத்து வந்தான்.

குளித்து முடித்து தலையைத் துவட்டியபடி வெளியே வந்தவள் சஜீவ் தந்த காஃபியை எதுவும் கூறாது வாங்கிப் பருகினாள்.

நேற்று இருந்த குழப்பத்தில் முழு நாளும் எதுவுமே சாப்பிடாது பசியிலே இருந்தாள்.

இரவு ஜீவிகா சாப்பிட அழைத்தும் மறுத்து விட்டாள்.

அதனால் அப்போதைக்கு அவளுக்கு அந்த காஃபி தேவைப்பட்டது.

குடித்து முடித்து கப்பை வைத்தவள் சஜீவ்வைப் பார்த்து தேங்க்ஸ் என்றாள்.

சஜீவ்வோ அவளைப் பார்த்து புன்னகைக்க நித்ய யுவனி அதனைக் கவனத்திற் கொள்ளாது லேப்டாப்பையும் மொபைலையும் எடுத்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்.

பேங்களூரில் ஏற்கனவே வேலை பார்த்த மருத்துவமனைக்கு தனது ராஜினாமோ கடிதத்தை அனுப்பியவள் கூடுதல் குறிப்பாக தன்னை சென்னையிலேயே ஒரு மருத்துவமனைக்கு இடமாற்றுமாறு வேண்டிக் கொண்டாள்.

பின் சித்தார்த்துக்கு அழைத்து சற்று நேரம் பேசி விட்டு தன் வேலையைக் கவனித்தாள்.

சஜீவ்வும் தயாராகி எங்கோ வெளியே சென்று விட நித்ய யுவனிக்கும் வெளியே சென்று யார் முகத்திலும் முழிக்க விருப்பம் இருக்கவில்லை.

அதனால் அறையிலேயே இருந்து கொண்டாள்.

பின் நன்றாக விடிந்து விட திடீரென கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் ஜனனி.

நித்யா அதிர்ந்து, “ஜெனி…” என எழுந்து நிற்க,

அவளிடம் வந்த ஜனனி பட்டென நித்யாவின் கன்னத்தில் அடித்தாள்.

நித்ய யுவனி கன்னத்தில் கை வைத்தபடி கண்கள் கலங்கி நிற்க,

ஜனனி, “உனக்கு இப்ப கூட உன் சுயநலம் தான் முக்கியமா போச்சில்ல… நீ திடீர்னு காணாம போனா நாங்க எல்லாரும் எவ்வளோ கஷ்டப்படுவோம்னு கூட யோசிச்சி பார்க்கலல்ல… இப்போ கூட இவ்வளவு நடந்திருக்கு… என் கிட்ட கூட சொல்லனும்னு உனக்கு தோணல இல்லயா….” என்றாள் கோவமாக.

நித்ய யுவனி, “அப்படி இல்ல ஜெனி… யாரு கூடவும் பேசுற நிலமைல நான் இருக்கல… இதுல இந்த சர்வேஷ் வேற இப்படி பண்ணவும் என்ன பண்ணனும்னே எனக்கு புரியல… நீயும் என் மேல கோவப்படாதே ஜெனி… நான் ஆல்ரெடி ரொம்ப உடஞ்சி போய் இருக்கேன்…” என்றாள் அழுதுகொண்டு.

அதற்கு மேல் தன் தோழியை அழ விட்டு வேடிக்கை பார்க்க முடியாத ஜனனி நித்ய யுவனியை அணைத்துக் கொண்டாள்.

சற்று நேரம் ஜனனியை அணைத்துக் கொண்டு அழுத நித்ய யுவனி பின் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு,

“சரி அதெல்லாம் விடு… நீ எப்படி இங்க… பிரேம்ணா கூட வந்தியா…” என்க,

“ஆமா நித்து… நைட்டு சஜீவ் அண்ணா பிரேமுக்கு கால் பண்ணி எல்லா விஷயத்தையும் சொன்னாரு… அதான் விடிஞ்சதும் ரெண்டு பேரும் கிளம்பி வந்துட்டோம்… கீழ தான் அண்ணா கூட பேசிட்டு இருக்காரு…” என்றாள் ஜனனி.

நித்ய யுவனி, “குட்டி பாப்பா என்ன பண்ணுது…” என குனிந்து ஜனனியின் வயிற்றைத் தடவியபடி கேட்க,

“ஹ்ம்ம்… என் பொண்ணு அவ அத்தை கூட கோவமா இருக்காளாம்…” என ஜனனி கூறவும்,

அவளைப் பார்த்து சிரித்த நித்யா, “அப்படி எல்லாம் இருக்காது… என் மருமகளுக்கு அவ அத்தைய பத்தி நல்லா தெரியும்… ” என்றவள் ஜனனியின் வயிற்றை முத்தமிட்டாள்.

சிறிது நேரம் இருவரும் குழந்தை பற்றி பேசி சிரித்துக் கொண்டிருக்க,

ஜனனி, “நித்து… நான் ஒன்னு சொன்னா கேப்பியா…” என்க நித்ய யுவனி சரி என தலையசைக்கவும்,

“உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்த முறை வேணா தப்பா இருக்கலாம்… ஆனா இது தான் உன் வாழ்க்கை நித்து…. உனக்கு சஜீவ் அண்ணா மேல இருக்குறது கோவமே தவிர வெறுப்பு இல்ல… கூடிய சீக்கிரம் நீ அவர புரிஞ்சிப்ப… எல்லாம் சரி ஆகிடும்… முடிஞ்சா அவர் சொல்ல வரத கேட்க முயற்சி பண்ணு…” என ஜனனி கூறவும் நித்யா எதுவும் கூறாமல் அமைதியாகினாள்.

பின் இருவரும் இறங்கி கீழே வர ஈஷ்வரி அடிக்கடி வாசலையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட நித்ய யுவனி,

“என்ன நம்ம மாமியார் அடிக்கடி வாசலையே பார்த்துட்டு இருக்காங்களே… ஏதோ தப்பா இருக்கே… பார்க்கலாம்…” என நினைத்தாள்.

பின் சிறிது நேரம் பிரேம், ஜனனி இருவரும் பேசிக்கொண்டு இருந்து விட்டு கிளம்பினர்.

அவர்கள் சென்றதும் நித்யா மீண்டும் அறைக்குச் செல்லப் பார்க்க சரியாக தனது உடைமைகளுடன் வாசலில் வந்து நின்றாள் சுசித்ரா.

❤️❤️❤️❤️❤️

சாரி மக்களே… நேத்து யூடி தர கிடைக்கல… சீக்கிரம் அடுத்த யூடிய தர ட்ரை பண்றேன்… நன்றி.. ☺️

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    5 Comments

    1. சூப்பர் எபி சிஸ்😍😍😍😍 சுச்சி கையே உடைச்சி விட்டு இருக்கலாம் ஜஸ்ட்டு மிஸ்😶. இனி சுச்சி வீட்டுல வந்தாலும் கூட பரவால யுவி மாஸா சமாளிச்சுக்குவோ😎😎😎😎.

      1. Author

        😂😂apdi ore thadawala punishment kudutha sari waradhe… Knjm knjm a kadhara weipom 🤪

    2. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    3. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.