இமைகள் மூடியிருக்க கண்ணின் கருமணிகள் மாத்திரம் அங்கும் இங்கும் அசைந்தன.
திடீரென, “வேணாம்…..” என கத்திக் கொண்டே எழுந்தமர்ந்தாள் நித்ய யுவனி.
நித்யாவின் கத்தல் கேட்டு சித்தார்த்தும் சஜீவ்வும் ஹாலிலிருந்து ஓடி வந்தனர்.
அவள் பக்கத்தில் ஓடிய சஜீவ், “யுவி…. யுவி… என்னாச்சு… ஆர் யூ ஓக்கே…” எனப் பதட்டமாகக் கேட்டான்.
சஜீவ்வின் பதட்டமான முகத்தையே ஒரு நொடி வெறித்த நித்ய யுவனி கட்டிலுக்கு மறு பக்கம் நின்று கொண்டிருந்த சித்தார்த்திடம் திரும்பி,
“சித்… நான் இந்தியா போகனும்… எனக்கு இதுக்கு மேல ஒரு விமிஷம் கூட இங்க இருக்க பிடிக்கல..” என்றாள்.
சித்தார்த், “விளையாடுறியா நிது… நாம எதுக்காக இங்க வந்திருக்கோம்னு மறந்துட்டியா…” எனக் கேட்க,
“அதெல்லாம் எனக்கு தெரியாது சித்… நான் போயே ஆகனும்…” எனப் பதிலுக்கு நித்யா பிடிவாதமாக கூற,
“இனாஃப் நிது… நீ என்ன சின்ன குழந்தையா… எதுக்கெதுக்கு பிடிவாதம் பிடிக்கனும்னு தெரியலயா… நெனச்சா யூ.எஸ். போகணும்குற… நெனச்சா இந்தியா போகணும்குற… இது எங்களுக்கு கிடைச்ச எவ்வளவு பெரிய ஆப்பர்ச்சுனிட்டி தெரியுமா… முதல்ல இந்த ஆஃபர வேணாம்னு சொல்லிட்டு இருந்த… இப்போ பாதில தூக்கி போட்டுட்டு கிளம்புறன்னு சொல்ற… முடியாது நிது… நாம இன்னும் டூ வீக்ஸ் இருந்து இந்த கேம்ப முடிச்சிட்டு தான் இந்தியா கிளம்புறோம்… எப்போதும் நீ சொல்றத நான் கேக்குறேன்ல… இன்னெக்கி நான் சொல்றத நீ கேளு… தெட்ஸ் இட்…” எனக் கோவமாக கூறினான் சித்தார்த்.
சித்தார்த்தைப் பார்த்து முறைத்த நித்ய யுவனி திரும்பி சஜீவ்வையும் ஒரு வெற்றுப் பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து வேகமாக கீழே ஃப்ளாட்டுடன் இருந்த பார்க்கிற்குச் சென்றாள்.
போகும் நித்யாவையே சஜீவ் கவலையாக நோக்க,
சித்தார்த், “சாரி ப்ரோ… உங்க முன்னாடியே உங்க யுவிய திட்டிட்டேன்… பொறுமையா சொன்னா நிச்சயம் அவ கேக்க மாட்டா.. சரியான பிடிவாதக்காரி… அதான் கொஞ்சம் கத்திட்டேன்… என்ட் ஜனனி உங்கள பத்தி என் கிட்ட சொன்னாள்… என்ன மாதிரி ஒரு சிச்சுவேஷன்ல நீங்க அப்படி ஒரு முடிவு எடுத்தீங்கன்னும்… நாம இந்தியா போனோம்னா நிதுவோட மனச மாத்துறது ரொம்ப கஷ்டம்…ஏன்னா அங்க அவளுக்கு சப்போர்ட்டுக்கு நிறைய பேர் இருக்காங்க… இந்த டூ வீக்ஸ்ல எப்படியாவது நிதுவ சமாதானப்படுத்துங்க… மத்தத அப்புறம் பாத்துக்கலாம்… நீங்களும் கீழ போங்க ப்ரோ..” எனக் கூற,
அவனை நன்றிப் பார்வை பார்த்த சஜீவ் நித்யாவை தேடி கீழே சென்றான்.
கீழே பார்க்கில் ஒரு ஓரமாகப் போடப்பட்டிருந்த கல் பெஞ்ச்சில் அமர்ந்து கொண்டு கழுத்தில் புதிதாகத் தொங்கிய தாலியை இறுக்கிப் பிடித்தவாறு அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள் நித்ய யுவனி.
நித்யாவின் பார்வை மட்டுமே அவர்கள் பக்கம் இருக்க சிந்தனையோ தறி கெட்டு ஓடியது.
நித்யாவைத் தேடி வந்த சஜீவ் தூரத்தில் அவளைக் கண்டு கொண்டவன்,
“மை டியர் பொண்டாட்டி… நீ என்ன தான் ட்ரை ப்ண்ணாலும் இனி உன்னால என்ன விட்டு போக முடியாது… போக விடவும் மாட்டேன்… தோ வரேன் பேபி உனக்கு சின்னதா ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட் தர…” எனக் கூறி சிரித்துக் கொண்டான்.
நித்ய யுவனி யோசனையுடன் அமர்ந்திருக்க அவள் பக்கத்தில் வந்தமர்ந்தான் சஜீவ் சர்வேஷ்.
ஆனால் நித்ய யுவனியோ அவன் வந்தமர்ந்தது கூட தெரியாமல் இருந்தாள்.
அவளை இன்னும் சற்று நெருங்கி அமர்ந்த சஜீவ் மெதுவாக அவள் தோளில் கை போடவும் வெடுக்கென திரும்பினாள் நித்ய யுவனி.
தன் அருகில் சஜீவ் தன் தோள் மீதே கை போட்டு அமர்ந்து இருக்கக் கண்டவள் அவன் கையை தள்ளி விட முயல,
சஜீவ்வோ தன் கையை அசைப்பேனா என்றிருந்தான்.
நித்யா, “மரியாதையா கைய எடுடா… என்ன உரிமைல என் தோள்ள கைய போட்டு உட்கார்ந்திருக்க…” என்க,
சஜீவ்வின் பார்வை அவள் கழுத்துக்கு சென்றது.
சஜீவ்வின் பார்வை சென்ற இடத்தைக் கவனித்தவள் கழுத்தில் இருந்த தாலியில் அவன் பார்வை இருக்கவும்,
“ஓஹ்… இதை என் கழுத்துல கட்டிட்டா உனக்கு எல்லா உரிமையும் வந்துடுமா… முதல்ல இத கழட்டி வீசுறேன் பாரு…” என்ற நித்ய யுவனி தாலியைக் கழற்றப் பார்க்க,
சஜீவ் அமைதியாக, “என்ன பேபி… உன் புருஷன் செத்துட்டானா…” எனக் கேட்டான்.
தாலியைக் கழற்ற கைகளைத் தூக்கிய நித்யா சஜீவ் கேட்ட கேள்வியில் அதிர்ந்து பாதியிலேயே நிறுத்தினாள்.
அதே அதிர்ச்சியில் சஜீவ்வின் முகத்தை பார்க்க,
அவன் முகத்தில் இருந்த சிரிப்பைக் கண்டு,
“இந்த கயிற்ற என் கழுத்துல மாட்டினதும் நீ எனக்கு புருஷன் ஆகிடுவியா…” எனக் கேட்ட நித்யா மீண்டும் தாலியைக் கழற்றப் பார்க்க,
சஜீவ்வோ, “அதுவும் சரி தான்… இதை உன் கழுத்துல கட்டிட்டா மட்டும் நான் உனக்கு புருஷன் ஆகிடுவேனா… நீ தாராளமா கழட்டி வீசு பேபி… அதுக்கப்புறம் எனக்கு ஏதாவது ஆகி நான் செத்துட்டாலும் உனக்கு என்ன வந்தது… யூ கன்ட்னியு…” என்கவும்,
கழுத்திலிருந்து கழற்றத் தூக்கிய தாலியை இறுக்கப் பற்றிக் கொண்டாள் நித்ய யுவனி.
பின் அவனைத் தீப் பார்வை பார்த்தவள் இன்னும் சஜீவ்வின் கரம் தன் தோள் மீதிருக்கவும்,
அவன் கையைப் பிடித்து பற்தடம் பதியும் வரை கடித்து வைத்தாள்.
சஜீவ், “ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்…. வலிக்கிது… விடுடி ராட்சசி….” என வலியில் கத்தியவன் நித்யாவின் தோள் மீது போட்டிருந்த கையை இழுத்தெடுத்து அவள் கடித்த இடத்தை ஊதினான்.
சஜீவ் கையை எடுத்ததும் அவசரமாக எழுந்து நின்ற நித்ய யுவனி,
அவன் முகத்தின் முன் விரல் நீட்டி, “திரும்ப ஒரு தடவ என்ன தொடனும்னு நெனச்ச… இத விட மோசமா பனிஷ் பண்ணுவேன்..” எனக் கோவமாக எச்சரித்தவள் அவனை முறைத்து விட்டு தாலியைக் கழற்றாமலே அங்கிருந்து சென்றாள்.
அவள் செல்லும் வரை வலியில் காயத்தை ஊதிக் கொண்டிருந்த சஜீவ் அவள் சென்றதும் புன்னகைத்தவன்,
நித்ய யுவனி பற்தடம் பதிய தன் கையில் கடித்து வைத்த இடத்தைப் பார்த்து,
“என் யுவியோட முதல் லவ் பைட்…” என்று அவ்விடத்தை முத்தமிட்டான்.
மாலை நித்ய யுவனி ஹாலில் அமர்ந்து புக் படித்துக் கொண்டிருந்தாள்.
தீபக் வீட்டுக்குச் சென்று தனது லக்கேஜ்ஜை எடுத்து வந்த சஜீவ்வும் சித்தார்த்தும் சிரித்தபடி ஏதோ பேசிக் கொண்டு வந்தவர்கள்,
ஹாலில் நித்ய யுவனி இருப்பதைக் கண்டு அவசரமாக முகத்தை மாற்றிக் கொண்டனர்.
இதனை நித்ய யுவனி அவதானிக்கவில்லை.
உள்ளே வந்த சஜீவ் நித்யாவுக்கு கேட்க வேண்டும் என்றே லக்கேஜை சத்தம் வர கீழே வைக்கவும் புத்தகத்தில் மூழ்கிக் கிடந்தவள் கவனம் சிதறி அவனை ஏறிட்டான்.
தன் முன்னிருந்த லக்கேஜ்ஜைக் கண்டு சித்தார்த்திடம்,
“யாரோட லக்கேஜ் சித் இது… இங்க எதுக்காக கொண்டு வந்து வெக்கிற…” என்க,
சித்தார்த் பதிலளிக்க முன் சஜீவ்,
“என் லக்கேஜ் தான்… நான் ரிட்டன் இந்தியா போகும் வர என் பொண்டாட்டி கூட தான் தங்க போறேன்…” என்றதும் காளி அவதாரம் எடுத்தாள் நித்ய யுவனி.
“நீ எதுக்கு இங்க தங்கனும்… மரியாதையா இங்க இருந்து போயிடு சர்வேஷ்… வேணுமா போய் சித் கூட தங்கிக்கோ…” என நித்ய யுவனி கோவமாகக் கூற,
அவசரமாக சித்தார்த், “என்னால எல்லாம் இவன் கூட தங்க முடியாது… வந்த நேரத்துல இருந்து என் கிட்ட சண்ட போட்டுட்டே இருக்கான்… எனக்கு இவன பாத்தாலே கடுப்பாகுது…” என்றவன் நித்ய யுவனி காணாதவாறு சஜீவ்விற்கு கண்ணடித்தான்.
அதனைப் புரிந்து கொண்ட சஜீவ், “ஆமா நான் மட்டும் இவரு கூட தான் தங்குவேன்னு ஒத்த கால்ல நிக்கிறோம் பாரு… போய்யா… உன் கூட மனுஷன் தங்குவானா…” என சஜீவ்வும் கூற,
சித்தார்த் அவனுக்கு ஏதோ பதிலளிக்க வரவும்,
“நிறுத்துங்க ரெண்டு பேரும் முதல்ல… இங்க பாரு சர்வேஷ்… நீ எங்க வேணாலும் போய் தங்கிக்கோ… ஆனா என்னோட ஃப்ளாட்ல உனக்கு இடம் கிடையாது…” என்றாள் கோவமாக நித்ய யுவனி.
சஜீவ்வோ, “அடப் போம்மா… யாரு உன் கிட்ட பர்மிஷன் எல்லாம் கேட்டது… நான் என் பொண்டாட்டி கூட தங்க போறேன்னு ஜஸ்ட் இன்ஃபார்ம் பண்ணேன்…. ப்பாஹ்… ரொம்ப டயர்டா இருக்கு… முதல்ல போய் நல்லா குளிச்சிட்டு தூங்கனும்…” என்றவன் லக்கேஜ்ஜுடன் அங்கிருந்த அறைக்குள் நுழைந்தான்.
அவன் செல்வதை முறைத்தபடி பார்த்துக் கொண்டிருந்த நித்ய யுவனி, சித்…” என்று ஏதோ சொல்ல வரவும்,
வராத காலை வந்தது போல் காட்டிக் கொண்டு மொபைலைக் காதில் வைத்த சித்தார்த், “ஆஹ் சொல்லு டார்லிங்…” என்று பேசியவாறு அங்கிருந்து எஸ்கேப் ஆகினான்.
காலால் தரையை உதைத்த நித்ய யுவனி கோவத்துடன் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தாள்.
இங்கோ ராஜாராம் பேப்பர் படித்துக் கொண்டிருக்க அவரிடம் வந்த வசந்தி,
“என்னங்க… யுவனி கால் பண்ணலயாங்க… எனக்கு மனசுக்கு என்னவோ போல இருக்கு… என் பொண்ணுக்கு ஏதோ பிரச்சினை போல தோணுது… ” என்க,
அவரைப் பார்த்து சிரித்த ராஜாராம், “என்ன வசு… உனக்கு எதிர்காலத்த பத்தி எல்லாம் சொல்ல முடியும்னு எனக்கு இப்ப தான் தெரியும்…” என அவரைக் கேலி செய்தார்.
வசந்தி, “விளையாடாதீங்கங்க… நான் நிஜமா தான் சொல்றேன்… பத்து மாசம் வயித்துல சுமந்து பெத்த எனக்கு தெரியாதா என் பொண்ணுக்கு ஏதோ பிரச்சினைன்னு…” என்க,
ராஜாராம், “வசு… நீ தேவையில்லாம டென்ஷன் ஆகுற… அப்படி ஏதாவது இருந்தா நம்ம பொண்ணு சொல்லுவா… நீ சும்மா மனச போட்டுக் குழப்பிக்காதே…” என சொல்லிக் கொண்டிருக்க புதிய வெளிநாட்டு எண்ணொன்றிலிருந்து அவரது மொபைலுக்கு அழைப்பு வந்தது.
ராஜாராம் குழப்பமாகப் பார்க்க வசந்தி,
“யுவனியா தான் இருப்பா… எடுத்து பேசுங்க…” என்றதும் அழைப்பை ஏற்று, “ஹலோ…” என்றார்.
மறுபக்கம் நித்ய யுவனி, “அப்பா… நான் யுவனி பேசுறேன்…” என்க,
அவசரமாக ஸ்பீக்கரில் போட்ட ராஜாராம்,
“யுவனிம்மா… எப்படிடா இருக்க… நீ எப்போ திரும்ப வருவடா…” எனக் கேட்டார்.
“நான் நல்லா இருக்கேன்பா.. நீங்களும் அம்மாவும் நல்லா இருக்கீங்களா… இன்னும் டூ வீக்ஸ்ல வரேன்பா…” என்றாள் நித்ய யுவனி.
வசந்தியோ பதட்டமாக, “யுவனி… நீ நல்லா இருக்கேல்ல… உனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையே…” என்க அவளோ அமைதி காத்தாள்.
பின் நித்ய யுவனி, “அம்மா… அப்பா… ரெண்டு பேரும் என்ன மன்னிச்சிருங்க…” என்க,
வசந்தி, “என்னாச்சு யுவனி.. ஏன் மன்னிப்பெல்லாம் கேட்குற…” என்றார்.
நித்ய யுவனியோ மனதில், “என்னால இங்க நடந்த விஷயத்த சொல்ல முடியலம்மா… நிச்சயமா உங்களால இதை தாங்கிக்க முடியாது… எதுவா இருந்தாலும் நான் நேர்லயே உங்க கிட்ட சொல்றேன்…” என நினைத்துக் கொண்டவள்,
“நான் ஒரு இக்கட்டான நிலமைல மாட்டிக்கிட்டு இருக்கேன்மா… அதுல இருந்து எப்படி வெளிய வரதுன்னு தெரியல… நான் திடீர்னு சொல்லாம கொள்ளாம வீட்டுல இருந்து வந்தது வேற உங்க மனச நோகடிச்சிருக்கும்… ரெண்டு பேரும் என்ன மனிச்சிடுங்க…” என்றாள்.
ராஜாராம், “எங்களுக்கு எங்க பொண்ண பத்தி தெரியும் யுவனிம்மா… நிச்சயமா நீ தெரிஞ்சே எந்த தப்பும் பண்ண மாட்ட… எங்களுக்கு உன் மேல நம்பிக்க இருக்குமா… அதே போல நீ எடுக்குற எந்த முடிவும் சரியா இருக்கும்னு நம்புறோம்… நீ ஏதோ இக்கட்டான நிலமைல இருக்கேன்னு சொன்னியே… கண்டிப்பா உன் அப்பா அம்மா உனக்கு துணையா இருப்போம்…” என்கவும் நித்ய யுவனிக்கு நிம்மதியாக இருந்தது.
பின் இருவரிடமும் சிறிது நேரம் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
இரவு உணவை சமைக்க சமையலறைக்குள் நுழைந்த நித்ய யுவனி வழமை போல் தனக்கும் சித்தார்த்துக்கும் மட்டும் சமைக்க தயாராக அப்போது தான் சஜீவ்வும் இருக்கும் நினைவு வந்தது.
வேண்டுமென்றால் அவனே சமைத்து சாப்பிட்டுக் கொள்ளட்டும் என நினைத்தவளின் மனசாட்சியோ அதற்கு இடம் கொடுக்கவில்லை.
ஒரு வைத்தியராக இருந்து கொண்டு ஒருவரை பட்டினியில் போட மனசாட்சி ஒத்துக் கொள்ளாது சஜீவ்விற்கும் சேர்த்தே சமைத்தாள்.
காலையில் அவசரமாக கேம்பிற்கு செல்ல வேண்டும் என்பதால் சித்தார்த், நித்ய யுவனி இருவரும் ப்ரெட் ஜாம் என ஏதாவது இலகுவான உணவை உண்பர்.
ஹாஸ்பிடல் கேன்டீனில் பகல் உணவையும் எடுப்பதால் இரவுக்கு மட்டும் தான் அவர்கள் சமைக்க வேண்டும்.
சித்தார்த்துக்கு சமைக்கத் தெரிந்தாலும் யூ.எஸ். வந்த நாளிலிருந்து தானே இரவுணவை அவனுக்கும் சேர்த்து சமைப்பாள்.
சித்தார்த்திற்கு அழைத்து சாப்பிட வரக் கூறியவள் மறந்தும் சஜீவ்விடம் கூறவில்லை.
தன் மனசாட்சிக்காக அவனுக்கு சமைத்து வைத்து உள்ளேன்.
வேண்டும் என்றால் வந்து சாப்பிட்டுக் கொள்ளட்டும் என நினைத்தாள்.
அவசரமாக சாப்பிட்டு முடித்தவள் சஜீவ் வரும் முன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
நித்ய யுவனி சித்தார்த்தை சாப்பிட அழைக்கும் போது சஜீவ்வும் அவனுடன் தான் இருந்தான்.
இருவருக்கும் இடையில் நல்ல நட்பொன்று உருவாகி இருந்தது.
இருவரும் நித்ய யுவனியின் ஃப்ளாட்டுக்குள் நுழைய ஹால் டீப்பாயில் அவர்களுக்கான உணவு மூடி வைக்கப்பட்டிருந்தது.
பேசி பேசியே உணவை உண்டு முடித்தனர்.
பின் சித்தார்த் கிளம்ப சஜீவ் நித்ய யுவனி இருந்த அறைக்குள் நுழைந்தான்.
அறை விளக்கை அணைத்து விட்டு ஸ்டடி டேபிலில் அமர்ந்து டேபில் லேம்பை ஒளிக்க விட்டு ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள்.
அவன் வந்ததை அறிந்தும் கூட நித்ய யுவனி தன் பாட்டுக்கு இருந்தாள்.
குளியலறைக்குள் நுழைந்து ஃப்ரஷ் ஆகி விட்டு வந்த சஜீவ் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.
சஜீவ், “என்ன இவ… நாம வந்து அவ ரூம்லே உக்காந்துட்டு இருக்கோம்… எதுவும் சொல்லாம அமைதியா இருக்கா… இது சரி இல்லையே… ஏதாவது செஞ்சாகணுமே…” என நினைத்தவன் மனதில் ஒரு யோசணை வந்தது.
தனக்குள் சிரித்துக் கொண்டவன் கட்டிலில் ஒரு கையில் தலையை தாங்கி நித்ய யுவனியின் பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டான்.
பின் நித்ய யுவனிக்கு கேட்கும் விதமாக,
“எல்லாம் நம்ம நேரம்… இன்னைக்கு தான் புதுசா கல்யாணம் ஆகி இருக்கு… சரின்னா இப்போ நமக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்திருக்கனும்… ஆனா எனக்கு வாய்ச்ச பொண்டாட்டி எப்போதுமே புக்கோட இருக்கா… உன் நிலமை ரொம்ப மோசம் சர்வேஷ்… நீயெல்லாம் எப்போ குடும்பம் நடத்தி எப்போ குழந்தை குட்டி பெத்துக்க போற…” எனக் கூறினான்.
நித்ய யுவனியின் காதில் புகை வராத குறை.
எழுதிக் கொண்டிருந்த டயரியை பட்டென மூடி வைத்தவள் கோவமாக எழுந்து கட்டிலின் பக்கம் வர சஜீவ்விற்கு திக் என்றானது.
தான் சொன்னதைக் கேட்டு காலையில் போலவே ஏதாவது செய்து விடத் தான் வருகிறாள் என நினைக்க,
நித்ய யுவனியோ கட்டிலில் இருந்த தலையணை ஒன்றையும் பெட்ஷீட்டையும் எடுத்தவள்,
“ஒருத்தனுக்கு கூழுக்கே வழி இல்லையாம்… இதுல பிரியாணி கேக்குதாம்…” என முணுமுணுத்து விட்டு அறையிலிருந்து வெளியேறினாள்.
அந்த ஃப்ளாட்டில் ஒரு அறை மாத்திரமே இருப்பதால் ஹால் சோஃபாவில் வந்து படுத்துக் கொண்டாள்.
நித்ய யுவனி கூறிச் சென்றது கேட்டு சஜீவ்வின் மனசாட்சி அவனைக் காரித் துப்பியது.
சற்று நேரத்தில் எழுந்து அறையிலிருந்து வெளியே வர நித்ய யுவனி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
மெதுவாக அவளிடம் சென்றவன் அவளின் உறக்கம் கலையாதவாறு பூங்குவியலொன்றைத் தூக்குவது போல் தன் கரத்தில் ஏந்திக் கொண்டு அறைக்குச் சென்று கட்டிலில் படுக்க வைத்தான்.
நித்ய யுவனியையே பார்த்துக் கொண்டிருந்தவன் மனதில், “இங்க இருக்கும் வர பிரச்சினை இல்ல… இந்தியா கிளம்பினதுக்கு அப்புறம் அந்த மூணு பேரு கிட்ட இருந்தும் உன்ன எப்படி பாதுகாப்பேன் யுவி…” என்ற எண்ணம் தோன்றியது.
உறக்கத்தில் கூட நெற்றி சுருக்கி ஒரு வித குழப்பத்தில் தான் இருந்தாள் நித்ய யுவனி.
மெதுவாக அவள் முகம் நோக்கிக் குனிந்த சஜீவ் அவள் நெற்றியில் பட்டும் படாமல் இதழ் ஒற்றி எடுத்தான்.
உறக்கத்திலே நித்ய யுவனியின் நெற்றி சுருக்கங்கள் விரிந்து முகத்தில் புன்னகை வந்தது.
அவளுக்கு போர்வை போர்த்தி விட்ட சஜீவ் ஹால் சோஃபாவில் வந்து படுத்துக் கொண்டான்.
ஏதோ சிந்தனையில் கிடந்தவனை சற்று நேரத்தில் நித்ராதேவி அணைத்துக் கொண்டது.
❤️❤️❤️❤️❤️
– Nuha Maryam –
Spr sis😍😍😍 waiting 4 nxt epi. India la tha ellam villan/villain’s irukanga🤭🤭🤭🤭.
Yh… Seekirame villains a kalathula irakkidalam 😜
மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.