Loading

வீட்டிற்குள் நுழைந்தவள் மனதில் ஆயிரம் நினைவலைகள்.

 

கழுத்திலிருந்த ஸைட் பேக்கை கட்டிலில் வீசிவிட்டு அவளும் கட்டிலில் சரிந்தாள் கண்களை மூடியபடி.

 

அவளின் எண்ண ஓட்டங்களோ எட்டு வருடங்கள் முன்னோக்கி பயணித்தன.

 

டென்த் எக்ஸேம் முடிந்து ஒரு மாத விடுமுறைக்கு தந்தை ராஜாராமுடன் காரில் ஜன்னல் புறமாக இயற்கையை ரசித்த படி சென்னையிலிருந்து ஊட்டி நோக்கி கிளம்பினாள் நித்ய யுவனி. 

 

பதினாறு வயது பருவ மங்கை. ராஜாராமே அவர் குடும்பத்தில் மூத்தவர்.

அவருக்கு ஒரு தம்பி ராஜகோபால். அவர் கலைவாணி என்பவரை திருமணம் செய்து ஊட்டியில் வசிக்கிறார்.

இரண்டு பிள்ளைகள். மூத்தவள் மாலதி ப்ளஸ் டூ படிக்கிறாள். மகன் நவீன் எட்டு வயது.

ராஜாராமின் தங்கை சுபத்ரா. கணேஷ் என்பவரை திருமணம் செய்து சென்னையிலே வசிக்கிறார். ஒரு மகன் அஜய் டுவல்த் படிக்கிறான்.

விடுமுறையை கழிக்க ராஜகோபால் வீட்டிற்கே இப்போது நித்ய யுவனி செல்கிறாள்.

நித்ய யுவனிக்கு கலைவாணி மேல் தனிப்பிரியம். அவருக்கும் அவ்வாறே.

ஊட்டியை அடைந்ததும் அதன் இயற்கை அழகில் பிரம்மித்து நின்றாள்.

பின்னரே கார் நின்று உள்ளதை உணர்ந்தவள் ஜன்னல் வழியே எட்டிப் பார்க்க ராஜகோபாலும் கலைவாணியும் புன்னகைத்த வண்ணம் நின்றிருப்பதைக் கண்டவள்,

“ஹை…. கலைச்சித்தி… சித்தப்பா…” என்றவாறே காரிலிருந்து இறங்கி ஓடி அவர்களை அணைத்துக் கொண்டாள்.

கலைவாணி, “எப்படி இருக்காய் யுவனிம்மா.. ரொம்ப நாள் கழிச்சி பாக்குறேன்.. நல்லா வளர்ந்துட்டாய்..” என்க, நித்யா தன்னை குனிந்து ஒரு முறை பார்த்து விட்டு,

“ஏன் கணி அப்படி சொல்றாய்.. அப்போ இருந்த ஹைட்டு தானே இப்போவும் இருக்கேன்.. வேண்ணா ஒரு 2, 3cm வளர்ந்து இருப்பேன்.. அப்படி தானேப்பா..” எனக் கூறிச் சிரிக்க, அவள் காதைப் பிடித்த ராஜகோபால்,

“இன்னும் அதே குறும்பு யுவனிம்மா உனக்கு.. நீ கொஞ்சம் கூட மாறல…” என்க,

“ஐயோ..விடு கோபு…வலிக்கிது..” என வலிப்பது போல் பாவனை காட்ட அவர் உண்மையாக வலிப்பதாய் நினைத்து கையை விட நித்யாவோ குலுங்கிக் குலுங்கி சிரித்தாள்.

இவற்றை ராஜாராம் புன்னகைத்தவாறு ரசித்து விட்டு பின் முகத்தில் சற்று கடுமையை ஏற்றி, “என்ன யுவனிம்மா இது பெரியவங்களுக்கு மரியாதை இல்லாம கணி கோபுன்னு பேர் சொல்லிட்டு..” என அதட்ட உடனே முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள் நித்யா.

இதனைக் கண்டு பொறுக்காத கலைவாணி, “விடுங்க மாமா.. இதெல்லாம் பெரிசு படுத்திக்கிட்டு…  எங்களுக்கு இவ அப்படி கூப்பிட்ரது தான் பிடிச்சிருக்கு..” என்க கலைவாணியை அணைத்துக் கொண்டாள் நித்யா.

பின் உணவருந்தி விட்டு ராஜகோபாலும் கலைவாணியும் எவ்வளவு சொல்லியும் கேட்காது ராஜாராம் புறப்பட தன் வாழ்வின் புதுத்தொடக்கம் நாளை விடிய இருப்பதை அறியாது நவீனுடன் சேர்ந்து அந் நாளைக் கழித்தாள் நித்ய யுவனி.

 

காலை விடிந்ததும் நவீனுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்க காலிங்பெல் சத்தம் கேட்டு சென்று கதவைத் திறந்தவள் விழி விரித்து நின்றாள்.

“ஹேய் மாலு… நீ இன்னெக்கி வரதா யாரும் சொல்லவே இல்ல.. உனக்கு ப்ளஸ் டூ பைனல் எக்ஸேம்னால லீவ் இல்லன்னு கணி சொன்னாங்க..” என ஆச்சர்யத்துடன் நித்யா கேட்க,

மாலதி,”முதல்ல என்ன கொஞ்சம் உள்ள வர விடு நித்து.. நான் தான் அம்மா கிட்ட சொன்னேன் சொல்ல வேணாம்னு.. உனக்கு சப்ரைஸா இருக்கட்டும்னு.. அதுவும் என்னோட செல்ல தங்கச்சி வரும்போது நான் இல்லன்னா நல்லா இருக்குமா..” என்க நித்யா,

“அது சரி.. ஏதோ…. நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.. இந்த லீவ் ஃபுள்ளா செம்மயா என்ஜாய் பண்ணலாம்…” என மகிழ்வாக கூறினாள்.

பின் அனைவரும் சேர்ந்து சிறிது நேரம் அரட்டை அடித்து விட்டு மாலை ஆனதும் மாலதி,

” நித்து.. ஊட்டில இந்த டைம்ல ஒரு வோக் போனா செம்மயா இருக்கும்.. நாம அப்படியே ஒரு வோக் போய்ட்டு என் ஃப்ரென்ட் வீட்டுக்கு போய்ட்டு வரலாம்.. நீ போய் ஸ்விட்டர் எடுத்துட்டு வா.. இல்லன்னா குளிரும்…” என்க,

“ஹை மாலு ஜாலியா இருக்கும்.. எனக்கும் ஆசையா இருக்கு.. பட் சித்தப்பா, சித்தி என்ன சொல்லுவாங்களோன்னு தான்….” என நித்யா இழுக்க,

அங்கு வந்த ராஜகோபால், “நாங்க உன்ன என்ன சொல்லப் போறோம் யுவனிம்மா.. அதுவுமில்லாம நீ எங்கள ஐஸ் வைக்க தானே இப்போ சித்தி சித்தப்பான்னு மரியாதையா பேசினாய்…” என்க தன் குட்டு வெளிப்பட்டதை நினைத்து நித்யா இழித்து வைக்க,

“சரி சரி பேசிட்டு இருந்தது போதும்.. மூணு பேரும் பத்திரமா போய்ட்டு வாங்க..ரொம்ப லேட் பண்ணாம வந்துருங்க..” என கலைவாணி கூற மூவரும் மகிழ்ச்சியுடன் கிளம்பினர்.

 

மூவரும் தேயிலைத் தோட்டம் வழியாக மாலதியின் தோழி சந்தியாவின் வீட்டை அடைந்தனர்.

சந்தியா அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க நித்யா, “ஹை குட்டிப் பாப்பா…” என சிரித்துக் கொண்டு உள்ளே ஓடும் போது அங்கு நின்றிருந்த ஒருவனை மோத அதை பொருட்படுத்தாது ஓடிச் சென்று அக் குழந்தையை தூக்கிக் கொஞ்சினாள்.

அவளுடன் மோதியவனோ கோபத்துடன் திரும்பி யாரென்று பார்க்க பார்த்தவன் முகத்திலிருந்த கடுமை மறைந்து புன்னகை அரும்பியது.

அங்கு சந்தியா மாலதிக்கு தன் குடும்பத்தை அறிமுகப்படுத்தினாள்.

 

பின் அவள் சகோதரனையும் அவன் நண்பனையும் காட்டி, “இது என்னோட அண்ணன் ராஜேஷ்..அப்புறம் இது அவனோட ஃப்ரென்ட் என்ட் எனக்கு இன்னொரு அண்ணன் போல.. சஜீவ் சர்வேஷ்.. காலேஜ் ஃபைனல் இயர் படிக்கிறாங்க.. டெக்னோலஜி..” என அறிமுகப்படுத்த ராஜேஷின் பார்வை மாலதியை இரசனையுடன் தழுவ சஜீவ்வின் பார்வையோ பாவாடை தாவணி கட்டி இரட்டை ஜடை பிண்ணி அங்கிருந்த குழந்தையுடன் வளர்ந்த குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்த நித்யாவையே அளவிட்டது.

நித்யா பெண்களில் சற்று உயரமானவள். அதனால் அவள் உயரத்தைப் பார்த்து அவள் இப்போது தான் டென்த் முடித்து உள்ளாள் எனக் கூற முடியாது.

சந்தியா நித்யாவையும் அவ் இருவருக்கும் அறிமுகப்படுத்த சஜீவ்வின் மனதில் அவள் பெயர் யுவி எனவே பதிந்தது.

ஆனால் இவை எதையும் நித்யா கவனிக்கவில்லை.

அக் குழந்தையுடனே அங்கிருந்த முழு நேரத்தையும் கழித்தாள்.

பின் அனைவரிடமும் கூறிக்கொண்டு புறப்பட்டனர்.

வீட்டிற்கு வந்தவள் இரவு முழுவதும் அக் குழந்தைப் புராணமே கூறிக் கொண்டிருந்தாள்.

நித்யா, “சித்தப்பா.. நாளைக்கு நாம எல்லோரும் சேர்ந்து அவுட்டிங் போலாமா.. ப்ளீஸ்.. என் செல்ல கோபுல்ல.. ஓக்கே சொல்லு ப்ளீஸ்…” எனக் கெஞ்ச மாலதியும் நவீனும் அதற்கு ஒத்து ஊதினர்.

ராஜகோபால், “சரி நாளைக்கு காலைல போலாம்.. இப்போ சீக்கிரம் தூங்கினா தான் காலைலயே எந்திரிக்க முடியும்…” என அவர் சொல்லி முடிக்க அங்கு பிள்ளைகள் மூவரும் இல்லாமல் முழிக்க சிரித்த கலைவாணி,

“நீங்க தூங்கனும்னு தொடங்கும் போதே மூனு பேரும் தூங்க ஓடிட்டாங்க..” என்க பின் அவர்களும் தூங்க சென்றனர்.

 

அடுத்த நாள் பொழுது அழகாய் விடிய ஆறு மணிக்கு போல ராஜாராம் முகத்தைத் துடைத்தவாறு அறையை விட்டு வெளியே வர ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றார்.

“என்னங்க காபி..” என கலைவாணி அவரை உலுக்க அதன் பின்னே அதிர்ச்சியிலிருந்து மீண்டவர்,

“ஏன் வாணி நம்ம பசங்களா இது.. இவ்வளவு காலங்காத்துல எந்திரிச்சிருக்காங்க..” என நம்ப முடியாமல் வினவினார்.

அவர் முன்னே மாலதி, நித்யா, நவீன் மூவரும் எழுந்து தயாராகி ஸ்விட்டர் போட்டு கையில் சிறிய பைகளுடன் நின்று கொண்டிருந்தனர்.

கலைவாணி, “அந்த கொடுமையை ஏங்க கேக்குறீங்க.. நீங்க கூட பரவால்ல.. அர்த்த ராத்திரில எனக்கு ஹார்ட் எட்டேக் வராத குறை.. நாங்க தண்ணி ஊத்தினாக் கூட அவ்ளோ ஈசியா எந்திரிக்காதவ.. விடியக்காலை நாலரை மணிக்கு என்ன வந்து கணி ஔட்டிங் போனும் சீக்கிரம் எந்திரின்னு எழுப்புறா… அப்போ ஆரம்பிச்சது தாங்க.. இப்போ வர என்ன ஒரு வழி பண்ணிட்டுதுங்க மூனும்..” என ராஜகோபாலிடம் பிள்ளைகள் பற்றி குற்றப் பத்திரிகை வாசிக்க பிள்ளைகள் மூவரும் ராஜகோபாலைப் பார்த்து ஈஈஈஈ என இழித்து வைத்தனர்.

பின்னர் அனைவரும் கிளம்பி முதலில் நீர்வீழ்ச்சிக்கு சென்றனர்.

அங்கு மூவருக்கும் ஏகப்பட்ட அறிவுரை.

மூவரும் சேர்ந்து ஒருவர் மீது ஒருவர் நீரடித்து விளையாடிக் கொண்டிருக்க நித்யா அவர்களை விட்டு சற்று தூரம் வர ஈரக் கல்லில் அவள் தவறுதலாக கால் வைக்க அவளது கால் வழுக்கி விழப் போகும் நேரம் ஒரு வலிய கரம் அவள் இடை பற்றி விழாமல் தாங்கியது.

இந்த நிமிடமே தன் உயிர் போய் விடும் என நினைத்து கண்களை மூடியவள் இன்னும் எதுவும் ஆகாமல் இருப்பதால் பயந்தவாறே கண்களைத் திறக்க இருவரின் கண்களும் நேருக்கு நேர் சந்தித்தன.

பின் நித்யா சுதாகரித்துக் கொண்டு விலகி நின்று தேங்க்ஸ் என்று விட்டு தன் சகோதரர்களை நோக்கி சென்றாள்.

அவள் செல்லும் வரை அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

நித்யா மாலதியுடன் பேசிக் கொண்டிருக்க அவர்கள் பின்னிருந்து, “ஹாய் மாலதி.. வாட் அ சர்ப்ரைஸ்..” என குரல் வர இருவரும் திரும்ப அங்கு சந்தியா நின்று கொண்டிருந்தாள்.

மாலதி, “ஹேய் சந்தியா.. நீ எப்படி இங்க..” என்க சந்தியா, “சும்மா தான் ஃபேமிலில எல்லோரும் வந்தோம்.. அப்படியே சர்வேஷ் அண்ணாவும் வந்தாங்க.. அதோ சர்வேஷ் அண்ணா வராரு..” என அவர்களுக்கு பின்னே காட்ட நித்யாவோ விழி விரித்து நின்றாள்.

 

❤️❤️❤️❤️❤️

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
6
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments