“வாழ்த்துக்கள் அகலிகை! நீங்க அம்மா ஆக போறிங்க.” என கூறிய மருத்துவருக்கு இது சாதாரண செய்தியாக இருந்தாலும், கேட்கும் அகலிகைக்கு உலகமே காலடியில் வந்து விட்ட உணர்வு. திருமணமாகி கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு வரண்ட பூமியில் விழும் சிறு துளி உயிர் நீர் போல்… ஜனித்திருக்கும் இந்த உயிரை நினைத்து வார்த்தைகள் வராமல் கண்கள் குளமாகியது. அருகில் அமர்ந்திருந்த கணவன் நிரூபனுக்கும் அதே நிலைதான்.
நான்கு ஆண்டுகளாக காதலித்து பல போராட்டங்களுக்கு நடுவில் கைப்பிடித்த மனைவியின் கண்ணீரைத் துடைக்க முடியாமல் ஒவ்வொரு நாளும் மனதுக்குள் அழுது கொண்டிருந்த ஆணிற்கு இன்றுதான் பிறவிப் பலனே கிட்டியிருக்கிறது. எத்தனை பேச்சுக்கள், சாடல்கள், அவ பெயர்கள், அவமானங்களை சந்தித்து இருக்கிறாள் அகலிகை. அப்பொழுதெல்லாம் அமைதியாக மனைவியை சமாதானப்படுத்துவதே பெரும் வேலையாக இருந்தது நிரூபனுக்கு. ஏனெனில் பேசுவது வெளி ஆட்கள் இல்லையே! தன் குடும்பம் . தன்னை தாங்கிய குடும்பம். தன்னுடன் சேர்ந்த குடும்பம். இத்தனை நாள் காத்த பொறுமைக்கு விடியலாய் மணி குருவி வந்து விட்டது.
மருத்துவருக்கு நன்றி சொன்ன இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இல்லம் வர, இதிலும் சில குறைகள் சொல்லத்தான் பட்டது குடும்பத்தினரால். வரம் கிடைக்காமல் இருக்கும் பொழுதே கடந்து சென்றவர்கள் இப்பொழுது தேங்கி விடப் போகிறார்களா என்ன! தங்கள் உலகில் புதிதாக வந்திருக்கும் வரவிற்காக ஒவ்வொரு நிமிடமும் காத்துக் கொண்டிருந்தனர்.
மூன்று மாதங்கள் முடிந்து… ஐந்தாம் மாதம் தொடக்கத்தில் இருந்தாள் அகலிகை. இதற்கு நடுவில் மருத்துவ பரிசோதனைக்கு போகும்போதெல்லாம் பார்க்கும் குழந்தையின் உருவமும், இதயத் துடிப்பும் பெண்ணுக்குள் அத்தனை மாற்றங்களை விதைத்திருந்தது.
ஐந்தாம் மாதம் பூ முடிப்பு விழாவும் விமரிசையாக நடக்க, அகலிகையின் கையில் கண்ணாடி வளையல்கள் விளையாடிக் கொண்டிருந்தது. அதேநேரம் அடி வயிற்றில் சிசு தன் சிறு சிறு அசைவைக் காட்டி தாயின் உற்சாகத்திற்கு வழிவகுத்தது. எத்தனை முறை உயிரில்லாத வயிற்றை தொட்டு தடவி இருக்கிறாள் ஏக்கத்தோடு. இன்றோ நிலைமை வேறு. நின்றால் வயிற்றை பிடிக்கிறாள். நடந்தால் தன் சிசுவிற்கு வலிக்குமோ என இரு கைகளால் வயிற்றை அணைத்துக் கொண்டு நடக்கிறாள். படுத்தால் பதமாக திரும்புகிறாள். உட்கார்ந்தால் குழந்தையின் மூச்சுக்கு வழி வகுத்து முதல் முன்னுரிமை கொடுக்கிறாள். இதேபோன்று தினமும் அகலிகையின் வாழ்க்கை நகர, ஏழாம் மாதம் வளைகாப்பு நடைபெற்றது.
நிரூபன் கால்கள் ஓரிடத்தில் நிற்க வில்லை. மனைவியின் வளைகாப்பை இன்னொரு திருமணம் போல் விமர்சையாக நடந்தினான். மனைவியின் ஆசைக்கு இணங்கி தன் வேலையை ஆறு மாதங்கள் நிறுத்தி வைத்திருந்தான். நித்தமும் அவர்களின் வாழ்வு குழந்தையை சுற்றி இருக்க, மகவும் வயிற்றில் இருந்து வெளிவர துடித்துக் கொண்டிருந்தது.
மதியவேளை உறங்கிக்கொண்டிருந்த அகலிகையை மெல்ல உசுப்ப ஆரம்பித்தது மணி குருவி. சிசுவின் அசைவில் துடிக்க ஆரம்பித்தவள் கணவனை அழைக்க, அடுத்த சில நிமிடங்களில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். பிரசவ வலியில் உள்ளே தாய் துடித்துக் கொண்டிருக்க, இருவரின் நல் வரவிற்காக தந்தையானவன் வெளியில் துடித்துக் கொண்டிருந்தான். இருவரின் துடிப்பும் ஒன்று போல அதிர்ந்து நின்றது குழந்தையின் சத்தத்தில்.
நிரூபனால் இன்னும் நம்ப முடியவில்லை. தன் கையில் தாங்கி இருப்பது தன் மகள் தான் என்று. ஆனந்தத்தில் தந்தையானவன் அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தான் தன் ரத்தத்தை. அப்பொழுதுதான் குழந்தையின் முகத்தை தெளிவாக பார்த்தவனுக்கு அதிர்ச்சி. அதே அதிர்ச்சியோடு மருத்துவரைக் காணச் செல்ல, நிரூபன் வருகைக்காக தான் அவரும் காத்திருந்தார்.
“நீங்க என்ன கேக்கப் போறீங்கன்னு தெரியும் நிரூபன். குழந்தை வாயு, மூக்கு பிளவு பட்டிருக்கும். இந்த நோயோட பேரு அன்னபிளவு. சில நேரங்கள்ல ஸ்கேன் பண்ணும்போது கூட தெரியாது. இந்த நோய்.. லட்சம் குழந்தைகள்ல ஒருத்தருக்கு வர வாய்ப்பு இருக்கு. ஆனால் சரிப்படுத்த முடியும். சரியான முறையில சிகிச்சை குடுத்தா உங்க குழந்தை கண்டிப்பா பேசும். மனம் தளராம குழந்தைக்கான ட்ரீட்மென்ட்டை ஸ்டார்ட் பண்ணுங்க.” என அதிர்ச்சியில் அமர்ந்திருக்கும் நிரூபனுக்கு நம்பிக்கை கொடுக்கும் நோக்கில் கூற, அவனுடைய எண்ணம் எல்லாம் தன் மனைவி பற்றியே இருந்தது.
‘இதை எப்படி ஏற்றுக் கொள்வாள். எத்தனை தாக்குதலுக்குப் பின் உதித்த கருவி இது. எதற்கு இந்த தண்டனை. இனி வாழும் வாழ்க்கை முழுவதும் என் மனைவி சமூகத்தின் முன் தாக்குதலை சுமக்கும் சுமையாகவே இருக்க வேண்டுமா! அப்படி என்ன தவறு செய்தோம்.’ என்று மனதில் பல கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தான்.
விதி இதுதான் என்பதை சில நொடிகளில் ஏற்றுக் கொண்டவன் தன் மனைவியைக் காணச் சென்றான். கணவன் வருகைக்குப் பின் கண் முழித்தவள் முதலில் கேட்டது குழந்தையைத்தான். என்ன குறை இருந்தாலும் அது தன் ரத்தம் இல்லையா… அந்த உணர்வு நிரூபனை இலகுவாக்க மனைவியிடம் குழந்தையை கொடுத்தான். ஆசையாக அள்ளி முத்தமிட வந்தவள் முகத்தைப் பார்த்து ஸ்தம்பித்து நின்றாள்.
மனைவியின் அதிர்ச்சி நிரூபனுக்கு வலித்தாலும் வேறு வழி இல்லை என நினைத்து மருத்துவர் கூறியதை ஒவ்வொன்றாக கூறிக் கொண்டிருந்தான். எல்லாம் செவி வழி மனதுக்குள் சென்றாலும் ஒன்றே ஒன்று மட்டும் தான் பெண் மனதில் ஆணித்தரமாக நின்றது. முறையான சிகிச்சை கொடுத்தால் சரிப்படுத்தி விடலாம் என்பதே.
‘இத்தனை வருடங்கள் சமூகத்தில் குறையோடு இருந்த எண்ணை நிறையாக்க பிறந்த என் பிள்ளையை குறையோடு விடமாட்டேன். என் பிள்ளைக்கு நான் இருக்கிறேன். நாங்கள் இருக்கிறோம்.’ என்ற சிறு விதை பாலமுதில் நனைந்த மங்கையின் மனதில் ஆழமாக உருவாகி இருந்தது. மனைவியின் எண்ணம் கணவனுக்கும் மாற்றப்பட பிறகென்ன புதிதாய் தாய், தந்தையான பெற்றோர்களுக்கு விட்ட மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது.
முன்பு பழி சொன்ன அத்தனை வாய்க்கும் மீண்டும் இரையாகிப் போனது அகலிகையின் குழந்தை. அதையெல்லாம் தூசி தட்டிய பெற்றோர்கள் தங்கள் இளவரசிக்கு தாரகை நிலா என்ற அழகான பெயரை சூட்டி மகிழ்ந்து கொண்டாடினார்கள். மாதங்கள் இரண்டு கடந்திருந்தது. தாரகை நிலா மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டாள்.
குழந்தைக்கு போதுமான ரத்த ஓட்டமும் உயிர் சத்தும் குறைவாக இருப்பதால் ஒரு வயது வரை எந்த மருத்துவமும் பார்க்க முடியாத சூழ்நிலை. அதனால் என்ன பெற்றோர்கள் மனம் கொஞ்சமும் தளரவில்லை. பிள்ளை இருவரையும் பார்த்தது. புரண்டு விளையாடியது. தத்தித் தத்தி தவழ்ந்தது. எட்டு வைத்து நடக்கப் பழகி இருந்தது. நிலையான வாழ்க்கையில் சிறு குறை தாரகை நிலா பேச முடியாதது தான். அது ஒரு குறையாக சமுகத்திற்கு பட்டதே தவிர அகலிகைக்கு படவில்லை.
முதல் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார்கள். கொண்டாட்டங்கள் முடிந்த பௌர்ணமி இரவு மறுநாள் மருத்துவமனைக்கு செல்லும் தேதியை ஞாபகப்படுத்த…, மறக்காமல் தாரகை நிலாவோடு சென்றிருந்தனர்.
முன்பைவிட தாரகை முகம் அழகு சற்று ஏற்றி இருந்தது. இது அனைத்தும் மருத்துவத்தால் அல்ல. பெற்றோர்களின் அன்பால். தொடர்ந்து மாதம் பத்து நாட்கள் தாரிகை மருத்துவமனையிலே இருப்பாள். தந்தையானவன் தொழிலையும், குழந்தையையும் சேர்த்து பார்த்துக் கொண்டிருந்தான். தாயானவள் கணவனை மறந்து தன் குழந்தைக்கு தேவையான பணிவிடைகளை செய்து கொண்டிருந்தாள்.
அன்னப்பிளவு நோயை தொடர் சிகிச்சையால் சரிப்படுத்தி விடலாம். ஆனால் சிகிச்சைக்கு சரியான உடல் நிலை தேவை தானே! தாரகை உடல் அந்த நிலையில் இருந்தாலும் ஏனோ மருத்துவம் பலனளிக்கவில்லை. ஒவ்வொரு மாதமும் முட்டி மோதிக்கொண்டு பெற்றோர்கள் மருத்துவமனைக்கு தஞ்சம் புக, பலதரப்பட்ட மருத்துவர்களால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது தாரகை நிலாவிற்கு. வருடங்கள் இரண்டு கடந்து பிள்ளை வயது மூன்றை தொட்டது. கடவுளின் கருணை, பெற்றோர்களின் அன்பு, மருத்துவர்களின் கவனிப்பு என எல்லாம் சேர்த்து தாரகை நிலாவை சிரிப்போடு ஜொலிக்க உதவியது.
ஆம் தாரகை நிலா சத்தமாக சிரிக்கத் தொடங்கிவிட்டாள். வாயும் மூக்கும் பிளவோடு இருந்ததால் இது சிரமமாக இருக்கும் குழந்தைக்கு. தொடர்ந்து கொடுத்து வந்த சிகிச்சையின் பலனாய் இன்று அந்தக் குறை சற்று குறைந்திருந்தது.
நம்பிக்கையாய் எடுத்து வைத்த முதல் அடி வெற்றி அடைந்துவிட்டால்… அடுத்த அடி கனமாக விழும் அல்லவா! அதுபோல் தான் தாரகை நிலாவின் சிகிச்சையும் நடந்து கொண்டிருந்தது. பிள்ளையின் வயது ஐந்தை தொட்டது. பேச்சும் விண்ணை முட்டியது. முதல் முதலில் மழலையின் பேச்சை கேட்ட பெற்றோருக்கு மீண்டும் பிரசவ அறையில் வயிற்றை விட்டு தாரகை நிலா வெளிவந்த உணர்வு.
ஆறு வயதில் தாரகை சற்று சிரமப்பட்டு பேச எட்டு வயதில் அதுவும் நின்றது. எந்தக் குழந்தைக்கு குறை என்று கூறி இருந்தார்களோ அந்த குழந்தை இன்று பள்ளியில் முதல் பரிசு பெறப் போகிறது. அதுவும் பேச்சுப் போட்டியில். இது மட்டும் போதும் என்று விடவில்லை தாரகையின் பெற்றோர்கள்.
சிகிச்சையால் பக்க விளைவுகள் பல நேர்ந்து இருந்தது தாரகைக்கு. எட்டு வயதை தொட்டு இருந்தாலும் இன்னும் எட்டு மாத குழந்தை தான் இருவருக்கும். ஒவ்வொரு நாளும் ஏன் ஒவ்வொரு நிமிடமும் தாரகையை சுற்றியே அவர்களின் வாழ்வு இருந்தது. பக்க விளைவுகளால் அடிக்கடி மூச்சுத் திணறலும், உடல் சோர்வும் காணப்படும் பொழுதெல்லாம் அகலிகை தான் அவளின் அடைக்கலம். பத்து மாதங்கள் தாயின் கருவியிலும் , எட்டு வருடங்கள் உடலோடு ஒட்டியும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் தாரகை.
நிரூபன் தன் ஒரே மகளுக்காக ஓடி, ஓடி உழைத்துக் கொண்டிருக்கிறான். அவன் ஒன்றும் வசதியான வீட்டுப் பிள்ளை இல்லை. சாதாரண குடும்பத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டிருக்கும் சராசரி ஆண் மகன். மாதம் மாதம் பிள்ளைக்கு ஏற்படும் மருத்துவச் செலவிற்காகவே இன்னும் அதிகம் உழைக்க ஆரம்பித்தான். சில நேரம் உடல் தன் வலுவை இழந்தாலும் பிள்ளையின் முகம் நினைவு வந்து தந்தையை இயந்திரமாக்கும் . சில நாட்கள் சிகிச்சைக்கான பணம் அதிகமாக தேவைப்படும். அதனால் சில கடன்களும் அவன் தலையில் விழுந்தது. அகலிகையின் வாழ்வில் தனிப்பட்ட தேவை என்ற ஒன்று தேவையற்று போனது. இயல்பான வாழ்க்கையை இருவரும் மறந்திருந்தனர் என்பதே உண்மை.
அதோ இதோ என்று பிள்ளையின் வயது பதினேழை தொட்டிருந்தது. சிகிச்சையும் தேவைப்படாது நிலை வந்துவிட்டது. தாரகையின் பேச்சும் சக பிள்ளைகள் போல் ஆனது. பெற்றோர்களின் பண தேவை குறைய ஆரம்பித்திருந்தது. தொடர் ஓட்டத்திற்கு கிடைத்த பலனாய் முழுவதுமாக சரியாகி இருந்தால் தாரகை நிலா.
******
“அம்மா!… அந்த காலேஜ் பேக் எடுங்க. அம்மா எத்தனை தடவை சொல்றது இட்லி செய்யாதீங்கன்னு….ம்மா… அந்த ட்ரெஸை எடுத்துக் கொடுங்க. அப்பா எப்போ வருவாங்க காலேஜ்க்கு டைம் ஆகுது.
அப்பா நேத்தே ஷாப்பிங் கூட்டிட்டு போறதா சொன்னாங்க. இன்னைக்கு கண்டிப்பா கூட்டிட்டு போகணும் இல்ல’னா அவ்வளவுதான்.
ம்மா! நாளைக்கு காலேஜுக்கு வாங்க. அம்மா நான் இந்த தடவையும் பேச்சுப் போட்டில முதல் பரிசு.
அப்பா! பரன்ஸ்ஸ் மீட்டிங் இருக்கு அம்மாவை கூட்டிட்டு வாங்க. அப்பா என்னை கம்ப்யூட்டர் கிளாஸ் ல சேர்த்து விடுங்கள். அப்பா! எனக்கு அது வாங்கி கொடுங்க. அப்பா ! இங்க வாங்க. அம்மா தூக்கமே வரல. அப்பா இன்னும் வீட்டுக்கு வரலையா?”
அம்மா அப்பா… சங்கீதம் மட்டுமே அந்த இல்லத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறது. பேசுவாளா என எதிர்பார்த்த பெற்றோருக்கு இவள் வாய் மூடாதா எனும் அளவிற்கு தாரகை நிலாவின் ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது அவ்வீட்டில். வாய் ஓயாத பேச்சும், பெற்றோரை நொடியும் பிரியாத பாசமும் அகலிகை நிரூபன் தம்பதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
*************************************
தொடர்ந்து காலிங் பெல் அடித்து கொண்டிருக்க அகலிகை கதவை திறந்தாள். வெளியில் அவள் வயதை ஒத்த பெண்ணும் ஆணும் நின்றுகொண்டிருந்தார்கள். “யார் நீங்க? என்ன வேணும்?” என்று கேள்வி கேட்டவளுக்கு மறு கேள்வியாக,
“இது நிரூபன் சார் வீடா…” என்றனர் வந்தவர்கள்.
“ஆமா சார் . நீங்க யாரு? ” என அகலிகை கேட்க,
“நாங்க தாரகை நிலாவோட அப்பா அம்மா.” என்றதும் தான் தாமதம் ஆயிரம் சரவெடி அகலிகை மனதில் . அதிர்ச்சியில் கண்கள் அசைய மறந்து நின்றிருக்க, அந்த நேரம் அறையில் இருந்து தாரகை வருவதை கண்ட அகலிகை வேகமாக,
“அதெல்லாம் யாரும் இல்லை . கிளம்புங்க நீங்க. தப்பான அட்ரஸ்க்கு வந்திருக்கிங்க. ” என்றதோடு நில்லாமல் கதவையும் சாத்தி விட்டாள்.
“யாரும்மா அவங்க.. எதுக்காக டென்ஷனா பேசுட்டு இருந்திங்க.” என கேட்கும் மகளுக்கு பதில் சொல்லாமல்,
“நிலா ம்மா… நீ ரூம்ல இரு. மியூசிக் கிளாஸ் இருக்கு இன்னைக்கு.” என்று அகலிகை பதட்டமாக சொல்ல, அதற்கு எதிர் வாதம் செய்ய வந்த மகளை பேச விடாமல் , “போ.. நிலா! அம்மா உனக்கு டீ போட்டு கொண்டு வர..” என்று அனுப்பி வைத்தாள்.
இதை நிரூபனிடன் சொல்ல முடிவெடுத்து அலைபேசியில் அழைத்தவளுக்கு என்ன தோன்றியதோ பட்டென வைத்துவிட்டால். அன்று இரவு தூங்கா இரவானது அகலிகைக்கு. அதன் பின்னான நாட்களில் புதிதாக வந்தவர்கள் வீட்டிற்கு வராமல் இருக்க சற்று நிம்மதி அடைய ஆரம்பித்தாள். அந்த நிம்மதியும் பரிபோனது தாரகை நிலாவின் கேள்வியால்,
” ம்மா நான் உங்க பொண்ணு இல்லையா? என்னை பெத்தவங்க வேற யாரோவா? அன்னைக்கு வந்தவங்க தான் என் அம்மா அப்பாவா….? சொல்லுங்க ம்மா… “
அதிர்ச்சியில் வாய் ஊமைமாக, கேட்டது பொய்யாக இருக்க வேண்டும் என்று நொடிக்கு ஆயிரம் வேண்டுதல் வைத்திருந்தாள் அகலிகை. அவள் கேட்டது உண்மை தான் என உறுதியாகியது மகளிடம் இருந்து மீண்டும் வந்த அதே கேள்விகளால்.
“அப்பா வேலையா இருக்காங்க வந்ததும் பேசிக்கலாம் நிலா போ..உள்ள.”
“கேட்டதுக்கு ஆமா இல்லை’னு சொல்லாம அப்பா வரட்டும்’னு சொல்றீங்க. அப்போ அவங்க சொன்னது உண்மையா? நான் உங்க பொண்ணு இல்லையா? ” என தாரகை அழுகையோடு கேட்க,
இதுவே வேறு சந்தர்ப்பமாக இருந்திருந்தால் மகளின் அழுகையை பொறுக்க முடியாமல் சமாதான படுத்தி இருப்பாள் தாயானவள். இன்று நிலைமை தலை கீழானதால் கோபமாக ” யாரு சொன்னா. இதெல்லாம் உன்கிட்ட.” என சத்தமிட்டால்
“அன்னைக்கு வீட்டுக்கு வந்திருந்தவங்க தான் என்னை காலேஜ்ல வந்து பார்த்தாங்க. நான் அவங்க பொண்ணாம். ரயில்வே ஸ்டேஷன்ல தெரியாம தொலச்சிட்டாங்கலாம். நிறைய நாள் என்னை தேடி அலைஞ்சி கடைசியா உங்ககிட்ட இருக்குறதை கண்டுபிடிச்சிருக்காங்க. அவங்க சொன்னதும் நான் நம்பல. இப்போ நீங்க பண்றதெல்லாம் பார்க்கும்போது அது தான் உண்மை’னு தோனுது. சொல்லுங்க நான் யாரு? எப்படி உங்க கைக்கு கிடைச்சேன்? இவ்ளோ நாள் இதை ஏன் சொல்லாம மறைச்சிங்க? ஏற்கனவே அவங்க தான் என்னோட அப்பா அம்மா னு தெரியுமா உங்களுக்கு…” என்ற கடைசி வரியில் உஷ்ணம் ஏறியது அகலிகைக்கு.
“யாரு டி உன் அம்மா, அப்பா…? ஆஹான் ! யாரு? உன் அம்மா நான் அப்பா நிரூபன். கண்டவங்களை அப்பா அம்மா’ன்னு சொல்லாத
. இந்த வயித்துல தான் உன்னை சுமந்து பெத்தேன். அப்புறம் எப்படி அவங்க பொண்ணாவ. சொல்லு நிலா….” என கத்து கூச்சலிட, இந்ந அவதாரம் புதிதாக இருந்தது தாரகைக்கு. இதுவரை தாயை இந்த மாதிரி பார்த்ததில்லை அவள். அதில் திடுக்கிட்டு பயந்தவள்,
சத்தம் கேட்டு அறையில் இருந்து வெளியில் வந்தான் நிரூபன். தந்தையை கண்டதும் கட்டிக் கொண்ட தாரகை, ” ப்பா அம்மா.. எதுக்கு இவ்ளோ கோவபடுறாங்க. ப..ப..பய..பயமாக இருக்கு ப்பா..” என அழுகும் மகளை ஏதேதோ சொல்லி சமாதானம் படுத்தினான். நடந்தது என்னவென்று தெரியாமலே.
“யாரு டி கோவபடுறா… நான் என்னை பைத்தியமா. உன்னோட அம்மா நான் தான்’னு சொல்றதை கேட்க அவ்ளோ பயமா இருக்கா உனக்கு” என்ற அகலிகை மீண்டும் கத்த,
நிரூபன் தன் மனைவியை அடக்கி விட்டு மகளிடம் விசாரித்தான். தாரகை சொல்ல …சொல்ல அதிர்ச்சி ரேகைகள் அவன் முகத்திலும். “அம்மா கிட்ட அவங்க சொல்றது உண்மையா’னு தான் கேட்ட ப்பா. அதுக்கு அம்மா தான் டென்ஷனாகி இப்படி கத்துறாங்க.”
“ஏய்!! நிலா திரும்பத் திரும்ப கத்துறன்னு சொல்லாத. நான் கத்தல…. ..” என நிரூபனிடம் இருந்த மகளை தன்னிடம் இழுத்து வந்து கத்த,
அதில் கோபம் வந்து விட்டது தாரகைக்கு. ” இதுக்கு பேர்தான் ம்மா கத்தி பேசுறது. அவங்க என்னோட அப்பா அம்மாவான்னு கேட்டேன் அவ்வளவுதான். ஆமா இல்லைன்னு சொல்லிட்டு போகாம பைத்தியம் மாதிரி கத்துறீங்க. அப்போ நிஜமாவே நான் உங்க பொண்ணு இல்ல அப்படி தான. எல்லாம் தெரிஞ்சும் இவ்ளோ நாள் என்கிட்ட நாடகமாடி இருக்கீங்க. அன்னைக்கு வந்தது என்னோட உண்மையான அப்பா அம்மாதான். அத தெரிஞ்சு கிட்டும் என் கிட்ட நெருங்க விடாம துரத்தி இருக்கீங்க. உண்மை தெரிஞ்சதும் கத்தி சமாளிக்க பார்க்கிறீங்க.”
சில நொடி பெரும் நிசப்தம் அந்த வீட்டில். கன்னத்தில் கை வைத்துக் கொண்டு தாரகை நிலா தன் தாய் அகலிகையை பார்த்திருக்க, நிரூபனுக்கும் அதிர்ச்சிதான். அதே அதிர்ச்சியில் இதுவரை வெளியில் நின்றிருந்த தாரகையின் பெற்றோர்கள் உள்ளே வந்தனர்.
(கல்லூரியில் தாரகையை பார்த்து உண்மையைக் கூற, நம்பாத தாரகை நிலா கையோடு வீட்டிற்கு அழைத்து வந்திருந்தாள். உண்மையை புரிய வைக்கும் நோக்கில்.)
எதுக்காக எங்க பொண்ண அடிச்சிங்க. இத்தனை நாளா இப்படித்தான் கொடுமைப்படுத்திட்டு இருக்கீங்களா? இப்பவே எங்க பொண்ண கூட்டிட்டு போறோம்..” என்றவர்கள் கையோடு தாரகையை அழைத்துச் செல்ல,
அவளும் பேசாமல் அவர்களுடன் சென்று விட்டாள்.
மகளின் பின்னாலேயே ஓடிய அகலிகை, ” நிலா…நிலா நில்லு மா…நிலா போகாத நிலா. நான் தான் உன்னோட அம்மா…நிலா போகாத…நிலா…நிலா….நிலா…நில்லு நிலா… உன் அம்மா நான் தான் நிலா…ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ…..”
தூக்கத்தில் சத்தம் கேட்க, அடித்து பிடித்து எழுந்து பார்த்தான் நிரூபன். பக்கத்தில் தன் மனைவி அழுது கொண்டே புலம்பும் காட்சி கண்ணில் விழ, “அகலி ! அகலி!! என்ன ஆச்சு. எதுக்கு அழுதுட்டு இருக்க ஏந்திரி. அகலி…அகலி ” என தொடர்ந்து தன் மனைவியை தட்டி எழுப்பிக் கொண்டிருந்தான் நிரூபன். அதன் பலனாய் கண்ணில் நீரோடு மூச்சுவாங்க எழுந்து உட்கார்ந்தாள் அகலிகை.
எழுந்து உட்கார்ந்தவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அழுகையோடு சுற்று முற்றும் பார்த்தவள் தன் கணவனிடம், “நிலா எங்கங்க. நான் கூப்பிட கூப்பிட அவங்க பின்னாடியே போயிட்டா. நான்தான் அவளோட அம்மா’ன்னு சொல்லி கூட்டிட்டு வாங்க நிரூ போங்க..” எனக் கூறிக் கொண்டே மேலும் அழ ஆரம்பித்த மனைவியை கண்ட கணவனுக்கு ஒன்னும் விளங்கவில்லை. சொன்னதையே சொல்லிக்கொண்டு அகலிகை புலம்பிக் கொண்டிருக்க, கனவு கண்டிருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது நிரூபனுக்கு.
எழுந்து விளக்கை எரிய விட்ட நிரூபன் மனைவிக்கு பருக நீரைக் கொடுத்தான். சில மறுப்புகளுக்குப் பிறகு குடித்த அகலிகை அப்போதுதான் அமைதியானாள். பெரும் அமைதி அந்த அறைக்குள் நிலவிக் கொண்டு இருக்க,மெல்ல மெல்ல உணர ஆரம்பித்தாள் எத்தனை நேரம் தான் கண்டது அத்தனையும் கனவு என்று. கனவில் அழுததை விட பெரும் சத்தத்தோடு நிஜத்தில் அழுதுகொண்டே நடந்ததை தன் கணவனிடம் தெரிவித்துக் கொண்டிருந்தாள் அகலிகை.
முதலில் மனைவியின் அழுகைக்கு வேறு ஏதோ காரணம் இருக்கும் என்று அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த நிரூபனுக்கு சொல்லி முடித்ததும் கனத்த வலி நெஞ்சில். எந்த அளவிற்கு தன் மனைவி பாதிக்கப்பட்டு இருக்கிறாள் என்பது தெளிவாக புரிந்தது. இத்தனை நாள் சுமந்த வலிக்கு உருவமாய் காலையில் பார்த்த காட்சியை சேர்த்திருக்கிறாள் என்றால் எவ்வளவு வலியை மனம் தாங்கி கொண்டிருக்கும். குடும்பம், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் என காண்போர் அத்தனை பேரும் குழந்தையை வைத்து குத்தி கிழித்ததன் விளைவு இது என்பதை உணர்ந்தவன்,
“ப்ச்!! என்ன அகலி இது. சின்ன பிள்ளை மாதிரி அழுதுகிட்டு இருக்க. காலையில ட்ரெயின்ல பார்த்ததை யோசிச்சிட்டே தூங்கியிருக்க அதனாலதான் உனக்கு கனவு இப்படி வந்திருக்கு.” என்றவன் மனைவியை பதமாக தோள் மீது சாய்த்துக்கொண்டு உறங்க வைக்க,
“இல்ல’ங்க நிஜமாவே குழந்தை பிறந்த மாதிரி இருந்துச்சு. நம்ம பொண்ண அவங்க கூட்டிட்டு போய்டாங்க. அதிகாலையில கனவு கண்டா பலிக்கும் தான அப்போ இந்த கனவு பலிக்குமா. ” அச்சம் மாறாமல் கேட்டு கொண்டிருந்தாள் அகலிகை.
“நமக்கு இன்னும் குழந்தை பிறக்கல அகலி. உன் கனவு படி பார்த்தா நமக்கு பிறந்த குழந்தையை எப்படி இன்னொருத்தவங்க வந்து கேட்பாங்க. கண்டதையும் மாத்தி மாத்தி யோசிச்சி தான் இப்படி ஒரு கனவு கண்டிருக்க இது கண்டிப்பா பலிக்காது.” என பொறுமையாக தன் மனைவிக்கு புரிய வைத்தவன் சில நொடிகளில் தூங்கவும் வைத்துவிட்டான்.
மனைவி தூங்கியதை உறுதி பிடித்துக் கொண்டவன் தன் குடும்ப மருத்துவரை அழைத்து , “நானும் அகலியும் திருநெல்வேலி போயிட்டு இன்னைக்கு காலைலதான் ட்ரெயின்ல சென்னை வந்தோம். நாங்க வந்த பெட்டியில குழந்தையோட அழுகை குரல் கேட்டுச்சு. ரொம்ப நேரமா கேட்டுட்டு இருந்ததால அகழி தான் என்னன்னு பார்க்க போனா. அங்க அட்டைப்பெட்டியில் பிறந்து மூனு நாளாலே ஆன பெண் குழந்தை ஒன்னு இருந்துச்சு. அதோட வாயும் மூக்கும் ஒட்டி பிளவு இருந்த மாதிரி வேற இருந்துச்சு. அதைப் பார்த்ததும் குழந்தையை கையில எடுத்துட்டு எங்கிட்ட வந்தா டாக்டர். நான்தான் அங்க இருக்க போலீஸ்காரர்களுக்கு இன்ஃபார்ம் பண்ணேன். குழந்தையை அவங்ககிட்ட ஒப்படைச்சிட்டு நாங்க வீட்டுக்கு வந்துட்டோம். வந்ததுல இருந்தே அகலி அந்த குழந்தையை பத்தி பேசிட்டே இருந்தா டாக்டர். அந்த குழந்தைக்கு என்ன ஆச்சு’னு தெரிஞ்சிக்குற ஆர்வத்துல என்னைய தூங்க கூட விடல. ஏதேதோ அடம்பிடிச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போனா டாக்டர் . ரொம்ப நேரமா தேடி கண்டு பிடிச்சி விசாரிச்சோம். காலையில எங்களை பார்த்ததால போலீஸ்காரங்க கரெக்ட்டா அடையாளம் தெரிஞ்சிகிட்டு ,
குழந்தையோட அப்பா அம்மாவை கண்டு பிடிச்சதாகவும், குழந்தைக்கு அன்னபிளவு நோய் இருக்கறதால வேற வழி தெரியாம ட்ரெயின்ல விட்டுட்டு போய்ட்டாங்கனும் சொன்னாங்க. குழந்தையை வாங்கிக்க சொல்லி எவ்வளவோ வற்புறுத்தியும் சம்மதிக்கலை போல அந்த பெற்றோர்கள். அப்புறம் குழந்தையை தொட்டிலில் திட்ட காப்பகத்துல விட்டதா சொன்னாங்க. அதைக் கேட்டதுல இருந்து ஒரே அழுகை டாக்டர். “
“எப்படி அந்தக் குழந்தையை விட்டு போக மனசு வந்துச்சு. அதுவும் பிறந்து மூனு நாள் தான் ஆகி இருக்கு. பசில எப்படி அழுதுச்சி தெரியுமா நிரூ. பெத்த குழந்தைய விட்டுட்டு போற அளவுக்கு மனசு கல்லா. குழந்தை இல்லாத எனக்கு தான் அதோட அருமை என்ன’னு தெரியும் . இந்த மாதிரி ஆளுங்களுக்கு குழந்தை கொடுக்கிற கடவுள்… எனக்கு எதுக்குங்க தரல. குறை இருக்க எனக்கு குறையோட இருக்குற பிள்ளையாது குடுக்கலாம்’ல அந்த கடவுள். அதுக்கு கூட தகுதி இல்லாத பிறவியா நான். அந்த குழந்தையோட குரல் இன்னும் கேட்டுகிட்டே இருக்கு. எனக்கு மட்டும் அந்த மாதிரி ஒரு குழந்தை பிறந்தா அப்படியே விட்டுட மாட்டேன். என் உயிரையும் விட பெருசா பார்த்துப்பேன். இந்த உலகத்துல என்னுடைய குழந்தைக்கு ஒரு அடையாளம் கிடைக்கிற வரைக்கும் தொடர்ந்து போராடுவேன். அப்படி இப்படின்னு இன்னும் நிறைய பேசிட்டு இருந்தா டாக்டர். திடீர்னு விடிய காலையில உட்கார்ந்து அழுகுறா . என்னன்னு விசாரிச்சா கனவு கண்டதை சொன்னா டாக்டர். என்னால முடிஞ்ச அளவுக்கு சமாதான படுத்தி தூங்க வைச்சிட்டேன். என் மனைவி மனசளவுல ரொம்ப குழம்பி இருக்கான்னு மட்டும் புரியுது. ஏற்கனவே குழந்தை இல்லாம பல பேச்சு. வீட்டிலையும் இந்த முறை ரொம்ப பேசிட்டாங்க அகலியை.
ட்ரெயின்ல வரும்போதெல்லாம் என்னை வேற கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்திட்டே வந்தா டாக்டர். .” என தன் மனைவியின் நிலையை நீண்ட நேரமாக எடுத்துரைத்துக் கொண்டிருந்தான் நிரூபன்.
“நீங்க சொல்றது நல்லாவே புரியுது நிரூபன். இந்த நேரத்துல உங்க மனைவிக்கு உங்க சப்போர்ட் ரொம்ப அவசியம். ஒரு பக்கம் குழந்தை இல்லாத ஏக்கம். இன்னொரு பக்கம் குடும்பத்தார்கள் குத்திக் காட்டிப் பேசுறதுன்னு ஒவ்வொன்னா அந்த மனசுல ஆழமா பதிஞ்சு இருக்கு. இன்னைக்கு ட்ரெயின்ல அந்த குழந்தையை பார்த்ததும் இந்த மாதிரியாது தனக்கு ஒரு குழந்தை கிடைக்க கூடாதான்னு ஆழ் மனசோட விவாதம் பண்ணிருப்பாங்கன்னு நினைக்கிறேன். அதனால தான் தன்னுடைய கற்பனை உலகத்துல அப்படி ஒரு குழந்தை பிறந்தது மாதிரியும், கஷ்டப்பட்டு வளர்த்த மாதிரியும் கனவு கண்டிருக்குறாங்க.”
“அதெல்லாம் எனக்கும் புரியுது டாக்டர். ஆனா அவளுக்குப் பிறந்த குழந்தையை கடைசியில வேற யாரோ வந்து வாங்கிட்டு போற மாதிரி சொன்னாளே டாக்டர். அதான் எனக்கு புரியவே இல்லை. அவ ரெண்டு மனநிலையில இருக்க மாதிரி தோணுது.”
“கரெக்ட் நிரூபன். ஒன்னு தனக்கு அந்த மாதிரி ஒரு குழந்தையாது வரணும்னு ஏங்குறாங்க. இன்னொன்னு ட்ரெயின்ல பார்த்த குழந்தைய ஒருவேளை அவங்க எடுத்திருந்தா பின்னால சொந்தம் கொண்டாடிட்டு அந்த குழந்தையோட பெத்தவங்க வருவாங்கன்னு பயந்து இருக்காங்க. இரண்டையும் மாத்தி, மாத்தி யோசிச்சதோட விளைவு அந்த கனவு . உங்க மனைவிக்கு இப்போ மன அமைதி ரொம்ப முக்கியம். கூடவே இருங்க. முடிஞ்ச அவங்களுக்கு பிடிச்ச விஷயங்களை செய்யுங்க. தொடர்ந்து பேச்சு கொடுத்திட்டே இருங்க. தனிமையில விடாதீங்க. உங்க மனைவிக்கு இந்த நிலைமையில கவுன்சிலிங் ரொம்ப அவசியம். நான் சொல்ற டாக்டரை பாருங்க.” என அவரும் நிரூபனுக்கு முடிந்த அளவுக்கு உதவி செய்தார்.
“சரிங்க டாக்டர். அகலியை நான் பார்த்துக்கிறேன்.” என்று வைத்து விட்டான்.
அதன் பின்னான பல மணி நேரங்கள்… அகலிகை பற்றியே இருந்தது. ஆறு வருடங்களாக குழந்தை இல்லாமல் தவிப்பதும், கனவும், மருத்துவர் கூறியதும், ட்ரெயினில் பார்த்த குழந்தையும் மாறி மாறி எண்ண அலைகளில் ஓடிக்கொண்டிருக்க , அடுத்து என்ன செய்வது என்ற யோசனைதான் அவனுக்கு. அகலிகைக்கு இப்பொழுது எது தேவை என்பதை முடிவாக அறிந்த நிரூபன் ஒரு முடிவுக்கு வந்திருந்தான் .
முடிவு எடுத்ததன் விளைவு மறுநாள் குழந்தை தொட்டில் காப்பகத்தில் நின்றான். ட்ரெயினில் பார்த்த குழந்தை இங்குதான் இருக்கிறது என்பதை காவல் அதிகாரிகள் மூலம் அறிந்து கொண்டான் நிரூபன். கூடவே ஒரு வழக்கறிஞரையும் அழைத்து வந்திருந்தான். குழந்தை தொட்டில் காப்பகத்தின் உரிமையாளரிடம் வழக்கறிஞர் மூலம் பேசி ட்ரெயினில் பார்த்த குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்திருந்தான். ஒரு குழந்தையை சட்டப்படி தத்து எடுக்க பல கட்டுப்பாடுகள் இருக்கிறது. அதையெல்லாம் தாண்டி பல கேள்விகளுக்கு நடுவில் குழந்தையை தத்தெடுக்க சம்மதம் வாங்கி இருந்தான். இதை நடைமுறைப்படுத்தவே நான்கு வாரங்கள் ஆனது அவனுக்கு. அந்த வாரங்களில் அகலிகையின் நடவடிக்கை முற்றிலும் மாறியிருந்தது. மன குழப்பத்தில் தினசரி வேலையைக் கூட செய்ய மறந்திருந்தாள். ஒருபுறம் மனைவியைப் பார்த்துக் கொண்டு மறுபுறம் குழந்தையை தத்து எடுக்கும் வேலையை கவனித்துக் கொண்டிருந்தான் அன்பானவன்.
அடுத்தடுத்த நாட்கள் வேகமாய் ஓட தன்னிலை மறந்திருக்கும் மனைவியை அழைத்துக் கொண்டு சென்றான் குழந்தை தொட்டில் திட்ட காப்பகத்திற்கு. முதலில் ஒன்றும் புரியாமல் உள்ளே நுழைந்த அகலிகைக்கு தொட்டில் ஒன்று காட்டப்பட , அதை நோக்கி சென்றாள். அருகில் சென்றதும் புரிந்தது அன்று ட்ரெய்னில் பார்த்த குழந்தை என்று. வார்த்தைகள் ஏதும் இன்றி மௌனமாக கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்.
சில கண்ணீர் துளிகள் குழந்தையின் கையில் தெறிக்க,மூடியிருக்கும் சிப்பி சற்றே திறந்தால் எப்படி இருக்குமோ அதே அழகோடு கண் திறந்தது அந்த குழந்தை. அவ்வளவுதான் அகலிகையின் அழுகை கடவுளின் பாதம் தொட்டது. அதில் குழந்தையும் அழுக, தாயாய் உருமாறினாள் அகலிகை.
குழந்தையை அள்ளி கொஞ்சியபடி கணவன் அருகில் வந்து நிற்க, பார்வை பரிமாற்றமே சொல்லாமல் சொல்லியது இனி இது நம் குழந்தை என்று. அதில் மேலும் கண்ணில் நீரோடு விரிந்த புன்னகையை தன் கணவனுக்கு பரிசளித்து கட்டிக் கொள்ள,அழகான குடும்பம் உருவாக்கியது.
அடுத்தடுத்து சில நடைமுறைகள் நடக்க, குழந்தை அகழியிடம் கொடுக்கப்பட்டது . குழந்தையை வாங்கச் செல்லும் நேரம் தடுத்த நிரூபன், “அகலி எனக்கு ஒரு பிராமிஸ் பண்ணுவியா? என வினா தொடுக்க, பார்வையாலேயே என்னவென கேட்டாள்.
“நாளைக்கே நமக்கு ஒரு குழந்தை பிறந்துட்டா….இந்த குழந்தை யாரா இருக்கும்.” என்று கணவன் கேட்கும் வார்த்தை முழுதாக முடிக்கும் முன்னே சொன்னாள்,
“நம்ம இரண்டாவது குழந்தைக்கு அக்கா…” என்று.
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மட்டுமே தெரியும் சாக்கு பையிலும், குப்பை தொட்டியிலும், ட்ரெயினிலும் கேட்கும் குழந்தையின் அழுக்குரல் எவ்வளவு வலிக்கும் என்று.
இனி தாரகை நிலாவின் எதிர்கால வாழ்க்கை கண்ட கனவை விட சிறப்பாக அமையும்.
அம்மு இளையாள்.
அருமையான கதை சூப்பர். உண்மையிலேயே குழந்தையோட அருமை குழந்தை இல்லாதெவங்களுக்கு தான் தெரியும்.👏👏👏👏👏
அருமையான உணர்வுபூர்வமான கதை….இந்தகாலத்துல பலர் சந்திக்குற பிரச்சினை தான் குழந்தையின்மை….அதோட வலிகளை உணர்வுபூர்வமா சொல்லியிருக்கீங்க தல….அழகான கதை😍😍😍😍
நான் கமெண்ட் போட மறந்துவிட்டேன் 🙈🙈🙈 அம்மு கா அறியா பிள்ளையே மன்னிச்சுஉஉஉ😆
குட்டி கதையில்லே நிறையே மெசேஜ் இருக்கு. குழந்தை கிடைக்காம இருக்குறவங்களுக்கு தான் அதோட ஃபீலிங்க்ஸ் தெரியும், பாவம் அந்த குழந்தையே ஒரு நோய் வாய்பட்டதாலே தூக்கி போட்டாங்கன்னு சொன்னது☹☹☹☹ எவ்வளவு ஈசியா இப்படி பொருளே போடுற மாறி போட்டுருக்காங்க. கடைசிலே அந்த க்ளைமேக்ஸ்லே வாவ்ன்னு பீல் பண்ணேன்😁😁😁