அத்தியாயம் – 2
“அன்புள்ள என்னவனுக்கு,
இன்று சந்தித்த பெண்ணை என் வாழ்நாளில் மறக்க இயலாது. திகழ்… திகழினி. எத்தனை எத்தனை தைரியம் அவளுள். நம் பிள்ளையையும் அவ்வாறே வளர்க்க வேண்டும் என்ற ஆசை என்னுள். அனுதினமும் உன்னைக் காண காத்துக் கொண்டிருக்கிறேன். வயதுக்கேற்ப காதலும் காமமும் உன்னிடத்தில் மட்டும் வெளிவருவேன் என துடித்துக் கொண்டிருக்கிறது.
காலை வேளையில் நீ பணிக்கு கிளம்ப,
ஏதோ சொல்ல வந்த நான் பாதியில் நிறுத்த,
விறுவிறு என்று வெளியில் சென்ற நீ,
திரும்பவும் வந்து, நெற்றி முத்தமிட்டு
இமைக்கும் நொடிதனில் சென்று விட்டாய்.!
வெட்கப் புன்னகையோடு
அந்திசாயும் பொழுதிற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.
நீ வர வேண்டி.
இவ்வாறு உன்னுடன் முத்தம் கொஞ்சிட ஆசையடா. விரைந்து என் அகம் வந்து சேர். – இதழ்”
தன் நாட்குறிப்பை மூடி வைத்துவிட்டு அமைதியாகக் கண் மூடினாள் இதழ். ஒவ்வொரு நாளும் தன் வருங்கால துணையை எண்ணி எக்கச்சக்க கனவுகளை கண்டுக் கொண்டு இருக்கிறாள். ஒவ்வொரு பெண்ணிற்கும் இயற்கையாகவே தோன்றும் ஆசை தான். பலருக்கு நினைத்தபடி துணை அமையும், பலருக்கோ அமைந்ததை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிடும். என்னதான் கனவு கண்டாலும் நிதர்சனம் என்று ஒன்று உள்ளது அல்லவா? இதில் இதழின் கனவு கனவாகிடுமோ, இல்லை அவளின் கனவு தாகம் துணையால் தீர்த்து வைக்கப்படுமா? எல்லாம் விதியின் கைகளில்தான் உள்ளது.
திகழோ காதிலும் மூக்கிலும் புகையை விட்டபடி அமர்ந்திருந்தாள். ஆனால், அவளின் இந்த மனநிலைமைக்கு காரணமானவனோ கைநிறைய சோளப்பொறியை வைத்துக் கொண்டு டிஸ்கவரி தொலைக்காட்சியை சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘சதிகாரா! அந்நியாயமா என்னோட டாப்ப இப்டி பண்ணிட்டானே. இவன என்ன செய்றது?’ என்று மீண்டும் தன் ஈவில் மூளையை கசக்கிக் கொண்டிருந்தாள் திகழ்.
வேறொன்றுமில்லை, இளையாவின் மேல்சட்டையை இவள் எடுத்ததற்கு அவளின் பிறந்தநாளிற்கு ஆசையாசையாக வாங்கின சந்தன நிற மேல்சட்டையை எடுத்து அவன் பக்கத்து வீட்டு ஜாக்கிக்கு போட்டு ஒரு நான்கைந்து புகைப்படம் எடுத்துவிட்டான். பாவம் ஜாக்கிக்கும் ஆசை இருக்கும்தானே சட்டை போட வேண்டும் என்று, அதுவும் தன் எதிரியின் சட்டையை அவளுக்கு தெரியாமல் போட்டு அழகு பார்ப்பது எத்தனை சுகம் என்பதை அதுவும் அறிந்திருந்ததோ என்னவோ அத்தனை அழகாகப் புகைப்படத்திற்கு ஒத்துழைத்தது.
நம் நாயகனைப் பற்றி கூற மறந்துவிட்டேன், அவன் ஒரு புகைப்படவியலாளர். அவனுக்கு மிகவும் பிடித்த, விரும்பி ஏற்ற தொழில் இது. ஆனால், இதற்கு அவன் கொடுத்த விலைதான் அதிகம். இதன் பிண்ணனி பற்றி பிறகு காண்போம்.
திகழும் ஜாக்கியும் எப்போதும் எதிர் எதிர் துருவங்கள். இருவருக்கும் பாசம் இருந்தாலும் ஏனோ அந்த ஜீவனிடம் வம்பு வளர்ப்பது திகழின் தினசரி பணி. ஆனால், ஜாக்கிக்கு இளையா என்றால் கொள்ளை பிரியம். இளையா, தான் எடுத்த புகைப்படத்தை அப்படியே முகநூலில் பதிவிட, தன் சட்டை எப்படி அங்கு சென்றது என்று யோசித்தவள், கடுப்பின் உச்சத்தில் இருக்கிறாள். ஆனால், இளையாவோ கடுகடுத்த அவளின் முகபாவனைகளில் திருப்தி அடைந்தவனாக தன் புகைப்படக்கருவியை சுத்தம் செய்து கொண்டிருந்தான். மற்ற நேரமாக இருந்திருந்தால் இந்நேரம் ஜாக்கிக்கும் திகழிற்கும் அடிதடி முற்றி இருக்கும். ஆனால், ஜாக்கியின் முதலாளி இளையாவின் நண்பன் அகிலன் வெளிநாட்டிலிருந்து வந்திருப்பதால் சற்று அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறாள். திகழிற்கு அவனின் மேல் ஒரு கண். இல்லையேல், ஜாக்கியின் நிலை கந்தர்வகோலமாகியிருக்கும்.
இளையபாரதி மற்றும் திகழைப் பெற்ற புண்ணியவதி தேன்மொழி தன் வேலைகளை முடித்துவிட்டு வந்தமர, சரியாக அவர்களின் தந்தையும் வந்தார். இனிமேல் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த திகழ் அமைதியாக அமர்ந்துவிட்டாள்.
அவர்களின் தந்தை ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி. இதற்கு மேல் வேறெதுவும் சொல்ல தேவையில்லை என்றே நினைக்கிறேன்.
“என்ன திகழ் இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே வொர்க் எப்டி போச்சு.?” என்று கேட்டவாறே இருக்கையில் அமர்ந்தார்.
“நல்லா போச்சு பா. என்னோட டீ.எல். கூட ரொம்ப நைஸ் பர்சன்.”
சரியென்று தலையசைத்தவர், இளையாவிடம் திரும்பினார்.
“உனக்கு ஜேர்னல் எப்டி போய்ட்டு இருக்கு? அடுத்து எங்க போக போற?”
“சூப்பரா போய்ட்டு இருக்குப்பா. என்ன இந்த டைம் வேடந்தாங்கல் போகலாம்னு இருக்கேன்பா. இந்த டைம்ல ரேர் பர்ட்ஸ்லாம் வரும்.” என்று அவன் சொல்லி வாயை மூடவில்லை,
“என்ன நீங்களும் அவனோட சேர்ந்துக்கிட்டு பேசிட்டு இருக்கீங்க. இப்போவே அவனுக்கு வயசு இருபத்தேழு ஆச்சு. கல்யாணத்த செஞ்சிக்கிட்டு அவன் எங்க வேணா போகட்டும். இவனுக்கு அடுத்து திகழ் வேற இருக்கா.” என்று அன்னைக்குரிய கடமையை சரியாக செய்தார் தேன்மொழி.
அவர்களின் தந்தை தேவநந்தனும் திகழும் அவனை திரும்பிப் பார்க்க, முகத்தில் ஒரு வித குழப்பத்துடன் தன் இடது பக்க விற்புருவத்தை மட்டும் தூக்கி மூவரையும் பார்த்தான்.
‘என்ன தேனு பேசிட்டு இருக்க? அவனுக்கு என்ன இருபத்தேழுதானே ஆகுது. இன்னும் ரெண்டு வருசம் போகட்டுமே. அதுக்குள்ள என்ன அவசரம்.’ என்று கேட்கத்தான் அவருக்கும் ஆசை. ஆனால் என்ன செய்வது, வெளியில் இராணுவ வீரராக இருந்தாலும், வீட்டில் மீனாட்சி ஆட்சி தானே.
“ஆமாம்மா, நானும் அத பத்தி பேசதான் வந்தேன். நீ சொன்ன மாதிரி குலதெய்வ கோவில்ல போய் ஜாதகத்த வச்சு பூஜை பண்ணிட்டு வந்துடலாம் என்ன.? நல்ல நாளா பாரு.” என்று தன் மனைவி பேச்சை ஆமோதித்தார் தேவநந்தன்.
உண்மையில் இளையபாரதிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. படிப்பு வேலை என்றே கவனம் செலுத்தியவனுக்கு காதல் கத்திரிக்காயின்மேல் கூட ஈர்ப்பு வரவில்லை. ஆனால் குடும்பத்தின் மேலும் தன் அன்னையின் மேலும் மிகுந்த பாசம் கொண்டவன். தற்போதுகூட கல்யாணம் என்ற சொன்னபோதும் அவனுக்கு ‘இப்போ எதுக்கு?’ என்ற எண்ணமே தவிர, மறுக்க மனம் வரவில்லை.
‘எப்டியும் வீட்ல கல்யாணம் செஞ்சிதான் வைக்க போறாங்க.’ என்ற மனநிலைதான் அவனிற்கு. இருந்தாலும் தன் கெத்தை விட்டுக்கொடுக்க விரும்பாதவன், “அம்மா, அப்பா, ப்ளீஸ்.! திகழ் இருக்கப்போ எனக்கு ஏன் முன்னாடி? முதல்ல திகழுக்கு கல்யாணம் பண்ணிட்டு அப்ரோம் எனக்கு பண்ணுங்க. வீட்டுல பொண்ணு இருக்கப்போ யாராவது முதல்ல பையனுக்கு கல்யாணம் செய்வாங்களா? நாலு பேர் நாலு விதமா பேச மாட்டாங்க?” என்று தன் கருத்தை சொல்ல,
‘இவன் என்னைக்கு அந்த வீணா போன நாலு பேத்த பத்தி யோசிக்க ஆரம்பிச்சான். ஏதோ சரியில்லயே. நம்மள ஏன் இப்போ உள்ள இழுக்குறான்’ என்ற யோசனை திகழிற்கு ஒரு பக்கம் என்றால், ‘நம்ம பையனுக்கு என்ன ஆச்சு? இவன் இத பத்திலாம் கவலபட மாட்டானே.!’ என்று யோசித்த தேவநந்தன் அதனை வெளிப்படையாகவே கேட்டுவிட்டார்.
“இளையா? நீ நல்லாதானே இருக்க? நீ எப்போல இருந்து நாலு பேர பத்தி யோசிக்க ஆரம்பிச்ச? நாங்க பேசுனா கூட நீ அத பத்தி கேர் பண்ண மாட்டியே” என்றார்.
“என் பையன் நல்லது சொன்னா உங்களுக்கு பொறுக்காதே.! நீ சொல்றதும் சரிதான்பா. ஆனா, உனக்கு கல்யாணம் ஆனாதான் திகழுக்கு முடியும்னு சொல்லிட்டாங்கடா”
“யாரு..?”
“நம்ம ஜோசியக்காரர்தான்.”
‘அந்த விக்கெட் மட்டும் என்கிட்ட இருந்து மிஸ் ஆகிட்டே போகுது. இப்போ நான் என்ன ரீசன் சொல்றது. வேண்டாம்னு சொன்னாலும் லவ்வான்னு கேட்பாங்க. அப்டி ஏதாவது இருந்தா தானே சொல்றதுக்கு. அப்டிதான் ஒன்னும் இல்லயே. ஒருவேள எனக்கு வர போற மகராசி சாபம் ஏதாவது விட்டுட்டாளா?’ என்றபடி என்ன காரணம் சொல்வதென்று யோசனையில் ஆழ்ந்தான்.
உண்மையில் இதையேதான் இதழும் பிரவீனிடம் புலம்பிக் கொண்டிருந்தாள். “ஏன்டா எரும! ஒருவேள எனக்கு வர போற எதிர்காலம் எனக்கு சாபம் கீபம் விட்டுட்டானா?”
“ஏன்டி உனக்கு திடீர் சந்தேகம்?”
“பின்ன என்னடா, ஸ்கூல், காலேஜ் எல்லாமே பசங்க கூட தான் படிச்சேன். சரி, அப்போ நல்ல பொண்ணா இருக்கலாம்னு இருந்துட்டு, இப்போ வேலைக்கு வந்ததுக்கு அப்ரோம்கூட யாரும் செட் ஆகலயே எரும. அதான் எனக்கு வர போறவன் நான் கல்யாணம் வரைக்கும் சிங்கிளாவே சுத்தனும்னு சாபம் விட்டு இருப்பானோ?”
“இருக்கலாம் எரும. உனக்காவது கற்பனைக்காவது ஒரு எதிர்காலம் இருக்கு. எனக்கு கற்பனை கூட வர மாட்டிங்குது.”
“ஏன்.?” என்று அவனை ஒரு மாதிரியாகப் பார்க்க,
“என் கற்பனைல மட்டும் இல்ல, கண்ண மூடுனாலே கண்ணு முன்னாடி இருக்காடி அவ.. பருத்திவீரன் கார்த்தி போல் கைகளை தலைக்கு மேல் வைத்துக்கொண்டு, கண்ண மூடுனா கனவுல அவ தான்” என்று வசனம் பேசினான்.
“யாரு…? எனக்கு தெரியாம?”
“ஏய், திடீர் அம்னீசியாவா உனக்கு. நான் யார சொல்லப் போறேன். என் டார்லிங்… திகழ்தான்.”
“மவனே, அநேகமா மனோஜ்க்கு அடுத்து உதை வாங்கப் போறது நீதான்னு நினைக்குறேன்டி. அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்துவிட்டு, எதுக்கும் ஜாக்கிரதையா இரு” என்றாள் சிரிப்பை அடக்கிக் கொண்டு.
“உனக்கு பொறாமடி. உன்ன விட்டுட்டு நான் சீக்கிரம் கமிட் ஆகப் போறேன்னு.”
“யாருக்கு எனக்கா? ஒரு நாள் என் கால்ல விழுந்து எப்டியாவது என்ன திகழ் கூட சேர்த்து வை இதழ்னு நீ கதற போற, அத நான் பாக்கப் போறேன்.”
அவளை அசட்டுப் பார்வை பார்த்தவன், “அது நடந்தா பாக்கலாம். உனக்கு இத்தன நாள் வரைக்கும் ஆள் செட் ஆகல, இன்னமும் செட் ஆகல அது வேற விசயம். அதுக்கு காரணம் உன் எதிர்காலம் சாபமா இருந்தா கூட, எனக்கும் ஏன் செட் ஆகல.?” என்று யோசிக்கும் பாவனையில் இருந்தான்.
“அநேகமா உனக்கும் உன்னோட ஆளு சாபம் விட்டுட்டாளோ என்னவோ?”
“நோ, நெவர். அதுலாம் சாபமா இருக்காது. நானும் ஹேண்ட்சம்மா தான் இருக்கேன். எனக்கும் லவ் செட் ஆகி இருக்கும். நேரம் கூட நல்லா தான் இருந்தது, அது சேர்க்க சரி இல்ல, வேற ஒன்னும் இல்ல.”
அவனை கொலைவெறியில் முறைத்துக் கொண்டிருந்தாள் இதழ். ‘மவனே, நாளைக்கு ஆஃபீஸ் வருவல, இரு உன் சிஸ்டம்ம ஹேக் பண்ணி வைக்குறேன்.’ என்று மனதில் சூளுரைத்துக் கொண்டாள்.
“என்ன என் சிஸ்டம்ம ஹேக் பண்ண பிளான்னா?”
“என்ன, என் மைன்ட் வாய்ஸ் உனக்கு கேட்டுச்சா?”
“அடியே, பாம்பின்கால் பாம்பறியும்.”
“அப்டின்னா?”
“உன்கிட்ட போய் பழமொழி சொன்னேன் பாரு என்ன அடிக்கணும். அதாவது, நீ யாருன்னு எனக்கு தெரியும், நான் யாருன்னு உனக்கு தெரியும். நாம ரெண்டு பேரும் யாருன்னு ஊருக்கே தெரியும்.” என்றான் கவுண்டமனி பானியில்.
‘ஊருக்கே தெரியுமா?’ என்று சிந்தித்தவள், அந்த வழியாக சென்றுக் கொண்டிருந்த ஒரு சிறுவனை அழைத்து, “டேய் தம்பி, நாங்க யாருன்னு உனக்கு தெரியுமா?” என்று கேட்டாள்.
“யாரு நீங்க? என்ன புள்ள புடிக்குற கும்பல்லா? இன்னும் எத்தன பேர் வந்து இருக்கீங்க.? இருங்க நான் போலீஸ்க்கு போன் பன்றேன்.” என்று அவன் எகிற,
தன் தோழியை கொலைவெறியில் முறைத்துக் கொண்டிருந்த பிரவீன், “தம்பி, நீ போப்பா. உன்கூட ஃபிரண்டா இருக்குறதுக்கு என்னை ஏன்டி ஜெயிலுக்கு கூட்டிட்டு போற?”
“என்னடா ஊருக்கே தெரியும்னு சொன்ன, அந்த பையன் என்னடான்னா நம்மள பாத்து புள்ள புடிக்குற கும்பல்லான்னு கேட்குறான். என்ன சிம்ரன் இதெல்லாம்.?”
“உனக்கு பழமொழியும் தெரியல, பழய காமெடியும் புரியல. இந்த லூசு புள்ளைக்கிட்ட சிக்கி தவிக்க விட்டு போய்ட்டியே என் அப்பத்தா.” என்று புலம்பியவன், “பேசாம வா, இன்னும் கொஞ்ச நேரத்துல ரெண்டு வீட்ல இருந்தும் போன் வரும்.” என்று அவளை அழைத்துக் கொண்டு போனான்.
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
+1
நைஸ் 😍😍😍
இதழ் பிரவீன் நட்பு சூப்பர்… 💜