அந்தி மாலை நேரத்தில் சூரியனின் செம்மஞ்சள் கதிர்களினால் கடல் நீர் ஒரு பக்கம் தங்கம் போல ஜொலிஜொலித்துக் கொண்டிருக்க, மறுபுறம் நிலவு மகள் தன் முகத்தை காட்ட வெளிவர முயற்சித்து கொண்டிருந்தாள்.
கடல் அலையின் சத்தமும் மக்களின் ஆரவாரமும் கன்னியாகுமரி கடற்கரை முழுவதும் வியாபித்திருந்தது. சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக தன் கடமையை முடித்துக் கொண்டு தண்ணீருக்குள் ஒளிந்து கொள்வதற்காக இறங்கிக் கொண்டிருந்தான். கண் கூசும் ஒளி கொஞ்சம் கொஞ்சமாக குறைய, கடலில் இருந்து குளிர் காற்று வீச தொடங்கியது. சூரியன் முழுவதும் கடலுக்குள் நுழைந்ததும், “ஹே..” என்ற மக்களின் ஆரவாரம் அந்த கன்னியாகுமரி கடற்கரை முழுவதும் வியாபித்திருந்தது.
சூரியன் மறைந்ததும் அனைவரது கண்களும் நிலவு வரும் திசை நோக்கி திரும்ப, அடிவானத்தில் இருந்த மேகங்கள் கடலில் இருந்து நிலா வெளிவருவதை மறைத்துக் கொண்டு இருந்தது. நிலவு மகள் வெளிவந்து விட்டாள் என்ற அறிகுறியாக அடிவானம் முழுவதும் வெளிச்சமாக இருக்க, சற்று நேரத்தில் மேகங்களில் இருந்து வெளியே வந்த நிலவின் ஒளி, கடலில் கோடாக அலை அலையாக தெரியும் ரம்யமான காட்சியை, அங்கிருந்த ஆயிரக்கணக்கான கண்கள் கண்டு ரசித்தது.
ஆரவாரமான மக்களின் கூட்டத்திற்கு நடுவே அமைதியாக பாறையில் உட்கார்ந்து சூரியன் மறையும் காட்சியையும் நிலவு உதிக்கும் காட்சியையும் கண்டு ரசித்து கொண்டிருந்தாள் தெய்வானை.
பௌர்ணமி அன்று கன்னியாகுமரியின் பாறையில் அமைதியாக அமர்ந்து, சூரியன் அஸ்தமனத்தையும் நிலவு உதிப்பதையும் காண்பது அவளது மாதாந்திர பழக்கங்களில் ஒன்று. பத்தடி தூரத்தில் மகன் செந்தூர் விளையாடிக் கொண்டிருக்க, அவன் மீது ஒரு கண் வைத்துக் கொண்டே, இயற்கையையும் ரசித்துக் கொண்டிருந்தாள். காற்றின் வேகத்திற்கு அவள் தலை முடி கலைந்து பறந்து கொண்டிருக்க, வேலை முடித்து வந்ததன் களைப்பு அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிய, அதையும் மீறி ஒருவித சோகம் அவள் முகத்தில் இருந்தது.
சிறிது நேரம் கழித்து மேகக் கூட்டத்திற்கு மேலே நிலவு தன் முகத்தை முழுவதும் காட்ட மக்களிடம் மீண்டும் ஒரு சலசலப்பு. வெளிச்சம் சற்றென்று குறைந்து இருள் சூழ ஆரம்பிக்க, தன் மகனை அழைத்தாள் “செந்தூர் கண்ணா, வீட்டுக்கு போலாமா?” என்று.
விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது செந்தூர், “இன்னும் கொஞ்ச நேரம் அம்மா” என்று கெஞ்சினான்.
“நேரம் ஆகிவிட்டது. பாட்டி தேடுவார்கள் அல்லவா? வா போகலாம்” என்று அவன் கை கால்களில் ஒட்டியிருந்த மணல்களை எல்லாம் தட்டி விட்டுக்கொண்டு, தனது கைப்பையையும் எடுத்துக்கொண்டு, அங்கிருந்து தங்களது வீட்டிற்கு கிளம்பினாள் தெய்வானை.
மெயின் ரோடு வந்ததும் மகனுக்கு பிடித்த மில்க் ஷேக் வாங்கி கொடுத்துவிட்டு, அவளும் ஒரு மாதுளை பழம் ஜூஸ் குடித்தாள். பின்னர் தன் அம்மாவிற்கு பிடித்த மாம்பழ மில்க் ஷேக் ஒன்றை வாங்கிக் கொண்டு, மகனுடன் சின்னமுட்டம் செல்லும் மினி பஸ் ஏறி அமர்ந்தாள்.
செந்தூர் உண்டான நாளிலிருந்து, அவள் அந்த மீனவ கிராமத்தில் தான் வசிக்கிறாள். மீனாட்சி ஆரம்பப்பள்ளி என்ற தனியார் பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றாள் தெய்வானை.
சுனாமி சமயம் முழுவதும் அழிந்த கிராமத்தை தத்தெடுத்து, அங்குள்ளவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்து கொண்டிருக்கும் சக்தி மீனாட்சி அறக்கட்டளையின் பள்ளியில் தான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
சக்தி மீனாட்சி அறக்கட்டளையிலிருந்து வருடம் ஒருமுறை வரும் மேனேஜர், அவர்களுக்கு தேவையான அனைத்தையும் ஊர் தலைவர்கள் மூலம் நிறைவேற்றி வைப்பார்.
ஆதரவில்லாமல் வந்த தெய்வானையை தன் மகள் போல் பார்த்துக் கொள்கிறார் வள்ளியம்மாள். ஊர் தலைவரும் அவளின் கல்வி தகுதி அறிந்து மீனாட்சி பள்ளியில் வேலை போட்டுக் கொடுக்க, தன் கடந்த கால கவலைகளை மறந்து நிம்மதியாக தன் மகனுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
நிம்மதியாக சென்று கொண்டிருந்த அவளது வாழ்க்கையை கெடுப்பதற்காகவே கணக்கு வாத்தியாராக வந்திருக்கின்றான் கண்ணன். நாகர்கோவில் அருகே இருக்கும் ஊரிலிருந்து வேலைக்கு வருபவன். தெய்வானை குழந்தையுடன் தனியாக இருப்பதைக் கண்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கடந்த மூன்று மாதங்களாக வற்புறுத்திக் கொண்டிருக்கின்றான்.
தெய்வானை எவ்வளவு தான் மறுத்துக் கூறியும் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஏதாவது ஒரு விதத்தில் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறான். ஆரம்பத்தில் மறைமுகமாக இருந்த அவனது தொந்தரவுகள், இப்பொழுது வெளிப்படையாக மற்ற ஆசிரியர்களுக்கும் தெரியும்படி தொடர்ந்தது.
ஒரு கட்டத்தில் அவளுக்கு இங்கிருந்து சென்று விடலாமா? என்ற எண்ணமும் தோன்ற, மூன்று வயது மகனை வைத்துக்கொண்டு வேலையில்லாமல் எங்கு செல்வது என்ற எண்ணத்தில், வேறு வழியின்றி தினமும் வேலைக்குச் சென்று கொண்டிருந்தாள்.
இன்று பௌர்ணமி ஆனதால் தன் மகனுடன் பள்ளிக்கு வந்திருந்தாள் தெய்வானை. பள்ளி முடிந்ததும் மகனுடன் கன்னியாகுமரிக்கு சென்று நிலவு உதிக்கும் அழகை கண்டு ரசித்து விட்டு வருவது அவளது பழக்கம்.
மகனை சிறுபிள்ளைகள் விளையாடும் விளையாட்டு அறையில் விட்டுவிட்டு வகுப்பு எடுக்க சென்றுவிட்டாள். தனியே விளையாடிக் கொண்டிருந்த செந்தூரிடம் வந்த கண்ணன், தன்னை அப்பா என்று அழைக்கும் படி கூறி கட்டாயப்படுத்தி, ஒருவழியாக கூப்பிடவைத்து விட்டான்.
வகுப்பு முடித்து விட்டு வந்து, மகனை தூக்கிக் கொண்டு, தனியா விளையாடினிங்களா செல்லம்? அம்மா இல்லாம போர் அடிச்சுதா? அம்மாவை தேடுனிங்களா?” என்று கேட்டு செல்லம் கொஞ்சி கொண்டே ஸ்டாப் ரூமுக்கு தூக்கிக்கொண்டு வந்து அமர்ந்தாள்.
செந்தூரோ மழலையாக, “இல்லை, அப்பா கூட விளையாடினேன்” என்றான்.
அவன் கூறியதை கேட்டதும் அதிர்ந்த தெய்வனை சுற்றும் முற்றும் பார்க்க, அவளை கண்டு மற்ற ஆசிரியர்கள் மௌனமாக புன்னகைத்தனர்.
அங்கிருந்த கண்ணன் விஷமமாக சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்தாள். சற்றென்று அவளுக்கு விஷயம் புரிய,
தன் மகனை தன்னை பார்க்கச் செய்து, “இங்கே பாரு செல்லம். உன்னோட அப்பா இங்கு இல்லை. கண்டவங்களை எல்லாம் அப்பான்னு சொல்லக்கூடாது. புரியுதா?” என்று கோபமாக, அதே சமயம் எல்லோருக்கும் கேட்கும்படி சத்தமாக கூறினாள்.
முதல் முறை தன் அம்மாவின் முகத்தில் கண்ட கோபத்தை கண்டு பயந்த செந்தூர் அவளை இறுக்கமாக கட்டிக் கொண்டான். மகனின் செயலில் வருந்திய தெய்வானை, கண்ணனை முறைத்துக் கொண்டு “சின்ன பிள்ளை கிட்ட எப்படி பேசணும்னு தெரியாதா சார்?” என்றாள் கோபமாக.
மற்ற ஆசிரியர்கள் முன் நேரடியாக அவள் திட்டியதும், கோபம் அடைந்த கண்ணன், “நான் எதுவும் தவறாக சொல்லலையே. உங்களை கல்யாணம் பண்ணிக்க தானே கேட்கிறேன். நான் உங்களை கல்யாணம் பண்ணிக் கொண்டால் செந்தூருக்கு நான் தானே அப்பா” என்றான் அலட்சியமாக.
இங்க யாரும் செந்தூருக்கு அப்பா வேணும்னு கேட்கல. நான் உங்ககிட்ட நிறைய தடவை சொல்லிட்டேன், உங்களை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு. திரும்பத் திரும்ப வந்து தொந்தரவு கொடுக்காதீங்க. இதுதான் உங்களுக்கு கடைசி. இனிமேல் என்னை தொந்தரவு செய்தீர்கள் என்றால் நான் மேலிடத்தில் சொல்லி விடுவேன்” என்று மிரட்டி விட்டு தன் மகனை தூக்கி விட்டு கன்னியாகுமரி கடற்கரைக்கு வந்துவிட்டாள் தெய்வானை.
தொடரும்..
– அருள்மொழி மணவாளன்..
Nice start sis 😍😍 waiting for next hero intro ini thano 🤩
Thank you ma 😊😊
ஆமாம் 😊
கண்ணன் ஏன் தெய்வாக்கு தொல்லை குடுத்துட்டு இருக்கான்.
செந்தூர் அப்பா யாரு?
நல்ல ஆரம்பம் சூப்பர் 👌👌👌
நன்றி 😊😊😍