Loading

தெய்வானைக்கு வீட்டில் இருந்து ஃபோன் வந்ததும் அவளது அறையின் கதவை தட்டினான் குகன். அவள் கதவை திறப்பதற்குள் ஃபோன் மறுமுறையும் அடித்து சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது. முதலில் தெரிந்த அவளின் அம்மா அப்பாவின் முகம் கண்டு எவ்வளவு அழகான அருமையான தாய் தந்தையர் என்று நினைத்துக் கொண்டு இருந்தவன், அடுத்ததாக மாமா என்று தெரிந்த முகத்தை கண்டதும் குழப்பமானான். 

அதற்குள் தெய்வானை கதவை திறக்க, “உன் வீட்டில் இருந்து தான் ஃபோன்” என்று அவளிடம் ஸ்விட்ச் ஆஃப் ஆன ஃபோனை கொடுத்தான். 

“அச்சச்சோ போன் ஆப் ஆயிடுச்சே. எப்படியும் ஒரு நாள் தானே என்று சார்ஜர் எடுத்துட்டு வரலையே! உங்ககிட்ட இந்த ஃபோனுக்கு உரிய சார்ஜர் இருக்கா?” என்று பதட்டமாக கேட்டாள் தெய்வானை.

“என்னிடம் ஐஃபோன் தான் இருக்கிறது. அதற்குரிய சார்ஜரில் இது பொருந்தாதே?” என்று சொல்லிவிட்டு, “சரி நாளைக்கு தான் வீட்டிற்கு சென்று விடுவாயே! நாளைக்கு சென்றதும் சொல்லிவிடு” என்றான். 

அப்பொழுதுதான் வந்ததுல இருந்து அவளிடம் மரியாதையாக பேசிக் கொண்டிருந்தவன், திடீரென்று ஒருமையில் பேசுவதை கண்டு அதிர்ந்து அவனைப் பார்த்தாள். 

அவனும் ஏதோ யோசனையில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்க அவனிடமே கேட்டு விடலாம் என்று தயங்கியபடியே அங்கிருந்த ஒற்றை சோபாவில் உட்கார்ந்தாள். 

அவனுக்கும் ‘ஃபோனில் மாமா என்று போட்டிருக்கிறாளே! அவனுக்கும் இவளுக்கும் என்ன தொடர்பாக இருக்கும்’ என்ற சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. 

அவன் முகத்தை பார்த்தாலே தெரிந்தது அவனது கவனம் தொலைக்காட்சியில் இல்லை என்று. எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் தயங்கியபடி இருந்த தெய்வானையை கண்ட குகன் “தூங்கப் போக வில்லையா?” என்றான். 

“இல்லை எனக்கு தூக்கம் வரலை. ஒரு மாதிரி,” என்று தயங்கினாள்.

“ஏன்?” என்றான் ஒற்றை புருவத்தை தூக்கியபடி. 

“அது, நீங்க, இது..” என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி ஒவ்வொரு வார்த்தையா தயங்கினாள் தெய்வானை.

“என்ன? அது, இது என்று இழுத்துக் கொண்டிருக்கிறாய். இது என்னுடைய பண்ணை வீடு தான். நாளை காலையில் சுற்றிப் பார்த்து தெரிந்து கொள். இப்பொழுது போய் தூங்கு” என்றான் சற்று கோபமாக.  

அவன் கோபத்திற்கான காரணம் புரியாமல், இதற்கு மேல் அவனிடம் பேசவும் முயற்சி செய்ய பயந்து, “சரி” என்று வேகமாக எழுந்து அவளுக்கு கொடுக்கப்பட்ட அறைக்குள் நுழைய பார்த்தாள்.

“ஒரு நிமிடம்” என்றான். 

அவன் கூப்பிட்டதும் அப்படியே நின்று திரும்பிய தெய்வானை, “என்ன?” என்று பார்த்தாள். 

“அம்மா காலிங் என்று வந்தது. அதில் அப்பா அம்மா படம் சேர்த்தே வைத்திருக்கிறாயே?” என்றான் மொட்டையாக. 

முதலில் புரியாமல் ஃபோனை பற்றி சொல்கிறான் என்று, “ஆமாம், இப்போதைக்கு அப்பா அம்மா எல்லாமே எனக்கு அம்மா தான். என் அப்பா கொஞ்ச நாளைக்கு முன்னாடி இறந்துட்டாங்க” என்றாள் சோகமாக. 

“ஓ” என்று ஒற்றை வார்த்தை தான் அவனிடம் இருந்து வந்தது. சற்று நேர அமைதிக்கு பிறகு, “அடுத்தது மாமா என்று வந்ததே?” என்றான் அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்துக் கொண்டு. 

“அது எங்க அம்மாவோட தம்பி” என்றாள் வெறுப்பாக. 

“தம்பி என்றால்?” என்று இன்னும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் மேலும் கேள்வியை கேட்டான். 

இப்பொழுது தெய்வானைக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. “அது எங்க அம்மாவோட தம்பி. அதனால் மாமா. ஆனால் எனக்கும் என் அப்பா அம்மாவிற்கும் அவரை பிடிக்காது. அவர் ஏதோ தவறான தொழில் செய்வதாக அப்பா சொல்லி இருக்காங்க. அப்பா இருக்கும் வரை அவரை வீட்டிற்குள் விட்டதே இல்லை. ஆனால் இப்பொழுது அப்பா இறந்து விட்டதால் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருகிறார். அவருக்கு என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது போல தெரிகிறது. ஆனால் எனக்கு அவரை பிடிக்கவில்லை” என்று மேலோட்டமாக கூறி முடித்தாள். 

முழுவதையும் கேட்டவன் அமைதியாக இருந்தான். 

“ஏன்? என்ன ஆச்சு? அவர் உங்களிடம் ஏதாவது தவறாக பேசி விட்டாரா? நீங்கள் ஃபோனை அட்டென்ட் செய்தீர்களா?” என்று அவனின் அமைதியான குழப்பமான முகத்தை பார்த்து படபடவென்று கேட்டாள். 

அவளது படபடப்பை கண்டதும் “நான் ஃபோன் அட்டென்ட் செய்யவில்லை. எனக்கு தெரியாதா? வீட்டிற்கு வராத பெண்ணின் ஃபோனை ஒரு ஆண் எடுத்துப் பேசினால் அவர்கள் மனது எவ்வளவு பயப்படும் என்று!” என்று சொல்லிவிட்டு உன்னிடம் கொடுப்பதற்குள் ஃபோன் கட் ஆகிவிட்டது என்றான். 

“வழக்கமா நான் ரொம்ப கவனமா இருப்பேன். இன்று பஸ்ஸில் கொஞ்சம் பாட்டு கேட்டுக்கொண்டே தூங்கி விட்டேன். அதில் பாட்டை நிறுத்த மறந்ததால் சீக்கிரம் பேட்டரி லோ ஆயிடுச்சு என்று நினைக்கிறேன்” என்று சோகமாக கூறினாள். 

“அம்மா ரொம்ப பயந்து இருப்பாங்க. மாமாவும் உடனே ஃபோன் பண்ணி இருக்கிறார் என்றால், அவரும் எங்க வீட்டில் தான் இருக்க வேண்டும். ஒரு விதத்தில் இன்று நான் அங்கு செல்லாதது நல்லதாக பட்டாலும், அம்மா பயப்படுவார்களே?” என்று கவலையாக சொன்னாள்.

“ஏன் நீ வீட்டிற்கு செல்லாதது நல்லது என்கிறாய்?” என்றான் 

“இவ்வளவு நேரம் ஆகிறது. இப்பொழுது மாமா அங்கு வீட்டில் இருந்தால் இரவு அங்கேயே தங்கி விடுகிறேன் என்று கூறுவார். அவர் வீட்டில் இருந்தால் என்னால் நிம்மதியாக உறங்க முடியாது. ஒருவிதமான பயமாகவே இருக்கும். அம்மாவை நெருக்கி படுத்துக்கொண்டு அவர்களையும் தூங்க விடமாட்டேன்” என்று சொல்லும் போதே அவளது முகத்தில் ஒருவித அருவருப்பும் பயமும் தெரிந்தது. 

அதை கவனித்துக் கொண்டவன், “உன் அம்மா இருக்கும் போதே, உன் தாய் மாமா வீட்டில் இருந்தால் பயமாக இருக்கிறது என்கிறாய். ஆனால் இப்பொழுது என்னுடன் தனியாக இருக்கிறாயே! உனக்கு பயமாக இல்லையா?” என்று அவளைப் பார்த்தான். 

அவன் சொன்ன பிறகுதான், ‘அவளுக்கும் அவர்கள் இருவர் மட்டுமே இருப்பதும், அதுவும் இதுவரையில் வேறு எந்த வீட்டிலும் தங்காததும், அது மட்டுமல்ல ஒரு இளைஞன் கூடவே இருப்பது, என்று எல்லாவற்றையும் வரிசையாக நினைத்துப் பார்த்தாள். அதுமட்டுமின்றி இதுவரை அவளுக்கு வெளியிடத்தில் இருப்பது போலவோ, அன்னிய ஆணுடன் இருப்பது போலவோ தோன்றவே இல்லையே?’ என்று நினைத்தாள். 

அதை அவனிடமே கேட்டாள். “ஆமால்ல, எனக்கு ஏதோ புது இடத்தில் இருப்பது போல் தோன்றவே இல்லையே! ஏன்?” என்றாள் அவனை ஆராய்ச்சியாக பார்த்து. 

அவனுக்கும் அதே உணர்வு தானே இருந்தது. அவன் மட்டும் என்ன பதில் சொல்வான். 

“சரி நீ ஏன் திருச்சி போனாய்? அப்படியே போனாலும் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி இருக்க வேண்டாமா?” என்று கண்டிப்புடன் கேட்டான். 

அப்பொழுது தான் அவள் தன்னை பற்றி முழுவதும் கூறினாள். “இன்டர்வியூ முடிந்ததும் கிளம்பி விட்டேன். பேரூந்து தான் சதி பண்ணி விட்டது. இல்லை என்றால் இந்நேரம் எங்க வீட்டில் நிம்மதியாக தூங்கி இருப்பேன்” என்றாள் சோகமாக. 

“அதெப்படி தூங்கி இருப்ப? அங்கே தான் உன் மாமன் இருக்கானே!” 

“அட ஆமால்ல, மறந்துட்டேன். சரி நீங்க சொல்லுங்க. நீங்க ஏன் சேலம் வந்தீங்க? உங்க ஊர் எது? உங்க பேர் என்ன?” என்று கேள்விகளை தொடுத்தாள். 

“என் பெயர் குகன். நான் திருச்சிக்காரன் தான். இது நான் சம்பாதித்து வாங்கிய பண்ணை வீடு” என்று தன்னைப் பற்றி கூறினான் குகன். 

“ஓஓ” என்ற தெய்வானை “இன்று இன்டர்வியூவில் அந்த அக்கா, ஏதோ லாக் டவுன் என்று கேட்டாங்க. ஏன் உங்களுக்கு தெரியாதா? நீங்க ஏன் இன்று வந்தீங்க?” 

“நாளை லாக்டவுன் என்று தெரியும். ஆனால் போலீஸ் இவ்வளவு கெடுபடியாக இருப்பார்கள் என்று நினைக்கவில்லை. அது மட்டுமல்ல இங்கு நான் எப்பொழுதாவது தான் வருவேன். இங்குள்ள மரம் செடிகளையும், ஆடு மாடு கோழிகளையும் பார்த்துக் கொள்வதற்காக வீட்டிலேயே ஒரு கணவன் மனைவி தங்கள் மகனுடன் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் ஊரில் ஏதோ கெட்ட செய்தியாம். அவர்களை அம்மா உடனே வரச் சொல்லி இருக்கிறார்கள். அதனால் கிளம்பிவிட்டார். அவசரத்திற்கு பண்ணையை கவனித்துக் கொள்ள ஆள் கிடைக்கவில்லை என்று மதியம் தான் ஃபோன் செய்தார். அதனால்தான் நான் பார்த்துக் கொள்ளலாம் என்று வந்து விட்டேன். அவர் வரும் வரை இருப்பதாக முடிவு செய்து இருக்கிறேன்” என்றான். 

“அது மட்டுமல்ல” என்று நிறுத்தியவன், “சரி நேரமாகிறது. போய் தூங்கு காலையில் பேசிக்கொள்ளலாம்” என்றான். 

“ஏதோ சொல்ல வந்தீங்க! பாதியிலேயே நிறுத்திட்டீங்களே!” என்றாள் தெய்வானை.

– தொடரும்..

– அருள்மொழி மணவாளன்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
14
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்