விடியற்காலை சாம்பிராணி புகை, குகனின் நாசிகளில் உணர மெதுவாக கண்களைத் திறந்தான். குளிருக்கு இதமாக தன்னை நெருக்கமாக அணைத்து உறங்கும் மனைவியை புன்னகையாக பார்த்து, அவளது நெற்றியில் முத்தம் கொடுத்து, குளிர் தெரியாமல் இருக்க போர்வையை நன்றாக போர்த்தி விட்டுவிட்டு எழுந்து தன் காலை வேலைகளை முடித்து வெளியே வந்தான் குகன்.
குகனை கண்டதும் அவனுக்கு சூடாக காபியை கொடுத்துவிட்டு “இன்னும் அவள் எழவில்லையா?” என்று கேட்டபடியே மாட்டு கொட்டகைக்கு சென்று விட்டார் சரசு.
காபியை குடித்து முடித்ததும் தன் அத்தைக்கு உதவியாக அவனும் சென்று மாடுகளை குளிப்பாட்டி கொட்டகையை சுத்தம் படுத்த உதவினான். இப்பொழுது இவர்களது மாட்டுக் கொட்டகை மிகவும் பெரியது. பத்து கறவை மாடுகள், ஐந்து காளை மாடுகள் உள்ளது. அதில் ஏழு மாடுகள் குட்டி போட்டிருக்க, மூன்று மாடுகள் இன்னும் ஒரு மாதத்திற்குள் குட்டி ஈனும் பருவத்தில் இருந்தது.
மேலும் இருவர் உதவி புரிய, அரை மணி நேரத்தில் அனைத்தும் மாடுகளும் குளிப்பாட்டி அலங்கரித்து, மாட்டுக் கொட்டகையும் சுத்தமாக பளிச்சென்று இருந்தது.
அதற்குள் ஒவ்வொருவராக எழுந்து குளித்து வர ஆரம்பித்தனர். அப்பொழுது குகனிடம் “இன்னும் அவள் எழுந்திருக்கலையா மாப்பிள்ளை? எல்லோரும் எழ ஆரம்பித்து விட்டார்கள்” என்றார் சரசு.
“இல்லையத்தை, நேற்று நிறைய வேலை அல்லவா? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டுமே!” என்றான் மனைவியின் மேல் உள்ள கரிசனையால்.
“நீங்கள் அவளுக்கு ரொம்ப இடம் கொடுக்கிறீர்கள் மாப்பிள்ளை. நல்ல நாள் பொழுதென்றால் சீக்கிரம் எழுந்து வேலைகளை செய்ய வேண்டாமா? என்று மகளை திட்டியபடியே ஃபோனை எடுத்து அவளுக்கு ஃபோன் செய்தார். உறக்கக் கலக்கத்தில் ஃபோனை எடுத்தாள் தெய்வானை.
“இன்னும் எழுந்திருக்கலையா? சீக்கிரம் எழுந்து வா. செந்தூரே எழுந்து வந்து விட்டான்” என்றார்.
“அம்மா, இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன் மா” என்று கெஞ்சினாள் தெய்வானை.
“சின்ன பிள்ளைங்க எல்லாம் கூட வந்துட்டாங்க. ஒழுங்கா இன்னும் பத்து நிமிஷத்துல நீ இங்க வரணும்” என்று கோபமாக சொல்லிவிட்டு ஃபோனை வைத்தார்.
“நாம்தான் எல்லா வேலையுமே முடித்து விட்டோம் இல்ல. மெதுவா தான் எழுந்து வரட்டுமே” என்றான் குகன்.
“ஆமா அண்ணி. பாவம், நேற்று முழுக்க அவள் எவ்வளவு வேலை பார்த்தாள். இன்று கொஞ்சம் மெதுவா தான் எழுந்து வரட்டுமே?” என்று மீனாட்சியும் கூறினார்.
அவர்கள் இருவரையும் முறைத்த சரசு, “நீங்கள் இரண்டு பேரும் கொடுக்கிற செல்லம் தான், அவள் இப்படி இருக்கிறாள். நான் எல்லா நாளுமா அவளிடம் சீக்கிரம் எழுந்துக்க சொல்றேன். இன்றைக்கு மாட்டுப் பொங்கல். ஊருக்குள்ள எல்லோரையும் கூப்பிட்டு இருக்கோம். அப்போ அவள் பொறுப்பா வந்து நிற்க வேண்டும் இல்லையா? அதான்.
நாங்க எல்லோருமே சேர்ந்து அனைத்து வேலைகளையும் முடித்து விட்டோம். சும்மா வந்து நிற்பதற்கு என்ன? சும்மா நேற்று வேலை செய்தாள், நேற்று வேலை செய்தாள் என்று சொல்றீங்க அண்ணி. நேத்து என்ன வேலை செஞ்சா?” என்று இருவரையும் திட்டிய சரசு, அடுத்த வேலையை பார்க்க சென்றார்.
சரசு ஃபோன் செய்ததும் எழுந்து குளித்து தயாராகி வெளியே வந்தாள் தெய்வானை.
இலை பச்சை வண்ண பட்டுடுத்தி வரும் மகளை கண் குளிர பார்த்தார் வள்ளியம்மாள். “ரொம்ப அழகா இருக்கேடா” என்று திருஷ்டி முறித்தார்.
பின்னர் அவள் குடிப்பதற்கு கொடுத்து, “எல்லாம் தயாராக இருக்கு. நீ வந்ததும் சாமி கும்பிடுவது மட்டும் தான் பாக்கி” என்று அவளை அழைத்துக் கொண்டு மாட்டு தொழுவத்திற்கு சென்றார்.
பச்சை பட்டுடுத்தி அசைந்து நடந்து வரும் தன் மனைவியை கண் இமைக்காமல் பார்த்தான் குகன். அவளின் புடவைக்கு ஏற்றவாறு அவனும் அவர்களது மகன் செந்தூரும் பச்சை வண்ண சட்டை போட்டு வேட்டி அணிந்திருந்தார்கள்.
ஐந்து மாத மேடிட்ட வயிறுடன் நடந்து வரும் மனைவியின் அருகில் வேகமாக குகன் செல்ல, அவனுக்கு இணையாக தன் தாயைக் கண்டு ஓடினான் செந்தூர். இருவரும் இரண்டு பக்கமும் போய் நின்று, அவளது இரு கையையும் பிடித்து அழைத்துக் கொண்டு பூஜை செய்யும் இடத்திற்கு வந்தார்கள்.
சரசு அவளை முறைத்து, “உனக்காக இங்கு எல்லோரும் காத்து இருக்கிறோம். நீ இப்படி தாமதமாக வரலாமா?” என்ற கூறி, விளக்கேற்ற சொன்னார்.
இன்று அவர்கள் வீட்டில் மாட்டுப் பொங்கலை கொண்டாடுகிறார்கள். அதற்காக வள்ளியம்மாளும் அவரது மகனும் குடும்பத்துடன் குகனின் பண்ணை வீட்டிற்கு வந்திருக்க, சக்தி வேலும் மீனாட்சியும் எப்பொழுதெல்லாம் தொடர்ந்து விடுப்பு கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் மகனின் வீட்டிற்கு வந்து விடுகிறார்கள்.
செந்தூர் உண்டான நாளிலிருந்து முறைப்படி எதுவுமே குகன் செய்யாததால், இம்முறை அவள் குழந்தை உண்டான நாளிலிருந்து அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தான் குகன். அதேபோல வளைகாப்பையும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று அவன் சொல்ல தெய்வானையோ அதை ஆரம்பத்திலேயே மறுத்துவிட்டாள்
“செந்தூருக்கு அங்கு சிறப்பாகவே அனைத்தையும் வள்ளியம்மா செய்தார். அதனால் எனக்கு எந்த குறையும் இல்லை. அதை நினைத்து நீங்கள் வருந்த வேண்டாம். உங்கள் ஆசைக்காக வேண்டுமென்றால் நம் வீட்டில் உள்ளவர்கள் வரை வைத்து சிறிதாக வளைகாப்பு செய்துவிடலாம்” என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டாள்.
இன்று பொங்கல் விடுமுறை கிடைக்க, தெய்வானையும் ஐந்தாம் மாத தொடக்கத்தில் இருப்பதால், அனைவரையும் வைத்து சிறிதாக வளைகாப்பு பங்க்ஷனையும் வைத்து விடலாம் என்று நினைத்திருந்தான். அதற்கு எல்லோருமே ஒத்துக்கொள்ள, இன்று சாயங்காலம் வளைகாப்பு இருப்பதால், தங்கள் சொந்தங்கள் எல்லோரையும் அழைத்திருந்தான் குகன்.
அதன்படியே வள்ளியம்மாளும் அவரது மகன், மருமகள் மற்றும் பேரன் பேத்தியோடு பொங்கலுக்கு முன்பே வந்துவிட்டார்.
குகன் தாய்மாமன் மகளுக்கும் திருமணம் முடிந்திருக்க, புதுமண தம்பதியரை அழைத்துக் கொண்டு அவனது மாமா, அத்தையும் வந்து இருந்தார்கள்.
சக்திவேலின் தங்கையும் கணவன், மகன், மகளுடன் வந்திருந்தார். அதுபோலவே ஊருக்குள் உள்ளவர்களும், சரசுவின் வீட்டிற்கு அருகில் உள்ளவர்களும் வந்திருக்க, அங்கிருந்த அனைவரின் முன்னிலையில் அவர்கள் வீட்டில் மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. முடிந்ததும் அனைவருக்கும் காலை உணவு பரிமாறப்பட, சாப்பிட்டு முடித்ததும் இளம்பெண்கள் தெய்வானையை அலங்காரம் செய்ய அழைத்துச் சென்றனர்.
அவர்கள் வீட்டின் நடுக்கூடத்தை ஒதுங்க வைத்து அழகாக அலங்கரித்து இருந்தான் குகன். நடுவில் பிரதானமாக ஒரு அலங்கார நாற்காலி போடப்பட்டிருக்க, வளைகாப்புக்கு தேவையான அனைத்தும் அதன் முன் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
குகன் எவ்வளவு மறுத்தும் சரசுவும் தன்னால் முடிந்த அளவுக்கு சீர்வரிசைகளை வைத்திருந்தார்.
அடர் சிகப்பு பட்டுப்புடவை உடுத்தி, அன்னம் போல் நடை நடந்து வந்து நாற்காலியில் அமர்ந்தாள் தெய்வானை. அவள் அமர்ந்ததும் முதலில் மீனாட்சியும், அதைத் தொடர்ந்து அங்கிருந்த அனைத்து பெண்களும் அவளுக்கு நலுங்கு வைத்து வளையல் போட்டனர்.
கடைசியாக குகனும் அவளுக்கு நலுங்கு வைத்து நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க வளையல்களை அவளுக்கு அணிவித்து, அவளின் நெற்றியில் முத்தம் கொடுத்தான்.
அங்கிருந்த இளவட்டங்கள் அனைத்தும் “ஓ” என்று கத்தி ஆரவாரம் செய்ய, மீனாட்சியும் சக்திவேலும் தங்களின் மகனின் அன்பை நினைத்து மிகவும் பெருமையாக உணர்ந்தார்கள்.
அதே சமயம் சரசு மற்றும் வள்ளியம்மாள் கண்களில் இருந்தும் ஆனந்தக் கண்ணீர் வடிந்தது.
எல்லோர் முன்னிலையிலும் அவன் நெற்றியில் முத்தம் கொடுத்ததில் தெய்வானை வெட்கப்பட, அவர்களின் அருகில் வந்த செந்தூர், தன் தந்தையின் கையை பிடித்து தன்னை தூக்கும் படி சொன்னான்.
அவனும் அவனை தூக்கிக் கொள்ள தன் தாயின் கழுத்தை கட்டிக்கொண்டு தந்தை செய்தது போலவே, அவனும் அவனின் நெற்றியில் முத்தம் கொடுக்க அங்கிருந்த அனைவருக்கும் அவன் செய்த செயல் நெகிழ்ச்சியாக இருந்தது.
அனைத்து நிகழ்வுகளும் புகைப்படங்களாக எடுக்கப் பட்டாலும், குகன் மற்றும் தெய்வானையின் மனதில் இனிமையான நினைவுகளாக கல்வெட்டுகள் போல் பதிந்தது.
அங்கு கூடியிருந்த அனைவருக்குமே அவ்வருட பொங்கல் இனிய நினைவுகள் ஆகியது.
விருந்து முடிந்து, தெய்வானையை வாழ்த்திவிட்டு, அக்கம் பக்கம் உள்ளவர் கிளம்ப, வள்ளியம்மாள் மகனும் நாளை மறுநாள் வேலையிருப்பதாக இரவு கிளம்புவதாக கூறினான்.
அவன் கிளம்புவதாக சொன்னதும் தெய்வானை வள்ளியம்மாவை கவலையாக பார்க்க, தாம் ஒரு வாரம் இருந்துவிட்டு செல்வதாக கூறினர்.
அதுபோல குகனின் சொந்தமும் கிளம்ப, இரவு குடும்ப ஆட்கள் மட்டுமே இருந்தனர்.
மீனாட்சி குகன், தெய்வானை, செந்தூர் மூவரையும் நிற்க வைத்து திருஷ்டி சுற்றி போட்டு, உறங்க அனுப்பினார்.
செந்தூர் தாத்தாவுடன் படுப்பேன் என்று அடம்பிடிக்க, சக்திவேல் அவனிடம் “நல்லவேளை பேரான்டி, என் கூட படுப்பதாக சொன்ன. இல்லையென்றால் மூன்று பாட்டிகளும் சேர்ந்து என்னை வெளியே அனுப்பி இருப்பாங்க” என்று கிண்டலாக சொல்லி பேரனை அழைத்துக் கொண்டு அறைக்குச் சென்றார்.
பெரியவர்களிடம் “நீங்கள் எல்லோரும் அறையில் படுத்துக் கொள்ளுங்கள். நான் இங்கே உறங்கி கொள்கிறேன்” என்றான்.
“நாங்க பேசிக்கிட்டு அப்படியே இங்கு படுத்துக் கொள்கிறோம். நீ மருமகள் கூட போய் இரு. அவளுக்கு இன்று நிறைய வேலை. கால் கை வலித்தால், பிடித்து விடு” என்று சொல்லி குகனை தெய்வானையுடன் படுக்கும் படி அனுப்பினார்.
மகன் சென்றதும் மகிழ்ச்சியாக திரும்பி சரசுவை பார்க்க, அவரோ இவரை முறைத்துக் கொண்டு இருந்தார்.
“இப்ப எதுக்கு அண்ணி இப்படி பாசமா பாக்குறீங்க” என்று மீனாட்சி பம்ம,
“நீங்களும் மருமகனும் செய்வது கொஞ்சம் கூட சரியில்ல அண்ணி. இன்று அவள் என்ன வேலை பார்த்தாள் என்று அவளுக்கு கை கால் வலிக்கும் என்கின்றீர்கள்?” என்றார்.
“என்ன அண்ணி இப்படி கேட்டுட்டீங்க? இன்று என் மருமகள் எவ்வளவு வேலை பார்த்தாள் தெரியுமா? மாட்டுக் கொட்டகையில் இருந்தா! பந்தி போடுற இடத்தில் இருந்தா! ஏன் நலுங்கு முழுசுக்கும் இருந்தா!” என்று அவர் சொல்லும் பாவனையில் வள்ளியம்மாளும் சரசுவும் சிரித்து விட, அவர்களுடன் சேர்ந்து மீனாட்சியும் சிரித்தார்.
அவர்களது சிரிப்பு இரு அறையிலும் இருப்பவர்களுக்கும் கேட்க, இரு ஆண்கள் முகத்திலும் புன்னகையை வர வைத்தது. அதே புன்னகையுடன் தெய்வானையின் அருகில் சென்று அமர்ந்தான் குகன்.
அப்பொழுதுதான் குளித்து முடித்து, இரவு உறங்குவதற்கு இதமான பருத்தி உடையை உடுத்திக் கொண்டு படுத்து இருந்தாள் தெய்வானை. கணவன் வந்து அமர்ந்ததும், எழுந்து உட்கார்ந்து அவனைக் காண, அவளின் முகத்தில் இருந்த பொலிவை கண்டு, தன் இரு கைகளில் அவள் முகம் தாங்கி, நெற்றியில் இதழ் பதித்தான்.
பகலில் எல்லோரும் இருக்கும் போதும் அவன் அப்படி செய்ததையும் நினைத்து, “சும்மா சும்மா நெற்றியில் முத்தம் கொடுக்காதீங்க” என்று சிணுங்கினாள்.
“ஓ.. நெற்றியில் கொடுக்கக் கூடாதோ, அப்போ..” என்று கட்டை விரலால் அவள் உதட்டை தடவியபடி ஆழ்ந்து அவள் இதழை பார்த்தான்.
அவன் பார்வையில் அவள் வெட்கப்பட்டு அவனிடம் இருந்து முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.
அவளது வெட்கத்தை ரசித்தபடியே, கால் நீட்டி அமர்ந்திருந்த அவளது மடியில் தலை வைத்து படுத்து, “இன்றைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன் தெய்வா” என்றான் மகிழ்ச்சியாக.
அவனது மகிழ்ச்சி அவன் முகத்தில் தெரிய, “அப்படி என்ன சந்தோஷம்? இதுவரை இல்லாத அளவுக்கு?” என்றாள் கேள்வியாக.
“தெரியலை. நம் எல்லா சொந்தங்களும் வந்ததால் இருக்கலாம், உனக்கு வளைகாப்பு நடந்ததால் இருக்கலாம், நம்முடன் வேலை பார்ப்பவர்கள் நம்மை வாழ்த்தியதால் இருக்கலாம், இதோ.. இப்பொழுது சற்று முன் அம்மா மனதார சிரித்ததால் கூட இருக்கலாம்” என்றான் நீளமாக.
“நீ இல்லாத நாட்களில் நான் ரொம்ப தவித்துப் போய் விட்டேன் தெய்வா. என்றும் அதை நினைத்தால் எனக்குள் ஒரு பயம் வருகிறது தெய்வா. இந்த வீட்டில் எந்த பக்கம் திரும்பினாலும் எனக்கு உன் ஞாபகங்கள் தான்.
உன்னை மீண்டும் பார்க்கவே முடியாதோ என்று எத்தனை இரவுகள் இந்த கட்டிலில் அழுது இருக்கிறேன் தெரியுமா? அது எல்லாமே கனவு போல் இருக்கு
தனியாக போனவள் வரும்பொழுது என் மகனையும் எனக்காக அழைத்து வந்திருக்கிறாய்! அப்போ சந்தோஷமாக தானே இருக்கும். இப்ப பாரு நான் வருந்திய காலங்கள் எல்லாம் மறந்து இன்று உன் மடியில் படுத்து கதை பேசிக் கொண்டிருக்கிறேன்” என்றான்.
அவன் படுத்ததும் அவன் தலையை கோதிக் கொண்டிருந்த தெய்வானை, அவன் பேசியதும் அவன் நெற்றியில் முத்தம் கொடுப்பதற்காக குனிய, அவளது மேடிட்ட வயிறு அவளை குனிய முடியாமல் செய்தது.
அதைக் கண்டு சிரித்துக் கொண்டே எழுந்த குகன் “நீ ரொம்ப கஷ்ட படாதே தெய்வா! நீ என்ன நினைத்தாலும், அதை நான் செய்து விடுவேன்” என்று அவள் நெற்றியில் முத்தம் கொடுத்து, தன்னுடன் அணைத்து கொண்டான்.
“நானும் இன்று ரொம்ப சந்தோஷமா தாங்க இருக்கேன். எப்படி பார்த்தவுடன் காதல் வரும்? அப்படி வரும் காதல் கடைசி வரை நிலைக்குமா? என்று நீங்கள் என்னிடம் காதலை சொல்லும் பொழுது நான் நினைத்தேன்.
ஆனால் உங்கள் காதல் கண்டு இப்பொழுது நான் வியக்கிறேன். உங்கள் காதலுக்கு நான் தகுதியானவள் தானா?” என்று அவனின் முகம் பார்க்க,
அவளை இறுக்கமாக அணைத்து, “காதலுக்கு தகுதிகள் அவசியம் இல்லை தெய்வா! காதலுக்கு காதல் மட்டுமே போதும்” என்று அவன் சொன்னதும் நிமிர்ந்து அவன் இதழில் இதழ் பதித்தாள் தெய்வானை.
இத்தனை நாட்களில் அவளாக தரும் முதல் இதழ் முத்தம். கண் விரித்து அவளது முகத்தை ரசித்து, அவளின் செயலை தனதாக்கிக் கொண்டான் குகன்.
இனிமையான வாழ்க்கை அவர்களுக்கு நிரந்தரமாக இருக்க நாமும் வாழ்த்தி விடை பெறுவோம்.
சுபம்.
அருள்மொழி மணவாளன்.