அழகு தெய்வானையை பார்ப்பதை கவனித்த அவளது தாய், மகளை உள்ளே செல்லுமாறு கூறிவிட்டு, “இங்கே பார் அழகு, நீ இன்று இங்கு வந்து பேசியது எனக்கு சந்தோசம் தான். நீ பேசியதால்தான் அவர்கள் குறைந்த பணத்தை வாங்கி கொள்ள சம்மதித்தார்கள். நீ செய்த இந்த உதவியே போதும். அதற்கு ரொம்ப நன்றி” என்று கூறி அவனை அதற்கு மேல் பேச விடாமல் செய்தார்.
“சரி அக்கா” என்று சொல்லி அவன் கையில் இருந்த சிறிது பணத்தை கொடுத்தான்.
அவரோ எதற்கு என்று பார்க்க, “வீட்டு செலவுக்கு வேணும் இல்லையா அக்கா? வைத்துக் கொள்ளுங்கள்” என்றான்.
“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் அழகு. என் கை கால்கள் நன்றாக தானே இருக்கிறது. நான் வேலை செய்து எங்கள் இருவரின் செலவிற்கும் பார்த்துக் கொள்வேன். நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம்” என்று கூறி மறுத்தார்.
“என் அக்காவின் குடும்பத்திற்கு செய்வதற்கு எனக்கு என்ன கஷ்டம் அதெல்லாம் ஒன்றும் இல்லை. வைத்துக் கொள்ளுங்கள்” என்று மீண்டும் வற்புறுத்த,
“அதான் வேண்டாம் என்று சொல்கிறேனே அழகு. எந்த பணமும் தேவையில்லை” என்றார் சற்று கடினமாக.
அக்காவின் கோபத்தைக் கண்ட அழகு “சரி சரி. நான் இங்கு வைத்து விட்டு செல்கிறேன். எது என்றாலும் எனக்கு போன் செய்யுங்கள்” என்று கையில் இருந்த பணத்தை அங்கிருந்த செல்ஃபில் வைத்துவிட்டு, அக்கா மறுத்து பேசுவதற்கு முன்பு வெளியேறி விட்டான்.
அதன் பிறகு அழகின் வருகை அடிக்கடி அவர்களது வீட்டில் நடந்தது. தெய்வானையின் அம்மா சரசுவிற்கு தன் கணவன் அளவிற்கு புடவை நெய்ய தெரியாவிட்டாலும் தரை விரிப்புகள், சிறிய துண்டு, போன்றவற்றை நெய்ய ஆரம்பித்தார்.
வீடும் தறியும் சொந்தம் என்பதால் வாடகை இல்லை. ஆனால் அவர்கள் சாப்பாட்டு செலவிற்கே அது போதுமானதாக இல்லை. கல்லூரி படிப்பை முடித்ததால் தான் வேலைக்கு செல்லலாம் என்று முடிவு செய்தாள் தெய்வானை.
ஆனால் வயசு பொண்ணை வேலைக்கு அனுப்பிவிட்டு தான் வீட்டில் இருக்க வேண்டுமா? என்று கலங்கினார் சரசு.
“அம்மா எந்த காலத்தில் இருக்கிறீர்கள்? எல்லா பெண் பிள்ளைகளும் இப்பொழுதெல்லாம் வேலைக்குச் செல்கிறார்கள். நான் ஒன்றும் அனாவசியமான செலவிற்கோ ஆடம்பரமான செலவிற்கோ வேலைக்கு போகிறேன் என்று சொல்லவில்லையே! நம் அத்தியாவசியமான அன்றாட செலவிற்காக தானே செல்கிறேன். நீங்கள் இப்பொழுது தான் தறி நெய்ய தொடங்கி இருக்கிறீர்கள். ஆரம்பத்தில் வருமானம் குறைவாக தானே இருக்கும். உங்கள் திறமையை பார்த்த பிறகு மொத்தமான ஆர்டர்கள் வரும். அப்பொழுது தானே நம்மால் நிம்மதியாக வாழ முடியும். அதுவரைக்குமாவது நான் என்னால் முடிந்த வேலைக்குச் செல்கிறேன்” என்றாள் தெய்வானை.
மகள் கூறுவது ஏற்றுக்கொள்ளும் படியாக இருந்தாலும், அக்கம் பக்கம் உள்ளவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம் சரசுக்குள் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அவர்கள் வீட்டில் அருகில் உள்ள பெண்கள் எல்லாம் சரசுவை தான் திட்டினார்கள்.
“நீங்கள் கஷ்டப்படும் பொழுது யாரும் வந்து உங்களுக்கு உதவ மாட்டார்கள். நீங்களே தான் அந்த கஷ்டத்தில் இருந்து வெளிவர வேண்டும். நாலு பேர் ஏதாவது சொல்வார்கள் என்று நம்மால் எதுவும் செய்யாமல் இருக்க முடியுமா? சொல்லும் ஒருவரும் வந்து நமக்கு எந்த உதவியும் செய்யப் போவதில்லை. அப்படிப்பட்டவர்களின் வார்த்தைக்காக நாம் ஏன் பயந்து கொண்டு இருக்க வேண்டும்.
அதைவிட தெய்வானை ஒன்றும் படிக்காத பிள்ளை அல்லவே! நன்கு படித்த பிள்ளை தானே? அவள் படித்த படிப்புக்கு தானே வேலைக்கு செல்கிறேன் என்கின்றாள். கண்டதையும் யோசித்துக்கொண்டு அந்தப் பிள்ளையின் வளர்ச்சியை கெடுத்து விடாதீர்கள் அக்கா” என்று கூறினார்கள். அதைக் கேட்டதும் கொஞ்சம் நிம்மதி அடைந்தார் சரசு.
மகள் அவள் படித்த படிப்பிற்கு ஏற்றபடி வேலைக்கு செல்லட்டும் என்று முடிவு செய்து, மகளுக்கு வேலைக்குச் செல்ல அனுமதி கொடுத்தார். அதில் மிகவும் மகிழ்ந்த தெய்வானை அவள் தெரிந்த இடத்தில் எல்லாம் வேலைக்கு எழுதிப் போட ஆரம்பித்தாள். இப்படியே ஒரு மாதம் கடந்திருக்க திருச்சியில் உள்ள ஒரு அலுவலகத்தில் இருந்து அவளுக்கு நேர்காணலுக்கு வரச் சொல்லி கடிதம் வந்தது.
திருச்சி என்றதும் தயங்கினார் சரசு. அவளுக்கு நேர்காணலுக்கு வர சொல்லி இருந்த அலுவலகத்தின் முக்கிய பிரான்ச் சென்னையில் இருப்பதாகவும் திருச்சியில் இன்டர்வியூ வைத்திருப்பதாகவும் கூறினாள். அதுபோல அவர்கள் அலுவலகம் சேலத்திலும் இருக்கிறது அம்மா. நான் சேலத்தில் வேலை கிடைக்குமா? என்று கேட்கிறேன் அம்மா” என்று அம்மாவிற்கு ஆறுதல் சொல்லி நேர் காணலுக்கு செல்ல முடிவு எடுத்தாள்.
அவர்கள் வீட்டில் இருந்து ஐந்தரை மணிக்கு எல்லாம் கிளம்பி விட்டால், ஆறு மணி பஸ் ஏறினால் கிட்டத்தட்ட மூன்று மூன்றரை மணி நேரம் ஆகும். பத்து மணிக்குள் திருச்சி சென்று விட்டால் போதும். பேருந்து நிலையத்தின் அருகில் தான் அலுவலகம் என்கின்றார்கள். பத்தரைக்கு எல்லாம் சென்றுவிடலாம் என்று முடிவு செய்து தன் தாயிடம் கூறினாள்.
தனியாக அனுப்ப முடியாதே என்று சரசு கலங்க, நான் துணைக்கு செல்கிறேன் என்று அழகு வந்தான். அதுமட்டுமல்லாமல் எதற்கு பஸ்ஸில் செல்ல வேண்டும் காரில் போகலாம். நான் ஏற்பாடு செய்கிறேன் என்றான்.
அழகுடன் தனியாக அனுப்புவதற்கு சரசுக்கு மனது வரவில்லை. “வேண்டாம். அவள் தனியாவே சென்று வரட்டும். வேலைக்கு செல்லும் பெண் தனியாக போய் வந்தால் தான் அவளுக்கும் உலகம் பற்றியும் தெரியும்” என்று தன் பயத்தை மறைத்துக் கொண்டு அவள் தனியாகவே செல்லட்டும் என்று முடிவாக கூறிவிட்டார்.
தெய்வானையும் அம்மா கூறியதும் மகிழ்ந்து, “நிச்சயம் நான் தைரியமாக போயிட்டு வருவேன் அம்மா. திருச்சியில் தான் என் ஃபிரண்ட் திவ்யா இருக்கிறாள் அல்லவா. அவள் எனக்கு அங்கு உதவி செய்வாள். நான் சேலத்தில் உள்ள அலுவலகத்தில் வேலைக்கு கேட்டு விடுகிறேன்” என்று சந்தோஷமாக ஐந்தரை மணிக்கு கிளம்பினாள். அம்மாபேட்டையில் இருந்து புது பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து திருச்சி செல்லும் பேருந்தில் ஏறிய அமர்ந்து, வேலைக்காக திருச்சி நோக்கி தன் பயணத்தை மகிழ்ச்சியாக தொடங்கினாள்.
அவள் நினைத்தது போலவே ஒன்பதரைக்கே திருச்சிக்கு வந்து விட்டாள். அவர்களுடன் கல்லூரி படித்த தோழியும் அவளை வரவேற்க பேருந்து நிலையத்திற்கு வந்து, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். அவளது அம்மாவும் அவளை நன்கு கவனித்து, காலை உணவு கொடுத்து நேர்முகத்தேர்வுக்கு அனுப்பி வைத்தார்.
அவளது தோழியும் அவளை ஸ்கூட்டியில் அழைத்து வந்து அலுவலகத்தில் இறக்கி விட்டு விட்டு அவளது வேலைக்கு சென்று விட்டாள்.
ஏனோ அலுவலகம் மிகவும் பரபரப்பாக இருந்தது. தன்னுடைய நேர்முக கானலுக்கான அட்டையை ரிசப்ஷனில் காண்பித்தாள் தெய்வானை.
அதை வாங்கி சரிபார்த்த வரவேற்பு பெண். இரண்டாவது மாடியில் இருக்கும் நேர்முகத் தேர்வுக்கான அறைக்குச் செல்லுமாறு சொல்லிவிட்டு, “நாளைக்கு ஏதோ லாக்டவுன் என்று சொல்றாங்க. நீங்க எப்படி வந்தீங்க” என்று கேட்டார்.
தெய்வானைக்கோ எதுவும் புரியாமல் “எனக்கு எதுவும் தெரியவில்லையே! பஸ்ஸில் தான் வந்தேன்” என்றாள்.
சொன்னபடி பத்தரைக்கு சரியாக நேர்முகத் தேர்வு ஆரம்பிக்க, இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்று விட்டாள் தெய்வானை. மதிய உணவு அங்கேயே கேண்டினில் சாப்பிட்டுவிட்டு, அதன்பிறகு நடந்த மூன்றாம் சுற்றிலும் அவள் தேர்வு பெற்றுவிட, மிகவும் மகிழ்ந்தாள். சேலத்தில் உள்ள பிரான்ச்சில் வேலை தருமாறு கேட்டுக் கொண்டாள். அவளது கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அடுத்த வாரம் திங்கட்கிழமை முதல் வேலையில் சேரும்படி கூறிவிட்டார்கள்.
பதினைந்தாயிரம் சம்பளம் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்குரிய ஆவணங்கள் அனைத்தும் அவளுக்கு கொடுக்கப்பட, மிகவும் சந்தோஷமாக அனைத்தையும் பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள் தெய்வானை.
தொடரும்…
– அருள்மொழி மணவாளன்…
சூப்பர் 👌👌👌
நன்றி 😊😊