Loading

இரவு உணவு முடித்ததும், வள்ளியம்மாளின் மகனுக்கும் ஃபோன் செய்து, தன் கணவன் வீட்டிற்கு போவதாக கூறி அண்ணனிடம் ஆசீர்வாதமும் வாங்கிக் கொண்டாள் தெய்வானை. அவனும் மகிழ்ச்சியாக சென்று வாழும்படி கூறி, “அம்மாவை பற்றி கவலைப்படாதே! நான் சென்று பார்த்துக்கொள்கிறேன். உன்னால் முடியும் பொழுது நீயும் வந்து பார்த்துக்கொள்” என்று கூறினான்.

பேசி முடித்ததும் வள்ளியம்மாள் “நான் பக்கத்து வீட்டிற்கு செல்கிறேன்” என்று கிளம்ப, 

அவரை தடுத்த குகன் “ஆன்ட்டி நாளைக்கு காலையில நாங்க கிளம்பிடுவோம். அதனால் நீங்க இங்கேயே இருங்க. அவள் உங்க கூட பேசணும்னு நினைப்பா இல்ல” என்று மனைவிக்காக பேசினான். 

அவன் சொல்வது சரியாக இருக்க அவர் தெய்வானையை பார்த்தார். அவளும் சோகமாக இருக்க, “சரி மூஞ்ச இப்படி வச்சுக்காத! நான் எங்கேயும் போகல, இங்க தான் இருக்க போறேன்” என்று நேற்று தெய்வானை படுத்த இடத்தில் பாயை விரித்து கொண்டார். 

செந்தூர் உறங்கிவிட, மூவரும் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தார்கள். சற்று நேரத்தில் குகனும் உறங்கி விட்டான். தெய்வானை மட்டும் வள்ளியம்மாளின் அருகில் படுத்து அவரிடம் பேசிக் கொண்டே இருந்தாள். 

நேரம் கடக்க எப்பொழுது உறங்கினோம் என்று தெரியாமலேயே அப்படியே உறங்கி விட்டனர் இருவரும்.

தங்களையும் அறியாமல் உறங்கிய வள்ளியம்மாலும் தெய்வானையும் சூரியன் உதித்து, விடிந்து வெளிச்சம் வீட்டிற்குள் வந்த பிறகுதான் கண்விழித்தனர். முதலில் கண்விழித்த வள்ளியம்மாள் வேகமாக எழுந்து அவர்கள் பயணத்திற்கு தேவையான ஏற்பாட்டை செய்ய ஆரம்பித்தார். 

அதன் பிறகு ஒவ்வொருவராக எழ அனைவரும் சூடாக காபி கொடுத்து கிளம்ப ஆயத்தம் ஆயினர். அதற்குள் காலை உணவு தயாராக இருக்க அனைத்தையும் முடித்துவிட்டு கண்ணீருடன் வள்ளியம்மாளை அணைத்துக் கொண்டாள் தெய்வானை.

“பத்திரமா இருங்கம்மா, எது என்றாலும் உடனே ஃபோன் பண்ணுங்க” என்று சொல்ல, 

“நேற்றிலிருந்து நீ இதைத்தான் சொல்லிக்கிட்டே இருக்க. நான் என்னை பார்த்துக் கொள்வேன். எனக்கு முடியலன்னா கண்டிப்பா உன்னை தான் கூப்பிடுவேன். கவலை இல்லாமல் போ. நீங்க குடும்பமுமா சந்தோஷமாக வாழ்ந்தீங்க என்றாலே நான் நிம்மதியாக பல காலம் இருப்பேன்” என்று கூறி அவளை கிளம்பும்படி சொல்ல, 

அதற்குள் வீட்டு வாசலில் ஊரே கூடியிருந்தது. அனைவரும் அவளுக்கு பரிசு பொருட்கள் கொடுத்து அவளை அங்கிருந்து அனுப்பி வைக்க, கார் முழுவதும் அவர்களுக்கு கொடுத்த பொருட்களால் நிரம்பியது. 

அனைத்தையும் புன்னகையாக பார்த்து அனைவருக்கும் நன்றி சொல்லி கிளம்பினான் குகன். கார் அவர்கள் ஊர் எல்லையை தாண்டும் வரை வள்ளியம்மாள் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். கார் அவர் கண்ணை விட்டு மறைந்ததும் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வீட்டிற்கு வர, அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லோரும் அவருக்கு அருகில் இருந்து ஆறுதல் கூறினர். 

காரில் கண்ணீருடன் உட்கார்ந்திருந்தாள் தெய்வானை. அவளை அணைத்த படி அவளின் மீது சாய்ந்து இருந்தான் செந்தூர். அவனுக்கு விவரம் தெரியாவிட்டாலும் இனிமேல் வள்ளி பாட்டியை பார்க்க முடியாது என்று மட்டும் புரிய அமைதியாக தாயின் மீது சாய்ந்து இருந்த அப்படியே உறங்கியும் விட்டான். 

அழுகையை அடக்கிக் கொண்டே உட்கார்ந்து இருந்த தெய்வானைக்கோ, விசும்பலும் பெருமூச்சியும் வந்து கொண்டிருந்தது. ஊரைத் தாண்டி ஓரமாக காரை நிறுத்திய குகன், அவளின் கையை பற்றி 

“கவலைப்படாதே உனக்கு எப்பொழுது அவர்களை பார்க்க வேண்டும் என்று தோன்றினாலும் நம் உடனே வந்துவிடலாம், சரியா?” என்று அமைதியாக ஆறுதல் கூறினான்.

அவளும் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை தேற்றிக்கொள்ள அதன் பிறகு கார் சீராக பயணித்து நேராக திருச்சி வந்தது. முதலில் அவன் தங்கள் பெற்றோர் வீட்டிற்கு தான் அழைத்து வந்தான். அவன் கார் வந்து வாசலில் நின்றதும் வீட்டிற்குள் இருந்து வேகமாக வந்தார் சக்திவேல். 

மகனையும் மருமகளையும் பேரனுடன் கண்டு மிகவும் மகிழ, மீனாட்சி ஆரத்தி தட்டுடன் வந்து தன் மகனின் குடும்பத்தை ஆரத்தி எடுத்து வீட்டுக்குள்ளே வரவேற்றார்.

வீட்டுக்குள் அவர்களது சொந்தங்கள் மொத்தமும் கூடியிருக்க அங்கிருந்த அனைவருக்கும் தன் மனைவியையும் மகனையும் அறிமுகப்படுத்தி, பெரியவர்கள் காலில் எல்லாம் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர் குகன் தெய்வானை இருவரும். 

அனைவரிடமும் அறிமுகப்படலம் முடிந்த பிறகு மீனாட்சி அனைவரையும் உணவு உண்ணச் சொல்ல எல்லோரும் சாப்பிட்டதும் கிளம்புவதாக கூறினான் குகன். 

“இரவு நேரம் ஆகிவிட்டது டா. இரவு இங்க தங்கி விட்டு காலையில எங்க வேணாலும் போங்க” என்றார் சக்திவேல் சற்று கோபமாக 

காலையிலிருந்து காரிலேயே பயணித்த தெய்வானைக்கும் உடம்புக்கு அசதியாக இருக்க, அவளுக்கும் சற்று ஓய்வு தேவைப்பட்டது. ஆனால் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தாள். மனைவியின் முகத்தில் இருந்த களைப்பை கண்டு கொஞ்சம் யோசித்த குகன் சரி என்று தலையாட்டினான்.

சொந்தங்கள் எல்லோரும் ஒவ்வொருவராக கிளம்ப, கடைசியாக குகனின் தாய்மாமன் தெய்வானையிடம் “இத்தனை வருடம் உன் கணவன் உனக்காக காத்திருந்தான். இனிமேலாவது நீங்கள் சந்தோஷமாக வாழுங்கள்” என்று ஆசீர்வதித்து கிளம்பினார்.

அனைவரும் கிளம்பிய பிறகு வீட்டினர் மட்டுமே இருக்க, வந்ததிலிருந்து குகன் தன்னிடம் முகம் கொடுத்து பேசாததில் வருத்தமாக இருந்த மீனாட்சி, வேகமாக தெய்வானையின் அருகில் வந்து “தயவுசெய்து என்னை மன்னிச்சிடுமா. நான் அப்படி பேசி இருக்க கூடாது. நான் பேசியது தவறுதான். அதற்கு எனக்கு நல்ல தண்டனை கிடைத்துவிட்டது. என் மகனே என்னுடன் முகம் கொடுத்து பேச மாட்டேங்கிறான். என்றைக்கு அவன் இனிமேல் இங்கு வரமாட்டேன் என்று சொல்லி கிளம்பினானோ அன்றே நான் திருந்தி விட்டேன். ஆனால் இவன்தான் நம்ப மறுக்கிறான். நீயாவது என்னை நம்பு. உண்மையிலேயே நான் திருந்தி விட்டேன். இனிமேல் அதுபோல் தவறு செய்யமாட்டேன். நாம் எல்லோரும் குடும்பமாக ஒற்றுமையாக வாழலாம். வயதான காலத்தில் நாங்கள் இருவரும் இங்கு தனியாக இருப்பது கஷ்டமாக இருக்குதும்மா” என்று கண்ணீருடன் அவள் கைகளை பிடித்துக் கொண்டு முகத்தில் ஒற்றி, மன்னிப்பு கேட்டார். 

“அச்சோ அத்தை, என்னதிது? மன்னிப்பு அது இது என்று பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க! நீங்க செய்தது ஒன்றும் தவறில்லை. உங்கள் மகனின் மீது இருந்த அதீத அன்பின் காரணமாக என்னிடம் அப்படி நடந்து கொண்டீர்கள். 

அதில் தவறு ஒன்றும் இல்லை. அதை நினைத்து வருந்தாதீர்கள்” என்று அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, தன் கணவனை பார்த்து ப்ளீஸ் அவங்க கிட்ட பேசுங்க என்பது போல் செய்கை செய்தாள். 

மனைவியே தன்னிடம் வந்த பிறகு அம்மாவை மேலும் தண்டிப்பது தவறு என்று உணர்ந்த குகன், அவரை தோளுடன் அணைத்து கொண்டு “இப்ப எதுக்கு அழுறீங்க?” என்றான். 

மகனின் ஸ்பரிசம் பட்டதும், நிமிர்ந்து அவனைப் பார்த்த மீனாட்சி, “தம்பி என்னை மன்னிச்சிட்டியா டா?” என்று அவனை அணைத்துக் கொண்டார். 

“மறந்துட்டேன் மா!” என்று சிரித்தான் குகன். 

மகனின் சிரிப்பை கண்டு அவருக்கும் புன்னகை தோன்ற, “அப்படீன்னா நீ இனிமே இங்கேயே இருப்பியா?” என்று ஏக்கமாக கேட்டார். 

அவனும் மறுப்பாக தலையாட்டி “நான் என் வேலையை முழுவதையுமே அங்கு, என் பண்ணை வீட்டிற்கு மாற்றி விட்டேன் அம்மா. இனிமேல் எனக்கு திருச்சியில் இருந்து பார்க்க வேண்டிய வேலை எதுவும் இல்லை.

எனக்கு உங்கள் மீது எந்த கோபமும் இல்லை அதனால் இனிமேல் திருச்சி வரும் பொழுது இங்குதான் வந்து தங்குவேன். நான் காலேஜுக்கு போயிருக்கும் போது ஹாஸ்டல்ல தானே இருந்தேன். அப்படி நினைச்சுக்கோங்க. இல்லைன்னா நீங்க அங்கு பண்ணை வீட்டுக்கு வந்துடுங்க” என்று உறுதியாக கூறிவிட்டான்.

மகன் கூறுவதும் சரியாகத்தான் இருந்தது. தன் கணவனை பார்த்தார். அவரும் கொஞ்ச நாள் போகட்டும் குகன். நானும் என் வேலைகளை எல்லாம் குறைத்துக் கொள்ள பார்க்கிறேன். அதன்பிறகு எல்லோரும் ஒன்றாக ஒரே இடத்திலேயே இருக்கலாம்” என்றார்.

அதன் பிறகு குடும்பமாக பேசிக் கொண்டிருக்க, அவளின் மடியிலேயே உறங்கிய செந்தூரை தூக்கி கொஞ்சினார் மீனாட்சி. “தனியாக இருந்து பிள்ளையையும் பெற்றுக் கொண்டாய்! தைரியமான பொண்ணு தான்” என்று மருமகளையும் தோளுடன் அணைத்து கொண்டார். 

மாமியார் மருமகளின் பாசத்தை பார்த்து சக்திவேலுக்கும் நிம்மதியாக இருந்தது. “நாளை காலையில் சேலத்துக்கு கிளம்புறேன் பா. அங்கே வேலை எல்லாம் அப்படியே போட்டுட்டு வந்து இருந்தேன்” என்றான். 

அவரும் சரி என்று தலையாட்டி “சரி போய் தூங்குங்க” என்று சொல்லி அனுப்பினார்.

மீனாட்சி “செந்தூர் என்னுடனே தூங்கட்டும்” என்று தூக்கிக் கொள்ள, பதறிய தெய்வானை 

“இல்லையத்தை, அவன் உறக்கத்தில் எழுந்து என்னை தேடுவான்” என்று பதட்டமாக கூறினாள். 

“எழுந்தாக்கா நான் உன்கிட்ட கூட்டிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு அவனை தூக்கிக்கொண்டு அவர்களது அறைக்கு சென்றுவிட, தனித்து இருந்த குகனை தயக்கமாக பார்த்தாள் தெய்வானை. 

அவளின் தவிப்பைக் கண்டு புன்னகைத்த குகன் “என்னடி? ஃபர்ஸ்ட் நைட்ல பயப்படுறது போல பயப்படுற” என்று குறும்பாக அவளைப் பார்த்து கேட்டான். 

அவன் அப்படி கேட்டதும் மிரண்டு அவனை பார்க்க, “இப்படி பார்க்காத! அப்புறம் கடிச்சிருவேன்” என்று கடிப்பது போல் ஆக்ஷன் செய்ய, அவனது செய்கை கண்டு அவரது கன்னம் சிவந்தது. 

அவளது கன்னச் சிகப்பை கண்டு தலையை கோதி தன்னை சமன் செய்த குகன், “ரொம்ப டெம்ப் பண்ணாம, பேசாம படுத்து தூங்கு” என்று அவளை இழுத்துக் கொண்டு தங்களது அறைக்கு வந்தான். 

“நான் என்ன பண்ணுனேன். நீங்க தான் ஏதேதோ பேசி பேசி” என்று சிணுங்கி கொண்டே அவன் சொன்ன இடத்தில் வேகமாக படுத்து, போர்வை போர்த்திக் கொண்டாள். 

அவளின் செய்கையை கண்டு சிரித்துக் கொண்டே, கட்டிலின் மறுபக்கம் படுத்து கண் மூடிய குகன், அலுப்பில் சீக்கிரமே உறங்கி விட்டான். மறுநாள் முதலில் கண்விழித்து எழுந்த தெய்வானை, அருகில் ஆழ்ந்து உறங்கும் குகனை கண்டு புன்னகைத்தபடியே தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள். 

அங்கு செந்தூருக்கு குடிப்பதற்கு பால் கொடுத்து கொண்டு இருந்த மீனாட்சி கண்டு, அவரின் அருகில் வந்து அமர்ந்த தெய்வானை, “எழுந்துட்டானா அத்தை? இரவு தொந்தரவு செய்தானா?” என்று மீனாட்சியிடம் பேசிக்கொண்டே, “என்னடா குட்டி? பாட்டிகிட்ட சமத்தா தூங்கினீங்களா?” என்றாள் மகனிடம் கொஞ்சிக் கொண்டே. 

“சமத்து பிள்ளையாய் இருக்கான். நீங்க ரெண்டு பேரும் எங்க வேணா போங்க, இவனை நானே வச்சிக்கிறேன்” என்றார் பேரனின் தலையை கோதியபடி. 

அப்பொழுது சிரித்துக்கொண்டே அங்கு வந்த குகன், “அவன் இருந்தா வச்சுக்கோங்க” என்று சொல்லியபடியே வந்து மனைவியின் அருகில் அமர, 

” நீயும் எழுந்துரிச்சிட்டியா? இரு நான் போய் உங்க ரெண்டு பேருக்கும் குடிக்க எடுத்துட்டு வர்றேன்” என்று எழுந்து சமையல் அறைக்குச் சென்றார் மீனாட்சி. 

– தொடரும்..

– அருள்மொழி மணவாளன்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
14
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்