Loading

தனக்காக தன் தாய் மாமா பேசி சென்றதும், தன் தாயிடம் வந்த குகன், “அம்மா, நீங்கள் தெய்வானையிடம் என்ன சொன்னீர்கள்?” என்றான் நேரடியாக. 

“அவரோ நான் எங்கே அவளிடம் பேசினேன்” என்று மழுப்பலாக பதில் சொல்லி செல்ல பார்க்க,

அவரின் கையைப் பிடித்து நிறுத்தி, அருகில் இருந்த நாற்காலியில் அமர வைத்த குகன், “எனக்கு பதில் சொல்லிட்டு போங்க” என்று அவரின் எதிரில் அமர்ந்தான். 

சக்திவேலும் மகனின் செயலில், மனைவிதான் தெய்வானையிடம் ஏதோ சொல்லி இருக்கிறாள் என்பதை புரிந்துகொண்டு, அவரின் அருகில் வந்து நின்று “என்ன மீனாட்சி? நீ ஏதாவது மருமகளிடம் பேசினாயா? என்றார் சற்று கோபமாக. 

ஏற்கனவே அண்ணன், தனது ஆதரவு அவளுக்கு இல்லை என்று சொல்லிச் சென்றதில் பயந்திருந்தவர், ஒரு புறம் மகனும் மறுபுறம் கணவனும் இருந்து தன்னை கேள்வி கேட்பதில் பயந்துவிட்டார். 

தயக்கமாக இருவரையும் மாறி மாறி பார்க்க, குகனோ “எனக்கு உண்மையை மட்டும் சொல்லுங்கள்” என்றான்அழுத்தமாக.

அவரோ அன்று பேசியது அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்ல,

“எப்படிமா முகம் பார்க்காத ஒரு பெண்ணிடம் உங்களால் அப்படி பேச முடிந்தது?” என்றான் ஆதங்கமாக.

சக்திவேலோ அவரை முறைத்து “நீ இப்படி செய்வாய் என்று நான் எதிர்பார்க்க வில்லை மீனாட்சி” என்றார் சோகமாக. 

கணவனும் மகனும் தான் பேசியது பற்றி குற்றம் கூற, தன் தவறை நினைத்து வருந்தினார். இருந்தாலும் அவருக்கு தெய்வானை தன் மருமகளாக வருவது ஏனோ பிடிக்கவில்லை. அதை கோபமாக இருவரிடமும் வெளிப்படுத்தினார். 

“சும்மா நான் சொல்லுவதை எல்லாம், தப்பு தப்பு என்று சொல்லாதீங்க! நம் தகுதிக்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாதவளை, இவன் கல்யாணம் செய்தால், நான் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமா?” என்றாள் கோபமாக. 

சக்திவேலுக்கு மனைவியின் செயல் ‘ச்சீ’ என்று இருந்தது. 

“தகுதி, என்ன தகுதி? ஒரு ஆணுக்கு பெண்ணை பிடிக்க வேண்டும். ஒரு பெண்ணிற்கு ஆணை பிடிக்க வேண்டும். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்த பிறகு என்ன தகுதி வேண்டி கிடக்கு? தகுதியை பார்த்துதான் கல்யாணம் பண்ண வேண்டும் என்றால், எந்த தகுதியை பார்த்து எனக்கு மணமுடித்து வைத்தார்கள் உன் பெற்றோர்கள்?

உங்கள் வீட்டை விட நாங்கள் வசதி குறைந்தவர்கள் தானே? அப்படி என்றால் இதுநாள் வரை நீ என்னை அப்படித்தானே நடத்திக் கொண்டிருக்கின்றாய்?” என்றார் அருவருப்பான முகத்துடன்.

அதில் அதிர்ந்த மீனாட்சி “என்னங்க இப்படி சொல்றீங்க? இதுநாள்வரை நான் என்ன அப்படியா நடந்து கொண்டேன்?” என்றார் பதட்டமாக.

“எனக்கு சந்தேகமாக இருக்கிறது மீனாட்சி. உங்கள் வீட்டை விட நாங்கள் கொஞ்சம் வசதி குறைந்தவர்கள் தானே அப்போது?” என்றார் விரக்தியாக. 

“ஐயோ என்னங்க அப்படியெல்லாம் சொல்லாதீங்க! என் மனதில் இதுவரை அது போல் எண்ணம் வந்ததே இல்லை” என்றார் அழுது விடும் நிலையில். 

அவரோ விரக்தியாக சிரித்து, “இல்லை என்று உன் மனதை தொட்டு சொல் பார்ப்போம்” என்றார்.

அவரும் அதிர்ந்து அவரை பார்க்க, 

“என் தங்கைக்கும் ஒரு பொண்ணு இருக்கிறா! என்றாவது நீ அவளை குகனுக்கு மணமுடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறாயா?” என்றார் கேள்வியாக. 

உண்மைதானே. தங்கள் அண்ணன் இப்பொழுது தங்களுக்கு சமமான அந்தஸ்தில் இருப்பதால் அவரது பொண்ணை மணமுடிக்கவே மிகவும் விரும்பினார் மீனாட்சி. 

சக்திவேலின் தங்கையின் குடும்பம் இவர்களை விட சற்று வசதி குறைவானவர்கள். ஆகவே இரண்டாவது வாய்ப்பாக தான் தன் நாத்தனாரின் மகளை வைத்திருந்தார். அதை சரியாக கண்டுபிடித்து சக்திவேல் கூறியதும் அதிர்ந்து அவரைப் பார்த்தார் மீனாட்சி. 

அவரின் அதிர்ச்சியிலேயே அவரின் மனதை புரிந்து கொண்ட சக்திவேல் மகனிடம், “பார்த்தாயா குகன்! இத்தனை வருடங்கள் உன் அம்மா என்னிடம் கூட தகுதி பார்த்து தான் பழகி இருக்கிறாள்” என்றார் சோகமாக.

வேகமாக அவரின் அருகில் வந்த மீனாட்சி அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு “அப்படியெல்லாம் சொல்லாதீங்க. நான் உங்களிடம் அப்படியெல்லாம் நடந்து கொள்ளவில்லை. என் கணவனாக நான் உங்களை உயிருக்கு உயிராக விரும்புகிறேன். நான் இதுவரை செலுத்திய அன்பை சந்தேகப்படாதீர்கள்” என்றார் கண்களில் கண்ணீருடன். 

சக்திவேலு பதில் ஏதும் சொல்லாமல் அவரது அறைக்குச் சென்று விட்டார். 

அவரை சோகமாக பார்த்த மீனாட்சி குகனிடம், “தம்பி நீயாவது அப்பாவிடம் சொல். நான் அப்படிப்பட்டவள் இல்லை என்று” என்றார், அவனது கைகளைப் பிடித்துக் கொண்டு. 

“எனக்கும் சந்தேகமாகத்தான் இருக்கிறது அம்மா” என்றான் குகன். 

அதிர்ந்து அவனைப் பார்க்க,

“ஆமாம் அம்மா. நீங்கள் என் திருமணத்தில் தகுதி பார்க்கிறீர்கள் இல்லையா?” என்று கேட்டு, 

“நான் என்றைக்கு தெய்வானையை கல்யாணம் செய்து விட்டேனோ, அன்றிலிருந்து அவள் என் மனைவியாகி விட்டாள். என்னுடைய தகுதி என்னவோ அதுதான் அவளுக்கும் இல்லையா? என்றான்.

‘இப்பொழுது தான் நான் ஒரு புது தொழில் தொடங்கியுள்ளேன். அதற்கு மூலதனம் என் படிப்பும், அறிவுமாக இருந்தாலும், அதை எனக்கு தந்தது என் பெற்றோர் ஆகிய நீங்கள் இருவரும்தான். ஆகையால் உங்கள் பண தகுதிக்கு இணையாக, நான் என்னை வளர்த்துக்கொண்டு இங்கு வருகிறேன். இனிமேல் நான் இங்கு இருக்கப் போவது இல்லை” என்று சொல்லி தன் உடமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு, தந்தையிடமும் கூறிவிட்டு, அன்றே கிளம்பி மீண்டும் தன் பண்ணை வீட்டிற்கு வந்து விட்டான். 

அதன்பிறகு எனது கவனம் முழுவதும் உன்னை தேடுவதிலும், என் தொழிலை வளர்ப்பதிலேயுமே தான் இருந்தது. இத்தனை வருடங்களில் உன்னை தேடாத இடமில்லை. உன்னை என்றாவது எங்கேயாவது பார்த்து விடமாட்டேனா என்று, தமிழ்நாடு முழுவதும் செல்லும் இடமெல்லாம் நான் உன்னை தேடினேன். 

அதோடு என் தொழிலையும் நன்றாக வளர்த்துக் கொண்டேன். இப்பொழுது இருக்கும் பிரபல எண்ணெய்களுக்கு இணையாக நமது மரச்செக்கு எண்ணெயும் தமிழகம் முழுவதும் விற்பனையாகிறது. நம் பண்ணைக்கு அருகிலும் ஒரு ஆயில் மில் கட்டி விட்டேன். 

மாதம் ஒருமுறை திருச்சிக்குச் சென்று பெற்றோரையும் தொழிலையும் நேரடியாக பார்த்து வருவேன். அப்பொழுதெல்லாம், அப்பா சின்னமுட்டம் சென்று ஒரு முறை பார்த்து வரும்படி அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார். 

கொரோனா காலத்திற்குப் பிறகு அவரால் இங்கு வர முடியவில்லை. முன்பெல்லாம் பள்ளி ஆண்டுவிழா சமயம் அப்பா வந்து ஊருக்கு தேவையானது எல்லாம் செய்வாராம். ஆண்டுவிழா சமயத்தில் எல்லாம் என்னை போகச் சொல்லி வற்புறுத்திக் கொண்டே இருந்தார். முதல் வருடமே வந்திருந்தால் அப்பொழுது கர்ப்பமாக உன்னை நான் பார்த்திருப்பேன்” என்று சோகமாக கூறி முடித்தான். 

முழுவதையும் கேட்ட தெய்வானையும் வருத்தமாக, “நம் விதி இத்தனை ஆண்டுகள் பிரிந்திருக்க வேண்டும் என்று இருக்குது போல” என்று சொல்லிவிட்டு, 

“இருந்தாலும் நீங்கள் அத்தையிடம் இப்படி பேசி இருக்கக் கூடாது. அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள். ஒரு தாயாக அவர்களது மனதை நீங்கள் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும் அல்லவா? அவர்களுக்கு, அவர்கள் பெற்று பாராட்டி சீராட்டி வளர்த்த மகன், தான் பார்க்கும் பெண்ணை மணமுடிக்க வேண்டும் என்று ஆசை இருந்திருக்கும் தானே? அதனால் தான் அப்படி உங்களிடம் நடந்து கொண்டிருப்பார்கள். நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு ஒரு பெண்ணை பார்த்து மணமுடித்துக் கொண்டால், அவர்கள் என்ன செய்வார்கள்? திருமணத்தையாவது அவர்கள் சம்மதத்துடன், அவர்கள் விருப்பப்படி நடத்திருக்க வேண்டும். அதுவும் நீங்கள் செய்யவில்லை. தவறு எல்லாம் உங்கள் மீது வைத்துக்கொண்டு, அவருக்கு தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்றாள் சற்று கோபமாக. 

“ஏய்! நீ என் பொண்டாட்டி டி, டீச்சர் இல்ல. பள்ளிக்கூடத்தில் தப்பு செய்த பிள்ளைகளை திட்டுவது போல என்னை கண்டிக்கிற” என்றான் கிண்டலாக. 

“கிண்டல் பண்ணாதீங்க. நான் உண்மையை தான் சொல்றேன். அவர்கள் நிலையிலிருந்து நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?” என்றாள். 

மனைவியை தோளுடன் அணைத்து கொண்டு, “நீ ரொம்ப மாறிட்ட தெய்வா” என்றான். 

அவளின் தெய்வா என்று அழைப்பில் அவள் உடல் சிலிர்த்தது. அதை உணர்ந்த குகன், அவளின் உச்சியில் இதழ் பதித்து “என் தொடுகையில் சிலிர்க்கும் நீ இன்னும் மாறவில்லை” ஆனால் அவள் மண்டையை சுட்டிக் காண்பித்து, “இந்த மூளை நல்லா மெச்சூர் ஆயிடுச்சு இல்ல?” என்று நெற்றியில் நெற்றி முட்டினான்.  

நெற்றியோடு நெற்றி முட்டியபின் என்ன நடக்கும் என்று அவனுடன் வாழ்ந்தவளுக்கு தெரியும் அல்லவா? அதை நினைத்ததும் அவள் முகம் சிவந்தது. அந்த அறையில் ஒளிந்த அரை வெளிச்சத்தில். அவளின் முகத்தில் உண்டான சிகப்பைக் கண்ட குகனுக்கு, அவளை அணைத்து முழுவதும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டாக, அவளின் கன்னத்தோடு கன்னம் உரசினான். 

அவனது தாடி அவள் கன்னத்தில் உரசி கூச்சத்தை உண்டு பண்ண, அவனை தன்னிடமிருந்து விலக்கி, “செந்தூர் விழித்து விட போகிறான். போய் படுத்து தூங்குங்க. ரொம்ப நேரம் ஆயிடுச்சு, இன்னும் கொஞ்ச நேரத்துல விடிஞ்சிடும். அம்மா வந்துருவாங்க” என்று அவனை படுக்க தள்ளி விட்டாள். 

“இப்படி தெரிந்திருந்தால் செந்தூரை ஆன்டி கூடவே அனுப்பி இருப்பேனே!” என்றான்.

அவன் கூற்றில் வெட்கமடைந்த தெய்வானை, அதை மறைப்பதற்கு திரும்பி படுத்துக் கொண்டு, “கொஞ்ச நேரம் பேசாமல் தூங்கி, என்னையும் தூங்க விடுங்கள்” என்று கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள். 

அவளின் செய்கையை கண்டு சற்று சத்தமாக சிரித்துக் கொண்ட குகன், மகனின் நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு, அவனின் அருகில் படுத்துக்கொண்டான். 

மனைவியை கண்ட சந்தோசம், மகனின் பாசம், கடலலையின் ஓசை இது எல்லாம் அவனை மிகவும் புத்துணர்வாக வைக்க, உறக்கம்தான் அவனுக்கு வர மறுத்தது. தலையை தூக்கி மனைவியை பார்க்க அவளோ அவனுக்கு முதுகு காட்டி படுத்திருந்தாள். சிரித்துக் கொண்டே கண்களை மூடி படுக்க, சிறிது நேரத்தில் தன்னையும் அறியாமல் உறங்கி விட்டான். 

இரவு முழுவதும் பேசிக்கொண்டு இருந்து உறங்கியதில் தெய்வானையும் விடிந்த பிறகும் எழுந்திரிக்க வில்லை. வழக்கம்போல் காலையில் எழுந்த வள்ளியம்மாளுக்கு மூடி இருக்கும் கதவை தட்டுவதற்கும் தயக்கமாக இருந்தது. 

இவர்கள் வீட்டின் கதவில் ஒரு கண் வைத்துக் கொண்டே, தங்களுக்கு தேவையான உணவை, பக்கத்து வீட்டிலேயே சமைத்தார். 

எட்டு மணி ஆக அப்பொழுதும் கதவு திறக்கப்படாததால், செந்தூருக்கு பசிக்குமே என்ற எண்ணத்தில் வந்து கதவை தட்டினார். 

கதவைத் தட்டியதும் பதறி எழுந்த தெய்வானை, வெளிச்சமாக இருப்பதில் விடிந்து ரொம்ப நேரம் ஆகிவிட்டது போல என்று அவசரமாக வந்து கதவைத் திறக்க, அங்கு நின்று இருந்த வள்ளியம்மாள் “செந்தூருக்கு பசிக்கும் டா, அதனால்தான் கதவை தட்டினேன்” என்றார் தயக்கமாக.  

“ரொம்ப லேட் ஆயிடுச்சு மா. நீங்க முதலில் வந்து தட்டி இருக்கலாமே? ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்ததில் அசந்து தூங்கிட்டேன் அம்மா” என்றாள் தெய்வானை.

அவளின் முகத்தில் இருந்த தெளிவு கண்டு நிம்மதி அடைந்தார் வள்ளியம்மாள்.

– தொடரும்..

– அருள்மொழி மணவாளன்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
11
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்