Loading

“உங்கள் இருவரையும் இங்கே விட்டுவிட்டு நான் மட்டும் அங்கே எப்படி தனியாக மனைவி குழந்தையுடன் நிம்மதியாக வாழ முடியும்?” என்று கேள்வியாக அவளைப் பார்த்தான். 

எங்கே தன்மகனை தன்னிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்று விடுவானோ என்று அழுது கொண்டிருந்த தெய்வானை, அவனின் கூற்றில் அதிர்ந்து, தன் அழுகையை நிறுத்திவிட்டு அவனை ஆராய்ச்சியாக பார்த்தாள். 

“என்னடி பாக்குற? நீ இல்லாமல் நான் என் மனைவியுடன் எப்படி டி வாழ முடியும்?” என்று கோவமாக அவளை பார்த்தான். 

“என்ன சொல்றீங்க? உங்களுக்கு உங்கள் முறை பெண்ணுடன் கல்யாணம் ஆகவில்லையா?” என்று சந்தேகமாக அவனைப் பார்த்தாள். 

அவளை பார்த்த குகன் “ஒரு மனுஷன் எத்தனை தடவை கல்யாணம் பண்ணுவான்?” என்றான் முறைத்தபடியே. 

“இல்லை.. உங்கள் அம்மா” என்று குழப்பமாக பேச தயங்க, 

அவளின் தலையை ஆள்காட்டி விரலில் இரண்டு மூன்று முறை அழுத்தி “இந்த சின்ன மண்டைக்குள்ள இருக்கிற குட்டி மூளைக்குள்ள என்னதான் நினைச்சுகிட்டு இருக்க? என்னை பற்றி?” என்றான் சற்று அதட்டலாக. 

அவனது பேச்சில் அவனுக்கு இன்னும் வேறு திருமணம் நடக்கவில்லை என்பதை புரிந்து கொண்ட தெய்வானைக்கு ஏதோ ஒரு வித நிம்மதி தனக்குள் நிகழ்வதை உணர்ந்தாள். அது பெருமூச்சியாக மகிழ்ச்சியாக வெளிவர அவளை முகத்தில் இருந்த சந்தோசத்தை கண்டு கொண்டான் குகன். 

“நான் உன்னிடம் என்ன சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பினேன். நீ என்ன செய்து வைத்திருக்கிறாய்?” என்று அவளை ஆழ்ந்து பார்த்து கேட்டான். 

அவன் கேட்டதும் அன்று அவன் கிளம்பியது ஞாபகத்திற்கு வர, “உங்க அப்பா எப்படி இருக்காங்க?” என்றாள்.

“யாரு?” என்றான் 

“உங்க அப்பா..?” என்று தயங்க,

“யாரு?” என்று மீண்டும் அழுத்தமாக கேட்டான்.

அதன் பிறகு தான் அவளுக்கு அவனின் கோபம் புரிய, “அது” என்று தயங்கி தலையை குனிந்து கொண்டு “மாமா எப்படி இருக்காங்க?” என்றாள் மெதுவாக. 

“நல்லா இருக்காங்க” என்று சொல்லி அமைதியாகி விட்டான். சிறிது நேரம் அங்கு அமைதி நிலவ, தலை நிமிர்ந்து அவனை பார்த்தாள். 

அவள் பார்த்ததும், அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டு “உனக்கு என் மேல் கொஞ்சம் கூட காதல் இல்லை, அப்படித்தானே?” என்றான்.

“உங்கள் மீது காதல் இல்லாமலா? இவனை பெற்றெடுத்தேன்?” என்று செந்தூரை காண்பித்தாள். 

“என் குழந்தை உன் வயிற்றில் உருவானது தெரிந்தும், நீ என்னிடம் சொல்ல தோன்றாமல், அங்கிருந்து கிளம்பி இருக்கிறாய், அல்லவா?” என்று நிதானமாக அவளிடம் கேட்டான். 

அவளோ இல்லை என்று மறுப்பாக தலையாட்டி விட்டு, “அங்கிருந்து கிளம்பிய அடுத்த நாள் தான் தெரியும்!” என்று அன்று நடந்ததை அவனிடம் கூறினாள் தெய்வானை.

முழுவதையும் கேட்ட குகன், “இது நாள் வரை ஒரு தடவை கூட என்னை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உனக்கு வரவில்லை, அப்படித்தானே? என்றான் ஆதங்கமாக 

தெய்வானையோ கண்களில் கண்ணீருடன் தலையை மறுப்பாக ஆட்டிக் கொண்டு “உங்களை நான் மறந்தால்தானே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வரும். நீங்கள் என் கூடவே இருப்பது போல் தான் கற்பனையில் நான் இங்கு இருந்தேன். அது மட்டுமல்லாமல் உங்களை ஞாபகப்படுத்தும் விதமாக எனக்குத்தான் செந்தூர் இருக்கிறானே!” என்று அவள் அவளது மகனது தலையை கோதி விட்டாள். 

இருவருமே உணர்ச்சி பூர்வமாக இருக்க, அந்த இடம் அமைதியாக இருந்து. 

சிறிது நேரம் கழித்து அவனைப் பார்த்த தெய்வானை “உங்க அம்” உங்க அம்மா என்று சொல்ல வந்து, “அத்தை எப்படி இருக்காங்க? அவர்கள் எப்படி நீங்கள் சமாளித்தீர்கள்? அவர்களுக்கு என்னை பிடிக்கவில்லை தானே? உங்களின் மாமா மகளை கட்டி வைக்க தானே விரும்பினார்கள். பின் எப்படி இவ்வளவு நாள் தனியாக இருக்கிறீர்கள்? அத்தையின் இஷ்டப்படி அவர்கள் சொன்ன பெண்ணையே கல்யாணம் கட்டி இருக்கலாமே?” என்றாள்.

அவளை முறைத்தபடி “அவர்கள்தான் புரியாமல் பேசினால், உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா? உன்னுடன் நான் வாழ்ந்ததைப் பற்றி நீ கொஞ்சம் கூட யோசிக்கவில்லையா? நாம் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நாட்களில் ஒரு நாளாவது உன்னை பிடிக்காமல் வாழ்ந்தது போல் உனக்கு தோன்றி இருக்கிறதா?” என்று கேள்வி மேல் கேள்வி அவளைக் கேட்டான். 

அவள் மௌனமாக இருக்க, 

“சொல்லுடி” என்று அவளது கன்னத்தை அழுத்தமாக பிடித்தான். 

அவன் அழுத்தமாக பிடித்தது அவளுக்கு வலியை உண்டாக்க, அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு “வலிக்குதுங்க” என்றாள்.

“வலிக்கட்டும், என் வலியை கொஞ்சம் கூட புரிந்து கொள்ளாமல் சென்றவள் தானே நீ” என்றான் கோபமாக. 

அவனின் கோபத்தை புரிந்து கொண்ட தெய்வானை “தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள். தெரியாமல் செய்து விட்டேன். நான் செய்தது தவறுதான் ஆனால் அன்று என் மனநிலை” என்று பேச்சை நிறுத்தினாள். 

அவளின் நிலையை உணர்ந்த குகன் அவளது கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு, மென்மையாக ஒரு அழுத்தம் கொடுத்து “நீ எதற்காக அங்கிருந்து வெளியேறினாய், என் அம்மா என்ன சொன்னார்கள் எல்லாமும் எனக்கு தெரியும்” என்றான்.

அவள் ஆச்சரியமாக அவனைப் பார்க்க அன்று அவர்கள் பிரிந்த நாளில் என்ன நடந்தது என்று சொல்ல ஆரம்பித்தான்.  

“நான் அங்கிருந்து கிளம்பினேன் அல்லவா?” என்று அவளை பார்க்க, 

அவளும் ஆமாம் என்று தலையாட்ட

தெய்வானையை தனியாக விட்டுவிட்டு செல்ல மனமில்லாமல் அங்கிருந்து கிளம்பிய குகன், பயணப்பட்டு நேராக வீட்டிற்கு வர, அவனது தாய் மட்டுமே வீட்டில் தனியாக இருந்தார். 

தந்தை மருத்துவமனையில் இருப்பதாகவும், தன்னை அங்கு செல்ல அனுமதிக்கவில்லை என்றும், கவலையாக கூறி அழுதார். 

தான் பார்த்துக் கொள்வதாக அங்கிருந்து நேராக அரசு மருத்துவமனைக்கு சென்றான் குகன். அவனின் தந்தை சக்திவேல் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க, தங்கள் குடும்ப டாக்டரின் ஆலோசனைப்படி, வீட்டிற்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைத்து பார்த்துக் கொள்வதற்கு அனுமதி வாங்க, அங்கிருந்த மருத்துவர்கள் குகனின் வற்புறுத்ததால்தான் அனுப்புவதாக கூறி, கையெழுத்து வாங்கிக் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இங்கு அவருக்கு தனி அறை கிடைக்க, தந்தையை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டான். அதே சமயத்தில் அவர்களது அம்மாவின் அண்ணன், அவனது மாமாவிற்கும் கொரோனா நோய் தாக்குதல் இருக்க, அவரையும் பார்க்க வேண்டிய பொறுப்பு அவனுக்குதான் வந்தது. 

அவனது மாமாவிற்கு நோயின் தாக்கம் குறைவாக இருக்க, ஒரு வாரத்திலேயே அவரை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். ஆனால் அவனின் தந்தைக்கு சிகிச்சை முடிய பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. 

ஒரு வழியாக குணம் பெற்று வீட்டிற்கு அழைத்து வந்தான். அதன் பிறகு தான் அவனால் நிம்மதியாக மூச்சு விடவே முடிந்தது. 

வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் கழித்து கந்தனுக்கு ஃபோன் செய்து அனைவரைப் பற்றியும் விசாரித்தான். மருத்துவமனையில் இருக்கும் பொழுது தினமும் ஏதாவது ஒரு நேரம் ஃபோன் செய்வான். ஆனால் தெய்வானையிடம் பேச வேண்டும் என்று சொல்ல மாட்டான். 

அவளிடம் பேசினால் அவளை உடனே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வரும். இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் அப்பாவை விட்டுவிட்டு அங்கு செல்லவும் முடியாது. ஆகையால் உதடு வரும் வரை வரும் வார்த்தைகளை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு, பொதுவாக பேசிவிட்டு வைத்து விடுவான். 

இன்று அவரிடம் தெய்வானை பற்றி கேட்க, 

அவரோ “அப்படி யாரும் இங்கு இல்லையே தம்பி” என்றார். 

“என்ன சொல்றீங்க அண்ணா? என்று அதிர்ந்த குகன், அவர் வரும்போது வீட்டில் யாரும் இல்லையா? என்று கேட்டான் மீண்டும்.

“இல்லை தம்பி வீடு பூட்டி தான் இருந்தது. நான் தான் வந்து திறந்தேன்” என்றார் 

அதன் பிறகு அவனுக்கு அங்கு இருக்க மனமே இல்லை உடனே அவனது பண்ணை வீட்டிற்கு வந்து தெய்வானைக்கு என்ன ஆயிற்று என்று பார்க்க வேண்டும் என்று துடித்தான். 

அப்பொழுது அவனது தந்தையும் தெய்வானை பற்றி கேட்க, 

“நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன் அப்பா” என்றான். அவரும் சற்று தெம்பாக இருப்பதால் சரி என்று சொல்ல, 

மீனாட்சி “அப்பா இப்படி இருக்கும் பொழுது, நீ எங்கும் செல்லக்கூடாது” என்று பிடிவாதம் பிடித்தார். “நீ கிளம்பிய பிறகு அவருக்கு உடம்புக்கு சரியில்லை என்றால், நான் தனியாக என்ன செய்வேன்” என்று அழுதார். 

அவரின் பயத்தைப் பார்க்கவும் குகனுக்கு வருத்தமாக இருந்தது. தெய்வானை எங்கு சென்றால் என்று தெரியாமல் அவனுக்கு இங்கு இருப்பதும் கலக்கமாக இருக்க, தவிப்பாக என்ன செய்வது என்று யோசித்தான். 

அதே சமயம் வீட்டிற்கு வந்த அவனது மாமா, “தனக்கு உடம்பு சரியில்லாமல் போகிவிட்டது. தன் மகளை எப்படியாவது கரை சேர்க்க வேண்டும். தயவு செய்து நீ அவளை கல்யாணம் செய்து கொள்” என்று கெஞ்சினார்.

அப்பொழுதுதான் தன் தாயைப் பார்த்தான் குகன். அவர் இதுவரை குகனுக்கு திருமணம் முடிந்ததை யாருக்கும் சொல்லாமல் இருப்பதைக் கண்டு அதிர்ந்தான். 

“என்னால் உங்கள் மகளை கல்யாணம் செய்து கொள்ள முடியாது மாமா. எனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது” என்றான் சற்று கோபமாக. 

அதில் அதிர்ந்த அவனது மாமா “என்ன சொல்ற குகன்?” என்றார். 

“ஆமாம் மாமா. எனக்கு ஏற்கனவே கல்யாணம் முடிந்துவிட்டது. இது அம்மாவிற்கும் தெரியும்” என்று அம்மாவை முறைத்து பார்த்துக் கொண்டே சொன்னான். 

உடனே மீனாட்சி “அது என்ன முறைப்படியா நடந்தது? ஏதோ ஆசைக்காக உன் இஷ்டத்துக்கு நீ பண்ணிகிட்டது. அதை அப்படியே விட்டுவிடு. அதான் இங்கே வந்து விட்டாய் அல்லவா? அவ எக்கேடாவது கெட்டுப் போகட்டும். அப்படியே தலை முழுகிடு. என் அண்ணன் மகளை கட்டிக்கோ” என்று அவரும் கோபமாக கூறினார். 

தன் மனைவியின் கூற்றில் சக்திவேலும் அதிர்ந்தார். “என்ன பேசுற மீனாட்சி? ஒரு பெண்ணாக இருந்து கொண்டு ஒரு பெண்ணிற்கு எதிராக பேசுகிறாயே! இது உனக்கே நியாயமா? கல்யாணம் என்பது உனக்கும் உன் பையனுக்கும் விளையாட்டா?” என்று இருவரையும் பார்த்து முறைத்தார்.

“அப்பா! என் கல்யாணம் முறைப்படி நடந்ததோ? இல்லையோ? நான் செய்தது கல்யாணம்தான். என் மனைவி தெய்வானைதான். இதில் எந்த மாற்றமும் இல்லை. என்னால் மாமாவின் மகளையோ அல்லது அத்தையின் மகளையோ திருமண செய்து கொள்ள முடியாது” என்று முடிவாகச் சொல்லிவிட்டு தனது அறைக்குள் சென்று விட்டான் குகன்.

– தொடரும்..

– அருள்மொழி மணவாளன்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
15
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்